Lakshmana's concern | Ayodhya-Kanda-Sarga-051 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனை ஓய்வெடுக்கச் சொன்ன குஹன்; ராஜபிதா மற்றும் ராஜமாதாக்களின் துயரையும், ராமன் நாடுகடத்தப்பட்ட பிறகு அயோத்தியில் உண்டாகக்கூடிய நிகழ்வுகளையும் குஹனிடம் சொன்ன லக்ஷ்மணன்...
{இராமனும், சீதையும் தரையில் கிடப்பதைக் கண்டு} வேதனையில் துன்புற்ற குஹன், ஜாக்கிரதையாக இருந்தவனும், வஞ்சகமற்றவனும், ராகவனுமான {ரகு குலத்தவனுமான} லக்ஷ்மணனிடம் {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "ஐயா, இஃது உனக்காக அமைக்கப்பட்ட சுகமான படுக்கையாகும். இராஜபுத்திரா, இதில் நீ சுகமாக ஓய்வெடுப்பாயாக.(2) இந்த சர்வஜனங்களும் {மக்கள் அனைவரும்} சிரமங்களுக்குப் பழக்கப்பட்டவர்கள். நீயோ சுகத்திற்கே பழக்கப்பட்டவன். {இந்த} இரவில் காகுத்ஸ்தனை {ராமனைப்} பாதுகாப்பதில் நாங்கள் ஜாக்கிரதையாக இருப்போம் {விழிப்புடனிருப்போம்}.(3) எனக்கு இராமனைவிடப் பிரியமானவன் இப்புவியில் வேறெவனும் இல்லை. நான் உன்னிடம் இந்த சத்தியத்தையே சொல்கிறேன். அந்த சத்தியத்தின் மீது ஆணையாகவும் சொல்கிறேன்.(4) இவ்வுலகில் {இம்மையில்} பெரும்புகழை ஈட்டவும், தர்மத்தை ஈட்டவும், ஏராளமான செல்வத்தை ஈட்டவும் இவன் {ராமனின்} அருள் மட்டுமே போதுமென நான் நம்புகிறேன்.(5) அத்தகையவனான நான், என் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்} கூடியவனாக, என் பிரியத்திற்குரிய சகாவும் {அன்புக்குரிய நண்பனும்}, சீதை சகிதனாக சயனித்துக் கொண்டிருப்பவனுமான ராமனைக் கையில் தனுவுடன் {வில்லுடன்} எப்போதும் ரக்ஷிப்பேன் {பாதுகாப்பேன்}.(6) நான் சதா அலைந்து திரியும் இந்த வனத்தில் எனக்குத் தெரியாதது ஏதும் இல்லை. பெரும் சதுரங்க பலத்தையும் {யானைகள், தேர்கள், குதிரைகள், காலாட்படை உள்ளிட்ட நால்வகைப் படைகளையும்} எங்களால் எதிர்கொள்ள முடியும்" {என்றான் குஹன்}.(7)
அப்போது லக்ஷ்மணன் அவனிடம், "பாபமற்றவனே, தர்மத்தையே பின்பற்றுபவனான உன்னால் பாதுகாக்கப்படுவதில் நாங்கள் எவரும் இங்கே {இவ்விடத்தில்} பீதியடையவில்லை.(8) தாசரதர் {ராமர்}, சீதை சகிதராக பூமியில் சயனித்திருக்கையில் {வெறுந்தரையில் கிடக்கையில்} எனக்கு நித்திரை எவ்வாறு சாத்தியமாகும்? {எனக்கு} ஜீவிதத்தால்தான் சுகமென்ன ஏற்படும்? (9) சர்வ தேவாசுரர்களாலும் யுத்தத்தில் எவரை வீழ்த்தமுடியாதோ அவர் சீதை சகிதராக புல்லில் சுகமாக உறங்குவதைப் பார்.(10) மந்திர தபஸ்ஸாலும், பல்வேறு பரிசிரமங்களாலும் {முயற்சிகளாலும்} தசரதருக்கு ஒப்பான லக்ஷணங்களுடன் {அந்த தசரதரால்} பெறப்பட்ட ஏக இஷ்ட புத்திரரான இவர் {தசரதரின் விருப்பத்திற்குரிய ஒரே மகனான ராமர்} நாடுகடந்திருக்கையில் அந்த ராஜா {தசரதர்} நீண்ட காலம் வாழமாட்டார்; நிச்சயம் மேதினியும் சீக்கிரமாகவே விதவையாவாள்.(11,12) உயர் தொனியில் கூக்குரலிட்டு சிரமப்பட்டே {களைப்படைந்தே} ஸ்திரீகள் நிசப்தமாவார்கள் {பெண்கள் அமைதியடைவார்கள்}. அதனால் ராஜநிவேசனத்தில் {அரண்மனையில், கோஷமில்லாத} ஆழ்ந்த அமைதியே நிலவுமென நான் நினைக்கிறேன்.(13)
கௌசல்யையும், ராஜாவும் {தசரதரும்}, என் ஜனனீயுமென {என்னைப் பெற்றவளான சுமித்திரையுமென} அவர்கள் அனைவரும் இவ்விரவில் ஜீவித்திருப்பார்களென நான் நம்பவில்லை.(14) சத்ருக்னனைப் பார்ப்பதற்காக {ஒருவேளை} என் மாதா {சுமித்திரை} ஜீவித்திருக்கலாம், வீரரைப் பெற்றவளான கௌசல்யை மாண்டிருந்தால் அது துக்கமே.(15) அர்ப்பணிப்புள்ள ஜனங்களால் நிறைந்ததும், சுகமானதும், உலகத்திற்கு இனிமையை அளிப்பதுமான இந்தப் புரீ {நகரம்} ராஜவியசனத்தால் {ராஜன் இறந்த கவலையால்} பீடிக்கப்பட்டு அழிவடையப் போகிறது.(16) மஹாத்மாவும், ஜியேஷ்டனுமான புத்திரனை {மூத்த மகனுமான ராமனைக்} காணாமல் மஹாத்மாவான ராஜாவின் சரீரத்தில் பிராணன் {உடலில் உயிர்} எவ்வாறு நிலைத்திருக்கும்?(17) நிருபதி {மனிதர்களின் தலைவரான தசரதர்} அழிந்ததும் கௌசல்யை அழிவாள், அதன் பின்னர் என் மாதாவும் அழிவடைவாள்.(18) கடந்தது கடந்தும் {நடந்தது முடிந்தும்}, ராஜ்ஜியத்தில் ராமனை நிறுவாமல், தன் மனோரதம் நிறைவேறாமலேயே என் பிதா அழியப் போகிறார்.(19)
பூமிபதியான எங்கள் பிதா {தந்தை தசரதர்} இறக்கும்போது, சர்வ பிரேத காரியங்களையும் {ஈமச் சடங்குகள் அனைத்தையும்} அந்தந்த காலத்தில் சரியாகச் செய்பவர்களே சித்தார்த்தர்கள் {பரதனும், சத்ருக்னனுமே கொடுத்துவைத்தவர்கள்}.(20) சதுர ஸம்ஸ்தானங்களால் {நாற்சந்திகளால்} ரம்மியமாக விளங்குவதும், நன்கு பிரிக்கப்பட்ட மஹாபாதைகளை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதும், வளம்மிக்க செல்வந்தர்களாலும், முதன்மையான கணிகையராலும் அலங்கரிக்கப்பட்ட மாடமாளிகைகள் நிறைந்ததும்,{21} ரதங்களும், அஷ்வங்களும், கஜங்களும் {தேர்களும், குதிரைகளும், யானைகளும் நெருக்கமாக} அடர்ந்திருப்பதும், இசைக் கருவிகளின் முழக்கங்கள் எதிரொலிப்பதும், மங்கலங்கள் அனைத்திலும் நிறைவாக இருப்பதும், மகிழ்ச்சியான புஷ்டியான ஜன குலங்களை {மக்கள் கூட்டத்தைக்} கொண்டதும்,{22} உத்யானவனங்களாலும், தோட்டங்களாலும் சூழப்பட்டதும், சமூக உற்சவங்களால் {விழாக்களால்} பிரகாசிப்பதுமான என் பிதாவின் ராஜதானியில் {அயோத்தியில்} அவர்கள் {பரதனும், சத்ருக்னனும்} மகிழ்ச்சியாக உலவட்டும்.(21-23)
தசரதர் ஜீவித்திருப்பாரா? நல்விரதங்களைச் செய்பவரான அந்த மஹாத்மாவை {தசரதரை, நாங்கள்} வனவாசத்திலிருந்து திரும்பியதும் மீண்டும் காண்போமா?(24) வனவாசம் நிறைவடைந்ததும், சத்தியபிரதிஜ்ஞையில் உறுதியாக இருக்கும் இவருடன் {ராமருடன்} நலமாக அயோத்திக்குள் பிரவேசிப்போமா?" {என்றான் லக்ஷ்மணன்}.(25)
மஹாத்மாவான அந்த ராஜபுத்திரன் {இளவரசனான லக்ஷ்மணன்}, இவ்வாறு புலம்பித் தவித்து, துக்கத்தால் பீடிக்கப்பட்டு {காவல் காத்து} நின்றபோதே அந்த இரவும் கழிந்தது.(26) பிரஜைகளின் ஹிதத்தில் {குடிமக்களின் நன்மையில்} நாட்டமுடைய அந்த நரேந்திர புத்திரன் {மனிதர்களின் தலைவனான தசரதனின் மகன் லக்ஷ்மணன்}, பெரியோர் மீது கொண்ட பற்றால் இவ்வாறு சத்தியத்தைப் பேசிக் கொண்டிருந்தபோது, கவலையாலும், துன்பத்தாலும் பீடிக்கப்பட்ட குஹன், ஜ்வரத்தால் பீடிக்கப்பட்ட நாகத்தை {யானையைப்} போலக் கண்ணீர் விட்டழுதான்.(27)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 051ல் உள்ள சுலோகங்கள் : 27
Previous | | Sanskrit | | English | | Next |