Bharata crossed Ganga | Ayodhya-Kanda-Sarga-089 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதன், சத்ருக்னன் மற்றும் பிறரும் கங்கையைக் கடக்கச் செய்த குஹன். பரத்வாஜ முனிவரைச் சந்திக்கப் புறப்பட்ட பரதன்...
இராகவனான அந்த பரதன் அங்கே கங்கைக் கரையிலேயே அந்த ராத்திரியைக் கழித்துவிட்டு, காலையில் எழுந்திருந்து சத்ருக்னனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "சத்ருக்னா, எழுவாயாக. உறக்கமேன்? நிஷாதிபதியான குஹனை சீக்கிரம் அழைத்து வா. உனக்கு மங்கலம் உண்டாகட்டும். அவன் நமது வாஹினியை {படையைக்} கரை சேர்ப்பான்" {என்றான்}.(2)
உடன் பிறந்தவனான சத்ருக்னனும், இவ்வாறு தூண்டப்பட்டதும், இதைச் சொன்னான், "நான் உறங்கவில்லை. அந்த ஆரியரை {ராமரைக்} குறித்துச் சிந்தித்தவாறே விழிப்புடன் இருக்கிறேன்" {என்றான்}.(3)
நரசிம்மர்களான {மனிதர்களில் சிங்கங்களான} அவ்விருவரும் தங்களுக்குள் அன்யோன்யம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த காலத்தில் வந்த குஹன், கைகளைக் கூப்பிக் கொண்டு பரதனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(4) "காகுத்ஸ்தா, நதியின் தீரத்தில் இரவை சுகமாகக் கழித்தாயா? நீயும் உன் சைன்யத்தார் அனைவரும் நலமென நான் நம்புகிறேன்" {என்றான்}.(5)
சினேகத்துடன் குஹன் சொன்ன சொற்களைக் கேட்ட பரதனும், ராமன் மீது கொண்ட பற்றினால் இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(6) "இராஜாவே, இரவு எங்களுக்கு சுகமாக இருந்தது. நீ எங்களை நன்கு உபசரித்தாய். உனது செம்படவர்கள் எண்ணற்ற நாவங்களில் {படகுகளில்} கங்கையின் அக்கரைக்கு எங்களைக் கொண்டு செல்லட்டும்" {என்றான் பரதன்}.(7)
பரதனின் சாசனத்தைக் கேட்ட குஹன், தன் நகரத்திற்கு {சிருங்கிபேரபுரத்திற்கு} அவசரமாகத் திரும்பிச் சென்று தன் ஞாதி ஜனங்களிடம் {உறவினர்களிடம், பின்வருமாறு} சொன்னான்:(8) "விழித்தெழுவீராக. எப்போதும் மங்கலமாக இருப்பீராக. நாவங்களை இழுத்து வாருங்கள். அந்த வாஹினியை அக்கரை சேர்ப்போம்" {என்றான் குஹன்}.(9)
இவ்வாறு சொல்லப்பட்டதும் ராஜ சாசனத்தின் பேரில் துரிதமாகச் செயல்பட்ட அவர்கள், சுற்றிலும் இருந்து பஞ்ச சத நாவங்களை {ஐநூறு ஓடங்களை} விரைவாகக் கொண்டு வந்தனர்.(10) பெரும் மணிகளைக் கொண்டவையும், ஸ்வஸ்திக அடையாளத்தால் குறிக்கப்பட்டவையும், நல்ல பாய்மரங்கள் பொருத்தப்பட்டவையும், பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான சிறந்த ஓடங்கள் சிலவும் அங்கே கொண்டு வரப்பட்டன.(11) அப்போது குஹன், வெண்கம்பளம் விரிக்கப்பட்டதும், மணிகளின் ஒலியெழுப்பப்படுவதும், ஸ்வஸ்திக அடையாளம் பொறிக்கப்பட்டதுமான ஓர் அழகிய ஓடத்தைக் கொண்டு வந்தான்.(12)
பரதனும், மஹாபலனான சத்ருக்னனும், கௌசல்யையும், சுமித்ரையும் மற்றுமுள்ள ராஜயோஷிதைகளில் {அரச மகளிரில்} வேறு எவரும் அதில் ஏறுவதற்கு முன்னர், புரோஹிதரும் {வசிஷ்டரும்}, முதிர்ந்த பிராமணர்களும் ஏற்றப்பட்டனர், அதற்குப் பின்னர் ராஜதாரங்களும் {மன்னனின் மனைவியரும்} ஏற்றப்பட்டனர், சகடங்களும் {வண்டிகளும்}, பொருள்களும், படைகளும் {வெவ்வேறு ஓடங்களில்} ஏற்றப்பட்டன[1].(13,14)
[1] சுழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படைகழித்து நீங்கியது என கள்ள ஆசையைஅழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரைஇழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான்- கம்பராமாயணம் 2365ம் பாடல்பொருள்: நீர்ச் சுழல் உண்டாகிப் பெருகும் கரையமைந்த {கங்கை} ஆற்றைத் தன்னைச் சூழ்ந்திருக்கும் படையானது கடந்து செல்லும் என்ற கள்ள ஆசையை {மண்ணாசையை} அழித்து அவனியை முன்பு ஆண்ட வேறு வேந்தரைக் கீழ்ப்படுத்தி மேலேறியவனான பரதனும் ஓடத்தில் ஏறினான்.
அதன்பிறகு, {தாங்கள் தங்கியிருந்த} முகாம்களைத் தீயிட்டு எரிப்பவர்கள், நீராடுபவர்கள், பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடமேறுபவர்கள் ஆகியோரின் கோஷம் வானத்தை எட்டியது.(15) பதாகைகளுடன் கூடியவையும், செம்படவர்களால் செலுத்தப்படுபவையுமான அந்த நாவங்கள் {ஓடங்கள்}, அவற்றில் ஏறிய ஜனங்களைச் சுமந்து கொண்டு விரைந்து சென்றன.(16) அவற்றில் சில நாரீகளால் {பெண்களால்} நிறைந்திருந்தன. வேறு சில வாஜிகளாலும் {குதிரைகளாலும்}, இன்னும் சில பெரும் மதிப்புமிக்க வாகனங்களால் நிறைந்திருந்தன.(17) அவை அக்கரையை அடைந்ததும், ஜனங்களை இறக்கிவிட்ட செம்படவ அடியார்கள், மூங்கிலால் செய்யப்பட்ட பதுமைகளைப் போலத் துடுப்புகளைச் சுழற்றி அவற்றை வேடிக்கையாக திரும்பச் செலுத்திச் சென்றனர்.(18)
அம்பாரிகளுடன் கூடியவையும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், நீந்துபவையும், பாகர்களால் செலுத்தப்பட்டவையுமான கஜங்கள் {யானைகள்}, சிறகுகள் படைத்த பர்வதங்களை {மலைகளைப்} போலத் தெரிந்தன.(19) சிலர் நாவங்களில் {படகுகளில்} ஏறித் தாண்டினர், சிலர் பிலவங்கள் {தெப்பங்கள்} மூலம் கடந்தனர், சிலர் பானைகளின் துணையுடன் நீந்திச் சென்றனர், வேறு சிலர் வெறுங்கைகளால் நீந்திச் சென்றனர்.(20) அடியவர்களின் {செம்படவர்களின்} மூலம் கங்கையாற்றைக் கடந்து சென்ற அந்தப் புண்ணியப் படையானது, மைத்ரமெனும்[2] முஹூர்த்தத்தில் {பகலின் மூன்றாம் நாழிகையில்} பிரயாகையின் உத்தம வனத்தை அடைந்தது.(21)
[2] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முஹூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு பகலில் அத்தகைய 15 முஹூர்த்தங்கள் இருக்கும். அவை ருத்திரம் {6-6.48), சர்ப்பம் {ஆஹி} (6.48-7.36), மைத்திரம் {மித்ரு} (7.36-8.24), பைத்திரம் {பித்ரு} (8.24-9.12), வாசவம் {வஸு} (9.12-10), அப்யம் {வாராஹம்} (10-10.48), வைஸ்வம் {விச்வேதேவம்} (10.48-11.36), பிரம்மம் {விதி} (11.36-12.24), பிரஜை {ஸதமுகி} (12.24-13.12), ஈஷா {புருஹூதம்} (13.12-14), சிந்திரா {வாஹினி} (14-14.48), ஐந்திரங்கம் {நக்தநகரம்} (14.48-15.36), நைர்த்தம் {வருணம்} (15.36-16.24), வருணார்யமான் {அர்யமான்} (16.24-17.12), பாகி {பகன்} (17.12-18) என்பனவாகும்" என்றிருக்கிறது. அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையுள்ள முஹூர்த்தங்களின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. பகலிரவு இரண்டும் சேர்த்து ஒரு நாளைக்கு 30 முஹூர்த்தங்களாகும்.
மஹாத்மாவான பரதன் அந்தப் படையின் விருப்பப்படி முகாமிட்டு ஓய்வளித்த பிறகு, ரித்விக்குகளுடனும், மந்திரிகளுடனும் சேர்ந்து முதன்மையான ரிஷியான பரத்வாஜரைக் காணப் புறப்பட்டான்.(22) {தேவ குருவான பிருஹஸ்பதியின் மகனும்}, தேவ புரோஹிதரும், மஹாத்மாவுமான அந்தப் பிராமணரின் {பரத்வாஜரின்} ஆசிரமத்தை நோக்கிச் சென்று, ரம்மியமான விருக்ஷங்களுடனும், குடில்களுடனும் மனங்கவரும் வகையில் விரிந்திருக்கும் முதன்மையான விப்ரரின் மஹத்தான வனத்தை அவன் {பரதன்} கண்டான்.(23)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 089ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |