Mutilation of organs | Aranya-Kanda-Sarga-18 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகையை லக்ஷ்மணனிடம் அனுப்பிய ராமன்; இலக்ஷ்மணனை அணுகிய சூர்ப்பணகை; அவளது மூக்கையும், காதுகளையும் அரிந்த லக்ஷ்மணன்...
இராமன், காமபாசத்தில் {வலையில் / கயிற்றில்} கட்டுண்ட அந்த சூர்ப்பணகையிடம் தெளிவான, மென்மையான குரலில் புன்னகைத்தவாறே {பின்வருமாறு} சொன்னான்:(1) "பவதி {மதிப்பிற்குரியவளே}, எனக்கு தாரமிருக்கிறாள். இவளே {சீதையே} என் அன்புக்குரிய பாரியையாவாள் {மனைவியாவாள்}. உன்னைப் போன்ற நாரீகளுக்கு {பெண்களுக்கு} சக்களத்தியுடன் இருப்பது துக்கத்தைத் தரும்.(2) சீலவானும் {நல்லொழுக்கம் கொண்டவனும்}, பிரிய தரிசனனும் {அழகிய தோற்றமுள்ளவனும்}, ஸ்ரீமானும், வீரியவானும், இலக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவனும், என்னுடன் பிறந்த தம்பியுமான இவன் தாரமில்லாதவன் {மனைவியில்லாதவன்}.(3) இளைஞனும், பிரிய தரிசனனும், பாரியை வேண்டுபவனும், அபூர்வியுமான {முன்னவள் இல்லாதவனுமான / மனைவியற்றவனுமான} இவன், உன் ரூபத்திற்கு ஏற்ற ரூபத்தில் பர்த்தாவாகத் தகுந்தவன்[1].(4) விசாலாக்ஷியே {நீள்விழியாளே}, அழகிய இடையைக் கொண்டவளே, என்னுடன் பிறந்தவனான இவனை, அர்க்கனின் பிரபை {சூரிய ஒளியை வேண்டும்} மேருவைப் போல பர்த்தாவாக வேண்டி, சக்களத்தியற்றவளாக இருப்பாயாக" {என்றான் ராமன்}.(5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் நோக்கில் "அபூர்வி" என்ற சொல்லுக்கு, "நீண்ட காலமாக மனைவியின் துணையை இழந்தவன்" என்பது பொருள், ஆனால் அதுவே சூர்ப்பணகையின் நோக்கில், "நீண்ட காலமாக எந்த மனைவியின் துணையும் இல்லாதிருப்பவன்" என்பது பொருள். மற்றொரு பொருளில் கொண்டால், "அபூர்வி" என்பது, "மனைவியின் சுகம் இல்லாதவன்" என்றும், "பிரம்மசாரி" என்றும் வெவ்வேறு வகையில் பொருள்படும்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
இராமன் இவ்வாறு சொன்னதும், காம மோஹிதையான அந்த ராக்ஷசி {காம மயக்கத்தில் இருந்த அந்த சூர்ப்பணகை}, ராமனை விட்டுவிட்டு, திடீரென லக்ஷ்மணனிடம் சென்று {பின்வருமாறு} சொன்னாள்:(6) "வரவர்ணினியான {சிறந்த நிறம் கொண்டவளான} நான் இந்த ரூபத்தையுடைய உனக்குத் தகுந்த பாரியையாவேன். என்னுடன் சுகமாக தண்டகத்தில் திரிவாயாக" {என்றாள் சூர்ப்பணகை}.(7)
அந்த ராக்ஷசி இவ்வாறு சொன்னதும், வாக்கிய கோவிதனும், சௌமித்ரியுமான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனும், சுமித்ரையின் மகனுமான} லக்ஷ்மணன், புன்னகைத்தவாறே சூர்ப்பணகையிடம் பொருத்தமானவற்றை {பின்வருமாறு} சொன்னான்:(8) "கமலவர்ணினியே {தாமரை நிறத்தவளே}, என்னைப் போன்ற தாசனின் பாரியையாகி {அடிமையின் மனைவியாகி}, ஏன் தாசியாக {அடிமைப்பெண்ணாக} விரும்புகிறாய்? நான் இந்த ஆரியரின் உடன் பிறந்த அடியவனாவேன்.(9) விசாலாக்ஷியே, அமலவர்ணினியே {நீள்விழியாளே, களங்கமற்ற நிறம் கொண்டவளே}, நீ ஏராளமான பொருள் படைத்த {செல்வந்தரான} இந்த {ராமரின்} ஆரியரின் இளைய பாரியையாகி {இளைய மனைவியாகி}, நோக்கம் நிறைவேறி, மகிழ்ச்சி அடைவாயாக.(10) இவர் விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும், வெற்று வயிற்றைக் கொண்டவளும், கிழவியுமான தன் பாரியாளைக் {சீதையைக்} கைவிட்டு உன்னையே துதித்திருப்பார்.(11) வரவர்ணினியே {சிறந்த நிறம் கொண்டவளே}, அழகிய இடை கொண்டவளே, பகுத்தறிவுள்ள எவன்தான், சிறந்த இத்தகைய உன் ரூபத்தை விட்டு மனுஷிகளிடம் தன் மனத்தைச் செலுத்துவான்?" {என்றான் லக்ஷ்மணன்}.(12)
இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், சரிந்த வயிற்றுடன் கூடிய அந்தக் கொடூரி {சூர்ப்பணகை}, பரிஹாசத்தை அறியும் பகுத்தறிவற்றவளாக அந்தச் சொற்களை உண்மை என்று நினைத்தாள்.(13) காமமோஹிதையான அவள், சீதையுடன் பர்ணசாலையில் அமர்ந்திருந்தவனும், பரந்தபனும் {பகைவரை எரிப்பவனும்}, வெல்லப்பட முடியாதவனுமான ராமனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(14) "விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும், வெற்று வயிற்றைக் கொண்டவளுமான இந்தக் கிழவியைப் பாரியாளாகக் கொண்ட நீ என்னை அதிகம் மதிக்கவில்லை.(15) இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த மானுஷியை நான் பக்ஷிக்க விரும்புகிறேன். பிறகு, சக்களத்தி இல்லாமல் நான் உன்னுடன் சுகமாகத் திரிவேன்" {என்றாள் சூர்ப்பணகை}.(16)
தணல் போன்ற கண்களைக் கொண்டவள் {சூர்ப்பணகை} இவ்வாறு சொல்லிவிட்டு, மான்போன்ற கண்களைக் கொண்ட சீதையை நோக்கி, ரோஹிணியுடன் மோத விரையும் மஹா உல்கத்தை {ரோகிணி நக்ஷத்திரத்தை நோக்கி விரையும் பெரும் விண்கல்லைப்} போலப் பெருங்குரோதத்துடன் விரைந்து சென்றாள்.(17) மஹாபலவானான ராமன், மிருத்யுவின் பாசம் {யமனின் சுருக்குக் கயிற்றைப்} போலப் பாயும் அவளை சினத்துடன் தடுத்து, லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(18) "சௌம்யா, சௌமித்ரியே, குரூரிகளிடமும், அநாரியைகளிடமும் எக்காலத்திலும் பரிஹாசம் செய்ய வேண்டாம். பார், எப்படியோ வைதேஹி ஜீவித்திருக்கிறாள்.(19) புருஷவியாகரா, விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, அதிமதம் கொண்டவளும் {வெறிபிடித்தவளும்}, பெரும் வயிற்றைக் கொண்டவளுமான இந்த ராக்ஷசியை விரூபியாக்குவதே {வடிவம் சிதைப்பதே} உனக்குத் தகும்" {என்றான் ராமன்}.(20)
இவ்வாறு சொன்னதும் மஹாபலவானான லக்ஷ்மணன், குரோதத்துடன் வாளை எடுத்து, ராமன் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவளது கர்ணங்களையும், நாசியையும் {காதுகளையும், மூக்கையும்} அறுத்தான்[2][3].(21) காதுகளும், மூக்கும் ஆறுபட்டு கோரமான அந்த சூர்ப்பணகை, பெருங்குரலில் அலறியவாறே வந்த வழியே வனத்திற்குள் ஓடினாள்.(22) விரூபியும், மஹாகோரமானவளும், குருதியில் நனைந்தவளுமான அந்த ராக்ஷசி, வர்ஷகால {கார்கால} மேகத்தைப் போல பல்வேறு வகைகளில் கதறினாள்.(23) காண்பதற்கு கோரமான அவள், ஏராளமாகப் பெருகிய ரத்தத்தைத் தன் கைகளால் பொத்திக் கொண்டு[4] கர்ஜித்தவாறே மஹாவனத்திற்குள் பிரவேசித்தாள்.(24)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நாசிக் என்ற நகரம், இந்நிகழ்வாலேயே {லக்ஷ்மணன் சூர்ப்பணகையின் நாசியை அறுத்த நிகழ்வாலேயே} அந்தப் பெயரைப் பெற்றது என்று நம்பப்படுகிறது" என்றிருக்கிறது.
[3] நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான்வில் எடாது அவள் வயங்கு ஏரி ஆம் என விரிந்தசில் வல் ஓதியைச் செங்கையில் திருகுறப் பற்றிஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்று வாள் உருவிஊக்கித் தாங்கி, விண்படர்வென் என்று உருத்து எழுவாளைநூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலாமூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால்போக்கி போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான்.- கம்பராமாயணம் 2824, 2825ம் பாடல்கள்பொருள்: "அடியே நில்" என்று அதட்டி விரைந்தான். இவள் ஒரு பெண் என்று எண்ணினான். தன்னுடைய வில்லை எடுக்காமல் , அவளது தீப்போன்ற பரந்த செந்நிறம் கொண்ட கூந்தலைத் தன் சிவந்த கைகளால் சுருட்டிப் பற்றி, விரைவில் இழுத்து உதைத்து ஒளி விளங்கும் தன் வாளை உருவியபோது,(2824) "முயன்று இவனையும் எடுத்துக் கொண்டு வான்வழி செல்வேன்" என்று எழுந்தவளை எளிதில் கீழே தள்ளி "கொடுந்தொழில் செய்யாதே" என்று சொல்லி, மூக்கையும், காதுகளையும், மார்புக்காம்புகளையும் அடுத்தடுத்து அறுத்தெறிந்து சினத்தைவிட்டு முறுக்கிப் பிடித்த அவளது கூந்தலையும் விட்டான்.
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, தன் காதுகளையும், மூக்கையும் தன் கைகளால் மறைத்துக் கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
அந்த விரூபிதை {வடிவம் சிதைந்தவள்}, ராக்ஷச சங்கத்தால் {கூட்டத்தால்} சூழப்பட்ட ஜனஸ்தானத்தை அடைந்து, உக்கிர தேஜஸ்ஸுடன் கூடியவனும், தன்னுடன் பிறந்தவனுமான கரனை நெருங்கி, ககனத்தில் {வானத்தில்} இருந்து விழும் இடியைப் போல பூமியில் விழுந்தாள்.(25) அப்போது பயமோஹத்தால் மூர்ச்சித்த அந்த கரபாகினி {கரனின் தமக்கை}, ரத்தத்தில் நனைந்தபடியே, பாரியையோடும், லக்ஷ்மணனோடும் ராகவன் வனத்திற்கு வந்திருப்பது, தன் வடிவத்தை சிதைத்தது என அனைத்தையும் சொன்னாள்.(26)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |