Pre-winter Season | Aranya-Kanda-Sarga-16 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பஞ்சவடியின் இயற்கை அழகை ராமனிடம் வர்ணித்த லக்ஷ்மணன்; பரதனின் குணங்களை நினைத்துப் பார்த்த ராமன்...
மஹாத்மாவான அந்த ராகவன் {ராமன்}, அங்கே சுகமாக வசித்துக் கொண்டிருந்தபோது, சரத் ருது {கூதிர் காலம்} கடந்து, விருப்பத்திற்குரிய ஹேமந்த ருது {முன்பனிக் காலம்} தொடங்கியது[1].(1) இரவு கழிந்து விடிந்த ஒரு நாள், அந்த ரகுநந்தனன் {ராமன்}, நீராடுவதற்காக ரம்மியமான கோதாவரி நதிக்குப் புறப்பட்டான்.(2) உடன்பிறந்த வீரியவானான சௌமித்ரி {லக்ஷ்மணன்}, கையில் கலசத்துடன் பின்தொடர்ந்து, சீதை சகிதனான அவனிடம் {ராமனிடம்} பணிவுடன் இதைச் சொன்னான்:(3) "பிரியவாதியே {இனிமையாகப் பேசுபவரே}, எது உமக்குப் பிரியமானதோ, எது வருடத்தையே சுபமாக அலங்கரிக்கிறதோ அந்தக் காலம் இதோ தொடங்கியிருக்கிறது.(4) உலகத்தில் பனி கடுமையாக இருக்கிறது, பிருத்வியை {பூமியைப்} பயிர்கள் மறைத்திருக்கின்றன, ஜலம் அனுபவிக்கத்தகாததாகவும், ஹவ்யவாஹனம் {நெருப்பிலிடப்படும் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் வாகனமான அக்னி} சுபமாகவும் இருக்கிறது.(5)
[1] ருதுக்கள் {பருவ காலங்கள்} ஆறாகும். அவை 1. இளவேனிற் காலம் {வசந்த ருது / Spring Season} - சித்திரை, வைகாசி, 2. முதுவேனிற் காலம் {கிரீஷ்ம ருது / Summer Season} - ஆனி, ஆடி, 3. கார் காலம் {வர்ஷ ருது / Monsoon Season} - ஆவணி, புரட்டாசி, 4. கூதிர் காலம் {ஷரத் ருது / Autumn Season} - ஐப்பசி, கார்த்திகை, 5. முன்பனிக் காலம் {ஹேமந்த ருது / Prewinter Season} - மார்கழி, தை, 6. பின்பனிக் காலம் {சிசிர ருது / Winter Season} - மாசி, பங்குனி ஆகியனவாகும். மேலுள்ள சுலோகத்தின் கூற்றுப்படி, இராமலக்ஷ்மணர்களும், சீதையும், ஐப்பசி, அல்லது கார்த்திகை மாதங்களில் பஞ்சவடியை அடைந்தார்கள். 6ம் சுலோகத்தில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணத் தொடக்கம் மகர சங்கராந்தியைக் குறிப்பிடப்படுகிறது. 12ம் சுலோகத்தில் புஷ்யம் {தை மாதம்} நெருங்குகிறது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சர்க்கத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வு மார்கழி மாத இறுதியில் நடப்பதுபோலத் தெரிகிறது.
சந்தர்கள் {நேர்மையானவர்கள்}, புதிதாக உதிக்கும் அயணத்தைப் {உத்தராயணத்தைப்} பூஜித்து, ஆக்ராயணகத்திற்கான சடங்குகளைச் செய்து[2] பித்ரு தேவர்களை வழிபட்டு, கல்மஷங்களில் {தீமைகளில்} இருந்து விடுபடுகிறார்கள்.(6) ஜனபதவாசிகள் {கிராமவாசிகள்}, பசு ரசாதிகளால் {பால் பொருட்களால்} பெரும் செல்வத்தை அடைந்து ஆசை நிறைவேறியவர்களாகிறார்கள். மஹீபாலர்கள் {பூமியை ஆள்பவர்கள்}, வெற்றி அடையும் விருப்பத்தில் யாத்திரை செல்வதற்காகத் திரிந்து கொண்டிருக்கின்றனர்.(7) அந்தகனை சேவிக்கும் திசைக்கு {தென் திசைக்குச்} சென்ற சூரியன், அங்கேயே திடமாக நின்று சேவிப்பதால், உத்தர திக்கானது {வடதிசையானது} திலகமில்லாத ஸ்திரீயைப் போல பிரகாசத்தை இழந்திருக்கிறது.(8) இயற்கையாகவே ஹிமகோசமாக {பனியின் கொள்ளிடமாக} இருக்கும் ஹிமவான் கிரி {இமயமலை}, இப்போது தூரத்தில் சூரியன் இருப்பதால் உண்மையில் ஹிமவானாக {பனி நிரம்பியதாக} பெயருக்குத் தகுந்தது போல வெளிப்படுகிறது.(9) சுப ஆதித்தியனால் {மிதமான சூரியனால்} பகலில் திரிவது சுகமானது, மத்தியானத்தின் {நடுப்பகலின்} ஸ்பரிசமும் சுகமானது, நிழலும், நீரும் அனுபவிக்க இயலாதவை ஆகின.(10)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆக்ராயணச் சடங்கு என்பது, வயல்களின் அறுவடையை வீட்டில் கொண்டு வந்த பிறகு, அதைப் பயன்படுத்துவதற்கு முன் கொடுக்கப்படும் காணிக்கையாகும். வழக்கமாக இஃது உத்தராயணத்தின் தொடக்க நாளான மகரசங்கராந்திக்கான நேரமாக இருக்கும்" என்றிருக்கிறது.
தற்போது பனியில் மூழ்கிய நாள்கள், மிருதுவான சூரியனுடனும், கடுங்குளிருடன் கூடிய மூடுபனியுடனும், மாருதத்துடனும் சூன்யமான அரண்யத்தைப் பிரகாசமிழக்கச் செய்கின்றன.(11) தற்போது திறந்த ஆகாசத்தில் சயனிப்பதில்லை {திறந்த வெளியில் யாரும் படுப்பதில்லை}. புஷ்யம் {தைமாதம்} நெருங்குகிறது பனியால் சிவந்து, குளிர்ந்த இரவுகள், மூன்று யாமங்கள் நீண்டவையாக இருக்கின்றன. {இரவுகள் மூன்று யாமங்கள் கொண்டவையாக நீள்கின்றன}[3].(12) இரவியிடம் {சூரியனுடன்} இணையும் சௌபாக்கியமுடையவனும், பனியினால் {சிவந்த} அருணமண்டலமுடையவனுமான சந்திரன், சுவாசத்தால் மங்கிய கண்ணாடியைப் போலப் பிரகாசமற்றிருக்கிறான்.(13) பௌர்ணமி இரவிலும், பனியினால் மலினமடையும் ஜோதி, வெப்பத்தில் கருகும் {வாடும்} சீதையைப் போல சோபையில்லாமல் தெரிகிறது.(14) இயற்கையாகவே குளிர்ந்த ஸ்பரிசமுடைய மேல்காற்று {மேற்கிலிருந்து வீசும் காற்று}, தற்போது பனியால் தூண்டப்பட்டு காலை வேளையிலும் இருமடங்கு குளிர்ச்சியாய் வீசுகிறது.(15)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு யாமம் {ஜாமம்} என்பது மூன்று மணிநேரங்களைக் கொண்டதாகும். நிவிருத்த ஆகாச சயனம் என்பதற்கு சொர்க்கத்தில் தேவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
சூரியன் உதிக்கையில், பனித்துளிகளால் மூடப்பட்டுள்ள யவம், கோதுமைகள் நிறைந்த அரண்யம் {காடு}, கிரௌஞ்ச, சாரஸங்களின் நாதத்துடன் சேர்ந்து சோபிக்கிறது.(16) பேரீச்சம்பூவின் பருமனுள்ள தானியங்கள் நிறைந்து, கொஞ்சம் வளைந்திருக்கும் நெற்பயிர்களுடன் கூடிய களங்கள் கனகப் பிரபையுடன் {பொன்னொளியுடன்} பளபளக்கின்றன.(17) தூரத்தில் உதிக்கும் சூரியன், தன் கதிர்களைப் பரப்பினாலும், பனி, மூடுபனி ஆகியவற்றின் முற்றுகையால் சந்திரனைப் போலவே காணப்படுகிறான்.(18) சற்றே வெளுத்ததாகவும், சிவந்ததாகவும் பூமியில் காணப்படும் அவனது {சூரியனின்} வெப்பம், காலையில் வீரியம் கிரஹிக்கப்பட்டும் {மந்தமாகவும்}, மத்தியானத்தில் சுகமான ஸ்பரிசத்துடனும் {மென்மையாகவும்} வெளிப்படுகிறது.(19) பனித்துளிகள் விழுவதனால் புல்வெளிகள் சற்றே நனைந்திருந்தாலும், மென்மையான வெப்பத்தால் {இளம் வெயிலால்} வனபூமி ஒளிமிக்கதாக சோபிக்கிறது.(20)
கடுந்தாகத்துடன் கூடியதும், அகன்றதுமான வன யானை, குளுமையான தெளிந்த நீரை சுகமாக ஸ்பரிசித்ததும், {அந்நீரைக் குடிக்காமல்} தன் துதிக்கையைத் திருப்பியிழுத்துக் கொள்கிறது.(21) சமீபத்தில் அமர்ந்திருக்கும் இந்த ஜலசாரிப் பறவைகள் {நீர்க்கோழிகள்}, போரில் நுழையாத கோழைகளைப் போல நீரில் மூழ்காமல் இருக்கின்றன.(22) பனியின் இருளில் மூழ்கியிருக்கும் இந்த வனராஜ்ஜியம் {மரங்களுடன் கூடிய வனம்}, மூடுபனியால் மறைக்கப்பட்டும், புஷ்பங்கள் இல்லாமலும் நன்றாகத் தூங்குவதைப் போலத் தெரிகிறது.(23) இப்போது பனியால் மறைக்கப்பட்ட நீரைக் கொண்டவையும், சாரஸங்களின் சப்தத்தால் {கொக்குகளின் ஒலியால்} ஊகித்தறிய வேண்டியவையாக இருப்பவையுமான சரிதங்கள் {ஆறுகள்}, பனியால் நனைந்த மணற்கரைகளால் பிரகாசிக்கின்றன.(24) இவ்வாறு பொழியும் பனியாலும், மிருதுவான பாஸ்கரனாலும் {சூரியனாலும்}, குளிராலும் மலையிலுள்ள {ஆழமான கிணற்றிலுள்ள} ஜலமும் பொதுவாக ருசிப்பதில்லை {அந்த நீரையும் பொதுவாக குடிக்கமுடிவதில்லை}.(25) கமலாகரங்கள் {தாமரையோடைகள்}, முதிர்ந்து வாடிய இலைகளாலும், உதிர்ந்த தழைகளாலும், காய்களாலும், பனியால் அழுகி எஞ்சியிருக்கும் தண்டுகளாலும் பிரகாசமற்றிருக்கின்றன.(26)
புருஷவியாகரரே, தர்மாத்மாவான பரதரும், நகரில் இந்தக் காலத்தில் துக்கத்துடன் கூடியவராக, உம்மிடத்திலுள்ள பக்தியால் நகரில் {அயோத்தியில்} தபம் செய்து கொண்டிருக்கிறார்.(27) பல்வேறு வகையான போகங்களையும், ராஜாதிகாரத்தையும், பெருமையையும் துறந்து, தபஸ்வியாக நியமமான ஆஹாரம் உண்டு, குளிர்ந்திருக்கும் மஹீயில் {தரையில்} உறங்குகிறார்.(28) அவரும் இந்த வேளையில் நீராடுவதற்காக எழுந்திருந்து, குடிமக்களால் சூழப்பட்டவராக, நித்தியம் சரயூ நதிக்கு சென்று கொண்டிருப்பார்.(29) அதிசுகமாக வளர்ந்த அந்த சுகுமாரன் {மென்மையானவர்}, இந்த அபரராத்திரியில் {அதிகாலையில்} பனியில் மூழ்கியிருக்கும் ஸரயூவில் எப்படி மூழ்குவார்?(30)
தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சியாமள வர்ணத்தையும் {கரிய நிறத்தையும்} கொண்டவரும், ஸ்ரீமானும், உதரமற்றவரும் {உள்ளங்கை மடிந்திருப்பது போல வயிற்றுப் பகுதி மறைந்த குறுகிய இடை கொண்டவரும்}, மஹானும், தர்மஜ்ஞரும் {தர்மத்தையறிந்தவரும்}, சத்தியவாதியும், இழிவைப் பொறுத்துக்கொள்ளாதவரும், ஜிதேந்திரியரும் {புலன்களை வென்றவரும்},{31} பிரியமாகவும், மதுரமாகவும் {அன்பாகவும், இனிமையாகவும்} பேசுபவரும், தீர்க்கபாகுவுமான {நீண்ட கைகளைக் கொண்டவருமான} அந்த அரிந்தமர் {பகைவரை அழிப்பவரான பரதர்}, பலவகை போகங்களைத் துறந்து, நிறைவான ஆத்மாவுடன், ஆரியரான உம்மிடம் அடைக்கலம் புகுந்தார்.(31,32) வனத்துக்கு வந்திருக்கும் உம்மைப் பின்பற்றி தபம் செய்பவரும், உம்முடன் பிறந்தவரும், மஹாத்மாவுமான அந்த பரதர், ஸ்வர்க்கத்தையே வென்றவராவார்.(33) "துவிபதர்கள் {இரண்டு பாதங்களுடன் கூடிய உயிரினங்களான மனிதர்கள் தங்கள் குணத்தில்}, பிதாவைப் பின்பற்றாமல் மாதாவைப் பின்பற்றுவார்கள்" என்று நன்கறியப்படும் உலகப் பழமொழியை பரதர் வேறுவிதமாக்கினார்.(34) எவளுக்கு தசரதர் பர்த்தாவோ {கணவனோ}, எவளுக்கு பரதர் மகனோ அந்த அம்பா கைகேயி இவ்வளவு குரூர எண்ணம் படைத்தவள் ஆனதுமேனோ?" {என்றான் லக்ஷ்மணன்}.(35)
தார்மிகனான லக்ஷ்மணன் சினேகத்துடன் இவ்வாறு இந்த வாக்கியத்தைப் பேசும்போது, பெற்றவளைப் பழிக்கும் அந்தச் சொற்களை சகித்துக் கொள்ளாத ராமன், {பின்வருமாறு} பேசினான்:(36) "தாதா {ஐயா}, மத்திய அம்பா[4] உன்னால் எவ்வகையிலும் நிந்திக்கத்தக்கவளல்ல. இக்ஷ்வாகுக்களின் நாதனான பரதனைப் பற்றிய கதைகளை மட்டுமே பேசுவாயாக.(37) திட விரதத்துடன் கூடிய என் புத்தி, வனவாசத்திலேயே நிச்சயத்திருக்கும் போதிலும், பரதனிடம் கொண்ட சினேகத்தினால், கலக்கமுற்றதாக மீண்டும் பால்ய நிலையை {குழந்தைத்தனத்தை} அடைகிறது.(38) பிரியமானவையும், மதுரமானவையும், அமிருதத்துக்கு நிகரானவையும், ஹிருதயப்பூர்வமானவையும், மனத்தைக் களிக்கச் செய்பவையுமான அவனது வாக்கியங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.(39) இரகுநந்தனா {லக்ஷ்மணா}, உன்னோடு கூடியவனாக மஹாத்மாவான அந்த பரதனையும், வீரனான சத்ருக்னனையும் எப்போதுதான் நான் சேரப்போகிறேன்?" {என்றான் ராமன்}.(40)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரண்யகாண்டம் 2ம் சர்க்கம் 19ஆ-20ம் சுலோகங்களில் ராமன், கைகேயியை மத்திய மாதா என்று அழைக்கிறான்" என்றிருக்கிறது. இங்கே கைகேயியை மத்திய அம்பா என்று ராமன் அழைக்கிறான்.
இவ்வாறு புலம்பிய அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, கோதாவரி நதியை அடைந்து, தம்பியோடும், சீதையோடும் சேர்ந்து அபிஷேகம் செய்தான் {நீராடினான்}.(41) பிறகு அந்த அனகர்கள் {பாவமற்றவர்கள்}, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீரால் தர்ப்பணம் செய்துவிட்டு, உதய சூரியனையும், தேவர்களையும் பக்தியுடன் துதித்தனர்.(42) சீதையை மறுபாதியாகக் கொண்ட ராமன், லக்ஷ்மணனோடு நீராடியபோது, அகராஜபுத்திரியுடனும் {பர்வதராஜன் புத்திரியான பார்வதியுடனும்}, நந்தியுடனும் அபிஷேகம் எடுக்கும் ஈச பகவான் ருத்திரனைப் போல பிரகாசித்தான்.(43)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 16ல் உள்ள சுலோகங்கள்: 43
Previous | | Sanskrit | | English | | Next |