Kill and eat | Sundara-Kanda-Sarga-24 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சசி, அருந்ததி, ரோஹிணி முதலியோர் தங்கள் தங்கள் கணவனிடம் கொண்ட அர்ப்பணிப்பைக் குறிப்பிட்ட சீதை; ராக்ஷசிகள் சீதையைக் கொன்று உண்ணப்போவதாக அச்சுறுத்தியது...
பிறகு, கொடிய முகங்களையும், கடும் இயல்பையும் கொண்ட ராக்ஷஸ நாரியைகள் {ராக்ஷசப் பெண்கள்}, அந்த சீதையை நெருங்கி, கடுமைமிக்க, பிரியமற்ற வாக்கியத்தைப் பேசினார்கள்:(1) “சீதே, பெருஞ்சிறப்புடைய மஹத்தான சயனங்களுடன் {படுக்கைகளுடன்} கூடியதும், சர்வபூதங்களுக்கும் மனோஹரமானதுமான {அனைத்து உயிரினங்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதுமான} அந்தப்புரத்தில் வசிப்பதை நீ ஏற்க மறுப்பதேன்?(2) மானுஷியான நீ, ஒரு மானுஷ்யனின் பார்யத்வத்தை பஹுமானிக்கிறாய் {மனிதப்பெண்ணான நீ, மனிதனின் மனைவி என்ற நிலையை உயர்வாக மதிக்கிறாய்}. இராமனிடம் இருந்து மனத்தை விலக்குவாயாக. இல்லையெனில் நீ இல்லாமல் போவாய்.(3) மூவுலகங்களின் சுபமான செல்வங்களை அனுபவிக்கும் ராக்ஷசேஷ்வரர் ராவணரை ஏற்று, பர்த்தாவாக்கி {கணவராக்கிக்} கொண்டு விரும்பியபடி சுகமாக இருப்பாயாக.(4) சோபனே {அழகிய பெண்ணே}, அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, நீ மானுஷியாக இருப்பதால், ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டவனும், வெற்றியடையாததால் வருந்தும் மானுஷனுமான அந்த ராமனை இச்சிக்கிறாய் {விரும்புகிறாய்}” {என்றனர் அந்த ராக்ஷசிகள்}.(5)
பத்மங்களை {தாமரைகளைப்} போன்ற கண்களைக் கொண்ட சீதை, ராக்ஷசிகளின் சொற்களைக் கேட்டு, கண்ணீர் நிறைந்த நேத்திரங்களுடன் {கண்களுடன்} இந்த வசனத்தைச் சொன்னாள்:(6) “{நீங்கள் அனைவரும்} சேர்ந்து வந்து, என்னைக் குறித்து, உலகத்தால் வெறுக்கப்படும் வாக்கியத்தை சொல்வதேன்? இஃது உங்கள் மனத்திற்கு கில்பிஷமாக {பாபம் நிறைந்ததாகத்} தெரியவில்லையா?(7) மானுஷி, ராக்ஷசனுக்குப் பாரியையாகத் தகாதவள். அனைவரும் உங்கள் விருப்பப்படியே என்னைத் தின்னுங்கள். நான் உங்கள் சொற்களின்படி செயல்படமாட்டேன்.(8) தீனமடைந்திருந்தாலும், ராஜ்ஜியத்தை இழந்திருந்தாலும், என் பர்த்தா {கணவர்} எவரோ, அவரே எனது குரு {தலைவர்} ஆவார். சூரியனிடம் {பற்று கொண்ட} சுவர்ச்சலை போல, நித்தியம் அவரிடமே நான் பற்று கொண்டவளாக இருக்கிறன்.(9) எப்படி மஹாபாக்கியவதியான சசி, சக்ரனை {இந்திராணி இந்திரனைப்} பிரியாதிருக்கிறாளோ, எப்படி அருந்ததி வசிஷ்டரையும், ரோகிணி சசினனையும் {சந்திரனையும்},{10} எப்படி லோபாமுத்ரை அகஸ்தியரையும், எப்படி ஸுகன்யை சியவனரையும், எப்படி சாவித்ரி சத்யவந்தனையும் {சத்தியவானையும்}, ஸ்ரீமதி கபிலரையும்,{11} எப்படி மதயந்தி ஸௌதாஸனையும் {கல்மாஷபாதனையும்}, கேசினி சகரனையும், பைமியான {பீமனின் மகளான} தமயந்தி தன் பதியான நைஷதரையும் {நைஷத மன்னன் நளனையும்} இணைபிரியாமல் தொடர்ந்தார்களோ,{12} அப்படியே நானும் இக்ஷ்வாகுக்களில் சிறந்தவரான என் பதி ராமரையே பின்தொடர்வேன்” {என்றாள் சீதை}.(10-13அ)
சீதையின் வசனத்தைக் கேட்டுக் குரோதத்தால் மூர்ச்சித்த ராக்ஷசிகள், ராவணனால் தூண்டப்பட்ட கடும் வாக்கியங்களைச் சொல்லி {சீதையை} மிரட்டினர்.(13ஆ,14அ) சிம்சுப மரத்தில் மறைந்திருந்த கபியான {குரங்கான} அந்த ஹனுமான், ஏதும் பேசாதவனாக, சீதையை அந்த ராக்ஷசிகள் மிரட்டிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்தான்.(14ஆ,15அ) நடுங்கிக் கொண்டிருந்தவளை எங்குமிருந்து நெருங்கியவர்கள் {சீதையை நெருங்கிய அந்த ராக்ஷசிகள்}, காய்ந்து, நீண்டு, தொங்கியபடியே ஒளிரும் தங்கள் உதடுகளை நாவால் அதிகம் நனைத்துக் கொண்டனர்.(15ஆ,16அ) பரமக்குரோதத்துடன் கூடியவர்கள், விரைவாக பரசுகளை {கோடரிகளை} எடுத்துக் கொண்டு, “இவள் ராக்ஷசாதிபரான ராவணரை பர்த்தாவாக அடையத் தகாதவள்” என்று சொன்னார்கள்.(16ஆ,17அ)
பயங்கரமான ராக்ஷசிகளால் அச்சுறுத்தப்பட்டவளும், சிறந்த முகத்தைக் கொண்டவளுமான அவள் {சீதை}, கண்ணீருடன் அங்கிருந்து சென்று, அந்த சிம்சுபத்தை {ஹனுமான் இருந்த அந்த சிம்சுப மரத்தை} அடைந்தாள்.(17ஆ,18அ) பிறகு, அந்த சிம்சுபத்தை நெருங்கி, சோகத்தில் மூழ்கி, திகைத்து நின்றவளும், விசாலாக்ஷியுமான {நீள்விழியாளுமான} சீதையை ராக்ஷசிகள் சூழ்ந்து கொண்டனர்.(18ஆ,19அ) எங்குமிருந்து வந்த அந்த ராக்ஷசிகள், மெலிந்தவளும், தீனவதனமுடையவளும் {பரிதாபத்திற்குரிய முகத்தைக் கொண்டவளும்}, மலின அம்பரங்களை {அழுக்கடைந்த ஆடைகளைத்} தரித்திருந்தவளுமான அந்த சீதையை மிரட்டினார்கள்.(19ஆ,20அ)
அப்போது, வினதை என்ற பெயருடையவளும், பீமதரிசனங்கொண்டவளும் {பயங்கரத் தோற்றமுடையவளும்}, கோபம் நிறைந்தவளும், கொடிய பார்வை கொண்டவளும், பருத்த வயிற்றைக் கொண்டவளுமான ராக்ஷசி, அவளிடம் {சீதையிடம் பின்வருமாறு} பேசினாள்:(20ஆ,21அ) “சீதே, இதுவரை பர்த்தா மீதுள்ள சினேகத்தைக் காட்டியது போதும். பத்ரே {மங்கலமானவளே}, எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது விசனத்தையே தரும்.(21ஆ,22அ) மைதிலி, மானுஷ விதியை {மனிதர்களின் கடமையைச்} செய்துவிட்டாய். நான் மகிழ்ச்சியடைகிறேன். பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. {இனி} நான் சொல்லும் பத்தியமான சொற்களின்படி செயல்படுவாயாக.(22ஆ,23அ) சர்வ ராக்ஷசர்களுக்கும் தலைவரான ராவணரை பர்த்தாவாக ஏற்பாயாக.{23ஆ} அவர் ஸுரேசனான வாசவனை {இந்திரனைப்} போன்ற விக்ராந்தர்; ரூபவந்தர்; கொடையாளி; அனைவருக்கும் பிரியதரிசனந்தரும் {இனிமையானவராகத் தோன்றும்} தியாகசீலர்.(23ஆ,24) கிருபைக்குரிய மானுஷனான ராமனைக் கைவிட்டு, ராவணரிடம் தஞ்சம்புகுவாயாக. வைதேஹி, திவ்ய அங்க ராகங்களுடன் {தெய்வீகக் களிம்புகளுடன்}, திவ்ய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு,{25} இன்று முதல் சர்வலோகங்களுக்கும் ஈஷ்வரீ ஆவாயாக.(25,26அ) சோபனையே, அக்னியின் தேவியான ஸ்வாஹாவும், இந்திரனின் சசியும் எப்படியோ அப்படி {சர்வலோகேஷ்வரி} ஆவாயாக. வைதேஹி, கிருபைக்குரியவனும், ஆயுசு தீர்ந்தவனுமான ராமனால் பயனென்ன?(26ஆ,27அ) நான் சொன்ன இந்த வாக்கியத்தின்படி நீ நடக்கவில்லையெனில், நாங்கள் அனைவரும் இந்த முஹூர்த்தமே உன்னை பக்ஷித்துவிடுவோம் {உண்டுவிடுவோம்}” {என்றாள் வினதை}.(27ஆ,28அ)
தொங்கும் முலைகளுடன் கூடியவளும், விகடை என்ற பெயரைக் கொண்டவளுமான மற்றொருத்தி {மற்றொரு ராக்ஷசி}, முஷ்டியை உயர்த்தி, கோபத்தில் கர்ஜித்தபடியே சீதையிடம் {பின்வருமாறு} பேசினாள்:(28ஆ,29அ) “துர்மதி படைத்த மைதிலியே, பிரியமற்ற ரூபங்கொண்ட உன் வசனங்கள் பலவும், இரக்கத்தினாலும், மிருதுத்வத்தாலும் {மென்மையினாலும்} சகித்துக் கொள்ளப்பட்டன.(29ஆ,30அ) காலத்திற்கும் மதிப்புடையதும், ஹிதமானதுமான எங்கள் வாக்கியத்தின்படி நீ செயல்படவில்லை.{30ஆ} அந்நியர்களால் அடைதற்கரிய சமுத்திரத்தின் மறுகரைக்கு நீ கொண்டுவரப்பட்டிருக்கிறாய். மைதிலி, கோரமான ராவணாந்தப்புரத்திற்குள் பிரவேசித்திருக்கிறாய்.(30ஆ,31) எங்களால் நன்றாக ரக்ஷிக்கப்படும் ராவணரின் கிருஹத்தில் அடைக்கப்பட்ட உன்னைக் காத்து விடுவிப்பது சாக்ஷாத் புரந்தரனுக்கும் {இந்திரனுக்கும்} சாத்தியமில்லை.(32) மைதிலி, ஹிதந்தரும் {நன்மை பயக்கும்} என் வசனத்தின்படி செயல்படுவாயாக. கண்ணீர் விடுவதை நிறுத்து. போதும். அர்த்தமற்ற சோகத்தைக் கைவிடு.(33) சீதே, பிரீதியையும், மகிழ்ச்சியையும் அடைவாயாக. இந்த நித்திய கவலையைக் கைவிட்டு, ராக்ஷசராஜருடன் சுகமாக கிரீடித்திருப்பாயாக.(34) பீரு {அச்சமுடையவளே}, எப்படி ஸ்திரீகளின் யௌவனம் {பெண்களின் இளமை} நிலையற்றது என்பதை நீ அறிவாய். எதுவரை அஃது {உன் இளமை} உன்னை கடக்காமல் இருக்குமோ, அதுவரை சுகத்தை அனுபவிப்பாயாக.(35) மதிரேக்ஷணே {மயக்கும் கண்களைக் கொண்டவளே}, ரம்மியமான உத்யானவனங்களிலும், பர்வதங்களிலும், வனங்களிலும் {தோட்டங்களிலும், மலைகளிலும், காடுகளிலும்} நீ ராக்ஷசராஜருடன் திரிவாயாக.(36) சுந்தரி, சப்தசஹஸ்ரஸ்திரீகள் {ஏழாயிரம் பெண்கள்} உன் வசத்தில் இருப்பார்கள். சர்வராக்ஷசர்களுக்கும் தலைவரான ராவணரை பர்த்தாவாக்கி {கணவராக்கிக்} கொள்வாயாக.(37) மைதிலி, உள்ளபடியே நான் சொன்ன வாக்கியத்தின்படி நீ செயல்படவில்லையெனில், உன் ஹிருதயத்தைப் பிடுங்கி பக்ஷித்துவிடுவேன் {உண்பேன்}” {என்றாள் விகடை}.(38)
பிறகு, குரோதத்தில் மூர்ச்சித்தவளும், சண்டோதரி என்ற பெயரைக் கொண்டவளுமான ராக்ஷசி, மஹத்தான சூலத்தைச் சுழற்றியபடி இந்த வசனத்தைச் சொன்னாள்:(39) “மான்போன்ற விழிகளுடனும், பயத்தில் நடுங்கும் முலைகளுடன் கூடிய இவளை ராவணர் அபகரித்து வந்ததைக் கண்டு என்னில் பேராசை உண்டானது.(40) யக்ருத்தையும் {கல்லீரலையும்}, பிலீஹத்தையும் {மண்ணீரலையும்}, உத்பீடம் {இதயத்திற்கு மேலிருக்கும் இறைச்சி}, தசை, நரம்புகள் ஆகியவற்றுடன் கூடிய ஹிருதயத்தையும், குடல்களையும், அதேபோல சிரசையும் {தலையையும்} அப்படியே தின்றுவிட வேண்டும் என்பதே என் மதி {என் எண்ணம்}” {என்றாள் சண்டோதரி}[1].(41)
[1] முன் முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகுற்றார்மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சிகொல்மின் கொல்மின் கொன்று குறைத்து குடர் ஆரத்தின்மின் தின்மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம்- கம்பராமாயணம், 5221ம் பாடல், காட்சிப்படலம்பொருள்: {சீதையின்} முன் வந்து நின்ற சிலர் {அரக்கியர்}, கண்களில் நெருப்புச் சிதற விரைந்து சென்று, மின்னுகின்ற மின்னல் போன்ற சூலத்தையும், வேலையும் தலைக்கு மேல் உயர்த்தி, “{இவளைக்} கொல்லுங்கள், கொல்லுங்கள். கொன்று, துண்டுகளாக்கி வயிறு நிரம்பத் தின்னுங்கள், தின்னுங்கள்” என்ற அரட்டினார்கள்.
அப்போது பிரகஸை என்ற பெயருடைய ராக்ஷசி, {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள், “இந்தக் கொடியவளின் கண்டத்தை {கழுத்தை} நெரிப்போம். ஏன் தாமதம்?(42) பிறகு, “அந்த மானுஷி மரித்துவிட்டாள்” என்று ராஜரிடம் தெரிவிப்போம். அவர், “தின்றுவிடுங்கள்” என்று சொல்வார். இதில் சந்தேகமில்லை” {என்றாள் பிரகஸை}.(43)
பிறகு, அஜாமுகீ என்ற பெயருடைய ராக்ஷசி, {இந்த} வாக்கியத்தைச் சொன்னாள், “நாமனைவரும் இவளைக் கொன்றபிறகு, சம துண்டுகளாக்கிக் கொள்வோம்.(44) அதன்பிறகு, நாமனைவரும் பிரித்துக் கொள்வோம். விவாதங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. பலவகை பேயங்களையும் {மதுபானங்களையும்}, {நக்கி உண்ணும் வகையிலான} ஏராளமான லேஹியங்களையும் சீக்கிரமாகக் கொண்டு வாருங்கள்” {என்றாள் அஜாமுகீ}.(45)
அப்போது சூர்ப்பணகை[2] என்ற பெயருடைய ராக்ஷசி, {இந்த} வாக்கியத்தைச் சொன்னாள், “அஜாமுகி என்ன சொன்னாளோ, அதுவே எனக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.(46) சர்வசோகவிநாசினியான ஸுரையை {சோகங்கள் அனைத்தையும் அழிக்கும் ஸுராபானத்தை [மதுவை]} சீக்கிரமே கொண்டு வாருங்கள். மானுஷ மாம்ஸத்தை {மனித இறைச்சியை} உண்ட பிறகு நிகும்பிலைக்காகக்[3] கூத்தாடுவோம்” {என்றாள் சூர்ப்பணகை}.(47)
[2] இங்கே குறிப்பிடப்படும் சூர்ப்பணகை, ராவணனின் சகோதரியா? இல்லையா? என்ற குறிப்பேதும் இல்லை.
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், “மனுஷ்ய மாம்ஸத்தைப் பக்ஷித்து மத்யத்தையும் பானஞ் செய்து லங்கையின் மேல்பாகத்திலிருக்கின்ற நிகும்பிலை யென்னும் பத்ரகாளிக்குப் ப்ரீதியாகும்படி நர்த்தனஞ் செய்வோம்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இதே பொருள்வரும்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒருசில பதிப்புகளில் நிகும்பிலை என்பது ஓரிடமென்னும் பொருள்படி, “நிகும்பிலையில் ஆடும்” என்றும், வேறு சில பதிப்புகளில், நிகும்பிலை என்பது ஒருவகை நாட்டியக்கலை என்னும் பொருள்படி, “நிகும்பிலை நாட்டியம் ஆடுவோம்” என்றும், இன்னும் சிலவற்றில், “நிகும்பிலை என்ற ராணியின் முன்பு ஆடுவோம்” என்று பொருள்படியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிகும்பலை என்ற பாலைவனப்பகுதியில் இந்திரஜித் வேள்வி செய்த குறிப்பு யுத்தகாண்டத்தில் வருகிறது. கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ஒரு படலமே நிகும்பலை என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஸுரர்களின் {தேவர்களின்} மகளுக்கு ஒப்பானவளான அந்த சீதை, இவ்வாறு கோரமான ராக்ஷசிகளால் அச்சுறுத்தப்பட்டவளாக, தைரியத்தை இழந்து, அழுது கொண்டிருந்தாள்.(48)
சுந்தர காண்டம் சர்க்கம் – 24ல் உள்ள சுலோகங்கள்: 48
Previous | | Sanskrit | | English | | Next |