Mareecha again | Aranya-Kanda-Sarga-35 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரகசியமாக மாரீசனைச் சந்திக்கச் சென்ற ராவணன்; மாரீசனின் ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் இருந்த இயற்கை அழகின் வர்ணனை...
அப்போது {ராவணன்}, ரோம ஹர்சணம் தரும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} அந்த சூர்ப்பணகையின் வாக்கியத்தைக் கேட்டு, அமைச்சர்களுக்கு {விடைபெற்றுச்செல்ல} அனுமதியளித்து, ஆக வேண்டிய காரியத்தைத் தீர்மானிக்கச் சென்றான்.(1) செய்ய வேண்டிய காரியங்களைத் தகுந்தவாறு திட்டமிட்டு, தோஷங்களையும் {குறைகளையும்}, குணங்களையும் {நன்மைகளையும்}, பலாபலங்களையும் {பலங்களையும், பலவீனங்களையும்} குறித்து ஆலோசித்து, இதுவே செய்யத் தக்கது, இதுவே வழிமுறை என்று தீர்மானமாகத் தனக்குள் நிச்சயித்துக் கொண்டு, திட புத்தியுடன் ரம்மியமான யான சாலைக்கு {வாகனக்கூடத்திற்குச்} சென்றான் {ராவணன்}.(2,3) பிறகு அந்த ராக்ஷசாதிபன், அந்த யான சாலைக்கு மறைவாக {ரகசியமாகச்} சென்று, "ரதம் பூட்டப்படட்டும்" என்று சூதனை {தேரோட்டியை} வற்புறுத்தினான்[1].(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் வரும் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, "மன்னர்கள் ஒருபோதும் கொட்டகைகளுக்குச் செல்வதில்லை. வாகனம் நேரடியாக மாளிகைக்கே வரும். அமைச்சர்களின் மத்தியில் வைத்து சூர்ப்பணகை பேசியதால், "சுவர்களுக்கும் காதுகளுண்டு" என்று எண்ணி, அந்த வாகனக்கூடத்திற்குக் கமுக்கமாகச் செல்கிறான். இவன் சீதையை அபகரிக்கச் செல்வதை மனைவி மண்டோதரி அறிந்தால் இவன் நிந்தனைக்கு ஆளாவான் என்பதால் இவ்வாறு சென்றிருக்கலாம்".
இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த சாரதி, லகுவாகவும், துணிவுடனும் அவனுக்கு {துரிதமாகச் செயல்பட்டு ராவணனுக்குப்} பிடித்தமான உத்தம ரதத்தை க்ஷணநேரத்தில் ஆயத்தம் செய்தான்.(5) தனதானுஜனும் {குபேரனின் தம்பியும்}, ஸ்ரீமானுமான அந்த ராக்ஷசாதிபதி {ராவணன்}, கனக பூஷணங்களுடனும் {பொன்னலங்காரங்களுடனும்}, பிசாச வதனங்களுடனும் கூடிய கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், விரும்பியபடி செலுத்தவல்லதும், மேகத்திற்கு ஒப்பான நாதத்துடன் கூடியதுமான காஞ்சனரதத்தில் {தங்கத்தேரில்} அமர்ந்து, நதங்கள் {மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்}, நதிகள் {கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள்} ஆகியவற்றின் பதியை {ஆறுகளின் கணவனான கடலைக்}[2] கடந்தான்.(6,7)
[2] இங்கே குறிப்பிடப்படுவது இந்துமாக்கடலாக {இந்தியப் பெருங்கடலாக} இருக்க வேண்டும். இந்த சர்க்கத்தின் 26ம் சுலோகத்தில் வரும் கடல் சிந்துராஜன் என்று சொல்லப்படுகிறது.
நீண்ட வெண்முடிகளாலான விசிறிகளையும் {சாமரங்களையும்}, வெண்குடையையும், தசானனங்களையும் {பத்து முகங்களையும்}, மென்மையான வைடூரியத்தின் ஒளியையும் கொண்டவனும், புடம்போட்ட காஞ்சனபூஷணத்துடனும் {பொன் அலங்காரத்துடனும்},{8} தசக்ரீவங்களுடனும் {பத்து தொண்டைகளுடனும் / தலைகளுடனும்}, இருபது புஜங்களுடனும் கூடியவனும், கண்கவர் ராஜ உடைகள் பூண்டவனும், திரிதசர்களின் {தேவர்களின்} பகைவனும், முநீந்திரக்னனும் {முனிவர்களின் தலைவர்களைக் கொல்பவனும்}, பத்து தலைகளை {சிகரங்களைக்} கொண்ட மலை ராஜனைப் போன்றவனுமான{9} அந்த ராக்ஷசாதிபன், காமகரதத்தில் {ராவணன், விரும்பிய இடத்திற்குச் செல்லவல்ல தேரில்} ஏறி, மின்னல்கள் சூழ்ந்த அம்பரத்தில் {வானத்தில்}, கொக்குகளுடன் கூடிய மேகத்தைப் போல பிரகாசித்தான்.(8-10)
வீரியவானான அவன், சாகரக்கரையில் {கடற்கரையில்} நானாவித புஷ்பங்கள், பழங்கள் நிறைந்த விருக்ஷங்களுடன் {மரங்களுடன்} இடையிடையே தோன்றும் ஆயிரக்கணக்கான சைலங்களையும் {மலைகளையும்} கண்டவாறே சென்றான்.(11) அங்கே குளிர்ந்த, தெளிந்த நீருடன் கூடிய பத்மினீகள் {தாமரை ஓடைகள்}, வேதிகளை {வேள்விப் பீடங்களைக்} கொண்ட விசாலமான ஆசிரமபதங்கள் எங்கும் அலங்காரமாகத் திகழ்ந்தன.(12) சாலம் {ஆச்சா}, தாலம் {பனை}, தமாலம் {பலா}, நன்கு புஷ்பித்த {தேக்கு} மரங்கள் ஆகியவை அடர்ந்தும், கதலி {வாழைத்} தோட்டங்கள், தென்னை மரத்தோப்புகள் ஆகியவற்றுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(13) கடும் நியமங்களுடன் கூடிய ஆகாரங்களை உண்ணும் பரமரிஷிகளுடனும், நாகர்கள், சுபர்ணங்கள், கந்தர்வர்கள், ஆயிரக்கணக்கான கின்னரர்கள் ஆகியோருடனும் அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன.{14} {சித்தத்தால்} காமத்தை வென்ற சித்தர்கள், சாரணர்கள், அஜர்கள் {பிரம்மனின் மானஸ புத்திரர்கள்}, {கர்ப்பத்தில் பிறக்காத, பிரம்மத்தின் நகத்தில் பிறந்த} வைகானசர்கள், மஷரின் குலத்தில் பிறந்த} மஷர்கள், {சூரிய சந்திரக் கதிர்களைப் பருகும்} மரீசிபர்கள், {பிரம்மத்தின் ரோமங்களில் பிறந்த} வாலகில்யர்கள் ஆகியோருடனும் அவை {அந்த இடங்கள்} விளங்கிக் கொண்டிருந்தன[3].(14,15)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரண்ய காண்டம் 6ம் சர்க்கத்தில் ராக்ஷசர்களிடம் இருந்து பாதுகாக்குமாறு ராமனை வேண்டும் முனிவர்களின் வகைகள் சொல்லப்படுகின்றன.
திவ்ய ஆபரணங்களும், மாலைகளும் சூடியவர்களும், தெய்வீக ரூபங்களைக் கொண்டவர்களும், கிரீடாரதிவிதிகளை {கலவி விளையாட்டின் விதிகளை} அறிந்தவர்களுமான ஆயிரக்கணக்கான அப்சரஸ்கள் ஆங்காங்கே நிறைந்திருந்தனர்.(16) ஸ்ரீமதிகளான தேவபத்தினிகளால் அவை சேவிக்கப்பட்டன; அம்ருதம் உண்ணும் தேவ சங்கங்களால் {தேவர்களின் கூட்டத்தினரால்} அடிக்கடி நாடப்பட்டன; தானவர்களாலும் வழிபடப்பட்டன.(17) {ஆங்காங்கே} ஹம்சங்கள் {அன்னங்கள்}, கிரௌஞ்சங்கள் {அன்றில்கள்}, பிலவங்கள் {நீர்க்காக்கைகள்} நிறைந்திருந்தன, சாரஸங்களின் அதிக நாதம் {ஆங்காங்கே} எழுந்தன; சாகர தேஜஸ்ஸால் {அந்தக் கடற்சூழலால் ஆங்காங்கே} வழுவழுப்பான சகதிகளுடன் இருந்தன, {சில இடங்களில்} வைடூரியங்கள் பரவிக் கிடந்தன.(18)
வேகமாகச் சென்று கொண்டிருந்த தனதானுஜன் {குபேரனின் தம்பியான ராவணன்}, தபத்தால் வென்ற உலகங்களில் இருந்து, வெண்மையான, விசாலமான திவ்ய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தூரிய கீதங்களின் {இசைக்கருவிகள், பாடல்கள் ஆகியவற்றின்} எதிரொலியுடன் கூடியதுமான {விரும்பிய இடத்திற்குச் செல்ல வல்லதுமான} காமகவிமானங்களில் கடந்து செல்லும் அப்சரஸ்களையும், கந்தர்வர்களையும் கண்டான்.(19,20) சந்தன மரங்களினுடைய வேரின் ரசம் {மட்டிப்பால்} பிரிந்து, நுகர்புலனுக்குத் திருப்தியளிக்கும் மணங்கமழும் ஆயிரக்கணக்கான சௌம்ய வனங்களையும் அவன் கண்டான்.(21) அகுருவை முக்கியமாகக் கொண்ட வனங்களையும் {அகிற்காடுகளையும்}, தக்கோல {வால்மிளகு} மரங்களும், மணங்கமழும் பழங்களுடன் கூடிய {ஜாதிக்காய்} ஜாதி மரங்களும் நிறைந்த உபவனங்களையும் அவன் கண்டான்.(22) புஷ்பங்களுடன் கூடிய தமால மரங்கள், மிளகுப் புதர்கள், தீரங்களில் {கடற்கரைகளில்} உலர்ந்து கொண்டிருக்கும் முத்துக்குவியல்களையும் அவன் கண்டான்[4].(23) மிகச் சிறந்த கற்கள், சங்குக் குவியல்கள், பவளப் பாறைகள், காஞ்சன {பொன்}, ராஜத {வெள்ளி} சிருங்கங்கள் {சிகரங்கள்} ஆகியவற்றையும்,(24) மனோகரமான {இனிமையான}, அமைதி நிறைந்த, அற்புதமான பிரஸ்ரவங்களையும் {அருவிகளையும்}, தெளிவான மடுக்களையும், தன, தானியங்களுடனும், ஸ்திரீ ரத்தினங்களுடனும் கூடியவையும், ஹஸ்திகள் {யானைகள்}, அசுவங்கள் {குதிரைகள்}, ரதங்கள் {தேர்கள்} நிறைந்தவையுமான நகரங்களையும் அவன் கண்டான்.(25,26அ)
[4] இந்தியாவில் முத்துக்குளித்தலுக்குப் பெயர்பெற்ற ஊர்கள் தூத்துக்குடி {பழங்காலத்தில் கொற்கை}, இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகியவையும், தென்னாற்காட்டின் கரையோரங்களுமாகும். பாலஸ்தீன் வளைகுடாவில் உள்ள பஹ்ரைன், இலங்கையில் உள்ள சிலாபம், மன்னார் வளைகுடா, ஜப்பானின் டோக்கியோ, குலூத்தீவுகள், ஆஸ்திரேலியாவின் வடமேற்குக் கரையோரம், கலிபோர்னியா போன்ற மிகச் சில இடங்களிலேயே உலகத்தில் முத்துக் குளித்தல் நடைபெறுகிறது. இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை மேற்கிந்தியாவில் எங்கோ குஜராத்தின் பக்கம் இருக்கிறது என்று ஆய்ந்து சொல்பவர்கள் கவனிக்க வேண்டிய பகுதி இது. மேலும் இங்கே குறிப்பிடப்படும், சந்தனம், மிளகு, வாழை, தென்னை போன்றவை தென்னிந்தியாவையே குறிப்பதாகத் தெரிகிறது.
சிந்துராஜனின் {கடலின்} கரைக்கு[5] அருகில் இருந்த நிலம் எங்கும் சமமாகவும், மென்மையாகவும், மிருதுவான மாருதத்தின் {தென்றலின்} ஸ்பரிசத்துடன் திரிதிவத்திற்கு ஒப்பானதாகவும் இருந்தது.(26ஆ,27அ) அங்கே அவன் {ராவணன்}, நூறு யோஜனைகள்[6] நீளமுள்ள கிளைகளுடன் கூடியதும், மேகத்திற்கு ஒப்பானதும், முனிவர்களால் சூழப்பட்டதுமான ஆலமரம் ஒன்றைக் கண்டான்.(27ஆ,28அ) மஹாபலவானான கருடன், பக்ஷிப்பதற்காக {உண்பதற்காக} ஹஸ்தி {யானை}, பேருடல் படைத்த ஆமை ஆகிய இரண்டையும் தூக்கிச் சென்று அமர்ந்த கிளையைக் கொண்ட மரம்தானது.(28ஆ,29அ) படகங்களில் {பறவைகளில்} உத்தமனும், மஹாபலனுமான அந்த சுபர்ணன் {அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன்} அமர்ந்த பாரத்தைத் தாங்க முடியாமல் இலைகளுடன் கூடிய அந்தக் கிளை முறிந்தது.(29ஆ,30அ) வைகானசர்கள், மாஷர்கள், வாலகில்யர்கள், மரீசிபர்கள், அஜர்கள், {புகையையே உணவாகக் கொண்ட} தூம்ரர்கள் ஆகியோர் ஒன்றுதிரண்டவர்களாக அதில் {அந்தக் கிளையில்} இருந்தனர்.(30ஆ,31அ)
[5] அதாவது சிந்து நதியின் தலைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இது மேலைக் கடலாக {அரபிக் கடலாக} இருக்க வேண்டும். இந்த சர்க்கத்தின் 7ம் சுலோகத்தில் சொல்லப்பட்டது இந்துமாக்கடலாக இருக்க வேண்டும். அதன் பிறகு முத்துநகரம், இன்னும் பல நகரங்கள் கடந்து, இப்போது ராவணன் செல்லும் பகுதி மேலைக்கடலின் அருகில் கர்னாடக, மஹாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
[6] கிட்டத்தட்ட 909 மைல்கள், அதாவது 1462 கி.மீ. நீளம் கொண்ட கிளையாகும். இந்தியாவில் கிழக்கில் இருந்து மேற்காக மும்பை முதல் விசாகபட்டினம் வரையுள்ள சாலைவழியின் தொலைவு 1339 கி.மீ. ஆகும். இஃது ஏதோவொரு நிலப்பரப்பைப் பூடகமாகக் குறிக்கும் குறியீடாகவோ, படிமமாகவோ இருக்க வேண்டும்.
கருடன் அவர்களுக்காகவே {அந்த முனிவர்களுக்காகவே} அந்த நூறு யோஜனை நீளம் கொண்ட முறிந்த மரக்கிளையையும் {தன் அலகிலும்}, அந்த கஜத்தையும் {யானையையும்}, ஆமையையும் {தன்னிரு கால்களின் நகங்களிலும் பற்றி} எடுத்துக் கொண்டு வேகமாக {பறந்து} சென்றான்.(31ஆ,32அ) தர்மாத்மாவான அந்தப் படக உத்தமன் {கருடன்}, அந்த {யானை, ஆமை ஆகியவற்றின்} மாமிசத்தை ஒற்றைக் காலில் வைத்து பக்ஷித்துக் கொண்டே {உண்டவாறே} அந்தக் கிளையை விழச்செய்து நிஷாதர்களின் மாகாணத்தை அழித்து, மஹா முனிவர்களை விடுவித்து, ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்தான்[7].(32ஆ,33) மதிமானான அவன் {கருடன்}, அந்த மகிழ்ச்சியால் தன் ஆற்றலை இரட்டிப்பாக்கி அம்ருதத்தைக் கொண்டு வருவதில் தன் மதியைச் செலுத்தினான்.(34) இரும்பு வலைகளை முழுமையாக நொறுக்கி, சிறந்த ரத்தினங்களாலான, நொறுக்கப்பட முடியாத கிருஹமான மஹேந்திரனின் பவனத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த அம்ருதத்தைக் கொண்டு வந்தான்[8].(35) அந்த தனதானுஜன் {குபேரனின் தம்பியான ராவணன்}, மஹரிஷி கணங்கள் கூடியிருந்ததும், சுபர்ணனின் செயலுக்கான லக்ஷணங்களைக் கொண்டதும், சுபத்திரம் என்ற பெயரைக் கொண்டதுமான அந்த ஆல மரத்தை தரிசித்தான்.(36)
[7] மஹாபாரதம், ஆதிபர்வம் 29ம் அத்தியாயத்தில் 15ம் சுலோகம் முதல் 30ம் அத்தியாயத்தின் 31ம் சுலோகம் வரை இந்தக் கதை சொல்லப்படுகிறது. அப்போதுதான் அவனால் விடுவிக்கப்பட்ட முனிவர்கள் அவனுக்கு கருடன் என்ற பெயரைச் சூட்டுகிறார்கள்.
[8] மஹாபாரதம், ஆதிபர்வம் 33ம் அத்தியாயத்தில் கருடன் அமுதத்தைக் கவர்ந்த கதை விரிவாகச் சொல்லப்படுகிறது.
அவன் {ராவணன்}, நதீபதியான சமுத்திரத்தின் அக்கரைக்குச் சென்று[9] ரம்மியமான புண்ணிய வனாந்தரத்தில் காண்பதற்கினிய ஆசிரமத்தைத் தரிசித்தான்.(37) அங்கே கருப்பு மான் தோலுடுத்தி, ஜடையும், மரவுரியும் தரித்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தவனும், மாரீசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசனை அவன் கண்டான்[10].(38) இராக்ஷசனான அந்த மாரீசன், ராஜாவான அந்த ராவணனை வரவேற்று அமானுஷ்யமான, விருப்பத்திற்குரிய அனைத்தையும் விதிப்படி கொடுத்து அர்ச்சித்தான்.(39) மாரீசன் அவனுக்கு {ராவணனுக்கு} போஜனமும் {உணவும்}, நீரும் கொடுத்து தானே பூஜித்து, அர்த்தம் பொதிந்த சொற்களுடன் கூடிய இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(40) "இராக்ஷசேசுவரா, நீ லங்கையில் குசலமாக இருக்கிறாயா? இராஜாவே, நீ எந்த அர்த்தத்திற்காக {காரணத்திற்காக} மீண்டும் இவ்வளவு சீக்கிரம்[11] இங்கு வந்திருக்கிறாய்?" {என்று கேட்டான் மாரீசன்}.(41)
[9] இங்கே சொல்லப்படும் அக்கரை இந்துமாக்கடலைக் கடந்த அக்கரையாகவே இருக்க வேண்டும். ஒருவேளை இது மேலைக் கடலைக் கடந்த அக்கரையாக இருந்தால், மாரீசன் மடகாஸ்கரிலோ, லட்சத்தீவுகளிலோ, மத்தியக் கிழக்கு நாடுகளிலோ, ஆப்ரிகாவிலோ ஏதோவோரிடத்தில் ஆசிரமம் அமைத்து இருந்திருக்க வேண்டும். இராவணன் மாரீசனைக் காண இமயத்திற்குச் சென்றிருந்தாலும், கீழைக் கடலின் அருகில் சென்றிருந்தாலும், மேலைக் கடல் கடந்து சென்றிருந்தாலும், அவன் மீண்டும் திரும்ப வேண்டிய இடம் நாசிக் ஆகும். அங்கேதான் ராமனும், சீதையும் இருக்கும் பஞ்சவடி இருக்கிறது.
[10] வந்த மந்திரிகளோடு மாசு அறமனத்தின் எண்ணிசிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்தெளிவு இல் நெஞ்சன்அந்தரம் செல்வது ஆண்டு ஓர்விமானத்தில் ஆரும் இன்றிஇந்தியம் அடக்கி நின்ற மாரீசன்இருக்கை சேர்ந்தான்.- கம்பராமாயணம் 3236ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்பொருள்: அங்கு வந்த அமைச்சர்களுடன் சேர்ந்து மாசுகளின்றி மனத்தில் ஆலோசனை செய்து, தெளிவு பிறக்காத நெஞ்சத்துடன் சிந்தனையில் நினைத்ததை செய்பவன் {ராவணன்}, யாரும் இன்றி விண்ணில் செல்லும் ஒரு விமானத்தில் ஏறி புலன்களை அடக்கி தவம் செய்யும் மாரீசன் இருப்பிடத்தை அடைந்தான்.
[11] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தக் கேள்வியில், "நீ ஏன் மீண்டும் இங்கு வந்தாய்?" என்று கேட்கப்படுகிறது. இஃது அகம்பனன் வரும் சர்க்கம் இடைச்செருகலல்ல என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இதற்கு ஆய்வாளர்களின் பதில், "ஒரு சர்க்கத்தையே திணித்திருக்கும்போது, இந்த சர்க்கத்தில் ஒரு சொல்லைத் திணித்திருப்பதா பெரிது" என்று அமைகிறது. இந்த சர்க்கத்தில் கருடனின் கதை சொல்லப்படும் பகுதி அவசியமற்றது. கருடனின் பெருமையை அறிந்த ராவணனுக்கு விஷ்ணுவின் பெருமை தெரியவில்லையா என்ற கேள்வியை எழச் செய்கிறது. ராவணன் சென்ற பாதை தேவ பூமி என்றழைக்கப்படும் இமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாகும். இராமன் மாரீசனைத் தாக்கியபோது, அவன் விசுவாமித்ரரின் சடங்கு நடந்த இடத்தில் {சித்தாசிரமத்தில்} இருந்து வெகு தொலைவில் {நூறு யோஜனைகள் தள்ளி} விழுந்தான். சித்தாசிரமம் இமயத்திற்கு வடக்கே இருக்கிறது" என்றிருக்கிறது. மேற்கண்ட அடிக்குறிப்பு மிகச் சுருக்கமாகவே தரப்பட்டிருக்கிறது. மாரீசன் ராமனால் தாக்கப்பட்ட பகுதியை பாலகாண்டம் 30ம் சர்க்கத்தில் காணலாம்
மாரீசன் இவ்வாறு சொன்னதும், மஹாதேஜஸ்வியும், வாக்கியகோவிதனுமான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனுமான} அந்த ராவணன், அதன் பிறகு இந்த வாக்கியங்களைச் சொன்னான்.(42)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 35ல் உள்ள சுலோகங்கள்: 42
Previous | | Sanskrit | | English | | Next |