Shurpanakha | Aranya-Kanda-Sarga-17 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனைச் சந்தித்த சூர்ப்பணகை; அவனது மனைவியாகும் விருப்பத்தை வெளிப்படுத்தியது...
இராமன், சீதை, சௌமித்ரி {லக்ஷ்மணன்} ஆகியோர் நீராடிவிட்டு, கோதாவரி தீரத்தில் இருந்து தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(1) இலக்ஷ்மணனும், ராகவனும் அந்த ஆசிரமத்தை அடைந்து அதிகாலைச் சடங்குகளைச் செய்து, பர்ணசாலைக்குள் நுழைந்தனர்.(2) இராமன் மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்டு அங்கே சுகமாக இருந்தான். பர்ணசாலைக்குள் சீதையுடன் அமர்ந்து, உடன் பிறந்தவனான லக்ஷ்மணனுடன் விதவிதமான கதைகளைப் பேசிக்கொண்டிருந்த அந்த மஹாபாஹு, சித்திரையின் {சித்திரை நக்ஷத்திரம் நேரும் நாளில் ஒளிரும்} சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்[1].(3,4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சித்திரை நட்சத்திரமே நீல வானின் பின்புலத்திற்கு எதிராக தெளிவான வெண்ணிறத்தில் இருக்கும். அதனாலேயே அது "சித்ர மௌக்திகம் ஏகம்", அதாவது "சித்திரை நட்சத்திரமும், முத்தும் ஒரே நிறத்திலானவை" என்று சொல்லப்படுகிறது. வான் நீல வண்ணனான ராமனே சந்திரன் எனவும், சீதை முத்தைப் போன்று வெண்மையான சித்திரை நட்சத்திரம் எனவும் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
இராமன் கதைகளில் மூழ்கிய மனத்துடன் அங்கே அமர்ந்திருந்தபோது, ஒரு ராக்ஷசி யதேச்சையாக அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} வந்தாள்.(5) இராக்ஷசன் தசக்ரீவனின் பகினியும் {ராவணனின் தங்கையும்}, சூர்ப்பணகை என்ற பெயரைக் கொண்டவளுமான அவள், திரிதசனை {சொர்க்கவாசியைப்} போன்ற ராமனை நெருங்கிக் கண்டாள்[2].(6) ஒளிபொருந்திய முகத்தையும், {சிங்கம் போன்ற மார்பையும்}, நீண்ட கைகளையும், தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளையும் கொண்டவனும், {முழங்கால் வரை நீளும் கைகளைக் கொண்டவனும், காண்பதற்கு இனியவனும்}, கஜத்தின் நடை கொண்டவனும், ஜடாமண்டலம் தரித்தவனும், சுகுமாரனும், பெரும் பலவானும், பார்த்திபர்களுக்குரிய குணங்களைக் கொண்டவனும், நீலோத்பலம் போன்ற நிறம் கொண்டவனும், கந்தர்பனை {மன்மதனைப்} போன்ற ஒளியுடன் கூடியவனும், இந்திரனுக்கு ஒப்பானவனுமான ராமனைக் கண்டதும் அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை} காமமோஹிதம் அடைந்தாள்[3].(7-9அ)
[2] இராமனைக் காண வரும் சூர்ப்பணகையின் நடையழகு கம்பராமாயணத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கசெஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகிஅம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.- கம்பராமாயணம் 2762ம் பாடல்பொருள்: பஞ்சு விளங்கும் மிக செழித்த தளிர்களும் வருந்துபடி, நிறைந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்களுடன் அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும், அன்னம் போலவும், மின்னும் வஞ்சிக் கொடி போலவும், கொடிய விஷம் போன்ற அந்த வஞ்சமகள் வந்தாள்.
[3] இந்த இடத்தில் வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் 7ம் சுலோகத்தில் அரை சுலோகம் அதிகம் வருகிறது. அதிலுள்ள செய்திகள் மேலே, {சிங்கம் போன்ற மார்பையும்} என்றும், {முழங்கால் வரை நீளும் கைகளைக் கொண்டவனும், காண்பதற்கு இனியவனும்} என்றும் (7-9அ) சுலோகத்திற்குள் { } என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸுமுகனை துர்முகியும் {நல்ல முகம் கொண்டவனை, கெட்ட முகம் கொண்டவளும்}, மத்திம இடையைக் கொண்டவனை மஹோதரியும் {பானை வயிற்றைக் கொண்டவளும்}, விசாலாக்ஷனை விரூபாக்ஷியும் {நீள்விழியானைக் கோணல் விழியாளும்}, நற்கேசம் கொண்டவனைச் செம்பட்டை மயிர் கொண்டவளும், பிரிய ரூபம் கொண்டவனை விரூபம் கொண்டவளும் {அழகிய வடிவம் கொண்டவனை, கொடிய வடிவம் கொண்டவளும்}, நல்ல சுவரம் கொண்டவனை பயங்கரக் குரல் கொண்டவளும், இளமையானவனைப் பயங்கரக் கிழவியும், இனிமையாகப் பேசுபவனை, பிதற்றிப் பேசுபவளும், நியாயமான ஒழுக்கம் கொண்டவனை தீய ஒழுக்கம் கொண்டவளும் என அப்ரிய தரிசனம் கொண்ட அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பிரிய தரிசனம் கொண்டவனைக் கண்டு, சரீரஜனால் {மன்மதனால்} முற்றுகையிடப்பட்டு ராமனிடம் {இவ்வாறு} சொன்னாள்:(9ஆ-12அ) "நீ ஜடை தரித்திருக்கிறாய், பாரியையுடன் இருக்கிறாய். சரங்களையும், வில்லையும் கையாள்கிறாய், தபஸ்வி ரூபத்தில் இருக்கிறாய். இராக்ஷசர்களால் சேவிக்கப்படும் இந்த தேசத்திற்கு எப்படி வந்தாய்? நீ வந்த காரியமென்ன என்பதைச் சொல்வதே உனக்குத் தகும்" {என்றாள் சூர்ப்பணகை}.(12ஆ,13)
இராக்ஷசி சூர்ப்பணகை இவ்வாறு சொன்னதும், அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான ராமன்}, நேரடியாகப் புத்தியில் இருந்து அனைத்தையும் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(14) "திரிதச விக்கிரமரும் {வீரத்தில் தேவர்களைப் போன்றவரும்}, தசரதர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு ராஜா இருந்தார். நான் அவரது மூத்த மகன். இராமன் என்ற பெயரில் ஜனங்கள் என்னைக் கேட்டிருக்கின்றனர் {கேள்விப்பட்டு அறிந்திருக்கின்றனர்}.(15) இவன் பெயர் லக்ஷ்மணன். என் தம்பி. என்னைப் பின்தொடர்ந்து வருகிறான். வைதேஹியான இவள் என் பாரியை. சீதை என்று நன்கறியப்படுபவள்.(16) நரேந்திரரான பிதா, மாதா ஆகியோரின் ஆணையால் செலுத்தப்பட்டு, தர்மத்தை நிறுவ விரும்பியும், தர்மத்தின் அர்த்தத்திற்காகவும் {கடமைக்காகவும்} இங்கே வனத்தில் வந்து வசிக்கிறேன்.(17) உன்னைக் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன். நீ யார் {உன் பெயரென்ன}? நீ யாருடையவள் {யாருடைய மகள்? யாருடைய மனைவி?}. மிக வசீகரமான நீ எனக்கு ராக்ஷசியாகவே தெரிகிறாய்[4].(18) எதன் நிமித்தமாக இங்கே நீ வந்திருக்கிறாய்? உண்மையைச் சொல்வாயாக" {என்றான் ராமன்}
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதுவரையில் சூர்ப்பணகையின் வடிவழகு கூறப்படவில்லை. ஆனால், ராமன் இங்கே அழகிய பெண் என்று சொல்லி அவளைப் பகடி செய்கிறான் என்று சில உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சில பதிப்புகளில் இவ்வளவு நேரமும் சூர்ப்பணகை அழகிய வடிவம் தாங்கி வந்தாள் என்று குறிப்பிடப்படுகிறது. இராமனின் அவசியமற்ற பகடியை மறுப்பதற்காக சிலர் அவள் அழகிய வடிவத்துடன் வந்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே முந்தைய சுலோகங்களில் அவளைக் குறித்து எதிர்மறையாகச் சொன்னவற்றையெல்லாம் புலமையுடன் நேர்மறையாக மாற்றிக் கொள்கிறார்கள். வேறு சில பதிப்புகளில், இராமன் ஆற்றில் இருந்து திரும்பிவந்ததும், ஜடாயு தன் உறவினங்களைக் கண்டு வரச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டதாகவும், ஜடாயு அங்கில்லாததை அறிந்தே சூர்ப்பணகை வந்தாள் என்றும், ஜடாயு இருந்தால் எந்த ராக்ஷசர்களாலும் ராமனின் குடிலை நெருங்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அழகிய அங்கங்களை உடையவளாய் காணப்படவில்லை. எனக்கு நீ அரக்கியெனத் தோற்றுகின்றனை" என்று பகடியேதும் இல்லாமல் நேரடியாகவே இருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உன்னுருவம் மிகவழகுற்றிருக்கின்றமையின், நீ அரக்கியல்லளென வெண்ணுகின்றேன்" என்றிருக்கிறது. செம்பதிப்பான பிபேக்திப்ராயின் பதிப்பில், அவளது அழகைக் குறித்து பகடியாகவோ, நேரடியாகவோ இங்கே ராமனால் எதுவும் சொல்லப்படவில்லை. கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை எழில் வடிவந்தரித்து வருபவளாகவே காட்டப்படுகிறாள். [2]ம் அடிக்குறிப்பும் இங்கே பொருந்தும்.
இந்த சொற்களைக் கேட்டு மதனனால் துன்புறுத்தப்பட்ட அந்த ராக்ஷசி {பின்வருமாறு} சொன்னாள்:(19) "இராமா, நான் சொல்லப் போகும் தத்வார்த்தமான {உண்மையான} சொற்களை கேட்பாயாக. நான் சூர்ப்பணகை என்ற பெயரைக் கொண்டவளும், காமரூபிணியுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளுமான} ராக்ஷசியாவேன். அனைவருக்கும் பயத்தை உண்டாக்கியபடி இந்த அரண்யத்தில் தனியாகத் திரிந்து வருகிறேன்.(20,21அ) பலவானும், வீரனும், விஷ்ரவஸின் புத்திரனும், ராக்ஷஸேசுவரனுமான ராவணன் என்னுடன் பிறந்தவனாவான். எப்போதேனும் இஃது உன் செவிகளை எட்டியிருக்கலாம்.(21ஆ,22அ) எப்போதும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் மஹாபலன் கும்பகர்ணனும் அவ்வாறே {உடன் பிறந்தவனே}, ராக்ஷச நடத்தையற்ற தர்மாத்மாவான விபீஷணனும் அவ்வாறே {உடன்பிறந்தவனே}, போரில் புகழ்பெற்ற வீரர்களான கரதூஷணர்கள் இருவரும் உடன் பிறந்தவர்களே.(22ஆ,23)
இராமா, நான் அவர்களையெல்லாம் மீறியவள். புருஷோத்தமனான உன்னை கண்டது முதல் பர்த்தாவாக பாவித்தே {கணவனாக உணர்ந்தே} உன் சமீபத்தில் வந்தேன்.(24) நான் பிரபாவத்துடன் கூடியவள் {சக்திவாய்ந்தவள்}, என் மனம்போல் திரியும் பலகாமினி {விரும்பிய இடங்களுக்கெல்லாம் சுதந்திரமாகத் திரியும் சிறந்த பலசாலி}, நெடுங்காலம் நீ என் பர்த்தாவாக இருப்பாயாக. இந்த சீதையுடன் நீ என்ன செய்யப்போகிறாய்?(25) சிதைந்தவளும், வடிவழகற்றவளுமான இவள் உனக்குத் தகுந்தவளல்ல. நானே உனக்குத் தகுந்தவள். என்னையே பாரியை ரூபமாகப் பார்ப்பாயாக {என்னை உன் மனைவியாகக் கருதுவாயாக}.(26) விரூபியும் {வடிவம் குலைந்தவளும்}, உண்மையற்றவளும் {தீயவளும்}, கொடூரியும், வெற்று வயிற்றைக் கொண்டவளுமான இந்த மானுஷியையும், உன்னுடன் பிறந்த இவனையும் நான் பக்ஷிக்க {உண்ண} விரும்புகிறேன்.(27) அதன் பிறகு பல்வேறு பர்வத சிருங்கங்களையும் {மலையுச்சிகளையும்}, வனங்களையும் கண்டு என்னுடன் காமத்தை அனுபவித்தபடியே தண்டகத்தில் திரிவாயாக" {என்றாள் சூர்ப்பணகை}[5].(28)
[5] தாதாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சூர்ப்பணகை காமரூபிணி யாதலின், பெருமாளைக் கண்டவுடன் காமுற்று, அவர் தன்னைக் கண்டு காமுற வேண்டுமென்று நல்லுருவங் கொண்டாளென்றறிக, கவியவளுக் கியல்பாயுள்ள உருவத்தையே வர்ணனை செய்தனரென்றனர் வியாக்கியரதர். சூர்ப்பணகை காமாதிசயத்தால் மதிமயங்கி, ராக்ஷபுத்தியால் தன்னையே அழகினளாக ஒண்டை வேம்பினையே மதுரமாக வெண்ணுவதுபோல எண்ணி, அவ்வுருவத்தோடே வந்தனள் ராக்ஷஸரூபத்தையே தீதென்றறிந்தவளாயின், பிராட்டியாரை இகழ்வாளோ? இவளும் அவளைப் போலன்றோ? உருவங்கொண்டிருப்பவள், "நீ யழகிய உருவமுடையாளல்லை; ஆதலின், நீ எனக்கு ராக்ஷஸியாகவே தோற்றுகின்றனை"யென்று பொருள் கூற வேண்டும்; இவள் தன்னை இகழ்ந்து துறவாமைக்காகவும், தன்னுடன் பிறந்தோர்களைப் புகழ்ந்தனள். சூர்ப்பணகை என்பது; முறம்போன்ற நகமுடையளென்று காரணவிடுகுறிப் பெயராகின்றது" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கிய விசாரதனான அந்தக் காகுத்ஸ்தன் {பேச்சில் வல்லவனான ராமன்}, சிரித்துக் கொண்டே அந்த மதிரேக்ஷணையிடம் {வெறியுடன் கூடிய கண்களைக் கொண்டவளிடம்} இந்தச் சொற்களைப் பேச ஆரம்பித்தான்.(29)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 29
Previous | | Sanskrit | | English | | Next |