Saturday, 25 March 2023

இராவண நிந்தை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 33 (24)

Ravana taunted | Aranya-Kanda-Sarga-33 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய சூர்ப்பணகை; அவள் ராமனின் திறமைகளைப் போற்றிவிட்டு, நல்லரசனின் குணங்களை விவரித்தது...

Surpanakha taunts Ravana

அப்போது பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்த சூர்ப்பணகை, குரோதமடைந்து, உலகங்களை ராவணம் செய்ய {கதற} வைக்கும் ராவணனிடம் அமாத்தியர்களுக்கு மத்தியில் {பின்வரும்} கடுமையான வாக்கியங்களைப் பேசினாள்[1]:(1) "அங்குசமில்லாமல் {வழிநடத்தப்படாமல்} கட்டுப்பாடற்ற காமத்திலும், போகங்களிலும் மதங்கொள்வதை {ஆசையிலும், இன்பங்களிலும் மூழ்குவதை} அறிந்து கொள்ளாமலும், கோரமான பயம் எழுவதை புரிந்து கொள்ளாமலும் இருக்கிறாய்.(2) ஒரு மஹீபதி, அற்ப போகங்களுக்கு அடிமையாகி, விரும்பியபடி செயல்படும் லுப்தனாக {பேராசைக்காரனாக} இருந்தால், சுடலையில் உள்ள அக்னியை {சுடுகாட்டுத் தீயைப்} போலப் பிரஜைகள் {குடிமக்கள்} அவனை மதிக்கமாட்டார்கள்.(3) 

[1] தங்கையும் அவ்வழி தலையில் தாங்கிய
செங்கையள் சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள் மூக்கிலள் குழையின் காதிலள்
மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள்

- கம்பராமாயணம் 3090ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

பொருள்: அந்த இடத்தில் {ராவணனின்} தங்கையும், தலை மேல் சுமந்த சிவந்த கைகளைக் கொண்டவளும், வெள்ளமாகச் சிவந்து பெருகும் இரத்தத்துடன் கூடிய மார்பைக் கொண்டவளும், மூக்கிலாதவளும், குழை அணிந்த காதுகளை இழந்தவளுமானவள் {சூர்ப்பணகை}, மேகத்தின் இடி முழக்கம் தோற்கும்படி வாயைத் திறந்து ஓலமிட்டாள் .

எந்தப் பார்த்திபன் {மன்னன்}, உரிய காலத்தில் காரியங்களை சுயமாகத் தீர்க்காமல் இருக்கிறானோ, அவன் தன்னுடைய ராஜ்ஜியத்துடன் சேர்ந்து அந்தக் காரியங்களின் நிமித்தமே நாசத்தை அடைவான்.(4) நதியில் சேற்றைத் தவிர்க்கும் திவிபங்களை {யானைகளைப்} போலவே நரர்களும், சாரர்களை {ஒற்றர்களை} அடைதற்கரியவனும், காணற்கரியவனும், சுவாதீனம் {தன் வசம்} இல்லாதவனுமான நராதிபனை {மனிதர்களின் தலைவனை} தூரத்திலேயே தவிர்த்துவிடுவார்கள்.(5) சுவாதீனம் {தன் வசம்} இல்லாமலும், விஷயத்தை {நாட்டைக்} காக்காமலும் உள்ள நராதிபர்கள், சாகரத்தில் உள்ள கிரியை {கடலில் உள்ள மலையைப்} போலத் தங்கள் புத்தியால் ஒருபோதும் பிரகாசிக்கமாட்டார்கள்.(6) 

நல்லறிவுள்ள தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோருடன் போரிட்டு {அவர்களைப் பகைத்துக் கொண்டு}, சாரர்களுமின்றி {ஒற்றர்களும் இன்றி}, சபலக்காரனாய் இருக்கும் நீ எவ்வாறு ராஜாவாக விளங்குகிறாய்?(7) இராக்ஷசா, பால ஸ்வபாவத்துடன் {சிறுபிள்ளைத்தனத்துடன்} கூடியவனும், புத்தியற்றவனும், அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் இருப்பவனுமான நீ எவ்வாறு ராஜாவாக விளங்குகிறாய்?(8) ஜயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, சாரர்களும் {ஒற்றர்களும்}, கோசமும் {கருவூலமும்}, நயமும் {நீதியும்} தன் வசமில்லாத நரேந்திரர்கள் {மனிதர்களின் தலைவர்கள்} சாதாரண ஜனங்களுக்கு சமமானவர்களே.(9) நராதிபா, தொலைதூரத்தில் உள்ள சர்வ அர்த்தங்களையும் {விஷயங்கள் அனைத்தையும்} சாரர்கள் மூலம் அறியவல்ல ராஜர்களே தீர்க்கதரிசிகளென அழைக்கப்படுகிறார்கள்.(10) 

சொந்த ஜனங்களும், ஜனஸ்தானமும் அழிந்துவிட்டதை உணராதிருக்கும் உன்னை, சாரர்கள் இல்லாதவன் என்றும், பயனற்ற மந்திரிகளால் சூழப்பட்டவன் என்றும் நினைக்கிறேன்.(11)  பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்யும் ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், தூஷணன், கரன் ஆகியோரும் ராமன் என்ற தனியொருவனால் கொல்லப்பட்டனர்.(12) களைப்பில்லாமல் காரியங்களைச் செய்பவனான ராமன், ரிஷிகளுக்கு அபயத்தை தத்தம் செய்து {பாதுகாப்பளித்து}, தண்டகத்தை க்ஷேமமுள்ளதாக்கி {பாதுகாத்து அவர்களுக்கு நன்மையுள்ளதாக்கி}, ஜனஸ்தானத்தையும் முறியடித்தான்.(13) இராவணா, லுப்தனும் {தன்னலம் கொண்ட பேராசைக்காரனும்}, பிரமத்தனும் {கவனக்குறைவுள்ள மூர்க்கனும்}, பராதீனனுமான {பிறரைச் சார்ந்திருப்பவனுமான} நீ உன் விஷயத்தில் {நாட்டில்} எழுந்திருக்கும் இந்த பயத்தை உணராமல் இருக்கிறாய்.(14) 

கடுமையானவனும், அற்ப தானம் செய்பவனும், கவனக்குறைவுள்ள மூர்க்கனும், கர்வியும், நம்பகத்தன்மை அற்றவனுமான ஒரு பார்த்திபனை {மன்னனை} நோக்கி துன்ப காலத்தில் சர்வ பூதங்களும் {எந்த உயிரினமும்} விரைவதில்லை.(15) ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆணவம், சுயநலம், துவேஷம் ஆகியவற்றைக் கொண்ட மஹீபதியை {மன்னனை}, துன்பகாலத்தில் சொந்த உற்றார் உறவினரே அழித்து விடுவார்கள்.(16) செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமலும், பயப்பட வேண்டியவற்றுக்குப் பயப்படாமலும் இருப்பவன், சீக்கிரமே ராஜ்ஜியத்திலிருந்து வீழ்ந்து, புல்லுக்கு இணையான இழிந்த நிலையை அடைவான்.(17) காய்ந்த விறகுகளுக்கும், துரும்புகளுக்கும், தூசிகளுக்கும் கூடக் காரியம் இருந்தாலும், தங்கள் ஸ்தானத்திலிருந்து நழுவிய வசுதாதிபர்களுக்கு {பூமியின் தலைவர்களுக்குக்} காரியம் ஏதும் இல்லை.(18) பயன்படுத்தப்பட்ட ஆடை, கசங்கிய மலர்மாலை ஆகியவற்றைப் போலவே ராஜ்ஜியத்தில் இருந்து வீழ்ந்தவன் சமர்த்தனாக இருப்பினும் பயனற்றவனே ஆவான்.(19) 

எந்த ராஜா மூர்க்கமில்லாதவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும், இந்திரியங்களை {புலன்களை} வென்றவனாகவும், நன்றியுடையவனாகவும், தர்மசீலனாகவும் இருப்பானோ, அந்த ராஜாவே நீண்ட காலம் நிலைத்திருப்பான்.(20) நயனங்கள் {கண்கள்} இரண்டால் உறங்கிக் கொண்டிருந்தாலும், நயமெனும் {நீதியெனும்} கண்களால் விழித்திருக்கும் ராஜா, கோபமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் ஜனங்களால் பூஜிக்கப்படுகிறான்.(21) இராவணா, துர் புத்தி கொண்டவனான நீ, இத்தகைய குணங்கள் ஏதும் இல்லாதவனாக இருக்கிறாய். எனவேதான், மஹத்தான ராக்ஷசர்களின் படுகொலையை சாரர்கள் மூலம் அறியாமல் இருக்கிறாய்.(22) பிறரை அவமதிப்பவனும், அற்ப சுகங்களில் மூழ்கியவனும், கால தேச வித்தியாசத்தை அறியாதவனும், குண தோக்ஷங்களை நிச்சயிப்பதில் {நன்மை தீமைகளைப் பகுத்தறிவதில்} புத்தியைச் செலுத்தாதவனுமான நீ சீக்கிரத்தில் ராஜ்ஜியத்தை இழந்து துன்பத்தை அடையப் போகிறாய்" {என்றாள் சூர்ப்பணகை}.(23) 

க்ஷணதாசரேசுவரனும் {இரவுலாவிகளின் தலைவனும்}, தனம், பெருமை, பலம் ஆகியவற்றைக் கொண்டவனுமான அந்த ராவணன், இவ்வாறு அவள் {சூர்ப்பணகை} எடுத்துரைத்த பரிகீர்த்திகளில் தன் தோஷங்களை {கெடுபுகழுக்குக் காரணமான தன் குறைகளை} புத்தியில் நிறுத்தி, சிறிது நேரம் சிந்தனை செய்தான்.(24)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை