Sunday, 26 March 2023

ஊடாட்டம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 34 (26)

Interaction | Aranya-Kanda-Sarga-34 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் குறித்து ராவணனிடம் சொன்ன சூர்ப்பணகை; சீதையை அபகரித்து, மனைவியாக்கிக் கொள்ளும்படி ராவணனைத் தூண்டியது...

Ravana and Shurpanaka

அப்போது, அமைச்சர்களின் மத்தியில் சூர்ப்பணகை கடும் சொற்களில் பேசுவதைக் கண்டு கோபமடைந்த ராவணன் {பின்வருமாறு} கேட்டான்:(1) "இராமன் என்பவன் எவன்? அவனது வீரியம் எத்தகையது? ரூபம் என்ன? பராக்கிரமம் என்ன? அடைதற்கரிய தண்டகாரண்யத்தில் அவன் பிரவேசிப்பதற்கான அர்த்தம் {நோக்கம்} என்ன?(2) இராக்ஷசர்களையும், கரன், தூஷணன், திரிசிரன் ஆகியோரையும் போரில் கொல்ல ராமன் பயன்படுத்திய ஆயுதம் என்ன? மநோஜ்ஞாங்கியே {மனங்கவரும் அங்கங்களைக் கொண்டவளே}, உன்னை விரூபிதையாக்கியவன் {உன் வடிவத்தைச் சிதைத்தவன்} எவன்?[1] அதை நீ சொல்வாயாக" {என்று கேட்டான் ராவணன்}.(3,4அ)

[1] சூர்ப்பணகை ராவணனின் இடத்திற்கு வந்த போது அங்கே இருந்தவர்கள் இந்த அங்கபங்கம் குறித்து என்ன நினைத்தனர் என்பது குறித்து கம்பராமாயணத்தில் வரும் இந்தக் குறிப்பிட்ட பாடல் கவனிக்கத்தக்கது. அது பின்வருமாறு:

சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ
இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்
கற்பு இறந்தாள் என கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர்

- கம்பராமாயணம் 3098ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

பொருள்: "புகழக்கூடிய உயர்குடி பிறந்த பெண்களுக்கு இச்செயல் துணிந்து செய்யக்கூடியதா? இல்லை. நற்குடி பிறந்தவர்களுக்கு பொருந்திய செயலை இவள் செய்யவில்லை. கற்பு நெறி தவறினாள் என்று இவளுடன் பிறந்த கரன் இவளது அழகை அழியும்படி செய்தான் போலும் எனச் சில அரக்கர்கள் சொன்னார்கள். சூர்ப்பணகை ராவணனிடம் வந்ததைக் கண்ட ராக்ஷசர்கள், "கரனே, தன் தமக்கை கற்புநெறி தவறினாள் என்று அறிந்து இவள் அழகை அழித்தான் போலும்" என்று சொல்வதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

அந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்} இவ்வாறு சொன்னதும், குரோதத்தில் மூர்ச்சித்த அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, அதன்பிறகு ராமனைக் குறித்து நியாயப்படி விவரிக்கத் தொடங்கினாள்:(4ஆ,5அ) "தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} அந்த ராமன், தீர்க்கபாஹு {நீண்ட கைகளைக் கொண்டவன்}; விசாலாக்ஷன் {நீண்ட விழிகளைக் கொண்டவன்}; மரவுரியையும், கிருஷ்ணாஜினத்தையும் {கருப்பு மான் தோலையும்} உடையாகக் கொண்டவன்; கந்தர்பனுக்கு {காதல் தேவனான மன்மதனுக்கு} சமமான ரூபம் கொண்டவன்.(5ஆ,6அ) சக்ரனின் வில்லை {இந்திரவில்லை / வானவில்லைப்} போன்ற பொலிவையும், கனக அங்கதத்தையும்  {பொற்பூணையும்} கொண்ட வில்லை வளைத்து, மஹாவிஷங்கொண்ட சர்ப்பங்களைப் போன்ற கூரிய நாராசங்களை அவன் ஏவினான்.(6ஆ,7அ) மஹாபலம் பொருந்தியவனான அந்த ராமன், போர்க்களத்தில் {தூணிகளில் இருந்து} கோரமான சரங்களை எடுப்பதையும் நான் உணர்ந்தேனில்லை, கார்முகத்தை {வில்லை} வளைப்பதையும், நாண்கயிற்றில் இருந்து {அவற்றை} ஏவுவதையும் நான் கண்டேனில்லை.(7ஆ,8அ) இந்திரனின் ஆலங்கட்டி மழையால் அழிக்கப்பட்ட பயிரைப் போல அவனது சரமாரியால் அந்த உத்தம சைனியத்தின் {சிறந்த படையின்} அழிவை மட்டுமே நான் கண்டேன்.(8ஆ,9அ) 

பாதசாரியும் {காலாட்படை வீரனும்}, தனியொருவனுமான அவனது கூரிய சரங்களால், பீம வீரியங்கொண்ட {பயங்கர வீரத்துடன் கூடிய} ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், தூஷணனும், கரனும்  ஒன்றரை முஹூர்த்த காலத்திற்குள்[1] கொல்லப்பட்டனர்.(9ஆ,10) இரிஷிகளுக்கு அபயம் தத்தம் செய்யப்பட்டது {ரிஷிகள் பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்}. தண்டகமும் க்ஷேமம் மீண்டது {முனிவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக ஆக்கப்பட்டது}.(11) மஹாத்மாவும், விதிதாத்மனும் {விதிகளை அறிந்தவனும்}, ஸ்திரீ வதத்தை வெறுப்பவனுமான ராமன், தனியொருத்தியான என்னை அவமதித்து எப்படியோ விட்டுவிட்டான்[2].(12) அவனுடன் பிறந்தவனும், லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவனுமான மஹாதேஜஸ்வி, துணிவெனும் குணத்தில் ராமனுக்கு இணையான வீரியவானும், அவனைப் பின்பற்றுபவனும், அவனது பக்தனும் ஆவான்.(13) எளிதில் எரிச்சலடைபவனும், வெல்லப்பட முடியாத வெற்றியாளனும், விக்கிராந்தனும் {வீரனும்}, புத்திமானுமான அந்த பலவான் {லக்ஷ்மணன்}, நித்தியம் ராமனின் வலது கையாகவும், வெளியில் திரியும் அவனது {ராமனின்} பிராணனாகவும் செயல்படுகிறான்.(14)

[1] ஒரு முஹூர்த்தம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்கள் ஆகும். எனவே இங்கே குறிப்பிடும் காலம் 72 நிமிடங்களாகும்.

[2] இங்கே சூர்ப்பணகை, அரக்கர்களை வதைத்த பிறகே, ராமன் தன்னை அவமதித்து அனுப்பியதாகச் சொல்கிறாள். இந்த சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் லக்ஷ்மணன் தன்னை விரூபியாக்கியதை {தன் காதுகளையும் மூக்கையும் அரிந்து அனுப்பியதைச்} சொல்கிறாள்.

விசாலாக்ஷியும் {அகன்ற விழிகளைக் கொண்டவளும்}, பூர்ண இந்துவுக்கு ஒப்பான முகத்தைக் கொண்டவளுமான ராமனின் தர்மபத்தினி {சீதை}, பர்த்தாவுக்குப் பிரியமானவளாக நித்தியம் பிரிய ஹிதத்திலேயே {கணவனின் விருப்பத்திற்குரியவற்றிலும், கணவனின் நலத்திற்குரியவற்றிலும் மட்டுமே} ஈடுபடுகிறாள்[3].(15) நீளமான கேசத்தையும், நல்ல நாசியையும், தொடைகளையும், அழகிய ரூபத்தையும் கொண்ட அந்தப் புகழ்பெற்றவள், வனதேவதையைப் போலவும், மற்றொரு ஸ்ரீயை {லக்ஷ்மி தேவியைப்} போலவும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள்.(16) புடம்போட்ட காஞ்சன வர்ணம் {பொன் நிறம்} கொண்டவளும், ரத்தம் போன்று சிவந்து உயர்ந்த நகத்தைக் கொண்டவளுமான அந்த மங்கல வைதேஹி {விதேஹ நாட்டு இளவரசி}, சிறந்த நிதம்பங்களையும் {பின்புறத்தையும்}, மெல்லிய இடையையும், சீதை என்ற பெயரையும் கொண்டவளாவாள்.(17) அத்தகைய ரூபத்தை தேவியரிடத்திலும் பூர்வத்தில் நான் கண்டதில்லை. கந்தர்விகளிடத்திலும் இல்லை, யக்ஷிகளிடத்திலும் இல்லை, கின்னரிகளிடத்திலும் இல்லை, மஹீதலத்தின் நாரிகளிடத்திலும் {மனிதப் பெண்களிடத்திலும்} கண்டதில்லை.(18) 

[3] ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழித்
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய்குலிகச் செப்பு
பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்

- கம்பராமாயணம் 3134ம் பாடல், சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம்

பொருள்: {ராவணன்}, "யார் அவள்" என்று கேட்டதும், அந்த அரக்கியும் {சூர்ப்பணகையும்}, "ஐயா, அவள் அல்குல் சக்கரம் பூட்டிய தேர் போலும், கொங்கை செம்பொன்னால் செய்யப்பட்ட குங்குலியச் செப்பு போலும், அவளது பாதம் பட பூமியே புண்ணியம் செய்தது போலும், அம்மா {ஐயோ}, அவள் பேர் சீதை" என அவளது அழகைச் சொல்லத் தொடங்கினாள். 

எவனுக்கு சீதை பாரியையாகிறாளோ {மனைவியாகிறாளோ}, எவனை மகிழ்ச்சியாகத் தழுவிக் கொள்கிறாளோ அவனே சர்வலோகத்திலும் புரந்தரனைவிட அதிஜீவியாவான் {இந்திரனைவிட மகத்தாக வாழ்வான்}.(19) சுசீலையும் {நல்ல குணம் கொண்டவளும்}, சிலாகிக்கத்தகுந்த உடலமைப்பைக் கொண்டவளுமான அவள், ரூபத்தால் புவியில் ஒப்பற்றவளாகத் திகழ்கிறாள். அவள் உனக்கே பாரியையாகத் தகுந்தவள். நீயே அவளுக்குச் சிறந்த பதியாகத் திகழ்வாய்.(20) மஹாபுஜா {பெருந்தோள்களைக் கொண்டவனே}, விஸ்தீரண நிதம்பங்களையும் {பின்புறத்தையும்}, பருத்துப் புடைத்த பாற்குடங்களையும், சிறந்த முகத்தையும் கொண்ட அவளை உன் பாரியை {மனைவி} ஆக்கும் நோக்கில் கொண்டு வரத் துணிந்த என்னை, குரூரனான அந்த லக்ஷ்மணன் விரூபிதையாக்கினான்[4].(21,22அ) பூர்ணச் சந்திரனைப் போல் ஒளிரும் முகத்தைக் கொண்ட அந்த வைதேஹியை நீ இப்போது பார்த்தாலும், மன்மதனின் சரங்களுக்கு  இரையாகிவிடுவாய்.(22ஆ,23அ) அவளை உன் பாரியையாக்கிக் கொள்வதில் உனக்கு அபிப்ராயம் உண்டானால் இப்போதே ஜயார்த்தத்துடன் {வெற்றி நோக்குடன்} உன் தக்ஷிண பாதத்தை {வலது பாதத்தை} சீக்கிரம் எடுத்து வைப்பாயாக[5].(23ஆ,இ) இராக்ஷசேசுவரா, ராவணா, என்னுடைய இந்த வாக்கியங்கள் உனக்குப் பிடித்திருந்தால் சங்கை {ஐயம் / தயக்கம்} ஏதுமின்றி என் சொற்களின்படி செயல்படுவாயாக[6].(24)

[4] சூர்ப்பணகை லக்ஷ்மணன் தன்னை அங்கபங்கம் செய்தான் என்று ராவணனிடம் சொல்லவில்லை என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கே சூர்ப்பணகை குறிப்பிடுவது கிட்டத்தட்ட எல்லா பதிப்புகளிலும் இருக்கின்றன. செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் மட்டுமே இல்லை. எனவே மேற்கண்ட ஆய்வுகள் அந்தச் செம்பதிப்பைக் கொண்டே செய்யப்பட்டிருக்க வேண்டும். செம்பதிப்பிலும் இந்தக் குறிப்பிட்ட சுலோகம் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

[5] வி.வி.சுப்பராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் ஆங்கிலப் பதிப்புகளிலும், தமிழ்ப் பதிப்புகள் அனைத்திலும் இங்கே இன்னும் சில செய்திகள் சொல்லப்படுகின்றன. இங்கே விடுபட்டிருக்கும் அந்த சுலோகங்களில் உள்ள செய்தி பின்வருமாறு, "இராக்ஷசேசுவரா, இத்தகைய கொடூரனும், ஆசிரமவாசியுமான ராமனை வதைத்து {இறந்து போன} அந்த ராக்ஷசர்களுக்கு ஆசையை நிறைவேற்றுவாயாக.{23} மஹாரதனான லக்ஷ்மணனையும் கூரிய சரங்களால் கொன்ற பிறகு, நாதனையும் {சீதையின் கணவனான ராமனையும்} கொன்று, சீதையுடன் சுகமாக விரும்பியபடி போகித்திருப்பாயாக.{24}" என்று இருக்கிறது. இந்த அதிக செய்தியால் இந்த சர்க்கம் சில பதிப்புகளில் 27 சுலோகங்களைக் கொண்டதாகவும், சில பதிப்புகளில் 28 சுலோகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.

[6] மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடும் கூந்தால் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வாள் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்

- கம்பராமாயணம் 3145ம் பாடல்

பொருள்: மேகலையை அணிந்திருக்கும் உலக மக்கள், மீன்களைத் தன்னகத்தே கொண்டு அசையும் கடலைப் புகழும் வண்ணம், வண்டுகள் நாடும் மணமுள்ள கூந்தலையும், சிற்றிடையையும் கொண்டவளும், மான் போன்றவளுமான சீதையை நீ அடைந்து, அவளுடன் இன்புற்றிருந்து, நான் அடைந்து இன்புற்றிருக்கும் வண்ணம் இராமனை என்னிடம் கொடுத்து உன் வாளின் ஆற்றலை உலகம் காணும்படிச் செய்வாயாக
.
இராக்ஷசேசுவரா, மஹாபலவானே, உன் சக்தியை உணர்ந்து, வர்ணிக்கமுடியாத {குற்றமற்ற} அங்கங்களைக் கொண்டவளான சீதைக்கு உன் பாரியத்வத்தை அளிப்பதில் ஈடுபடுவாயாக {சீதையை உன் மனைவியாக்கிக் கொள்ள அவளை அபகரிப்பாயாக}.(25) இராமன், ஜனஸ்தானத்தில் நிலைத்திருந்த நிசாசரர்களை {இரவுலாவிகளைக்} கோணலற்ற {நேராகச் செல்லும்} தன் சரங்களால் கொன்றான் என்பதை மனத்தில் உணர்ந்தும், தூஷணனும், கரனும் கொல்லப்பட்டதைக் கண்டும் இப்போதே செயல்படுவதே உனக்குத் தகும்" {என்றாள் சூர்ப்பணகை}.(26)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்