Saturday, 23 August 2025

இராக்ஷசிகளின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் - 094 (41)

The lament of Rakshasis | Yuddha-Kanda-Sarga-094 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போரில் இறந்து போன தங்கள் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள் ஆகியோருக்காக அழுத ராக்ஷசிகளின் புலம்பல்...

Rakshasis crying for their deceased relatives

ஆரோஹணம் செய்தவர்களுடன் கூடிய {தங்கள் மீது ஏறியிருந்தவர்களுடன் கூடிய} அந்த ஆயிரக்கணக்கான நாகங்களுடனும், வாஜிகளுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும்}, அக்னி வர்ணங்கொண்டவையும், துவஜங்களுடன் கூடியவையுமான ஆயிரக்கணக்கான ரதங்களுடனும்,{1} கதை, பரிகங்களைக் கொண்டு போரிடுபவர்களும், சித்திரமான காஞ்சன துவஜங்களுடன் கூடியவர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்களும்}, சூரர்களுமான ஆயிரக்கணக்கான  ராக்ஷசர்களும்,{2} ராவணனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களும், சிரமமின்றி கர்மங்களைச் செய்யக்கூடிய ராமனின், தப்த காஞ்சன பூஷணத்துடன் கூடிய {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} கூரிய சரங்களால் கொல்லப்பட்டனர்.(1-3) 

இதைக் கண்டவர்களும், கேட்டவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், அச்சமடைந்த தீனர்களாக சிந்தை கலங்கியவர்களுமான நிசாசரர்கள் {இரவுலாவிகள்},{4} ராக்ஷசிகளைச் சந்தித்தனர். விதவைகளும் {கணவர்களை இழந்தவர்களும்}, புத்திரர்களை இழந்தவர்களும், பந்துக்களை இழந்தவர்களுமான அவர்கள், அவர்களை {ராக்ஷசிகள், ராக்ஷசர்களைச்} சந்தித்ததும், துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களாக {பின்வருமாறு} கதறி அழுதனர்:(4,5) "விருத்தையும் {கிழவியும்}, சரிந்த வயிற்றுடன், பயங்கர வடிவம் கொண்டவளுமான சூர்ப்பணகை, வனத்தில் கந்தர்பனுக்கு {காட்டில் மன்மதனுக்கு} சமமான ரூபத்துடன் கூடிய ராமனை எப்படி அணுகினாள்?(6) சுகுமாரனும், மஹாசத்வனும், சர்வ பூத ஹித ரதனுமான அவனை கண்டதும், லோக நிந்தையும், ஹீன ரூபையுமான அவள் எப்படி பிரகாமிதமடைந்தாள்? {மெல்லியல்பைக் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அனைத்து உயிரினங்களின் நன்மையை விரும்புகிறவனுமான ராமனைக் கண்டதும், உலகத்தோரால் நிந்திக்கப்படுபவளும், வடிவம் சிதைந்தவளுமான சூர்ப்பணகை எப்படி ஆசைவெறி கொண்டாள்?}(7) 

சுமுகனும், மஹௌஜஸனும், குணவந்தனுமான ராமனிடம், சர்வ குண ஹீணையும், துர்முகீயுமான அந்த ராக்ஷசி எப்படி காமம் கொண்டாள்? {அழகிய முகத்தைக் கொண்டவனும், பேராற்றல் வாய்ந்தவனும், நற்குணங்கள் நிறைந்தவனுமான ராமனிடம், நற்குணங்கள் ஏதுமற்றவளும், அழகற்ற முகம் கொண்டவளுமான அந்த சூர்ப்பணகை எப்படி ஆசை கொண்டாள்?}(8) சதைச் சுருக்கங்களும், வெண்தலையும் {நரைத்த முடியும்}  கொண்டவள் {சூர்ப்பணகை}, தன் ஜனங்களின் {ராக்ஷசர்களின்} அல்ப பாக்யத்தினால், சர்வ லோகத்தினராலும் நிந்திக்கப்படும் பரிகாசத்திற்குரிய அகாரியத்தைச் செய்துவிட்டாள்.{9} அந்த ஒப்பற்ற ரூபம் கொண்டவள் {சூர்ப்பணகை}, தூஷணன், கரன் உள்ளிட்ட ராக்ஷசர்களின் நாசத்திற்காக, ராகவனிடம் {ராமனிடம்} செருக்குடன் நடந்து கொண்டாள்.(9,10) அதன் நிமித்தமாகவே {சூர்ப்பணகையின் செயல்பாட்டாலேயே} ராவணனால் இந்த மஹத்தான வைரம் {பெரும்பகை} உண்டானது. இராக்ஷசன் தசக்ரீவனின் வதத்திற்காகவே {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன் கொல்லப்படுவதற்காகவே} அந்த சீதை கொண்டு வரப்பட்டாள்.(11) பலவானான ராகவனுடன் தீராத வைரத்தை ஏற்படுத்திக் கொண்டானேயன்றி, ஜனகாத்மஜையான சீதையை தசக்ரீவன் அடையப் போவதில்லை.(12) 

வைதேஹியைப் பிரார்த்தித்த ராக்ஷசன் விராதன், ஏகனான ராமனால் கொல்லப்பட்டதைப் பார்த்தோம். அந்த நிதர்சனம் {சான்று} போதும்[1].(13) ஜனஸ்தானத்தில் பீமகர்மங்களைச் செய்யக்கூடிய பதினான்காயிரம் ராக்ஷசர்கள், அக்னி சிகைக்கு ஒப்பான {ராமனின்} சரங்களால் கொல்லப்பட்டனர்.(14) கரன், தூஷணன், அதேபோல திரிசிரன் ஆகியோர் போரில் ஆதித்யனுக்கு ஒப்பான சரங்களால் கொல்லப்பட்டனர். அந்த நிதர்சனம் போதுமானதே.(15) பிறகு, ஒரு யோஜனை நீளமுள்ள கரங்களைக் கொண்டவனும், உதிரத்தையே உணவாகக் கொண்டவனும், குரோதத்துடன் நாதம் செய்து கொண்டிருந்தவனுமான கபந்தன்[2], கொல்லப்பட்டான். அந்த நிதர்சனம் போதுமானதே.(16) சஹஸ்ரநயனாத்மஜனும், மேருவிற்கு ஒப்பானவனும் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனின் புதல்வனும், மேரு மலைக்கு ஒப்பானவனும்}, பலவானுமான வாலி[3], ராமனால் கொல்லப்பட்டான். அந்த நிதர்சனம் போதுமானதே.(17) மனோரதம் பங்கமடைந்து {விருப்பம் நிறைவேறாமல்}, ரிச்யமூகத்தில் வசித்து வந்த தீனனான சுக்ரீவன், ராஜ்ஜியத்தில் அமர்த்தப்பட்டான். அந்த நிதர்சனமும் போதுமானதே.(18) 

[1] இந்நிகழ்வு ஆரண்ய காண்டம் 2 முதல் 4ம் சர்க்கம் வரை சொல்லப்பட்டிருக்கிறது. 

[2] இந்நிகழ்வு ஆரண்ய காண்டம் 69 முதல் 73ம் சர்க்கம் வரை சொல்லப்பட்டிருக்கிறது. 

[3] இந்நிகழ்வு கிஷ்கிந்தா காண்டம் 9 முதல் 24ம் சர்க்கம் வரை சொல்லப்பட்டிருக்கிறது. 

தர்ம, அர்த்தங்களுக்கு இணக்கமானதும், சர்வ ராக்ஷசர்களுக்கும் ஹிதமானதும் {நன்மையை விளைவிப்பதும்}, விபீஷணனால் சொல்லப்பட்டதுமான பொருத்தமான வாக்கியம், மோஹத்தால் அவனுக்கு {மயக்கத்தில் இருந்த ராவணனுக்குப்} பிடிக்கவில்லை.(19) விபீஷணனின் சொற்களுக்கு தனதானுஜன் {குபேரனின் தம்பியான ராவணன்} கீழ்ப்பட்டிருந்தால், இந்த லங்கை துக்கத்தால் பீடிக்கப்பட்ட சுடுகாடாகியிருக்காது.(20) மஹாபலவானான கும்பகர்ணன், அந்த ராகவனால் கொல்லப்பட்டதையும், அதே போல, வெல்வதற்கரிய அதிகாயன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டதையும் கேட்டும்,{21} பிரிய புத்திரன் இந்திரஜித்துக்கு {தன் அருமை மகன் இந்திரஜித் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டப்} பிறகும் ராவணன் புத்தியில் கொண்டானில்லை {உணர்ந்தானில்லை}[4].(21,22அ) "ரணத்தில் கொல்லப்பட்டவன் - என் புத்ரன், என் பிராதா {உடன் பிறந்தவன்}, என் பர்த்தா {கணவன்}" என்ற அந்த ராக்ஷசிகளின் சப்தம் குலாகுலங்களிலும் {ஒவ்வொரு குடும்பத்திலும்} கேட்கிறது.(22ஆ,23அ)

[4] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சில பதிப்புகளில் ஒரு சுலோகம் விடுபட்டிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு, "ஒரே குரங்கான ஹனுமான், இளவரசன் அக்ஷனைக் கொன்று, தன் வாலில் இருந்த நெருப்புடன் மொத்த நகரையும் தீக்கிரையாக்கியபோது, ராவணன் புரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்பதாகும்" என்றிருக்கிறது.

இரணத்தில் சூரனான ராமனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரதங்கள், அஷ்வங்கள், நாகங்கள் {தேர்கள், குதிரைகள், யானைகள்} அழிக்கப்பட்டன; பதாதிகளும் {காலாள் படையினரும்} கொல்லப்பட்டனர்.(23ஆ,24அ) ருத்திரனாக இருந்தாலும், விஷ்ணுவாகவோ, சதக்ரதுவான மஹேந்திரனாகவோ {நூறு வேள்விகளைச் செய்தவனான பெரும் இந்திரனாகவோ} இருந்தாலும், அந்தகனாகவே இருந்தாலும், அவன் ஸ்வயமாக ராம ரூபத்தில் {ராமனின் வடிவில் தானே நேரடியாக} வந்து நம்மைக் கொல்கிறான்.(24ஆ,25அ) இராமனால் பிரவீரர்கள் கொல்லப்பட்ட {சிறந்த வீரர்களைப் பறிகொடுத்த} நாம், ஜீவிதத்தில் நிராசையுடன், பயத்தின் அந்தத்தை {ஆபத்தின் முடிவைக்} காணாமல், அநாதைகளாகப் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.(25ஆ,26அ) 

சூரனும், மஹா வரங்களைப் பெற்றவனுமான தசக்ரீவன், ராமனின் கைகளால் எழும்  மஹாகோரமான இந்த பயத்தை புத்தியில் கொள்கிறானில்லை {ஆபத்தை உணர்கிறானில்லை}.(26ஆ,27அ) போரில் ராமனால் தாக்கப்படும் ஒருவனை {ராவணனைக்} காக்க, தேவர்களோ, கந்தர்வர்களோ, பிசாசர்களோ, ராக்ஷசர்களோ சக்தர்களில்லை.(27ஆ,28அ) இரணாரணங்களில் {ஒவ்வொரு போரிலும்} ராவணனுக்கு உத்பாதங்கள் தென்படுகின்றன. இராமனால் ராவணன் அழியப்போவதையே அவை தெரிவிக்கின்றன.(28ஆ,29அ) 

பிரீதியடைந்த பிதாமஹனால் {பிரம்மனால்} தேவ, தானவ, ராக்ஷசர்களிடம் இருந்து ராவணனுக்கு அபயம் {பயமின்மை} அளிக்கப்பட்டது. மானுஷர்களிடம் இருந்து {அபயம் ராவணனால்} யாசிக்கப்படவில்லை.(29ஆ,30அ) இராக்ஷசர்களுக்கும், ராவணனுக்கும் மானுஷர்களிடம் இருந்து கோரமான ஜீவிதாந்தகரம் என்ற அத்தகைய பயமே {மனிதர்களால் கோரமாகக் கொல்லப்படும் ஆபத்து} இப்போது வாய்த்திருப்பதாக நினைக்கிறேன். இதில் ஐயமில்லை.(30ஆ,31அ) 

வரதானத்தின் மூலம் பலவானான ராக்ஷசனால் {ராவணனால்} பீடிக்கப்பட்ட விபூதர்கள் {தேவர்கள்}, ஒளிரும் தங்கள் தபங்களின் மூலம் பிதாமஹனை {பிரம்மனை} பூஜித்தனர்.(31ஆ,32அ) {இதில்} நிறைவடைந்தவனும், மஹாத்மாவுமான பிதாமஹன், தேவர்களின் ஹித அர்த்தத்திற்காக {தேவர்களின் நன்மைக்காக}, இந்த மஹத்தான சொற்களை சர்வதேவர்களிடமும் சொன்னான்:(32ஆ,33அ) "இன்று முதல் சர்வ தானவ, ராக்ஷசர்களும், நித்தியம் பயத்தால் சூழப்பட்டவர்களாக, திரிலோகங்களிலும் சாஸ்வதமாகத் திரிந்து கொண்டிருப்பார்கள்" {என்றான் பிரம்மன்}.(33ஆ,34அ)

சர்வதேவர்களும் ஒன்றுகூடி, இந்திரனை முன்னிட்டுக் கொண்டு, ரிஷபத்வஜனும் {காளைக் கொடியைக் கொண்டவனும்}, திரிபுரங்களை எரித்தவனுமான மஹாதேவனை {சிவனைத் தங்களுக்கு} அருள்புரியச் செய்தனர்.(34ஆ,35அ) பிரசன்னனான மஹாதேவன் {அருள்புரிபவனான சிவன்}, "உங்கள் ஹித அர்த்தத்திற்காக {நன்மைக்காக}, ராக்ஷசர்களுக்கு அழிவைத் தரும் நாரீ எழுவாள் {ஒரு பெண் அவதரிப்பாள்}" என்ற இந்தச் சொற்களை தேவர்களிடம் கூறினான்.(35ஆ,36அ)

தேவர்களால் அனுப்பப்பட்டவளும், ராக்ஷஸக்னீயுமான {ராக்ஷசர்களை அழிக்க வந்தவளுமான} இந்த சீதை, பூர்வத்தில் {அமுதம் கடைந்த போது} தானவர்களைப் பசி {விழுங்கியது} எப்படியோ, அப்படியே ராவணனுடன் சேர்த்து நம்மையும் பக்ஷிக்கப் போகிறாள் {விழுங்கப் போகிறாள்}.(36ஆ,37அ) துர்வினீதனும் {தீய நடத்தை கொண்டவனும்}, துர்மதி கொண்டவனுமான ராவணனின் அபநீதியால் {தீச்செயலால்}, சோகத்தில் நிறைந்த கோரமான நிஷ்டானகம் {பயங்கரப் பேரழிவு} நமக்கு விளைந்திருக்கிறது.(37ஆ,38அ) யுகக்ஷயத்தில் {யுக முடிவில் அணுகும்} காலனைப் போல, ராகவனால் {ராமனால்} அணுகப்பட்ட நமக்கு, சரணம் அளிக்கக்கூடியவன் {அடைக்கலம் தரக்கூடியவன்} எவனோ, அவனை இந்த உலகத்தில் நாம் காணவில்லை.(38ஆ,39அ) வனத்தில் தாவாக்னியால் சூழப்பட்ட கரேணுக்கள் {காட்டுத் தீயால் சூழப்பட்ட பெண் யானைகள்} எப்படியோ, அப்படியே மஹத்தான பயத்தில் நிற்கும் நமக்கு சரணம் அளிப்பவர் எவருமில்லை.(39ஆ,40அ) மஹாத்மாவான அந்தப் பௌலஸ்தியனால் {புலஸ்தியர் வழி வந்த விபீஷணனால்} காலத்திற்கு ஏற்றது செய்யப்பட்டது. எவனிடம் இந்த பயம் {ஆபத்து} அறியப்பட்டதோ, அவனிடமே சரணம் அடைந்துவிட்டான்" {என்று ராக்ஷசிகள் புலம்பினர்}[5].(40ஆ,41அ)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு ராக்ஷஸ நாசத்திற்காக ப்ரஹ்மாதிகள் வரங்கொடுத்தது முதலிய வ்ருத்தாந்தங்களை மந்தோதரி அறிஞரான பெரியோர்களிடத்திலும், இந்த ராக்ஷஸ ஸ்திரீகள் அவளிடத்திலும் கேட்டிருப்பார்களென்று தெரிகிறது" என்றிருக்கிறது. இந்தப் பதிப்பில் அடிக்குறிப்பு இப்படியிருந்தாலும், இங்கே விளக்கப்படும் காட்சி அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. சாதாரண ராக்ஷசப் பெண்டிரின் புலம்பலாகவே தெரிகிறது. கம்பராமாயணத்தில் இந்திரஜித் இறந்ததும் மந்தோதரியே போர்க்களத்திற்கு வந்து மாண்டு கிடக்கும் தன் மகனைக் கண்டு கண்ணீர் சிந்தும் காட்சி யுத்தகாண்டம் இராவணன் சோகப் படலத்தில் இருக்கிறது.

பிறகு சர்வ ரஜனீசர ஸ்திரீகளும், தங்கள் கைகளால் பரஸ்பரம் தழுவிக் கொண்டு, பேரச்சத்துடன், மனம் நொந்து, இவ்வாறு புலம்பியவாறே, உரத்த குரலில் பயங்கரமாகக் கதறி அழுதனர்.(41ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 094ல் உள்ள சுலோகங்கள்: 41

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை