Saturday 25 March 2023

இராவணன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 32 (25)

Ravana | Aranya-Kanda-Sarga-32 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் ஆட்டம், ஆடம்பரம், தனித்துவம், அவனது வெற்றிகள், பொறாமைகள், பேராசைகள் ஆகியவற்றின் சித்தரிப்பு; இராவணனை நெருங்கிய சூர்ப்பணகை...

Ravana Lifts Mount Kailasa depicted in Virupaksha temple Pattadakal Karnataka

பிறகு சூர்ப்பணகை, பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்தவர்களான பதினான்காயிரம் ராக்ஷசர்கள், தனியொருவனான ராமனால் கொல்லப்பட்டதைக் கண்டும், திரிசிரன், தூஷணன், கரன் ஆகியோரும் அவ்வாறே ரணத்தில் {போரில்} கொல்லப்பட்டதைக் கண்டும் மீண்டும் மேகத்திற்கு ஒப்பாகப் பெரும் முழக்கம் செய்தாள்.(1,2) வேறு எவராலும் செய்ய இயலாத கர்மத்தை ராமன் செய்திருப்பதைக் கண்ட அவள், பரம கலக்கமடைந்து ராவணன் பாலிக்கும் {ஆட்சி செய்யும்} லங்கைக்குச் சென்றாள்.(3) மருத்துகளின் மத்தியில் உள்ள வாசவனை {இந்திரனைப்} போல, அருகருகே அமர்ந்திருக்கும் அமைச்சர்களுடன், விமானத்தின் மேல்[1] தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ராவணனை அவள் கண்டாள்.(4) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராவணன் அமர்ந்திருக்கும் இடம் பல அடுக்குகளைக் கொண்ட மாளிகையின் மேல்தளம் என்று சொல்லலாம். விமானம் என்பதற்கு "உச்சி" என்ற ஓர் அர்த்தமும் உண்டு. அது புஷ்பக விமானம் என்று சொல்லலாம்" என்றிருக்கிறது.

சூரியனுக்கு ஒப்பானதும், காஞ்சனத்தாலானதுமான பரம {தங்கத்தாலானதுமான உயர்ந்த} ஆசனத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவன், ருக்ம வேதியில் {தங்கத்தாலான வேள்விப் பீடத்தில்} ஏராளமாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் ஜுவலிக்கும் பாவகனை {அக்னியைப்} போலிருந்தான்.(5) தேவர்களாலும், கந்தர்வர்களாலும், பூதங்களாலும் {வேறு உயிரினங்களாலும்}, மஹாத்மாக்களான ரிஷிகளாலும் போரில் வெல்லப்படாதவனான அவன், அகன்ற வாயைக் கொண்ட அந்தகனைப் போன்று கோரமானவனாக இருந்தான்.(6) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் வஜ்ரத்தால் ஏற்பட்ட ரணங்களுடனும் {காயங்களுடனும்} கூடிய அவன், ஐராவதத்தின் தந்தங்களால் ஏற்பட்ட வடுக்களை மார்பில் கொண்டிருந்தான்.(7) இருபது புஜங்களையும், பத்து கிரீவங்களையும் {தொண்டைகளையும் / முகங்களையும்}, காண்பதற்கினிய வெண்குடையையும், விசாலமான மார்பையும்[2], வீரத்தையும் கொண்டவன், ராஜலக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(8) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நாரதீய ஜைமினி ராமாயணத்தில், 11ம் அதிகாரம், 75ம் சுலோகத்தில், ராவணன் நான்கு கால்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். "த³ஷ² ஆஸ்யம் விம்ʼஷ²தி பு⁴ஜம் பி⁴ந்ந அந்ஜந சயமோபமம். பாதை³꞉ சதுர் அதி உக்³ரம் தாம்ரோஷ்டம்" (நா.ஜை.ரா.11:7)" என்றிருக்கிறது.

பர்வதத்திற்கு ஒப்பான அவன், வைடூரியப் பிரகாசத்துடனும், புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும் {தங்கக் காதணிகளுடனும்}, நல்ல புஜங்களுடனும் {பலமான கைகளுடனும்}, விரிந்த வாயுடனும், வெண்மையான பற்களுடனும் கூடியவனாக இருந்தான்.(9) தேவர்களுடனான போர்களில், விஷ்ணுவின் சக்கரத்தால் நூறுமுறை தாக்கப்பட்டும், மஹா யுத்தங்களில் பிற சஸ்திரங்களின் {ஆயுதங்களின்} தாக்குதலாலும் பீடிக்கப்பட்டும் உடலில் வடுக்களை கொண்டிருந்தான்.(10) அதேபோல, தேவர்கள் தொடுத்த தாக்குதல் அனைத்திலும் சிதையாத அங்கம் கொண்டவனான அவன், கலங்காத சமுத்திரத்தையும் கலக்கமடையச் செய்யும் துரித செயல்பாடுகளைக் கொண்டவனாவான்.(11) பர்வத உச்சிகளைப் பந்தாடுபவனான அவன், ஸுரர்களை வெகுவாக ஒடுக்குபவனாகவும், தர்மங்களை வேரோடு அழிப்பவனாகவும், பரதாரங்களை {மாற்றான் மனைவியரைத்} துன்புறுத்துபவனாகவும் இருந்தான்.(12) 

சர்வ திவ்ய அஸ்திரங்களையும் பயன்படுத்த வல்லவனும், சதா யஜ்ஞங்களுக்கு விக்னம் {இடையூறு} விளைவிப்பவனுமான அவன் {ராவணன்}, போகவதி புரிக்குச் சென்று {பாம்புகளின் மன்னனான} வாசுகியை வென்று, தக்ஷகனின் பிரியத்திற்குரிய பாரியையை {அன்புக்குரிய மனைவியை} அபஹரித்தான்[3].(13,14அ) அவன், கைலாச பர்வதத்திற்குச் சென்று, நரவாகனனை {மனிதர்களை வாகனமாகக் கொண்ட குபேரனை} வென்று, அவனது விருப்பத்திற்குரிய புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டான்.(14ஆ,15அ) அந்த வீரியவான் {ராவணன்}, திவ்ய வனமான சைத்ரரதத்தையும், நளினியையும் {தாமரைப் பொய்கையையும்}, தேவர்களின் உத்யானவனமான நந்தனத்தையும் குரோதத்துடன் அழித்தான்.(15ஆ,16அ) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "போகவதி என்பது நாகர்களின் தலைநகரமாகும். வாசுகி, நாகர்களின் மன்னனாவான். தக்ஷகன் ஒரு நாகன், தக்ஷசீலம் அவனது பெயராலேயே அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் இந்த தக்ஷகனின் மனைவியை அர்ஜுனன் கொல்கிறான்" என்றிருக்கிறது.  தக்ஷகனின் மனைவி செய்த தந்திரம், தக்ஷகனின் மகன் அஸ்வசேனன் ஆகியோரைக் குறித்து மஹாபாரதத்தில் ஆதி பரவம் பகுதி 229ல் படிக்கலாம். இந்த அஸ்வசேனன் தான் அர்ஜுனனின் மீது கொண்ட தீராப்பகையால் கர்ணனின் அம்பறாத்தூணியில் நாகாஸ்திரமாக ஒளிந்திருந்தவன். இந்தப் பகுதியை கர்ண பர்வம் பகுதி 90ல் படிக்கலாம். இராமாயண காலத்தில் ராவணனால் கடத்தப்பட்ட தக்ஷகனின் அந்தக் குறிப்பிட்ட மனைவியே, மஹாபாரத காலத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவளாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

சைலசிகரத்திற்கு {மலைகளின் சிகரத்திற்கு} ஒப்பானவனும், பகைவரை தஹிக்கச் செய்பவனுமான அந்த மஹாபாஹு, உதிக்கும் சந்திர சூரியர்களையும் தடுத்தவனாவான்.(16ஆ,17அ) அந்த தீரன், பூர்வத்தில் மஹாவனத்தில் பத்தாயிரம் வருஷங்கள் கடுந்தபம் செய்து, ஸ்வயம்பூவுக்கு {பிரம்மனுக்கு} தன் சிரங்களை {தலைகளைக்} காணிக்கையளித்தான்[4].(17ஆ,18அ) அவன் {ராவணன்}, போரில் மானுஷர்களைத் தவிர, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், படகங்கள், உரகங்கள் ஆகியவற்றால் நேரும் மிருத்யுவில் இருந்து {மரணத்தில் இருந்து பிரம்மனால்} அபயம் அளிக்கப்பட்டவனாவான்.(18ஆ,19அ) அந்த மஹாபலவான், வேள்விகளில் ஹவிர் தானத்திற்குத் தகுந்த இடங்களில் பயன்படுத்தப்படுவதும், புண்ணிய மந்திரங்களை ஓதி துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால்} பிரித்தெடுக்கப்படுவதுமான சோமத்தை {சோமச்சாற்றை} தூய்மையற்றதாக்கினான் {அபகரித்தான்}.(19ஆ,20அ) துஷ்ட, குரூர காரியங்களைச் செய்யும் கடுமையானவனான அந்த பிரஹ்மக்னன் {பிராமணர்களைக் கொல்பவனான ராவணன்}, இதயமற்றவனாக யஜ்ஞத்தின் நிறைவில் இடையூறு விளைவிப்பான். பிரஜைகளிடம் இரக்கமற்றவனாகவும், அவர்களின் நலத்திற்கு எதிராகச் செயல்படுபவனாகவும் அவன் {அந்த ராவணன்} இருந்தான்.(20ஆ,21அ) அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, சர்வ பூதங்களையும் ராவணம் செய்ய வைப்பவனும் {உயிரினங்கள் அனைத்தையும் ஓலமிடச் செய்பவனும்}[5], சர்வலோகங்களையும் பயத்தால் பீடிப்பவனும், குரூரனும், மஹாபலம் பொருந்தியவனுமான தன்னுடன் பிறந்தானை {ராவணனைக்} கண்டாள்.(21ஆ,22அ)

[4] இச்சம்பவம் மஹாபாரதம், வனபர்வம் பகுதி 273ல் குறிப்பிடப்படுகிறது. மேலதிக தகவலாக, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்ற ராக்ஷசப் பெண்கள் மூவரையும் குபேரன் தன் தந்தையான விஸ்வரஸின் பணிவிடைக்காக அனுப்பி வைத்தான். இராவணன், கும்பகர்ணன்  ஆகிய இருவரும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். விபீஷணன் மாலினிக்குப் பிறந்தான். கரனும், சூர்ப்பனகையும்  இரட்டைப் பிள்ளைகளாக ராகைக்குப் பிறந்தனர்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன் என்பது தசக்ரீவன், அல்லது தசகண்டன், அல்லது தசானனன், அல்லது தசகந்தரன் என்பவனின் செல்லப்பெயர் {காரணப் பெயர்} ஆகும். இராவணன், தன் இருபது கைகளால், சிவன், பார்வதி, நந்தி, பிரமத கணங்கள் ஆகியோர் இருக்கும் கைலாச மலையை உயர்த்த முயன்றபோது, சிவன் தன் காலின் கட்டைவிரலால் கைலாசத்தை அழுத்தினார். இராவணனின் இருபது கைகளும் அந்த மலைக்கு அடியில் அகப்பட்டன. இவ்வாறே ஆயிரம் வருடங்கள் கதறியபடியே அவன் உலகங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தான். பிறகு, தன்னுடைய அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில், தண்டகம் என்ற துதியால் சிவனைத் துதித்தான். "இராவண கிருத தண்டகம்" என்ற பெயரில் அந்தத் துதி இன்று வரை நிலைத்திருக்கிறது. அதன்பிறகே சிவன், ராவணனின் கைகளை விடுவித்தான். அதுமுதலே அவன் ராவணன் என்ற பெயரில் புகழடைந்தான். இது ராமாயணத்தின் ஏழாம் நூலான உத்தரகாண்டத்தில் இருக்கிறது. "ராம பத்நீம் நஸ்தா²ம் நிநாய" அதாவது, "இராமனின் பத்தினியை வனத்தில் இருந்து அபகரித்தவன் என்ற பொருளிலும் ராவணன் என்ற பெயர் அமையும்" என்று மந்திரசஸ்திரம் சொல்கிறது. ரவணனின் {[விஸ்]ரவஸின்} மகன் ராவணன் என்று மற்றொரு மந்திரம் சொல்கிறது" என்றிருக்கிறது.

அவன், திவ்ய வஸ்திரங்களையும், ஆபரணங்களையும், திவ்ய மாலைகளையும் சூடி, பிரகாசத்துடன், காலனுக்கே காலனாக எழுபவனைப் போல எடுப்பாக ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.(22ஆ,23அ) இராக்ஷசேந்திரனும், மஹாபாக்கியவானும், புலஸ்திய குல நந்தனனும் {புலஸ்திய குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும்}, சத்ருஹந்தனும் {பகைவரை அழிப்பவனும்}, மந்திரி பரிவாரங்களால் சூழப்பட்டவனுமான ராவணனை நெருங்கிய அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பயத்தால் கலக்கமடைந்தவளாக இந்த வாக்கியங்களைச் சொன்னாள்.(23ஆ,24)  பயமில்லாமல் திரிபவளும், மஹாத்மாவால் {லக்ஷ்மணனால்} விரூபியாக்கப்பட்டவளுமான {அங்கபங்கம் செய்யப்பட்டவளுமான} சூர்ப்பணகை, பயம், லோபம் {பேராசை} ஆகியவற்றால் மோகமடைந்து, தன் {அவல} நிலையை காட்டி ஒளிரும் விசாலமான கண்களுடன் அவனிடம் இந்த பயங்கர வாக்கியங்களைச் சொன்னாள்.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை