Atri and Anasuya | Ayodhya-Kanda-Sarga-117 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்தில் இருந்து புறப்பட்ட ராமனும், சீதையும்; அத்ரிமுனிவரையும், அனஸூயையும் சந்தித்தது...
அந்த தபஸ்விகள் புறப்பட்டுச் சென்ற பிறகு, மீண்டும் மீண்டும் சிந்தித்த ராகவனுக்கு {ராமனுக்கு}, பல காரணங்களால் அங்கே வசிப்பதில் பிடித்தம் ஏற்படவில்லை.(1) "இங்கேதான் பரதனும், மாதாக்களும், நகரத்தாரும் என்னைச் சந்தித்தனர். வருந்துகின்ற அவர்களைக் குறித்த நினைவுகளே நித்தியம் என்னைப் பீடிக்கின்றன.(2) அந்த மஹாத்மாவின் சைனியம் {பரதனின் படை} இறங்கியதால், ஹய, ஹஸ்திகளின் சாணங்களால் {குதிரை, யானைகளின் சாணங்களால் இவ்விடத்தில்} கடுமையான தாக்கம் ஏற்பட்டிருக்கிறது {அசுத்தமாகியிருக்கிறது}.(3) எனவே, வேறெங்காவது செல்வோம்" என்று சிந்தித்த ராகவன், வைதேஹி, லக்ஷ்மணன் சகிதனாக {அவ்விடத்தைவிட்டுப்} புறப்பட்டான்.(4)
பெரும்புகழ்பெற்றவனான அந்த ராமன், அத்ரியின் ஆசிரமத்தை அடைந்து, அவரை வணங்கினான். அத்ரிபகவானும், தன் புத்திரனை {வரவேற்பது} போல அவனை வரவேற்றார்.(5) பெரும் மதிப்புடன் சர்வ ஆதித்யங்களையும் {விருந்தோம்பலையும்} தானே செய்து, சௌமித்ரியையும் {லக்ஷ்மணனையும்}, மஹாபாக்கியவதியான சீதையையும் அதே போல உபசரித்தார்.(6) உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் விருப்பமுள்ள அந்த தர்மஜ்ஞர் {அத்ரி}, அப்போது அங்கே வந்தவளும், அனைவராலும் மதிக்கப்படுபவளும், முதியவளுமான தன் பத்தினியை அழைத்து, சாந்தமாகப் பேசினார்.(7)
அந்த ரிஷிசத்தமர் {சிறந்த முனிவர் அத்ரி}, தபஸ்வினியும், தர்மசாரிணியும் {தர்ம வழியில் நடப்பவளுமான} அனஸூயையிடம், "மஹாபாக்யவதியான வைதேஹியை வரவேற்று உபசரிப்பாயாக" என்று சொல்லிவிட்டு, தர்மசாரிணியான அந்த தபஸ்வினியை {அனசூயையைக்} குறித்து ராமனிடம் {பின்வருமாறு} கூறினார்:(8,9அ) அனகா {குற்றமற்ற ராமா}, பத்து வருஷ காலம் {மழையின்றி நேர்ந்த} நிரந்தர வறட்சியால் உலகம் தஹித்தபோது,{9ஆ} கிழங்குகளையும், பழங்களையும் உண்டாக்கியவளும், ஜாஹ்னவியை {கங்கையாற்றைப்} பெருகச் செய்தவளும், உக்கிர தபத்தில் ஈடுபடுபவளும், நியமங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்,{10} பத்தாயிரம் வருஷங்கள் மஹத்தான தபம் புரிந்தவளும், விரதஸ்நானம் செய்தவளும், தன் விரதத்தால் இடையூறுகளைப் போக்கியவளுமான இந்த அனசூயை,{11} தேவ காரியத்தின் நிமித்தம், அவசரமாகப் பத்து இரவுகளை ஓரிரவாகச் செய்தவள் ஆவாள்[1]. இவள் உனக்கு மாதாவைப் போன்றவள்.(9ஆ-12) சர்வ பூதங்களாலும் நமஸ்கரிக்கப்படுபவளும் {அனைத்து உயிரினங்களாலும் வணங்கப்படுபவளும்}, புகழ்பெற்றவளும், ஒருபோதும் கோபமடையாதவளுமான இந்த மூதாட்டியை வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை} அணுகட்டும்" {என்றார் அத்ரி}.(13)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு முறை மாண்டவ்ய முனிவர், அனஸூயையின் தோழியான சாண்டிலி என்ற தபஸ்வினியை, "பத்து நாட்களுக்குள் ஒரு காலைப்பொழுதில் இவள் விதவையாவாள்" என்று சபித்தார். அப்போது சாண்டிலியும், "இனி ஒரு போதும் விடியாமல் போகட்டும்" என்று பதிலுக்கு சபித்தாள். இதனால் அச்சமடைந்த தேவர்கள், அனஸூயையை அணுக, அவள் பத்து இரவு காலத்தை ஒரிரவாக மாற்றி, அந்த தபஸ்வினியின் {சாண்டிலியின்} கணவருடைய மரணத்தைத் தடுத்து, தேவர்களின் காரியத்தையும் நிறைவேற்றினாள் என்று புராணங்களில் படிக்கிறோம்" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் சுட்டப்படும் பெண்துறவி சாண்டிலியைக் குறித்து மஹாபாரதத்தில் உத்யோக பர்வம் பகுதி 113லும், அநுசாஸன பர்வம் பகுதி 123லும் சில குறிப்புகள் இருக்கின்றன.
இவ்வாறு சொன்ன அந்த ரிஷியிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்ற ராகவன், தர்மத்தை அறிந்தவளான சீதையிடம் இந்த உத்தமச் சொற்களைக் கூறினான்:(14) "இராஜபுத்ரியே, இந்த முனிவர் சொன்னவற்றைக் கேட்டாய். உன் நோக்கம் சிறப்படைய சீக்கிரம் தபஸ்வினியை அணுகுவாயாக" {என்றான்}.(15)
மைதிலியான {மிதிலையின் இளவரசியான} சீதை, தனது நன்மையில் விருப்பமுள்ள ராகவனின் சொற்களைக் கேட்டதும், தர்மத்தை அறிந்தவளான அத்ரிபத்னியை {அத்ரியின் மனைவியான அனசூயையை} வலம் வந்தாள்.(16) உடல் தளர்ந்தவளும், தோல் சுருங்கியவளும், நரைத்த தலைமயிரைக் கொண்ட மூதாட்டியும், பெருங்காற்றில் வாழைமரத்தைப் போல எப்போதும் நடுக்கத்துடன் கூடியவளும்,{17} மஹாபாக்கியவதியும், பதிவிரதையுமான அந்த அனஸூயையைப் பணிவுடன் வணங்கித் தன் பெயரைச் சொன்னாள் சீதை.(17,18) அந்த வைதேஹி, நிந்தனைக்குத் தகாதவளான அந்த தபஸ்வினியைக் கூப்பிய கைகளுடன் வணங்கி, மகிழ்ச்சியுடன் அவளது நலம் குறித்து வினவினாள்.(19)
அப்போது, அந்த மகிமைமிக்கவள் {அனசூயை}, தர்மவழியில் நடக்கும் சீதைக்கு ஆறுதல் கூறும் வகையில் {பின்வருமாறு} சொன்னாள், "நல்வினையால் நீ தர்ம வழியில் நடக்கிறாய்.(20) சீதே, பாமினி {அழகிய பெண்ணே}, ஞாதிஜனங்களையும், மானத்தையும் {மதிப்பையும்}, செழிப்பையும் கைவிட்டு, வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமனை நீ பின்தொடர்வதும் அந்த நல்வினையாலேயே[2].(21) பர்த்தா {கணவன்} நகரத்திலிருந்தாலும், வனத்திலிருந்தாலும், பாபியாக இருந்தாலும், சுபனாக இருந்தாலும் அவனுக்குப் பிரியமாக இருக்கும் ஸ்திரீகளுக்கு மஹோதய {பெண்களுக்கு, மேலான உயர்ந்த} உலகங்கள் கிட்டும்.(22) ஆரிய சுபாவத்துடன் கூடிய ஸ்திரீகளுக்கு, கெட்ட நடத்தையுள்ளவனாக இருந்தாலும், காமாந்தகனாக இருந்தாலும், தனமில்லாதவனாக இருந்தாலும் பதியே பரம தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(23)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "சுற்றத்தாரையும், பெருமையையும், சம்பத்தையும் துறந்து வனத்தில் வஸிக்கச் செய்யப்பட்ட ராமனை நீ பின்பற்றி வந்திருக்கிறாயென்பதும் தெய்வசங்கல்பமே" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பந்து ஜனங்களையும், அஹங்காரத்தையும், ஐஷ்வரியத்தையும்விட்டு, பதினான்கு ஸம்வத்ஸரங்கள் அரண்யத்தில் வஸிக்கும்படி நியமிக்கப்பட்ட ராமனைப் பின்றொடர்ந்து வந்திருக்கின்றனையே. இது உன் பாக்யமே" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ நல்வினையினால் கற்பழிந்திலை; பதிவிரதா தருமத்தையும் நன்குணர்ந்தனை, பந்துஜனங்களையும், மிகுந்த செல்வத்தையும் துறந்து, துன்புறுங்காலையில் கணவனைத் துறவாமல் கொடிய காட்டிலும் உடன் வந்தனையல்லையோ" என்றிருக்கிறது.
வைதேஹி, ஆலோசித்துப் பார்த்தால், அடையப்பட்டதும் ஒருபோதும் அழியாத யோக்கியமான {தகுந்த} தபத்தைப் போல, இவரைவிட {கணவரைவிடச்} சிறந்த பந்து எவரையும் நான் காணவில்லை.(24) காமத்தால் {ஆசையால்} பீடிக்கப்பட்ட ஹிருதயங்களுடன், பர்த்தாவிடம் {கணவனிடம்} ஆதிக்கம் செலுத்தும் நடத்தை கொண்ட அஸத் ஸ்திரீகள், முன் சொன்ன குணதோஷங்களை {நன்மை, தீமைகளை} அறியமாட்டார்கள்.(25) மைதிலி, அத்தகைய ஸ்திரீகள், அகாரிய வசப்பட்டு அபகீர்த்தியை ஈட்டி {செய்யத்தகாத செயல்களைச் செய்து அவமானமடைந்து} உண்மையில் தர்மத்தின் பாதையில் இருந்து நழுவுகிறார்கள்.(26) உலகில் நன்மை, தீமைகளை அறியும் குணவதிகளான உன்னைப் போன்ற ஸ்திரீகள், தர்மச் செயல்களைச் செய்தவர்களைப் போல ஸ்வர்க்கத்தில் சஞ்சரிப்பார்கள்.(27) எனவே, பதிவிரதைகளின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி இவனை {ராமனை} அனுசரிக்கும் சதியான {மனைவியான} நீ, உன் பர்த்தாவின் {கணவனின்} சஹதர்மசாரிணியாவதால் தர்மத்தையும், புகழையும் ஈட்டுவாய்" {என்றாள் அனசூயை}.(28)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 117ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |