Breaking the bow | Bala-Kanda-Sarga-67 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வில்லில் நாண்பொருத்திய ராமன்; சிவதனுசு முறிந்தது; தசரத மன்னனை அழைத்துவர அயோத்திக்கு அமைச்சர்களை அனுப்பிய ஜனகன்...
விஷ்வாமித்ர மாமுனிவர், ஜனகனின் சொற்களைக் கேட்டு, "ராமனுக்கு அந்த தனுவைக் காட்டுவாயாக" என்று அந்தப் பார்த்திபனிடம் {ஜனகனிடம்}சொன்னார்.(1) அப்போது, ஜனக ராஜனும் தன் அமைச்சர்களிடம் "கந்தங்களாலும் {சந்தனம் முதலிய நறுமணப்பொருட்களாலும்} மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட திவ்ய தனு {தெய்வீக வில்} இங்கே கொண்டு வரப்படட்டும்" என்று ஆணையிட்டான்.(2)
ஜனகனால் தெளிவாகச் சொல்லப்பட்ட அந்த மஹாத்மாக்கள் {அமைச்சர்கள்} மாளிகைக்குள் பிரவேசித்து, அந்த தனுவை முன்னிட்டுக் கொண்டு வெளிப்பட்டனர். அளவற்ற பலங்கொண்ட ஐயாயிரம் நெடிய மனிதர்கள், அஷ்டசக்கரங்கள் {எட்டு சக்கரங்கள்} பொருத்தப்பட்ட ஒரு மஞ்ஜூஷத்தை {வில்லிருக்கும் இரும்புப் பெட்டியை} பெருஞ்சிரமப்பட்டு இழுத்துவந்தனர்.(3,4)
அந்த நிருபதியின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} மந்திரிகள், தனுவைக் கொண்ட அந்த இரும்பு மஞ்ஜூஷத்தைக் கொண்டு வந்து, ஸுரனை {தேவனைப்} போன்றிருந்த ஜனகனிடம்,(5) "இராஜேந்திரா, மிதிலாதிபா, ராஜாவே, நீ தரிசிக்க விரும்பியதும், {வளைக்காமல் தோல்வியுற்ற} ராஜாக்கள் அனைவராலும் பூஜிக்கப்பட்டதுமான தனு இதோ இருக்கிறது" என்றனர்.(6)
அந்தச் சொற்களைக் கேட்ட நிருபன் {ஜனகன்}, ராமலக்ஷ்மணர்கள் இருவருடன் கூடியவரும், மஹாத்மாவுமான விஷ்வாமித்ரரிடம் கைகளைக் கூப்பியபடியே பேசினான்:(7) "பிராமணரே, முற்காலம் முதற்கொண்டே ஜனகர்களாலும் {ஜனக குலத்தவராலும்}, தற்காலத்தில் மஹாவீரியவான்களும், {நாண்பொருத்திக்} குறிபார்க்க இயலாத ராஜாக்களாலும் கொண்டாடப்பட்ட சிறந்த தனு இதோ இருக்கிறது.(8) ஸுரகணங்கள் {தேவர்கள்}, அசுரர்கள், ராக்ஷசர்கள், கின்னரர்கள், மஹா உரகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோரிலேயே கூட எவரும் இதில் {இந்த வில்லில்} குறிபார்க்கும் திறனற்றவர்கள் எனும்போது, இந்த தனுவை சரியாகப் பிடிக்கவோ, நாண்கயிற்றை மறுமுனையில் பொருத்தவோ, இறுக்கமான நாண்கயிற்றைச் சுண்டவோ, கணையை நாண்கயிற்றின் சரியான இடத்தில் பொருத்தி, சரியான முறையில் இழுக்கவோ, சரியான முறையில் குறிபார்க்கவோ மனிதர்களுக்கு ஏது திறன்?(9,10) முனிபுங்கவரே, இத்தகைய சிறந்த தனுசு இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெரும் நற்பேற்றைப் பெற்றவரே, ராஜபுத்திரர்கள் இருவருக்கும் இதைக் காட்டுவீராக" {என்றான் ஜனகன்}.(11)
இராமனுடன் கூடிய விஷ்வாமித்ரர், ஜனகன் சொன்னதைக் கேட்டு, "வத்ஸா {குழந்தாய்}, ராமா, இந்த தனுவைப் பார்ப்பாயாக" என்று ராகவனிடம் சொன்னார்.(12) மஹாரிஷி {விசுவாமித்ரர்} சொன்னதைக் கேட்ட ராமன், அந்தத் தனு இருக்கும் மஞ்ஜூஷத்தைத் திறந்து தனுவைக் கண்டு இதைச் சொன்னான்:(13) "பிராமணரே, இப்போது இந்தச் சிறந்த தனுவை என் கைகளால் தீண்டுகிறேன். இதில் நாண்பூட்டவும், குறிபார்க்கவும் முயற்சிக்கப் போகிறேன்" {என்றான் ராமன்}.(14)
அப்போது அந்த ராஜாவும் {ஜனகனும்}, முனிவரும் {விஷ்வாமித்ரரும்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று அவனிடம் ஒரே குரலில் சொன்னார்கள். அவனும் {ராமனும்} முனிவசனத்தைக் கேட்டு, அந்த தனுவை மத்தியில் {கைப்பிடியில்} பிடித்து விளையாட்டாக எடுத்தான்.(15) தர்மாத்மாவான அந்த ரகுநந்தனன், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் அலட்சியமாக நாண்பூட்டினான்.(16) அந்த வீரியவான் இவ்வாறு நாண்பூட்டி {தன் காதுவரை நாண்கயிற்றை} இழுக்கத் தொடங்கினான். பெரும்புகழ்வாய்ந்த அந்த நரசிரேஷ்டன் {மனிதர்களில் சிறந்தவன், இப்படி இழுத்தவாறே} அந்த தனுவை மத்தியில் முறித்தான்[1].(17) அதன் சப்தம் இடி முழக்கத்தைப் போலவும், பர்வதம் {மலை} பிளப்பதைப் போலவும் பேரொலியாகக் கேட்டது. இதனால் பூமியும் நடுங்கினாள்.(18) முனிவரரையும் {உயர்ந்த முனிவரான விஷ்வாமித்ரரும்}, ராஜாவையும் {ஜனகனும்}, ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரையுந் தவிர வேறு நரர்கள் {மனிதர்கள்} அனைவரும் அந்த சத்தத்தால் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.(19)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அந்த வில் பழையது என்பதாலோ, காய்ந்து வறண்டது என்பதாலோ முறியவில்லை. இராமன், அந்த வில் முறியும் மட்டும் நாண்கயிற்றை இழுத்தான். விளையாடும்போது பொம்மையை உடைக்கும் சிறுவர்களைப் போல ராமன் அலட்சியமாக அந்த வில்லை முறித்தான். அந்த வில் இரு நுனிகளின் அருகில் முறியாமல் அவனது கைப்பிடியிலேயே முறிகிறது. இஃது அவனது பிடியின் பலத்தைக் காட்டுகிறது" என்றிருக்கிறது.
ஜனங்கள் அனைவரும் தேறியதும் {மயக்கம் தெளிந்ததும்}, வாக்கிய ஞானம் கொண்ட ராஜா {ஜனகன்}, மனக்குழப்பம் முற்றிலும் நீங்கியவனாகக் கைகளைக் குவித்து அந்த முனிபுங்கவரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(20) "பகவானே, தசராத்மஜனான {தசரதனின் மகனான} ராமனின் வீரியத்தைக் கண்டேன். அதியற்புதமானதும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமான இதை நான் எதிர்பார்க்கவில்லை.(21) என் மகள் சீதை, தசரதாத்மஜனான ராமனைப் பர்த்தாவாக {கணவனாக} அடைந்து, ஜனக குலத்திற்குக் கீர்த்தியைக் கொண்டு வரப் போகிறாள்.(22) கௌசிகரே, இவளை வீரியசுல்கமாகக் கொடுக்கும் என் பிரதிஜ்ஞை சத்தியமாகிற்று. பிராணனைவிட மேலாக வளர்க்கப்பட்ட என் மகள் சீதை ராமனுக்குத் தகுந்தவள் ஆவாள்.(23) பிராமணரே, கௌசிகரே, உமது அனுமதியின் பேரில் எனது மந்திரிகள் ரதத்தில் விரைந்தேறி சீக்கிரத்தில் அயோத்தியை அடைவார்கள். நீர் மங்கலமாக இருப்பீராக.(24) அவர்கள் {அந்த மந்திரிகள்}, வீரியசுல்கமானவளைக் கொடுப்பதையும், கதைகள் அனைத்தையும் வணக்கத்துடன் விரிவாக அந்த ராஜனிடம் {தசரதனிடம்} சொல்லி இங்கே அழைத்து வருவார்கள்.(25) காகுத்ஸ்தர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் முனிவரால் காக்கப்பட்டனர் என்பதையும் அவர்கள் அந்த நிருபனிடம் சொல்வார்கள். மிகச் சீக்கிரமாகச் செல்லும் அவர்கள் அந்த ராஜனை மகிழச்செய்து இங்கே அழைத்து வருவார்கள்" {என்றான் ஜனகன்}.(26)
கௌசிகர், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார். தர்மாத்மாவான அந்த ராஜாவும் {ஜனகனும்}, மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, நடந்ததை விரிவாகச் சொல்லி அந்த நிருபனை {தசரதனை} அழைத்துவர ஆணையிட்டு அவர்களை அயோத்திக்கு அனுப்பினான்.(27)
பாலகாண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள் : 27
Previous | | Sanskrit | | English | | Next |