The recourse of the sages | Aranya-Kanda-Sarga-01 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் தண்டகவனத்திற்குள் நுழைந்தது. தண்டகத்திலிருந்த முனிவர்கள் ராமனை வரவேற்றுப் போற்றியது...
வெல்வதற்கரியவனும், ஆத்மவானுமான {தன்னடக்கம் கொண்டவனுமான} ராமன், தண்டகாரண்யமெனும் மஹாரண்யத்திற்குள் பிரவேசித்ததும், தாபஸ ஆசிரம மண்டலத்தை {தபஸ்விகளின் ஆசிரமக் கூட்டத்தைக்} கண்டான்.(1) அவை தர்ப்பைகளும், மரவுரிகளும் பரவிக் கிடப்பவையாகவும், பிரம்ம லக்ஷணத்தால் நிறைந்தவையாகவும், ககனத்தின் {வானத்தின்} சூரிய மண்டலத்தைப் போலக் கண்ணெடுத்தும் பார்க்க முடியாத பிரகாசத்தைக் கொண்டவையாகவும் இருந்தன.(2)
உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமாகவும், எப்போதும் தூய்மை கொண்டவையாகவும், மான்களும், பக்ஷிகளும் நிறைந்தவையாகவும் அவை இருந்தன.(3) நித்தியம் நடனமாடும் அப்ரஸ் கணங்களால் பூஜிக்கப்படுபவையாகவும், விசாலமான அக்னி சாலைகளைக் கொண்டவையாகவும், வேள்விக்கரண்டிகள், பாத்திரங்கள், மான்தோல்கள், தர்ப்பை,{4} வேள்விக்கான விறகுகள், நீர், கலசங்கள் ஆகியவற்றைக் கொண்டவையாகவும், பழங்கள், கிழங்குகளால் விளங்குபவையாகவும், ஆரண்யத்தில் நாவிற்கினிய புண்ணிய பழங்களைத் தரும் மஹாவிருக்ஷங்களால் சூழப்பட்டவையாகவும் அவை இருந்தன.(4,5)
பலிகளும் {வேள்விகள்}, ஹோமங்களும், அர்ச்சனைகளும் நடைபெறுவதும், புண்ணியம் நிறைந்த பிரம்ம கோஷங்களால் எதிரொலிப்பதும், பத்மங்கள் நிறைந்த தாமரைப் பொய்கைகளாலும், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பிற புஷ்பங்களாலும் அவை சூழப்பட்டிருந்தன.(6) புலனடக்கத்துடன் கூடியவர்களும், பழங்களையும், கிழங்குகளையும் உண்பவர்களும், மரவுரியும், மான்தோலும் உடுத்தியவர்களும், சூரியனையும், வைஷ்வாநரனையும் {அக்னியையும்} போன்று ஒளிமிக்கவர்களுமான முதிய முனிவர்களுடன் கூடியவையாக அவை இருந்தன.(7) புண்ணிய ஆஹாரங்களை நியமத்துடன் உண்ணும் பரம ரிஷிகளால் விளங்குபவையாகவும், பிரம்ம கோஷங்களின் எதிரொலியால் பிரம்ம பவனம் போலத் தெரிபவையுமாக அவை இருந்தன.(8)
மஹாதேஜஸ்வியான ஸ்ரீமான் ராகவன் {ராமன்}, பிரம்மவித்துகளும், மஹாபாக்யவான்களுமான அந்த பிராமணர்களால் விளங்கும் தாபஸ ஆசிரம மண்டலத்தை {தபஸ்விகளின் ஆசிரம வரிசையைக்} கண்டு, தன் மஹாதனுவின் நாண்கயிற்றைத் தளர்த்திக் கொண்டு அதை நெருங்கினான்.(9,10அ) திவ்யஞானம் கொண்டவர்களான அந்த மஹரிஷிகள், ராமனையும், புகழ்மிக்க வைதேஹியையும் கண்டு பிரீதியடைந்து அவர்களை அணுகினர்.(10ஆ,11அ) திட விரதர்களான அவர்கள், உதிக்கும் சோமனை {சந்திரனைப்} போன்ற அந்த தர்மசாரியையும் {தர்ம வழி நடக்கும் ராமனையும்}, லக்ஷ்மணனையும், புகழ்மிக்க வைதேஹியையும் கண்டு, மங்கல ஆசிகளைக் கூறி {அம்மூவரையும்} வரவேற்றனர்.(11ஆ,12)
அந்த வனவாசிகள் {முனிவர்கள்}, ராமனின் ரூப அமைப்பையும், தீரத்தையும், சுகுமாரத்தையும் {மென்மையையையும்}, நல்ல தோற்றத்தையும் தற்செயலாகக் கண்டு வியந்தனர்.(13) அந்த வனவாசிகள் அனைவரும் இவ்வாறு {தங்கள் வரவால்} ஆச்சரியத்தை ஏற்படுத்திய வைதேஹியையும், லக்ஷ்மணனையும், ராமனையும் கண்கள் இமைக்காமல் கண்டனர்.(14) அனைத்து உயிரினங்களின் நன்மையில் விருப்பமுள்ள அந்த மஹாபாக்கியவான்கள் {தபஸ்விகள்}, தங்கள் அதிதியாக {விருந்தினரான} ராகவனை {ராமனை} ஏற்று, அந்த பர்ணசாலையில் {ஓலைக்குடிசையில்} குடியமர்த்தினர்.(15) பாவகனுக்கு {நெருப்புக்கு} ஒப்பானவர்களும், மஹாபாக்கியவான்களுமான அந்த தர்மசாரிகள் {தர்மவழி நடப்பவர்களான அந்த தபஸ்விகள்}, விதிப்படி ராமனை மதிக்க அவனுக்கு நீரைக் கொண்டு வந்தனர்.(16)
பிறகு, மங்கல ஆசிகளைக் கூறிய அந்த தர்மஜ்ஞர்கள் {தர்மத்தை அறிந்த தபஸ்விகள்}, மொத்த ஆசிரமத்திலும் உள்ள கிழங்குகள், புஷ்பங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து, பரம மகிழ்ச்சியுடன் அந்த மஹாத்மாவிடம் {ராமனிடம்} கொடுத்து, கைகளைக் கூப்பியவாறே {பின்வருமாறு} சொன்னார்கள்:(17,18அ) "தர்ம பரிபாலனம் செய்து, ஜனங்களுக்கு அடைக்கலம் தந்து, மதிப்புடன் பூஜிக்கத்தகுந்த குருவாகவும், தண்டதரனாகவும் {தண்டனை வழங்குபவனாகவும்} திகழும் ஒரு ராஜா பெரும்புகழை அடைகிறான்.(18ஆ,19அ) இராகவா, பிரஜைகளை ரக்ஷிக்கும் ராஜா, இந்திரனின் நாலில் ஒரு பாகனாகத்[1] திகழ்வதால் இங்கே {இம்மையில்} நமஸ்கரிக்கப்படுகிறான்; ரம்மியமான சிறந்த போகங்களையும் அனுபவிக்கிறான்.(19ஆ,20அ) ஜனங்களின் ஈசுவரனும், எங்கள் ராஜாவுமான நீ, நகரத்தில் வசித்தாலும், வனத்தில் வசித்தாலும், உன் கொற்றத்தின் கீழ் வசிப்பவர்களான எங்களைப் பாதுகாக்க வேண்டும்.(20ஆ,இ) இராஜாவே, தண்டத்தைக் கைவிட்டு, குரோதத்தை வென்று, இந்திரியங்களையும் வென்ற தபோதனர்களான {தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களான} எங்களை, கர்ப்பத்தில் உள்ள கருவை {காப்பது} போல நீயே ரக்ஷிக்க வேண்டும்" {என்றனர்}.(21)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "லோகபாலர்கள் ஒவ்வொருவரின் நாலில் ஒரு பங்கால் ஆனவன் மன்னன். இந்திரன் அந்த லோகபாலர்களில் ஒருவன்" என்றிருக்கிறது.
இவ்வாறு சொன்ன அவர்கள் லக்ஷ்மணனுடன் கூடிய ராகவனுக்கு {ராமனுக்கு}, பழங்கள், கிழங்குகள், புஷ்பங்கள் ஆகியவற்றையும், வனத்தில் கிட்டும் பிறவற்றையும், விதவிதமான ஆஹாரங்களையும் கொடுத்துப் பூஜித்தனர்.(22) வைஷ்வாநரனுக்கு {அக்னிக்கு} ஒப்பான தபஸ்விகளும், வேறு நியாயங்களைப் பின்பற்றும் சித்தர்களும் இவ்வாறே ஈசுவரனுக்குரிய நியாயப்படி ராமனைப் போற்றினர்.(23)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 01ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |