Sunday 14 November 2021

சிவதனுசு | பால காண்டம் சர்க்கம் - 66 (26)

Shiva Dhanush | Bala-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையின் பிறப்பையும், சிவதனுசு குறித்தும் விஷ்வாமித்ரரிடம் சொன்ன ஜனகன்; இராமன் சிவதனுசில் நாணேற்றினால் சீதையை அவனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாகச் சொன்னது...

Shivas bow in Ramayana

பொழுது விடிந்ததும் அந்த நராதிபன் {ஜனகன்}, தன் காலைச்சடங்குகளை முடித்துவிட்டு மஹாத்மாவான விஷ்வாமித்ரரையும், ராகவர்களையும் அழைத்தான்.(1) அந்த தர்மாத்மா {ஜனகன்}, அவரையும், மஹாத்மாக்களான ராகவர்களையும் சாத்திர விதிகளின்படி பூஜித்துவிட்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(2) "பகவானே {விஷ்வாமித்ரரே} உமக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. அனகரே {பாவமற்றவரே}, நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன? எனக்கு ஆணையிடுவீராக. உமது ஆணையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன்" {என்றான் ஜனகன்}.(3)

மஹாத்மாவான ஜனகன் இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவும், வாக்கியவிஷாரதருமான {பேசுவதில் திறன்மிக்கவருமான} அந்த முனிவர் {விஷ்வாமித்ரர்} அந்த வீரனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னார்:(4) "உலகின் புகழ்பெற்ற க்ஷத்திரியர்களான இந்த தசரதப் புத்திரர்கள் இருவரும் உன்னிடம் உள்ள சிறந்த தனுவை {வில்லைக்} காண விரும்புகின்றனர்.(5) அதைக் காட்டுவாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக. அந்தத் தனுசை {வில்லைக்} கண்டு ஆசை நிறைவேறும் இந்த நிருபாத்மஜர்கள் {இளவரசர்கள்} தங்கள் விருப்பம்போல் திரும்பிச் செல்வார்கள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(6)

இவ்வாறு சொல்லப்பட்ட ஜனகன் அந்த மஹாமுனிவரிடம் மறுமொழியாக, "அந்த தனுசு இங்கிருக்கும் காரணத்தைக் குறித்துக் கேட்பீராக.(7) பகவானே, {எங்கள் குலத்தில்} நிமியின் வழியில் ஆறாவதாக தேவராதன் என்ற புகழ்பெற்ற மஹீபதி {பூமியின் தலைவன்} ஒருவர் இருந்தார்.[1] மஹாத்மா {சிவன்} இதை வைத்திருக்கும்படி அவருக்கு {தேவராதனுக்கு} தத்தம் செய்தான்.(8) பூர்வத்தில் தக்ஷ யஜ்ஞ வதத்தின் போது, வீரியவானான ருத்திரன் விளையாட்டாக இந்த தனுவை வளைத்து {நாணேற்றி} திரிதசர்களிடம் {தேவர்களிடம்} அலட்சியமாக இதைச் சொன்னான்:(9) "ஸுரர்களே, ஹவிர்ப்பாகத்தை விரும்புகிறவனான எனக்குரிய பாகம் கொடுக்கப்படவில்லை. எனவே, பெரிதும் மதிக்கப்படும் உங்கள் சிறந்த அங்கங்களை {கிரீடந்தரித்த உங்கள் தலைகளை} இந்த தனுசால் கொய்யப்போகிறேன்" {என்றான் சிவன்}.(10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில சுவடிகளில் {ஆறாவது என்றழைக்கக்கூடிய} சஷ்டம் என்ற சொல் {மூத்த என்ற பொருள் தரக்கூடிய} ஜேஷ்டம் என்று உள்ளது. அவ்வாறு எடுத்துக் கொண்டால், இங்கே, "நிமியின் மூத்த மகன் தேவராதன்" என்ற பொருள் சேரும். இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நடைபெறும் நேரத்தில் ஜனகன் சொல்லும் வரிசையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஜனகனின் குல மூதாதையான நிமியில் இருந்து தேவராதன் ஆறாவதாகவே வருகிறான்" என்றிருக்கிறது.

முனிபுங்கவரே {முனிவர்களில் சிறந்த விஷ்வாமித்ரரே}, இதனால் மனக்கலக்கம் அடைந்த தேவர்கள் அனைவரும் அந்தத் தேவேசனிடம் சரணடைந்தனர். பவனும் அவர்களிடம் பிரீதியடைந்தான்.(11) அந்த தேவதேவன் {சிவன்}, அந்த தனுரத்தினத்தை {விற்களில் ரத்தினமான அந்த வில்லை} மஹாத்மாக்களான அவர்கள் அனைவரிடமும் கொடுத்தான். விபுவே, அவர்கள் {அந்த தேவர்கள்} அதை வைத்துக் கொள்ளும்படி என் மூதாதையரிடம் {தேவராதனிடம்} கொடுத்தனர்.(12,13அ) பிறகு கிருஷதக்ஷேத்திரத்தை {வேள்விக்களத்தை} நான் உழுதபோது கலப்பையில் உதித்தவள், அந்த க்ஷேத்திரத்தை தூய்மைப்படுத்தும்போது ஈட்டப்பட்டதால் சீதை என்ற பெயரில் புகழ்பெற்றாள்[2].(13ஆ,14அ) பூதலத்தில் உதித்த அவள், என் மகளாகவே வளர்ந்து வந்தாள். யோனியில் பிறக்காத அந்தக் கன்னிகைக்கு வீரியசுல்கத்தை {வீரமே சுல்கமாகுமென [வீரமே இந்தக் கன்னிகையை அடையக் கொடுக்கப்படும் தக்ஷிணையாகுமென]} நான் தீர்மானித்தேன்[3].(14ஆ,15அ)

[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில் "நான் யாகஞ் செய்வதற்காகப் பூமியைச் சோதிக்க வேண்டிக் கலப்பையினால் உழும்போது, அந்தக் கலப்பையினின்று ஒரு பெண்குழந்தை வெளிக்கிளம்பி எனக்ககப்பட்டது. அப்பெண்மணி அங்ஙனங் கலப்பையைக் கொண்டு உழுத பூமியினின்றும் உண்டானது பற்றி ஸீதையென்றே பேர் பெற்று எங்கும் ப்ரஸித்தியடைந்தனள்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "பின்பொரு காலையில் அடியேன் வேள்வி இயற்ற வேண்டுமென வேள்விக்காகக் குறித்த நிலத்தை யுழுவிக்கையில் உழுபடையின் முனை ஓரிடத்துத் தட்ட, அவ்விடத்தில் அகழ்ந்து பார்த்தனம், அங்கு ஒரு பெண்மணி தோன்றினள். அப்பெண்ணரசியை அடியேன் பரிவோடெடுத்துச் சீதையெனத் திருநாமஞ்சாத்தி வளர்த்து வந்தேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "நான் புல்வெளியை உழுதபோது ஒரு காரிகை எழுந்தாள். (வேள்விக்காக) களத்தைத் தோண்டும்போது என்னால் அடையப்பட்டவள் என்பதால் அவள் சீதை என்ற பெயரில் அறியப்பட்டாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் என்னுடைய வயலை உழுது தூய்மைப்புடுத்திக் கொண்டிருந்தேன். உயர்த்தப்பட்ட கலப்பையானது சீதை என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கும் ஒருத்தியை வயலில் இருந்து வெளியே கொண்டு வந்தது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சீதை என்ற சொல் கலப்பையால் உண்டாக்கப்பட்ட பள்ளம் {சுவடு} என்ற பொருளைக் கொண்டதாகும்" என்றிருக்கிறது.

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடந்தை திருவெளிப்பட்டெனப் புணரி
எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிந்துஒதுங்கித்
தொழுகின்ற நன்னலலத்துப் பெண்ணரசி தோன்றினாள்.

உழுகின்ற கொழுவின் முனையில் உதிக்கும் கதிரொளி பொழிகின்ற பூமாதேவியின் திருவடிவம் வெளிப்பட்டாற்போலப் பாற்கடலில் தோன்றிய தெள்ளமுதத்துடன் எழுந்த லக்ஷ்மி தேவியும், தாழ்ந்து ஒதுங்கி நின்று தொழுங்கின்ற பேரழகும் படைத்தவளுமான பெண்ணரசி தோன்றினாள்.

- கம்பராமாயணம் பாலகாண்டம் பாடல் 682

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வரதட்சணை என்பது மணமகள் தன் கணவனுக்குக் கொண்டு வரும் சொத்து அல்லது பணமாகும். உலகம் முழுவதிலும் இஃது அறியப்பட்டதே. பழங்கால இந்தியாவில் இதற்கு இணையாகக் கன்யாசுல்கம் என்ற ஒரு வழக்கம் இருந்தது. அதாவது, மணமகன் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தைக் காக்கவும், அதன் சந்ததியை மேம்படுத்தவும் தகுந்த மணமகள் கிடைத்ததால் அந்த மணமகள் குடும்பத்திற்கு வரத்தையோ, சொத்தையோ, பணத்தையோ வழங்கும் முறையாகும் இது. வரதட்சணை, அல்லது அதற்கு இணையானது கட்டாயம் பணமாகக் கொடுக்கப்பட வேண்டியதில்லை. பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் பரிசுப் பொருட்களாகவும் அஃது இருக்கலாம். இதுவே பிற்காலத்தில் பெரிய அழிவுகளை உண்டாக்கியது. இங்கே சீதையின் திருமணத்தில் ஜனகன் தனக்கு வரப்போகும் மருமகனின் வீரத்தை வரமாக விரும்புகிறான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "வழக்கமான பிறப்பிடத்தில் உதிக்காத அவள் வில் வளைப்பதன் மூலம் கரம்பற்றப்படுபவளாகவும், இங்கே என் மகளாகவும் நிறுவப்பட்டாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "தரையின் பரப்பில் இருந்து உயர்த்தப்பட்ட அவள் என் மகளாக வளர்க்கப்பட்டாள். கருவறையில் பிறக்காதவள் என்பதால் இந்தக் கன்னிகை வீரியசுல்கமாகக் கொடுக்கப்படுவாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், வீரியசுல்கமும், சுவயம்வரமும் ஒன்றல்ல. சுவயம்வரம் என்பது, கூடியிருக்கும் தகுந்தவர்களில் ஒரு கன்னிகையே தனக்கான வரனைத் தானே தேர்ந்தெடுக்கும் விழாவாகும். வீரியசுல்கமென்பது, பெரும் வீரத்தை வெளிப்படுத்திக் கேட்பவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பதாகும். சுல்கமென்றால் விலை என்று பொருள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பூமியிற் பிறந்த அப்பெண்பிள்ளையை நான் வளர்த்துவர, நாடோறும் வளர்ந்து வந்தனள். நான் வளர்த்ததனால் அவள் எனக்குப் புதல்வியாயினள். இந்தப் பெண்பிள்ளை அயோநிஜையாகையால் ஸாமாந்யராகிய ஒருவர்க்குங் கொடுக்கத்தகாளென்று ஆலோசித்து நம்மிடமிருக்கிற சிவதநுஸ்ஸை நாணேற்றும் வல்லவனுக்கே கொடுக்க வேண்டுமென்று நிச்சயித்து இதுவரையில் ஒருவர்க்கும் விவாஹஞ் செய்து கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனன்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "இப்பெண்ணாயகத்தின் தோற்றத்தையும், பண்பையும், ஒப்புயாவில்லாத கட்டழகையும் வேந்தர்களெல்லோருங் கேள்வியுற்று, அடியேனிடம் வந்து இக்கன்னிகையை மணஞ்செய்து கொடுமெனப் பலவாறு கேட்டனர்கள். அவர்கள் இச்சீதையை மணம்புரிந்து கொள்வதற்குத் தகுதி ஒரு சிறிதுமில்லார்களென நன்கறிவேனாதலால், நேராக மறுத்துச் சொல்ல மாட்டாமல், கண்ணோட்டத்தால் இவ்வுருத்திரனது சராசனத்தை யாவன் நாணேற்றி ஒலியெழுப்புவானோ? அவனுக்கே என் அருமைத் திருமகளைத் திருமணம் புரிவிப்பேனென்று உறுதிமொழி கூறி, இத்தாணுவில்லைச் சீதாதேவியார் திருமணத்திற்கு இலக்காக வைத்திருக்கின்றேன்" என்றிருக்கிறது.

கலித் தானைக் கடலோடும் கைத் தானக் களிற்று அரசர்
ஒலித்து ஆனை என வந்து, மணம் மொழிந்தார்க்கு எதிர், "உருத்த
புலித் தானை, களிற்று உரிவைப் போர்வையான் வரி சிலையை
வலித்தானே மங்கை திருமணத்தான்" என்று, யாம் வலித்தோம்.

பொருள்: துதிக்கையும், மதநீரும் உடைய யானைப்படையைக் கொண்ட மன்னர்கள் ஆரவாரமுடைய சேனையைப் போன்ற கடல் போல் முழக்கம் செய்து வந்து மணம் செய்து கொள்ளக் கேட்டனர். எதிர்மொழியாகச் சினம் கொண்ட புலித்தோலை ஆடையாகவும், யானைத் தோலைப் போர்வாயாகவும் கொண்ட சிவன் போரில் பயன்படுத்தும் வில்லைத் தன் வலிமை கொண்டு வளைத்தவனே இந்த மங்கையை மணமுடிப்பான் என்று நான் உறுதியாகத் தெரிவித்தேன்

- கம்பராமாயணம் பாலகாண்டம் பாடல் 685

முனிபுங்கவரே, பூதலத்தில் உதித்தவளான என் மகள் உரிய வயதை அடைந்ததும் ராஜாக்கள் வந்து அவளை வரமாக வேண்டினர்.(15ஆ,16அ) பகவானே, கன்னிகையை வரமாக வேண்டும் பிருத்வீக்ஷிதர்களிடம் {பூமியின் மன்னர்களிடம்}, வீரியசுல்கத்தால் மட்டுமே {இது முடியும் என்று சொல்லி} என் மகளைக் கொடுக்காமல் இருந்தேன்.(16ஆ,17அ) முனிபுங்கவரே, அப்போது வீரியத்தை உறுதிசெய்ய {வில்லின் வலிமையை அறிய} விரும்பிய நிருபதிகள் அனைவரும் ஒன்றுகூடி மிதிலையை அடைந்தனர்.(17ஆ,18அ) {வில்லின் வலிமையை} உறுதிசெய்ய விரும்பிய அவர்களின் அருகில் சிவதனு கொண்டு வரப்பட்டாலும், அவர்களால் அதை எடுக்கவோ, அசைக்கவோ {உயர்த்திப் பார்க்கவோ} முடியவில்லை[4].(18ஆ,19அ)

[4] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனுடைய இந்த வில் எட்டுச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில், ஐயாயிரம் மனிதர்களால் இழுத்து வரப்படுவது இதற்கு அடுத்த சர்க்கத்தில் சொல்லப்படுகிறது. ஆனந்த ராமாயணம், ஐநூறு காளைகளால் இழுத்துவரப்பட்டதாகச் சொல்கிறது. இராமாயணத்தின் இன்னும் பிற பதிப்புகளில், ஒன்றிரண்டு மனிதர்களால் இழுக்க முடியாது என்பதால் பல மனிதர்களால் இழுத்து வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் சீதை, வேறு பெண்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களது பூப்பந்து இந்த வண்டிக்கு அடியில் சென்று விட்டதாகவும், அது மதிப்புமிக்க பெட்டி என்பதால் வேறு பெண்கள் அதன் அருகில் கூட செல்லவில்லை என்றும், ஆனால் சீதை சென்று பூமாலையை விலக்குவது போல் தன் இடக்கையால் அந்த வண்டியை விலக்கி அந்தப் பந்தை எடுத்ததாகவும். "மக்களின் நலத்திற்காக சீதை சில காலம் தன் கணவனைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும்" என்று சப்தரிஷிகளின் மனைவியரில் ஒருத்தி சபித்ததற்கு, சிவனின் வில்லை எளிதாகக் கையாளும் இந்தத் திறனே சீதைக்கு அழிவைக் கொண்டு வந்ததாகவும் சில மரபுக்கதைகள் சொல்கின்றன.

மஹாமுனிவரே, அந்த வீரியவான்களின் வீரியத்தை அற்பமாகக் கருதிய நான், அந்த நிருபதிகளுக்கு எதிராக ஆணை பிறப்பித்தேன் {அவர்களை நிராகரித்தேன்}. தபோதனரே, அதை {அதன் விளைவை} நீர் அறிவீர்.(19ஆ,20அ) முனிபுங்கவரே, தங்கள் வீரத்தில் சந்தேகங்கொண்ட அந்த ராஜாக்கள் அனைவரும் பரமகோபத்துடன் மிதிலையை முற்றுகையிட்டனர்.(20ஆ,21அ) முனிபுங்கவரே, அவதூறு செய்யப்பட்டதாகக் கருதிய அவர்கள் பெருங்கோபமடைந்து இவ்வாறு மிதிலாபுரியைப் பீடித்தனர்.(21ஆ,22அ)

முனிசிரேஷ்டரே, ஒரு வருடம் பூர்ணமடைந்ததும் என் படைகள் அனைத்தும் சுருங்கியதன் காரணமாக நான் பெருந்துக்கம் அடைந்தேன்.(22ஆ,23அ) அப்போது தவத்தின் மூலமாக நான் தேவகணங்கள் அனைத்தையும் தணிவடைய {அருள்புரியச்} செய்தேன். ஸுரர்களும் பரமபிரீதியடைந்து {காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்ற} சதுரங்க பலத்தை {நால் வகைப் படைகளை எனக்கு} அளித்தனர்.(23ஆ,24அ) வீரமற்றவர்களும், தங்கள் வீரத்தில் சந்தேகம் கொண்டவர்களும், பாவ காரியம் செய்பவர்களுமான அந்த நிருபதிகள் {மன்னர்கள்}, மோதலில் பங்கப்பட்டு, அமாத்யர்களோடு {அமைச்சர்களுடன்} திசைகள் அனைத்திலும் பறந்தோடினர்.(24ஆ,25அ)

முனிசார்தூலரே, இதுவே பரமபாஸ்வரம் கொண்ட {பேரொளி படைத்த} அந்த தனுவாகும். ஸுவிரதரே {நல்ல விரதங்களைக் கொண்டவரே}, இதை ராமலக்ஷ்மணர்களுக்கும் காட்டுவேன்.(25ஆ,26அ) முனிவரே, இந்த தனுசில் ராமன் ஆரோபணம் செய்தால் {நாணேற்றினால்} அயோனிஜையான {யோனியில் பிறக்காத} என் மகள் சீதையை தாசரதிக்கு நான் தத்தம் செய்வேன் {தசரதனின் மகனான ராமனுக்குக் கொடுப்பேன்" {என்றான் ஜனகன்}.(26ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள் : 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை