Coronation of Sugreeva | Kishkindha-Kanda-Sarga-26 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் பட்டாபிஷேகம்; அங்கதன் இளவரசனாக்கப்பட்டது...
அப்போது, சோகத்தில் தபித்துக் கொண்டிருந்தவனும், நனைந்த ஆடைகளுடன் கூடியவனுமான சுக்ரீவன், சாகை மிருக மஹாமாத்ரர்களின் {கிளையில் வாழும் விலங்குகளுடைய அமைச்சர்களின்} பரிவாரத்தால் சூழப்பட்டிருந்தான்.(1) அவர்கள் அனைவரும், பிதாமகனை {நோக்கிச் செல்லும்} ரிஷிகள் போல, மஹாபாஹுவும், இடையூறேதுமின்றி காரியங்களைச் செய்பவனுமான ராமனை நோக்கிச் சென்று கைகளைக் கூப்பி நின்றனர்.(2)
காஞ்சன சைலத்தை {பொன்மலையைப்} போன்றவனும், தருணார்க்கனின் {இளஞ்சூரியனின்} ஒளியை முகத்தில் கொண்டவனும், மாருதாத்மஜனுமான {வாயு தேவனின் மகனுமான} ஹனுமான், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(3) "பிரபுவே, காகுத்ஸ்தரே, நல்ல பற்களைக் கொண்டவர்களும், நிறைவான பலசாலிகளும், மஹாத்மாக்களுமான வானரர்கள், பித்ருபைதாமஹர்களுக்குரியதும் {தந்தை, பாட்டன்மாருக்கு உரியதும்}, மகத்தானதும், அடைதற்கரியதுமான இந்த ராஜ்ஜியத்தை உமது அருளால் கிடைக்கப்பெற்றனர்.(4,5அ) நல்ல ஹிருதயம் கொண்ட நட்பு கணத்துடன் {நண்பர்களுடன்} கூடிய இவர் {சுக்ரீவர்}, உமது நல்லனுமதியின் பேரில், சுபமான நகருக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்து, விதவிதமான கந்தங்களாலும் {நறுமணப் பொருட்களாலும்}, ஔஷதிகளாலும் {மூலிகைகளாலும்} விதிப்படி ஸ்நானம் செய்து {மன்னனாக அபிஷேகம் செய்து கொண்டு}, சர்வ காரியங்களையும் நல்ல முறையில் செயல்படுத்தட்டும்.(5ஆ,6) மாலைகளாலும், ரத்தினங்களாலும் விசேஷமாக உம்மை அர்ச்சிக்கட்டும். நீர் ரம்மியமான இந்த கிரி குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} செல்வதே தகும். ஸ்வாமியின் {தலைவரான சுக்ரீவரின்} சம்பந்தத்தை ஏற்படுத்தி வானரர்களை மகிழ்விப்பீராக" {என்றான் ஹனுமான்}.(7,8அ)
ஹனுமான் இவ்வாறு சொன்னதும், பகைவீரர்களைக் கொல்பவனும், வாக்கிய கோவிதனும் {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனும்}, புத்திமானுமான ராகவன் {ராமன்}, ஹனூமந்தனுக்கு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8ஆ,9அ) "சௌம்யா {மென்மையானவனே}, ஹனுமானே, பிதாவின் ஆணைக்கிணங்க, சதுர்தச {பதினான்கு} வருடங்கள் கிராமத்திலோ, அதன் புறத்திலோ {அதைப் போன்ற வேறு எங்குமோ}, புரத்திலோ {நகரத்திலோ} பிரவேசிக்கமாட்டேன்.(9ஆ,10அ) வீரனும், வானரரிஷபனுமான {வானரர்களில் காளையுமான} சுக்ரீவன், நல்ல வளமிக்க திவ்ய குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்ததும், சீக்கிரம் ராஜ்ஜியத்தில் விதிப்படி {மன்னனாக} அபிஷேகிக்கப்படட்டும்" {என்றான் ராமன்}.(10ஆ,11அ)
விருத்தம் {நடைமுறை} அறிந்தவனான ராமன், ஹனூமந்தனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, விருத்தசம்பன்னனும் {நடைமுறை அறிவில் நிறைவானவனும்}, வலிமையுடனும், வீரத்துடனும் செயல்படுபவனான சுக்ரீவனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(11ஆ,12அ) "வீரனான இந்த அங்கதனும் யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படட்டும் {இளவரசனாக முடிசூட்டப்படட்டும்}. மூத்தவனின் {வாலியின்} மூத்த மகனும், விக்கிரமத்தில் அவனுக்கு {வாலிக்கு} ஒப்பானவனும், அதீன ஆத்மாவுமான {சோர்வில்லாதவனுமான} இந்த அங்கதன் யௌவராஜ்ஜியத்தில் நன்கு பொருந்துபவன்.(12ஆ,13) சௌம்யா, வார்ஷிகமென {மழைக்காலமாகக்} குறிப்பிடப்படும் சத்வார மாசங்கள் {நான்கு மாதங்கள்} தொடங்குகின்றன[1]. நீர் பொழியும் சிராவணம் மழைக்காலத்தின் முதல் மாசமாகும்.(14)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வர்ஷாகாலம் இரண்டு மாதங்களே. ஆயினும் கீழ்ச்சென்ற ஆடிமாதத்தையும், மேல்வரும் அற்பிசிமாதத்தையும் கூட்டிக் கொண்டு இந்நான்கு மாதங்களும் யுத்தத்திற்குத் தகாதவையாகையால் நான்கென்று இங்குச் சொல்லப்பட்டன. அன்றியே - "பக்ஷாவைமாஸாம்" என்கிற ச்ருதியின்படி பக்ஷங்கள் {அரைமாதங்கள்} மாஸங்களென்னப்படுகையால் நான்கு மாதங்கள் நான்கு பக்ஷங்களென்று சிலர் கருதுகின்றனர்" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் ஐப்பசிமாதமே அற்பிசிமாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சிராவணம் என்பது ஆடி அமாவாசை முதல், ஆவணி அமாவாசை வரையுள்ள காலமாகும். இந்த 14ம் சுலோகத்தில், "மழைக்காலத்தின் நான்கு மாதங்கள் தொடங்குகின்றன" என்றும், இதே சர்க்கத்தின் 17ம் சுலோகத்தில், "கார்த்திகை மாதம் நெருங்கும்போது நீ ராவண வதத்திற்கு முயற்சிக்க வேண்டும்" என்றும் ராமன் சொல்கிறான். கார்த்திகைக்கு முந்தைய நான்கு மாதங்கள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகியனவாகும். எனவே, சிராவண காலம் ஆடியிலும், ஆவணியிலும் இருந்தாலும் இங்கே குறிப்பிடப்படும் வார்ஷிக சத்வார மாசங்களின் முதல் மாதம் ஆடியாகவே இருக்க வேண்டும்.
சௌம்யா, இஃது உத்யோகத்திற்கான {அலுவலுக்கான} சமயமல்ல. நீ சுபமான புரீக்குள் {மங்கலமான கிஷ்கிந்தை நகரத்திற்குள்} பிரவேசிப்பாயாக. இலக்ஷ்மணனுடன் நான் இந்தப் பர்வதத்தில் {மலையில்} வசித்திருப்பேன்.(15) சௌம்யா, இந்த கிரியின் குகை ரம்மியமாகவும், விசாலமாகவும், மாருதத்திற்குத் தகுந்ததாகவும் {காற்றோட்டம் நிறைந்ததாகவும்}, ஏராளமான நீருடனும், ஏராளமான கமலங்களுடனும் {தாமரைகளுடனும்}, உத்பலங்களுடனும் {கருங்குவளைகளுடனும்} இருக்கிறது.(16) கார்த்திகை நன்கு நெருங்கும் பிராப்தத்தில், நீ ராவண வதத்திற்கு முயற்சிக்க வேண்டும். அதுவே {கார்த்திகை மாதமே} நமக்கு ஏற்ற சமயமாகும்[2]. சௌம்யா, நீ உன் ஆலயத்தில் பிரவேசிப்பாயாக. இராஜ்ஜியத்தில் அபிஷேகமும் செய்து கொண்டு, நல்ல ஹிருதயம் கொண்டவர்களை {நண்பர்களை} முழுமையாக மகிழ்ச்சியடையச் செய்வாயாக" {என்றான் ராமன்}.(17,18அ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்குக் கார்த்திகை ஸமீபித்து வருகையைச் சொல்லுகையால் அற்பிசிமாதத்தின் கடைசியைச் சொல்லுகிறது. ராமனே இந்த ஏற்பாட்டை அற்பிசிமாதமீறாகச் சொல்லியிருக்கின்றனன். புறப்படுவது மார்கழி மாதத்தில். தான் ஏற்பாடு பண்ணின கார்த்திகை மாதத்தைக் கடக்கையால் ராமனுக்கு ஸுக்ரீவன் மேல் கோபமும் லக்ஷ்மணனை அனுப்பினதும். ஆகையால் கார்த்திகை மாதங்கடந்து மார்கழி மாதத்திலேயே வானரர்க்ள புறப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் அவர்கள் ஸீதையைத் தேடச் சென்று, ஸ்வயம்ப்ரபையின் பிலத்தில் வெகுகாலமிருந்து, அதினின்று வெளிப்பட்டு வரும்பொழுது, வஸந்தகாலத்தில் புஷ்பிப்பதற்குத் தொடக்கமான இலையுதிர்காலமாகிய பங்குனி மாதத்தைப் பற்றியதால், பக்ஷாந்தரத்தில் பங்குனியும், சித்திரையும் வஸந்த ருது வென்றதைப் பற்றியதால். இவ்விடத்தில் இங்ஙனம் க்ரமங்கொள்ள வேணும். அதெப்படியெனில், சித்திரை மாதத்தில் ராமன் அயோத்யையினின்று புறப்பட்டனன். அகஸ்த்யாசிரமத்திற்கு வருவதன் முன்னம் பத்து ஸம்வத்ஸரங்களாயினவென்று சொல்லப்பட்டது. பிறகு பஞ்சவடியில் மூன்று ஸம்வத்ஸரங்கள் கடந்து சித்திரை மாதம் வருகையில் சூர்ப்பணகையின் காது மூக்குகளையறுத்ததும், கராதிகளின் வதமும் நடந்ததாகத் தெரியவருகின்றது. ராவணன் மாரீசனுடைய போதனத்தினால் கொஞ்சம் தாமதித்து அந்தச் சைத்ரமாதத்திலேயே ஸீதையைக் கொண்டுபோயினன். ஸீதாவிரஹத்தினால் ராமன் வருந்தி, வஸந்தருதுவை வர்ணிக்கும்க்ரமத்தில் சித்திரை மாதத்து மந்தமாருதத்தை வர்ணித்தானாகையாலும், ஸீதை லங்கையில் ஸம்வத்ஸரம் இருந்ததாகச் சொல்லியிருக்கையாலும், சித்திரை மாதத்திலேயே ஸீதை அபஹரிக்கப்பட்டனள். மீளவும் பங்குனி மாதத்தில் ராவண வதம். சரத்ருதுவில் ஸேனையைக் கட்டினது. மார்கழியில் வானரர்கள் புறப்படுதல். ஸ்வயம்ப்ரபையின் பிலத்தில் வெகுகாலம் கடந்தது. பிலத்தினின்று வெளிப்பட்ட பின்பு பங்குனி மாதத்தின் சுக்லபக்ஷ த்ரயோதசியினன்று ஹனுமான் ஸமுத்ரத்தைத் தாண்டுதல். சதுர்தசியினன்று மீளவும் தாண்டி வருதல். பூர்ணிமையன்று யுத்த யாத்ரை. மற்றவை யுத்தகாண்டத்திற் சொல்லப்படும்" என்றிருக்கிறது.
இவ்வாறு ராமன் நல்லனுமதியளித்ததும், வானரரிஷபனான சுக்ரீவன், வாலி பாலிதம் செய்து {ஆண்டு} வந்த ரம்மியமான கிஷ்கிந்தாபுரீக்குள் பிரவேசித்தான்.(18ஆ,19அ) வானரேஷ்வரன் {வானரர்களின் தலைவனான சுக்ரீவன் அவ்வாறு} பிரவேசித்ததும், எங்குமிருந்து ஆயிரக்கணக்கான வானரர்கள் மகிழ்ச்சியுடன் அந்தப் பிலவகேஷ்வரனை {தாவிச்செல்பவர்களான தலைவனான சுக்ரீவனைச்} சூழ்ந்து நின்றனர்.(19ஆ,20அ) பிறகு, பிரகிருதிகள் {குடிகள்} அனைவரும் ஹரிகணேஷ்வரனை {குரங்குக் கூட்டத் தலைவனான சுக்ரீவனைக்} கண்டு, தலையால் வணங்கி, சமாஹிதத்துடன் {கவனமாக} வசுதையில் {பூமியில்} பணிந்தனர்.(20ஆ,21அ) வீரியவானும், மஹாபலவானுமான சுக்ரீவன், பிரகிருதிகள் {குடிகள்} அனைவரையும் எழுப்பிப் பேசிவிட்டு, உடன்பிறந்தவனின் சௌம்யமான {வாலியின் அழகிய} அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தான்.(21ஆ,22அ) பீமவிக்ராந்தனும் {பயங்கர வீரனும்}, வானரரிஷபனுமான சுக்ரீவன் {அந்தப்புரத்திற்குள்} பிரவேசித்துத் திரும்பியதும், நல்ல ஹிருதயம் கொண்டவர்கள் {நண்பர்கள்}, அமரர்கள் சஹஸ்ராக்ஷனுக்கு {தேவர்கள் இந்திரனுக்கு அபிஷேகம் செய்து வைத்ததைப்} போல அபிஷேகம் செய்து வைத்தனர்.(22ஆ,23அ)
ஹேமத்தால் {பொன்னால்} மேன்மையாக அலங்கரிக்கப்பட்ட வெண்குடையையும், ஹேமதண்டத்தையும் {பொன்னாலான செங்கோலையும்}, புகழை அதிகரிக்கும் வெண்சாமரத்தையும் அவனுக்குக் கொண்டு வந்தனர்.{23ஆ,24அ} அதேபோல, அனைத்து ரத்தினங்களையும், வித்துகள் {நவதானியங்கள்}, ஔஷதிகள் {மூலிகைகள்} அனைத்தையும்,{24ஆ} பாலுள்ள விருக்ஷங்கள் {மரங்கள்}, தளிர்கள், மலர்கள், வெள்ளை வஸ்திரங்கள், வெண்மையான அங்கராகம் {கற்பூரம், வெண்சந்தனம்},{25} சுகந்தமான மாலைகள், பூமியில் பூத்த அம்புஜங்கள் {நிலத்தாமரைகள்}, திவ்யமான சந்தனம், ஏராளமான விதவித கந்தங்கள்,{26} அக்ஷதை {புனிதமான மஞ்சளரிசி}, ஜாதரூபம் {தங்கம்}, பிரியாங்கு {ஞாழல் கொடி / யவதானியம்}, மது {தேன்}, நெய், தயிர், வியாகரசர்மம் {புலித்தோல்}, {பன்றித் தோலினால் செய்யப்பட்ட} மதிப்புமிக்க பாதுகைகள் இரண்டு ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்,{27} மேனியெங்கும் முழுமையாகப் பூசிக்கொள்ளும் களிம்பு {மெய்க்கூண்டு}, கோரோசனம் {அரிதாரம்}, மனோசிலை {திலகம்} ஆகியவற்றுடன் பதினாறு சிறந்த கன்னியர் மகிழ்ச்சியுடன் அங்கே வந்தனர்.(23ஆ-28) பிறகு, ரத்தினங்கள், வஸ்திரங்கள், பக்ஷியங்கள் ஆகியவற்றைக் கொடுத்து துவிஜரிஷபர்களை {இருபிறப்பாளர்களில் காளைகளைத்} திருப்தியடையச் செய்தவர்கள், விதிப்படி அந்தச் சிறந்த வானரனுக்கு {சுக்ரீவனுக்கு} அபிஷேகம் செய்தனர்.(29) அப்போது மந்திரவித ஜனங்கள் {மந்திரங்களை அறிந்த அறிஞர்கள்}, குசப்புற்களைப் பரப்பி, வேள்விநெருப்பை மூட்டி, மந்திரங்களால் புனிதமடைந்த ஹவிசுடன் {ஆகுதியுடன்) ஹோமம் செய்தனர்.(30)
பிறகு, பிராசாதத்தின் சிகரத்தில் ஹேமப் பிரதிஷ்டானத்தை {உயர்ந்த பீடத்தின்மேல் பொன்னாலான கால்களைக்} கொண்டதும், மேலான மெத்தை பரப்பப்பெற்றதும், சித்திர மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும்,{31} ரம்மியமானதும், சிறந்ததுமான ஆசனத்தில் {அரியணையில்}, மந்திரங்களுடன் விதிப்படி {சுக்ரீவனை} கிழக்கு முகமாக ஸ்தாபித்து {இருக்கச் செய்து}, நதிகள் {கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்}, நதங்கள் {மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்} ஆகியவற்றில் இருந்தும், எங்குமுள்ள தீர்த்தங்களில் இருந்தும் நீரைச் சேகரித்து,{32} சர்வ சமுத்திரங்களில் இருந்தும் விமலமான ஜலத்தை {மாசற்ற நீரைக்} கொண்டு வந்த வானரரிஷபர்கள் {வானரர்களில் காளைகள்}, கனகக் கும்பங்களிலும் {பொற்குடங்களிலும்},{33} சுபமான ரிஷப சிருங்கங்களிலும் {காளைகளின் கொம்புகளிலும்}, காஞ்சனக் கலசங்களிலும், சாஸ்திர நோக்கில் மஹரிஷிகளால் விதிக்கப்பட்ட விதிகளின்படியே {நீரை} இட்டனர்.{34} கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், துவிவிதன், ஹனூமான், ஜாம்பவான் ஆகியோர்,{35} சுத்தமானதும், நறுமணமிக்கதுமான அந்த நீரைக் கொண்டு, வசுக்கள் சஹஸ்ராக்ஷனான வாசவனுக்கு {வசுக்கள் ஆயிரம் கண் படைத்த இந்திரனுக்கு அபிஷேகம் செய்வித்தது} போல சுக்ரீவனுக்கு அபிஷேகஞ்செய்தனர்[3].(31-36)
[3] மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்திண்ணம் செய்வன செய்து செம்மலை (4118)மறையோர் ஆசி வழங்க வானுளோர்நறைதோய் நாள்மலர் தூவ நல்நெறிக்குஇறையோன்தன் இளையோன் அவ்வேந்தலைதுறையோர் நூல் முறை மௌலி சூட்டினான் (4119)- கம்பராமாயணம், 4118, 4119ம் பாடல்கள், அரசியல் படலம்பொருள்: நீராட்டுவதற்குரிய புனித நீரும், மதிப்புமிக்க பொன்னாலான மணிமுடி முதலிய யாவையும் வந்து சேர்ந்ததும், சிறந்தவனின் தம்பியும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனும்}, பெருமைக்குரியவனுக்கு {சுக்ரீவனுக்குத்} தவறாமல் செய்ய வேண்டிய செயல்களைச் செய்து,(4118) வேதம் அறிந்தவர்கள் வாழ்த்துக் கூற, தேவர்கள் தேன்நிறைந்தவையும், அன்று மலர்ந்தவையுமான மலர்களைத் தூவ, நன்னெறிக்குத் தலைவனின் தம்பி {சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனின் தம்பி லக்ஷ்மணன்} அந்தப் பெருமைக்குரியவனுக்கு {சுக்ரீவனுக்கு}, நெறிமுறைகளில் வல்லவர்கள் கூறிய நூல்களில் உள்ளபடி முடிசூட்டினான். கம்பராமாயணத்தில் லக்ஷ்மணன், சுக்ரீவனுக்கு முடிசூட்டியதாக வருகிறது. வால்மீகியில் லக்ஷ்மணன், ராமனுடன் மலையிலேயே தங்கிவிடுகிறான். முக்கிய வானரர்களே சுக்ரீவனுக்கு முடிசூட்டுகின்றனர்.
சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்த மஹாத்மாக்களான சர்வ வானரபுங்கவர்களும் {சிறந்த வானரர்களும்} மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.(37) ஹரிபுங்கவனான சுக்ரீவன், ராமனின் சொற்களுக்குக் கீழ்ப்படியும் வண்ணம், அங்கதனை ஆரத்தழுவிக்கொண்டு யௌவராஜ்ஜிய அபிஷேகம் செய்து வைத்தான் {அங்கதனை இளவரசனாக முடிசூட்டினான்}.(38) அங்கதனும் அபிஷேகிக்கப்பட்டதும், அவனிடம் இரக்கம் கொண்ட மஹாத்மாக்களான பிலவங்கமர்கள் {தாவிக் குதிப்பவர்களான குரங்குகள்}, "சாது {நன்று}, சாது {நல்லது}" என்று சொல்லி சுக்ரீவனைப் பூஜித்தனர்.(39) அங்கே அவ்வாறு நடந்த போது பிரீதியடைந்த அனைவரும், மஹாத்மாவான ராமனையும், லக்ஷ்மணனையும் மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(40) கிரி குகைகளுடன் இருந்ததும், பதாகைகளாலும், துவஜங்களாலும் சோபித்ததும், ரம்மியமானதுமான கிஷ்கிந்தா நகரம், மகிழ்ச்சிமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான ஜனங்களால் நிறைந்திருந்தது.(41) பிறகு, வீரியவானான கபிவாஹினீபதி {குரங்குப் படைத் தலைவனுமான சுக்ரீவன்}, மஹாத்மாவான ராமனிடம் மஹா அபிஷேகத்தைக் குறித்துத் தெரியப்படுத்தி, பாரியையான ருமையை மீட்டு, திரிதசாதிபனை {தேவர்களின் தலைவனைப்} போல ராஜ்ஜியத்தை அடைந்தான்.(42)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 42
Previous | | Sanskrit | | English | | Next |