Hanuman consoles Tara | Kishkindha-Kanda-Sarga-21 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாலியின் இறுதிச் சடங்கையும், அங்கதனுக்கான பட்டாபிஷேகத்தையும் நடத்துமாறு தாரையிடம் வேண்டி அவளைத் தேற்றிய ஹனுமான்; தாரையின் மறுமொழி...
அப்போது ஹரியூதபனான {குரங்குகள் குழுத்தலைவனான} ஹனுமான், அம்பரத்திலிருந்து விழுந்த தாரையை {வானில் இருந்து வீழ்ந்த நட்சத்திரத்தைப்} போல கீழே விழுந்து கிடந்த தாரையை {பின்வருமாறு சொல்லி} மெதுவாக ஆசுவாசப்படுத்தினான்:(1) "குணதோஷங்களுடன் செயல்படும் ஜந்துக்கள், அதனதன் சுபாசுப கர்மங்களின் {நல்ல தீய செயல்களின்} பலன்களுக்கு ஹேதுவான அனைத்தையும், பிரேதமானதும் தடங்கலின்றி அடைகின்றன[1].(2) சோகத்திற்குரிய நிலையில் இருப்பவளும், சோகப்படத் தகுந்தவளுமான நீ யாருக்காக சோகமடைய முடியும்? {ஏற்கனவே} தீனமான நிலையில் இருக்கும் நீ, எந்த தீனருக்காகப் பரிதபிக்க முடியும்? நீர்க்குமிழிக்கு ஒப்பானதே இந்த தேஹம். இதில் யார், யாருக்காக சோகப்பட முடியும்?(3)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஒவ்வொரு ப்ராணியும் தன் தன் கர்மவாஸனையைப் பற்றித் தெரிந்தும் தெரியாமலும் தான் செய்யும் நன்மை தீமைகளுக்கு நேரிடும் ஸுகதுக்கங்கள் பரலோகத்திலும் தப்பாமல் கூடவே வரப்பெற்று அவைகளை அனுபவிக்கின்றனன். இப்படி ஒவ்வொருவனும் தன் கர்மபலனையே அனுபவிக்கிறானன்றி, ஒருவனால் மற்றொருவனுக்கு நன்மை தீமைகள் உண்டாகின்றன வென்னலாகாது. வாலியும் தன் கர்மத்தினாலேயே ஹதனானானன்றி ஸுக்ரீவனாலன்று" என்றிருக்கிறது.
ஜீவபுத்திரனை {உயிருள்ள மகனைக்} கொண்டவளே, குமாரனான இந்த அங்கதனைப் பார்த்துக் கொள்வாயாக. இனி இவன் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் சிந்திப்பாயாக.(4) பூதங்கள் வருவதும், போவதும் நியதமானவையல்ல {உயிரினங்களின் பிறப்பும், இறப்பும் நிலையானவை அல்ல} என்பதை நீ அறிவாய். எனவே, பண்டிதனானவன் இங்கே லௌகிகத்தில் சுபத்தையே {நன்மையே} செய்ய வேண்டும்.(5) ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான ஹரிக்களும் {குரங்குகளும்} எவரிடம் நம்பிக்கை வைத்து, எவரை அண்டிப் பிழைத்தனரோ, அத்தகையவர் திஷ்டாந்தத்தை {அத்தகைய வாலி விதி வழி முடிவை} அடைந்துவிட்டார்.(6)
நியாயப்படியான அர்த்தங்களை {நோக்கங்களைக்} கடைப்பிடித்து, சாமம் {இன்சொல்}, தானம் {கொடை}, க்ஷமம் {பொறுமை} ஆகியவற்றைப் பின்பற்றி, தர்மத்துடன் வெல்பவர்களின் பூமியை {தர்மத்தில் நிலைநின்று தர்மத்தைக் கைவசஞ்செய்த உத்தமர்களின் உலகத்தை} அடைந்திருக்கும் இத்தகையவருக்காக {இத்தகையவரான வாலிக்காக} நீ சோகப்படுவது தகாது.(7) அநிந்திதே {நிந்தனைக்குத்தகாதவளே / குற்றமற்றவளே}, சர்வ ஹரிசார்தூலர்களும் {குரங்குகளில் புலிகளும்}, உன் புத்திரனான இந்த அங்கதனும், ராஜ்ஜியபதிகளான ஹரிக்களும் {நாட்டின் தலைவர்களான குரங்குகளும்}, ரிக்ஷங்களும் {கரடிகளும்} உன்னில் நாதரை {தங்கள் தலைவரைக்} கொண்டிருக்கிறார்கள்.(8) பாமினி {அழகிய பெண்ணே}, சோகத்தில் மூழ்கியிருக்கும் இவ்விருவரையும் {சுக்ரீவனையும், அங்கதனையும்} மெதுவாகத் தேற்றுவாயாக. உன்னால் பரிகிரஹிக்கப்படும் {பாதுகாக்கப்படும்} இந்த அங்கதன் மேதினியை ஆள்வானாக.(9)
சந்ததி எப்படி {சாஸ்திரப்படி} காணப்பட வேண்டுமோ, தற்போது ராஜாவுக்காகச் எதைச் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. இதுவே காலத்தின் நிச்சயம்[2].(10) ஹரிராஜாவுக்கு சம்ஸ்காரியத்தையும் {குரங்குகளின் மன்னனான வாலிக்கான உத்தரக்கிரியையையும்}, அங்கதனுக்கு அபிஷேகத்தையும் செய்விப்பாயாக. சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கும் புத்திரனைப் பார்த்து சாந்தி {நிம்மதி} அடைவாயாக" {என்றான் ஹனுமான்}.(11)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸந்ததி எந்த ப்ரயோஜனத்திற்காகத் தோற்றியதோ, எந்தக் கார்யம் இப்பொழுது செய்யத்தக்கதோ, அந்த ப்ரேதகார்யங்களையெல்லாம் முன்பு வாலிக்கு அங்கதனைக் கொண்டு செய்விப்பாயாக. இதுவே இப்பொழுதைக்குத் தகுந்ததன்றிச் சோகிப்பது யுக்தமன்று" என்றிருக்கிறது.
அந்தச் சொற்களைக் கேட்டவளும், பர்த்தாவைக் குறித்த விசனத்தால் பீடிக்கப்பட்டிருந்தவளுமான அந்த தாரை, {ஹனுமானின்} அங்கே நின்றிருந்த ஹனூமந்தனிடம் மறுமொழியாக {இதைச்} சொன்னாள்:(12) "அங்கதனுக்கு ஒப்பான ரூபத்தில் நூறு புத்திரர்கள் ஒரு புறமிருந்தாலும், தாக்கிக் கொல்லப்பட்ட இந்த வீரரின் அங்கங்களைத் தழுவுவதே சிறந்தது[3].(13) நானோ, அங்கதனோ ஹரிராஜ்ஜியத்திற்கு {குரங்குகளின் அரசில்} யாருமல்லர். இவனது பித்ருவ்யரே {அங்கதனின் சிறிய தகப்பனாரான சுக்ரீவரே} சர்வ காரியங்களிலும் அணுக்கமானவர்.(14)
[3] தர்மாலயப் பதிப்பில், "அங்கதனுக்கு நிகராகிய புதல்வர்களில் நூறும் ஒரு புறமிருக்கட்டும்; இறந்த இந்த உத்தம கணவருடைய உடலைப் பற்றியிருத்தல் எதற்கும் மேம்பட்டது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்கதனைப் போல் குணமுடைய நூறு பிள்ளைகள் ஒரு தட்டில் இருக்கட்டும். ஹதனாகிய இவ்வீரனுடைய அங்கத்தை ஆலிங்கனஞ் செய்வதும் ஒரு தட்டிலிருக்கட்டும். எனக்கு என்னவோ! ஹதனாகிய இவ்வீரனுடைய அங்கத்தை ஆலிங்கனஞ் செய்வதே மேலாயிருக்கின்றது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அங்கதன் போன்ற ஆயிரம் பிள்ளைகளைக் காண்பதைவிட வானரர்சீமானான என்னாயகர் திருமேனியைத் தழுவி மகிழ்ந்திருப்பதே மிகச் சிறந்தது" என்றிருக்கிறது.
ஹனூமனே, அங்கதனைக் குறித்த இவ்வகை புத்தியில் நம்பிக்கை வைப்பது தகாது. ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, புத்திரனுக்குப் பிதாவே பந்து; மாதாவல்ல {மகனுக்குத் தந்தையே உறவு; அன்னையல்ல}.(15) எனக்கு இங்கேயோ {இம்மையிலோ}, வேறு எங்கேயோ {மறுமையிலோ} ஹரிராஜாவின் {குரங்குகளின் மன்னரான வாலியின்} ஆதரவை {வாலியைப் பின்தொடர்வதைத்} தவிர மிகத் தகுந்தது வேறேதுமில்லை. பாராமுகமாக இருந்தும் கொல்லப்பட்ட வீரரால் {வாலியால்} சேவிக்கப்படும் இந்த சயனமே {படுக்கையை} நான் சேவிக்கத் தகுந்தது" {என்றாள் தாரை}.(16)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 21ல் உள்ள சுலோகங்கள்: 16
Previous | | Sanskrit | | English | | Next |