Cremation of Vali | Kishkindha-Kanda-Sarga-25 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விதியைக் குறித்தும், காலத்தைக் குறித்தும் தாரையிடம் சொன்ன ராமன்; ஈமச்சடங்குகளுக்கான ஆயத்தம்; அங்கதன் மற்றும் குரங்குகளின் துக்கம்; ஈமச்சடங்குகள் நிறைவேற்றம்...
இலக்ஷ்மணன் சகிதனாக சமான சோகத்துடன் கூடிய அந்த காகுத்ஸ்தன் {ராமன்}, சுக்ரீவனும், அங்கதனும், தாரையும் சாந்தமடைவதற்காக இதைச் சொன்னான்:(1) "சோகத்தில் பரிதபிப்பதால் மரித்தவனுக்கு நல்லருள் ஏதும் கிட்டுவதில்லை. இதில் ஆக வேண்டிய காரியத்தை ஏற்பாடு செய்வதே தகுந்தது.(2) உலகவிருத்தம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள். காலம் கடந்தால் சிறு கர்மத்தையும் உபாசிப்பது சாத்தியமற்றதாகும்.(3)
உலகில் நியதியே {முறைமை / ஒழுக்கவிதியே அனைத்திற்கும் முக்கிய} காரணமாகும். நியதியே கர்மசாதனம் {முறைமையே செயல்பாட்டுக்கான கருவி}. இம்மையில் சர்வ பூதங்களின் நியோகத்திலும் நியதியே {உயிரினங்கள் அனைத்தின் கடமைகளிலும் முறைமையே} காரணமாகிறது.(4) எவருடைய நியோகத்திலும் {கடமையிலும்}, வேறு எவரும் கர்த்தாவாகவோ {அவற்றை நடத்துபவனாகவோ}, ஈசுவரனாகவோ {கட்டுப்படுத்துபவனாகவோ} முடியாது. உலகங்களின் ஸ்வபாவச் செயல்பாடுகளில் அதனதன் காலமே முக்கியமாகும்.(5) காலத்தை காலமே கடக்காது. காலத்தை {கூட்டியோ, குறைத்தோ} மீறவும் செய்யாது. ஸ்வபாவத்தை {இயல்பை} அடையும் எதுவும் {காலத்தை அனுபவிக்காமல்} தாண்டிச் செல்லாது.(6) காலத்திற்கு பந்துத்வம் {வேண்டியவரோ, வேண்டாதவரோ} கிடையாது; ஆத்மவசப்படுவதற்கு ஹேதுவான பராக்கிரமும் கிடையாது; மித்ர {நட்பு}, ஞாதி {உறவு} சம்பந்தத்திற்கான காரணமும் கிடையாது.(7) ஆனால் நன்றாகப் பார்ப்பவனால், காலத்தின் பரிணாமத்தையும், தர்மம், அர்த்தம், காமம் ஆகியன காலக்கிரமத்தில் சமாஹிதமடைவதையும் {காலத்திற்கேற்றாற்போல அறம், பொருள், இன்பங்கள் அடையப்படுவதையும்} காணமுடியும்.(8)
பிலவகேஷ்வரனான வாலி, இங்கிருந்து {இம்மையில் இருந்து மறுமைக்குச்} சென்று, தன் இயல்பை அடைந்து, சாம, தான அர்த்தங்களின் ஸம்யோகத்தால் {நல்லுறவு, கொடை ஆகியவற்றுடைய தன்மைகளின் தொடர்புகளால்} உண்டான பவித்ரமான சாதனைகளின் பலனை அடைவான்.(9) பிராணன்களை முற்றாக ரக்ஷிக்காத {உயிரை துச்சமாக மதித்த} அந்த மஹாத்மா {வாலி}, ஸ்வதர்மத்தின் சம்யோகத்தால் {கடமையின் சேர்க்கையால்} ஸ்வர்க்கத்தை அடைவான்.(10) ஹரியூதபன் {குரங்குக் குழு தலைவனான வாலி}, எதை அடைந்தானோ, அந்த நியதி {முறைமை} மேன்மையானது. எனவே, பரிதபித்தது போதும். பிராப்தக காலம் உபாசிக்கப்பட வேண்டும் {காலத்திற்கேற்ற காரியங்களைச் செய்ய வேண்டும்}" {என்றான் ராமன்}.(11)
இராமனுடைய சொற்களின் முடிவில், பகைவீரரைக் கொல்பவனான லக்ஷ்மணன், உணர்வற்றுக் கிடந்த சுக்ரீவனிடம் {பின்வரும்} நயமான வாக்கியங்களைச் சொன்னான்:(12) "சுக்ரீவா, தாரை, அங்கதன் சகிதனாக நீ இவனுக்கு {வாலிக்குச்} செய்ய வேண்டிய பிரேத காரியங்களை நடத்துவாயாக. வாலியை தகனம் செய்வாயாக.(13) திவ்ய சந்தனத்தாலான காய்ந்த காஷ்டைகள் {விறகுகள்} பலவற்றையும், வாலியின் சம்ஸ்காரத்திற்குரிய காரணப் பொருள்களையும் சேகரிக்க உடனடியாக ஆணையிடுவாயாக.(14) தீனமாக இருக்கும் அங்கதனை ஆசுவாசப்படுத்த வேண்டிய நீ நனவற்றுக் கிடக்கிறாய். பாலத்தனமான {சிறுபிள்ளைத்தனமான} புத்தியை நீ அடையாதே. இந்தப் புரம் {கிஷ்கிந்தை} உன் அதீனத்தில் இருக்கிறது {இந்தக் கிஷ்கிந்தா நகரம் உன்னையே நம்பியே இருக்கிறது}.(15) அங்கதன், மாலைகளையும், விதவிதமான வஸ்திரங்களையும், நெய்யையும், தைலத்தையும் {எண்ணெய்யையும்}, கந்தங்களையும் {வாசனைப் பொருட்களையும்}, இன்னும் வேண்டியவற்றையும் கொண்டு வரட்டும்.(16) தாரா {தாரனே}[1], நீ ஆயத்தமாகி, சிபிகையை {பல்லக்கை} சீக்கிரம் கொண்டு வருவாயாக. துரிதப்படுவதே குணம் பொருந்தியதாகும். விசேஷமாக இந்தக் காலத்தில் அதுவே தகுந்தது.(17) சிபிகை வாகன உசித சமர்த்தர்களும் {பல்லக்கைச் சுமக்கத் தகுந்த திறன்மிக்கவர்களும்}, பிலவகர்களில் {தாவிச் செல்லும் குரங்குகளில்} பலவான்களும் வாலியைச் சுமந்து செல்ல ஆயத்தமாக இருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(18)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படுவது வாலியின் மனைவியான தாரையல்ல; ஆண் குரங்கான தாரன்" என்றிருக்கிறது.
பகைவரை அழிப்பவனான சுமித்ரானந்தவர்தனன் {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான லக்ஷ்மணன்}, சுக்ரீவனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, உடன்பிறந்தோனின் {அண்ணனான ராமனின்} சமீபத்தை அடைந்தான்.(19) இலக்ஷ்மணனின் சொற்களைக் கேட்ட தாரன், பரபரப்பான மனநிலையையும், சிபிகையைக் கொண்டுவரும் உறுதியான மனத்தையும் அடைந்து, சீக்கிரமாக குகைக்குள் பிரவேசித்தான்.(20)
அந்தத் தாரன், சுமப்பதற்கு உசிதமான சூரர்களான வானரர்களை சிபிகை சுமக்கச் செய்து, அதை {பல்லக்கை} எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து சேர்ந்தான்.(21) அந்த சிபிகை, திவ்யமான பத்ராசனத்துடன் {தெய்வீகமான பெரும் அரியணையுடன்} கூடியதும், சியந்தனத்திற்கு {தேருக்கு} ஒப்பானதும், பக்ஷி கர்ம {பறவைகளின் செயல்பாடுகளைக் குறிக்கும்} சித்திரங்களாலும், மரங்களின் சித்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும்,{22} தாக்கும் காலாட்படை வீரர்களின் சித்திரங்கள் பொறித்து முழுமையாக நல்ல முறையில் அமைக்கப்பட்டதும், சித்தர்களின் விமானத்தைப் போன்றதும், காற்று வந்து போவதற்கான சல்லடைக்கண் சாளரங்களுடன் கூடியதும்,{23} தகுந்த முறையில் நன்றாக அமைக்கப்பட்டதும், விசாலமானதும், நல்ல வேலைப்பாட்டுடன் சிற்பிகளால் செய்யப்பட்டதும், மரத்தால் செதுக்கபட்ட பர்வதங்களைக் கொண்டதும், அழகிய கலைநுணுக்கம் மிகுந்ததும்,{24} சிறந்த ஆபரணங்கள், ஹாரங்கள், சித்திர மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், குகையும் {அறைப் பகுதியும்}, ககனமும் {கூரையும்} நன்கு மறைக்கப்பட்டதும், செஞ்சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டதும்,{25} ஏராளமான புஷ்பங்களால் நன்கு மறைக்கப்பட்டதும், தருணாதித்யனின் வர்ணத்துடன் {இளஞ்சூரியனின் நிறத்தில்} பிரகாசிப்பதும், பத்ம {தாமரை மலர்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமாக இருந்தது.(22-26)
இப்படி காணப்பட்ட சிபிகையைக் கண்டு, ராமன், லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான், "வாலி சீக்கிரம் கொண்டு செல்லப்படட்டும். விதிக்கு ஏற்ற பிரேத காரியங்களுக்கான ஏற்பாடுகள் நடக்கட்டும்" {என்றான்}.(27)
அப்போது, அங்கதன் சகிதருடன் கூடிய சுக்ரீவன் கதறி அழுதபடியே வாலியைத் தூக்கி அந்த சிபிகையில் ஏற்றினான்.(28) பிலவகேஷ்வரனும் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனும்}, ராஜனுமான சுக்ரீவன், விதவிதமான அலங்காரங்களில் மாலைகளாலும், வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனும், ஜீவிதம் இழந்தவனுமான வாலியை சிபிகையில் ஏற்றிய பிறகு, {பின்வருமாறு} ஆணையிட்டான்; "ஆரியருக்கு {உயர்ந்தவரான வாலிக்கு} உகந்த ஔர்த்வ தேஹிகம் {சூக்ஷ்ம உடலை மேலே அனுப்பும் உத்தரக்கிரியை} செய்யப்படட்டும்.(29,30) பிலவகர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, விதவிதமான ரத்தினங்களை ஏராளமாக இறைத்தபடியே முன்னேயும், சிபிகை அவர்களுக்குப் பின்னேயும் செல்லட்டும்.(31) புவிராஜர்கள், எவ்வகையிலான விசேஷ ஆடம்பரங்களுடன் காணப்படுவார்களோ, அவ்வகையிலேயே வானரர்கள் தங்கள் தலைவருக்கான சத்காரியங்களை இப்போது செய்யட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(32)
வாலிக்கு அத்தகைய ஔர்த்வ தைஹிகத்தை {உத்தரக்கிரியையை} சீக்கிரமாகச் செய்தபிறகு, கொல்லப்பட்டவனின் பந்துக்களான தாரனும், பிறரும், சர்வ வானரர்களும் அங்கதனைச் சூழ்ந்தபடி அழுது கொண்டே புறப்பட்டுச் சென்றனர்.(33,34அ) அப்போது, அவனது {வாலியின்} வசத்தில் இருந்த அணுக்கர்களான சர்வ வானரீகளும் ஒன்றாகச் சேர்ந்து, "வீரரே, வீரரே" என்று சொல்லி, தங்கள் பிரியத்திற்குரியவனுக்காக அழுது புலம்பினர்.(34ஆ,35அ) கொல்லப்பட்டவனின் பந்துக்களான தாரையும், பிறரும், சர்வ வானரீகளும், கருணை ஏற்படுத்தும் ஸ்வனத்தில் அழுதுகொண்டே பர்த்தாவை {தங்கள் கணவன் வாலியின் உடலைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(35ஆ,36அ) வனாந்தரத்தில் அந்த வானரீகள் அழுத சப்தம் சர்வ வனங்களும், கிரிகளும் அழுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.(36ஆ,37அ)
வனசாரிகளான வானரர்கள் பலரும், கிரியில் இருந்து நதிக்கு வந்து, ஜலத்தால் சூழப்பட்ட யாருமற்ற மணற்திட்டில் சிதையை ஏற்படுத்தினர்.(37ஆ,38அ) அப்போது சர்வ வானரோத்தமர்களும், தங்கள் ஸ்கந்தங்களில் {தோள்களில்} இருந்து சிபிகையை இறக்கி, சோகத்தில் அழுது புரண்டு, ஏகாந்தத்தை {தனிமையை} அனுசரித்து நின்றனர்.(38ஆ,39அ) அப்போது தாரை, சிபிகையின் சயனத்தலத்தில் பதியை {கணவனைக்} கண்டு பெரும் துக்கமடைந்து, அவனது சிரத்தை {தலையை} மடியில் ஏற்றி {பின்வருமாறு} அழுது புலம்பினாள்:(39ஆ,40அ) "ஹா, வானர மஹாராஜரே, ஹா என் நாதரே, ஹா மஹத்தான தகுதி படைத்தவரே, மஹாபாஹுவே, ஹா என் பிரியரே, என்னைப் பாரும். உமக்கான சோகத்தால் பீடிக்கப்பட்ட இந்த ஜனத்தை ஏன் பாராமல் இருக்கிறீர்?(40ஆ,41) மானதரே {கௌரவங்களை அளிப்பவரே}, உயிர் போனாலும், மறையும் அர்க்கனுக்கு {சூரியனுக்கு} சமமான வர்ணத்துடன் கூடிய உமது முகம் ஜீவித்திருப்பதைப் போலவே பிரகாசமாகத் தோன்றுகிறது.(42)
வானரரே, எவன் போரில் ஒரு கணையால் எங்கள் அனைவரையும் விதவையாக்கினானோ அந்த ராமனின் ரூபத்தில் காலன் உம்மை இழுத்துச் செல்கிறான்.(43) இராஜேந்திரரே, அபிலவகர்களான {தாவி குதிக்க முடியாத} உமது வானரீகளான இவர்கள், இதோ உம்மைச் சுமந்து வரும் வழியில் நடந்து வருகின்றனர். இவர்களை ஏன் நீர் கருத்தில் கொள்ளவில்லை? சந்திர ஒளியுடன் கூடிய முகம்படைத்த பாரியைகளான {உமது மனைவிகளான} இவர்கள், உமக்கு இஷ்டமானவர்கள் இல்லையா?(44,45அ) பிலவகேஷ்வரரான சுக்ரீவரை இப்போது ஏன் பாராதிருக்கிறீர்? இராஜரே, தாரனும், பிறரும், உமது அமைச்சர்களான இவர்கள் அனைவரும், இந்தப் புரத்தில் {நகரத்தில்} வசிக்கும் ஜனங்களும் சூழ்ந்து வந்து காத்திருக்கின்றனர்.(45ஆ,46) அரிந்தமரே, இந்த அமைச்சர்களுக்கு எப்படி உசிதமோ அப்படி விடை கொடுத்து அனுப்புவீராக. பிறகு, மதன உத்கடத்துடன் {மன்மதனால் தூண்டப்பட்ட உணர்வுடன்} நாங்கள் அனைவரும் வனங்களில் கிரீடித்திருப்போம் {விளையாடிக் கொண்டிருப்போம்}[2]" {என்றாள் தாரை}.(47)
[2] தர்மாலயப் பதிப்பில், "இந்த வானரர்களை முறைப்படி விடைகொடுத்தனுப்பிவிடும். வனங்களில் அன்பால் பெருமை பெற்று விளங்கிய நாங்களெல்லோரும் இவ்விடத்திலேயே இன்பமாய்க் காலங்கழித்துவிடுகிறோம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவ்வானரர்களனைவரையும் அவரவர்க்குத் தகுந்தபடி செலவுகொடுத்தனுப்புவாயாக. அனந்தரம் எல்லோரும் இஷ்டப்படி மன்மதக்ரீடைகளில் முயன்று விளையாடலாம்" என்றிருக்கிறது.
பதி {கணவன்} குறித்த சோகத்தில் மூழ்கி இவ்வாறு தாரை புலம்பிக் கொண்டிருந்தபோது, சோகத்தால் களைத்துப்போன வானரீகள் அவளைத் தூக்கத் தொடங்கினர்.(48) அப்போது சுக்ரீவனுடன் கூடிய அங்கதன் சோகத்தில் முழுமையாக மூழ்கிய இந்திரியங்களுடன் அழுதுகொண்டே பிதாவை சிதையில் ஏற்றினான்.(49) பிறகு, கலங்கிய இந்திரியங்களுடன் கூடியவன் {அங்கதன்}, நெடும்பாதையில் பயணிக்கும் பிதாவை விதிப்படி அக்னியில் தத்தம் செய்துவிட்டு, அபசவ்யமாகச் சுற்றினான்[3].(50) பிலவகரிஷபர்கள் {தாவும் குரங்குகளில் காளைகள்} அந்த வாலிக்கு விதிப்படியான சம்ஸ்கிருத்யம் {நற்காரியத்தைச்} செய்துவிட்டு, நீரைக் காணிக்கை அளிப்பதற்காக, சுபஜலம் கொண்ட மங்கல நதியை அடைந்தனர்.(51)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அபசவ்யம் என்ற சொல், மறுவழி என்ற பொருளைக் கொண்டதாகும். பூணூலை வலது தோளில் இட்டுக் கொள்வதாகும். இஃது ஈமச்சடங்குகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. பொதுவாக இந்துக்களின் பூணூல் அவர்களின் இடது தோளில் தொங்குவதே சவ்யம் என்றழைக்கப்படுகிறது. ஈமசடங்குகளில் இது வலது தோளுக்கு மாற்றப்படுகிறது. கோவில்களில் சிலையை வலப்புறத்தில் கொண்டு அவற்றைச் சுற்றுவது வழக்கம் இது சவ்ய பிரதக்ஷிணம் என்றழைக்கப்படுகிறது. ஈமச்சடங்குகளில் மறுவழியில் சுற்றுவது அபசவ்ய பிரதக்ஷிணம் என்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
அப்போது சுக்ரீவன், தாரை சகிதரான அந்த வானரர்கள் அங்கே ஒன்றாகக் கூடி, அங்கதனை முன்னிட்டுக் கொண்டு ஜலத்தைக் காணிக்கையளித்தனர்.(52) மஹாபலனான காகுத்ஸ்தன், தீன நிலையில் இருந்த சுக்ரீவனுக்கு சமமான சோகத்தை அடைந்து, தீனமும் அடைந்து பிரேத காரியங்களைச் செய்தான்.(53) அப்போது உயர்ந்த பௌருஷத்தையும், பிரகாசத்தையும் கொண்டவனும், இக்ஷ்வாகுக்களில் சிறந்தவனின் கணையால் கொல்லப்பட்டவனும், அக்னிக்கு சமமான ஒளியைக் கொண்டவனுமான அந்த வாலியை {சிதையில்} தகனம் செய்துவிட்டு, லக்ஷ்மணனுடன் கூடியவனும், ஒளிர்ந்து கொண்டிருந்தவனுமான ராமனை அந்த ஹரி {குரங்கான சுக்ரீவன்} நெருங்கினான்.(54)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 25ல் உள்ள சுலோகங்கள்: 54
Previous | | Sanskrit | | English | | Next |