The reproach of Vali | Kishkindha-Kanda-Sarga-17 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனை வஞ்சகம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டி, பல்வேறு வகைகளில் அவனைப் பழித்த வாலி...
போரில் கடுமைமிக்கவனான வாலி, ராமனின் சரத்தால் தாக்கப்பட்டபோது, வெட்டப்பட்ட மரத்தைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தான்.(1) தப்த காஞ்சன பூஷணனான அவன் {புடம்போட்ட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வாலி}, கயிறுகளில் இருந்து விடுபட்ட தேவராஜனின் துவஜத்தை {இந்திரனின் கொடியைப்} போல சர்வ அங்கங்களும் பூமியில் படக் கீழே விழுந்தான்.(2) ஹரிரிக்ஷகணேஷ்வரன் {குரங்கு, கரடிக் கூட்டங்களின் தலைவனான வாலி} பூமியில் விழுந்தபோது, மேதினி, சந்திரனை இழந்த வானத்தைப் போலப் பிரகாசமற்றிருந்தாள்.(3)
பூமியில் விழுந்தாலும் அந்த மஹாத்மாவின் தேஹம் அழகையோ, பிராணனையோ, தேஜஸ்ஸையோ, பராக்கிரமத்தையோ கைவிடாதிருந்தது.(4) சக்ரனால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்ட சிறப்புவாய்ந்த மாலையானது, அந்த ஹரிமுக்யனின் {குரங்குகள் தலைவனான வாலியின்} பிராணனையும், தேஜஸ்ஸையும், அழகையும் தக்க வைத்துக் கொண்டிருந்தது.(5) ஹரியூதபனான அந்த வீரன் {குரங்குகள் கூட்டத்தின் குழுத்தலைவனும், வீரமிக்கவனுமான வாலி}, அந்த ஹேம மாலையை அணிந்திருந்ததால், முனைகளைச் சுற்றிலும் சந்தியாகால நிறம் கொண்ட நீருண்ட மேகத்தைப் போலத் தெரிந்தான்.(6) கீழே விழுந்தாலும் அவனது மாலையும், தேகமும், மர்மத்தைப் பிளந்த அந்த சரத்துடன் சேர்ந்து மூன்று பாகங்களாக {தனித்தனியாகப்} பிரகாசித்துக் கொண்டிருந்தன.(7)
ஸ்வர்க்க மார்க்க பிரபாவம் கொண்ட ராம பாண ஆசனத்தில் {ராமனின் வில்லில் கணை பொருத்தும் நாண்கயிற்றில்} இருந்து ஏவப்பட்ட அந்த அஸ்திரம், அந்த வீரனுக்கு பரமகதியை உண்டாக்கியது.(8) இலக்ஷ்மணன் பின்தொடர வந்த ராமன், தழல்கள் இல்லாத அனலனை {நெருப்பைப்} போலவும், புண்ணியம் தீர்ந்து தேவலோகத்தில் இருந்து விழுந்த யயாதியைப் போலவும்[1], யுகாந்தத்தில் {யுக முடிவில்} பூமியில் விழுந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும், போரில் இவ்வாறு விழுந்தவனும், வெல்லப்பட முடியாத மஹேந்திரனைப் போன்றவனும், தாங்கிக் கொள்ள முடியாத உபேந்திரனைப் போன்றவனும், மஹேந்திரனின் புத்திரனும், ஹேம மாலை {பொன்னாரம்} பூண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், மஹாபாஹுவும், பிரகாசிக்கும் முகத்தைக் கொண்டவனும், ஹரிலோசனனுமான {பச்சை நிறக் கண்களைக் கொண்டவனுமான} அந்த வாலியைக் கண்டு நெருங்கினான்.(9-12அ) அந்த வீரன், தழல்களற்ற நெருப்பைப் போல விழுந்ததை மெதுவாகக் கண்டு, அந்த வீரனைக் கௌரவிப்பதற்காக மஹாவீரர்களும், உடன்பிறந்தவர்களுமான அந்த ராமலக்ஷ்மணர்கள் வந்தனர்.(12ஆ,13)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "யயாதி, புகழ்மிக்க மன்னனான நஹுஷனின் மகனாவான். கடுந்தவத்திற்குப் பின்னர் அவன் சொர்க்கத்தை அடைந்தான். தற்புகழ்ச்சி செய்து கொண்டதால் அவன் சொர்க்கத்திலிருந்து இந்திரனால் தள்ளப்பட்டான். வாலியும் அதே போலத் தன் பலத்தில் கொண்ட தற்பெருமையால் இப்போது விழுந்தான்" என்றிருக்கிறது. யயாதியின் கதை மஹாபாரதம், ஆதிபர்வம் 75 முதல் 93ம் அத்தியாயம் வரையிலும், மீண்டும் உத்யோக பர்வம் 106 முதல் 122ம் அத்தியாயம் வரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தாக்குதலில் நனவை இழந்து, அற்ப தேஜஸ்ஸுடன் பூமியில் கிடந்த அந்த வாலி, ரணகர்விதனான {போரில் செருக்குள்ளவனான} அந்த ராகவனையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும் கண்டு, அர்த்தம் பொதிந்த சொற்களில், வசைப் பாங்குடனும், மதிப்புடனும் கூடியவையும், தர்மத்திற்கு இணக்கமானவையுமான {பின்வருமாறு} வாக்கியங்களை கர்வத்துடன் சொன்னான்:(14,15) "நராதிபதியின் {மனிதர்களின் தலைவனான தசரதரின்} புத்திரனும், புகழ்பெற்றவனும், பிரிய தரிசனம் தருபவனுமான நீ, பாராமுகமாக இருந்தவனை இவ்வாறு வதம் செய்ததில் என்ன குணத்தை {புண்ணியத்தை} அடைந்துவிட்டாய்? யுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த எனக்கு, எவ்வகை மரணத்தை நீ அளித்துவிட்டாய்?(16) இராமன், நற்குலத்தில் பிறந்தவன், வலிமையைக் கொடையாகக் கொண்டவன், தேஜஸ்வி, விரதங்களை நோற்பவன், கருணையுள்ளவன், பிரஜைகளின் ஹிதத்தை {மக்களின் நன்மையை} எப்போதும் விரும்புகிறவன், பரிவுடையவன், மஹா உற்சாகன், சமயத்தை அறிந்தவன், திட விரதன், புகழ்பெற்றவன் என்றிவ்வாறே புவியில் உள்ள சர்வ பூதங்களும் {உலகின் உயிரினங்கள் அனைத்தும்} சொல்கின்றன.(17,18)
இராஜாவே, தமம் {புலனடக்கம்}, ஷமம் {மன அடக்கம்}, க்ஷமம் {பொறுமை}, தர்மம் {அறம்}, திருதி {மனோவுறுதி}, சத்தியம் {வாய்மை}, பராக்கிரமம் {ஆற்றல்}, அபகாரிகளின் தண்டம் {குற்றம் இழைத்தவர்களை தண்டித்தல்} ஆகியவையே பார்த்திபர்களின் குணங்களாகும்.(19) அந்த {ராஜ} குணங்களையும், உன் உன்னத வம்சத்தையும் கருத்தில் கொண்டதாலேயே தாரை தடுத்தும் நான் சுக்ரீவனை எதிர்கொண்டேன்.(20) புலப்படாமல் இருந்த நீ, அந்நியனை {வேறொருவனை} எதிர்கொள்பவனும், கவனிக்காதவனுமான எனக்குத் தீங்கிழைத்தது தகாது. இதுவே என் புத்தியில் தோன்றுகிறது {இதுவே என் கருத்து}.(21) நீ சுயத்தை அழித்துக் கொண்டவன் என்றும், தர்ம துவஜத்துடன் {தர்மக் கொடியுடன்} கூடிய அதார்மிகன் என்றும், பாபநடத்தை கொண்டவன் என்றும், புற்களால் மறைக்கப்பட்ட கிணற்றைப் போன்றவன் என்றும் நான் அறிந்தேனில்லை.(22) சாம்பலால் மறைக்கப்பட்ட பாவகனை {நெருப்பைப்} போல, தர்மப் போர்வையில் மறைந்து, நல்லோன் வேஷம் தரித்த பாபி என்றும் உன்னை நான் அறிந்தேனில்லை.(23)
உன் நாட்டிலோ, புரத்திலோ {நகரிலோ} ஒருபோதும் நான் பாபம் செய்தவனல்ல; உன்னையும் பழித்தவனல்ல. {எனவே}, குற்றமற்றவனும், நித்தியம் பழங்களையும், கிழங்குகளையும் உண்பவனும், வனத்தில் தனியாகத் திரியும் வானரனும், {உன்னுடன்} யுத்தத்தில் ஈடுபடாதவனும், அன்னியனை {வேறொருவனை} எதிர்கொண்டிருப்பவனுமான என்னை எதற்காக நீ ஹிம்சித்தாய்?[2](24,25) இராஜாவே, பிரிய தரிசனந் தருபவனாகவும், நராதிபதியின் புத்திரனாகவும் புகழ்பெற்றவனான நீ, உன் தர்மத்திற்கு இணக்கமான லிங்கத்துடனே {குறியீடுகளுடனே} இப்போதும் காட்சியளிக்கிறாய்.(26) க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவனும், கல்விமானும், {நன்மை தீமைகளில்} கருத்து மயக்கம் தெளிந்தவனும், தர்மலிங்கம் போர்த்தியவனுமான {தர்மக் குறியீடுகளைப் பூண்டவனுமான} எவன் {இத்தகைய} குரூர கர்மத்தைச் செய்வான்?(27) இராமா, ராகவ குலத்தில் பிறந்து, தர்மவான் என்று புகழ்பெற்றிருந்தாலும், பவ்யமற்றவனான நீ பவ்ய ரூபத்தில் திரிவது என்ன அர்த்தம்?(28)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நீ குற்றமற்றவர்களைக் கொல்பவனல்ல, ஆனாலும், நீ வரும்வரை நான் அறியாத வகையில் என் செயல்களில் ஏதோ குற்றம் இருப்பதால் என்னைக் கொன்றிருக்கிறாய் என்பது மறைபொருள்" என்றிருக்கிறது.
இராஜாவே, சாமம் {இணக்கம்}, தானம், க்ஷமம் {பொறுமை}, தர்மம், சத்தியம், திருதி {மனோவுறுதி}, பராக்கிரமம் {ஆற்றல்}, அபகாரிகளின் தண்டம் {குற்றம் இழைத்தவர்களை தண்டித்தல்} ஆகியவை பார்த்திபர்களின் குணங்கள்[3].(29) இராமா, கிழங்குகளையும், பழங்களையும் உண்பவர்களான நாங்கள், வனத்தில் திரியும் மிருகங்கள் ஆவோம். இஃது எங்கள் இயல்பு. நீயோ புருஷன் {மனிதன்}; நரேஷ்வரன் {மனிதர்களின் தலைவன்}.(30)
[3] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸாமம், தானம், பேதம், தண்டம் என்ற நான்கு உபாயங்களில் முதல் உபாயமாகிய ஸாமம், அதாவது சமாதானம் செய்து கொண்டுவிடல். மேற்கண்ட உபாயங்களில் இரண்டாவது உபாயமாகிய தானமென்பது, அதாவது லஞ்சம் கொடுத்து சத்ருவை வசமாக்கிக் கொள்ளுதல். க்ஷமை என்பது நம்மாலாவது ஒன்றுமில்லையென வந்ததை அனுபவித்துப் பொறுத்திருத்தல்" என்றிருக்கிறது.
பூமி, ஹிரண்யம் {தங்கம்}, வெள்ளி ஆகியவை அழிவுக்கான காரணங்களாகும். இவ்வாறிருக்க என் வனத்திலோ, பழங்களிலோ உனக்கு என்ன லோபம் {பேராசை}?(31) நயம் {நேர்மை} விநயம் {இணக்கம்}, நிக்ரஹம் {அழித்தல்} அனுக்ரஹம் {அருள்தல்} என்ற இரட்டைகள் கலவாததே ராஜவிருத்தமாகும் {அரசநடையாகும்}. நிருபர்கள் காமவிருத்தம் கொள்வதில்லை {மன்னர்கள் ஆசையின் வழி நடப்பதில்லை}.(32) நீயோ காமத்தை {ஆசையைப்} பிரதானமாகக் கொண்டவனாகவும், கோபம் கொண்டவனாகவும், தடுமாற்றம் கொண்டவனாகவும், ராஜவிருத்தங்களைக் கலந்து செய்பவனாகவும், சராசன பராயணனாகவும் {கணை பொருத்தும் இடத்தை [நாண்கயிற்றைப்] பயன்படுத்தும் வேட்டைக்காரனாகவும்} இருக்கிறாய்.(33)
மனுஜேஷ்வரா, உனக்கு தர்மத்தில் அர்ப்பணிப்பு இல்லை. அர்த்தத்தில் உறுதியான புத்தியில்லை. இந்திரியங்களால் ஈர்க்கப்பட்ட காம விருத்தத்தின்படி {மனம் போன போக்கில்} செயல்படுகிறாய்[4].(34) காகுத்ஸ்தா, அபராதம் செய்யாதவனான என்னை இதோ பாணத்தால் கொன்று, இழிசெயல் செய்துவிட்டு நல்லோர் மத்தியில் என்ன சொல்லப் போகிறாய்?(35) இராஜாவைக் கொன்றவன், பிராமணனைக் கொன்றவன், பசுவைக் கொன்றவன், பிராணிகளை வதம் செய்தவன், சோரன் {கள்வன்}, நாஸ்திகன், பரிவேத்தன் {அண்ணன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே திருமணம் செய்து கொள்பவன்} ஆகியோர் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள்.(36) சூசகன் {கோள் பேசுபவன்}, கதர்யன் {கருமி}, மித்ரக்னன் {நண்பனைக் கொல்பவன்}, குருதல்பகன் {குருவின் படுக்கையில் நுழைபவன் / குருவின் மனைவியை அபகரிப்பவன்} போன்றோர் பாப ஆத்மாக்களின் உலகங்களுக்குச் செல்வார்கள்.(37)
[4] வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்துஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ- கம்பராமாயணம் 4026ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: {நீ செய்த செயல்} வீரமன்று; விதியும் அன்று, மெய்ம்மைச் சார்ந்ததும் அன்று. உன் நிலத்தில் என் உடல் சுமையானதும் அன்று, {உனக்கும் எனக்கும்} பகையுமன்று, {அவ்வாறிருக்க} பண்பு அழிந்து இரக்கமற்று நீ இச்செயலைச் செய்தது எதற்காக?
என் சருமம் {தோல்} தரிக்கத்தக்கதல்ல, ரோமங்களும், அஸ்தியும் {எலும்புகளும்} நல்லோருக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. உன் விதமான தர்மசாரிகளுக்கு மாமிசமும் பக்ஷிக்கத்தக்கதல்ல[5].(38) இராகவா, பஞ்சநகம் {ஐந்து நகங்களைக்} கொண்டவைகளில், சல்யகம் {முள்ளம்பன்றி}, சுவாவிதம் {காட்டுப்பன்றி}, கோதம் {உடும்பு}, சசம் {முயல்}, ஐந்தாவதாக கூர்மம் {ஆமை} ஆகிய ஐந்தும் {ஐந்து விலங்குகளும்} பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணத்தக்கவை.(39) இராஜாவே, உணர்வுள்ள மக்கள் என் சருமத்தையும், எலும்புகளையும் தொடமாட்டார்கள். மாமிசத்தை பக்ஷிக்கமாட்டார்கள், பஞ்சநகனான நான் ஹதம் செய்யப்பட்டிருக்கிறேன் {கொல்லப்படத் தாக்கப்பட்டிருக்கிறேன்}.(40)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புலித்தோல் விரிப்பாகவும், அதன் பற்கள் ஆரங்களில் பயன்படுத்தக்கூடியவையாகவும், அதன் உடல் பகுதிகள் மருத்துவத் தன்மை வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. எனவே புலிகள் வேட்டையாடப்படுகின்றன. அதேபோல் யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் போன்ற பல விலங்குகள் தோல், மயிர், எலும்புகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. ஆனால் குரங்குகள் அவ்வாறு உணவுக்காகவோ, உடைக்காகவோ, விளையாட்டுக்காகவோ வேட்டையாடப்படுவதில்லை என்பதை வாலி இங்கே குறிப்பிடுகிறான்" என்றிருக்கிறது.
சர்வஜ்ஞையான {அனைத்தையும் அறிந்தவளான} தாரை, சத்திய ஹித {உண்மையில் நன்மை பயக்கும்} வாக்கியங்களை என்னிடம் சொன்னாள். அதையும் மீறியே காலவசப்பட்டவனாக வந்தேன்.(41) காகுத்ஸ்தா, உன்னை நாதனாக அடைந்த வசுந்தரை {பூமி}, தர்மபதியில்லாத {அறத்துடன் கூடிய கணவனில்லாத} சம்பூர்ண சீலமுடைய {நல்லொழுக்கம் நிறைந்த} பெண்ணைப் போல, நாதனற்றவளாக இருக்கிறாள்[6].(42) வஞ்சகனும், நேர்மையற்றவனும், அற்பமானவனும், போலிப் பணிவு கொண்டவனும், பாபியுமான நீ, மஹாத்மாவான தசரதருக்கு எப்படி பிறந்தாய்?(43) நன்னடத்தையெனும் சங்கிலியை நொறுக்கி, நல்லோரின் தர்மவரம்புகளை மீறி, தர்மத்தின் அங்குசத்தை விலக்கிவிட்ட {பாகனை மீறிய} ராமன் எனும் ஹஸ்தியால் {யானையால்} நான் கொல்லப்பட்டேன்[7].(44) நல்லோரால் நிந்திக்கப்படும் இவ்வகை செயலைச் செய்துவிட்டு, நல்லோருடன் கூடும்போது {நல்லோரைச் சந்திக்கும்போது} இஃது அசுபமானது, யுக்தமன்று {தகுதியற்றது} என்று சொல்வாயா?(45)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னனே நிலத்தின் தலைவனாவான். விஷ்ணு, பூதேவியின் கணவனாவான். இங்கே ராமன் மன்னனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறான். "நேர்மையற்ற கணவனைப் போலல்லாமல், நிலத்தின் தலைவனாகவும், நல்ல கணவனாகவும் அனைத்துப் பண்புகளைக் கொண்டிருப்பவன் நிலத்தை உண்மையாக பாதுகாப்பான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
[7] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மதங்கொண்ட யானை கட்டுக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஸாதுவான யானைகளின் மர்யாதையைக் கடந்து மாவெட்டியையும் பொருள் செய்யாமல் அகப்பட்டவர்களை அடிப்பது போல், நீ நன்னடத்தையைத் துறந்து அபராதஞ் செய்தவர்களை மாத்ரமே தண்டிக்க வேண்டுமென்னும் ஸாதுக்களது மர்யாதையைக் கடந்து, தர்மத்திற்குட்படாமல் என்னைக் கொன்றனை" என்றிருக்கிறது.
இராமா, உதாசீனப்படுத்திய எங்களிடம் எவ்வகை விக்கிரமத்தைக் காட்டினாயோ, அத்தகைய விக்கிரமத்தை உன் அபகாரிகளிடமும் {உனக்குத் தீங்கிழைத்த ராவணனிடமும்} நான் பார்க்கவில்லை[8].(46) நிருபாத்மஜா {மன்னர்மகனே}, யுத்தத்தில் புலப்படுபவனாக நீ என்னுடன் யுத்தம் செய்திருந்தால், என்னால் கொல்லப்பட்டு இப்போதே வைவஸ்வத தேவனை {யமனைப்} பார்த்திருப்பாய்.(47) பானவசமடைந்து {குடிமயக்கத்தில்} நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் நரனை {தீண்டும்} பன்னகத்தை {பாம்பைப்} போலப் போரில் புலப்படாதவனான நீ, வெல்லப்பட முடியாதவனான என்னைக் கொன்றுவிட்டாய்.(48)
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விக்ரமம் என்ற சொல்லுக்கு வெற்றி என்றும், நடை என்றும் இரு பொருள்கள் உள்ளன. இங்கே ராமனின் நடை சொல்லப்படுகிறது" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
சுக்ரீவனின் பிரிய காமத்தை {விருப்பத்திற்குரிய ஆசையை} நிறைவேற்றும் வகையில், உன்னால் நான் எதற்காக கொல்லப்பட்டேனோ அந்த அர்த்தத்தை {பொருளை / ராவணனை} நீ பூர்வத்தில் என்னிடமே வேண்டியிருந்தால், நான் ஒரே நாளில் உன் பாரியையை அபகரித்த துராத்மாவான ராக்ஷசன் ராவணனை போரில் கொல்லாமல், கண்டத்தில் கட்டி {கழுத்தில் சுருக்கிட்டு இழுத்து} வந்து உன்னிடம் கொடுத்திருப்பேன். மைதிலியையும் அவ்வாறே கொண்டு வந்திருப்பேன்.(49,50) சாகரத்தின் நீரிலோ, பாதாளத்திலோ மைதிலியை வைத்திருந்தாலும், உன் ஆணையின் பேரில் சுவேத அசுவத்தைப் போல நான் கொண்டு வந்திருப்பேன்[9](51)
[9] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதாவது, அசுரர்களாகிய மதுகைடபர்களால் வெள்ளைக் குதிரை ரூபமாக்கி திருடிப் போகப்பட்டதை, விஷ்ணு பகவான் ஹயக்ரீவ உருவங்கொண்டு மீட்டி வந்தது எவ்விதமோ அவ்விதமே" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸ்வேதாஷ்வதர உபநிஷத் என்று ஓர் உபநிஷத் வெள்ளை பெண்குதிரையின் வடிவில் இருந்தபோது, அசுரர்களான மதுகைடபர்கள் அதை அபகரித்தனர். பின்னர் விஷ்ணு தன் மற்றொரு அவதாரமான ஹயக்ரீவனாக அதை மீட்டான்" என்றிருக்கிறது.
நான் சொர்க்கத்திற்குச் சென்றதும் சுக்ரீவன் {ராஜ்ஜியத்தை} அடைவது யுக்தமானது {பொருத்தமானது / நியாயமானது}. நான் ரணத்தில் உன்னால் அதர்மமாகக் கொல்லப்பட்டதோ யுக்தமன்று {பொருத்தமற்றது / அநியாயமாகும்}.(52) காலத்தின் விதியை உலகம் இவ்விதமே ஏற்கிறது. மறைந்திருந்து நீ செய்தது சரியென்றால், பொருத்தமான மறுமொழியைக் கவனமாகச் சிந்திப்பாயாக" {என்றான் வாலி}.(53)
சரம் துளைத்த வேதனையில் இருந்தவனும், மஹாத்மாவுமான வானரராஜன் மகன் {வாலி}, இரவியை {சூரியனைப்} போல் பிரகாசிக்கும் ராமனைக் கண்டு இவ்வாறு சொல்லிவிட்டு, வாய் வறண்டவனாக அமைதியடைந்தான்.(54)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 54
Previous | | Sanskrit | | English | | Next |