Autumn | Kishkindha-Kanda-Sarga-30 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கூதிர் காலத்தால் தீவிரமடைந்த ராமனின் வேதனை; சரத்காலத்தின் அழகு...
ககனத்தில் கணங்கள் {வானம் மேகங்கள்} இல்லாத வேளையில், சுக்ரீவன் குகைக்குள் பிரவேசித்ததும், மழைக்கால ராத்திரிகளை காம சோகத்தால் பீடிக்கப்பட்டவனாகத் திடமாகக் கழித்த ராமன்,{1} களங்கமற்ற சந்திர மண்டலத்துடன் ககனம் {வானம்} வெண்மையாக இருப்பதைக் கண்டும், ஜ்யோதியால் பூசப்பட்ட {வெளிச்சமான} சரத்கால[1] ராத்திரிகளைக் கண்டும்,{2} காமவிருத்தமடைந்த சுக்ரீவனையும், ஜானகியை இழந்துவிட்ட தன்னையும், கடந்து விட்ட அதீத காலத்தையும் கண்டும் பரமஆதுரத்தில் {பெருந்துன்பத்தில்} மூர்ச்சையடைந்தான்.(1-3) மதிமானும், நிருபனுமான {மன்னனுமான} அந்த ராகவன், ஒரு முஹூர்த்தத்தில் நனவு மீண்டு, மனத்தில் வைதேஹியை இருத்திக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(4)
[1] சரத்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்ட பருவகாலமாகும். தமிழில் இதற்குக் கூதிர்காலம் என்று பெயர்.
ஹேம தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட பர்வதத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவன் {ராமன்}, சரத்கால ககனத்தை {வானத்தைக்} கண்டு மனத்தில் தன் பிரியையுடன் திரிந்தான்.(5) மின்னல்களுடன் கூடிய மேகங்கள் மறைந்ததையும், சாரஸங்களின் ஆரவாரப் பேரொலிகளையும், விமலமான வானத்தையும் கண்டு, பெரும் துன்பம் நிறைந்த {பின்வரும்} சொற்களில் புலம்பத் தொடங்கினான்:(6) "சாரஸங்களின் ஆரவார நாதங்கொண்டவளான எந்தச் சிறுமி, ஆசிரமத்தில் என்னுடன் சாரஸங்களின் ஆரவார ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைவாளோ, அவள் {சீதை} இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(7) புஷ்பித்த காஞ்சனங்களை {தங்கத்தைப்} போன்ற நிர்மலமான ஆசனங்களை {களங்கமற்ற வேங்கை மர மலர்களைக்} கண்டு, என்னைத் தேடியும் காணாதவளான அந்தச் சிறுமி {சீதை} எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(8) அங்கங்கள் அனைத்திலும் அழகு பொருந்தியவளும், இனிய குரல் படைத்தவளும், பூர்வத்தில் இனிய ஹம்சங்களின் சுவரத்தில் {என்னை} எழுப்புகிறவளுமான என்னவள் இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(9) பௌண்டரீக விசாலாக்ஷீயானவள் {வெண்தாமரையைப் போன்ற அகன்ற கண்களைக் கொண்ட சீதை} சகசாரிகளான {ஒன்றாகத் திரியும்} சக்கரவாகங்களின் ஸ்வனத்தைக் கேட்டு எப்படி {உயிருடன்} இருப்பாள்?(10) சரஸ்கள் {குளங்கள்}, சரிதங்கள் {ஆறுகள்}, வாபிகள் {படிக்கிணறுகள்}, கானகங்கள், வனங்கள் ஆகியவற்றில் திரிந்து வரும் இந்த வேளையில் மான்போன்ற கண்களைக் கொண்டவள் {சீதை} இல்லாமல் என்னால் சுகத்தைக் காண இயலவில்லை.(11) சரத்காலத்தின் {கூதிர்காலத்தின்} குணங்களுடனே இடைவிடாமல் இருப்பவனான காமன் {மன்மதன்}, சௌகுமாரியத்தாலும் {மென்மையாலும்}, என் பிரிவாலும் அந்த பாமினியை நெடுந்தூரம் சென்று பீடிப்பானே" {என்றான் ராமன்}.(12)
நரசிரேஷ்டனான நிருபாத்மஜன், திரிதச ஈசுவரனிடம் {மனிதர்களில் சிறந்தவனான தசரத மன்னனின் மகன் ராமன், சொர்க்கத்தின் தலைவனான இந்திரனிடம்} இருந்து {மழை}நீரைப் பெறுவதற்காக {அழும்} சாரங்கப் பறவையைப் போல இப்படியே அழுது புலம்பிக் கொண்டிருந்தான்.(13) அப்போது பழங்களைத் தேடி ரம்மியமான கிரியின் தாழ்வரைகளில் திரிந்துவிட்டுத் திரும்பிவந்த லக்ஷ்மீவானான லக்ஷ்மணன் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராமனைக்} கண்டான்.(14) மனஸ்வியான {நல்ல மனம் கொண்டவனான} அந்த சௌமித்ரி {சுமித்ரையின் மகன் லக்ஷ்மணன்}, ஜனங்களில்லாத இடத்தில் ஏகனாக {தனியாக} தாங்க முடியாத சோகத்துடன், சுயநினைவின்றி இருப்பவனை கவனித்து, உடன்பிறந்தானின் {அண்ணன் ராமனின்} சோகத்தால் அதிகம் துன்புற்று, துரிதமாக ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(15) "ஆரியரே, காமத்தின் வசமடைவதால் என்ன பிரயோஜனம்? உமது பௌருஷ்யம் {ஆண்மை} ஒழிவதால் ஆவதென்ன? சோகத்துடன் இந்த சமாதியை {நிம்மதியை} விலக்குவதாலும், யோகத்தை {நினைவைத்} தலைகீழாக்குவதாலும் இப்போது ஆவதென்ன?(16) தாதா {ஐயா}, அதீனசத்வரே {சோர்வில்லா ஆற்றல் கொண்டவரே}, காரியத்தில் விடாமுயற்சியுடனும், சிதறாத மனவுறுதியுடனும், சமாதி யோகத்தைப் பின்பற்றியும், காலத்திற்கும், சஹாயர்களின் {உதவி செய்யும் அன்பர்களின்} சாமர்த்தியத்திற்கும் ஹேதுவாகவும், உமது காரியத்திற்கு ஹேதுவாகவும் செயல்படுவீராக.(17) மானவவம்சநாதரே {மனிதகுலத் தலைவரே}, உம்மை நாதராகக் கொண்ட ஜானகியை, வேறு எவராலும் அடையமுடியாது. வீரரே, பெரும் மதிப்புக்குத் தகுந்தவரே, ஜ்வலிக்கும் அக்னியின் நாக்கை {தீப்பிழம்பை} நெருங்கிய எவனும் தகிக்கப்படாமல் இருக்கமாட்டான்" {என்றான் லக்ஷ்மணன்}.(18)
இலக்ஷணம் கொண்டவையும், மறுக்கப்படமுடியாதவையும், ஸ்வபாவத்தில் {இயல்பில்} இருந்து வெளிப்பட்டவையும், ஹிதமானவையும், பத்தியமானவையும் {கட்டுப்பாடுகளுடன் கூடியவையும்}, நயமிக்கவையும், நட்புடன் கூடியவையும், தர்மத்திற்கும், அர்த்தத்திற்கும் {அறம், பொருளுக்கு} இணக்கமானவையுமான சொற்களைக் கேட்டு ராமன் லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(19) "குமாரா, காரியமே கவனிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. காரியங்களில் விசேஷமும் பின்பற்றப்பட வேண்டும். அடைதற்கரிய கடுங்காரியத்தை மேற்கொள்ளும்போது அதன் பலனைக் குறித்து சிந்திக்கக்கூடாது" {என்றான் ராமன்}.(20)
பிறகு, பத்ம இதழ் போன்ற கண்களைக் கொண்ட மைதிலியைக் குறித்துச் சிந்தத்த ராமன், மிக உலர்ந்த முகத்துடன் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(21) "சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்}, நீரால் வசுந்தரையை குளிரச் செய்து, பயிர்களை வளரச் செய்து, தன் தொழிலைச் செய்து முடித்திருக்கிறான்.(22) நிருபாத்மஜா {ராஜகுமாரா}, தீர்க்க கம்பீர கோஷத்துடன் மலைகளின் மரங்களுக்கு மேலே செல்லும் மேகங்கள் நீரைப் பொழிந்து இளைப்பாறுகின்றன.(23) நீலோத்பல {கருநெய்தல்} இதழ்களைப் போல கறுத்திருக்கும் மேகங்கள், தசதிசைகளையும் {பத்து திக்குகளையும்} கறுக்கச் செய்து, மதமொழிந்த மாதங்கங்களை {யானைகளைப்} போல வேகம் சாந்தமடைந்து கிடக்கின்றன.(24) சௌம்யா {மென்மையானவனே}, ஜலத்தை கர்பத்தில் கொண்டு மஹாவேகத்துடன் வந்தவற்றில் {வந்த மேகங்களில்} இருந்து கீழ்நோக்கிச் சென்று, மலைமல்லி, மருது ஆகியவற்றின் கந்தத்துடன் வீசிய மழைக்காற்றுகள் ஓய்ந்திருக்கின்றன.(25)
அனகா {பாவமற்றவனே}, லக்ஷ்மணா, மேகங்கள், வாரணங்கள் {யானைகள்}, மயூரங்கள் {மயில்கள்}, பிரஸ்ரவணங்கள் {மலையருவிகள்} ஆகியவற்றின் நாதம் ஒரேகாலத்தில் சாந்தமடைந்துவிட்டன.(26) மஹாமேகங்களால் நன்கு பொழியப்பட்டவையும், நிர்மலமானவையும் {களங்கமற்றவையும்}, அழகிய தாழ்வரைகளுடன் கூடியவையுமான கிரிகள் {மலைகள்}, சந்திரக் கதிர்களால் பூசப்பட்டவை போல விளங்குகின்றன.(27) சரத்காலமானது, ஏழிலைப் பாலையின் சாகைகளிலும் {கிளைகளிலும்}, தாரைகள் {நக்ஷத்திரங்கள்}, அர்க்கன் {சூரியன்}, நிசாகரன் {இரவை உண்டாக்கும் சந்திரன்} ஆகியவற்றின் பிரபையிலும் {ஒளியிலும்}, உத்தம வாரணங்களின் லீலைகளிலும் {சிறந்த யானைகளின் விளையாட்டுகளிலும்} இப்போது ஸ்ரீயை {செழிப்பைத்} தோற்றுவிக்கின்றது.(28) இப்போது அனேகமானவற்றால் நாடப்படுபவளும், அழகிய பிரகாசத்துடன் கூடியவளும், சரத்கால குணத்தில் இருந்து வெளிப்பட்டவளுமான லக்ஷ்மியானவள் {செழிப்பானவள்}, சூரியனின் கைகளால் தீண்டப்பட்டு முதலில் மலரும் தாமரைத் தடாகங்களைப் போல அதிகமாக பிரகாசிக்கிறாள்.(29) சத்பாத {வண்டுக்} கூட்டங்களின் கீதத்தை அனுசரித்துச் செல்லும் பவனன் {காற்றானவன்}, ஏழிலைப் பாலை மலர்களின் கந்தத்தைச் சுமந்து சென்று, மத்ததுவீபங்களின் {மதங்கொண்ட யானைகளின்} மதத்தை நீக்காமல் அதிகரிக்கச் செய்கிறான்.(30)
ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, நெருங்கி வருபவையும், அழகிய விசாலமான சிறகுகளைக் கொண்டவையும், பத்ம மகரந்தங்கள் {தாமரை மலர் தாதுக்கள்} நிறைந்த சரஸ்களில் பிரியங்கொண்டவையும், மஹாநதிகளின் மணற்திட்டுகளுக்குத் திரும்பி வந்து சேர்ந்தவையுமான சக்கரவாகங்களுடன் கிரீடிக்கின்றன {விளையாடுகின்றன}.(31) மதத்தால் செருக்குற்ற வாரணங்களிடமும் {யானைகளிடமும்}, கொழுத்திருக்கும் பசுமந்தைகளிடமும், தெளிந்த நீரையுடைய மலையருவிகளிடமும் பலவாறாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு லக்ஷ்மி {செழிப்பானவள்} பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.(32) வனங்களில் மயூரங்கள் {மயில்கள்}, மேகங்கள் இல்லாத நபத்தை {வானத்தைப்} பார்த்து, தோகைகளை ஆபரணங்களாக விரிக்காமல், பிரியமானவர்களிடம் {பேடுகளிடம்} விருப்பமில்லாமல், அழகு குன்றி, உற்சாகம் குறைந்து கவலை கொண்டிருக்கின்றன.(33) மனத்தைக் கவரும் கந்தத்தையும் {மணத்தையும்}, புஷ்பங்களின் அதிபாரத்ததால் நுனிகள் வளைந்த சாகைகளையும் {கிளைகளையும்}, சுவர்ணத்தின் மஞ்சள் நிறத்தையும் கொண்டவையும், நயனங்களுக்கு {கண்களுக்கு} இனிமையைத் தருபவையும், அற்பமல்லாதவையுமான {ஏராளமானவையுமான} பிரியகைகளால் {வேங்கை மரங்களால்} வனாந்தரங்கள் பிரகாசிப்பதைப் போலத் தெரிகின்றன.(34) பிரியத்திற்குரியவையுடன் {பெண் யானைகளுடன்} இருப்பவையும், நளினிகளில் பிரியங்கொண்டவையும் {தாமரை ஓடைகளில் விருப்பமுள்ளவையும்}, மலர்களால் {மலர்களின் மணத்தால்} உற்சாகம் அடைபவையும், பெரும் மதத்தால் செருக்குற்றவையுமான உத்தம கஜங்களின் நடை {சிறந்த யானைகளின் செய்கைகள்} இப்போது கொடியவையாக இருக்கின்றன.(35)
தெளிவான நபம் {மேகங்களில்லாத வானம்}, தீட்டப்பெற்ற சஸ்திரத்தின் {ஆயுதத்தின்} ஒளியுடன் இருக்கிறது. நதிகளில் ஜலங்கள் மெலிந்த பிரவாகத்துடன் இருக்கின்றன. பவனன் {காற்றானவன்}, செந்தாமரையின் குளிர்ச்சியுடன் வீசுகிறான். திசைகள் அனைத்தும் இருள் நீங்கி பிரகாசிக்கின்றன.(36) சூரியனின் வெப்பத் தாக்கத்தால் சேறு உலர்ந்த பூமியானது, நீண்ட காலத்திற்குப் பிறகு கட்டிக்கட்டியான தூளிகளுடன் காட்சியளிக்கிறது. அன்யோன்யம் வைரம் கொண்ட நராதிபர்களுக்கு {ஒருவரோடு ஒருவர் பகையும், பொறாமையும் கொண்ட மன்னர்களுக்கு} போருக்கேற்ற காலமாக இருக்கிறது.(37) சரத்கால குணங்களால் ரூப அழகு அதிகரித்தவையும், மகிழ்ச்சியுடன் கூடியவையும், உடலில் புழுதி படிந்தவையும், மதப் பெருக்குடனும், கோக்களின் {பசுக்களின்} மத்தியில் இருப்பவையுமான விருஷங்கள் {காளைகள்}, போரில் ஆவலுடன் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றன.(38) மன்மதனின் தீவிரத் தாக்குதலுக்கு உட்பட்டவையும், நற்குலத்தில் பிறந்தவையும், மந்த கதியில் செல்பவையுமான கரேணுக்கள் {பெண் யானைகள்}, வனங்களில் மதத்துடன் திரியும் தலைவனை {கணவனை / ஆண் யானையைச்} சூழ்ந்தபடியே பின்தொடர்ந்து செல்கின்றன.(39) மயூரங்கள் {மயில்கள்}, தங்களுக்கு ஆபரணங்களாகத் திகழும் மிகச் சிறந்த தோகைகளை கவனத்தில் கொள்ளாமல், நதிகளின் தீரங்களை அடைந்தும், சாரசப் பறவைகளின் கூட்டங்களால் மிரட்டப்பட்டதைப் போல மனச்சோர்வுடன் திரும்பிச் செல்கின்றன.(40)
மதங்கொண்ட கஜேந்திரங்கள் {யானைகள்} பேரொலியுடன் பிளிறியபடியும் காரண்டவங்களையும் {நீர்க்காக்கைகளையும்}, சக்ரவாகங்களையும் அஞ்சுறுத்தியபடியும், அம்புஜங்களால் {தண்ணீரில் பிறந்த தாமரைகளால்} அலங்கரிக்கப்பட்ட சரஸ்களின் {தடாகங்களின்} ஜலத்தைக் கலக்கிப் பருகுகின்றன.(41) சேறு நீங்கியவையும், மணல் குன்றுகளையும், தெளிந்த நீரையும், பசுமந்தைகளையும் கொண்டவையும், சாரசங்களின் எதிரொலியால் நிறைந்தவையுமான நதிகளில் ஹம்சங்கள் மகிழ்ச்சியுடன் மூழ்குகின்றன.(42) இப்போது, நதிகள், மேகங்கள், பிரஸ்ரவணங்களின் உதகம் {மலையருவிகளின் நீர்}, புயல்காற்று, மயில்கள், உற்சாகம் குன்றிய பிலவங்கமங்கள் {தாவிச் செல்பவையான தவளைகள்} ஆகியவற்றின் ஒலிகள் நன்றாக ஓய்ந்துவிட்டன.(43) மேகங்கள் வெளிப்படும்போது, உடல் மெலிந்தவையும், அனேக வர்ணங்களில் ஆனவையும், பசி மேலிட்டவையும், கோரவிஷங்கொண்டவையும், வெகுகாலம் மறைந்து கிடந்தவையுமான சர்ப்பங்கள் {பாம்புகள்} பிலங்களில் {புற்றுகளில்} இருந்து வெளியே வந்து திரிகின்றன.(44) ஒளிரும் சந்திரக் கதிர்களின் தீண்டலால் மகிழ்ச்சியடைந்தவையும், நிர்மலமானவையுமான தாரகைகள் {நக்ஷத்திரங்கள்}, அஹோ, சந்திப்பொழுதின் ராகவதீயை {காதலுடன் கூடிய பெண்ணைப்} போலத் தானே அம்பரத்தில் {வானத்தில்} வெளிப்படுகின்றன.(45)
உதிக்கும் சசாங்கனின் {சந்திரனின்} சௌம்யமான {மென்மையான} முகத்துடனும், தாராகணங்கள் {நட்சத்திரக்கூட்டங்கள்} அழகிய நேத்திரங்களுடனும், ஜோதியெனும் {வெளிச்சமெனும்} திரையால் நன்றாகப் போர்த்தப்பட்ட ராத்திரியானவள், வெண்மையான துணியால் முழுமையாக போர்த்தப்பட்ட அங்கங்களுடன் கூடிய நாரீயை {பெண்ணைப்} போலப் பிரகாசிக்கிறாள்.(46) பக்குவமான {முற்றிய} செந்நெற்கதிர்களை பக்ஷித்து {உண்டு}, மகிழ்ச்சியடையும் அழகிய சாரசங்களின் {சாரசப்பறவைகளின்} வரிசையானது, வேகத்துடன் சீக்கிரமாகச் சென்று, வாதத்தினால் {காற்றினால்} கலைக்கப்படும் தொடுக்கப்பட்ட மாலையைப் போல நபத்தில் {வானத்தில்} செல்கிறது.(47) உறங்கும் ஹம்சம் {அன்னப்பறவை} ஒன்றுடன் கூடியதும், குமுதங்களால் {வெண்தாமரைகளால்} நிறையப்பெற்றதுமான மஹாஹிரதத்தின் {பெரும் மடுவின்} நீரானது, நிசியில் {இரவில்}, மேகங்கள் இல்லாததும் தாரா கணங்களால் நிறைந்ததும், பூர்ணச் சந்திரனுடன் கூடியதுமான அந்தரிக்ஷத்தை {வானத்தைப்} போலத் தெரிகிறது.(48) கலைந்து செல்லும் ஹம்சங்களையே மேகலைகளாக அணிந்தவையும், மலர்ந்த பத்மங்களையும் {தாமரைகளையும்}, உத்பலங்களையும் {நெய்தல்களையும்} மாலைகளாகக் கொண்டவையுமான உத்தமவாபிகள் {நல்ல படிக் கிணறுகள்}, இப்போது நன்றாக அலங்கரிக்கப்பட்ட வராங்கனையை {அழகிய பெண்ணைப்} போல அதிகப் பிரகாசத்துடன் தெரிகிறது.(49) வேணு சுவரமானது {புல்லாங்குழலின் இசையானது}, தூரியத் தொனியுடன் கலந்து, அனிலனால் {காற்றால்} தூண்டப்பட்டு, விருத்தியடைந்து, நன்கு பரவும் சப்தமாகி, விடியும் காலத்தில் கோக்களும் {பசுக்களும்}, விருஷங்களும் {காளைகளும்} குகைகளில் அன்யோன்யம் {ஒன்றோடொன்று} ஊடுபரவியிருக்கையில் உண்டாவதைப் போலிருக்கிறது.(50)
மலர்களையே புன்னகையாகக் கொண்ட நதிக்கரைகள், மிருதுவான மாருதத்தால் {இளங்காற்றினால்} அசைக்கப்பட்டு, நன்கு வெளுத்து, சுத்தமான வெண்பட்டாடைகளைப் போன்ற புதிய நாணல்களால் அழகுவாய்ந்து விளங்குகின்றன.(51) வனங்களில் மதுபானத்தால் {தேன்குடித்து} மெய்மறந்து, களிப்படைந்து, மதத்துடன் தன்னிச்சையாகத் திரியும் சத்சரணங்கள் {ஆறு கால் வண்டுகள்}, பத்மாஸனங்களின் மஞ்சள் மகரந்தங்களில் {ஆசனமான தாமரைகளின் மகரந்தங்களில்} பிரியைகளுடன் {பெண் வண்டுகளுடன்} சேர்ந்து பவனனை {காற்றைப்} பின்தொடர்ந்து செல்கின்றன.(52) மலர்ந்த மலரும், கிரௌஞ்சங்களின் ஒலியும், தெளிந்த நீரும், பக்குவமான {முற்றி விளைந்த} நெற்பயிரும், மிருதுவான வாயுவும் {காற்றும்}, விமலமான {களங்கமற்ற} சந்திரனும் மழை ஓயும் காலத்தையே குறிப்பிடுகின்றன.(53) இப்போது மீன்களெனும் மேகலைகளை அணிந்த நதிவதுக்கள் {நதிகளெனும் பெண்கள்}, விடியற்காலையில் காதலனுடன் காதலில் ஈடுபடுகையில் சோம்பலுடன் நடக்கும் காமினிகளைப் போல மந்தகதியில் நடக்கின்றன {பாய்கின்றன}.(54) சக்கிரவாகங்களுடன் கூடியவையும், பாசி படர்ந்திருப்பவையும், வெண்பட்டைப் போலிருப்பவையுமான நாணல்களால் சூழப்பட்ட நதிமுகங்கள், பத்திர ரேகையுடன் {இலைகளிலுள்ள வரிகளைப் போல} கோரோசனை பூசப்பட்ட {செந்தூரம் / மருதாணி பூசப்பட்ட} வதுக்களின்முகங்களை {பெண்களின் முகங்களைப்} போலிருக்கின்றன.(55)
மலர்ந்த பாணம் {குறிஞ்சி}, அசனம் {வேங்கை} ஆகியவற்றால் அழகுற்று விளங்குபவையும், மகிழ்ச்சியுடன் கூடிய சத்பாதங்களின் {ஆறுகால் வண்டுகளின்} ரீங்காரங்களைக் கொண்டவையுமான வனங்களில் இப்போது கையில் பிடித்த வில்லை உயர்த்தி கொடிய தண்டம் {தண்டனை} விதிக்கும் காமன் {மன்மதன்} வலுவுடன் திரிகிறான்.(56) மேகங்கள், நல்ல மழையால் உலகத்தை மகிழ்ச்சியடையச் செய்து, நதிகளையும், தடாகங்களையும் {நீரால்} நிரப்பி, வசுதையில் அறுவடைக்கு ஏற்பாடு செய்து, நபத்தை {வானத்தைக்} கைவிட்டு மறைந்துவிட்டன.(57) நவசங்கமத்தில் {புதிதாகக் கூடுகையில் வெளிப்படும்} கூச்சமுள்ள யோசிதைகளின் {இளம்பெண்களின்} இடைகளைப் போல சரத்கால நதிகள் மெதுமெதுவாகத் தங்கள் மணற்கரைகளை வெளிப்படுத்துகின்றன.(58) சௌம்யா {மென்மையானவனே}, தெளிந்த நீரைக் கொண்டவையும், குரரங்களால் நாதிக்கப்பெற்றவையும் {அன்றில்களால் ஒலிக்கப்பெற்றவையும்}, சக்கிரவாக கணங்களால் {கூட்டங்களால்} நிறையப் பெற்றவையுமாக நீர்நிலைகள் விளங்குகின்றன.(59) நிருபாத்மஜா, சௌம்யா, அன்யோன்யம் வைரத்தால் {பகையால்} கட்டப்பட்டவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களுமான பார்த்திபர்களின் உத்யோகத்திற்கான சமயம் {மன்னர்களின் தொழிலான போரைச் செய்வதற்கு உரிய காலம்} இதோ வாய்த்திருக்கிறது.(60)
நிருபாத்மஜா, இது பார்த்திபர்களின் பிரதம யாத்திரைக்கான சமயமாகும். சுக்ரீவனையோ, அந்தவித உத்யோகத்தையோ {போர்முயற்சியையோ} என்னால் பார்க்க முடியவில்லை.(61) கிரியின் அடிவாரங்களில் அசனம் {வேங்கை}, சப்தபர்ணம் {ஏழிலைப்பாலை}, கோவிதாரம் {கருங்காலி}, பந்துஜீவம் {உச்சித்திலகம்}, சியாமம் {ஞாழல்} ஆகிய மரங்கள் நன்கு புஷ்பித்தவையாகக் காணப்படுகின்றன.(62) இலக்ஷ்மணா, நதிகளின் மணற்குன்றுகளில் ஹம்ஸம், ஸாரஸம், சக்கிரவாகம், குரரம் {அன்றில்} ஆகியன எங்கும் நிறைந்திருப்பதைப் பார்.(63) சீதையைப் பார்க்காமல் சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் எனக்கு வார்ஷிகமான சத்வார மாஸங்களும் {மழைக்காலமான நான்கு மாதங்களும்} நூறுவருஷங்களைப் போலக் கடந்தன[2].(64) உத்யானவனத்தில் சக்கிரவாகப் பறவையைப் போல {சேவலைப் பின்தொடர்ந்து வரும் சக்கிரவாகப் பேட்டைப் போல} அந்த அங்கனை {அழகிய பெண்}, பர்த்தாவான என்னை விஷமவனமான தண்டகாரண்யத்தில் பின்தொடர்ந்து வந்தாள்.(65)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்ரீவனின் பட்டாபிஷேகத்தில் இருந்து நான்கு மாத காலம் கடந்துவிட்டதால் இது கார்த்திகை மாத முடிவாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணா, பிரியை {காதலியான சீதை} இல்லாமல் துக்கத்தில் அவதிப்படுபவனும், ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவனுமான எனக்கு ராஜா சுக்ரீவன் கிருபை செய்யவில்லை.(66) "இவன் அநாதை {நாதனற்றவன்}; ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்டவன்; ராவணனால் தாக்கப்பட்டவன்; தீனன்; தூர கிருஹத்தில் இருந்து வந்தவன்; காமி {காமத்தால் பீடிக்கப்பட்டவன்}; என்னைச் சரணமடைந்தவன்",(67) என்றும், சௌம்யா, பரந்தபா, இது போன்ற காரணங்களாலும் துராத்மாவான வானரராஜா சுக்ரீவனால் நான் அலட்சியம் செய்யப்படுகிறேன்.(68) துர்மதியாளனான அவன் {சுக்ரீவன்}, வேண்டியதை அடைந்துவிட்டு, சீதையைத் தேடும் மார்க்கத்தில் காலத்தையும் தீர்மானித்து, ஏற்ற சமயத்தையும் உறுதி செய்துவிட்டு அதை உணராமல் இருக்கிறான்.(69)
நீயே கிஷ்கிந்தையில் பிரவேசித்து, வானரபுங்கவனும், மூர்க்கனும், அற்ப சுகத்தில் மூழ்கிக் கிடப்பவனுமான சுக்ரீவனிடம் {பின்வரும்} என் சொற்களைச் சொல்வாயாக:(70) "எவன் பூர்வத்தில் உபகாரம் செய்தவர்களும், கைம்மாறு வேண்டுகிறவர்களுமான உரியவர்களுக்கு ஏற்றதை வாக்களித்துவிட்டு அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே உலகில் புருஷாதமனாவான் {மானிடப் பதராவான்}.(71) எவன், வாக்களிக்கப்பட்டது சுபமாக இருந்தாலும், பாபமாகவே இருந்தாலும் சத்தியத்திற்கு இணக்கமாக முழுமையாக அதைச் செய்து முடிப்பானோ, அந்த வீரனே புருஷோத்தமனாவான்[3].(72) எவர்கள் வேண்டியதை அடைந்தும், செய்ய வேண்டியதைச் செய்வதில் மித்ரர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்கள் மரித்துப் போனாலும் ஊனுண்ணிகளும் அவர்களை உண்ணாது.(73) காஞ்சனத்தாலான {பொன்னாலான} பின்புறத்தைக் கொண்டதும், போரில் என்னால் முழுமையாக வளைக்கப்படுவதுமான வில்லின் மின்னற்கணங்களுக்கு ஒப்பான ரூபத்தை நிச்சயம் நீ காண விரும்புகிறாய் போலும்.(74) போரில் குரோதத்துடன் கூடியவனான எனக்குரியதும், வஜ்ரத்தின் கோஷத்திற்கு நிகரானதும், கோரமானதுமான நாணொலியின் கோஷத்தை மீண்டும் நன்றாகக் கேட்க விரும்புகிறாய் போலும்" {என்று சுக்ரீவனிடம் சொல்வாயாக}.(75)
[3] எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.- திருக்குறள் / அறத்துப்பால் / இல்லறவியல் / செய்ந்நன்றி அறிதல் / 110பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. - மு. வரதராசன்
நிருபாத்மஜா {ராஜகுமாரா}, வீரா, அவன் என் பராக்கிரமத்தையும், உன்னை சகாயனாகக் கொண்டிருப்பதையும் அறிந்தும் கவலையின்றி காமத்தில் மூழ்கிக் கிடக்கிறான்.(76) பகை நகரங்களை வெல்பவனே, எந்த அர்த்தத்திற்காக {எதன்காரணமாக} இஃது ஆரம்பிக்கப்பட்டதோ {வாலி வதம் செய்யப்பட்டதோ} அந்த சமயத்தை காரியம் கைக்கூடப்பெற்ற பிலவகேஷ்வரன் {குரங்குகளின் மன்னன் சுக்ரீவன்} மறந்துவிட்டான்.(77) மழைக்காலம் கழிந்த அடுத்த காலத்தைப் பிரதிஜ்ஞை செய்துவிட்டு, புரண்டு கொண்டிருக்கும் ஹரீஷ்வரன் {குரங்குமன்னன்}, நான்கு மாதங்களும் கழிந்துவிட்டத்தை நினையாதிருக்கிறான்.(78) அமைச்சர்களுடன் கூடிய சுக்ரீவன் கிரீடையிலும் {விளையாட்டிலும்}, குடியிலும் மூழ்கி காலத்தைக் கடத்துகிறான். சோகத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் நமக்கு உரிய காரியத்தைச் செய்யாதிருக்கிறான்.(79) மஹாபலவானே, வீரா, நீ போய்வா. உன் மூலம் சுக்ரீவன் என் கோபத்தின் ஸ்வரூபத்தை அறியட்டும். அவனிடம் {பின்வரும்} சொற்களையும் நீ சொல்வாயாக"{என்று லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு},(80)
{சுக்ரீவனிடம் தான் சொன்னதாகச் சொல்லும்படி, பின்வருமாறு}, "சுக்ரீவா, வாக்கில் உறுதியாக நிற்பாயாக. வாலி கொல்லப்பட்டு எந்த கதியை அடைந்தானோ, அந்த வழி இன்னும் அடைக்கப்பட்டுவிடவில்லை. வாலியின் வழியில் பின்தொடர்ந்து செல்லாதே.(81) போரில் என் சரத்தால் வாலி மட்டுமே கொல்லப்பட்டான். சத்தியத்தை மீறும் உன்னையோ பந்துக்களுடன் {சுற்றத்தாருடன்} சேர்த்துக் கொல்லப் போகிறேன்" {என்றும் சுக்ரீவனிடம் சொல்வாயாக, என்று சொல்லிவிட்டு},(82)
{மீண்டும் லக்ஷ்மணனிடம்}, "எனவே, புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நர சிரேஷ்டா {மனதர்களில் சிறந்தவனே}, காரியம் இப்படி இருக்கையில், ஏதேது ஹிதமோ அதனதனை அவ்வாறே சொல்லித் துரிதப்படுத்துவாயாக. காலம் ஏற்கனவே வீணாகிவிட்டது" {என்று லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு},(83) {மீண்டும் சுக்ரீவனிடம்}, "வானரசிரேஷ்டா, சாசுவதமான தர்மத்தை உணர்ந்து, எனக்கு வாக்களிக்கப்பட்டதை சத்தியமாக்கினால், இப்போது என் சரங்களால் கொல்லப்பட்டு, பிரேதகதியடைந்து, யமனின் வீட்டில் உள்ள வாலியை நீ பார்க்காமல் இருக்கலாம்" {என்று சுக்ரீவனிடம் நான் சொன்னதாகச் சொல்வாயாக" என லக்ஷ்மணனிடம் சொன்னான் ராமன்}.(84)
மானவவம்சத்தை வளர்ச்சி அடையச் செய்பவனும், உக்கிர தேஜஸ் கொண்டவனுமான அவன் {லக்ஷ்மணன்}, தீவிர கோபத்தை அடைந்து, உள்ளம் உருகி புலம்பிக் கொண்டிருக்கும் பூர்வஜனை {அண்ணனைக்} கண்டு, ஹரீஷ்வரனை {குரங்குகள் மன்னனான சுக்ரீவனை} நோக்கித் தீவிர மதியைச் செலுத்தினான்.(85)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 85
Previous | | Sanskrit | | English | | Next |