Kind words of Hanuman | Kishkindha-Kanda-Sarga-32 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனின் கோபத்திற்கான காரணத்தை அறியாமல் கவலையடைந்த சுக்ரீவன்; அவனைச் செயல்பட வற்புறுத்திய ஹனுமான்...
ஆத்மவானான சுக்ரீவன், மந்திரிகளுடன் கூடிய அங்கதனின் சொற்களைக் கேட்டும், லக்ஷ்மணன் கோபம் அடைந்திருப்பதைக் கேட்டும் ஆசனத்தில் இருந்து எழுந்தான்.(1) மந்திரங்களில் {ஆலோசனைகளில் / ராஜகாரியங்களில்} சிறந்தவனும், மந்திரங்களின் மதிப்பீட்டில் திறன்மிக்கவனுமான அவன் {சுக்ரீவன்}, குரு லாகவங்களை {கனமான, எளிதான காரியங்களை / நன்மைதீமைகளை} நிச்சயித்துக் கொண்டு மந்திரஜ்ஞர்களிடம் {ஆலோசனைகளை நன்கறிந்த மந்திரிகளிடம், பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(2) "நான் ஏதேனும் தீயனவற்றைப் பேசியதோ, தீயனவற்றை அனுஷ்டித்ததோ கிடையாது. 'இராகவருடன் பிறந்த லக்ஷ்மணர் குரோதமடைந்தது ஏன்?' என்று சிந்திக்கிறேன்.(3) நல்ல ஹிருதயம் இல்லாதவர்களும், நித்தியம் தீங்கு செய்யக் காத்திருப்பவர்களுமான என் அமித்ரர்கள் {நண்பர்களாக இல்லாதவர்கள் / பகைவர்கள்}, என்னிடம் இல்லாத தோஷங்களை இட்டுக்கட்டி ராகவானுஜரின் {ராமரின் தம்பியான லக்ஷ்மணரின்} காதுகளை நிரப்பியிருக்கின்றனர்.(4)
இங்கே நீங்கள் அனைவரும், தங்கள் தங்கள் புத்தியைப் பயன்படுத்தியும், விதிகளின்படியும் நுட்பமாகவும், மெதுவாகவும் பாவத்தை {லக்ஷ்மணருக்கு கோபம் உண்டான காரணத்தையும், இனி நாம் செய்ய வேண்டியனவற்றையும்} அறிந்து நிச்சயம் செய்வீராக.(5) எனக்கு லக்ஷ்மணரிடமோ, ராகவரிடமோ அச்சமேதும் இல்லை. மித்ரரிடம் {நண்பரிடம்} ஆதாரமற்ற கோபம் மட்டுமே குழப்பத்தை உண்டாக்குகிறது.(6) எவ்வகையிலேனும் மித்ரம் {நட்பு} எளிதில் அடையத்தக்கதே. அதைப் பிரதிபாலனம் செய்வதே {அறாது காத்தலே} கடினமானது. அநித்தியமானவையும், அற்பமானவையுமான சிந்தனைகளே பிரீதியை {அன்பைக்} குலைக்கிறது.(7) அதன் நிமித்தமே நான் மஹாத்மாவான ராமருக்கு அஞ்சுகிறேன். எனக்கு எந்த உபகாரம் செய்யப்பட்டதோ, அதற்கு {இணையான} பிரதியுபகாரஞ் {கைம்மாறு} செய்வது எனக்கு சாத்தியமில்லை" {என்றான் சுக்ரீவன்}.(8)
சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், வானர மந்திரிகளுக்கு மத்தியில் இருந்தவனும், ஹரிபுங்கவனுமான {குரங்குகளில் சிறந்தவனுமான} ஹனுமான் தனக்கே உரிய தர்க்கத்துடன் {பின்வருமாறு} பேசினான்:(9) "ஹரிகணேஷ்வரரே, நல்ல சினேகத்துடன், சுபமான உபகாரம் செய்தவரை நீர் மறவாதிருப்பது எவ்வகையிலும் ஓர் ஆச்சரியமில்லை.(10) வீரரான ராகவர், பயத்தை தூர வீசிவிட்டு, உமது பிரிய அர்த்தத்திற்காகவே {உமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே} சக்ரனுக்கு இணையான பராக்கிரமம் கொண்ட வாலியைக் கொன்றார்.(11) உடன்பிறந்தவரும், லக்ஷ்மிவர்தனருமான லக்ஷ்மணரை அனுப்பியிருக்கும் இராகவர், எல்லாவகையிலும் பிரணயகோபமடைந்திருக்கிறார் {அன்பினால் கோபமடைந்திருக்கிறார்} என்பதில் சந்தேகமில்லை.(12)
காலவிதம் அறிந்தவர்களில் சிறந்தவரான நீர், பிரமத்த நிலையில் இருப்பதால், ஏழிலைப்பாலைகள் பச்சைப்பசேலென மலரும் மங்கல சரத் காலம் நடந்து கொண்டிருப்பதை அறியாமல் இருக்கிறீர்.(13) மேகங்கள் இல்லாத வானம், கிரஹ நக்ஷத்திரங்களுடன் சர்வ திசைகளிலும் நிர்மலமாகத் திகழ்கிறது. சரிதங்களும் {ஆறுகளும்}, சரஸ்களும் {பொய்கைகளும்} தெளிந்து காணப்படுகின்றன.(14) ஹரிபுங்கவரே {குரங்குகளில் சிறந்தவரே}, பிராப்த உத்யோக காலத்தை {போர்த்தொழிலுக்குரிய காலம் வாய்த்திருப்பதை} உணராமல் நீர் பிரமத்தத்தில் {குடிமயக்கத்தில்} இருப்பதாலேயே இந்த லக்ஷ்மணர் இங்கே வந்திருக்கிறார்.(15) தாரம் அபகரிக்கப்பட்ட கவலையில் இருப்பவரும், மஹாத்மாவுமான ராகவர், மற்றொரு புருஷன் {மனிதனான லக்ஷ்மணர்} மூலம் சொல்லி அனுப்பியிருக்கும் கடுஞ்சொற்களை நீர் பொறுத்துக் கொள்ளவே வேண்டும்.(16) கைகளைக் கூப்பி லக்ஷ்மணரின் அருளை நாடுவதைத் தவிர, நீர் செய்திருக்கும் அபராதத்தை {லக்ஷ்மணர்} பொறுத்துக் கொள்ளத் தகுந்த வேறெதையும் நான் காணவில்லை.(17)
நியமிக்கப்பட்டிருக்கும் மந்திரிகள், பார்த்திபனுக்கு அவசியம் ஹிதமான சொற்களைச் சொல்ல வேண்டும் என்பதாலேயே பயத்தைக் கைவிட்டு, உறுதியான சொற்களைச் சொல்கிறேன்.(18) இராகவர், அதிகுரோதம் கொண்டால், தமது வில்லை உயர்த்தி, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட ஜகத்தைத் தன் வசத்தில் ஸ்தாபித்துக் கொள்ளும் சமர்த்தராவார்.(19) பூர்வத்தில் உபகாரம் பெற்றதை மறவாதிருப்பவனும், விசேஷமாக கிருதஜ்ஞனுமான {நன்றிமறவாதவனுமான} ஒருவன், எவனுக்கு மீண்டும் அருள்புரிய வேண்டுமோ அவனை கோபமடையச் செய்வது தகாது.(20) இராஜரே, புத்திரனுடனும், நல்ல ஹிருதயம் கொண்ட ஜனங்களுடனும் நீர் அவரிடம் சென்று {நெடுஞ்சாண்கிடையாக விழுந்து} தலையால் வணங்கி, பர்த்தாவிடம் செல்லும் பாரியையைப் போல அவரது வசத்தை அடைவீராக.(21) கபீந்திரரே {குரங்குகளின் தலைவரே}, இராம, ராமானுஜர்களின் சாசனங்களை {ராமலக்ஷ்மணர்களின் ஆணைகளை} மனத்தாலும் நீர் புறக்கணித்தல் யுக்தமன்று {தகாது}. ஸுரேந்திரனின் {தேவர்களின் இந்திரனுடைய} பிரகாசத்தைக் கொண்ட அந்த ராகவரின், மானுஷ பலத்தை மனத்தால் நீர் அறிவீர்" {என்றான் ஹனுமான்}.(22)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |