Mount Prasravana | Kishkindha-Kanda-Sarga-27 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிரஸ்ரவண மலையை அடைந்த ராமனும், லக்ஷ்மணனும்; அவர்கள் வசித்த மலைக்குகை குறித்த வர்ணனை...
வானரனான சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டு, குகைக்குள் {கிஷ்கிந்தைக்குள்} பிரவேசித்த பிறகு, ராமன் தன்னுடன் பிறந்தான் {தம்பி லக்ஷ்மணன்} சகிதனாகப் பிரஸ்ரவண கிரியை {பிரசிரவணம் என்ற மலையை} அடைந்தான்.(1)
அது {பிரஸ்ரவண மலையானது}, சார்தூலங்களாலும் {புலிகளாலும்}, மிருகங்களால் {மான்களாலும்} ஒலிக்கப்பெற்றும், பயங்கரமாக முழங்கும் சிங்கங்களால் நிறையப்பெற்றும், நானாவித குல்மங்களாலும், லதைகளாலும் {புதர்களாலும், கொடிகளாலும்} மறைக்கப்பட்டும், ஏராளமான மரங்களால் அடர்ந்தும்,{2} கரடிகள், வானரங்கள், கோபுச்சங்கள் ஆகியவற்றாலும், பூனைகளாலும் சேவிக்கப்பெற்றும், மேகக்குவியலுக்கு ஒப்பாக, நித்தியம் தூய நீரூற்றுகளுடன் கூடியதுமாக இருந்தது.(2,3) இராமன், சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்} சகிதனாக அந்த சைலத்தின் {மலையின்} சிகரத்தில், அகலமான பெருங்குகை ஒன்றைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டான்.(4)
அனகனும் {களங்கமற்றவனும்}, உடன்பிறந்தவனும், சுக்ரீவனிடம் {ராவண வதத்திற்கேற்ற} சமயம் குறித்த ஏற்பாட்டைச் செய்து கொண்டவனுமான ரகுநந்தனன் {ராமன்}, விநீதனும் {பணிவுள்ளவனும்}, லக்ஷ்மிவர்தனனுமான {செழிப்பை அதிகரிப்பவனுமான} தன்னுடன் பிறந்தானிடம் {லக்ஷ்மணனிடம்}, காலத்திற்குப் பொருத்தமான {பின்வரும்} மஹத்தான வாக்கியங்களை சொன்னான்:(5,6அ) "அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, சௌமித்ரியே {சுமித்திரையின் மகனே, லக்ஷ்மணா}, ரம்மியமான இந்த கிரியின் குகை விசாலமாக இருக்கிறது. மாருதத்திற்கும் {காற்றுக்கும்}, மழைக்கால ராத்திரிகளுக்குப் பொருத்தமான இவ்விடத்திலேயே நாம் வசிக்கலாம்.(6ஆ,7அ) பார்த்திவாத்மஜா {மன்னரின் மகனே}, ரம்மியமாகத் திகழும் இந்த உத்தம கிரி சிருங்கத்தில்,{7ஆ} வெளுத்தவையும், கரியவையும், சிவந்தவையுமான பாறைகள் சோபித்து {ஒளிர்ந்து} கொண்டிருக்கின்றன; நானாவித தாதுக்கள் பரவிக் கிடக்கின்றன; நதிகளும், அருவிகளும் நிறைந்திருக்கின்றன.{8} விதவிதமான விருக்ஷங்கள் அடர்ந்திருக்கின்றன; அழகிய, அற்புதமான கொடிகளும் இருக்கின்றன; நானாவித பறவைகள் எதிரொலிக்கின்றன. மயூரங்களின் நாதம் {மயில்களின் அகவல்கள்} நிறைந்திருக்கிறது.{9} மாலதி, மல்லிகை ஆகியவற்றின் புதர்களாலும், சிந்துவாரங்களும் {வெண்ணொச்சி}, ஸ்ரீசகைகளாலும் {குறிஞ்சி}, புஷ்பித்தவையான கடம்ப, அர்ஜுன {மருது}, சர்ஜங்களாலும் {ஆச்சா மரங்களாலும்} இது {பிரஸ்ரவண மலை} சோபிக்கிறது.(7ஆ-10)
நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, பூத்த பங்கஜங்கள் {தாமரைகள்} சூழ்ந்ததும், ரம்மியமானதுமான இந்த நளினி {தாமரைத்தடாகம்} நம் குகையில் இருந்து அதிக தூரத்தில் இல்லை.(11) சௌம்யா {மென்மையானவனே}, இந்த குகையின் வடகிழக்கு தேசம் {பகுதி} நன்றாகத் தாழ்ந்திருக்கிறது. மேற்கு உயர்ந்து வாதமில்லாமல் {காற்றில்லாமல்} இருக்கிறது.(12) சௌமித்ரியே, குகை துவாரத்தில் {வாயிலில்} சம தலமானதும், மழுமழுவென்ற அஞ்சன {மைக்} குவியலுக்கு ஒப்பானதும், கரியதும், அகன்றதுமான கல் அழகுடன் திகழ்கிறது.(13) தாதா {ஐயா}, இதோ பார். வடக்கில் மழுமழுப்பான அஞ்சன மைக் குவியலின் வடிவில் உதித்திருப்பதும், நீர்த்தாரையைப் போன்றதும், சுபமானதுமான இந்த கிரி சிருங்கத்தையும் {மலைச்சிகரத்தையும்},(14) தக்ஷிண {தென்} திசையில் திடமாக இருப்பதும், நானாவித தாதுக்கள் நிறைந்ததும், வெண்மையானதும், கைலாச சிகரத்தைப் போன்றதுமான மற்றொன்றையும் {மற்றொரு மலையையும்},(15) சந்தனம், திலகம், சாலம் {ஆச்சா}, தமாலம், அதிமுக்தகம் {குருக்கத்தி}, பத்மகம், சரளம் ஆகியவற்றுடனும், அசோகத்துடனும் சோபித்தபடியே, திரிகூடத்து ஜாஹ்னவியை {கங்கையைப்} போல இந்த குகையின் அகலத்திற்குக் கிழக்கு நோக்கிப் பாயும் இந்த நதியையும் {துங்கபத்திரை ஆற்றையும்} பார்[1].(16,17)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர்கள் இப்போது கிஷ்கிந்தையில் இருக்கின்றனர். திரிகூடமோ இமயமலைத்தொடரில் இருக்கிறது. அங்கே இருக்கும் கங்கையாறு இங்கே பிரஸ்ரவண {மால்யவத} மலையில் இருக்கும் துங்கபத்திரையுடன் இணக்கமாக நினைவுகூரப்படுகிறது" என்றிருக்கிறது. திரிகூடம் இலங்கையில் உள்ளது என்று ராமாயணத்தில் வேறு சில இடங்களில் வருகிறது. மூன்று மலைகளுக்கு மத்தியில் லங்காபுரி இருந்ததால் அந்த நகரமே திரிகூடம் என்று அழைக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
தீரத்தில் {ஆற்றங்கரையில்} பிறந்தவையும், நானாவித ரூபங்களைக் கொண்டவையும், அங்கேயும், இங்கேயும் இருப்பவையுமான வானீரங்கள், திமிதங்கள், வகுளங்கள் {மகிழங்கள்}, கேதகங்கள் {பேரீச்சைகள்}, ஹிந்தாலங்கள், தினிசங்கள், நீபங்கள் {கடம்பு}, வேதசங்கள், கிருதமாலகங்கள் ஆகிய மரங்களால் இது {ஆறு} வஸ்திர ஆபரணங்களுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரமதையை {பெண்மணியைப்} போல சோபிக்கிறது.(18,19) நானாவித நாதங்களை எழுப்பும் நூற்றுக்கணக்கான பக்ஷிசங்கங்களால் {பறவைக் கூட்டங்களால்} ஒலிக்கப்பெறுவதும், ஒன்றோடொன்று அன்புள்ள சக்ரவாகங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{20} அதிரம்மியமான மணற்திட்டுகளுடனும், ஹம்சங்கள், சாரஸங்கள் ஆகிவற்றுடனும் கூடிய இது {துங்கபத்திரை ஆறு}, சிரித்துக் கொண்டிருக்கும் நாரீரத்ன விபூஷிதையை {அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்ணைப்} போலத் தெரிகிறது.(20,21) சில இடங்களில் நீலோத்பலங்களாலும் {கருநெய்தல்களாலும்}, சில இடங்களில் ரக்தோத்பலங்களாலும் {செங்கழுநீர்மலர்களாலும்} மறைக்கப்பட்டிருக்கும் இது, சில இடங்களில் வெண்மையானவையும், திவ்யமானவையுமான குமுத {ஆம்பல்} மொட்டுகளுடனும் பிரகாசிக்கிறது.(22) நூற்றுக்கணக்கான நீர்ப்பறவைகள் திரிவதும், மயில்கள், கிரௌஞ்சங்கள் {அன்றில்கள்} ஆகியவற்றின் நாதங்களை எதிரொலிப்பதும், முனிசங்கங்களால் சேவிக்கப்படுவதுமான இந்த நதி ரமணீயமாக இருக்கிறது.(23)
சந்தன விருக்ஷங்களின் வரிசைகள் உண்டாக்கும் ஈர்ப்பைப் பார். சமகாலத்தில் மனத்தில் உதித்ததைப் போல, ககுபங்களும் {மருத மரங்களின் வரிசைகளும்} இங்கே புலப்படுகின்றன.(24) சத்ருநிசூதனா, சௌமித்ரியே, அஹோ, இந்த தேசம் ரமணீயமாக இருக்கிறது. இங்கே நன்றாக வசித்திருப்போம். திடமான மகிழ்ச்சியை அடைவோம்.(25) நிருபாத்மஜா {மன்னரின் மகனே}, சித்திரக் கானகங்களுடன் கூடியதும், ரம்மியமானதும், சுக்ரீவனின் புரியுமான அந்த கிஷ்கிந்தை இங்கிருந்து அதிக தூரத்தில் இல்லை.(26) ஜெயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, கீத வாத்தியங்களின் கோஷங்களும், ஆடம்பர மிருதங்கங்களுடன் கூடிய வானரர்களின் நாதமும் கேட்கின்றன.(27) கபிவரனான {குரங்குகளில் சிறந்தவனான} சுக்ரீவன், தன் பாரியையை {ருமையை} மீண்டும் அடைந்து, ராஜ்ஜியமும் வாய்க்கப்பெற்று, மஹத்தான செழிப்பை அடைந்திருக்கிறான். நிச்சயம் அவன் நண்பர்களால் சூழப்பட்டு ஆனந்தமாக இருக்க வேண்டும்" {என்றான் ராமன்}.(28)
இராகவன் இவ்வாறு சொல்லிவிட்டு, காண்பதற்கினிய ஏராளமான குகைகளுடன் கூடிய அந்தப் பிரஸ்ரவண கிரியில் லக்ஷ்மணனுடன் வசித்திருந்தான்.(29) நல்ல சுகத்துடனும், ஏராளமான திரவியத்துடனும் அந்த தரணீதரத்தில் வசித்திருந்தபோது, அந்த ராமன், அற்ப மகிழ்ச்சியிலுங்கூட நாட்டங்கொள்ளாதிருந்தான்.(30) விசேஷமாக, உதய மலையில் உதிக்கும் சஷாங்கனை {நிலவைக்} கண்டு, கடத்தப்பட்டவளும், பிராணனைவிட விலைமதிப்பற்றவளுமான தன் பாரியையை {சீதையை} நினைவுகூர்ந்து மனஞ்சோர்ந்திருந்தான்.(31) அந்த சோகத்தில், பொங்கும் கண்ணீருடனும், துடிக்கும் நனவுடனும், நிசியில் {இரவில்} சயனத்தை அடைந்தவனுக்கு நித்திரையும் வசப்படவில்லை.(32)
வருந்திக் கொண்டிருந்தவனும், நித்யம் சோகத்தில் ஆழ்ந்திருந்தவனுமான அந்த காகுத்ஸ்தனை {ராமனைத்} தேற்றியவனும், அதே அளவு துக்கத்தில் இருந்தவனும், உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணன் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(33) "வீரரே, வருந்தியது போதும். உமக்கு சோகம் தகாது. சோகத்தில் இருப்பவனின் சர்வ அர்த்தங்களும் {காரியங்கள் அனைத்தும்} மூழ்கிப் போகும் என்பதை நீர் அறிவீர்.(34) இராகவரே, உலகத்தில் காரியங்களைச் செய்பவர் நீர்; தேவர்களிடம் அர்ப்பணிப்புள்ள ஆஸ்திகரும், தர்மசீலரும், வியவசாயியும் {முயற்சியில் ஈடுபடுபவரும்} நீர்.(35) {இத்தகைய வெற்றிநடை கொண்ட} விக்ரமரான நீர், முயற்சியற்றவராக இருந்தால், கொடுங்காரியங்களைச் செய்யும் சத்ருக்களை, விசேஷமாக ராக்ஷசனானவனை {ராவணனைப்} போரில் கொல்லும் சமர்த்தராகமாட்டீர்.(36)
உமது சோகத்தை வேரோடு களைந்துவிட்டு, முயற்சியில் திடமடைந்த பிறகு, பரிவாரங்களுடன் சென்று அந்த ராக்ஷசனைக் கொல்வதே தகும்.(37) காகுத்ஸ்தரே, சாகரங்கள் {கடல்கள்}, வனங்கள் {காடுகள்}, அசலங்கள் {மலைகள்} ஆகியவற்றுடன் கூடிய பிருத்வியையும் {பூமியையே} தலைகீழாக்கும் சக்தி கொண்டவர் நீர் எனும்போது, அந்த ராவணனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(38) கனமழைக்குரிய காலம் இதோ வந்துவிட்டது. சரத் காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, ராஷ்டிரம், கணங்களுடன் {நாடு, தொண்டர்களுடன்} கூடிய அந்த ராவணனை அழிப்பீராக.(39) ஆகுதிகளைக் கொண்டு மூட்டப்பட்டு, பஸ்மத்தில் மறைந்திருக்கும் அனலனை {நீறுபூத்த நெருப்பைப்} போல உறங்கிக் கொண்டிருக்கும் உமது வீரியத்தை உரிய காலத்திலேயே நான் தூண்டுகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(40)
இராகவன், ஹிதமாகவும், சுபமாகவும் லக்ஷ்மணன் சொன்ன அந்த வாக்கியங்களுக்குப் பிரதிபூஜை செய்யும்வகையில், நல்ல ஹிருதயமும், சினேகிதமும் கொண்டவனிடம் {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(41) "இலக்ஷ்மணா, அன்பையும், சினேகத்தையும், ஹிதத்தையும் விரும்பும் சத்தியவிக்கிரமயுக்தன் {உண்மையான பராக்கிரமம் கொண்டவன்} எந்தச் சொற்களைச் சொல்வானோ, அதையே நீ சொன்னாய்.(42) சர்வ காரியங்களையும் சாதகமற்றதாக்கும் இந்த சோகத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு, விக்கிரமங்களில் தடுக்கமுடியாத தேஜஸ்ஸை நான் ஊக்குவிக்கப் போகிறேன்.(43) சுக்ரீவனும், நதியும் அருள்வதற்காகக் காத்தும் சரத்காலத்தை {கூதிர்காலத்தை} எதிர்பார்த்தும், உன் சொற்களில் நான் திடமாக நிலைத்திருப்பேன்.(44) உபகாரம் {உதவி} பெற்ற வீரன், பிரதிகாரம் {கைம்மாறு} செய்ய வேண்டும். நன்றி மறந்து பதிலுதவி செய்யாதவன், சத்வவதர்களின் {நல்லவர்களான சான்றோரின்} மனங்களைப் புண்படுத்துகிறான்" {என்றான் ராமன்}.(45)
இலக்ஷ்மணன் அதையே {ராமனால் சொல்லப்பட்டதையே} பொருத்தமானதாக ஆலோசித்து, கைகளைக் கூப்பி, அந்த பாஷிதத்திற்கு {பேச்சுக்கு} பிரதிபூஜை செய்து, தன்னுடைய நன்னோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, அழகிய தோற்றம் கொண்டவனான ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(46) "நரேந்திரரே, நீர் சொன்னது போல், வானரன் {சுக்ரீவன்} விரைவாக இல்லையெனினும் உமது விருப்பத்திற்குரிய அனைத்தையும் செய்வான். ரிபு நிக்ரஹத்தில் {பகைவனை அழிப்பதில்} திடமாகவும், சரத் காலத்தை எதிர்பார்த்தும் இருந்து, இந்த ஜலப் பிரபாதங்களை {கனமழையைப்} பொறுத்துக் கொள்வீராக.(47) சத்ருவதத்திற்கு சமர்த்தரான நீர், கோபத்தைப் பொறுத்துக் கொண்டு, சரத்காலத்தை {கூதிர்காலத்தை/ இலையுதிர்காலத்தை} எதிர்பார்த்திருந்து, சதுர் மாசங்களை {நான்கு மாதங்களைக்} கழித்து, மிருகங்களால் சேவிக்கப்படும் ராஜாவை {சிங்கத்தைப்} போல இந்த அசலத்தில் {மலையில்} என்னுடன் வசித்திருப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(48)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 48
Previous | | Sanskrit | | English | | Next |