Reconciliation of Tara | Kishkindha-Kanda-Sarga-33 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் அரண்மனைக்குள் நுழைந்த லக்ஷ்மணன்; இலக்ஷ்மணனைத் தணிவடையச் செய்யுமாறு தாரையிடம் வேண்டிய சுக்ரீவன்...
அப்போது, உள்ளே அழைக்கப்பட்டவனும், பரவீரர்களை {பகைவீரர்களை} அழிப்பவனுமான லக்ஷ்மணன், ராமசாசனத்தின் {ராமனுடைய ஆணையின்} பேரில் கிஷ்கிந்தையின் ரம்மியமான குகைக்குள் பிரவேசித்தான்.(1) அங்கே துவாரத்தில் {வாயிலில்} நிற்கும் மஹாகாயர்களும் {பேருடல் படைத்தவர்களும்}, மஹாபலவான்களுமான ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும், லக்ஷ்மணனைக் கண்டதும் கூப்பிய கைகளுடன் பின்வாங்கி நின்றனர்.(2) ஹரயர்கள் {அந்தக் குரங்குகள்}, பெருமூச்சுவிட்டுக் கொண்டு கோபத்துடன் இருக்கும் அந்த தசரதாத்மஜனை {தசரதனின் மகனான லக்ஷ்மணனைக்} கண்டு, அச்சமடைந்து அவனைச் சூழாதிருந்தனர் {அவனை அணுகாமலும், தடுக்காமலும் இருந்தனர்}.(3)
ஸ்ரீமானானவன் {லக்ஷ்மணன்}, ரத்தினமயமானதும், திவ்யமானதுமான புஷ்பித்த கானகங்களுடன் கூடியதும், ரத்தினங்களால் மறைக்கப்பட்டதும், ரம்மியமானதும், மஹத்தானதுமான அந்தக் குகையானது,(4) மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவும், நானாவித ரத்தினங்களால் விளங்குவதாகவும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பழங்களையும் தரவல்லவையும், புஷ்பித்திருப்பவையுமான விருக்ஷங்களுடனும் சோபித்துக் கொண்டிருப்பதாகவும் கண்டான்.(5) தேவ, கந்தர்வர்களின் புத்திரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, திவ்ய மாலைகளையும், ஆடைகளையும் அணிந்தவர்களும், பிரிய தரிசனந்தருபவர்களுமான வானரர்களுடன் அது {அந்தக் குகை} சோபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(6) சந்தனம், அகில், பத்மங்களின் {தாமரைகளின்} இனிய மணத்தாலும், மைரேயங்கள் {பூவில் இருந்து எடுக்கப்படும் மது வகைகள்}, {பழங்களில் இருந்து எடுக்கப்படும்} மதுவகைகளின் கந்தங்களாலும் பெரிதும் களித்திருக்கும் மஹாபாதைகளையும்,(7) பூமியில் ஓரடுக்காக இல்லாமல் {பல அடுக்குகளில்}, விந்தியம், மேரு கிரிகளுக்கு ஒப்பாக இருக்கும் அரண்மனைகளையும், தெளிவான கிரி நதிகளையும் {மலையருவிகளையும்} ராகவன் {லக்ஷ்மணன்} அங்கே கண்டான்.(8) அங்கதனின் ரம்மியமான கிருஹத்தையும், மைந்தன், துவிவிதன், கவயன், கவாக்ஷன், கஜன், சரபன்,{9} வித்யுன்மாலி, சம்பாதி, சூர்யாக்ஷன், ஹனூமன், வீரபாகு, சுபாகு, மஹாத்மாவான நளன் ஆகியோருடையவையும்,{10} அதே போல, குமுதன், ஸுஷேணன், தாரன், ஜாம்பவான், ததிவக்த்ரன், நீலன், சுபாடலன், சுநேத்ரன்{11} உள்ளிட்ட கபி முக்கியர்களான மஹாத்மாக்களுக்குரியவையும் {மஹாத்மாக்களான அந்த முக்கிய குரங்குகளுக்குரியவையும்}, ராஜமார்க்கத்தில் இருப்பவையும், மஹாசாரம் நிறைந்தவையுமான முக்கிய கிருஹங்களையும் லக்ஷ்மணன் கண்டான்.(9-12) வெண்மேகங்களைப் போல் பிரகாசிப்பவையும், மாலைகளுடன் நறுமணங்கமழ்பவையும், தன தானியங்கள் நிறைந்தவையுமான அவை {அந்த மாளிகைகள்} ஸ்திரீரத்தினங்களைப் போல விளங்கிக் கொண்டிருந்தன.(13)
வெண்மையான சைலங்களால் {மலைகளால்} சூழப்பட்டதும், அடைதற்கரியதுமான மஹேந்திரனின் சதனத்திற்கு {மாளிகைக்கு} ஒப்பாக ரம்மியமாகத் திகழ்ந்த வானரேந்திரனின் {சுக்ரீவனின்} கிருஹமானது,{14} கைலாச சிகரத்திற்கு ஒப்பான வெண்மையான அரண்மனைகளெனும் சிகரங்களைக் கொண்டும், விரும்பிய பழங்கள் அனைத்தையும் தரவல்லவையும், புஷ்பித்தவையுமான மரங்களால் சோபித்துக் கொண்டும்,{15} மஹேந்திரனால் தத்தம் செய்யப்பட்டவையும் {இந்திரனால் கொடுக்கப்பட்டவையும்}, செழிப்பானவையும், நீல மேகங்களுக்கு ஒப்பானவையும், திவ்யமான புஷ்பங்களையும், பழங்களையும் தரவல்லவையும், குளிர்ந்த சாயைகளைக் கொண்டவையும் {நிழலுள்ளவையும்}, மனத்தைக் கொள்ளை கொள்பவையுமான விருக்ஷங்களுடனும் {மரங்களுடனும்},{16} அழகு வாய்ந்த சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கையிலேந்திய ஹரிக்களால் {குரங்குகளால்} காவல் காக்கப்பட்ட துவாரத்துடனும் {வாயிலுடனும்}, திவ்ய மாலைகள் புனையப் பெற்றும், பிரகாசமான புடம்போட்ட காஞ்சன {தங்கத்} தோரணங்களுடனும் இருந்தது.{17} {இத்தகைய} இரம்மியமான சுக்ரீவனின் கிருஹத்திற்குள், மஹாபலவானான சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, பெரும் மேகத்திரளில் பாஸ்கரனை {நுழையும் சூரியனைப்} போலத் தடையின்றி பிரவேசித்தான்.(14-18)
அந்த தர்மாத்மா {லக்ஷ்மணன்}, யானங்களும் {சிவிகைகளும்}, ஆசனங்களும் நிறைந்த ஏழு கட்டுகளைக் கடந்து சென்று, பெரும் பாதுகாவலுடன் கூடிய, மஹத்தான அந்தப்புரத்தைக் கண்டான்.{19} ஹைமராஜத பர்யங்கங்களும் {பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட காதற்படுக்கைகளும்}, பெரும் விலைமதிப்புமிக்க விரிப்புகளும், சிறந்த ஆசனங்கள் ஏராளமானவையும் ஆங்காங்கே நிறைந்திருந்தன.(19,20) அவன் பிரவேசித்தவுடனேயே, தந்திவாத்தியங்களும், கீதமும் கலந்த, சமமான தாள, பத, அக்ஷரங்களுடன் {தாளம், சொல், எழுத்து ஆகியவற்றுடன்} தொடர்ந்து வரும் மதுரமான சுவனம் {இன்னொலி} காதுகளை எட்டியது.(21) அந்த மஹாபலவான் {லக்ஷ்மணன்}, பல்வேறு தன்மைகளைக் கொண்டவர்களும், ரூபத்தாலும், யௌவனத்தாலும் {இளமையாலும்} கர்வம் கொண்டவர்களுமான ஏராளமான ஸ்திரீகளை அந்த சுக்ரீவ பவனத்தில் கண்டான்.(22) அங்கே, தகுந்த குலத்தில் பிறந்து, மலர்களாலான மாலைகளைச் சூடிக்கொண்டு, சிறந்த மாலைகளை எடுத்துக் கொண்டு, உத்தம ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களைக் கண்டு,{23} சுக்ரீவனை அனுசரிப்பவர்களில் {சுக்ரீவனுக்குத் தொண்டாற்றுபவர்களில்} திருப்தியடையாதவரோ, களைப்படைந்தவரோ, மதிப்புமிக்க உடுப்புகளை உடுத்தாதவரோ எவரும் இல்லை என்பதையும் கவனித்தான் லக்ஷ்மணன்[1].(23,24)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் பின்னர் 25 முதல் 62ம் சுலோகம் வரையுள்ள செய்தி ராமாயணத்தின் செம்பதிப்பில் இல்லை" என்றிருக்கிறது.
அதன்பிறகு, ஸ்ரீமானான அந்த சௌமித்ரி {சுமித்திரையின் மகன் லக்ஷ்மணன்}, நூபுரங்களின் கூஜிதத்தையும் {சிலம்புகளின் சிணுங்கொலிகளையும்}, அதேபோல ஒட்டியாணங்களின் ஒலியையும் கேட்டு லஜ்ஜை {நாணம்} அடைந்தான்.(25) ஆபரண சுவனத்தைக் கேட்ட வீரன் {லக்ஷ்மணன்}, கோப வேகத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக, சப்தத்தால் திசைகளை நிறைத்த நாணொலியை எழுப்பினான்.(26) இராம சோகத்தால் பீடிக்கப்பட்டவனும், மஹாபாஹுவுமான லக்ஷ்மணன், நடக்கும் காரியங்களில் அருவருப்படைந்து ஏகாந்த நிலையில் {தனியாக} நின்றான்[2].(27)
[2] ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந்தேர் சுற்றவேற் கண்வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோதுபேர்க்க அருஞ் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்பார்க்கவும் அஞ்சினான் அப்பனையினும் பெரிய தோளன்.- கம்பராமாயணம் 4315ம் பாடல், கிட்கிந்தைப் படலம்பொருள்: ஆரவாரம் செய்யும் சிலம்புகள் பேரிகைகளாக முழங்க அல்குலெனும் பெரிய தேர் சுற்ற, கண்கள் வேல் படையாகவும், கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படையாகவும் மகளிர் வளைந்தபோது, பனையைவிட உயர்ந்த தோள்களைக் கொண்டவன் {லக்ஷ்மணன்}, யாராலும் மாற்றமுடியாத சீற்றம் தணிய, முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு ஒதுங்கி நின்றதோடல்லாமல் {அந்தப் பெண்களைப்} பார்க்கவும் அஞ்சினான்.
அப்போது, பிலவகாதிபனான {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான} அந்த சுக்ரீவன், அந்த வில்லின் நாணொலியால் {லக்ஷ்மணனின்} வரவை அறிந்து, அச்சமடைந்து, தன் சிறந்த ஆசனத்தில் இருந்து துடித்தெழுந்தான்.(28) "பூர்வத்தில் அங்கதன் என்னிடம் தெரிவித்தபடியே பிராத்ருவத்ஸலரான சௌமித்ரி {உடன்பிறந்தானிடம் பாசம் கொண்டவரும், சுமித்திரையின் மகனுமான லக்ஷ்மணர்} இங்கே வந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது" {என்று சொல்லிக் கொண்டான்}.(29) அங்கதன் சொன்னபடியே அந்த வானரன் {சுக்ரீவன்} நாணொலியால் எழுந்தான். இலக்ஷ்மணன் வந்துவிட்டதை உணர்ந்தவனது முகம் வாட்டமடைந்தது.(30)
அப்போது அச்சமடைந்தவனும், மனம் குழம்பியவனும், ஹரிசிரேஷ்டனுமான {குரங்குகளில் சிறந்தவனுமான} சுக்ரீவன், பிரிய தரிசனந்தரும் தாரையிடம், கலக்கமில்லாமல் ஹிதமாக {பின்வருமாறு} பேசினான்:(31) "ஸுப்ரு {அழகிய புருவங்களைக் கொண்டவளே}, இயல்பில் மிருதுவான மனங்கொண்ட இந்த ராகவானுஜர் {ராமரின் தம்பி}, எதனால் கோபத்திலிருப்பவரைப் போல ஆகிவிட்டார்? உண்மையில் அதற்கான காரணமென்ன?(32) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, குமாரரின் கோபத்திற்கான ஸ்தானமென {அடிப்படையென} எதைப் பார்க்கிறாய்? நரபுங்கவர் {மனிதர்களிற் சிறந்தவரான லக்ஷ்மணர்} காரணமில்லாமல் கோபமடையமாட்டார்.(33) நாம் இவருக்குக் கிஞ்சித்தும் பிரியமற்றதை {விருப்பமில்லாத ஏதேனுமொன்றையாவது} செய்திருக்கிறோமென நீ கருதினால், அதை உடனே புத்தியால் தீர்மானித்துக் கொண்டு, சீக்கிரமே {நான்} அறியச்செய்வாயாக.(34) அல்லது, பாமினி {அழகிய பெண்ணே}, அவரை ஸ்வயமாக {நீயே நேரடியாகச்} சென்று காண்பதே உனக்குத் தகும். தணிவடையச் செய்வதற்குப் பொருத்தமான சொற்களைப் பேசி, அருள்புரியச் செய்வதே உனக்குத் தகும்.(35) உயர்வான அந்த சுத்தாத்மா {லக்ஷ்மணர்}, உன்னை தரிசித்தால் கோபமடையமாட்டார். மஹாத்மாக்கள் ஒருபோதும் ஸ்திரீகளிடம் பயங்கரமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.(36) {சொற்களால்} தணிவடையச் செய்ய நெருங்கும் உன்னால், அவரது இந்திரியங்களும், மனமும் அமைதியடைந்த பிறகே, அரிந்தமரான கமலபத்ராக்ஷரை {பகைவரைக் கொல்பவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான லக்ஷ்மணரை} நான் காண்பேன்" {என்றான் சுக்ரீவன்}.(37)
மதத்தில் மூழ்கும் {குடிமயக்கத்தில் செருகும்} கண்களுடனும், ஒலிக்கும் ஒட்டியாணங்களுடனும், நழுவிய ஹேமசூத்திரத்துடனும் {பொன் அரைஞாணுடனும்} கூடியவளும், லக்ஷணங்கொண்டவளும், குனிந்து வணங்கும் உடலுடன் கூடியவளுமான அந்தத் தாரை, தள்ளாடி நடந்தபடியே லக்ஷ்மணனின் சந்நிதானத்தை அடைந்தாள்.(38) மஹாத்மாவான அந்த மனுஜேந்திர புத்திரன் {லக்ஷ்மணன்}, ஹரிஈசபத்தினியானவளை {குரங்கு மன்னனின் மனைவியான தாரையைக்} கண்டு, உதாசீனத்துடனும் {விருப்புவெறுப்பற்ற அலட்சிய நிலையிலும்}, ஸ்திரீயின் அருகாமையில் இருந்ததால், கோபம் ஒழித்து, முகம் கவிழ்த்தும் {தலை குனிந்தும்} நின்றான்.(39)
பானயோகத்தாலும் {குடியின் விளைவாலும்}, நரேந்திரபுத்திரனின் அருள்நிறைந்த திருஷ்டியாலும் {பார்வையாலும்}, லஜ்ஜையைத் துறந்த அந்தத் தாரை, மஹா அர்த்தம் பொதிந்ததும், பரிசாந்தரூபமுடையதும் {முழுமையாகத் தணிவடையச் செய்யவல்லதுமான பின்வரும்} வாக்கியத்தை நட்புடனும், துணிவுடனும் சொன்னாள்:(40) "மனுஜேந்திர புத்திரரே, கோபத்தின் மூலம் {வேர்} யாது? உமது வாக்கின் ஆணையைப் பின்பற்றாதவர் யாவர்? உலர்ந்த விருக்ஷங்களுடன் கூடிய வனத்தைப் பற்றியிருக்கும் தவாக்னியை {காட்டுத்தீயை} எவர் தயக்கமின்றி நெருங்குவார்?" {என்று கேட்டாள்}.(41)
அந்த லக்ஷ்மணன், தணிப்பதையே முதலாகக் கொண்டதும், மீண்டும் நட்பைக் காட்டும் அர்த்தம் பொதிந்ததுமான அவளது சொற்களைக் கேட்டு சந்தேகத்திற்கிடமில்லாத {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(42) "பர்த்தாவின் ஹிதத்திற்குத் துணை நிற்பவளே, உன் பர்த்தாவானவன் {உன் கணவன் சுக்ரீவன்} காமவிருத்தமடைந்து, தர்மார்த்தங்களை முற்றிலும் மறந்திருக்கிறான். அவனை ஏன் நீ உள்ளபடியே அறியாதிருக்கிறாய்?(43) தாரே {தாரையே}, அமைச்சர்களுடன் கூடியவன், ராஜ்ஜிய அர்த்தத்தையோ, சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களையோ சிந்திக்காமல் காமத்தில்[3] மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(44) அந்தப் பிலவகேஷ்வரன் {சுக்ரீவன்}, சதுர்மாசங்களைப் பிரமாணமாகக் கொண்டும், கட்டுக்கடங்காத மதத்தில் {குடிமயக்கத்தில்} திளைத்து காலங்கடந்துவிட்டதை உணராமல் இருக்கிறான்.(45) தர்மார்த்தங்களை {அறம், பொருளை} அடையும் நோக்கில் இவ்வாறான பானம் {குடி} மெச்சத்தக்கதல்ல. பானத்தால் தர்மார்த்தகாமங்கள் {அறம், பொருள், இன்பம் ஆகியன} அழிவடையும்.(46) செயலுக்கான பிரதி {கைம்மாறு} செய்யாதவனுக்கு, அதனாலேயே தர்மத்திற்குப் பேரழிவு உண்டாகும். குணவானான மித்திரனின் நாசத்தால் பொருளுக்கும் பேரழிவு உண்டாகும்.(47) சத்தியத்தையும், தர்மத்தையும் பின்பற்றும் மித்திரனே {நண்பனே}, அர்த்தத்தின் நோக்கிலான குணங்களில் சிறந்தவனாவான். இவ்விரண்டையும் {அர்த்தத்தையும், குணத்தையும்} கைவிட்டவன் தர்மத்திலும் நிலை கொள்ளமாட்டான்.(48) காரியங்களின் தத்துவங்களை அறிந்தவளே, தற்போதைய காரியம் இவ்வாறிருக்கையில் இதற்கு மேல் எங்கள் காரியாகாரியங்களை {நாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை} நீயே சொல்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(49)
[3] இங்கே ஒரு சில பதிப்புகளில் "காமம்" என்றும், வேறு பதிப்புகளில் "பானம்" என்றும் இருக்கிறது. பானம் என்பதை எடுத்துக் கொண்டால் "குடியில் மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்" என்ற பொருள் வரும்.
அந்தத் தாரை, தர்மார்த்தத்திற்கும் {அறம், பொருளுக்கும்}, சமாதானத்திற்கும் பொருத்தமானவையும், மதுர ஸ்வபாவம் கொண்டவையுமான அவனது {லக்ஷ்மணனின்} வாக்கியங்களைக் கேட்டு, அர்த்தம் தொலைந்த மனுஜேந்திரனின் {ராமனின்} காரியத்தில் விசுவாசம் {நம்பிக்கை} உண்டாகும்படி அவனிடம் {லக்ஷ்மணனிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னாள்:(50) "க்ஷிதிபாலபுத்திரரே {புவியாண்டவரின் மகனே}, இது கோபமடைவதற்கான காலமல்ல. சொந்த ஜனங்களிடம் கோபம் அடைவது தகாது. வீரரே, உங்கள் அர்த்தத்தை {காரியம் நிறைவேறுவதை} விரும்பும் அந்த ஜனங்களின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வதே உமக்குத் தகும்.(51) குமாரரே, குணத்தில் மேன்மையானவரால் எவ்வாறு மேன்மையற்றவரிடம் கோபமடைய முடியும்? நன்னடைக்கும், தபசுக்கும் மூலமாகத் திகழும் உம் விதமானவர் எவர்தான் கோபவசமடைவார்?(52) ஹரிவீரபந்துவின் {குரங்குத் தலைவர் சுக்ரீவரின் நண்பரான ராமரின்} கோபத்தை அறிவேன். காரியத்திற்கான காலம் தாமதமாவதையும் அறிவேன். உங்களால் எங்களுக்கு எது செய்யப்பட்டதோ அந்தக் காரியத்தையும், இப்போது ஆக வேண்டிய காரியத்தையும் அறிவேன்.(53) நரசிரேஷ்டரே, சரீரத்தில் பிறக்கும் பலத்தை {காமத்தின் வலுவை} எப்படி சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் அறிவேன். எந்த ஜனங்கள் {பெண்கள்} சுக்ரீவருடன் இடையறாமல் இப்போது காமத்தில் கட்டுண்டிருக்கின்றனர் என்பதையும் அறிவேன்.(54) நீர் எப்படி கோபவசமடைந்தீரோ, அப்படி உமது புத்தி காம தந்திரங்களில் நிலைக்கவில்லை. காமத்தில் திளைத்திருக்கும் மனுஷ்யன், தேசம், காலம், அர்த்தம், தர்மம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளமாட்டான்.(55) பரவீரஹந்தரே {பகை வீரர்களை அழிப்பவரே}, காமவிருத்தமடைந்தவரும், என் அருகில் காமவெறியால் லஜ்ஜை இழந்தவரும் {வெட்கத்தைத் துறந்தவரும்}, உம்முடன் பிறந்தவரைப் போன்றவருமான வானர வம்ச நாதரை பொறுத்துக் கொள்வீராக {சுக்ரீவரை மன்னிப்பீராக}.(56) தபங்களிலும், தர்மங்களிலும் திளைத்திருக்கும் மஹரிஷிகளே கூட, காமத்தைக் கோரி, மோகத்தில் கட்டுண்டு {மயங்கிக்} கிடக்கும் நிலையில், இயல்பிலேயே சபலங்கொண்ட கபியான {குரங்கான} இந்த ராஜா {சுக்ரீவர்}, எவ்வாறு சுகத்தில் மூழ்காதிருப்பார்?" {என்றாள் தாரை}.(57)
மதமயக்கம் கொண்ட கண்களுடன் கூடிய அந்த வானரீ {தாரை}, கணிப்புக்கு அப்பாற்பட்ட லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, வேதனையுடனும், பர்த்தாவின் ஹிதம் கருதியும் மஹா அர்த்தம் பொதிந்த சொற்களை மீண்டும் இந்த வாக்கியங்களில் சொன்னாள்:(58) "நரோத்தமரே, சுக்ரீவர் காமத்தில் மூழ்கியிருந்தாலும், உமது அர்த்தத்திற்கான பிரதி சாதனை உத்யோகத்தை {நீங்கள் செய்த காரியத்திற்குக் கைம்மாறு செய்வதற்கான முயற்சிகளை} முன்பே ஆணையிட்டிருக்கிறார்.(59) மஹாவீரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, பல்வேறு மலைகளில் வசிப்பவர்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், கோடிக்கணக்கிலுமான ஹரயர்கள் {குரங்குகள்} வந்துவிட்டனர்.(60) மஹாபாஹுவே, {உள்ளே} வருவீராக. உமது சாரித்ரத்தை ரக்ஷித்துக் கொண்டீர் {உள்ளே வராமல் உமது மரபைக் காத்துக் கொண்டீர்}. நல்லோர் மித்ரபாவத்துடன் {நண்பர்களின்} தாரங்களைப் பார்ப்பதால் நடைநயமற்றுப் போகாது" {என்றாள் தாரை}.(61) அரிந்தமனான அந்த மஹாபாஹு {பகைவரைக் கொல்பவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணன்} தாரையால் வரவேற்கப்பட்டும், {காரியத்தின்} அவசரத்தால் தூண்டப்பட்டும் உள்ளே {மாளிகைக்குள்} பிரவேசித்தான்.(62)
அப்போது சுக்ரீவன், பெரும் மதிப்புமிக்க ஆஸ்தரணங்களுடன் {விரிப்புகளுடன் / மெத்தைகளுடன்} கூடிய காஞ்சனப் பரம ஆசனத்தில் {உயர்ந்த பொன்னாசனத்தில்} ஆதித்யனுக்கு ஒப்பான ஒளியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.{63} திவ்ய ஆபரணங்கள் பூண்ட சித்திர அங்கங்களுடனும், திவ்யரூபத்துடனும் கூடியவனும், புகழ்பெற்றவனும், திவ்ய மாலைகளையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்தவனும், மஹேந்திரனைப் போன்றவனுமான அந்த வெல்லப்பட முடியாதவன் {சுக்ரீவன்},{64} திவ்ய ஆபரணங்களும், மாலைகளும் சூடிய பிரமதைகளால் {பெண்களால்} சூழப்பட்டிருந்ததால், பெருங்கோபத்தில் கண்கள் சிவந்து அந்தகனுக்கு ஒப்பானவனானான் {லக்ஷ்மணன்}.(63-65) ருமையை இறுகத் தழுவியபடியே சிறந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தவனும், சிறந்த ஹேம வர்ணனும் {உயர்ந்த பொன்வண்ணம் கொண்டவனும்}, விசால நேத்திரனுமான அந்த வீரன் {அகன்ற விழிகளும் கொண்டவனான சுக்ரீவன்}, அதீனசத்வனும் {சலியாத தின்மைபெற்றவனும்}, விசாலநேத்திரனுமான சௌமித்ரியைக் கண்டான்.(66)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 66
Previous | | Sanskrit | | English | | Next |