Rama answers | Kishkindha-Kanda-Sarga-18 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் வாலியிடம் மன்னர்கள் தர்மப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றதற்கான நியாயம் கற்பித்தது; அங்கதனைப் பாதுகாக்குமாறு ராமனை வேண்டிய வாலி...
கொல்லப்படும் வகையில் தாக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த வாலி, தர்மத்துடனும், அர்த்தத்துடனும் கூடியவையும், ஹிதமானவையும் {நலம் பயப்பவையும்}, பணிவுடனும், கடுமையுடனும் கூடியவையுமான வாக்கியங்களை ராமனிடம் இவ்வாறே சொன்னான்.(1) அப்போது ராமன், குற்றஞ்சாட்டுபவனும், பிரபையற்ற ஆதித்தியனை {ஒளியற்ற சூரியனைப்} போன்றவனும், நீரைப் பொழிந்துவிட்ட மேகத்தைப் போன்றவனும், அணைக்கப்பட்ட அனலனை {நெருப்பைப்} போன்றவனும், ஹரிசிரேஷ்டனும், ஹரேஷ்வரனுமான {குரங்குகளில் சிறந்தவனும், குரங்குகளின் தலைவனுமான} வாலியிடம், உத்தமமானவையும், தர்மமும், அர்த்தமும், குணமும் நிறைந்தவையுமான வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2,3) "தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றையும், லௌகிகம் {சமூக மரபுகள்}, சமயம் {நேரம்} ஆகியவற்றையும் முற்றும் உணராமல் இப்போது பால்யனைப் போல என்னை இதில் எவ்வாறு பழிக்கிறாய்?(4) சௌம்யா {மென்மையானவனே}, புத்தியுடன் கூடியவர்கள், ஆசாரியர்களாக ஏற்கப்படும் பெரியவர்கள் ஆகியோரிடம் கேட்காமல் வானர சாபல்யத்துடன் {குரங்கின் குறுகுறுப்புடன்} நீ இங்கே பேச விரும்புகிறாய்.(5)
சைலங்கள், வனங்கள், கானகங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்த பூமியில் உள்ள மிருக, பக்ஷி, மனுஷ்யர்களை நிக்ரஹம் செய்வதும் {தண்டிப்பதும்}, அனுக்ரஹம் {அருள்} செய்வதும் இக்ஷ்வாகுக்களுக்குரியவை.(6) தர்மாத்மாவும், சத்தியவானும், நேர்மையாளனும், தர்ம, காம, அர்த்த {அறம், பொருள், இன்பங்களின்} தத்துவங்களை அறிந்தவனும், நிக்ரஹ, அனுக்ரஹங்களைச் செய்பவனுமான பரதன் அவளை பாலிக்கிறான் {பூமியை ஆட்சி செய்கிறான்}.(7) எவனிடம் நயமும் {நேர்மையும்}, விநயமும் {இணக்கமும்}, சத்தியமும், ஸ்திதமும் {உறுதியும்}, விக்ரமமும் {வீரமும்} காணப்படுகின்றனவோ, அவனே {அந்த பரதனே} தேசத்தையும், காலத்தையும் அறிந்த ராஜாவாக இருக்கிறான்.(8) அவனது தர்மத்தால் ஆணையிடப்பட்ட நாங்களும், வேறு பார்த்திபர்களும் {மன்னர்களும்} தர்ம சந்தானத்தை இச்சித்து வசுதையெங்கும் {தர்மம் நல்ல முறையில் தொடர்வதை விரும்பி பூமியெங்கும்} அலைந்து கொண்டிருக்கிறோம்.(9) நிருபதி சார்தூலனும் {மன்னர்களில் புலியும்}, தர்மவத்சலனுமான அந்த பரதன், அகில பிருத்வியையும் பாலிக்கும்போது, எவன் தர்மத்திற்குப் பிரியமற்ற வழியில் நடப்பான்?(10)
மிக உயர்ந்த ஸ்வதர்மத்தில் {கடமையில்} பற்றுடைய நாங்கள், பரதனின் ஆணையைக் கருத்தில் கொண்டே, மார்க்கத்தில் இருந்து விலகியோரை விதிப்படி நிக்ரஹஞ் செய்கிறோம் {தண்டிக்கிறோம்}.(11) நீயோ தர்மந்தவறி நிந்திக்கத்தகுந்த கர்மங்களைச் செய்து, காம தந்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு ராஜநெறியைப் பின்பற்றாதவனாக இருக்கிறாய்.(12) தர்மத்தின் பாதையில் நடப்பவனுக்கு, ஜேஷ்டன் {அண்ணன்}, பிதா, வித்யை புகட்டுபவர் {ஆசான்} ஆகியோர் மூன்று பிதாக்கள் என்றே அறியப்படுகிறார்கள்.(13) தம்பி, புத்திரன், நற்குணங்களைக் கொண்ட சிஷ்யன் ஆகிய மூவரும் ஒருவனுக்கு புத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள். இவற்றுக்கு தர்மம் மட்டுமே காரணமாக இருக்கிறது.(14) பிலவங்கமா {தாவிக் குதிக்கும் குரங்கினத்தைச் சேர்ந்தவனே}, நல்லோரின் தர்மம் சூக்ஷ்மமானது; புரிந்து கொள்ள கடினமானது. சர்வபூதங்களின் ஹிருதயங்களிலும் உள்ள ஆத்மாவே சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} அறியும்.(15) பிறவிக் குருடர்களுடன் {ஆலோசிக்கும்} பிறவிக் குருடனை போல, சபலனான {மனம் போன போக்கில் தடுமாறுபவனான} நீ, கட்டுப்பாடில்லா ஆத்மாக்களைக் கொண்ட உன்னைப் போன்ற சபல வானரர்களுடன் ஆலோசிப்பதன் மூலம் என்ன காண முடியும்?(16) நான் இந்த சொற்களைத் தெளிவாக உனக்குச் சொல்கிறேன். நீ கேவலம் {வெறும்} கோபத்தால் என்னைக் குறை கூறுவது உனக்குத் தகாது.(17)
உன்னை எந்த அர்த்தத்தில் நான் கொன்றேன் என்பதன் காரணத்தைப் பார். சநாதன தர்மத்தைக் கைவிட்டு, உடன்பிறந்தவனின் பாரியையுடன் {உன் தம்பி சுக்ரீவனின் மனைவியான ருமையுடன்} வாழ்கிறாய்[1].(18) மஹாத்மாவான இந்த சுக்ரீவன், உயிருடன் இருக்கையில் பாபகர்மம் செய்பவனான நீ, காமத்துடன் உன் மருமகளான ருமையுடன்[2] வாழ்ந்து வருகிறாய்.(19) எனவே வானரா, தர்மந்தவறி காமவிருத்தமடைந்த {ஆசை வழியில் நடக்கும்} நீ, உடன்பிறந்தவனான இவனது பாரியையை {மனைவி ருமையைத்} தீண்டியதால் இந்த தண்டனையை அடைந்தாய்.(20) ஹரியூதபா {குரங்குக் குழுவின் தலைவா}, உலகத்திற்கு முரண்பட்டு, உலக நடைமுறையில் இருந்து பிறழ்ந்தவனை நிக்ரஹச் செய்வதை {அடக்குவதை / அழிப்பதைத்} தவிர வேறு தண்டனையை உண்மையில் நான் காணவில்லை.(21) நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியனான என்னால், உன்னுடைய பாபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எந்த நரனும், தன் மகளுடனோ, பகினியுடனோ {உடன்பிறந்த சகோதரியுடனோ}, அனுஜனின் பாரியையுடனோ {தம்பியின் மனைவியுடனோ} காமத்தில் ஈடுபட்டால், அவனுக்கு வதமே தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கிறது.(22,23அ)
[1] தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியைபெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ- கம்பராமாயணம் 4043ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: "தர்மம் இன்ன தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படும் தகுதியையும், இம்மை மறுமை ஆகிய இரண்டின் பயன்களையும் தெரிந்து எண்ணவில்லை. எண்ணியிருந்தால் அருமையானவனான உன் தம்பியின் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கியவனாக அடையப் பெறுவாயோ?" {என்றான் ராமன்}
[2] தம்பி என்பவன் மகனைப் போன்றவன் என்று இந்த சர்க்கத்தின் 14ம் சுலோகத்தில் ராமன் சொல்கிறான். எனவே வாலியின் மகனைப் போன்றவனான சுக்ரீவனின் மனைவி, வாலிக்கு மருமகளாகிறாள். இங்கே குறிப்பிடப்படும் ருமையே சுக்ரீவனின் மனைவி. தாரை வாலியின் மனைவி. வாலியின் மறைவுக்குப் பிறகு சுக்ரீவனுடன் இருக்கிறாள்.
மஹீபாலனான பரதனின் கட்டளைகளைப் பின்பற்றும் நாங்கள், தர்மத்தை மீறிய உன்னைப் புறக்கணிப்பது எவ்வாறு சாத்தியம்?(23ஆ,24அ) பிராஜ்ஞனும் {நல்லறிவுடையவனும்}, குருவும் {மேன்மையானவனும்}, தர்மத்தின் மூலம் ஆட்சி செய்பவனுமான பரதன், தர்மத்தை மீறி காம வழியில் நடப்பவர்களை நிக்ரஹஞ் செய்வதில் {அடக்குவதில் / அழிப்பதில்} திடமாக இருக்கிறான்.(24ஆ,25அ) ஹரேஷ்வரா {குரங்குகளின் தலைவா}, பரதனின் ஆணைகளை விதியாக ஏற்றுச் செயல்படும் நாங்களோ, மரியாதைகளைக் குலைக்கும் உன் விதமானவர்களை நிக்ரஹஞ் செய்வதில் திடமாக இருக்கிறோம்.(25ஆ,இ) சுக்ரீவனுடனான என் சக்யம் {நட்பு}, லக்ஷ்மணனுடன் எப்படியோ அப்படியே தாரம், ராஜ்ஜியம் நிமித்தமாக ஏற்பட்டது. அவன் {சுக்ரீவன்} எனக்கு நலம் புரிவான்[3].(26) அப்போது நான், வானரர்களின் முன்னிலையில் பிரதிஜ்ஞையை தத்தம் செய்தேன் {உறுதியளித்தேன்}. என் விதமானவன், பிரதிஜ்ஞையை மதிக்காமல் இருப்பது எவ்வாறு சாத்தியம்?[4](27) எனவே, தர்மத்திற்கு இணக்கமானவையும், அனைத்திலும் மஹத்தானவையுமான இந்தக் காரணங்களால் ஏற்பட்ட உனக்கான சாசனம் எதுவோ அது யுக்தமானதே {உனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதே} என்பதை நீ ஏற்க வேண்டும்.(28) உன்னுடைய நிக்ரஹம் அனைத்து வகையிலும் தர்மம் என்றே காணப்பட வேண்டும். தர்மத்தைப் பின்பற்றுபவன், தன் நண்பனுக்கான உதவியைச் செய்ய வேண்டும்.(29)
[3] இங்கே, "என் மனைவியான சீதையை மீட்பதற்காகவும், சுக்ரீவனின் ராஜ்ஜியத்தை மீட்பதற்காகவும் லக்ஷ்மணனிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாக எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இப்போது நான் உன்னைக் கொன்று சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்பதில் உதவியதால், இனி அவன் சீதையை மீட்பதில் எனக்கு உதவி நலம்புரிவான்" என்பது பொருள்.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆரண்ய காண்டத்தில் {3:10:18}, என் உயிரையும் துறப்பேனேயன்றி, அளித்த பிரிதிஜ்ஞையை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று சீதையிடம் சொல்கிறான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.
தர்மத்தையே பின்பற்றியிருந்தால் உன்னிடமும் அந்தக் காரியம் சாத்தியமே. சாரித்ர வத்ஸலர்களுக்கான {நல்லொழுக்கத்தை விரும்புகிறவர்களுக்கான} இரண்டு சுலோகங்களை மனு கீதம் செய்ததாக {மனு பாடியதாக நாம்} கேள்விப்படுகிறோம். தர்மகுசலர்கள் {நல்ல தர்மவான்கள்} இவற்றை ஏற்கின்றனர். நானும் அவற்றின் படியே நடந்திருக்கிறேன்.(30) பாபங்களைச் செய்யும் மாநவர்களுக்கு {மனிதர்களுக்கு}, ராஜாக்கள் தண்டனையை விதித்தால், அவர்கள் நிர்மலமடைந்து {களங்கமற்றவர்களாகி} நற்செயல்களுடன் கூடிய நல்லோரைப் போல ஸ்வர்க்கத்தை அடைவார்கள்.(31) ஒரு திருடன் சாசனத்தின் {தீர்ப்பின்} மூலமோ, விடுதலையின் மூலமோ பாபத்தில் இருந்து விடுபடுகிறான். சாசனத்தை செயல்படுத்தாத ராஜாவோ, அந்த பாபியின் களங்கத்தால் பீடிக்கப்படுகிறான்[5].(32) நீ எப்படி பாபம் இழைத்தாயோ, அப்படி ஒரு சிரமணர் {துறவி} இழைத்தபோது, என் ஆரியரான {மதிப்பிற்குரிய மூதாதையான} மாந்தாதா, தன் விருப்பத்திற்கேற்ப கோரமான விசனத்தை {துன்பத்தை / தண்டனையை} அளித்தார்.(33) பிறர் பாபம் இழைப்பதை அறியாத வசுதாதிபர்களால் {மன்னர்களால்} பிராயச்சித்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அந்த ரஜம் {களங்கம்} மட்டுப்படும்.(34) எனவே வானரசார்தூலா {வானரர்களில் புலியே}, பரிதாபம் போதும். வதம் தர்மத்துடன் விதிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல.(35)
[5] 31, 32 ஆகிய சுலோகங்களே மனு பாடியதாக ராமன் கேள்விப்பட்ட கீதம்.
மஹத்தான வீரா, ஹரிபுங்கவா {குரங்குகளில் உயர்ந்தவனே}, மேலும் மற்றொரு காரணத்தையும் கேட்பாயாக. அந்த மகத்தானதைக் கேட்டு, நீ கோபமடைவது தகாது.(36) அதில் {உன்னைக் கொன்றதில்} எனக்கு மனஸ்தாபமோ, கோபமோ இல்லை. ஹரிபுங்கவா, நரர்கள் {மனிதர்கள்}, வலைகளையும், கயிறுகளையும் கொண்டும், எண்ணற்ற கூடங்களின் {பொறிகளின்} மூலமும் மறைவாகவோ, புலப்படும்படியோ ஏராளமான மிருகங்களைப் பிடிக்கின்றனர்.(37,38அ) மாமிசம் உண்ணும் நரர்கள், அவை வேகமாகத் தாவிச் செல்லும்போதும், பயமில்லாமல் திரியும்போதும், உறுதியாக நிற்கும்போதும், விழிப்புடன் இருக்கும்போதும், கவனமற்று இருக்கும்போதும், பாரா முகமாக இருக்கும்போதும் {அந்த விலங்குகளை} மறுப்பிற்கிடமில்லாமல் கொல்கின்றனர். அதில் தோஷம் ஏதும் இல்லை.(38ஆ,39) இங்கே தர்மகோவிதர்களான ராஜரிஷிகளும் வேட்டையாடச் செல்கின்றனர். வானரா, யுத்தம் செய்யவில்லை என்றாலும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் நீ சாகை மிருகம் {கிளையில் வாழும் விலங்கு} என்பதாலேயே யுத்தம் செய்து கொண்டிருந்த உன்னை பாணம் எய்து கொன்றேன்.(40) வானர சிரேஷ்டா, ராஜாக்கள் அடைதற்கரிய தர்மத்தையும், சுபமான ஜீவிதங்களையும் {சாதகமான வாழ்க்கை முறைகளையும்} அருள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(41) மானுஷ ரூபத்தில், மஹீதலத்தில் திரியும் தேவர்களான அவர்களை ஹிம்சிப்பதோ, நிந்திப்பதோ, இகழ்ந்துரைப்பதோ, பிரியமற்ற வகையில் பேசுவதோ கூடாது.(42) நீயோ தர்மத்தை அறிந்து கொள்ளாமல், கேவலம் {வெறும்} கோபத்தின் ஆதிக்கத்தில் பித்ரு பிதாமஹர்களின் தர்மத்தில் திடமாக நிற்கும் என்னை தூஷிக்கிறாய் {தூற்றுகிறாய்}" {என்றான் ராமன்}.(43)
இராமன் இவ்வாறு கூறியதும், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான வாலி, தர்மம் குறித்த நிச்சயத்தை அடைந்து, ராகவனிடம் தோஷம் ஏதும் காணாதிருந்தான்.(44) பிறகு அந்த வானரேஷ்வரன் {வாலி}, கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} ராமனுக்கு மறுமொழி கூறினான்; "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நீ எதைச் சொன்னாயோ, அஃது அவ்வாறே இருக்கிறது. அதில் சந்தேகமேதும் இல்லை.(45) இராகவா, மேன்மையானவர்களிடம், மேன்மையற்றவர்கள் மறுமொழி கூறுவதற்கு இயன்றவர்களல்ல. நான் பூர்வத்தில் அறியாமையால் சொன்ன முறையற்ற, பிரியமற்ற வாக்கியங்களை அப்படியே கொள்ள வேண்டாம். அதற்காக என்னிடம் தோஷம் காண்பது உண்மையில் உனக்குத் தகாது.(46,47அ) நீயே அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்தவனாகவும், பிரஜைகளுக்கு நன்மை செய்ய விரும்புகிறவனாகவும், களங்கமில்லா புத்தி கொண்டவனாகவும், காரிய, காரணங்களில் தெளிவான சித்தம் கொண்டவனாகவும் இருக்கிறாய்.(47ஆ,இ) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, தர்மத்தை அறியத் தவறியவர்களில் முதன்மையான என்னை தர்மத்திற்கு சம்மதமான சொற்களால் பரிபாலிப்பாயாக" {என்றான் வாலி}.(48)
சேற்றில் சிக்கிய துவீபத்தை {யானையைப்} போன்ற வாலி, கண்ணீரால் முழுமையாக அடைக்கப்பட்ட கண்டத்துடன் {தொண்டையுடன்}, துன்புற்ற குரலில் ராமனைப் பார்த்து {பின்வருமாறு} மெதுவாகப் பேசினான்:(49) "குணசிரேஷ்டனும் {குணங்களில் சிறந்தவனும்}, கனக {பொன்} அங்கதம் பூண்டவனுமான புத்திரன் அங்கதனுக்காக எப்படியோ {எப்படி வருந்துகிறேனோ}, அப்படி எனக்காகவோ, தாரைக்காகவோ, பந்துக்களுக்காகவோ வருந்தவில்லை.(50) பால்யம் முதல் செல்லமாக வளர்ந்த அவன் {அங்கதன்}, என்னைக் காணாமல், நீரில்லாமல் வற்றிய தடாகத்தைப் போலவே உலர்ந்தவனாகப் பெரிதும் இளைத்துப் போவான்.(51) இராமா, பாலனும் {சிறுவனும்}, புத்தி முதிராதவனும் {சிறுபிள்ளைகளுக்குரிய புத்தியைக் கொண்டவனும்}, என் பிரியத்திற்குரிய ஏக புத்திரனும் {ஒரே மகனும்}, மஹாபலவானுமான தாரேயனை {தாரையின் மகனான அங்கதனை} நீ ரக்ஷிக்க வேண்டும்.(52) சுக்ரீவனிடமும், அங்கதனிடமும் உத்தம மதியை வெளிப்படுத்துவாயாக. காரியாகாரியங்களின் {செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றின்} விதங்களில் திடமான நீயே பாதுகாவலனாகவும், தண்டிப்பவனாகவும் இருக்கிறாய்.(53)
நரபதியே, ராஜாவே, பரதனிடமும், லக்ஷ்மணனிடமும் உன் அணுகுமுறை எப்படியோ, அப்படி சுக்ரீவனையும், அங்கதனையும் சிந்திப்பதே உனக்குத் தகும்.(54) என் தோஷத்தால் தோஷமடைந்தவளும், தபஸ்வினியுமான அந்த தாரையை சுக்ரீவன் எப்படி அவமதிக்காமல் இருப்பானோ, அப்படிப் பார்த்துக் கொள்வதே உனக்குத் தகும்.(55) உன் அனுகிரஹத்தைப் பெற்றவனுக்கு, உன் வசம் கட்டுப்பட்டு, உன் சித்தத்தைப் பின்பற்றுவதன் மூலம், ராஜ்ஜியத்தை நடத்தும் சாத்தியத்துடன், வசுதையை {மொத்த பூமியையும்} ஆளவும், திவத்தை {சொர்க்கத்தை} ஈட்டவுங்கூட சாத்தியப்படும்.(56,57அ) தாரையினால் தடுக்கப்பட்டும், உன்னால் வதம் செய்யப்பட விரும்பியவனைப் போல, உடன்பிறந்தவனான சுக்ரீவனுடன் நான் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டேன்" {என்றான் வாலி}. ஹரேஷ்வரனான அந்த வாலி, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு மௌனமானான்.(57ஆ,58)
தெளிந்த பார்வை கொண்டவனான அந்த ராமன், தர்மத்தின் சாரத்துடன், அர்த்தம் பொதிந்த சொற்களால் வாலியானவனை {பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தினான்:(59) "பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, இந்த அர்த்தத்திற்காக {காரணத்திற்காக} நீ வருந்த வேண்டியதில்லை. ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, நீ எங்களைக் குறித்தும், உன்னைக் குறித்தும் சிந்திக்க வேண்டியதில்லை. உன்னைப் பொறுத்தவரையில் விசேஷமாக நாங்கள் தர்மத்தின்படியே நிச்சயம் செயல்பட்டோம்.(60) எவன் தண்டிக்க வேண்டியவனுக்கு தண்டனையை விதிக்கிறானோ, எவன் தண்டனைக்குரியவனாக இருந்து தண்டனையைப் பெறுகிறானோ அவர்கள் இருவரின் காரிய, காரணங்களும் அர்த்தத்துடன் சித்தியடைவதால் வருந்த வேண்டியதில்லை.(61) எனவே, நீ இந்த தண்டனையின் யோகத்தால் களங்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறாய். தர்மத்துடன் விதிக்கப்பட்ட பாதையில், தர்மத்துடன் கூடிய உன் இயல்பை அடைந்து விட்டாய்.(62) குரங்குகளில் உயர்ந்தவனே, ஹிருதயத்தில் திடமாக உள்ள சோகம், மோஹம், பயம் ஆகியவற்றைக் கைவிடுவாயாக. விதியை மீறுவது உனக்கு சாத்தியமில்லை.(63) வானரேஷ்வரா, அங்கதன் உன்னிடம் எப்படி நடந்து கொண்டானோ, அப்படியே சுக்ரீவனிடமும், என்னிடமும் எப்போதும் நடந்து கொள்வான் என்பதில் சந்தேகமில்லை" {என்றான் ராமன்}.(64)
மஹாத்மாவும், தர்மத்தின் பாதையைப் பின்பற்றுபவனும், போரில் முற்றிலும் {எதிரியை} நொறுக்குபவனுமான அந்த ராமனின் சமாஹிதமான மதுர {ஐயத்திற்கிடமில்லாத இனிமையான} வாக்கியங்களைக் கேட்ட அந்த வானரன் {வாலி, பின்வரும்} நல்ல முறையிலான சொற்களைச் சொன்னான்:(65) "விபுவே {தலைவா}, மஹேந்திரனுக்கு ஒப்பானவனே, பீம விக்கிரமா {பயங்கர வீரம் கொண்டவனே}, நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, சரங்களின் வெப்பத்தில் நனவு மயங்கியவனான நான், அறியாமையால் உன்னை அதிகம் தூஷித்துவிட்டேன். அதைப் பொறுத்துக் கொண்டு, நீ எனக்கு அருள்புரிய வேண்டும்" {என்றான் வாலி}.(66)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 66
Previous | | Sanskrit | | English | | Next |