Wrath of Lakshmana | Kishkindha-Kanda-Sarga-34 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனைச் சந்தித்த லக்ஷ்மணன்; ராமனுக்கு அளித்த உறுதிமொழியை நினைவுகூரியது...
சுக்ரீவன், தடுக்கப்பட முடியாதவனாகப் பிரவேசித்தவனும், குரோதம் நிறைந்தவனும், புருஷரிஷபனும் {மனிதர்களிற் காளையுமான} அந்த லக்ஷ்மணனைக் கண்டு இந்திரியங்கள் {ஐம்புலன்கள்} கலங்கிப் போனான்.(1) பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவனும், நெருப்பைப் போன்ற தேஜஸ்ஸைக் கொண்டவனும், உடன்பிறந்தவனின் {ராமனின்} விசனத்தால் வேதனையில் மூழ்கியவனுமான அந்த தசரதாத்மஜனை {லக்ஷ்மணனைக்} கண்ட{2} ஹரிஸ்ரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த சுக்ரீவன்}, நன்கலங்கரிக்கப்பட்டதும், மஹேந்திரனுக்குரியதுமான மஹத்தான துவஜத்தை {கொடியைப்} போலத் தன் சுவர்ணாசனத்தில் {பொன்னாசனத்தில்} இருந்து எழுந்தான்.(2,3) ககனத்தில் தாரா கணங்களுடன் {வானத்தில் நட்சத்திரங்களுடன்} குதித்தெழும் பூர்ணச் சந்திரனைப் போல, ருமையுடன் கூடிய பிற ஸ்திரீகளுடன் சேர்ந்து சுக்ரீவன் குதித்தெழுந்தான்.(4) ரத்தம் போன்ற நயனங்களை {சிவந்த கண்களைக்} கொண்டவனான அந்த ஸ்ரீமான் {சுக்ரீவன்}, கைகளைக் கூப்பியபடியே முன்னேறி, மஹாகல்பக விருக்ஷம் {பெருங் கற்பக மரம்} போல அங்கே அசையாமல் நின்றிருந்தான்.(5)
தாரைகளுடன் கூடிய சசியை {நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரனைப்} போல ருமையுடன் ஜோடியாக நாரீகளின் {பெண்களின்} மத்தியில் நிலைத்திருந்த சுக்ரீவனிடம், குரோதத்துடன் லக்ஷ்மணன் {பின்வருமாறு} சொன்னான்:(6) "நற்குணம் கொண்டவனும், நற்குலத்தில் பிறந்தவனும், அருளுடையவனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, கிருதஜ்ஞனும் {செய்நன்றியுள்ளவனும்}, சத்தியவாதியுமான ராஜாவே உலகத்தில் போற்றப்படுகிறான்.(7) எந்த ராஜா, அதர்மத்தில் நிலைத்து, உபகாரம் செய்த மித்ரர்களிடம் {நண்பர்களிடம்} போலி பிரதிஜ்ஞைகள் செய்வானோ {போலி வாக்குறுதிகள் அளிப்பானோ} அவனைவிடக் கொடியவன் எவன்?(8) ஒரு புருஷன் {மனிதன்}, ஓர் அஷ்வத்திற்காக {குதிரைக்காகப்} பொய் வாக்குறுதி அளித்தால், அதில் நூற்றை {நூறு குதிரைகளைக்} கொன்றதாகும்[1], ஒரு பசுவிற்காகவெனில் {பொய் சொன்னால்} ஆயிரமும் {ஆயிரம் பசுக்களையும்}, ஒரு புருஷனுக்காகவெனில் {மனிதனுக்காகப் பொய் சொன்னால்} ஆத்மாவையும் {தன்னையும்}, தன் ஜனத்தையும் கொன்றதாகும்.(9) பிலவகேசுவரா {தாவிச்செல்லும் குரங்குகளின் தலைவனான சுக்ரீவா}, பூர்வத்தில் கிருதார்த்தனான {காரியம் நிறைவேறிய} எவன், மித்ரர்களுக்கு {நண்பர்களுக்கு} உண்டான பிரதியை {கைம்மாறைச்} செய்யவில்லையோ, அத்தகைய கிருதக்னன் {வஞ்சகன்}, சர்வ பூதங்களாலும் {அனைத்து உயிரினங்களாலும்} கொல்லத்தக்கவனாவான்.(10)
[1] அதாவது, "ஒரு மனிதன் ஒரு குதிரையைக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுக் கொடுக்காமல் போனால் நூறு குதிரைகளைக் கொன்ற பாபம் சம்பவிக்கும். ஒரு பசுவைக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுக் கொடுக்காமல் போனால், ஆயிரம் பசுக்களைக் கொன்ற பாபம் சம்பவிக்கும். ஒரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய கைம்மாறைச் செய்யாமல் இருந்தால் அவன் தன்னையும், தன் மக்களையும் அழித்துக் கொள்வான்" என்பது பொருளாகும். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரகலாதனுக்கும், சூதன்வானுக்கும் இடையில் நடந்த உரையாடலை, மஹாபாரதம், உத்யோக பர்வம் (5:35) குறிப்பிடுகிறது. "உயிருடன் இருப்பவர்களைக் கொல்வதையும், தற்கொலை செய்து கொள்வதையும்விட ஏற்கனவே இறந்து போன முன்னோரைக் கொல்வது குறைந்த பாபமே ஆகும்.
பிலவங்கமா {தாவிச்செல்பவனே, அத்தகைய} வஞ்சகனைக் கண்டு, சர்வலோகத்தாலும் நமஸ்கரிக்கப்படுபவனும், கோபம் நிறைந்தவனுமான பிரம்மன் {பின்வரும்} இந்த சுலோகத்தை கீதம் செய்தான் {பாசுரத்தைப் பாடினான்} என்பதை அறிவாயாக:(11) "கோக்களை {பசுக்களைக்} கொல்பவர்கள், சுரா {பானம்} பருகுபவர்கள், சௌரர்கள் {கள்வர்கள்}, அதே போல விரதபங்கம் செய்பவர்கள் ஆகியோருக்கே கல்விமான்கள் நிவர்த்தியை விதித்திருக்கிறார்களேயன்றி, வஞ்சகர்களுக்கு {செய்நன்றி கொன்றவர்களுக்கு} நிவர்த்தி என்பதே கிடையாது" {என்பது பிரம்மன் சொன்ன பாசுரம்}.(12)
வானரா, பூர்வத்தில் கிருதார்த்தனான {முதலில் காரியம் நிறைவேறியவனான} நீ, ராமருக்கான பிரதிகாரியத்தைச் செய்யாமல் இருப்பது எதற்காக? எனவே, நீ அநார்யன் {உன்னதமற்றவன்}; கிருதக்னன் {செய்நன்றி மறந்தவன் / வஞ்சகன்}; மித்யவாதியுமாகிறாய் {பொய் உரைப்பவனும் ஆகிறாய்}.(13) வானரா, கிருதார்த்தனும் {காரியம் நிறைவேறியவனும்}, ராமரின் காரியத்தை இச்சிப்பவனுமான {ராமரின் காரியத்தைச் செய்ய வேண்டுமென விரும்புகிறவனுமான} நீ, சீதையின் மார்க்கத்தைக் காணும் யத்னத்தை {முயற்சியைச்} செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதல்லவா?(14) பொய் வாக்குறுதி அளித்தவனான நீ, கிராம்ய {அற்ப} போகங்களில் மூழ்கிக் கிடக்கிறாய். சர்ப்பம் போல் கத்தும் மண்டூகமென {தவளையென} உன்னை ராமர் அறிந்தாரில்லை.(15)
மஹாபாக்கியவானும், மஹாத்மாவும், கருணாவேதியுமான {கருணை நிறைந்தவருமான} ராமராலேயே, பாபியும், துராத்மாவுமான நீ ஹரிக்களின் {குரங்குகளின்} ராஜ்ஜியத்தை அடைந்திருக்கிறாய்.(16) மஹாத்மாவான ராகவரால் செய்யப்பட்டதை நீ அறியாதிருந்தால், இப்போதே கூர்மையான பாணங்களால் கொல்லப்பட்டு வாலியைக் காண்பாய்.(17) சுக்ரீவா, சமயத்திற்கேற்ப வாலி கொல்லப்பட்டு எந்த கதியை அடைந்தானோ, அந்தப் பாதை இன்னும் அடைக்கப்பட்டுவிடவில்லை. வாலியின் பாதையில் பின்தொடர்ந்து செல்லாதே[2].(18) இக்ஷ்வாகுக்களில் சிறந்தவர் {ராமர்}, தம் கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து}, வஜ்ரத்திற்கு ஒப்பாக ஏவப்போகும் சரங்களை நீ பார்க்கவில்லை. எனவே, சுகமாகவும், சுகத்தால் சேவிக்கப்பட்டும் மனத்தில் ராமரின் காரியத்தை நீ நினைக்கிறாயில்லை." {என்றான் லக்ஷ்மணன்}.(19)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் 4:30:81ல் வரும் ராமனின் சொற்களைப் போலவே இருக்கிறது. இலக்ஷ்மணன் அதையே இங்கு திரும்பவும் கூறுகிறான்" என்றிருக்கிறது.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |