The duty to kill Rakshasas | Aranya-Kanda-Sarga-10 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களை வதம் செய்ய போர்த் தொடுக்க வேண்டியது ஏன் என்ற சீதையின் கேள்விகளுக்குப் பதிலளித்த ராமன்; முனிவர்களைப் பாதுகாப்பதே தன் பரம தர்மம் என்று சொன்னது...
வைதேஹி, தன் பர்த்தாவிடம் பக்தியுடன் இந்த வாக்கியங்களைச் சொன்னாள். தர்மத்தில் திடமான ராமன், அதைக் கேட்டு {பின்வருமாறு} ஜானகிக்கு மறுமொழி உரைத்தான்:(1) "தேவி, தர்மஜ்ஞரான ஜனகரின் மகளே, எச்சரிக்கும் வகையில் சினேகத்துடன் நீ சொன்ன இதமான சொற்கள் உன் குலத்துக்குத் தகுந்தவையே[1].(2) தேவி, 'ஒரு க்ஷத்திரியன் வில் தரித்திருந்தால், இவ்வாறான துன்ப ஓலம் எழாது' என்று நீயே சொல்கையில் {நான் வில் தரிப்பதை நீயே ஆதரிக்கும்போது} நான் என்ன சொல்வேன்?(3)
[1] மற்றொரு உரையின் பொருள் கொண்டால், "தேவி, சினேகிதத்துடன் குலத்தை {குலத்தின் பெருமை குறித்துப்} பேசும் நீ உனக்குத் தகுந்த நற்சொற்களைச் சொன்னாய்" என்ற பொருள் வரும்.
சீதே, தண்டகாரண்யத்தையே தங்கள் சரண்யமாக {வசிப்பிடமாகக்} கொண்டு, கடுமையான விரதங்களைப் பயிலும் முனிவர்கள், துயரமடைந்து, தாமே என்னை நாடி வந்து சரணமடைந்தனர்.(4) வனத்தில் காலாகாலமாக வசித்துக் கிழங்குகளையும், பழங்களையும் உண்பவர்கள், ராக்ஷசர்களின் குரூர கர்மங்களால் பீதியடைந்து சுகத்தை அடைகிறார்களில்லை[2].(5) நரமாமிசம் உண்டு ஜீவிக்கும் பயங்கர ராக்ஷசர்களால் பக்ஷிக்கப்படும் {உண்ணப்படும்} தண்டகாரண்யவாசிகளும், துவிஜசத்தமர்களுமான {உயர்ந்த இருபிறப்பாளர்களுமான} முனிவர்கள், "எங்களைக் காப்பாயாக" என்று என்னிடம் வேண்டினர்.(6,7அ)
[2] வி.வி.சுப்பாராவ்-கீர்வானி பதிப்பில், "கிழங்குகளையும், பழங்களையும் உண்ணும் தர்மத்தில் ஈடுபட்டு, வனத்தில் வசிப்பவர்கள், ராக்ஷசர்களின் குரூர கர்மங்களால் பீதியடைந்து சுகமடைகிறார்களில்லை" என்றிருக்கிறது.
இவ்வாறு அவர்களின் வாயில் இருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்ட நான், வாய்மொழியாக ஆறுதல் கூறும் வகையில், "நீங்கள் அனைவரும் எனக்கு அருள்புரிவீராக. சேவிக்கப்பட வேண்டிய விப்ரர்கள், இவ்வாறு முன் வந்து வேண்டுவது எனக்கு அவமானமாகும்" என்ற வாக்கியத்தைச் சொல்லிவிட்டு,(7ஆ-9அ) அந்த முன்னணி துவிஜர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும்" என்றும் கேட்டேன்.
அவர்கள் அனைவரும் கூடி இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(9ஆ,10அ) "இராமா, தண்டகாரண்யத்தில் காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்கள் பலர், இரக்கமின்றித் துன்புறுத்துவதால், அவர்களிடம் இருந்து எங்களைக் காப்பாயாக.(10ஆ,11அ) அனகா {பாவமற்றவனே}, வெல்லப்படமுடியாத பிசிதாசனர்களான {பச்சை மாமிசம் உண்பவர்களான} அந்த ராக்ஷசர்கள், ஹோம காலங்களிலும் {வேள்வி செய்யும் காலங்களிலும்}, பர்வ காலங்களிலும் {அமாவாசை, பௌர்ணமிகளிலும்} சரியாக இறங்கி எங்களைத் துன்புறுத்துகின்றனர்.(11ஆ,12அ) இராக்ஷசர்களால் ஒடுக்கப்படும் ஆதரவற்றோரும், கதியைத் தேடிக் கொண்டிருப்போரும், தபஸ்விகளுமான எங்களுக்கு {தற்செயலாக வந்த} நீயே பரம கதியாக வாய்த்திருக்கிறாய்.(12ஆ,13அ)
எங்கள் தபசக்தியால் நிச்சயம் நாங்கள் அந்த நிசாசரர்களை {இரவுலாவிகளைக்} கொல்லும் சக்தியுடையவர்களாகவே இருப்பினும், நீண்டகாலம் ஈட்டிய தபத்தின் பலனைக் குலைக்க விரும்பாதிருக்கிறோம்.(13ஆ.14அ) இராகவா, கடின தபம் செய்வதில் நித்தியம் பல விக்னங்கள் {எப்போதும் இடையூறுகள் பலவும்} இருக்கும். அதனாலேயே தபம் செய்வது, நடைமுறைக்கு சாத்தியமற்றதாகிவிட்டது. எனவே, ராக்ஷசர்களால் உண்ணப்பட்டாலும் {எங்கள் தபோபலம் குறையும் என்பதால்} நாங்கள் சபிக்காதிருக்கிறோம்.(14ஆ,15அ) தண்டகாரண்யத்தில் வசிக்கும் ராக்ஷசர்களால் பீடிக்கப்படும் எங்களை, உன்னுடன் பிறந்தானோடு {லக்ஷ்மணனோடு} சேர்ந்து காப்பாயாக. இந்த வனத்தில் நீயே எங்கள் நாதனாக {தலைவனாக} இருக்கிறாய்" {என்றனர் முனிவர்கள்}.(15ஆ,16அ)
ஜனகாத்மஜையே {ஜனகரின் மகளே}, இந்தச் சொற்களைக் கேட்டதும், தண்டகாரண்ய ரிஷிகளுக்கு முழுமையான பரிபாலனத்தை {பாதுகாப்பை} உறுதியளித்தேன்.(16ஆ,17அ) முனிவர்களிடம் உறுதியளித்ததற்கு மாறாகச் செயல்படுவது ஜீவித்திருக்கும் வரை என்னால் இயலாது. எப்போதும் சத்தியமே எனக்கு இஷ்டமாகும் {விருப்பத்திற்குரியதாகும்}.(17ஆ,18அ) சீதே, என் ஜீவிதத்தையும் {உயிரையும்}, லக்ஷ்மணனையும், உன்னையும் துறப்பேனேயன்றி பிரிதிஜ்ஞையை, அதிலும் விசேஷமாக பிராமணர்களுக்கு அளித்த உறுதிமொழியை ஒருபோதும் கைவிடமாட்டேன்.(18ஆ,19அ)
வைதேஹி, அதனாலேயே ரிஷிகள் வேண்டாவிட்டாலும், நான் பரிபாலன காரியத்தைச் செய்ய வேண்டும் {அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்குண்டு}. பிரதிஜ்ஞை செய்த பிறகு சொல்லவும் வேண்டுமோ?(19ஆ,20அ) சீதே, என் மீது கொண்ட சினேகத்தாலும், நட்பினாலும் இந்தச் சொற்களை நீ சொன்னாய். எனக்குத் திருப்தியே. விரும்பத்தகாதவர்கள் இவ்வாறு எச்சரிப்பதில்லை.(20ஆ,21அ) சோபனையே {அழகானவளே}, உன் குலத்திற்குப் பொருத்தமானதும், உனக்குத் தகுந்ததுமான இஃது எனக்கும் அனுகூலமானதே. சகதர்மசாரிணியான {தர்மவழியில் என்னுடன் நடப்பவளான} நீ எனக்குப் பிராணனைவிட மதிப்புமிக்கவள்" {என்றான் ராமன்}.(21ஆ,21இ)
மஹாத்மாவான ராமன், மைதிலியும், ராஜபுத்திரியுமான {மிதிலையைச் சேர்ந்த இளவரசியான} தன் பிரியத்திற்குரிய சீதையிடம் இந்த சொற்கள் அனைத்தையும் சொல்லிவிட்டு, தன் தனுவைத் தரித்துக் கொண்டு, லக்ஷ்மணனுடன் சேர்ந்து ரம்மியமான தபோவனங்களை நோக்கிச் சென்றான்.(22)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 10ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |