Tara's lamentation | Kishkindha-Kanda-Sarga-20 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விழுந்து கிடக்கும் வாலியைக் கண்டு கதறிய தாரையின் புலம்பல்...
தாராதிபனின் {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனின்} முகம் படைத்த தாரை, ராமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டதும், அந்தகனைப் போன்றதுமான சரத்தால் வீழ்ந்து, பூமியில் கிடக்கும் தன் பர்த்தாவை {கணவன் வாலியைக்} கண்டாள்.(1) அந்த பாமினி {பெண்மணி}, குஞ்சரத்திற்கு {யானைக்கு} ஒப்பானவனும், கணையால் வீழ்த்தப்பட்டுக் கிடந்தவனுமான வானரன் வாலியை அணுகி அணைத்துக் கொண்டாள்.(2) பர்வதேந்திரனுக்கு {பெரும் மலைக்கு} ஒப்பானவன், வேரறுந்த மரத்தைப் போலக் கிடப்பதைக் கண்ட தாரை, துன்பமடைந்தவளாக சோகத்தால் தபிக்கும் மனத்துடன் {பின்வருமாறு சொல்லி} கதறி அழுதாள்:(3) "போரில் பயங்கரரே, விக்ராந்தரே {வெற்றியாளரே}, சிறந்த வீரரே, பிலவதாம்வரரே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவரே}, தீனமானவளும் {பரிதாப நிலையில் இருப்பவளும்}, ஒன்றும் அறியாதவளுமான என்னிடம் இப்போது நீர் ஏன் பேசாதிருக்கிறீர்?(4)
ஹரிசார்தூலரே {குரங்குகளில் புலியே}, எழுவீராக. உத்தம சயனத்தில் {சிறந்த படுக்கையில்} படுப்பீராக. சிறந்த நிருபர்கள் {மன்னர்கள்} இவ்விதம் பூமியில் படுப்பதில்லை.(5) வசுதாதிபரே {பூமியின் தலைவரே}, உண்மையில் வசுதையே {பூமியே} உமக்குப் பிரியமிக்கவளோ? உயிர் துறந்தும் என்னைவிட்டு காத்திரங்களால் {உமது அங்கங்களால்} அவளை சேவிக்கிறீர்.(6) வீரரே, தர்மத்தின்படி செயல்படுபவரான நீர் இப்போது கிஷ்கிந்தையைப் போன்ற ரம்மியமான புரியை ஸ்வர்க்க மார்க்கத்தில் நிர்மாணித்திருப்பது தெளிவாகிறது.(7)
மதுகந்தம் {தேன்மணம்} வீசும் வனங்களில், அந்தந்த காலங்களில் நீர் எங்களுடன் கூடி விளையாடுவதை எல்லாம் இத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்.(8) யூதபர்களில் மஹாயூதபரே {குழுத்தலைவர்களில் பெருந்தலைவரே}, நீர் பஞ்சத்வத்தை அடைந்ததால் {இறந்ததால்} நான் ஆனந்தமிழந்து, ஆசையிழந்து {நம்பிக்கையிழந்து} சோக சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்[1].(9) நீர் கொல்லப்பட்டு புவியில் கிடப்பதைக் கண்ட சோகத்தால் பீடிக்கப்பட்டும், இன்னும் ஆயிரந்துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால் என் ஹிருதயம் {கல்லைப் போல} மிக திடமானதுதான்.(10)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்றிருக்கிறது.
பிலவகாதிபரே {தாவிச் செல்பவையான குரங்குகளின் தலைவரே}, எதற்காக சுக்ரீவரின் பாரியையை {ருமையை} அபகரித்து, அவரையும் {சுக்ரீவரையும் கிஷ்கிந்தையில் இருந்து} விரட்டினீரோ, அதற்காகவே இந்த விளைவை நீர் அடைந்தீர்.(11) வானரேந்திரரே, {உமது} நலத்தில் விருப்பத்துடன் கூடிய ஹிதைஷிணியாக {நலம்விரும்பியாக} நான் உமக்கு ஹிதமான {நன்மைபயக்கும்} வாக்கியத்தைச் சொன்னாலும், மோஹத்தால் {அறியாமையால்} நீர் என்னை நிந்தித்தீர்.(12) மாநதரே {மதிப்பளிப்பவரே}, ஆரியரே, ரூபத்தாலும், யௌவனத்தாலும் {வடிவழகாலும், இளமையாலும்} செருக்குற்றவர்களும், தக்ஷிணைகளுமான {[காதல் விளையாட்டுகளில்] திறன்மிக்கவர்களுமான} அப்சரஸ்களின் சித்தங்களை நிச்சயம் நீர் கொள்ளை கொள்ளப் போகிறீர்[2].(13) எவன் வசமில்லாத உம்மை, பலாத்காரமாக சுக்ரீவரின் வசம் அடையச் செய்தானோ அந்தக் காலனே நிச்சயம் உமக்கு ஜீவிதாந்தகன் {உயிருக்கு முடிவை ஏற்படுத்தியவன்}. இதில் சந்தேகமில்லை.(14) வேறொருவருடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வாலியை {உம்மை}, முறையற்ற, பழிக்கத்தக்க வகையில் கொன்றும், காகுத்ஸ்தன் {ராமன்} வருந்தாமல் இருக்கிறான்[3].(15)
[2] தர்மாலயப் பதிப்பில், "உமக்கு இப்பொழுது உயிருக்கு முடிவை விளைவிக்கிறதாகிய காலமிது. இதற்கையமின்று. எவர் கையிலுமகப்படாத நீர் அதனால் பிடிவாதமாய் சுக்ரீவனது கையில் சிக்கிக் கொண்டீர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நீ எவர்க்கும் ஸ்வாதீனப்படாதவன். இப்படிப்பட்ட உன்னைத் தனது ஸாமர்த்யத்தினால் மனமயங்கச் செய்து ஸுக்ரீவன் வசம் அகப்படும்படி செய்தது, உன் ப்ராணன்களைக் கொள்ளும் பொருட்டு வந்த ம்ருத்யுவேயன்றி வேறன்று" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இக்காலம் தேவருடைய ஆயுளை மாய்க்குங்காலந்தான்போலும், இல்லாவிடின் இந்த ஸுக்ரீவனுக்கு வசமாகி இப்படி யழிந்திருப்பீரோ?" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் செம்பதிப்பு, கிழக்கு பாடம் முதலிய சில பதிப்புகளில் இல்லை" என்றிருக்கிறது. தாரையின் புலம்பலில் இந்த சுலோகம் தொடர்பின்றி ஒட்டாமல் வருவதாகவே தெரிகிறது. இறந்து போகும் வாலியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வேறு யாரிடமோ தாரை பேசுவதைப் போலாகிவிடுகிறது. இந்த சுலோகத்தில் "வாலி" என்று வரும் இடத்தில் "உம்மை" என்ற சொல் வந்தால் தாரையின் புலம்பல் சரியாக இருக்கும்.
பூர்வத்தில் {இதற்குமுன்} கிருபைக்குரியவளாகவோ, துக்கப்படுபவளாகவோ இல்லாதவள், இப்போது சோகத்தில் மூழ்கியவளாக அநாதையைப் போல கிருபைக்குரிய வைதவ்யத்தை {கைம்மையை / விதவைத் தன்மையை} அடைந்திருக்கிறேன்.(16) செல்லமாக வளர்க்கப்பட்டவனும், சுகுமாரனும், வீரனுமான என் அங்கதன், குரோதத்தில் மூர்ச்சித்திருக்கும் பிதாவின் தம்பியிடத்தில் {சிற்றப்பன் சுக்ரீவரிடத்தில்} என்ன அவஸ்தையை அனுபவிக்கப் போகிறானோ?(17) {இவ்வளவு நேரம் வாலியிடம் பேசிக் கொண்டிருந்தவள், மகனான அங்கதன் பக்கம் திரும்பி}, புத்திரா {அங்கதா}, தர்மவத்ஸலரான உன் பிதாவை {தந்தையை} நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. வத்ஸா {குழந்தாய்}, இந்த தரிசனம் இனி கிடைப்பது துர்லபமாகும் {இனி கிடைக்காது}.(18) {அங்கதனிடம் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் வாலியிடம்}, மறுமையில் வசிக்கப் புறப்பட்டுவிட்ட நீர், உமது புத்திரனை ஆசுவாசப்படுத்துவீராக. உச்சியை முகர்ந்து இவனுக்கான செய்தியைச் சொல்வீராக.(19)
உண்மையில் ராமன் உம்மை வீழ்த்தி மஹத்தான கர்மத்தைச் செய்திருக்கிறான். சுக்ரீவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கடனற்ற நிலையை அடைந்துவிட்டான் {தன் கடமையைச் செய்துவிட்டான்}.(20) {வாலியிடம் இதைச் சொல்லிவிட்டு சுக்ரீவனின் பக்கம் திரும்பி} சுக்ரீவரே, ஆசை நிறைவேறிய நீர், உமது ருமையிடம் திரும்பிச் சென்று, கவலையேதுமின்றி ராஜ்ஜியத்தை அனுபவிப்பீராக. உடன்பிறந்த உமது பகைவர் {வாலி} கொல்லப்பட்டார்.(21) {சுக்ரீவனிடம் இதைச் சொன்ன தாரை, மீண்டும் வாலியிடம்}, வானரேஷ்வரரே {வானரங்களின் தலைவரான வாலியே}, இவ்வாறு நான் அழுதுகொண்டிருக்கும்போது, பிரியத்துடன் என்னிடம் ஏன் நீர் பேசாதிருக்கிறீர்? உமது பாரியைகளில் சிறந்தவர்கள் பலரும் இதோ இருக்கின்றனர்; பார்ப்பீராக" {என்றாள் தாரை}.(22)
சுற்றிலும் இருந்த வானரிகள், அவளது {தாரையின்} புலம்பலைக் கேட்டு, தீனமடைந்த அங்கதனை அணைத்துக் கொண்டு, துக்கத்துடன் பரிதாபகரமாகக் கதறி அழுதனர்.(23) {தாரை, மேலும் தன் புலம்பலைத் தொடர்ந்தாள்}, "அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட வலிமைமிக்க கரங்களைக் கொண்ட வீரரே, பிரிய புத்திரன் அங்கதனைக் கைவிட்டு, நெடும்பயணம் செல்வதேன்? உமது குணங்களுடன் கூடியவனும், பிரியத்திற்குரிய அழகிய வேஷத்தில் {தோற்றத்தில்} இருப்பவனுமான பிரிய புத்திரனைக் கைவிட்டு இவ்வாறு செல்வது யுக்தமன்று {முறையல்ல}.(24) {பிரியமானவரே, அழகிய வேஷம் பூண்ட வீரரே, நாதரே, அங்கதனுடன் என்னைக் கைவிட்டு, நெடும்பயணம் புறப்படும் உமக்கு, நானோ, நம் மகன் அங்கதனோ பிரியமற்ற எதைச் செய்துவிட்டோம்? ஏன் செல்கிறீர்[4]} தீர்க்கபாஹுவே {நீண்ட கரங்களைக் கொண்டவரே}, ஹரிவம்ச நாதரே {குரங்குகளின் வம்சத்தலைவரே}, வீரரே, அறியாமல் நான் உமக்கு பிரியமற்ற எதையும் செய்திருந்தால், என்னை அதற்காகப் பொறுத்துக் கொள்வீராக. என் தலை உமது பாதத்தைத் தீண்டுகிறது {உம்மை வணங்குகிறேன்}" {என்று புலம்பினாள் தாரை}[5].(25)
[4] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இருந்து இந்த அதிக சுலோகம் எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும் இந்த அதிகசுலோகம் இருக்கிறது.
[5] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்றுஉரையாய் என்வயின் ஊனம் யாவதோ- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: "'மலை போன்ற தோள்கள் புழுதி படிய தரையில் கிடப்பவனே, நீ அடைந்த கதியும் இதுவோ?' என்று கரைந்துருகாமல் நான் கதறுவதைக் கண்டும் ஒன்றும் உரைக்காமல் இருக்கிறாய். என்னிடம் உள்ள குற்றம் என்ன?" {என்றாள் தாரை}.
நிந்திக்கத்தகாத வர்ணம் {புகழத்தக்க மேனி நிறத்தைக்} கொண்டவளான தாரை, {மற்ற} வானரிகள் சகிதமாக பர்த்தாவின் {கணவன் வாலியின்} சமீபத்தில் இவ்வாறு கருணைக்குரிய வகையில் அழுதுபுலம்பி, வாலி எங்கே இருந்தானோ அந்த புவியிலேயே அமர்ந்து பிராயம் {மரணத்தை நாடி உணவைத் தவிர்க்கும் நடைமுறையை} மேற்கொள்ளத் தீர்மானித்தாள்.(26)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |