Monday 14 August 2023

வர்ஷ ருது | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 28 (66)

Rainy season | Kishkindha-Kanda-Sarga-28 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மழைக்காலத்தின் அழகை லக்ஷ்மணனிடம் வர்ணித்த ராமன்...

Lakshmana and Rama in Malyavat mountain witnessing Rainy Season

வாலி கொல்லப்பட்டு, சுக்ரீவன் அபிஷேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மால்யவத மலையில் {பிரஸ்ரவணத்தில்}[1] வசித்திருந்தபோது அந்த ராமன், லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) "அந்தக் காலம் இதோ வாய்த்திருக்கிறது. இப்போது ஜலம் வரும் சமயமாகும். கிரிக்கு {மலைக்கு} ஒப்பான மேகங்களால் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கும் நபத்தை {வானத்தை} நீ பார்ப்பாயாக.(2) வானம், பாஸ்கரனின் {சூரியனின்} கதிர்களால், சமுத்திரங்களின் ரசத்தைப் பருகி, நவமாசம் {ஒன்பது மாதம்} தரித்திருந்த ரசாயன கர்பத்தைப் பிரசவிக்க {பொழியப்} போகிறது.(3) மேகங்களெனும் படிக்கட்டுகளின் வழியே அம்பரத்தில் {வானத்தில்} ஏறி, குடஜ {காட்டுமல்லி}, அர்ஜுன {மருத மலர்} மாலைகளால் திவாகரனை {சூரியனை} அலங்கரிப்பதும் சாத்தியம் போலிருக்கிறது.(4) அம்பரமானது {வானமானது}, சந்திப்பொழுதில் உதிக்கும் தாமிர வண்ண முனைகளுடனும், அதிக வெண்மையுடனும், மென்மையாக இருக்கும் மேகங்கள் எனும் கிழிந்த துணிகளால் கட்டப்பட்ட ரணத்தை {புண்ணைப்} போலிருக்கிறது.(5)

[1] பிரஸ்ரவணம் என்பதற்கு அருவிகள் நிறைந்த மலை என்ற பொருள் உண்டு. அருவிகள் நிறைந்ததும், ராமன் தங்கியிருந்ததுமான மலையின் பெயரே மால்யவதமாகும்.

மந்தமாருதம் {தென்றல்} எனும் சுவாசத்தைக் கொண்டதும், சந்திவேளையின் சந்தனங் கலந்ததும், வெண் ஜலதங்களை {வெண்மேகங்களைக்} கொண்டதுமான அம்பரம் {வானம்}, காம ஆதுரத்தில் {சிற்றின்ப வேட்கையில் இருப்பதைப்} போலத் தோன்றுகிறது.(6) வெப்பத்தால் அதிகம் வாடியவளும், நவவாரியால் {புதுவெள்ளத்தால்} நனைந்தவளுமான இந்த மஹீ {பூமியானவள்}, சோக சந்தாபத்துடன் கூடிய சீதையைப் போலவே கண்ணீரைப் பெருக்குகிறாள்[2].(7) மேக உதரத்தில் {கருவறையில்} இருந்து வெளிப்பட்ட கற்பூர தல சீதளத்துடனும் {குளுமையுடனும்}, கேதகியின் கந்தத்துடனும் {தாழைமணத்துடனுங்} கூடிய வாதங்களை {காற்றுகளைக்} கைக்குவியலில் அடக்கிப் பருகுவதும் சாத்தியமே.(8) முற்றும் மலர்ந்த அர்ஜுனங்களாலும் {மருத மலர்களாலும்}, கேதகங்களாலும் {தாழை மலர்களாலும்} அதிக வாசனையுற்று விளங்கும் இந்த சைலம் {மால்யவதம்}, பகைவரை சாந்தப்படுத்திய சுக்ரீவனைப் போல தாரைகளால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறது.(9) மேகம் எனும் கரிய மான்தோலைத் தரித்தது போலும், {மழைத்} தாரைகள் எனும் யஜ்ஞோபவீதம் {வேள்விக்காண பூணூல்} பூண்டது போலும், மாருதம் {காற்று} நிறைந்த குகைகளைக் கொண்ட பர்வதங்கள் பிராதீதர்களை {நல்ல கல்வியாளர்களைப்} போலிருக்கின்றன.(10) 

[2] இன்நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல்
மன்மதன் மலர்க்கணை வழங்கினான் என
பொன் நெடுங் குன்றின் மேல் பொழிந்த தாரைகள்
மின்னொடும் துவன்றின மேகராசியே

- கம்பராமாயணம் 4162ம் பாடல், கார்காலப் படலம்

பொருள்: இனிய புன்னகையைக் கொண்ட சீதையைப் பிரிந்த ராமன் மேல், மன்மதன் தன் மலர் அம்புகளை எய்தது போல், மின்னல்களுடன் நெருங்கி நிறைந்திருக்கும் மேகக் கூட்டங்கள், பொன்மயமான பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழிந்தன.

தங்கச்சாட்டையெனும் மின்னல்களால் தாக்கப்பட்டதைப் போல இடியொலியை வெளியிடும் அம்பரம் {வானம்}, உள்ளே வேதனையுடன் இருப்பது போலிருக்கிறது.(11) நீல மேகத்தின் மத்தியில் துடிக்கும் மின்னலானது, ராவணனின் அங்கத்தில் {இடையில்} துடித்துக் கொண்டிருந்த தபஸ்வினியான வைதேஹியைப் போல எனக்குத் தோன்றுகிறது.(12) மன்மதவதையில் ஹிதமடைந்தவர்களுக்கு {காமமுற்றவர்களுக்கு}, புலப்படாத கிரஹங்களும், நிசாகரனும் {இரவை உண்டாக்கும் சந்திரனும்} இல்லாமல், இங்கேயும் அங்கேயும் உள்ள திசைகள் மேகங்களால் பூசப்பட்டதை {மறைக்கப்பட்டதைப்} போலிருக்கின்றன.(13) சௌமித்ரியே {லக்ஷ்மணா}, சில இடங்களில் மழையின் வருகையில் பெரிதும் மகிழ்ந்து, {ஆனந்தக்} கண்ணீரின்  வெப்பத்தால் விரிந்து, கிரியின் சாரல்களில் நின்று புஷ்பித்து, சோகத்தில் மூழ்கியிருக்கும் என்னிடம் காமத்தைத் தூண்டுபவையான குடஜங்களை {வெட்பாலைகளைப்} பார்.(14) இப்போது புழுதி அடங்கிவிட்டது; வாயுவும் {காற்றும்} குளிர்ந்திருக்கிறது; கோடைகாலத்தின் தோஷங்களும் அடங்கிவிட்டன; வசுதாதிபர்களின் யாத்திரைகளும் {படையெடுப்பதும்} நின்றுவிட்டன; வேறு இடங்களில் வசிக்கச் சென்ற நரர்கள், தங்கள் தேசங்களுக்கு {சொந்த இடங்களுக்குத்} திரும்பிச் செல்கின்றனர்.(15)

மானஸவாசத்தில் {மானஸஸரஸில் வசிக்கும்} ஆவல் கொண்ட சக்கிரவாகங்கள், பிரியத்திற்குரிய பேடுகளுடன் இதோ புறப்பட்டுவிட்டன. ஓயாது பெய்யும் மழையால் சிதைந்த மார்க்கங்களில் யானங்கள் {வழிகளில் வண்டிகள்} செல்லவில்லை.(16) சிதறுண்ட அம்புதரங்களுடன் {மேகங்களுடன்} சில இடங்களில் பிரகாசமாகவும், சில இடங்களில் பிரகாசமற்றும் நபமானது {வானமானது}, ஆங்காங்கே சில இடங்களில் பர்வதங்களால் {மலைகளால்} மறைக்கப்பட்டதாக, சாந்தமடைந்த {அலை ஓய்ந்த} ஆர்ணவத்தின் {பெருங்கடலின்} ரூபத்தைப் போன்றிருக்கிறது.(17) சர்ஜம் {ஆச்சா}, கதம்பம் ஆகியவற்றின் புஷ்பங்களால் தூவப்பெற்றும், பர்வதத்தின் தாதுக்களால் தாமிரவண்ணம் அடைந்தும் {சிவந்தும்}, மயூரங்களின் கேகாபங்களோடு {மயில்களின் அகவல்களோடு} ஒத்த ஒலியுடன் கூடியதுமாக சைலங்களில் இருந்து பாயும் நீரானது {மலையருவிகள்}, நவஜலத்தை {புதுவெள்ளத்தை} சீக்கிரமாகப் புரண்டோடச் செய்கிறது {செய்கின்றன}.(18) ரசம் {சாறு} நிறைந்ததும், சத்பதங்களை {ஆறு கால் வண்டுகளை [தேனீக்களைப்]} போன்றதும், இனிமை நிறைந்ததுமான ஜம்புபழம் {நாவற்பழம்} வேண்டிய வரையில் புசிக்கப்படுகிறது. மிகப்பக்குவமான ஆம்ரபழம் {மாம்பழம்}, பவனனால் {காற்றால்} அடிக்கப்பட்டு பூமியில் விழுகிறது.(19) வித்யுத்பதாகைகளுடன் {மின்னற்கொடிகளுடன்} சேர்ந்து, பலாகங்களின் மாலைகளுடன் {கொக்குகளின் வரிசைகளுடன்} கூடியவையும், கட்டுமானத்தில் சைலேந்திர கூடத்தின் {மலைச்சிகரத்தின்} வடிவத்தை ஒத்தவையுமான மேகங்கள், போர்க்களத்தில் நிற்கும் மத்தகஜேந்திரங்களை {மதங்கொண்ட கொழுத்த யானைகளைப்} போலவே உரத்த நாதத்துடன் கர்ஜிக்கின்றன.(20)

மழைநீரால் செழித்த புல்வெளிகளையும், உத்ஸவங்களில் ஆடுவதைப் போல் களித்தாடும் மயில்களையும், முழுமையாகப் பொழியும் பலாஹகங்களையும் {மேகங்களையும்} கொண்ட வனங்கள், பிற்பகல் வேளைகளில் அதிகம் பிரகாசிப்பதைப் பார்.(21) கொக்குகளுடன் கூடிய வாரிதரங்கள் {மேகங்கள்}, நீரின் அதிபாரத்தை நன்கு சுமந்தபடியும், கர்ஜித்தபடியும், மஹீதரங்களின் மகத்தான சிருங்கங்களில் {மலைகளின் உயர்ந்த சிகரங்களில்} ஓய்வெடுத்து, ஓய்வெடுத்து மீண்டும் செல்கின்றன.(22) கொக்குகளின் வரிசையானது, மேகத்தில் அதிகாமங்கொண்டு, இனிமையுடன் மேலே எங்கும் பறந்தபடியே, அம்பரத்தில் வாதத்தால் {வானத்தில் காற்றால்} அசைக்கப்படும் சிறந்த வெண்தாமரைகளாலான அழகிய மாலைகளைப் போல் விளங்குகிறது.(23) பால இந்திரகோபங்களால் {சிறிய தம்பலப்பூச்சிகளால்} இடையிடையே அழகுபெற்று, புதிய புல்வெளியுடன் கூடிய பூமியானது, தன் உடலில் போர்த்தப்பட்டதும், பச்சைக்கிளியின் பிரகாசம் கொண்டதும், {ஆங்காங்கே} அரக்கின் சிவப்பு தீட்டப்பட்டதுமான கம்பளத்துடன் கூடிய நாரீயை {பெண்ணைப்} போல் விளங்குகிறது.(24) நித்திரை மெதுவாகக் கேசவனை {விஷ்ணுவை} அடைகிறது; நதியும் வேகமாக சாகரத்தை அடைகிறது; மகிழ்ச்சிமிக்க கொக்குகள் மேகங்களை நெருங்குகின்றன; காமத்துடன் கூடிய காந்தையும் {பெண்ணும்} பிரியத்திற்குரியவனை {கணவனை} அடைகிறாள்.(25)

வனாந்தத்தில் {ஆழ்ந்த கானகத்தில்} மயில்கள் நன்றாக ஆடுகின்றன. கடம்பங்களில், கடம்பக் கிளைகள் பிறக்கின்றன. விருஷங்களிடமும் கோக்களிடமும் {காளைகளிடமும், பசுக்களிடமும்} சமான காமம் பிறக்கிறது. மஹீயில் {பூமியில்}, பயிர்களாலும், வனங்களாலும் அழகு பிறக்கிறது.(26) நதிகள் பாய்ந்தோடுகின்றன; மேகங்கள் மழை பொழிகின்றன; மத்தகஜங்கள் {மதயானைகள்} பிளிறுகின்றன; வனாந்தங்கள் {ஆழ்ந்த கானகங்கள்} அழகுற்று விளங்குகின்றன; பிரியை {காதலி} இல்லாதவர்கள் தவிக்கின்றனர்; மயில்கள் ஆடுகின்றன; பிலவங்கமங்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} இளைப்பாறுகின்றன.(27) கேதக புஷ்ப கந்தத்தை {தாழம்பூவின் மணத்தை} முகர்ந்து, பெரிதும் மகிழ்ச்சியடையும் கஜேந்திரங்கள் {யானையரசுகள்}, உற்சாகமடைந்து வன ஓடைகளின் {காட்டாறுகளின்} பாய்ச்சல் சப்தத்தால் வெருண்டு, மயூரங்களுடன் {மயில்களுடன்} சேர்ந்து மதத்துடன் பிளிறுகின்றன.(28) பொழியும் மழைத்தாரைகளால் அடியுண்ட கதம்ப சாகைகளில் {கிளைகளில்} தொங்கியபடியே, க்ஷணநேரத்தில் புஷ்பரஸத்தில் மூழ்கும் சத்சரணங்கள் {ஆறு கால் வண்டுகள்}, மெதுவாகவே மதத்தைக் கைவிடுகின்றன.(29) கரிப்பொடியின் குவியலுக்கு இணையானவையும், ஏராளமான ரஸத்துடன் கூடியவையுமான ஏராளமான பழங்களுடன் ஜம்பூ {நாவல்} மரங்களின் கிளைகள், சத்பதங்களால் {வண்டுகளால்} மொய்க்கப்பட்டவை போல விளங்குகின்றன.(30)

மின்னும் பதாகைகளால் {மின்னற்கொடிகளால்} அலங்கரிக்கப்பட்டவையும், பேரொலியுடன் கம்பீரமாக மேலெழுபவையுமான மேகங்களின் ரூபங்கள் போர் உற்சாகத்துடன் கூடிய வாரணங்களை {யானைகளைப்} போல் விளங்குகின்றன.(31) சைல மார்க்கத்தில் {மலைவழியில்} வனங்களை அனுசரித்துச் செல்லும் மத்த கஜேந்திரம் {மதங்கொண்ட யானை}, மேகத்தின் பேரொலியைக் கேட்டுப் பிரதி நாதம் {பகையானையின் முழக்கம்} என்று சந்தேகித்து, யுத்தத்தில் விருப்பத்துடன் முன்னேறிச் செல்லாமல் திரும்புகிறது.(32) வனாந்தம் {ஆழ்ந்த கானகம்}, சில இடங்களில் சத்பதங்களின் {ஆறுகால் வண்டுக்} கூட்டங்களால் பாடுவதைப்போலவும், சில இடங்களில் நீலகண்டங்களால் {மயில்களால்} ஆடுவதைப்போலவும், சில இடங்களில் வாரணங்களால் {யானைகளால்} மதங்கொண்டதைப் போலவும் அனேகமானவற்றை ஆதரித்து விளங்குகிறது.(33) ஏராளமான கடம்பு, சர்ஜம் {ஆச்சா}, அர்ஜுனம் {மருது}, கந்தளம் ஆகியவற்றின் மலர்களுடன், மதுவாரி பூர்ணமாக {தேன் போன்ற இனிய நீர் நிறைந்து} இருக்கும் வனாந்த பூமியானது {ஆழமான காட்டுப் பகுதியானது}, மயூரங்களின் {மயில்களின்} உற்சாக அகவல்கள், ஆடல்களால் பான பூமிக்கு {மது பருகும் இடத்திற்கு} ஒப்பாகத் தோன்றுகிறது.(34) ஸுரேந்திரனால் {தேவர்களின் இந்திரனால்} தத்தம் செய்யப்பட்டதும், முத்துக்கு சமமான பிரகாசம் கொண்டதும், நிர்மலமாக {களங்கமற்று} விழுந்து, இலைகளின் புழைகளில் தங்கி இருப்பதுமான நீரானது, பல வர்ணங்களிலான இறகுகளைக் கொண்டவையும், தாகத்துடன் கூடியவையுமான விஹங்கங்களால் {பறவைகளால்} மகிழ்ச்சியாகப் பருகப்படுகிறது.(35)

வனங்களில் சத்பதங்களின் {காடுகளில், ஆறு கால் கொண்ட வண்டுகளின்} மதுரமான தந்தி {வீணை} தொனியுடனும், பிலவங்களின் {தாவிச் செல்லும் தவளைகளின்} கண்டத்தாளங்களுடனும் {தொண்டைத் தாளங்களுடனும்}, மேகங்களின் மிருதங்க நாதத்துடனும் தொடங்கும் நிகழ்வு சங்கீதத்தைப் போலிருக்கிறது.(36) வனங்களில், சில இடங்களில் ஆடுபவையும், சில இடங்களில் கூவுபவையும், சில இடங்களில் விருக்ஷ நுனிகளில் {மரஉச்சிகளில்} அமர்ந்து தங்கள் காயங்களுடன் {உடல்களுடன்} சேர்ந்து தொங்கும் தோகையை ஆபரணங்களாகப் பூண்டவையுமான மயூரங்களின் {மயில்களின்} சங்கீத {நாட்டிய} நிகழ்ச்சி தொடங்கியதைப் போலிருக்கிறது.(37) மேகங்களின் முழக்கங்களால் விழித்துக் கொண்டவையும், ஆனேக ரூபங்களிலும், வளைவுகளிலும், வர்ணங்களிலும் இருக்கும் பிலவகங்கள் {தாவிச் செல்லும் தவளைகள்}, நீண்ட காலம் ஆழ்ந்திருந்த நித்திரையைக் கைவிட்டு, நவ அம்புதாரங்களில் {புத்தம்புதிய வெள்ளத்தில்} உற்சாகங்கொண்டு நாதிக்கின்றன {கத்துகின்றன}.(38) மேலே நீந்திவரும் சக்கிரவாகங்களுடன் பெருக்கெடுக்கும் நதிகள், அழிந்த கரைகளை உடைத்துத் தள்ளி, புதிதாகத் தானாக விழுந்து நிறைந்து, தனது தலைவனை {பெருங்கடலை} நோக்கி வேகமாகப் பாய்ந்து செல்கின்றன.(39) நீல {கரிய} மேகங்களில் சாய்பவையும், புத்தம்புது நீரை பூர்ணமாகக் கொண்டவையுமான நீலமேகங்கள், காட்டுத்தீயால் தகிக்கப்பட்ட சைலங்களில் உறுதியாக வேரை ஊன்றி, காட்டுத்தீயால் தகிக்கப்படும் சைலங்களை {மலைகளைப்} போல் விளங்குகின்றன[3].(40)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "காட்டுத்தீயால் கொளுத்தப்பட்டுக் கருத்திருக்கின்ற பர்வதங்களின் அடிப்பாகத்தில் ஒன்றோடொன்று கலந்து காட்டுத்தீயால் கொளுத்தப்பட்டுக் கறுத்த வேறு சில பர்வதங்கள் விளங்குவது போல், கறுத்த மேகங்களில் படிந்த புதிய ஜலம் நிரம்பின கறுத்த மேகங்கள் பிரகாசிக்கின்றன" என்றிருக்கிறது.

கஜங்களானவை {யானைகளானவை}, மதங்கொண்டு அகவும் மயில்கள், சக்ரகோபங்கள் {தம்பலப்பூச்சிகள்} ஆகியவற்றால் நிறைந்த புல்வெளிகள், நீபம் {கடம்பு}, அர்ஜுனம் {மருது} ஆகியவற்றின் வாசம் கொண்டதும், ரம்மியமானதுமான வனாந்தரங்களில் திரிகின்றன.(41) மகிழ்ச்சிமிக்க வண்டுகள், புதிய நீர்த்தாரைகளால் மடங்கிய கேசரங்களுடன் {மகரந்தங்களுடன்} கூடிய ஸரோருஹங்களை {தாமரை மலர்களை} வேகமாக விட்டுவிட்டு, கேசரங்களுடன் {மகரந்தங்களுடன்} கூடிய புத்தம்புதிய கடம்ப புஷ்பங்களைப் பருகுகின்றன.(42) வனங்களில் கஜேந்திரங்கள் {யானைகள்} மதங்கொண்டிருக்கின்றன; கவேந்திரங்கள் {காளைகள்} மகிழ்ச்சியுடனிருக்கின்றன; மிருகேந்திரங்கள் {சிங்கங்கள்} ஓய்ந்திருக்கின்றன; நகேந்திரங்கள் {மலைகள்} ரம்மியமாக விளங்குகின்றன; நரேந்திரர்கள் {மன்னர்கள்} போரிலிருந்து விலகியிருக்கின்றனர்; ஸுரேந்திரன் {தேவேந்திரன்} வாரிதரங்களுடன் {மேகங்களுடன்} விளையாடிக் கொண்டிருக்கிறான்.(43) சமுத்திர நாதம் மேலிடும் பெரும் நீர்ப்பெருக்குடன் ககனத்தில் {வானத்தில்} உயரும் மேகங்கள், நதிகளையும், தடாகங்களையும், சரஸ்களையும் {ஓடைகளையும்}, வாபிகளையும் {படிக்கிணறுகளையும்} மொத்த மஹீயிலும் {பூமியிலும்} பெருகச் செய்கின்றன.(44) மழைநீர் விழுந்து அகலமாக ஓடுகிறது; கடும் வேகத்துடன் வாதங்கள் {காற்றுகள்} வீசுகின்றன; கரைகளை உடைத்து, மார்க்கங்கள் பிரிந்து நதிகளில் சீக்கிரமாக ஜலம் பிரவாஹிக்கிறது.(45)

The clouds of Rainty Season Varsha ritu in Malyvat Mountain

ஸுரேந்திரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பவனனால் {காற்றால்} கொண்டுவரப்பட்டதுமான மேகமெனும் நீர்க்கும்பங்களால், நரர்களின் மூலம் நரேந்திரர்களைப் போல பர்வதேந்திரங்கள் {மலைகள்} அபிஷேகித்துக் கொண்டு, சொந்த செழிப்பின் ரூபத்தைக் காட்டுவது போலத் தெரிகிறது.(46) ககனம் {வானம்} மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது; பாஸ்கரனின் {சூரிய} தரிசனம் புலப்படவில்லை; தாரைகளும் {நக்ஷத்திரங்களும்} இல்லை; தரணீ {பூமியானவள்} புதுவெள்ளத்தால் மிகத் திருப்தியடைந்திருக்கிறாள். இருளால் மூடப்பட்ட திசைகள் இருட்டில் பிரகாசிக்காதிருக்கின்றன.(47) மலைகளில், தாரைகளால் கழுவப்பட்ட மகத்தான சிகரங்கள், தொங்கும் முத்துக்கலாபங்களை {முத்துமாலைகளைப்} போல அளவுகடந்து பெருகியோடும் வெள்ளத்தால் {அருவிகளால்} விளங்கிக் கொண்டிருக்கின்றன.(48) உத்தம சைலங்களில் {மலைகளில்}, வேகமாக விழும் மலைப்பாறைகள், அகன்று ஓடும் வெள்ளத்தால் உருட்டப்பட்டு, மயில்களால் ஒலிக்கப்பெற்ற குகைகளில் அறுந்து போன ஹாரங்கள் போல் விளங்குகின்றன.(49) பெரும் வேகமுடையவையும், அகன்றவையும், கிரிகளின் சிகரங்களைக் கழுவிச் செல்பவையும், முத்துக்கலாபங்களுக்கு {முத்தாரங்களுக்கு} ஒப்பானவையுமாகப் பாயும் பிரபாதங்கள் {அருவிகள்}, மஹாகுகைகளின் உள்ளே தரிக்கப்படுகின்றன.(50)

காதல் விளையாட்டில், அறுந்து விழுந்த ஸ்வர்க்கஸ்திரீகளின் முத்தாரங்களைப் போலவே சிறந்த நீர்த்தாரைகளும் திசைகள் எங்கும் சிதறி விழுகின்றன.(51) கூடுகளில் பதுங்கும் விஹகங்களாலும் {பறவைகளாலும்}, குவிகின்ற பங்கஜங்களாலும் {தாமரைகளாலும்}, மலரும் முல்லையாலும் {மட்டுமே} ரவி {சூரியன்} அஸ்தகதியடைவதை {மறைவதை} அறிகிறோம்.(52) நரேந்திரர்களின் யாத்திரைகள் {மன்னர்களின் படையெடுப்புகள்} நின்றுவிட்டன; சேனைகள் பாதையிலேயே நின்றுகொண்டிருக்கின்றன; வைரங்களும் {பகைகளும்}, மார்க்கங்களும் {வழிகளும்} நீரால் மறைக்கப்படுகின்றன.(53) பிரம்மத்தைப் பொறுத்தவரையில் பிரௌஷ்டபதியில் {புரட்டாசி மாதத்தில்} சாம கானங்கள் செய்யும் பிராஹ்மணர்களுக்கான இந்த அத்யாய சமயமும் {வேதாத்யயனம் செய்யும் காலமும்} வந்துவிட்டது[4].(54) கோசலாதிபனான பரதன், ஆஷாடி {ஆடி மாத பௌர்ணமி} தொடங்குவதற்கு முன்பே வெளிவேலைகளை முடித்து, வேண்டிய பொருளை நிச்சயம் சேர்த்திருப்பான்.(55) 

[4] இராமன் இவ்வாறு பேசும்போது புரட்டாசி மாதம் நடைபெறுகிறது என்பது இதன்மூலம் தெரிகிறது.

என்னைக் கண்டதும் அயோத்தியில் எழும் சுவனத்தை {உற்சாக ஒலியைப்} போலவே, நீரால் நிறைந்து அலைமோதும் சரயுவும் நிச்சயம் இப்போது பெருகியிருக்கும்.(56) பகைவனையும், தாரத்தையும் {மனைவி ருமையையும்} வென்றவனும், மஹத்தான ராஜ்ஜியத்தில் நிலைத்தவனுமான சுக்ரீவன், பல்வேறு குணங்களைக் கொண்ட இந்த மழைக்காலத்தில்[5] சுகத்தை அனுபவிக்கிறான்.(57) இலக்ஷ்மணா, தாரம் {மனைவி} அபகரிக்கப்பட்டு, மஹத்தான ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவனான நானோ, நனைந்த நதீகூலத்தை {ஆற்றங்கரையைப்} போலவே தேய்ந்து கொண்டிருக்கிறேன்.(58) என் சோகம் எல்லையற்றதாக இருக்கிறது; இந்த மாரிக்காலமும் {மழைக்காலமும்} நிச்சயம் கடப்பதற்கரிதாக இருக்கிறது. மஹாசத்ருவான {பெரும்பகைவனான} ராவணனும் வெல்லப்பட முடியாதவனெனவே எனக்குத் தோன்றுகிறது.(59) சுக்ரீவன் பணிவானவனாக இருந்தாலும், இந்த யாத்திரை செல்ல முடியாததையும், போகும் மார்க்கங்கள் {வழிகள்} கடக்க முடியாதிருப்பதையும் கண்டே நான் ஏதும் பேசாதிருக்கிறேன்.(60)

[5] வர்ஷ ருது என்று அழைக்கப்படும் இந்தப் பருவகாலம் ஆவணி, புரட்டாசி மாதங்களைக் கொண்டதாகும். தமிழில் இந்தப் பருவகாலம் கார்காலம், மாரிக்காலம், மழைக்காலம் என்று அழைக்கப்படுகிறது

பெருந்துன்பமடைந்தவனும், நீண்ட காலத்திற்குப் பிறகு தாரத்துடன் {மனைவியுடன்} சேர்ந்திருப்பவனுமான வானரனிடம் {சுக்ரீவனிடம்}, என் காரியத்தின் மகத்துவத்தைப் பேசவும் நான் விரும்பவில்லை.(61) சுக்ரீவன் இளைப்பாறியதும், காலம் வந்ததை அறிந்து கொண்டு, உபகாரம் செய்ய வேண்டியதைத் தானே அறிந்து கொள்வான் என்பதில் ஐயமில்லை.(62) எனவே, சுபலக்ஷணங்கொண்டவனே {லக்ஷ்மணா}, சுக்ரீவனும், நதிகளும் அருள் வழங்குவதை எதிர்பார்த்து நான் காத்திருக்கப் போகிறேன்.(63) உபகாரம் பெற்று, பிரதிகாரம் செய்ய வேண்டிய வீரன், நன்றிமறந்து பிரதிகாரியம் {பதிலுதவி} செய்யாமல் இருந்தால் சத்வதர்களின் {நன்மக்களின்} மனம் புண்படும்" {என்றான் ராமன்}.(64) 

இலக்ஷ்மணன், அதை மட்டுமே பொருத்தமானதாகக் கண்டு, கைகளைக் கூப்பி, {இராமனின்} அந்தப் பேச்சுக்குப் பிரதிபூஜை செய்து, தன்னுடைய நன்னோக்கத்தை தெளிவாக்கும் வகையில், இனிய தரிசனம் தந்து கொண்டிருந்த ராமனிடம் {இதைச்} சொன்னான்:(65) "நரேந்திரரே {மனிதர்களின் தலைவரே}, சீக்கிரமே இல்லையெனினும் நீர் விரும்பிய அனைத்தையும் வானரன் {சுக்ரீவன்} முழுமையாகச் செய்து முடிப்பான். ரிபுநிக்ரஹத்தில் {பகைவனை அழிப்பதில்} திடமாக இருக்கும் நீர், சரத்காலம் {கூதிர்காலம்} வரை காத்திருந்து, இந்த ஜலப்ரபாதத்தை {மழைப்பொழிவைப்} பொறுத்துக் கொள்வீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(66)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள்: 66

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை