Thursday 21 September 2023

தாரை சொன்ன காரணங்கள் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 35 (23)

Tara lists the reasons | Kishkindha-Kanda-Sarga-35 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காரிய தாமதத்திற்கான காரணங்களைச் சொல்லி லக்ஷ்மணனை சமாதானப்படுத்திய தாரை...

Tara Sugreeva and Lakshmana

தாராதிபனை {சந்திரனைப்} போன்ற முகத்தைக் கொண்டவளான தாரை, இவ்வாறு சொன்னவனும், தேஜஸ்ஸால் ஒளிர்வது போலத் தெரிந்தவனும், சௌமித்ரியுமான {சுமித்ரையின் மகனுமான} லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(1) "இலக்ஷ்மணரே, இந்த ஹரீஷ்வரர் {குரங்குகளின் தலைவரான சுக்ரீவர்} இவ்வாறு பேசப்படத்தகாதவர்; விசேஷமாக உமது நாவால் கொடுஞ்சொற்களைக் கேட்கத் தகுந்தவரல்லர்.(2) வீரரே, கபீஷ்வரரான {குரங்குகளின் தலைவரான} சுக்ரீவர் செய்நன்றி மறந்தவரல்லர்; வஞ்சகரல்லர்; கொடியவரல்லர்; பொய்ம்மை பேசுபவரல்லர்; நெறிவழுவியவருமல்லர்.(3) வீரரே, கபியான {குரங்கான} இந்த சுக்ரீவர், ரணத்தில் {போரில்} செய்வதற்கரிய யத்னத்துடன் ராமர் செய்த உபகாரத்தை மறந்துவிட்டவருமல்லர்.(4) பரந்தபரே {பகைவரை எரிப்பவரே}, சுக்ரீவர் இப்போது ராமரின் அருளையும், கீர்த்தியையும், சாஸ்வதமான கபிராஜ்ஜியத்தையும் {நிலையான குரங்கு ராஜ்ஜியத்தையும்}, ருமையையும், என்னையும் அடைந்தார்.(5) 

பூர்வத்தில் பெருந்துக்கத்தில் மூழ்கிக் கிடந்தவர், இந்த உத்தம சுகத்தை அடைந்ததும், விஷ்வாமித்ர முனி எப்படியோ, அப்படி {எதை எதை எப்போது செய்ய வேண்டுமென்ற} பிராப்த காலத்தை அறியாதிருக்கிறார்.(6) இலக்ஷ்மணரே, தர்மாத்மாவான மஹாமுனி விஷ்வாமித்ரர், தசவர்ஷங்கள் {பத்து ஆண்டுகள்} கிருதாசியுடன் இணைந்திருந்ததை ஒரே நாளெனக் கருதினார்[1].(7) காலத்தின் மதிப்பை அறிந்தவர்களில் சிறந்தவரும், மஹாதேஜஸ்வியுமான அந்த விஷ்வாமித்ரரே பிராப்த காலத்தை அறிந்தாரில்லை எனும்போது, பாமரஜனத்தால் எப்படி முடியும்?(8) இலக்ஷ்மணரே, தேஹதர்மத்தில் ஈடுபட்டவரும்[2], களைத்தவரும், காமத்தில் திருப்தியடையாதவருமான இவரது காமத்தை இப்போது பொறுத்துக் கொள்வதே தகும்.(9) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பாலகாண்டத்தில் விஷ்வாமித்ரரின் கதை சொல்லப்படுகிறது. அங்கே அவர் மேனகையுடன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேனகையும், கிருதாசியும் ஒரே அப்சரஸ்தான் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ, இவர்கள் வெவ்வேறானவர்கள் என்றும் சொல்கிறார்கள். விஷ்வாமித்ரர், பத்துவருடங்கள் கிருதாசியுடன் இருந்தவரை, ஒரு வேத முனிவருக்குரிய சந்தியா கால உபாசனைகளையும், நித்திய கர்மங்களையும் கூடக் கைவிட்டிருந்தார்" {1:63:4-14} என்றிருக்கிறது. 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எப்போதும் உயிரூட்டத்துடன் இருப்பவையும், எந்த உயிரினத்திற்கும் பொதுவானவையுமான உடற்பசிகள் நான்காகும். அவை ஆஹாரம், நித்திரை, மைதுனம், பயம், அதாவது உணவு, உறக்கம், கலவி, அச்சம் ஆகியவையாகும்" என்றிருக்கிறது.

தாதா {ஐயா}, லக்ஷ்மணரே, நிச்சயமான அர்த்தங்களை {உண்மையான காரணங்களை} அறியாமல் சாதாரணரைப் போலச் சட்டென்று கோபவசமடைவது உமக்குத் தகாது.(10) புருஷரிஷபரே {மனிதர்களிற் காளையே}, சத்வம் {நல்லியல்பு} பொருந்திய உம் விதமான புருஷர்கள், ஆலோசிக்காமல் சட்டெனக் கோபத்தின் வசமடையமாட்டார்கள்.(11) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, சமாஹிதத்துடன் கூடியவளாக, சுக்ரீவரின் அர்த்தத்திற்கான {சுக்ரீவரின் நலத்திற்கான} அருள்கூரவும், மகத்தான சினத்தால் விளையும் இந்தக் கடுமையைக் கைவிடவும் உம்மை வேண்டுகிறேன்.(12) இராமரின் பிரிய அர்த்தத்திற்காக {ராமருக்கு விருப்பமானதைச் செய்வதற்காக}, ருமையையும், என்னையும், அங்கதனையும், ராஜ்ஜியத்தையும், தனம், தானியம், பூஷணங்கள் {ஆபரணங்கள்} ஆகியவற்றையும் சுக்ரீவர் கைவிட வேண்டும் என்று என் மதி சொல்கிறது.(13) சுக்ரீவர், அந்த ராக்ஷசாதமனை {ராவணனை} ஹதம் செய்து, ரோகிணியுடன் கூடிய சஷாங்கனை {சந்திரனைப்} போல[3]சீதை சஹிதராக ராகவரை {ராமரை} அழைத்துவருவார்.(14)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திய சோதிட முறையில் அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி எனத் தொடங்கும் இருபத்தேழு நட்சத்திரங்களில் ரோகிணியும் ஒருத்தியாவாள். இவர்கள் தக்ஷப்ரஜாபதியின் மகள்களும், சந்திரனின் மனைவியருமாவர். சந்திரன், ரோகிணியிடம் அதிக விருப்பங் கொண்டு மற்ற இருபத்தறுவரையும் புறக்கணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இருபத்தாறு நட்சத்திரங்களும், தங்கள் தந்தையிடம் சென்று புகார் செய்ததன் அடிப்படையில், "சந்திரன் தேய்ந்து போகட்டும்" என்று தக்ஷப்ராஜபதி சாபமளிக்கிறான். இவ்வாறு சந்திரன் தேய்ந்த போது, அந்த இருபத்தாறு நட்சத்திரங்களும் தங்கள் தந்தையிடம் சென்று சாபத்தை விலக்கிக் கொள்ளக் கோரினர். அதன் காரணமாக சந்திரன் பதினைந்து நாட்கள் தேய்ந்து போகவும், அடுத்தப் பதினைந்து நாட்கள் வளர்ந்து வரவும், அமாவாசையில் புனித நதிகளிலும், குறிப்பாக இப்போது இல்லாது போன சரஸ்வதி நதியில், பிரபாசை என்ற இடத்தில் சந்திரன் புனித நீராட வேண்டும் என்றும் தக்ஷன் தன் சாபத்தைத் தளர்த்திக் கொண்டான். அதன்பிறகு மற்ற இருபத்தறுவரும் சந்திரன், ரோகிணியுடன் இணைந்திருப்பதில் குறுக்கீடு செய்வதை நிறுத்திக் கொண்டனர்" என்றிருக்கிறது. 

"இலங்கையில், லக்ஷம்கோடி ராக்ஷசர்களும், பத்தாயிரங்களாலான முப்பத்தாறு {மூன்று லக்ஷத்து அறுபதாயிரம்} படையினரும், இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரும் இருப்பதாகச் சொல்கின்றனர்[4].(15) தாக்கப்படமுடியாதவர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} அந்த ராக்ஷசர்களை ஹதம் செய்யாமல்,  மைதிலியைக் கடத்தியவன் எவனோ அந்த ராவணனைக் கொல்வது சாத்தியமல்ல".(16) இலக்ஷ்மணரே, "அவர்களையும், குரூர கர்மங்களைச் செய்யும் ராவணனையும், சஹாயமில்லாமல், விசேஷமாக {படைகளின் உதவி இல்லாமல்} சுக்ரீவனால், ரணத்தில் கொல்வது சாத்தியமல்ல".(17) இவ்வாறே வாலி சொல்லிக் கொண்டிருந்தார். {இலங்கையில்} அவர்களின் வரவை அந்த ஹரீஷ்வரர் {குரங்குகளின் தலைவரான வாலி} அறிந்திருந்தாலும் எனக்கதில் தெளிவில்லை. அவர் சொன்னதைக் கேட்டே நான் சொல்கிறேன்.(18)

[4] மேற்கண்டது தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் உள்ள சுலோக விளக்கமாகும். அதன் அடிக்குறிப்பில், "படைப்பிரிவின் தொகை பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட வகையில் கணித்தால் லக்ஷம்கோடியே மூன்று லக்ஷத்துத் தொண்ணூற்றொன்பதாயிரத்து அறுநூறு 100,000,03,99,600 என்ற தொகை வரும்" என்றிருக்கிறது. மற்ற ஆங்கிலப் பதிப்புகளில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "இலங்கையில் நூறாயிரம் கோடியே மூன்று லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து அறுநூறு {100,000,03,99,600} ராக்ஷசர்கள் இருக்கின்றனர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இலங்கையில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான ராக்ஷசர்கள் இருக்கின்றனர்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களையும், முப்பத்தாறு ஆயுதங்களையும் {படைப்பிரிவுகளையும்}, தடுக்கப்படமுடியாதவர்களும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவர்களுமான ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான ராக்ஷசர்களைக் கொல்லாமல், மைதிலியைக் கடத்திச் சென்ற ராவணனைக் கொல்ல இயலாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "உண்மையில் லங்கையில் லட்சம்கோடியே நான்கு லட்சத்து அறுபத்தோராயிரம் ராக்ஷசர்கள் இருக்கின்றனர்" என்றிருக்கிறது. தமிழ்ப் பதிப்புகளில், தர்மாலயப் பதிப்பில், "இலங்கையில் அரக்கர்களின் கோடி நூறாயிரவரும் முப்பத்தியாறு பதினாயிரவரும், ஆயிரக்கணக்காகவும், நூற்றுக்கணக்காகவும், இருக்கிறார்களெனக் கேள்வி" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "லங்கையில், ராக்ஷஸர்கள் லக்ஷங்கோடியே மூன்றுலக்ஷத்து அறுபதினாயிரம் பேர் இருப்பது மாத்ரமேயன்றி மேலும் பலலக்ஷக்கணக்குடைய ராக்ஷஸர்களும் இருக்கின்றனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இலங்காபுரியிலே அநேக லக்ஷங்கோடி ராக்ஷஸர்கள் குவைகுவையாக மிகக் கொடியவர்களாகவும், வேண்டியபடி ரூபந்தரித்துக்கொள்ள வல்லவர்களாகவுமிருக்கின்றனர்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "இலங்கையில் நூறாயிரம் கோடி, முப்பத்தாறு பதினாயிரங்கள் (முப்பத்தாறு லட்சம்), முப்பத்தாறாயிரம், மூவாயிரத்து அறுநூறு அரக்கர்கள் இருக்கிறார்கள்" என்றிருக்கிறது. அனைத்து உரைகளிலும் சொல்லப்பட்டிருக்கும் ராக்ஷசர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் அன்றைய லங்கை பிரம்மாண்ட நிலப்பகுதியைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். இன்றைய பாரதத்தின் மக்கள்தொகையே 141 கோடிதான் எனும்போது அன்றைய லங்கை எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும். அல்லது இந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை கவித்துவமான உயர்வுநவிற்சியணி என்றே கருத வேண்டும்.

உமக்கு யுத்தத்தில் செய்ய வேண்டிய சகாயத்தின் நிமித்தம் ஹரிபுங்கவர்களையும் {சிறந்த குரங்குகளையும்}, ஏராளமான வானரர்களையும் திரட்டிவர ஹரிபுங்கவர்கள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.(19) இந்த ஹரீஷ்வரர் {சுக்ரீவர்}, ராகவரின் நோக்கம் நிறைவேறுவதற்காக விக்ராந்தர்களும், மஹாபலவான்களுமானவர்களை அனுப்பிவிட்டுக் காத்திருப்பதால் புறப்படாதிருக்கிறார்.(20) சௌமித்ரியே, ஏற்கனவே நல்ல களப்பணிகளை எவ்வாறு ஏற்பாடு செய்ய வேண்டுமோ அப்படி முன்பே சுக்ரீவரால் அனுப்பப்பட்ட மஹாபலவான்களான அந்த வானரர்கள் அனைவரும் இதோ வந்துவிடுவார்கள்.(21) அரிந்தமரே, காகுத்ஸ்தரே, இன்று ஆயிரங்கோடி ரிக்ஷங்களும் {கரடிகளும்}, நூற்றுக்கணக்கான கோலாங்கூலங்களும் {முசுக்களும்}, ஒளிமிக்க தேஜஸ் கொண்ட அநேக கோடி கபிக்களும் {குரங்குகளும்} வந்தடைவார்கள். கோபத்தைத் தவிர்ப்பீராக[5].(22) 

[5] சீறுவாய் அல்லை - ஐய - சிறியவர் தீமை செய்தால்
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன்
வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அவ்வெல்லை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ

- கம்பராமாயணம் 4323ம் பாடல், கிட்கிந்தைப் படலம்

பொருள்: ஐயா, சீற்றம் தவிர்ப்பாயாக. சிறியவர் தீமை செய்தால் கோபத்தைப் பொறுத்துக் கொள்வாயாக. நீ இல்லாமல் வேறு யார் இருக்கின்றனர்? {சுக்ரீவன்} அயர்ந்தான் இல்லை. உலகம் எங்கும் வேறு வேறு தூதரை அனுப்பி வைத்து, அந்த இடங்களிலிருந்து சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று செய்வதற்கும் உள்ளதோ?

பிரதம பயத்தால் {முதலில் வாலியைக் கொன்றதால் உண்டான அச்சத்தால்} பீடிக்கப்பட்ட ஹரிவரவனிதைகளான {சிறந்த பெண் குரங்குகளான} நாங்கள் அனைவரும், இத்தகைய உமது முகத்தைக் கண்டும், கோபத்தால் ரத்தம் போல் சிவந்திருக்கும் நயனங்களை {கண்களைக்} கண்டும் சாந்தி இழந்திருக்கிறோம்" {என்றாள் தாரை}.(23)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 35ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை