The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; ஹனுமானை மூலிகை மலைக்கு அனுப்பி வைத்த சுஷேணன்; ஹனுமான் கொண்டு வந்த மூலிகைகளை முகர்ந்து நலமடைந்த லக்ஷ்மணன்...
சூரனான லக்ஷ்மணன், பலவானான ராவணனின் சக்தியால் {வேலாயுதத்தால்} சமரில் வீழ்த்தப்பட்டு, சோணிதத்தில் {குருதியில்} நனைந்திருப்பதைக் கண்டு,{1} துராத்மாவான ராவணனுக்கு கொந்தளிப்பான யுத்தத்தை தத்தம் செய்த அவன் {ராமன்}, பாண ஓகங்களை ஏவுகையில் சுஷேணனிடம் இதைச் சொன்னான்:(1,2) "இராவணனின் வீரியத்தால் புவியில் விழுந்திருக்கும் வீரனான இந்த லக்ஷ்மணன், சர்ப்பத்தைப் போல பூமியில் புரள்வது என் சோகத்தை அதிகரிக்கிறது.(3) என் பிராணனைவிடப் பிரியமான இந்த வீரனை சோணிதத்தில் நனைந்தவனாகப் பார்த்து, மனஞ்சிதறும் எனக்குள், யுத்தம் செய்ய இருக்கும் சக்தி என்ன?(4)
சுபலக்ஷணங்களைக் கொண்டவனும், சமரசிலாகியுமான {போரைப் போற்றுகிறவனுமான} அத்தகைய இந்த என் பிராதா {அத்தகையவனும், என்னுடன் பிறந்தவனுமான இந்த லக்ஷ்மணன்} பஞ்சத்வத்தை {மரணத்தை} அடைந்தால், எனக்குப் பிராணனாலோ, சுகத்தாலோ ஆவதென்ன {என்ன பயன்}?(5) என் வீரியம் வெட்கப்படுவதைப் போலவும், என் தனு {வில்} என் கரத்திலிருந்து நழுவுவது போலவும், சாயகங்கள் {கணைகள்} விழுவது போலவும் தெரிகிறது. என் பார்வை கண்ணீரின் வசமடைந்திருக்கிறது.(6) ஸ்வப்ன யானத்தில் செல்லும் {கனவுத்தேரில் செல்லும் / கனவில் நடந்து செல்லும்} நரர்களைப் போல, காத்திரங்கள் தொய்வடைகின்றன {என் உடலுறுப்புகள் தளர்வடைகின்றன}. என் சிந்தை {கவலை} தீவிரமாக அதிகரிக்கிறது. வாழும் விருப்பம் மரணத் தருவாயில் இருக்கிறது" {என்றான் ராமன்}.(7)
துராத்மாவான ராவணனால் மர்மங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் பிராதாவை {உடன்பிறந்தானான லக்ஷ்மணனைக்} கண்டு, துக்கத்தில் நிறைந்தவனாகப் பெருமூச்சுவிட்டான் {ராமன்}.(8) இராகவன் {ராமன்}, வெளியே திரியும் தன் பிராணனும், பிரியத்திற்குரியவனுமான பிராதாவைக் கண்டு, மஹத்தான துக்கத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்தில் ஆழ்ந்தான்.(9)
காயமடைந்த பிராதா லக்ஷ்மணனைப் போர்க்களத்தில் கண்டு, பெரும் கவலையில் ஆழ்ந்து, இந்திரியங்கள் கலங்கி, {பின்வருமாறு} புலம்பினான்:(10) "சூரா, விஜயம் கூட எனக்கு பிரியத்தை அளிக்காது {வெற்றியும் என் விருப்பத்திற்குரியதல்ல}. பார்வையை இழந்தவனுக்குச் சந்திரனால் என்ன பிரீதி உண்டாகும்?(11) எனக்கு யுத்தத்தால் {ஆகப்போவது} என்ன? பிராணனால் {ஆகப்போவது} என்ன? இந்த லக்ஷ்மணன் ரணமூர்த்தத்தில் {போர்முனையில்} தாக்கப்பட்டுக் கிடக்கையில், யுத்த காரியத்தால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.(12) வனம் செல்லும்போது, எப்படி இந்தப் பேரொளிமிக்கவன் {லக்ஷ்மணன்} என்னைப் பின்தொடர்ந்தானோ, அப்படியே நானும் யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} இவனைப் பின்தொடர்ந்து செல்வேன்.(13) பந்துஜனங்களின் விருப்பத்திற்குரியவனும், நித்தியம் என்னைப் பின்தொடர்ந்தவனுமான இவன், கபட யுத்தம் புரியும் ராக்ஷசர்களால் இந்த அவஸ்தையை அடைந்திருக்கிறான்.(14) தேசாதேசங்களில் களத்திரங்களும், தேசாதேசங்களில் பந்துக்களும் {நாடுகள் தோறும் மனைவிமாரும், நாடுகள் தோறும் உறவினர்களும்} கிடைப்பர். எந்த தேசத்திலும் சஹோதரனான இத்தகைய பிராதாவை {ஒரே கருவறையில் உடன் பிறந்தவனான இத்தகையவனை} நான் பார்க்கவில்லை" {என்றான் ராமன்}.(15)
இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்தவன், சோகத்தில் இந்திரியங்கலங்கி, கருணைக்குரிய வகையில் மனம் குழம்பி, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடியே,(16) "வெல்வதற்கரிய லக்ஷ்மணன் இல்லாமல் எனக்கு ராஜ்ஜியத்தால் ஆகப்போவது என்ன? புத்ரவத்சலையான {மகனிடம் அன்புள்ள} என் அம்பா {அன்னை} சுமித்ரையிடம் என்ன சொல்வேன்?(17) சுமித்ரை பழித்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மாதா கௌசல்யையிடம் என்ன சொல்வேன்? கைகேயியிடம் என்ன சொல்வேன்?(18) 'அவன் இவனுடன் வனம் சென்றான்; அவன் இல்லாமல் இவன் எப்படித் திரும்பி வந்தான்?' {எனும்} பரதனிடமும், மஹாபலவானான சத்ருக்னனிடமும் நான் என்ன சொல்வேன்?(19) பந்துக்களால் பழிக்கப்படுவதை விட, இங்கே நேரும் மரணமே மேலானது. வேறு ஜன்மத்தில் நான் செய்த தீய கர்மம் {செயல்} என்ன? தார்மிகனான என் பிராதா {என்னுடன் பிறந்தவனான லக்ஷ்மணன்} என் முன்னே கொல்லப்பட்டுக் கிடக்கிறானே.(20,21அ) ஹா, பிராதாவே {என்னுடன் பிறந்தவனே}, மனுஜசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, சூரர்களில் முதன்மையானவனே, பிரபோ {தலைவா}, என்னைத் தனியாக விட்டுவிட்டு பரலோகத்திற்கு ஏன் செல்கிறாய்?(21ஆ,22அ) பிராதாவே, அழுது கொண்டிருக்கும் என்னிடம் ஏன் பேசாதிருக்கிறாய்? எழுந்து பார்ப்பாயாக. ஏன் இப்படிக் கிடக்கிறாய்? உன் கண்களால் தீனனான என்னைப் பார்ப்பாயாக.(22ஆ,23அ) மஹாபாஹோ, பர்வதங்களிலும், வனங்களிலும் சோகத்துடன் பித்துப்பிடித்தவனாகத் திரிந்து, விசனத்தில் இருந்த என்னை நீதானே ஆசுவாசப்படுத்தினாய்" {என்றான் ராமன்}.(23ஆ,24அ)
சோகத்தில் இந்திரியங்கலங்கி, இவ்வாறு பேசிக் கொண்டிருந்த ராமனை ஆசுவாசப்படுத்தும் வகையில், சுஷேணன் இந்த உயர்ந்த சொற்களைச் சொன்னான்:(24ஆ,25அ) "நரசார்தூலரே {மனிதர்களில் புலியே}, உம்மில் மனச்சோர்வை ஏற்படுத்தும் புத்தியையும், சம்மு முகத்தில் {படையின் முன்னணியில்} பாணங்களுக்குத் துல்லியமாக சோகத்தை உண்டாக்கும் இந்த சிந்தனையையும் கைவிடுவீராக[1].(25ஆ,26அ)
[1] 24ஆ25அ தவிர, 17ம் சுலோகம் முதல் இது வரையுள்ள செய்தி வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பிலும், செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பிலும், தமிழ்ப் பதிப்புகள் அனைத்திலும் இல்லை. தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோர் பதிப்புகளில் மேற்கண்டவாறே இருக்கிறது. அந்தப் பதிப்புகளில் இந்த சர்க்கத்தில் 49 சுலோகங்களும், இங்கே 57 சுலோகங்களும் இருக்கின்றன.
இலக்ஷ்மிவர்தனரான {செல்வத்தை வளர்ப்பவரான} லக்ஷ்மணர் பஞ்சத்வம் {மரணம்} அடையவில்லை. இவரது முகம் விகாரமடையவில்லை; சியாமத்வம் அடையவுமில்லை {கறுக்கவுமில்லை}.(26ஆ,27அ) இவரது முகம் பிரபையுடனும், பிரசன்னத்துடனும் {ஒளியுடனும், தெளிந்த அமைதியுடனும்} இருக்கிறது. உள்ளங்கைகள், பத்மபத்ரங்களை {தாமலை இலைகளைப்} போலிருக்கின்றன. கண்களும் பிரசன்னத்துடன் {தெளிவாக} இருக்கின்றன.(27ஆ,28அ) விசாம்பதே {உலகத் தலைவரே}, இறந்தவர்களிடம் இத்தகைய ரூபமும், அறிகுறிகளும் தென்படாது. வீரரே, அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, இவர் பிராணனுடன் இருக்கிறார். மனச்சோர்வு கொள்ள வேண்டாம்.(28ஆ,29அ) வீரரே, காத்திரங்கள் {உடல் உறுப்புகள்} தளர்ந்து, பூதலத்தில் கிடக்கும் இவருடைய ஹிருதயம் மீண்டும் மீண்டும் துடிப்பது ஸோச்சவாஸத்தையே {உயிர் வசிப்பதையே} சொல்கிறது".(29ஆ,30அ)
மஹாபிராஜ்ஞனான {பேரறிவாளனான} சுஷேணன், ராகவனிடம் இவ்வாறான சொற்களைச் சொல்லிவிட்டு, சமீபத்தில் இருந்த மஹாகபி ஹனூமந்தனிடம் {பெருங்குரங்கான ஹனுமானிடம்} இதைச் சொன்னான்:(30ஆ,31அ) "சௌமியா, இங்கிருந்து சீக்கிரமாக ஔஷதிபர்வதம் என்ற சைலத்திற்குச் செல்வாயாக.{31ஆ} வீரா, சுபமான எதைக் குறித்துப் பூர்வத்தில் ஜாம்பவதனால் {ஜாம்பவானால்} உனக்குச் சொல்லப்பட்டதோ[2], அதன் {அந்த ஔஷதி பர்வதத்தின்} தக்ஷிண {தென்} சிகரத்தில் வளர்ந்திருக்கும் ஔஷதிகளை {மூலிகைகளைக்} கொண்டு வருவாயாக.{32} சல்லியங்களில் இருந்து விடுவிக்கும் விசல்யகரணி என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டதும், வர்ணத்தை {நிறத்தை} மீட்டுக் கொடுக்கும் ஸாவர்ணகரணி என்ற நாமத்தைக் கொண்டதும், ஸஞ்ஜீவகரணியும், ஸந்தானியும் இந்த வீரருக்கு உயிர் கொடுக்கும் மஹௌஷதிகளாகும் {பெரும் மூலிகைகளாகும்}.{33} வீரரும், மஹாத்மாவுமான லக்ஷ்மணர் {அவற்றின் மூலம்} உயிர்ப்பிக்கப்படுவார்" {என்றான் சுஷேணன்}[3].(31ஆ-34அ)
[2] யுத்த காண்டம் 74ம் சர்க்கத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "விசல்யகரணி: உடலில் இருந்து கணைகளையோ, வேறு ஆயுதங்களையோ வெளியேற்றி, காயத்தை ஆற்றி, வலியில் இருந்து விடுவிக்கும் தன்மை கொண்ட மூலிகையாகும். சாவர்ணகர்ணி: ஆயுதங்களால் உண்டான காயம், தீக்காயம் போன்றவற்றால் ஏற்படும் நிற மாற்றத்தை எதிர்த்துப் போராடி, தோலின் அசல் நிறத்தை மீட்டெடுக்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படும் மற்றொரு மூலிகையாகும். சஞ்ஜீவகரணி: மயக்கமடைந்தவரை மீண்டும் நனவு நிலைக்கு மீட்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படும் மற்றொரு மூலிகையாகும். சந்தானி: முறிந்த எலும்பை இணைக்கும் தன்மை கொண்ட மூலிகையாகும்" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்டதும், ஸ்ரீமான் ஹனுமான், ஔஷதி பர்வதத்திற்குச் சென்றான். அந்த மஹௌஷதிகளை {பெரும் மூலிகைகளை} அடையாளம் காணமுடியாமல் சிந்தனையில் ஆழ்ந்தான்[4].(34ஆ,35அ) அமிதௌஜஸனான அந்த மாருதியிடம் {அளவில்லா ஒளியுடன் / சக்தியுடன் கூடியவனும், வாயு மைந்தனுமான ஹனுமானிடம்}, இந்த புத்தி எழுந்தது, "இந்த கிரிசிகரத்தையே எடுத்துச் செல்வேன்.(35ஆ,36அ) சுகமளிக்கக்கூடிய அந்த ஔஷதிகள் இந்த சிகரத்தில் வளர்கின்றன. சுஷேணர் சொன்னதை ஊகத்தால் இவ்வாறே நான் புரிந்து கொள்கிறேன்.(36ஆ,37அ) விசல்யகரணியை எடுக்காமல் நான் சென்றால், காலதாமதத்தால் தோஷம் நேரலாம்; மஹத்தான குழப்பமும் உண்டாகலாம்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(37ஆ,38அ)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்பு இந்த்ரஜித்தோடு யுத்தம் நடந்தபொழுது, பாணங்களால் பீடிக்கப்பட்ட லக்ஷ்மணாதிகளுக்குச் சிகித்ஸை செய்யும்பொழுது, ஸுஷேணன் அந்த ஔஷதியை எடுத்து வைத்திருக்கக்கூடும். அப்படி இருக்க, மீளவும் இப்பொழுது அந்தப் பர்வதத்திற்கு ஹனுமானை அனுப்பினானென்பது பொருந்தவில்லை. லக்ஷ்மணாதிகளின் சிகித்ஸையில் ஔஷதிகளெல்லாம் செலவழிந்தனவென்று பரிஹாரஞ் சொல்லக் கூடுமாயினும், மறப்பு நேரக்கூடாத ஹனுமான், தானே சிறிது காலத்திற்கு முன்பு ஸ்தாபித்து வந்த பர்வதத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல், மனத்தெளிவு முதலிய அடையாளங்களால் அனுமானித்துத் தெரிந்துகொள்ளுதலும், மூன்றுதரம் அசக்கிப் பெயர்த்ததும் விருத்தமாகத் தொற்றுகிறதாகையால் இதற்குப் பரிஹாரம் பெரியோர்கள் கண்டுணர்க" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையாசிரியர், நான் தவறுதலாக வேறேதும் மூலிகையை எடுத்துச் சென்றால், என்னை நானே முட்டாளாக்கிக் கொள்வேன். நான் அதிக காலத்தைக் கடத்தினாலோ லக்ஷ்மணர் இறந்து போவார்" என்று விளக்குகிறார்" என்றிருக்கிறது.
மஹாபலவானான ஹனுமான், இவ்வாறு சிந்தித்து சீக்கிரமாகச் சென்றான்.{38ஆ} பர்வதசிரேஷ்டத்தை அணுகிய மஹாபலவான், மூன்று முறை அசைத்து, முற்றும் மலர்ந்த மரக்கூட்டங்களுடன் கூடிய அந்த கிரிசிகரத்தை வேரோடு பெயர்த்தெடுத்தான்.{39} அந்த ஹரிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, தன்னிரு கைகளாலும் அதைப் பற்றி சமநிலைப்படுத்திக் கொண்டான்.(38ஆ-40அ) பூரணமாக நீர் நிறைந்த நீலமேகத்தை {கரியமேகத்தைப்} போன்ற கிரி சிகரத்தை எடுத்துக் கொண்டு நபஸ்தலத்தில் {வானத்தின் அடிப்பகுதியில்} பாய்ந்தான்.(40ஆ,41அ)
மஹாவேகத்தில் வந்தடைந்து, கிரி சிகரத்தைக் கீழே வைத்து, சிறிது நேரம் ஓய்வெடுத்த ஹனுமான், சுஷேணனிடம் இதைக் கூறினான்:(41ஆ,42அ) "ஹரிபுங்கவரே {குரங்குகளில் முதன்மையானவரே}, அந்த ஔஷதிகளை நான் அடையாளங் காணவில்லை. அதுவும், இதுவும் என மொத்தமாக அந்த கிரி சிகரமே என்னால் கொண்டுவரப்பட்டது" {என்றான் ஹனுமான்}.(42ஆ,43அ)
வானரசிரேஷ்டனான சுஷேணன், இவ்வாறு கூறிய பவனாத்மஜனைப் புகழ்ந்துவிட்டு, ஔஷதிகளைப் பறித்து எடுத்துக் கொண்டான்.(43ஆ,44அ) ஸுரர்களும் {தேவர்களும்} செய்வதற்கரிய ஹனூமதனின் கர்மத்தைக் கண்டு, அந்த சர்வ வானரபுங்கவர்களும் ஆச்சரியமடைந்தனர்.(44ஆ,45அ) அப்போது, வானரோத்தமனான சுஷேணன், அந்த ஔஷதியை {மூலிகையைக்} கசக்கி, பேரொளியுடன் கூடிய லக்ஷ்மணனின் நாசியில் பிழிந்தான்.(45ஆ,46அ)
பகை வீரர்களை அழிப்பவனும், சல்லியத்துடன் {வேல் தைத்த வேதனையுடன்} கூடியவனுமான அந்த லக்ஷ்மணன், அதை முகர்ந்ததும் விசல்யனாக {வேதனையில் இருந்து விடுபட்டவனாக}, வலிகள் நீங்கியவனாக, மஹீதலத்தில் இருந்து சீக்கிரமே எழுந்தான்.(46ஆ,47அ) பூதலத்தில் இருந்து எழுந்த அந்த லக்ஷ்மணனைக் கண்ட ஹரயர்கள் {குரங்குகள்}, பிரீதியுடன், "சாது, சாது {நன்று, நல்லது}" என்று சொல்லி, சுஷேணனைப் பூஜித்தனர்[5].(47ஆ,48அ)
[5] எழுந்து நின்று, அனுமன்தன்னைஇரு கையால் தழுவி எந்தாய்விழுந்திலன் அன்றோ மற்றுஅவ்வீடணன் என்ன விம்மித்தொழும் துணையவனை நோக்கிதுணுக்கமும் துயரும் நீக்கிகொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன்என்று உவகை கொண்டான்- கம்பராமாயணம் 9573ம் பாடல், யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்பொருள்: {இலக்ஷ்மணன்} எழுந்து நின்று, ஹனுமானைத் தன்னிரு கைகளாலும் தழுவிக் கொண்டு, "என் அப்பனே, அந்த விபீஷணன் இறந்துவிடவில்லை அல்லவா?" என்று கேட்க, விம்மியபடியே தன்னை வணங்கும் துணையவனை {விபீஷணனைப்} பார்த்து, மன நடுக்கமும், துயரமும் நீங்கி, "இனி ராக்ஷசன் {ராவணன்} மாண்டான், அண்ணியும் {சீதையும்} சிறை மீண்டாள்" என்று உவகை கொண்டான்.
பகைவீரர்களை அழிப்பவனான ராமன், "ஏஹி, ஏஹி {வா, வருவாயாக}" என்று லக்ஷ்மணனிடம் கூறிவிட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், சினேகத்துடனும் அவனைத் தழுவிக் கொண்டான்.(48ஆ,49அ) இராகவன், சௌமித்ரியைத் தழுவிக் கொண்ட பிறகு, {பின்வருமாறு} கூறினான், "வீரா, அதிஷ்டவசமாக நீ மரணத்தில் இருந்து திரும்பி வந்ததை நான் பார்க்கிறேன்.(49ஆ,50அ) {நீயில்லாமல்} எனக்கு ஜீவிதத்திலோ {வாழ்விலோ}, சீதையிடத்திலோ, விஜயத்திலோ {வெற்றியிலோ விளையும்} அர்த்தமேதும் {பயனேதும்} இல்லை. நீ பஞ்சத்வத்தை அடைந்திருந்தால், அதனால் எனக்கு {விளையும்} அர்த்தம் {பயன்} என்ன? சொல்வாயாக" {என்றான் ராமன்}.(50ஆ,51அ)
மஹாத்மாவான ராகவன் இவ்வாறு வாதம் செய்து கொண்டிருக்கும்போது, சோர்வுடன் கூடிய லக்ஷ்மணன், தழதழத்த குரலில் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(51ஆ,52அ) "சத்தியப்பராக்கிரமரே, பூர்வத்தில் {ராவணனைக் கொல்வது என்ற} அந்தப் பிரதிஜ்ஞையை உறுதி செய்துவிட்டு {உறுதிமொழியை உறுதியாக ஏற்றுக் கொண்டு}, அசத்வனும், லகுவானுமான {வலிமையற்றவனும், மென்மையானவனுமான} ஒருவனைப் போல, இதோ இப்படிப் பேசுவது உமக்குத் தகாது.(52ஆ,53அ) சத்தியவாதிகள், வீண் பிரதிஜ்ஞை செய்யமாட்டார்கள். பிரதிஜ்ஞாபரிபாலனமே {பிரதிஜ்ஞையை நிறைவேற்றுவதே} மஹத்துவத்தின் லக்ஷணம் ஆகும்.(53ஆ,54அ) அனகரே {பாபமற்றவரே}, எனக்காக நிராசையடைவது உமக்குத் தகாது. இராவணனின் வதத்தால் இப்போதே பிரதிஜ்ஞையை நிறைவேற்றுவீராக.(54ஆ,55அ) கூர்மையான பற்களுடன் நாதம் செய்யும் சிம்மத்திடம் மஹாகஜத்தைப் போல {சிங்கத்தின் முன் நிற்கும் பெரும் யானையைப் போல}, உமது பாணங்களின் பாதையில் நிற்கும் சத்ரு, ஜீவனுடன் திரும்ப மாட்டான்.(55ஆ,56அ) இந்த திவாகரன் {சூரியன்}, தன் கர்மத்தைச் செய்துவிட்டு, அஸ்தத்தை அடைவதற்கு முன்பே, சீக்கிரமாக, அந்த துராத்மா வதம் செய்யப்படுவதையே நான் விரும்புகிறேன்.(56ஆ,57அ) போரில் ராவணனை வதம் செய்ய நீர் விரும்பினால், உமது பிரதிஜ்ஞையை நிறைவேற்ற நீர் விரும்பினால், ஆரியரே, ராஜகுமாரியிடம் நீர் அபிலாசை கொண்டிருந்தால் {இளவரசியான சீதையிடம் நீர் அன்பும், ஆசையும் கொண்டிருந்தால்}, வீரரே, இப்போதே, சீக்கிரமாக நான் சொன்னதைச் செய்வீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(57ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 101ல் உள்ள சுலோகங்கள்: 57
Previous | | Sanskrit | | English | | Next |