Saturday, 26 October 2024

சரபந்தனம் | யுத்த காண்டம் சர்க்கம் - 045 (28)

Bound by arrows | Yuddha-Kanda-Sarga-045 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: துளைத்த அம்புகளால் துன்புற்ற ராமலக்ஷ்மணர்கள்; விரக்தியடைந்த வானரர்கள்...

Rama and Lakshmana fighting the rakshasas

இராஜபுத்திரனும், பிரதாபவானும், அதிபலவானுமான அந்த ராமன், அவனது கதியை {இந்திரஜித்தின் போக்கைக்} கண்டுபிடிக்குமாறு பத்து வானர யூதபர்களிடம் {குரங்குக் குழுத் தலைவர்களிடம்} சொன்னான்.(1) சுஷேணனின் மகன்கள் இருவரிடமும், பிலவகரிஷபனான நீலன், வாலிபுத்ரன் அங்கதன், வலிமைமிக்க சரபன்,{2} வினதன், ஜாம்பவந்தன், மஹாபலவானான சானுபிரஸ்தன், ரிஷபன், ரிஷபஸ்கந்தன் ஆகியோரிடமும் அந்தப் பரந்தபன் {ஆகிய பத்து பேரிடம் பகைவரை அழிப்பவனான அந்த ராமன்} ஆணையிட்டான்.(2,3) பெரும் மகிழ்ச்சியடைந்த அந்த ஹரயர்கள் அனைவரும், பெரும் மரங்களைக் கையிலேந்திக் கொண்டு, பத்துத் திசைகளிலும் {இந்திரஜித்தைத்} தேடியபடியே ஆகாசத்தில் எழுந்தனர்.(4) 

அஸ்திரவித்தான ராவணி {அஸ்திரங்களில் திறன் கொண்டவனும், ராவணனின் மகனுமான இந்திரஜித்}, வேகமாகச் செல்லும் அவர்களுடைய வேகத்தை அதிவேகமான அம்புகளாலும், பரம அஸ்திரங்களாலும் தடுத்தான்.(5) பீமவேகம் கொண்ட ஹரயர்கள், அவனது நாராசங்களால் காயமடைந்து, மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்த இருளில் அவனை {இந்திரஜித்தைக்} காணாதிருந்தனர்.(6) சமிதிஞ்ஜயனான ராவணி {போரில் வெற்றிபெறுபவனான இந்திரஜித்}, ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் தேகம் முழுவதும் சரங்களால் மீண்டும் மீண்டும் துளைத்தான்.(7)

வீரர்களான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும் குரோதத்துடன் கூடிய இந்திரஜித்தின் சரங்களின் வடிவத்திலான பன்னகங்களால் {பாம்புகளால்} நிரந்தரமாக சரீரமெங்கும் {இடைவெளியின்றி உடலெங்கும்} துளைக்கப்பட்டனர்.(8) பெரும் காயம் அடைந்த அவ்விருவரிடம் இருந்தும் ஏராளமான உதிரம் பாய்ந்தது. இருந்தும் அவர்கள் இருவரும் புஷ்பித்த கிம்சுகங்களை {பூத்த பலாச மரங்களைப்} போல விளங்கினார்கள்.(9)

அப்போதும் கடைக்கண் சிவந்தவனும், நொறுங்கிய அஞ்சனக் குவியலுக்கு ஒப்பானவனுமான ராவணி {இந்திரஜித்}, மறைந்திருந்தபடியே, உடன் பிறந்தோரான அவ்விருவரிடமும் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்.(10) அனலனை {நெருப்பைப்} போன்ற கண்களைக் கொண்டவன் {இந்திரஜித்}, "திரிதசேஷ்வரனான சக்ரனும் {தேவர்களின் தலைவனான இந்திரனும்} காணப் புலப்படாமல் யுத்தம் புரியும் என்னை எதிர்க்கும் சக்தனல்லன். உங்களைக் குறித்து என்ன சொல்வது?(11) இராகவர்களே, என் கோபம் வீண்போகாது. கங்க பத்ரங்களைக் கொண்ட சரஜாலத்தை {கழுகின் இறகுகளுடன் கூடிய கணைவலையைக்} கொண்டு இதோ உங்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப் போகிறேன்" {என்றான் இந்திரஜித்}.(12)

உடன்பிறந்தவர்களும், தர்மஜ்ஞர்களுமான {தர்மத்தை அறிந்தவர்களுமான} ராமலக்ஷ்மணர்களிடம், இவ்வாறு சொல்லிவிட்டு, அங்கே நின்று பாணங்களால் அவர்களைப் பீடித்து மகிழ்ந்து நாதம் செய்தான்.(13) பெரும்போரில் நொறுங்கிய அஞ்சன மலைக்கு ஒப்பான அவன் {இந்திரஜித்}, பெரும் தனுசை வளைத்து கோரமான சரங்களை மீண்டும் மீண்டும் ஏவினான்.(14) மர்மஜ்ஞனான அந்த வீரன் {மர்மங்களை அறிந்தவனான இந்திரஜித்}, ராமலக்ஷ்மணர்களின் மர்மங்களில் {முக்கிய உடற்பகுதிகளில்} கூரிய சரங்களை ஏவி மீண்டும் மீண்டும் நாதம் செய்து கொண்டிருந்தான்.(15)

அவ்விருவரும் ரணமூர்த்தத்தில் நிமிஷாந்தர மாத்திரத்தில் (போர்க்களத்தின் முன்னணியில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்} அந்த சர பந்தத்தால் பந்தனம் செய்யப்பட்டு {கட்டப்பட்டு}, பார்க்கவும் {கண்விழிக்கவும்} சக்தியற்றவர்களாகினர்.(16) அப்போது, சர சல்லியங்களால் சர்வ அங்கங்களும் துளைக்கப்பட்டவர்களான அவ்விருவரும் கயிற்றில் இருந்து விடுபட்டு அசையும் மஹேந்திரனின் துவஜத்தைப் போல நடுக்கமுற்றனர்.{17} பெரும் விற்களைக் கொண்டவர்களும், ஜகதீபதிகளும், வீரர்களுமான அவ்விருவரும் மர்மங்கள் பிளக்கப்பட்டு நடுக்கமுற்றவர்களாக ஜகத்தில் விழுந்தனர்.(17,18) வீரர்களான அவ்விருவரும் வீரசயனத்தில் சயனித்து, சர்வ அங்கங்களும் சரங்களால் மறைக்கப்பட்டு, உதிரம் பெருகி, பெரிதும் பீடிக்கப்பட்டவர்களாகக் கிடந்தனர்.(19) அவர்களின் காத்திரங்களில் நுனிக்கை வரையிலும் சரம் தைக்காத, பிளக்கப்படாத, ஓர் அங்குலம் மாத்திரம் இடம்கூட இல்லை.(20)

குரூரனும், காமரூபியுமான ராக்ஷசனால் {விரும்பிய வடிவை ஏற்கவல்ல ராக்ஷசன் இந்திரஜித்தால்} காயமடைந்த அவ்விருவரிடமும், பிரஸ்ரவணத்தில் {அருவியில்} பாயும் ஜலத்தைப் போல தீவிரமாக ரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது.(21) பூர்வத்தில் எவனால் சக்ரன் {இந்திரன்} வெல்லப்பட்டானோ, அந்த இந்திரஜித் குரோதத்துடன் ஏவிய கணைகளால் தன் மர்மங்கள் பிளக்கப்பட்டவனாக ராமன் முதலில் விழுந்தான்[1].(22) ருக்ம  புங்கங்களுடன் {பொன்முனைகளுடன்} கூடியவையும், பிரகாசமான நுனிகளைக் கொண்டவையும், வேகமானவையும், அதோகதியாக {ஆழமாக கீழ்நோக்கி} இறங்குபவையுமான நாராசங்கள், அர்த்தநாராசங்கள், பல்லங்கள், அஞ்சலிகங்கள்,{23} வத்ஸதந்தங்கள், சிம்ஹதம்ஷ்டிரங்கள், அதே போல க்ஷுரங்கள் ஆகியவற்றால் துளைத்தான்.(23,24அ)

[1] கம்பராமாயணத்தில், நாக பாசப் படலம் என்ற இந்தப் பகுதி கும்பகர்ணன், ராவணனின் மகன் அதிகாயன் ஆகியோரின் மரணங்களுக்குப் பிறகே வருகிறது. மேலும் கம்பராமாயணத்தில் இந்திரஜித் ராமனை நாகபாசத்தால் கட்டவில்லை. இலக்ஷ்மணனையே கட்டுகிறான். அதைக் கண்டு ராமன் வருந்துகிறான். பிறகு, கருடனே நேரடியாக வந்து ராமனை வணங்கிவிட்டு லக்ஷ்மணனை நாக பாசக்கட்டில் இருந்து விடுவிப்பதாக இருக்கிறது.

அவன் {ராமன்}, ருக்மத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், மூன்று இடங்களில் வளைவுகளைக் கொண்டதுமான கார்முகத்தை {வில்லைக்} கையில் கொண்டவனாக வீரசயனத்தில் கிடந்தான்.(24ஆ,25அ) பாணங்களாலான படுக்கையில் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்} விழுந்ததைக் கண்ட லக்ஷ்மணன், ஜீவிதத்தின் {வாழ்வின்} மீதான ஆசையைக் கைவிட்டான்.(25ஆ,26அ) கமலபத்ராக்ஷனும் {தாமரைக் கண்ணனும்}, உடன்பிறந்தவனுமான ராமன் சர பந்தத்தில் செயலற்றவனாக தரணிதலத்தில் {தரையில்} கிடப்பதைக் கண்டு துன்புற்றான்.(26ஆ,27அ) ஹரயர்களும் {குரங்குகளும்}  அவனை {ராமனைக்} கண்டு பரம சந்தாபத்துடன் சோகத்தில் மூழ்கி கண்கள் நிறைந்த கண்ணீருடன் கோரமாக அழுதனர்.(27ஆ,28அ) வாயுசுதன் {வாயுவின் மகனான ஹனுமான்} முதலிய அந்த வானரர்கள் ஒன்றுகூடி, கட்டுண்டு சயனிக்கும் அவ்விரு வீரர்களையும் சூழ்ந்து நின்று, பரம சோகத்தில் மூழ்கி செய்வதறியாது ஏங்கித் தவித்தனர்.(28ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 045ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை