Wonderful battle fought by Indrajith | Yuddha-Kanda-Sarga-089 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களைப் போரிடத் தூண்டிய விபீஷணன்; இந்திரஜித்தின் சாரதியைக் கொன்ற லக்ஷ்மணன்; அவனுடைய குதிரைகளைக் கொன்ற வானரர்கள்; நம்பிக்கையிழந்த இந்திரஜித்...
பிறகு,[1] பரஸ்பரம் ஜயத்தில் விருப்பங்கொண்டு, மதங்கொண்ட மாதங்கங்களை {யானைகளைப்} போல யுத்தத்தில் ஈடுபட்டுவரும் நரராக்ஷசர்கள் இருவரையும் {இலக்ஷ்மணனையும், இந்திரஜித்தையும்} கண்டு,{1} பலவானும், சூரனுமான அந்த ராவணபிராதா {ராவணனுடன் பிறந்தவனான அந்த விபீஷணன்}, அவர்களுக்கிடையிலான யுத்தத்தைக் காணும் விருப்பத்தில், தன் சிறந்த சாபத்தை {வில்லைத்} தரித்துக் கொண்டு, போர்க்களத்தின் முன்னணியில் நின்று கொண்டிருந்தான்[2].(1,2) அங்கே நின்று கொண்டு, மஹாதனுவை வளைத்து, கூர்முனைகளைக் கொண்ட மஹா சரங்களை ராக்ஷசர்கள் மீது ஏவினான்.(3) நெருப்பின் தீண்டலைக் கொண்ட அந்த சரங்கள், மஹாகிரிகளில் வஜ்ரத்தை {பெரும் மலைகளில் விழும் இந்திரனின் வஜ்ராயுதத்தைப்} போல் இலக்குத் தவறாமல் பாய்ந்து, ராக்ஷசர்களைப் பிளந்தன.(4)
[1] இந்த சர்க்கம் வேறு சில பதிப்புகளில் 90வது சர்க்கமாக வருகிறது. சுலோக எண்ணிக்கையில் வேறுபாடு ஏதும் இல்லை. இது முதல் அடுத்தடுத்த சர்க்கங்கள் வேறுபதிப்புகளில் ஒவ்வொரு சர்க்க எண் வேறுபாட்டுடன் வருகின்றன.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "பலிஷ்டனும் சூரனுமாகிய விபீஷணன், மதித்த யானைகளைப் போல், ஒருவரோடொருவர் யுத்தஞ்செய்யத் தலைப்பட்டு[*] ஒருவரையொருவர் ஜயிக்க விரும்பிப் போர்புரிகின்ற இவ்விருவரையும் முதலில் பார்க்க விரும்பி அவர்களைப் பார்த்த பின்பு, தானும் யுத்தஞ் செய்யும்பொருட்டு யுத்த பூமியின் முன்பாகத்தில் வந்து நின்றனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "விபீஷணன் முதலில் தானே யுத்தஞ் செய்ய முயன்றும், அவர்களில் எவன் மிகுந்த பலமுடையவனென்று தெரிந்து கொள்ள விரும்பி வெறுமனே இருந்தானென்றும், பின்பு அவர்கள் பலத்தில் ஒத்திருப்பதைக் கண்டு தான் ராமனுக்கு கிஞ்சித்கரிக்க (ஏதேனுமொன்றைச் செய்ய) விரும்பி இப்பொழுது யுத்தத்திற்கு முயன்றானென்றும் உணர்க" என்றிருக்கிறது.
விபீஷணனைப் பின்தொடர்ந்து வந்த அந்த ராக்ஷசோத்தமர்களும், சூலங்கள், கத்திகள், பட்டிசங்கள் ஆகியவற்றால் சமரில் வீர ராக்ஷசர்களைச் சிதைத்தனர்.(5) அப்போது, அந்த ராக்ஷசர்களால் சூழப்பட்ட அந்த விபீஷணன், செருக்குமிக்க கலபானங்களுக்கு மத்தியில் உள்ள துவிபத்தைப் போல {உற்சாகத்துடன் கூடிய யானைக்கன்றுகளின் மத்தியில் நிற்கும் யானையைப் போல} ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(6)
பிறகு, காலஜ்ஞனான ராக்ஷசவரன் {காலத்தை அறிந்தவனும், ராக்ஷசர்களில் சிறந்தவனுமான விபீஷணன்}, ராக்ஷசவதத்தில் பிரியங்கொண்ட ஹரிக்களை {குரங்குகளைத்} தூண்டும் வகையில், காலத்திற்குத் தகுந்த {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(7) "இராக்ஷசேந்திரரின் {ராக்ஷசர்களின் தலைவரான ராவணரின்} புகலிடமாக இருப்பவன் இவன் ஒருவனே. இவன் மட்டுமே அவரது படையில் எஞ்சியிருக்கிறான். ஹரீஷ்வரர்களே {குரங்குகளின் தலைவர்களே}, ஏன் நிற்கிறீர்கள்?(8) இரணமூர்த்தத்தில் {போர்முனையில்} இந்த ராக்ஷசப் பாபி {இந்திரஜித்} கொல்லப்பட்டால், ராவணரைத் தவிர எஞ்சிய படையும் கொல்லப்பட்டதாகும்.(9) வீரரான பிரஹஸ்தர் கொல்லப்பட்டார். மஹாபலவானான நிகும்பன், கும்பகர்ணர், கும்பன், நிசாசரர் தூம்ராக்ஷர்,{10} ஜம்புமாலி, மஹாமாலி, தீக்ஷணவேகன், அசனிப்ரபன், ஸுப்தக்னன், யக்ஞகோபன், ராக்ஷசன் வஜ்ரதம்ஷ்ட்ரன்,{11} ஸம்ஹ்ராதி, விகடன், அரிக்னன், தபனன், மந்தன், பிரகாஸன், பிரகஸன், பிரஜங்கன், ஜங்கன்,{12} வெல்வதற்கரியவனான அக்னிகேது, வீரியவானான ரச்மிகேது, வித்யுஜ்ஜிஹ்வன், துவிஜிஹ்வன், ராக்ஷசன் ஸூர்யஷத்ரு,{13} அகம்பனன், ஸுபார்ஷ்வன், ராக்ஷசன் சக்ரமாலி, கம்பனன் ஆகியோரும், வலிமைமிக்க தேவாந்தக, நராந்தகர்கள் இருவரும் {கொல்லப்பட்டனர்}.(10-14) அதிபலவான்களும், ராக்ஷச சத்தமர்களுமான {வலிமைமிக்க ராக்ஷசர்களுமான} இத்தகையோர் பலரைக் கொன்று, கைகளால் சாகரத்தையே கடந்துவிட்ட நீங்கள், லகுவான இந்த கோஷபதத்தையும் {எளிதான இந்த மாட்டுக் குளம்படியையும்} கடப்பீராக.(15) வானரர்களே, இங்கே வெல்வதற்கு இது மட்டுமே {இந்தப் படை மட்டுமே} எஞ்சியிருக்கிறது. பலத்தில் செருக்கு கொண்டு ஒன்றுகூடி இங்கே வந்த சர்வ ராக்ஷசர்களும் கொல்லப்பட்டனர்.(16) ஜனிதனான {தந்தையான} எனக்குப் புத்திரனைக் கொல்வது தகாது. இராமரின் அர்த்தத்திற்காக வெறுப்பை நீக்கி பிராதாவின் ஆத்மஜனை {என்னுடன் பிறந்தவரான ராவணரின் மகன் இந்திரஜித்தைக்} கொல்வேன்.(17) அவனைக் கொல்ல விரும்புகையில், என் கண்கள் கண்ணீரால் மறைக்கப்படுகின்றன. மஹாபாஹுவான இந்த லக்ஷ்மணரே அவனைத் தணிவடையச் செய்வார் {கொல்வார்}.{18} வானரர்களே, அவனது சமீபத்தில் இருக்கும் பணியாட்களை ஒன்றுசேர்ந்து கொல்வீராக" {என்றான் விபீஷணன்}.(18,19அ)
பெரும்புகழ்வாய்ந்த ராக்ஷசனால் இவ்வாறு தூண்டப்பட்ட வானரேந்திரர்கள், மகிழ்ச்சியில் தங்கள் லாங்கூலங்களை {வால்களைச்} சுழற்றி அடித்தனர்.(19ஆ,20அ) கபிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்}, மீண்டும் மீண்டும் முழங்கியபடியே, மேகங்களைக் கண்ட பர்ஹிணங்களை {மயில்களைப்} போல விவிதமான நாதங்களைச் செய்தனர்.(20ஆ,21அ) அவர்களாலும், அந்த யூதத்தை {குழுவைச்} சேர்ந்த அனைவராலும் சூழப்பட்ட ஜாம்பவானும், கற்களாலும், நகங்களாலும், பற்களாலும் ராக்ஷசர்களைத் தாக்கினான்.(21ஆ,22அ) அனேக வித ஆயுதங்களுடன் கூடியவர்களும், மஹாபலவான்களுமான அந்த ராக்ஷசர்கள், பயத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் அந்த ரிக்ஷாதிபதியை {கரடிகளின் தலைவனான ஜாம்பவானைச்} சூழ்ந்தனர்.(22ஆ,23அ) போரில் ராக்ஷச சம்முவை அழித்துக் கொண்டிருந்த ஜாம்பவந்தனை, சரங்களாலும், கூரிய பரசுகளாலும், பட்டிசங்களாலும், யஷ்டிகளாலும் {கழிகளாலும்}, தோமரங்களாலும் {ஈட்டிகளாலும்} தாக்கினர்.(23ஆ,24அ) தேவாசுரர்களுக்கிடையில் எப்படி நடந்ததோ, அப்படியே கபிராக்ஷசர்களுக்கிடையில் அந்த மஹாசுவரத்துடன் கூடிய, கொந்தளிப்பான, பயங்கரமான போர் நடந்தது.(24ஆ,25அ)
பெருங்குரோதமடைந்த ஹனுமானும், பர்வதத்தில் இருந்து சாலத்தை {மலையில் இருந்து ஒரு சால மரத்தைப்} பெயர்த்து,{25ஆ} மஹாமனம் கொண்ட அந்த லக்ஷ்மணனை ஸ்வயமாக பிருஷ்டத்தில் இருந்து {தானே நேரடியாகத் தன் பின்னால் இருந்து} இறக்கி[3], ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களை நெருங்கிச் சென்று, {அவர்களை} கொல்லத் தொடங்கினான்.(25ஆ,26)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "வீர்யசாலியாகிய ஹனுமானும் மிகுதியும் கோபித்து ஓர் ஸாலவ்ருக்ஷத்தைப் பிடுங்கிக் கொண்டு அனேகமாயிரம் ராக்ஷசர்கள் மேல் விழுந்து ஹிம்ஸித்தனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இங்கு ஹனுமான் யுத்தஞ் செய்தானென்கையால் ஹனுமான் தோளிலிருந்த லக்ஷ்மணன் அவனது சிரமந் தீரும்பொருட்டுச் சிறிது இறங்கியிருந்தானென்று தெரிகிறது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "வீரியவானாகிய அனுமாரும் சினம் மேலிட்டவராய் ஓர் குன்றை பெயர்த்துக் கொண்டு எதிர்த்து நூற்றுக்கணக்கான அரக்கர்களின் நாசத்தை விளைவித்தார்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "மாவீரம்படைத்த அனுமான், தன் தோளிலிருந்து லட்சுமணனை இறக்கிவிட்டு, மிகவும் கோபத்துடன் ஒரு குன்றைப் பெயர்த்துக் கொண்டு வந்து எதிர்த்து தாக்கி, ஆயிரக்கணக்கான அரக்கர்களை நாசம் செய்தார்" என்றிருக்கிறது.
பலவானும், பரவீரக்னனுமான {பகை வீரர்களை அழிப்பவனுமான} அந்த இந்திரஜித், தன் பித்ருவ்யனுக்கு {சிறிய தந்தையான விபீஷணனுக்கு) கொந்தளிக்கும் வகையிலான யுத்தத்தைக் கொடுத்து, மீண்டும் லக்ஷ்மணனைத் தாக்கினான்.(27) அத்தகைய வீரர்களும், போரில் சிறந்த யுத்தம் செய்பவர்களுமான லக்ஷ்மணனும், ராக்ஷசனும், {இந்திரஜித்தும்} அப்போது, சர ஓகங்களை வர்ஷித்து பரஸ்பரம் {கணை வெள்ளங்களைப் பொழிந்து ஒருவரையொருவர்} தாக்கிக் கொண்டனர்.(28) மஹாபலவான்களும், வேகமிக்கவர்களுமான அவ்விருவரும், உஷ்ணத்தின் அந்தத்தில் மேகங்களால் சந்திராதித்யர்கள் {வெப்பம் நிறைந்த கோடையின் முடிவில் சந்திரனும், சூரியனும்} எப்படியோ, அப்படியே தங்களை சர ஜாலங்களால் பெரிதும் மறைத்துக் கொண்டனர்.(29)
அங்கே அவ்விருவரும் யுத்தம் செய்யும்போது, தங்கள் கைகளின் லாகவத்தால் தனுசை உள்ளங்கையால் எடுத்ததும் புலப்படவில்லை; {தூணிகளிலிருந்து} பாணங்களை எடுத்ததும், தொடுத்ததும் இல்லை {வில்லில் கணையைத் தொடுத்ததும் புலப்படவில்லை}. உண்மையில் அவர்கள் {கணைகளை} விடுத்ததும், {காது வரை நாண்களை} இழுத்ததும், {விற்களை} வளைத்ததும், பிடித்த முஷ்டிகளும், லக்ஷியத்தை அடைந்ததும் {இலக்கைக் குறிவைத்து அடைந்ததும்} புலப்படவில்லை.(30,31) சாபத்தின் {வில்லின்} வேகத்தில் வெளிப்பட்ட பாணஜாலங்களால் எங்கும் மறைக்கப்பட்ட அந்தரிக்ஷம் ரூபங்கள் எவற்றையும் {கணை வலையால் மறைக்கப்பட்ட வானம் வடிவங்கள் எவற்றையும்} புலப்படுத்தாததாக இருந்தது.(32)
இராவணியைச் சந்தித்தபோது லக்ஷ்மணனும், லக்ஷ்மணனைச் சந்தித்தபோது ராவணியும் என அவ்விருவரும் உக்கிரத் தெளிவின்மை {கடுமையான ஒழுங்கின்மை} இருப்பதைப் போல அன்யோன்யம் {ஒருவரோடொருவர்} மோதிக் கொண்டனர்.(33) அவ்விருவரும் வலிமையுடன் ஏவிய கூரிய கணைகளால் கிட்டத்தட்ட நிரந்தரமாக ஆகாயம் இருளால் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(34) அவர்களுடைய நூற்றுக்கணக்கான கூரிய சரங்கள் பலரின் மீது பாய்ந்ததால், திசைகள் அனைத்தும் சரங்களால் நிறைந்திருந்தன.(35) சஹஸ்ராம்சன் அஸ்தம கதியை அடைந்தபோது {ஆயிரம் கதிரோனான சூரியன் மறைந்த போது}, சர்வமும் இருளால் பீடிக்கப்பட்டு மஹத்தான பிரதிபயத்தை உண்டாக்கியது.{36} ஆயிரக்கணக்கான உதிர மஹாநதிகள் ஓடின.(36,37அ) கிரவ்யாதங்கள் பயங்கரமான ஸ்வனங்களை {ஊனுண்ணும் விலங்குகள் பயங்கரமான ஒலிகளைத்} தங்கள் கொடூரக் குரல்களில் வெளியிட்டன. அப்போது வாயுவும் வீசவில்லை; பாவகனும் {அக்னியும்} ஜுவலிக்கவில்லை. (37ஆ,38அ) "உலகங்களுக்கு ஸ்வஸ்தி {நன்மை உண்டாகட்டும்}" என்று எந்த மஹரிஷிகள் வாழ்த்தினார்களோ, அவர்கள் சந்தாபமடைந்து, கந்தர்வர்களுடனும், சாரணர்களுடனும் அங்கே வந்தனர்.(38ஆ,39அ)
அப்போது லக்ஷ்மணன் நான்கு சரங்களை ஏவி, கனகபூஷணம் பூண்டவையும், கரியவையுமான ராக்ஷசசிம்மனின் நான்கு ஹயங்களை {பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், கரும் நிறம் கொண்டவையும், ராக்ஷசர்களில் சிங்கமான இந்திரஜித்திற்குரியவையுமான நான்கு குதிரைகளைத்} தாக்கினான்.(39ஆ,40அ) அப்போது, பல்லம் என்ற பெயரைக் கொண்டதும், கூர்முனையுடன் கூடியதும், மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதும்,{40ஆ} சம்பூர்ணமாக இழுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும், அழகிய இறகுகளைக் கொண்டதும், பேரொளியுடன் கூடியதும், மஹேந்திரனின் அசனிக்கு {இந்திரனின் இடிக்கும்} ஒப்பானதும், சூதனை {தேரோட்டியை} வலம் வந்ததும்,{41} உள்ளங்கையின் ஒலியால் ஒலிப்பதுமான பாணாசனியை {இடிக்கு ஒப்பான கணையைக்} கொண்டு, லாகவமாக, ஸ்ரீமானான ராகவன் அவனது சிரத்தை {லக்ஷ்மணன் அந்தத் தேரோட்டியின் தலையைக்} கொய்தான்[4].(40ஆ-42)
[4] தேர் உளது எனின் இவன் வலி தொலையான்எனும் அது தெரிவுற உணர் உறுவான்போர் உறு புரவிகள் படுகிலவால்புனை பிணி துணிகில பொரு கணையால்சீரிது பெரிது இதன் நிலைமை எனத்தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்சாரதி மலை புரை தலையை நெடுந்தரையிடை இடுதலும் முறை திரிய- கம்பராமாயணம் 9142ம் பாடல், யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம்பொருள்: தேர் இருந்தால் இவனுடைய வலிமை அழியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தவன் {லக்ஷ்மணன்}, "நாம் தொடுக்கும் கணைகளால் இவன் தேரில் பூட்டியுள்ள குதிரைகள் வீழவில்லை. தேர் உறுப்புகள் பொருந்தி உள்ள மூட்டுகளும் முறிபடவில்லை. இது சிறப்புடைய தேர்" என்று தெரிந்து கொண்டு, வெம்மை கொண்டதும், அழிக்கக்கூடியதுமான ஓர் அம்பினால் தேர்ப்பாகனின் மலை போன்ற தலையைக் கொய்தான். அவன் {அந்தத் தேர்ப்பாகன்} நிலை கெடப் பெரிய தரையில் அது {அந்தத் தலை} விழுந்தது.
அவன் {அந்த சாரதி} கொல்லப்பட்டபோது, மஹாதேஜஸ்வியான மந்தோதரிசுதன் {மண்டோதரியின் மகனான இந்திரஜித்}, தானே சாரத்யம் செய்தான் {தேரோட்டியானான்}. மேலும் தனுவையும் பிடித்திருந்தான்.(43) அங்கே யுத்தத்தில் அந்த சாமர்த்தியத்தைப் பார்த்தவர்களுக்கு, அஃது அற்புதமாக இருந்தது. அவன் ஹயங்களை {குதிரைகளைச்} செலுத்திக் கொண்டிருந்தபோது, கூரிய சரங்களால் தாக்கப்பட்டான்.{44} அவன் தனுசைப் பிடித்திருந்தபோது, அவனது ஹயங்கள் சரங்களால் தாக்கப்பட்டன.(44,45அ) சீக்கிரமாகச் செயல்களைச் செய்யக்கூடிய சௌமித்ரி, போரில் கவலையின்றி திரிந்து கொண்டிருந்தவனை {இந்திரஜித்தைத்} தகுந்த தருணங்களில் பாண ஓகங்களால் பீடித்தான்.(45ஆ,46அ) சமரில் கொல்லப்பட்ட சாரதியைக் கண்ட அந்த ராவணாத்மஜன் {இந்திரஜித்}, விசனமடைந்து, போரில் உற்சாகத்தை இழந்தான்.(46ஆ,47அ)
விசன வதனத்துடன் கூடிய ராக்ஷசனைக் கண்ட ஹரியூதபர்கள் {குரங்குக் குழுக்களின் தலைவர்கள்}, மகிழ்ச்சியடைந்தவர்களாக லக்ஷ்மணனைப் பூஜித்தனர்.(47ஆ,48அ) அப்போது, பிரமாதி, ரிஷபன், சரபன், கந்தமாதனன் என்ற நான்கு ஹரீஷ்வரர்கள் {குரங்குத் தலைவர்கள்}, பொறுமையின்றி வேகமாகச் செயல்பட்டனர்.(48ஆ,49அ) மஹாவீரியர்களும், பீம விக்ரமர்களுமான அந்த நான்கு வானரர்களும், துரிதமாகச் சென்று, அவனது சிறந்த குதிரைகளின் மீது பாய்ந்தனர்.(49ஆ,50அ) பர்வதத்திற்கு ஒப்பான அந்த வானரர்கள் அமர்ந்ததும், அந்த ஹயங்களின் வாய்களில் இருந்து சிவப்பாக உதிரம் பெருகத் தொடங்கியது.(50ஆ,51அ) நசுக்கப்பட்டு பங்கமடைந்த அந்த ஹயங்கள், அங்குமிங்கும் அலைந்து தரணியில் விழுந்தன.{51அ} அவர்கள் அவனது ஹயங்களைக் கொன்றும், மஹாரதத்தை {பெருந்தேரை} முறித்தும், மீண்டும் வேகமாகத் தாவிச் சென்று லக்ஷ்மணனின் அருகில் நின்றனர்.(51ஆ,52)
சாரதி கொல்லப்பட்டவனும், அஷ்வங்கள் கொல்லப்பட்டவனுமான அந்த ராவணி {ராவணனின் மகனான இந்திரஜித்}, ரதத்தில் இருந்து கீழே குதித்து, சரவர்ஷத்தால் சௌமித்ரியை {கணை மழையால் சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனைத்} தாக்கினான்.(53) அப்போது, மஹேந்திரனைப் போன்றவனான அந்த லக்ஷ்மணன், உத்தம ஹயங்கள் கொல்லப்பட்டுப் பதாதியாக இருந்தவனும் {ரதத்தை விட்டுத் தரையில் இறங்கி நின்றவனும்}, போரில் உத்தம சரங்களை ஏவிக் கொண்டிருந்தவனுமான அவனை, எண்ணற்ற பாண கணங்களால் {கணைக்கூட்டத்தால்} தடுத்து நிறுத்தினான்.(54)
யுத்த காண்டம் சர்க்கம் – 089ல் உள்ள சுலோகங்கள்: 54
Previous | | Sanskrit | | English | | Next |