Indrajith killed | Yuddha-Kanda-Sarga-090 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கையில் இருந்து வேறொரு தேரில் வந்த இந்திரஜித்; விபீஷணனைத் தாக்கியது; அவனது குதிரைகளைக் கொன்ற விபீஷணன்; இலக்ஷ்மணனிடம் வீழ்ந்த இந்திரஜித்...
அஷ்வங்கள் {குதிரைகள்} கொல்லப்பட்டதால், மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் {வலிமைமிக்க இரவுலாவியான இந்திரஜித்} பூமியில் நின்றான். பரம குரோதத்தில் எரிந்த இந்திரஜித் தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(1) தனு தரித்தவர்களான அவ்விருவரும், விஜயத்திற்காக வனத்தைவிட்டு வெளிப்படும் இரு கஜங்களை {யானைகளைப்} போல, அன்யோன்யம் கொல்லும் நோக்கம் அதிகம் கொண்டவர்களாக தங்கள் கணைகளை ஏவினர்.(2) எங்குமிருந்து விரையும் அந்த ராக்ஷசவனௌகசர்கள் {ராக்ஷசர்களும், வனத்தில் வசிப்பவர்களான வானரர்களும்}, அன்யோன்யம் {ஒருவரையொருவர்} கொன்று, யுத்தத்தில் தங்கள் தலைவர்களைக் கைவிடாதிருந்தனர்.(3)
அப்போது, ராவணாத்மஜன் {ராவணனின் மகனான இந்திரஜித்}, சர்வ ராக்ஷசர்களையும் புகழ்ந்து, மகிழ்வித்து, தானும் மகிழ்ச்சியடைந்து இந்தச் சொற்களைக் கூறினான்:(4) "எங்கும் அடர்ந்த இருளால் இந்தத் திசைகள் மறைக்கப்பட்டுள்ளன. இராக்ஷசோத்தமர்களே, ஒருவன் நம்முடையவனா? அல்லது பிறனுடையவனா {பகைவனுடையவனா}? என்பது தெரியவில்லை.(5) ஹரீக்களை {குரங்குகளை} வஞ்சிப்பதற்காக, நீங்கள் தீரத்துடன் யுத்தம் செய்வீராக. நானும் ரதமேறி போருக்கு வந்து சேருவேன்.(6) நான் நகரத்திற்குள் பிரவேசிக்கும்போது, துராத்மாக்களான இந்த வனௌகசர்கள் {என்னுடன்} யுத்தத்தில் ஈடுபடாதிருப்பது எப்படியோ, அப்படியே நீங்கள் செயல்படுவீராக" {என்றான் இந்திரஜித்}.(7)
அமித்ரஹனான ராவணசுதன் {பகைவரை அழிப்பவனும், ராவணனின் மகனுமான இந்திரஜித்} இவ்வாறு சொல்லிவிட்டு, வனௌகசர்களை வஞ்சித்துவிட்டு, ரதத்தின் பொருட்டு லங்காபுரிக்குள் பிரவேசித்தான்.(8) அழகானதும், ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், பராசங்கள், கத்திகள், சரங்களுடன் கூடியதும், பரமவாஜிகள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பெற்றதுமான ரதம்,{9} ஹயஜ்ஞனும் {குதிரைகளின் இயல்பை அறிந்தவனும்}, நல்ல உபதேசம் வழங்கவல்லவனுமான சூதனால் {சாரதியால்} செலுத்தப்பட்டது. அதில் மஹாதேஜஸ்வியும், ஸமிதிஞ்ஜயனுமான அந்த ராவணி ஏறினான் {வலிமைமிக்கவனும், போரில் எப்போதும் பகைவரை வெல்பவனும், ராவணனின் மகனுமான அந்த இந்திரஜித் அந்தத் தேரில் ஏறினான்}.(9,10) வீரனான அந்த மந்தோதரிசுதன் {மண்டோதரியின் மகன் இந்திரஜித்}, கிருதாந்த பலத்தால் {செய்த வினைப்பயனின் பலத்தால்} தூண்டப்பட்டு, முக்கிய ராக்ஷச கணங்களால் சூழ நகரத்திலிருந்து புறப்பட்டான்.(11)
பகைவீரர்களை அழிப்பவனான அந்த இந்திரஜித், வேகமான அஷ்வங்களுடன் நகரத்தில் இருந்து வெளிப்பட்டு, லக்ஷ்மணனையும், விபீஷணனையும் தாக்கினான்.(12) அப்போது ரதத்தில் அமர்ந்திருக்கும் ராவணாத்மஜனைக் கண்ட சௌமித்ரியும் {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணனும்}, மஹாவீரியர்களான வானரர்களும், ராக்ஷசனான விபீஷணனும், அந்த மதிமிக்கவனின் அந்த லாகவத்தில் பரம ஆச்சரியம் அடைந்தனர்.(13,14அ) பெருங்குரோதமடைந்த ராவணியும், ரணத்தில் பாண ஓகங்களால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வானரயூதபர்களை வீழ்த்தினான்.(14ஆ,15அ) ஸமிதிஞ்ஜயனான அந்த ராவணி, தனுவை மண்டலமாகச் செய்து {வில்லை வட்டமாக வளைத்து}, குரோதத்துடனும், பரம லாகவத்தை வெளிப்படுத்தியும் ஹரீக்களை {குரங்குகளைத்} தாக்கினான்.(15ஆ,16அ) நாராசங்களால் வதைக்கப்பட்டவர்களும், பீமவிக்ரமர்களுமான அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, பிரஜாபதியிடம் பிரஜைகளை {மக்கள் தலைவனான பிரம்மனிடம் சரண்புகும் மக்களைப்} போல, சௌமித்ரியிடம் சரணமடைந்தனர் {தஞ்சம்புகுந்தனர்}.(16ஆ,17அ)
அப்போது, போர்க் கோபத்தால் ஜுவலித்துக் கொண்டிருந்த ரகுநந்தனன் {ரகு வழி வந்தவர்களை ஆனந்தமடையச் செய்பவனான லக்ஷ்மணன்}, தன் கைகளின் லாகவத்தைக் காட்டி, அவனது கார்முகத்தை {இந்திரஜித்தின் வில்லை} முறித்தான்.(17ஆ,18அ) அவன் {இந்திரஜித்} துரிதமாக மற்றொரு கார்முகத்தை எடுத்து ஆயத்தமானான். இலக்ஷ்மணன் முன்று பாணங்களால் அதையும் முறித்தான்.(18ஆ,19அ) இவ்வாறு தனு முறிக்கப்பட்ட பிறகு, சௌமித்ரி, விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பான பஞ்ச பாணங்களால் {ஐந்து கணைகளால்} ராவணியின் மார்பைத் துளைத்தான்.(19ஆ,20அ) மஹா கார்முகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த பாணங்கள், அவனது காயத்தை துளைத்து {இந்திரஜித்தின் உடலைத் துளைத்து வெளியேறி}, சிவந்த மஹா உரகங்களை {பெரும்பாம்புகளைப்} போல தரணியில் விழுந்தன.(20ஆ,21அ)
தனு முறிந்தவனான அந்த ராவணி, வாயிலிருந்து உதிரம் கக்கியபடியே, {முந்தைய வில்லைவிட} பலமிக்கதும், திடமாக நாண்பூட்டப்பெற்றதுமான சிறந்த கார்முகத்தை எடுத்தான்.(21ஆ,22அ) பரம லாகவத்தை வெளிப்படுத்தியவன் {இந்திரஜித்}, மழை பொழியும் புரந்தரனை {இந்திரனைப்} போல, லக்ஷ்மணன் மீது சரவர்ஷங்களை {கணை மழைகளைப்} பொழிந்தான்.(22ஆ,இ) அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} லக்ஷ்மணன், இந்திரஜித்தால் விடுக்கப்பட்ட தடுப்பதற்கரிய சரவர்ஷத்தை {கணை மழையைக்} கலங்காமல் தடுத்தான்.(23) மஹாதேஜஸ்வியான ரகுநந்தனன், கலக்கமடையாமல் இருந்து, ராவணிக்குக் காட்டியது எதுவோ, அஃது {அந்த ஆற்றல்} அற்புதமானதாக இருந்தது.(24ஆ,25அ) போர்க்களத்தில் இருந்த அந்த சர்வ ராக்ஷசர்களில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்து,{25ஆ} சீக்கிரமாகச் செயல்படும் தன் திறனை வெளிப்படுத்தி, பரமகுரோதத்துடன் பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} ராக்ஷசேந்திர சுதனை {இந்திரஜித்தைத்} துளைத்தான்.(25ஆ,26)
சத்ருக்களை அழிப்பவனும், பலவானுமான சத்ருவால் தாக்கப்பட்டவன் {லக்ஷ்மணனால் தாக்கப்பட்ட இந்திரஜித்}, லக்ஷ்மணனை நோக்கி ஏராளமான சரங்களைத் தடையின்றி ஏவினான்.(27) பகைவீரர்களை அழிப்பவன் {லக்ஷ்மணன், அவை} தன்னிடம் வருவதற்கு முன்பே அவற்றைக் கூரிய பாணங்களால் துண்டித்தான். தர்மாத்மாவான ரகுசத்தமன் {ரகு வழி வந்தவர்களில் வலிமைமிக்க லக்ஷ்மணன்}, வளைந்த கணுவுள்ள பல்லத்தால் ரணத்தில் அந்த ரதினனுடைய சாரதியின் சிரத்தை அறுத்தான் {போரில் தேர்வீரனான அந்த இந்திரஜித்துடைய தேரோட்டியின் தலையை அறுத்தான்}.(28,29அ) அங்கே சூதனில்லாத அந்த ஹயங்கள் {குதிரைகள்}, குழப்பமடையாமல் மண்டலங்களாகச் சுற்றி ஓடி, ரதத்தை இழுத்துச் சென்றன. அஃது அற்புதமாக இருந்தது.(29ஆ,30அ) திடவிக்ரமனான சௌமித்ரி, ரணத்தில் கோபவசமடைந்து, சரங்களால் ஹயங்களைத் துளைத்து {அவற்றை} அச்சுறுத்தினான்.(30ஆ,31அ)
இரணத்தில் அந்த கர்மத்தால் பொறுமையிழந்த ராவணனின் சுதன் {இந்திரஜித்}, கோபமடைந்த அந்த சௌமித்ரியை பத்து பாணங்களால் தாக்கினான்.(31ஆ,32அ) வஜ்ரத்திற்கு நிகரானவையும், விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையுமான அவனுடைய அந்தச் சரங்கள், காஞ்சனப் பிரபையுடன் கூடிய கவசத்தை அடைந்ததும் அழிவை அடைந்தன.(32ஆ,33அ) இராவணாத்மஜன் {இந்திரஜித்}, லக்ஷ்மணனின் கவசம் பிளக்க முடியாதது என்பதை அறிந்தான்.{33ஆ} பரமகுரோதமடைந்த இந்திரஜித், சீக்கிரமாக அஸ்திரம் செலுத்தும் தன் திறனை வெளிப்படுத்தி, நல்ல புங்கங்களுடன்கூடிய மூன்று பாணங்களால் லக்ஷ்மணனின் நெற்றியில் தாக்கினான்.(33ஆ,34) போரில் திளைப்பவனான ரகுநந்தனன், நெற்றியில் இருந்த அம்மூன்று கணைகளுடனும் போர்முனையில் மூன்று சிருங்கங்களுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்தான்.(35)
பெரும்போரில் ராக்ஷசனால் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட அந்த லக்ஷ்மணன், உடனே அப்போது யுத்தத்தில் தன் வில்லை வளைத்து, சுப குண்டலங்களுடன் கூடிய இந்திரஜித்தின் வதனத்தில் ஐந்து சரங்களால் பதிலுக்குத் துளைத்தான்.(36,37அ) பீம விக்ரமர்களும், மஹாபலம்வாய்ந்த சராசனங்களை {விற்களைக்} கொண்டவர்களும், வீரர்களுமான அந்த லக்ஷ்மணனும், இந்திரஜித்தும், மிகக் கூரிய பாணங்களால் அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(37ஆ,38அ) அங்கங்கள் சோணிதத்தால் நனைந்த லக்ஷ்மணன், இந்திரஜித் இருவரும், அப்போது ரணத்தில் புஷ்பித்த கிம்சுகங்களைப் போல ஒளிர்ந்தனர்.(38ஆ,39அ) ஜயத்தில் மனத்தை நிலைக்கச் செய்த அந்த தன்விகள் {வில்லாளிகள்} இருவரும், கோரமான பாணங்களால் சர்வ காத்திரங்களையும் {உடலுறுப்புகள் அனைத்தையும்} பரஸ்பரம் அணுகி துளைத்தனர்.(39ஆ,40அ)
பிறகு போரில் பெரும் கோபத்தால் நிறைந்த ராவணாத்மஜன், மூன்று பாணங்களைக் கொண்டு விபீஷணனின் சுப வதனத்தைத் தாக்கினான்.(40ஆ,41அ) மூன்று அயோமுகங்களால் {இரும்பு முனை கொண்ட கணைகளால்} ராக்ஷசேந்திரன் விபீஷணனைத் தாக்கிவிட்டு, அந்த ஹரியூதபர்கள் அனைவரையும் ஒவ்வொன்றால் {ஒவ்வொரு அயோமுகத்தால்} தாக்கினான்.(41ஆ,42அ) மஹாதேஜஸ்வியான அந்த விபீஷணன், துராத்மாவான ராவணியிடம் பெருங்குரோதம் கொண்டு, தன் கதையால் அவனது ஹயங்களை {குதிரைகளைக்} கொன்றான்.(42ஆ,43அ) அந்த மஹாதேஜஸ்வி {இந்திரஜித்}, சாரதி அழிந்து, அஷ்வங்களும் கொல்லப்பட்ட ரதத்தில் இருந்து கீழே குதித்தான். பிறகு, ஒரு சக்தியை எடுத்து தன் பித்ருவ்யனின் {சிறிய தந்தை விபீஷணனின்} மீது ஏவினான்.(43ஆ,44அ)
அஃது அவனை நோக்கிப் பாய்வதைக் கண்ட சுமித்ரானந்தவர்த்தனன் {சுமித்ரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான லக்ஷ்மணன்}, தன் கூரிய பாணங்களால் அதைப் பத்து துண்டுகளாகப் பிளந்து, புவியில் வீழ்த்தினான்.(44ஆ,45அ) திடமான உடலைக் கொண்ட விபீஷணன், குரோதமடைந்து, வஜ்ரத்தின் ஸ்பரிசத்தைக் கொண்ட ஐந்து சாயகங்களைக் கொண்டு, அஷ்வங்கள் கொல்லப்பட்டவனான அவனது {இந்திரஜித்தின்} மார்பைத் துளைத்தான்.(45ஆ,46அ) உருக்மபுங்கங்களுடன் கூடியவையும், குறிதவறாமல் பாய்பவையுமான அவை, அவனது உடலைத் துளைத்து, ரத்தத்தில் நனைந்து, சிவந்த மஹா உரகங்களை {பெரும்பாம்புகளைப்} போல் விளங்கின.(46ஆ,47அ) இராக்ஷசர்களின் மத்தியில் இருந்த அந்த இந்திரஜித், பித்ருவ்யனிடம் {தன் சிற்றப்பன் விபீஷணனிடம்} குரோதமடைந்து, யமனால் தத்தம் செய்யப்பட்டதும், மஹாபலம் வாய்ந்ததுமான உத்தம சரத்தை எடுத்தான்.(47ஆ,48அ)
மஹாதேஜஸ்வியும், பீம பராக்கிரமனுமான லக்ஷ்மணனும், அவன் அந்தப் பெருங்கணையை எடுப்பதைக் கண்டு, மற்றொரு பாணத்தை எடுத்தான்.(48ஆ,49அ) எது வெல்வதற்கரியதோ, இந்திரன் உள்ளிட்ட ஸுராஸுரர்களாலும் சஹித்துக் கொள்ள முடியாததோ, அஃது {அந்த பாணம்} அளவற்ற மகிமை வாய்ந்த குபேரனால் நேரடியாக ஸ்வப்னத்தில் {கனவில்} தத்தம் செய்யப்பட்டதாகும்[1].(49ஆ,50அ) அவ்விருவரின் அந்தச் சிறந்த தனுசுகள் இரண்டும், பரிகங்களுக்கு {உழலைத் தடிகளுக்கு} ஒப்பான அவர்களின் கைகளால் பலமாக இழுக்கப்பட்டு, கிரௌஞ்சங்கள் இரண்டைப் போல ஒலித்தன.(50ஆ,51அ) அந்த வீரர்களின் சிறந்த தனுசுகளில் பொருத்தி இழுக்கப்பட்ட அந்த உத்தம சாயகங்கள் இரண்டும் பேரொளியுடன் ஒளிர்ந்தன.(51ஆ,52அ) அந்த தனுசுகளில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஆகாசத்தை ஒளிரச்செய்து, முகமுகமாக {நுனியால் நுனியை} வலுவாகத் தாக்கி வீழ்ந்தன.(52ஆ,53அ) கோர ரூபங்கொண்ட அந்தச் சரங்கள் மோதிக் கொண்டதில், புகையுடனும், தீப்பொறியுடனும் மிகப் பயங்கரமான அக்னி உண்டானது.(53ஆ,54அ) போரில் மஹாகிரஹங்களைப் போல அன்யோன்யம் மோதிக் கொண்ட அவ்விரண்டும், நூறு துண்டுகளாகி மேதினியில் விழுந்தன.(54ஆ,55அ) அப்போது போர்முனையில் லக்ஷ்மணன், இந்திரஜித் இருவரும், தங்கள் பாணங்கள் அழிந்ததைக் கண்டு வெட்கமும், கோபமும் அடைந்தனர்.(55ஆ,56அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "குபேரன், வரப்போகிற வ்ருத்தாந்தத்தை புத்தியால் ஊஹித்து, அவனது ஸ்வப்னத்தில் தானே இந்த பாணத்தைக் கொடுத்திருந்தனன்" என்றிருக்கிறது.
சீற்றமடைந்த அந்த சௌமித்ரி, வாருண அஸ்திரத்தை எடுத்தான். யுத்தத்தில் திறன் மிக்க மஹேந்திரஜித்தும், யுத்தத்தில் ரௌத்திரத்தை {ருத்திர அஸ்திரத்தை} ஏவினான்.(56ஆ,57அ) அதனால் அந்தப் பரம அற்புத வாருண அஸ்திரம் தாக்கப்பட்டது {அழிக்கப்பட்டது}.{57ஆ} அப்போது மஹாதேஜஸ்வியும், ஸமிதிஞ்ஜயனுமான அந்த இந்திரஜித், குரோதமடைந்து, உலகத்தை அழித்து விடுபவனைப் போல ஒளிரும் ஆக்னேயத்தை {அக்னி அஸ்திரத்தை} ஏவினான்.(57ஆ,58) வீரனான லக்ஷ்மணன், சௌர அஸ்திரத்தை {சூரியனின் அஸ்திரத்தைக்} கொண்டு அதைத் தடுத்தான். தன் அஸ்திரம் தடுக்கப்பட்டதைக் கண்ட ராவணி {இந்திரஜித்} குரோதத்தில் மூர்ச்சித்து, சத்ருக்களைப் பிளக்கவல்ல கூரிய ஆசுர பாணத்தை எடுத்தான்.(59,60அ) அந்த சாபத்திலிருந்து {வில்லிலிருந்து} சுடர்மிக்க கூடமுத்கரங்கள், சூலங்கள், புசுண்டிகள், கதைகள், கட்கள், பரசுகள் விரைந்தன.(60ஆ,61அ) மதிமிக்கவனான லக்ஷ்மணன், கடுமையானதும், சர்வ பூதங்களாலும் தடுக்கப்பட முடியாததும், போரில் சர்வ அஸ்திரங்களையும் பிளக்கவல்லதுமான அந்த கோரமான அஸ்திரத்தைக் கண்டான். மஹேஷ்வரத்தை {மஹேஷ்வர அஸ்திரத்தைக்} கொண்டு அந்த அஸ்திரத்தைத் தடுத்தான்.(61ஆ,62)
அவ்விருவருக்கும் இடையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும் வகையில் அற்புதமான யுத்தம் நடந்தது. ககனத்திலிருந்த பூதங்கள் {வானத்தில் இருந்த உயிரினங்கள்} லக்ஷ்மணனைச் சூழ்ந்தன.(63) வானரராக்ஷசர்களுக்கிடையில் நடந்த பயங்கரமான யுத்தத்தில் ஆச்சரியமடைந்த ஏராளமான பூதங்களால் சூழப்பட்டிருந்த ஆகாசம் பயங்கர ஒலியுடன் ஒளிர்ந்தது.(64) சதக்ரதுவை {இந்திரனை} முன்னிட்டு வந்த ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள், கந்தர்வ, கருட, உரகர்கள் ரணத்தில் லக்ஷ்மணனை ரக்ஷித்தனர்.(65)
அப்போது ராகவானுஜன் {லக்ஷ்மணன்}, ஹுதாசனனுக்கு சமமான ஸ்பரிசத்தை {அக்னியின் தீண்டலைக்} கொண்டதும், ராவணாத்மஜனைப் பிளக்கவல்லதுமான மற்றொரு சிறந்த கணையைப் பொருத்தினான்.(66) அந்த வீரனின் {லக்ஷ்மணனின்} சரம், அழகிய இறகுகளைக் கொண்டது; அழகிய அங்கங்களைக் கொண்டது; நுட்பத்துடன் செய்யப்பட்டது; அழகிய கணுக்களைக் கொண்டது; ஸுவர்ணத்தால் அலங்கரிக்கப்பட்டது; சரீரத்தைப் பிளக்கவல்லது;{67} தடுப்பதற்கரியது; பொறுத்துக் கொள்ள முடியாதது; ராக்ஷசர்களுக்கு பயத்தை விளைவிப்பது; விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பானது; தேவர்களால் வழிபடப்படுவது.(67,68) மஹாதேஜஸ்வியும், வீரியவானும், ஹரிவாஹனனுமான பிரபு சக்ரன் {பச்சைக் குதிரைகளைத் தேரில் பூட்டியவனும், தலைவனுமான இந்திரன்}, பூர்வத்தில், தேவாசுர யுத்தத்தில் அதைக் கொண்டே தானவர்களை வென்றான்.(69) இலக்ஷ்மீவானான சௌமித்ரி, ஒருபோதும் வீழாத ஐந்திர அஸ்திரத்தைத் தன் சிறந்த தனுசில் பொருத்தி, இழுத்து, தன் அர்த்தத்திற்கு சாதகம் செய்யும் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(70,71அ) "சரமே, பௌருஷத்தில் ஒப்பற்றவரான தாசரதி ராமர், தர்மாத்மாவாகவும், சத்தியசந்தராகவும் இருந்தால், இந்த ராவணியைக் கொல்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(71ஆ,72அ)
வீரனான லக்ஷ்மணன், இவ்வாறு சொல்லிவிட்டு, காதுவரை இழுத்து ஏவிய பாணம் நேராக இந்திரஜித்தை நோக்கிச் சென்றது.(72ஆ,73அ) பகைவீரர்களை அழிப்பவனான லக்ஷ்மணன், ஐந்திராஸ்திரத்தை {இந்திரனின் அஸ்திரத்தைப்} பொருத்தி, தலைப் பாகையுடன் கூடியதும், ஒளிபொருந்திய காது குண்டலங்களுடன் ஒளிர்ந்ததுமான அந்த சிரத்தைக் குறி பார்த்து ஏவி, இந்திரஜித்தின் உடலில் இருந்து அதை விழச்செய்தான்[2].(73ஆ,74) ஸ்கந்தம் {தோள்பட்டை / கழுத்து} அறுந்த ராக்ஷசதனூஜனின் அந்த மஹத்தான சிரம் {ராக்ஷசன் ராவணனுடைய மகனான இந்திரஜித்தின் பெருந்தலை}, உதிரத்தால் நனைந்து பூமியில் பொன்னுக்கு ஒப்பானதாகக் காணப்பட்டது.(75) அப்போது கொல்லப்பட்ட அந்த ராவணாத்மஜன், கவசத்துடனும், தலைப்பாகையுடனும், சராஸனத்துடனும் {வில்லுடனும்} சடக்கென தரணியில் விழுந்தான்.(76)
[2] நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்புக் கண்ணான்நாம வேல்தானும் மற்றை நான்முகன் படையும் நாணதீ முகம் கதுவ ஓடிச் சென்று அவன் சிரத்தைத் தள்ளிபூ மழை அமரர் சிந்த பொலிந்தது அப்பகழிப் புத்தேள்- கம்பராமாயணம் 9167ம் பாடல், யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம்பொருள்: {விஷ்ணுவின்} சக்கரமும், {இந்திரனின்} வஜ்ர வேலும், நெற்றியில் நெருப்புக் கண்ணைக் கொண்டவனின் {சிவனின்} பெயரைக் கொண்ட வேலும் {ரௌத்திராஸ்தமும்}, நான்முகன் படையும் {பிரம்மாஸ்திரமும்} நாணும் வகையில், முனையில் பற்றி எரியும் நெருப்புடன் அவனது சிரத்தை {இந்திரஜித்தின் தலையை அறுத்துத்} தள்ளி, தேவர்கள் பூமழை சிந்த, அந்த அம்பெனும் தெய்வம் பொலிந்தது.
அவன் கொல்லப்பட்ட போது, அந்த வானரர்கள் அனைவரும், விருத்திர வதத்தில் தேவர்கள் எப்படியோ, அப்படியே மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(77) அப்போது அந்தரிக்ஷத்தில் பூதங்கள் {வானத்தில் உயிரினங்கள்}, மஹாத்மாக்களான ரிஷிகள், கந்தர்வ, அப்சரஸ்கள் ஆகியோரின் ஜயஸந்நாதம் {வெற்றிக்கூச்சல்} எழுந்தது.(78) அவன் வீழ்ந்ததைக் கண்ட ராக்ஷசர்களின் அந்த மஹாசம்மு {பெரும்படை}, வெற்றியில் மிளிரும் ஹரிக்களால் தாக்கப்பட்டு, திசைகளை நாடி ஓடியது.(79) வானரர்களால் தாக்கப்பட்ட ராக்ஷசர்கள், கலக்கமடைந்து, தங்கள் சஸ்திரங்களைக் கைவிட்டு லங்கையை எதிர்முகமாகக் கொண்டு {லங்கையை நோக்கி} ஓடினர்.(80) பீதியடைந்த ராக்ஷசர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கான ஆயுதங்களையும், பட்டிசங்களையும், கத்திகளையும், பரசுகளையும் {கோடரிகளையும்} கைவிட்டு, பலவாறாக சிதறி ஓடினர்.(81) வானரர்களால் துன்புற்று அச்சமடைந்த சிலர் லங்கைக்குள் பிரவேசித்தனர்; சிலர் சமுத்திரத்தில் விழுந்தனர், சிலர் பர்வதங்களை ஆசரித்தனர் {மலைகளில் தஞ்சம்புகுந்தனர்}.(82) இந்திரஜித் கொல்லப்பட்டு போர்க்களத்தில் கிடப்பதைக் கண்ட ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களில் எவரும் அங்கே காணப்படவில்லை.(83) ஆதித்யன் அஸ்தமகதியடைந்ததும் கதிர்கள் எப்படி நிலைப்பதில்லையோ அப்படியே அவன் விழுந்ததும் அந்த ராக்ஷசர்களும் திசைகள் அனைத்திலும் சென்றனர்.(84)
ஜீவிதம் மறைந்து போன அந்த மஹாபாஹு {இந்திரஜித்}, கதிர்கள் அடங்கிய ஆதித்யனைப் போலவும், நிர்வாண பாவகனை {ஒளி இழந்த நெருப்பைப்} போலவும் இருந்தான்.(85) இராக்ஷசேந்திரசுதன் விழுந்ததும், உலகமானது, பீடைகள் அனைத்தும் தணிந்து, பகைவரற்றதாகி மகிழ்ச்சியடைந்தது.(86) பாபகர்மங்களைச் செய்பவனான அந்த ராக்ஷசன் கொல்லப்பட்டதும் பகவான் சக்ரன் {இந்திரன்}, சர்வ மஹரிஷிகள் சகிதனாகப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(87) மஹாத்மாக்களான கந்தர்வர்களும், அப்சரஸ்களும் நாட்டியமாட {ஒலித்த} தேவர்களின் துந்துபி ஸ்வனம் ஆகாசத்திலும் கேட்கப்பட்டது.(88) குரூர கர்மங்களைச் செய்பவனான அந்த ராக்ஷசன் கொல்லப்பட்டபோது, புகழ்மாலையுடன்கூடிய புஷ்பமழையை அவர்கள் பொழிந்தனர். அஃது அற்புதமாக இருந்தது.(89) சர்வலோகங்களிலும் பயத்தை விளைவித்தவன் விழுந்ததும் ஆபமும், நபமும் {நீரும், வானமும்} தெளிவடைந்தன. தேவ தானவர்களும் மகிழ்ச்சியுடன் வந்தனர்.(90) நிறைவடைந்தவர்களான தேவ, கந்தர்வ, தானவர்களும் ஒன்றாகச் சேர்ந்து, "பிராமணர்கள், மனக்கலக்கமின்றி மகிழ்ச்சியாகத் திரியட்டும்" என்றனர்.(91)
பலத்தில் ஒப்பற்றவனான அந்த நைர்ருதபுங்கவன் {ராக்ஷசர்களில் முதன்மையான இந்திரஜித்} சமரில் கொல்லப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஹரியூதபர்கள் அப்போது {லக்ஷ்மணனைப்} புகழ்ந்தனர்.(92) விபீஷணன், ஹனுமான், ரிக்ஷயூதபனான ஜாம்பவான் ஆகியோரும் லக்ஷ்மணனின் விஜயத்தால் ஆனந்தமடைந்து, அவனைப் புகழ்ந்தனர்.(93) இலக்ஷியத்தை அடைந்த பிலவங்கமர்கள், சிங்க முழக்கம் செய்தபடியும், தாவிக் குதித்தபடியும், கர்ஜித்தவாறே ரகுசுதனை {ரகுவின் குல மகனான லக்ஷ்மணனைச்} சூழ்ந்து நின்றனர்.(94) அப்போது அந்த வானரர்கள், தங்கள் லாங்கூலங்களை {வால்களை} அசைத்தும், சுழற்றி அடித்தும், "லக்ஷ்மணோ ஜயதி {வென்றார் லக்ஷ்மணர்}" என்ற இந்த வாக்கியத்தை அனைவரையும் கேட்கச் செய்தனர்.(95) மனத்தில் மகிழ்ச்சியுடன் அன்யோன்யம் தழுவிக் கொண்ட ஹரயர்கள் {குரங்குகள்}, ராகவனை ஆசரித்ததால் பிறந்த நற்குணங்கள் பலவற்றைக் குறித்த கதைகளைச் சொன்னார்கள்.(96) இந்திரரிபு {இந்திரனின் பகைவனான இந்திரஜித்} கொல்லப்படுவதைக் கேள்விப்பட்ட தேவர்கள், யுத்தத்தில் எளிதில் செய்தற்கரிய அந்தக் கர்மத்தை பிரியத்திற்குரிய நண்பன் லக்ஷ்மணன் செய்ததை மகிழ்ச்சியுடன் கண்டு, பரம மனமகிழ்ச்சியை அடைந்தனர்[3].(97)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தேவதைகள் இந்த்ரஜித்து ஹதனானானென்று சாரணாதிகளின் மூலமாக முதலில் கேட்டு மிகுதியும் மனத்தில் ஸந்தோஷமடைந்து, உடனே இந்த்ரஜித்து வதிப்பது அஸாத்யமாகையால் அது அபத்தமாயிருக்குமோ என்று நினைத்து அந்த யுத்தபூமிக்கு நேரில் போய் ஸமஸ்த லோகங்களுக்கும் ப்ரீதிக்கிடமான நண்பனாகிய லக்ஷ்மணன் மிகுதியும் செய்ய முடியாததும், ஸமஸ்த லோகங்களுக்கும் ப்ராண ப்ரதிஷ்டையை விளைவிப்பதுமாகிய இந்த்ரஜித் வதத்தை நடத்தினானென்று ப்ரத்யக்ஷமாக அறிந்து வியப்புற்றவராயினர்" என்றிருக்கிறது.
யுத்த காண்டம் சர்க்கம் – 090ல் உள்ள சுலோகங்கள்: 97
Previous | | Sanskrit | | English | | Next |