Saturday, 22 February 2025

இன்று போய் நாளை வாராய் | யுத்த காண்டம் சர்க்கம் - 059 (146)

Go today, and come tomorrow | Yuddha-Kanda-Sarga-059 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு வந்து, சுக்ரீவன், ஹனுமான், நீலன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்கொண்ட ராவணன்; போர்க்களத்தில் ராமனால் கிரீடம் முறிந்து, லங்கை திரும்பியது...

Rama in the shoulder of Hanuman in the war against Ravana

அந்த ராக்ஷச சைனியபாலன் {ராக்ஷசப் படையின் காவலனான பிரஹஸ்தன்}, பிலவங்கமரிஷபனால் {தாவிச் செல்லும் வானரர்களில் காளையான நீலனால்} யுத்தத்தில் கொல்லப்பட்டதும், பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ராக்ஷசராஜ சைனியம் சாகர வேகத்திற்குத் துல்லியமாக ஓடிப் போனது.(1) அப்படிச் சென்றவர்கள், சேனாபதி {பிரஹஸ்தன்}, பாவகனின் மகனால் {அக்னியின் மகனான நீலனால்} கொல்லப்பட்டதை ரக்ஷோதிபதியிடம் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனிடம்} சொன்னதும், அந்த வசனத்தைக் கேட்ட ரக்ஷோதிபன் {ராவணன்} குரோதவசம் அடைந்தான்.(2) போரில் பிரஹஸ்தன் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்தால் நிறைந்து, நிர்ஜரயூதமுக்கியர்களிடம் {மூப்பற்றவர்களான தேவர்களின் குழுத் தலைவர்களிடம்} இந்திரனைப் போல, அந்த ராக்ஷசயூத முக்கியர்களிடம் {ராக்ஷச குழுத் தலைவர்களிடம், ராவணன் பின்வருமாறு} சொன்னான்:(3) “எவரது தாக்குதலால் இந்திரபலம் {இந்திரனின் படை} அழிந்ததோ, அத்தகைய என் சைனியபாலரை {படைத்தலைவரான பிரஹஸ்தரைப்} பின்தொடர்ந்தோருடனும், குஞ்சரங்களுடனும் {யானைகளுடனும்} அழித்த பகைவரை இழிவாகக் கருதுவது {அலட்சியம் செய்வது} தகாது.(4) அப்படியிருக்கையில், சிந்தித்துக் கொண்டிராமல் பகைவரை நாசம் செய்து, விஜயமடைவதற்காக நான் ஸ்வயமாக {நேரடியாக} அந்த அற்புதப் போர்முனைக்குச் செல்ல விரும்புகிறேன்.(5) அக்னியால் எரியும் வனத்தைப் போல, ராமனுடனும், லக்ஷ்மணனுடன் கூடிய அந்த வானர அனீகத்தை {படையை} பாண வெள்ளத்தால் இதோ எரிக்கப் போகிறேன். இன்று பிருத்வியை கபிசோணிதத்தால் {பூமியை குரங்கு ரத்தத்தால்} திருப்தியடையச் செய்யப் போகிறேன்” {என்றான் ராவணன்}.(6)

இவ்வாறு சொன்ன அந்த அமரராஜாசத்ரு {தேவ மன்னன் இந்திரனின் பகைவனான ராவணன்}, பிரகாசமான உடலுடன் ஜுவலிப்பதும், உத்தம துரங்க {சிறந்த குதிரை} வரிசையால் பூட்டப்பெற்றதும், ஜுவாலை போலப் பிரகாசிப்பதுமான தன் ரதத்தில் ஏறினான்.(7) பிறகு, அந்த ராக்ஷராஜமுக்கியன் {ராவணன்}, சங்குகள், பேரிகள், பணவங்களின் {முரசுகளின்} நாதத்துடனும், கைத்தட்டல்களுடன் கூடிய சிம்ஹநாதத்துடனும், புண்ணிய புகழ்மாலையுடன் கூடிய பூஜைகளுடனும் புறப்பட்டுச் சென்றான்.(8) மலைகளுக்கும், மேகங்களுக்கும் ஒப்பான ரூபங்களுடனும், எரியும் பாவகனைப் போன்ற நேத்திரங்களுடனும் {கண்களுடனும்} கூடிய மாம்சாசனர்களால் {மாமிச உண்ணிகளான ராக்ஷசர்களால்} சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசராஜமுக்கியன், பூதங்களால் சூழப்பட்டவனும், அமரேசனுமான[1] ருத்திரனைப் போல விளங்கினான்.(9) பிறகு, நகரத்தில் இருந்து உடனே புறப்பட்ட அந்த மஹௌஜன் {அளவிடற்கரிய ஆற்றல் படைத்த ராவணன்}, கைகளில் மரங்கள், பாறைகளுடன் சமருக்கு ஆயத்தமாக இருப்பதும், மஹார்ணவத்தையும் {பெருங்கடலையும்}, பெரும் மேகத்திரளையும் போல கர்ஜிப்பதுமான உக்கிர வானர சைனியத்தைக் கண்டான்.(10)

[1] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், “அமரேனுமான ருத்திரன்” என்றிருக்கிறது. பல பதிப்புகளில் அஸுரேசனான ருத்திரன் என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “ருத்ரனை அஸுராதிபதி யென்பது, அவன் தாமஸனாயிருப்பதுபற்றி; மைத்ராயணீயோபநிஷத்தில் “யோஹவா அஸ்ய தாமஸோம்ச ஸோஸௌ ருத்திரம்” என்று கூறப்பட்டது” என்றிருக்கிறது. வேறு சில பதிப்புகளில் அஸுரேசன் என்பதை ராவணனுடன் பொருத்தி பொருள் கொண்டிருக்கின்றனர்.

புஜகேந்திர பாஹுவும் {பெரும்பாம்புகளைப் போன்ற கைகளைக் கொண்டவனும்}, சேனையால் பின்தொடரப்படுபவனும், பிருதுஸ்ரீயுமான {அழியாப் புகழ் படைத்தவனுமான} ராமன், அதி பிரசண்டமான {மிகப் பயங்கரமான} அந்த ராக்ஷச அனீகத்தை {படையைக்} கண்டு, சஸ்திரம் தரிப்பவர்களில் வரிஷ்டனான {ஆயுதங்கள் தரித்தவர்களில் சிறந்தவனான} விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(11) “நானாவிதமான பதாகைகள், துவஜங்கள், சஸ்திரங்களுடனும், பராசங்கள், அசிகள் {வாள்கள்}, சூலாயுதங்கள், சக்கரங்கள் ஆகியவற்றுடனும், அச்சமற்ற போர்வீரர்களுடனும் கூடியதும், கலங்கடிக்கப்பட முடியாததும், மஹேந்திரத்திற்கு ஒப்பான நாகங்களுடன் {யானைகளுடன்} கூடியதுமான இது யாருடைய சைனியம்?” {என்று கேட்டான்}.(12)

சக்ரனுக்கு சமமான வீரியத்தைக் கொண்ட விபீஷணன், ராமனின் வாக்கியத்தைக் கேட்ட பிறகு, மஹாத்மாக்களும், ராக்ஷச புங்கவர்களும் நிறைந்த அந்தப் படையைக் குறித்து ராமனிடம் {பின்வருமாறு} விவரித்தான்:(13) “இராஜரே, புதிதாய் உதிக்கும் அர்க்கனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான தாமிர {சிவந்த} முகத்துடன், நாகத்தின்  சிரத்தை {யானையின் தலையை} அசையச் செய்து, யானையின் முதுகில் ஏறி வரும் மஹாத்மா எவனோ, அத்தகைய இவனை அகம்பனன்[2] என்று அறிவீராக.(14) இரதத்தில் நின்று கொண்டு, சக்ரதனுவின் {இந்திரனுடைய வில்லின்} பிரகாசத்திற்கு ஒப்பான தன் தனுவில் {வில்லில்} நாணிழுத்துக் கொண்டிருப்பவனும், மிருகராஜகேதுவை {விலங்கு மன்னனான சிங்கத்தைக்} கொடியில் கொண்டிருப்பவனும், வளைந்திருக்கும் உக்கிர தந்தங்களுடன் கூடிய கரீயை {யானையைப்} போல் ஒளிர்பவனும் எவனோ, அந்த வரபிரதானனான {சிறந்த வரத்தைப் பெற்றவனான} இவனே இந்திரஜித்[3] என்றழைக்கப்படுகிறான்.(15) விந்தியம், அஸ்தம், மஹேந்திரத்திற்கு ஒப்பாக ரதத்தில் நின்று கொண்டிருப்பவனும், அதிரதனும், அதிவீரனும், பேருடல் படைத்தவனும், ஒப்பற்ற வடிவிலான வில்லைத் தரித்திருத்திருப்பவனும் எவனோ, அத்தகைய தன்வியான {வில்லாளியான} இவனே அதிகாயன் என்றழைக்கப்படுகிறான்.(16) 

[2] யுத்தகாண்டம் 56வது சர்க்கம் 30ம் சுலோகத்தில் அகம்பனன் ஹனுமானால் கொல்லப்பட்ட செய்தி இருக்கிறது.  இங்கே சொல்லப்படும் அகம்பனன் வேறு ஒருவனாகவே இருக்க வேண்டும். நரசிம்மாசாரியர் பதிப்பில், “இதோ, பாலஸூர்யன் போல் சிவந்த முகம் பொருந்தி யானையின் தோளில் உட்கார்ந்து தன் தேஹபாரத்தினால் யானையின் சிரஸ்ஸு அதிரப் பெரிய சரீரத்துடன் வருகின்றானே, இவன் ராவணனது புதல்வன்; இவனை அகம்பனனென்று அறிவாயாக” என்றிருக்கிறது. இதன் காரணமாகவே, விபீஷணன் ஏக வசனத்தில் பேசுவதாக மேற்கண்ட வாக்கியம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில் இந்த சுலோகத்தில் அடைப்புக்குறிக்குள், “அனுமானால் கொல்லப்பட்டவன் அல்லன்; இவன் வேறொரு அகம்பனன்” என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஒரு அகம்பனனை விட அதிகமானோர் இல்லையெனில், இதில் நிலைத்தன்மை ஏதும் இல்லை {இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது}. அகம்பனன் ஏற்கனவே ஹனுமானால் கொல்லப்பட்டான்” என்றிருக்கிறது. அந்த அகம்பனனும், இந்த அகம்பனனும் ஒன்றேயெனில், சர்க்கங்கள் முன்பின் மாறியிருக்க வேண்டும். அல்லது இவற்றில் ஏதோவொரு சர்க்கமோ, ஒரு சர்க்கத்தின் சில பகுதிகளோ இடைச்செருகலாக இருக்க வேண்டும்.

[3] யுத்த காண்டம் 44ம் சர்க்கத்தில் ராமலக்ஷ்மணர்களுடன் போரிட்டு சர்ப்ப பாசத்தில் அவர்களைக் கட்டுகிறான் இந்திரஜித். இங்கே விபீஷணன் இந்திரஜித்தைக் குறித்துப் புதிதாக அறிமுகம் செய்கிறான். சரபந்தனம் செய்தபோது இந்திரஜித் மறைந்திருந்து தாக்கினான். அப்போது விபீஷணனும் ராமலக்ஷ்மணர்களின் அருகில் இல்லை. இவன் இன்னான் என எவரும் அறிவதற்கு வாய்ப்பில்லை. 

விடியலுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், கிங்கிணி மணிகளுடன்கூடிய கஜத்தை {யானையைச்} செலுத்துபவனும், உரக்க கர்ஜிக்கும் மஹாத்மாவும் எவனோ, அந்த வீரனான இவனே மஹோதரன் என்றழைக்கப்படுகிறான்.(17) காஞ்சனத்தால் அலங்கரிக்கப்பட்ட ஹயத்தில் {குதிரையில்} ஏறி வருபவனும், அசனியின் {இடியின்} வேகத்திற்குத் துல்லியமான, பளபளக்கும் பராசத்தை ஏந்தியிருப்பவனும், மாலை வேளையில் திரண்ட மேகங்களுடன் கூடிய கிரியைப் போலப் பிரகாசிப்பவனும் எவனோ, அதக்கைய இவனே பிசாசன் ஆவான்.(18) மின்னலின் பிரபையுடன் கூடியதும், வஜ்ர வேகம் கொண்டதுமான கூரிய சூலத்தை ஏந்தியிருப்பவனும், சசியின் {சந்திரனின்} பிரகாசத்துடன் கூடிய விருஷேந்திரத்தில் {சிறந்த காளையில்} ஏறி வருபவனும் எவனோ, அத்தகைய புகழ்மிக்க இவனே திரிசிரஸ்[4] ஆவான்.(19) மேக ரூபம் கொண்டவனும், சதைப்பற்றுடன் கூடிய அகன்ற மார்பைக் கொண்டவனும், சமாஹிதத்துடன் கூடியவனும், பன்னகராஜகேதுவை {பாம்புகளின் மன்னனைக் கொடியில்} கொண்டவனும், தனுவை வளைத்தபடியே வருபவனுமான இவனே கும்பன் ஆவான்.(20) ஜம்பூநதத்தாலும் {பொன்னாலும்}, வஜ்ரத்தாலும் அலங்கரிக்கப்பட்டு, புகைபோல் ஒளிரும் பரிகத்தை ஏந்தியவனும், ராக்ஷசப் படையின் கேதுபூதமும் {கொடிதாங்கியும்} எவனோ, அத்தகைய அற்புத கர்மங்களைச் செய்யக்கூடிய இவனே நிகும்பன் ஆவான்.(21) எரியும் பாவக {அக்னி} ரூபத்திலான பதாகைகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏறியிருப்பவனும், சாபம், அசி {வில், வாள்}, சரங்களுடன் கூடியவனும், நக சிருங்கங்களை {மலைச் சிகரங்களைக்} கொண்டு யுத்தம் புரிபவனும் எவனோ, அத்தகைய ஒளியுடன் கூடிய இவனே நராந்தகன்[5] ஆவான்.(22) 

[4] இவன் ஆரண்ய காண்டம் 27ம் சர்க்கத்தில் ராமனால் கொல்லப்பட்ட திரிசிரஸாக இருக்க இயலாது. 

[5] இவன் சென்ற சர்க்கத்தில் துவிவிதனால் கொல்லப்பட்ட நராந்தகனாக இருக்க இயலாது. 

புலிகள், எருமைகள், நாகேந்திரங்கள் {தலைமை யானைகள்}, மிருகங்கள் {மான்கள்}, அஷ்வங்கள் {குதிரைகள்} ஆகியவற்றின் தலைகளுடன் கூடிய நானாவிதமான கோர ரூபங்களைக் கொண்ட பூதங்களால் சூழப்பெற்றவரும், உருளும் நேத்திரங்களுடன் {கண்களுடன்} கூடியவரும், ஸுரர்களையும் அடக்கவல்லவரும் எவரோ,{23} இந்துவுக்கு நிகராக ஒளிர்வதும், மெலிந்த கம்பிகளுடன் கூடியதும், உயர்ந்ததுமான வெண்குடையுடன் கூடியவரும், பூதங்களுக்கு மத்தியில் ருத்திரனைப் போல ஒளிர்பவரும் எவரோ, அத்தகைய மஹாத்மாவே இந்த ரக்ஷோதிபதி {ராக்ஷசர்களின் தலைவரான ராவணர்} ஆவார்.(23,24) கிரீடம் சூடியவரும், குண்டலங்கள் ஆடும் முகத்தை உடையவரும், நகேந்திரம் {மலைகளில் தலைமையான இமயம்}, விந்தியம் ஆகியவற்றை நிகர்த்த பயங்கரப் பேருடல் படைத்தவரும், மஹேந்திரன், வைவஸ்வதன் {இந்திரன், யமன்} ஆகியோரின் செருக்கை அடக்கியவருமான இந்த ராக்ஷோதிபர் {ராக்ஷசத் தலைவர் ராவணர்}, அதோ சூரியனைப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்” {என்றான் விபீஷணன்}.(25)

Rama praising Ravana

அப்போது, அரிந்தமனான ராமன், விபீஷணனிடம் {பின்வருமாறு} பதில் சொன்னான், “அஹோ, ராக்ஷசேஷ்வரன் ராவணன் என்ன மஹாதேஜஸ்ஸுடன் ஒளிர்கிறான்.(26) கதிர்களுடன் கூடிய ஆதித்யனைப் போலக் காண்பதற்கரியவனாக ராவணன் இருக்கிறான். தேஜஸ்ஸால் சூழப்பெற்று வெளிப்படும் அவனது ரூபத்தில் கண்களை நிலைக்கச் செய்ய முடியவில்லை.(27) இவ்விதமான இந்த ராக்ஷசேந்திரனின் உடலைப் போல, தேவ, தானவ வீரர்களின் உடல் கூட இவ்வளவு பிரகாசிக்காது.(28) அந்த மஹாத்மாவின் போர்வீரர்கள் அனைவரும் பர்வதம் {மலையைப்} போன்றவர்களாகவும், அனைவரும் பர்வதங்களுடன் போரிடவல்லவர்களாகவும், அனைவரும் ஒளிரும் ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(29) பல்வேறு வடிவங்களில் பீம தரிசனந்தரும் பயங்கர பூதங்களுக்கு மத்தியில், இந்த ரக்ஷோராஜன், அந்தகனைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) அதிர்ஷ்டவசமாக இந்த பாபாத்மா என் பார்வை வரம்புக்குள் வந்தான். சீதாஹரண சம்பவத்தால் {சீதை கடத்தப்பட்டதால்} ஏற்பட்ட என் குரோதத்தை இதோ வெளிப்படுத்தப் போகிறேன்” {என்றான் ராமன்}.(31) வீரியவானும், லக்ஷ்மணனால் பின்தொடரப்படுபவனுமான ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, தனுவை எடுத்துக் கொண்டு, உறுதியாக நின்று, உத்தம சரம் ஒன்றை எடுத்தான்.(32)

அப்போது, மஹாத்மாவான அந்த ரக்ஷோதிபன் {ராவணன்}, மஹாபலவான்களான அந்த ராக்ஷசர்களிடம் {பின்வருமாறு} கூறினான், “துவாரங்களிலும் {வாயில்களிலும்}, சாயாகிருஹங்களிலும் {காவல் கோட்டங்களிலும்}, கோபுரங்களிலும் சந்தேகமற்ற மகிழ்ச்சியுடன் நிற்பீராக.(33) உங்களுடன் நான் இங்கே வந்திருப்பதைக் கேட்டு, இதையே பலவீனமாக {குறையாக} எடுத்துக் கொள்ளும் வனௌகசர்கள் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள்}, வெல்வதற்கரியதாக இருப்பினும் சூனியமான புரீக்குள் {நகரத்திற்குள்} அத்துமீறி நுழைந்து நாசம் விளைவிக்கக்கூடும்” {என்றான் ராவணன்}.(34) அந்த ஆலோசகர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பிய பிறகு, பெருமீன் ஒன்று பூர்ணமான அர்ணவ {கடல்} பிரவாகத்துள் {நுழைவதைப்} போல, அந்த வானர சாகர வெள்ளத்தைப் பிளந்து சென்றான் {வானரப்படைக்குள் பிரவேசித்தான்}.(35)

யுத்தத்தில் திடீரென்று ஒளிரும் சாபத்துடன் {வில்லுடன்} முன்னேறி வரும் ராக்ஷசேந்திரனைக் கண்ட ஹரீசன் {குரங்குகளின் தலைவன் சுக்ரீவன்}, மஹத்தான மஹீதர உச்சியை {மலைச்சிகரம் ஒன்றைப்} பெயர்த்துக்கொண்டு, ரக்ஷோதிபனை நோக்கி விரைந்தான்.(36) ஏராளமான விருக்ஷங்களுடனும், முகடுகளுடனும் கூடிய அந்த சைல சிருங்கத்தை {மலைச் சிகரத்தை} எடுத்து, நிசாசரன் {இரவுலாவியான ராவணன்} மீது வீசிய உடனேயே, அணுகிவரும் அதைக் கண்டவன் {ராவணன்}, பொற்புங்கங்களுடன் கூடிய பாணங்களால் அதைப் பிளந்தான்.(37) விருக்ஷங்கள், முகடுகளுடன் கூடிய உத்தம பர்வதத்தின் அந்த சிருங்கம் {சிகரம்} பிளந்து பிருத்வியில் விழுந்த போது, மற்றொரு அந்தகனைப் போலிருந்த ராக்ஷச லோகநாதன் {ராவணன்} மஹாஹிக்கு {பெரும்பாம்புக்கு} ஒப்பான சரத்தை ஏவினான்.(38) கோபத்துடன் கூடிய அவன், அசனிக்கு {இடிக்குத்} துல்லியமான வேகத்தைக் கொண்டதும், நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதும், மஹேந்திர அசனிக்குத் துல்லியமான வேகத்தைக் கொண்டதுமான அந்த பாணத்தை எடுத்து சுக்ரீவ வதத்திற்காக {சுக்ரீவனைக் கொல்வதற்காக} ஏவினான்.(39) சக்ரனின் அசனிக்கு {இந்திரனின் வஜ்ரத்திற்கு} ஒப்பான பிரகாசம் கொண்டதும், ராவணனால் ஏவப்பட்டதுமான அந்த சாயகம் {கணை}, குஹனின் உக்கிர சக்தி {வேலாயுதம்} கிரௌஞ்சத்தை எப்படியோ[6], அப்படியே சுக்ரீவனை வேகமாக அடைந்து அவனைத் துளைத்தது.(40) சாயகத்தால் நனவிழந்த அந்த வீரன் {சுக்ரீவன்}, கதறியபடியே பிருத்வியில் {பூமியில்} விழுந்தான். யுத்தத்தில் நனவிழந்து பூமியில் விழும் அவனைக் கண்ட யாதுதானர்கள் {ராக்ஷசர்கள்} மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(41)

[6] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “வேலாயுதத்தைக் கொண்டு கிரௌஞ்ச மலையைக் கலங்கடித்தவன் கார்த்திகேயன் {முருகன்} ஆவான்” என்றிருக்கிறது.

அப்போது பேருடல் படைத்த கவாக்ஷன், கவயன், சுஷேணன், அதேபோல ரிஷபன், ஜோதிமுகன், நளன் ஆகியோர் சைலங்களை {மலைகளைப்} பெயர்த்துக் கொண்டு அந்த ராக்ஷசேந்திரனை நோக்கி விரைந்தனர்.(42) அந்த ரக்ஷோதிபன், கூர்முனை கொண்ட நூறு பாணங்களால் அவர்களின் தாக்குதல்களை வீணடித்து, ஜாம்பூநத சித்திர {பொன்னாலான அழகிய} புங்கங்களுடன் கூடிய பாணஜாலங்களால் அந்த வானரேந்திரர்களைத் துளைத்தான்.(43) திரிதசாரியின் {தேவர்களின் பகைவனான ராவணனின்} பாணங்களால் துளைக்கப்பட்டவர்களும், பயங்கர உடல்படைத்தவர்களுமான அந்த வானரேந்திரர்கள் புவியில் விழுந்தபோது, அவன் {ராவணன்}, அந்த உக்கிரமான வானர சைனியத்தைத் தன் பாண ஜாலங்களால் மறைத்தான்.(44) தாக்குதலுக்குள்ளாகி விழுந்த அந்த சாகை மிருக {கிளைகளில் வாழும் விளங்கு} வீரர்கள், பய சல்லியத்தால் {அச்சமெனும் கணையால்} துளைக்கப்பட்டது போல் கதறினர். இராவணனின் சாயகங்களால் தாக்கப்பட்டுத் தப்பி ஓடி, சரண்யனான ராமனிடம் சரணம் அடைந்தனர்.(45)

அப்போது தனுஷ்மானும், மஹாத்மாவுமான அந்த ராமன், தன் தனுவை எடுத்துக் கொண்டு, உடனே புறப்பட்டான். இலக்ஷ்மணன், கூப்பிய கைகளுடன் அவனை அணுகி, பரமார்த்தம் பொருந்திய {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(46) “ஆரியரே {உன்னதரே, பெரியவரே}, துராத்மாவான இவனை வதைக்கும் காரியத்தை நிறைவேற்ற நான் முற்றிலும் போதுமானவன். விபுவே {தலைவரே}, நான் இவனை வதைப்பேன். எனக்கு அனுமதி அளிப்பீராக” {என்றான் லக்ஷ்மணன்}.(47)

பேராற்றல்வாய்ந்தவனும், சத்திய பராக்கிரமனுமான ராமன், அவனிடம் {லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} கூறினான், “இலக்ஷ்மணா, செல்வாயாக. போரில் கவனத்துடன் யத்னம் செய்வாயாக.(48) இரணத்தில் மஹாவீரியனும், அற்புத பராக்கிரமனுமான ராவணன், குரோதமடைந்தால் மூவுலகங்களும் சேர்ந்தாலும் அடக்கப்பட முடியாதவன் என்பதில் சந்தேகமில்லை.(49) அவனது குறைகளை கவனித்து அறிந்து உனக்குரியவற்றில் {உன் குறைகளில்} கவனமாக இருப்பாயாக. சமாஹிதமுடைய கண்களுடனும், தனுசுடனும் உன்னைக் காத்துக் கொள்வாயாக” {என்றான் ராமன்}.(50)

இராமனின் சொற்களைக் கேட்ட சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, அவனைத் தழுவிப் பூஜித்து, ராமனிடம் விடைபெற்றுக் கொண்டு, போருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(51) பிறகு அவன் {லக்ஷ்மணன்}, வாரணத்தின் {யானையின்} துதிக்கை போன்ற கைகளுடன் கூடியவனும், ஒளிர்வதும், பயங்கரமானதுமான சாபத்தை {வில்லை} ஏந்தியவனும், காயம்பட்டு, உறுப்புகள் முறிந்த தேஹங்களுடன் கூடிய வானரர்களை சரவிருஷ்டிஜாலத்தால் {கணைமழை வரிசைகளால்} மறைப்பவனுமான ராவணனைக் கண்டான்.(52)

Hanuman warns Ravana in battlefield

மஹாதேஜஸ்வியும், மாருதாத்மஜனுமான அந்த ஹனுமான், அவனை {ராவணனைக்} கண்டு, சரஜாலங்களை நிறுத்துவதற்காக ராவணனை நோக்கி விரைந்தான்.(53) மதிமிக்கவனான ஹனுமான் அவனது ரதத்தை அணுகி, தன் தக்ஷிண பாஹுவை {வலது கையை} உயர்த்தி, அச்சுறுத்தும் வகையில் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(54) “தேவ, தானவ, கந்தர்வர்களாலும், ராக்ஷசர்கள், யக்ஷசர்களாலும் வதைக்கப்படாமை உன்னால் {கொல்லப்படாத நிலை உன்னால் வரமாக} அடையப்பட்டிருக்கிறது. வானரர்களிடமோ உனக்கு பயம் உண்டு.(55) பஞ்ச சாகைகளுடன் {ஐந்து கிளைகளுடன் / விரல்களுடன்} கூடியதும், உயர்த்தப்பட்டிருப்பதுமான என்னுடைய இந்த தக்ஷிண பாஹு {வலது கை}, உன் தேஹத்தில் நீண்ட காலமாக வசிக்கும் பூதாத்மாவை வெளியேற்றப் போகிறது” {என்றான் ஹனுமான்}.(56)

பீமவிக்கிரமனான ராவணன், ஹனுமானின் வாக்கியத்தைக் கேட்டு, குரோதத்தில் எரியும் நயனங்களுடன் {கண்களுடன்} இந்த வசனத்தைக் கூறினான்:(57) “வானரனே, சங்கடம் இல்லாமல் சீக்கிரம் தாக்குவாயாக. ஸ்திரமான கீர்த்தியை வெல்வாயாக. உன் விக்ராந்தத்தை அறிந்த பிறகு, உன்னை நாசம் செய்ய விரும்புகிறேன்” {என்றான் ராவணன்}.(58)

இராவணனின் சொற்களைக் கேட்ட வாயுமைந்தன் {ஹனுமான், பின்வரும்} சொற்களைக் கூறினான், “பூர்வத்திலேயே என்னால் கொல்லப்பட்ட உன் சுதன் {மைந்தன்} அக்ஷனை நினைத்துக் கொள்வாயாக” {என்றான் ஹனுமான்}.(59)

இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, தன் உள்ளங்கையால் அனிலசுதனின் {வாயு மைந்தன் ஹனுமானின்} மார்பைத் தாக்கினான்.(60) அவனது உள்ளங்கையால் தாக்குதலுக்குள்ளானவன், மீண்டும் மீண்டும் நடுங்கினான். மஹாமதியாளனான அந்த தேஜஸ்வி, ஒரு முஹூர்த்தத்திற்குள் தைரியத்தை அடைந்து, குரோதத்துடன், தன் உள்ளங்கையால் அமரத்விஷனை {தேவர்களின் பகைவனான ராவணனைத்} தாக்கினான்.(61,62அ) மஹாத்மாவான அந்த வானரனால் தாக்கப்பட்டபோது, நிலநடுக்கத்தில் அசலத்தை {மலையைப்} போல தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்} நடுங்கினான்.(62ஆ,63அ) சங்கிரமத்தில் {போரில்} இவ்வாறு உள்ளங்கை தாக்குதலுக்கு உள்ளாகும் அந்த ராவணனைக் கண்ட ரிஷிகள், வானரர்கள், சித்தர்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் முழக்கம் எழுப்பினர்.(63ஆ,64அ)

பின்னர், மஹாதேஜஸ்வியான ராவணன், அசுவாசமடைந்து, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், “வானரா, சாது {நன்று}. நீ வீரியத்தினால் சிலாகிக்கப்பட வேண்டிய எதிரியாக இருக்கிறாய்” {என்றான்}.(64ஆ,65அ)

இராவணனால் இவ்வாறு கூறப்பட்டதும், மாருதி {வாயு மைந்தன் ஹனுமான், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், “இராவணா, நீ {இன்னும்} ஜீவிப்பதால் என் வீரியத்திற்கு ஐயோ. துர்புத்தி கொண்டவனே, ஏன் தற்புகழ்ச்சி செய்கிறாய்? இனியும் ஒரு முறை தாக்குவாயாக. பிறகு என் முஷ்டி உன்னை யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} அனுப்பிவைக்கும்” {என்றான் ஹனுமான்}.(66ஆ,67அ)

பிறகு, மாருதியின் வாக்கியத்தைக் கேட்டு அவன் குரோதத்தில் எரிந்தான். சிவந்த நயனங்களுடன் கூடிய அந்த வீரியவான், தன் வலது முஷ்டியை யத்னத்துடன் உயர்த்தி, வானரனின் மார்பில் வேகமாகத் தாக்கினான்.(67ஆ,68) அகன்ற மார்பில் தாக்கப்பட்ட ஹனுமான் மீண்டும் மீண்டும் கலங்கினான். மஹாபலவானான ஹநூமந்தன் கலங்குவதைக் கண்ட அந்த அதிரதன் {ராவணன்}, சீக்கிரமே தன் ரதத்தில் நீலனை நோக்கிச் சென்றான்.(69,70அ) 

இராக்ஷசர்களின் அதிபதியும், பிரதாபவானுமான தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, பகைவரின் மர்மங்களைப் பிளக்கக்கூடியவையும், பன்னகங்களுக்கு {பாம்புகளுக்கு} நிகரானவையுமான பயங்கர சரங்களால் ஹரிசம்முபதியான {குரங்குப்படைத் தலைவனான} நீலனைக் கலங்கடித்தான்.(70ஆ,71) சரவெள்ளத்தால் பீடிக்கப்பட்டவனும், ஹரிசம்முபதியுமான நீலன், ஒரு கரத்தால் சைலத்தின் உச்சியை {மலைச்சிகரத்தை} எடுத்து ரக்ஷோதிபதியின் மீது வீசினான்.(72)

Hanuman gets away from Ravana

மஹாமனம் கொண்டவனும், தேஜஸ்வியுமான ஹனுமானும், ஆசுவாசமடைந்து, யுத்தம்புரிய வேண்டி, கோபத்துடன் இருபுறமும் பார்த்துவிட்டு இதைச் சொன்னான்:{73} நீலனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ராக்ஷசேஷ்வரன் ராவணனிடம், “வேறொருவருடன் யுத்தம்புரிபவனைத் தாக்குவது யுக்தமில்லை {முறையல்ல}” என்று சொன்னான்.(73,74) 

அப்போது, மஹாதேஜஸ்வியான ராவணன், கூர்முனைகளைக் கொண்ட ஏழு சரங்களால் அந்த சிருங்கத்தைத் தாக்கியதும், அதுவும் சிதறுண்டு விழுந்தது.(75) அந்த சிருங்கம் நொறுங்கியதைக் கண்டவனும், பகை வீரர்களை அழிப்பவனுமான சம்முபதி {படைத்தலைவன் நீலன்}, காலாக்னியைப் போலக் கோபத்தில் எரிந்தான்.(76) போரில் அந்த நீலன், அஷ்வகர்ணம், புஷ்பித்த சாலம், சூதம் ஆகிய மரங்களையும், வேறு விதவிதமான விருக்ஷங்களையும் வீசினான்.(77) அந்த விருக்ஷங்களை எதிர் கொண்ட அந்த ராவணன், அவற்றை வெட்டி வீழ்த்தி, பாவகியின் {அக்னியின் மகனான நீலன்} மீது கோரமான சர மழையைப் பொழிந்தான்.(78) மலையின் மீது மேகமழை {பொழியப்படுவது} போல, சர வெள்ளம் பொழியப்பட்டபோது, அந்த மஹாபலவான் {நீலன்}, தன் ரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, துவஜத்தின் உச்சிக்குத் தாவினான்.(79) துவஜத்தின் நுனியில் திடமாக நிற்கும் பாவகாத்மஜனை {அக்னியின் மகனான நீலனை} ராவணன் கண்டபோது, நீலன் உரத்த நாதம் செய்தான்.(80) 

Nila in the standard of Ravana's chariot

துவஜநுனியில் இருந்த அந்த ஹரி {குரங்கான நீலன், சில நேரங்களில்} தனுசின் நுனியிலும், {சில நேரங்களில்} கிரீடத்தின் உச்சியிலும் இருப்பதைக் கண்டு ஹனுமானும், லக்ஷ்மணனும், ராமனும் வியப்படைந்தனர்.(81) பிறகு, மஹாதேஜஸ்வியான ராவணன், கபிலாகவத்தால் {குரங்கின் லாகவத்தால்} வியப்படைந்து, அற்புதமானதும், ஒளிர்வதுமான ஆக்நேயாஸ்திரத்தை எடுத்தான்.(82) அப்போது, ராவணன் போரில் நீலனின் லாகவத்தால் குழப்பமடைவதைக் கண்டு, மகிழ்ச்சியடைவதற்கான வாய்ப்பை அடைந்த அந்தப் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(83) வானரர்களின் நாதத்தால் தூண்டப்பெற்ற ராவணன், ஹிருதயம் கலக்கமுற்று, சிறிது நேரம் ஏது செய்வதென அறியாதிருந்தான்.(84) ஆக்நேயத்தால் ஈர்க்கப்பட்ட சரத்தை எடுத்தவனும், நிசாசரனுமான {இரவுலாவியான} ராவணன், துவஜத்தின் நுனியில் நின்று கொண்டிருக்கும் நீலனைக் குறி வைத்தான்.(85) 

பிறகு, மஹாதேஜஸ்வியும், ராக்ஷசேஷ்வரனுமான ராவணன், {பின்வருமாறு} கூறினான், “கபியே {குரங்கே}, மாயா சக்தியுடன் கூடிய லாகவம் கொண்டவனாக இருக்கிறாய்.(86) வானரா, ரூபத்தை வெவ்வேறு வகையில் மாற்றிக் கொள்ளும் சக்தி உனக்கிருக்கிறது. அதைக் கொண்டு உன் ஜீவிதத்தை ரக்ஷித்துக் கொள்வாயாக.(87) அதேபோல, என்னால் ஏவப்படும் அஸ்த்ரப்ரயோஜித சாயகம் {ஆக்நேய அஸ்திரத்தால் ஈர்க்கப்பட்ட கணை}, ஜீவிதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கும் உன்னை ஜீவிதத்திலிருந்து பிரித்துவிடப் போகிறது” {என்றான் ராவணன்}.(88) 

இவ்வாறு கூறியவனும், மஹாபாஹுவும், ராக்ஷசேஷ்வரனுமான ராவணன், அஸ்திரத்துடன் கூடிய பாணத்தைப் பொருத்தி சம்முபதியை {படைத்தலைவனான நீலனைத்} தாக்கினான்.(89) அஸ்திரத்துடன் கூடி பாணத்தால் மார்பில் தாக்கப்பட்ட நீலன், எங்கும் தஹிப்பவனாக {எரிபவனாகத்} திடீரென மஹீதலத்தில் {தரையில்} விழுந்தான்.(90) முழங்கால் மடிந்து பூமியில் விழுந்தாலும், தன் தேஜஸ்ஸாலும், பித்ரு மஹாத்மியத்தாலும் {தந்தையான அக்னியின் மகிமையாலும்} பிராணனை இழக்காதிருந்தான்.(91) வானரம் நனவற்றுப் போனதைக் கண்ட தசக்ரீவன், ரண உற்சாகத்துடன் மேகத்தின் நாதத்தைக் கொண்ட ரதத்தில் சௌமித்ரியை {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணனை} நோக்கி விரைந்தான்.(92) பிரதாபவானான ராக்ஷசேந்திரன், ரண மத்தியில் அவனை அணுகி, {அவனை} மேற்செல்ல விடாமல் அங்கேயே நின்று கொண்டு ஜுவலிக்கும் தனுவை உயர்த்தினான்.(93) 

Lakshmana fighting with Ravana

அதீனசத்வனான சௌமித்ரி {சலிக்காத ஆற்றல் கொண்டவனான லக்ஷ்மணன்}, அளவிடற்கரிய தனுவை உயர்த்துபவனிடம் {ராவணனிடம் பின்வருமாறு} கூறினான், “நிசாசரேந்திரா {இரவுலாவிகளின் தலைவா}, என்னை நோக்கி வருவாயாக. வானரர்களை எதிர்த்துப் போர்புரிவது உனக்குத் தகாது” {என்றான்}.(94) 

பிரதி பூர்ண கோஷத்துடன் கூடிய அவனது உக்கிர வாக்கியத்தையும், ஜியாசப்தத்தையும் {நாணொலியையும்} கேட்டுவிட்டு, அருகில் இருந்த அந்த சௌமித்ரியை அணுகி, கோபத்துடன் கூடிய {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(95) “இராகவா {லக்ஷ்மணா}, விபரீத புத்தியுடன் கூடிய நீ, அந்தகனிடம் செல்வதைப் போல என் திருஷ்டி மார்க்கத்தில் {பார்வையின் பாதையில்} வந்தது என் அதிர்ஷ்டமே. இந்த க்ஷணமே என் பாண ஜாலங்களால் மாய்த்து சாய்க்கப்பட்டவனாக மிருத்யு லோகத்தை அடையப் போகிறாய்” {என்றான்}.(96)

வியப்பேதும் அடையாத சௌமித்ரி, துருத்திக் கொண்டிருக்கும் கூரிய பற்களுடன் கர்ஜித்துக் கொண்டிருப்பவனிடம் {ராவணனிடம்}, “இராஜனே, மஹாபிரபாவம் கொண்டவர்கள் கர்ஜிப்பதில்லை. பாபம் செய்பவர்களில் முதன்மையானவனான நீயோ தற்பெருமை பேசுகிறாய்.(97) இராக்ஷசேந்திரா, உன் வீரியம், பலம், பிரதாபம், பராக்கிரமம் ஆகியவற்றை நான் அறிவேன். வருவாயாக. நான் சர சாப பாணியாக {கையில் அம்புகளுடனும், வில்லுடனும்} இங்கே நிற்கிறேன். வீண் தற்புகழ்ச்சியால் ஆகப்போவது என்ன?” {என்றான் லக்ஷ்மணன்}.(98)

இவ்வாறு சொல்லப்பட்டதும் கோபமடைந்த அந்த ரக்ஷோதிபன், நல்ல புங்கங்களைக் கொண்ட சப்த சரங்களை {ஏழு கணைகளை} ஏவினான். இலக்ஷ்மணன், கூர் நுனிகளுடனும், முனைகளுடனும், காஞ்சன சித்திர {பொன்னாலான அழகிய} புங்கங்களுடன் கூடி பாணங்களால் அவற்றைத் துண்டித்தான்.(99) தலைகள் அறுபட்ட பன்னகேந்திரங்களை {தலைமை பாம்புகளைப்} போல, உடனே வெட்டப்பட்ட அவற்றைக் கண்ட லங்கேஷ்வரன், குரோதவசமடைந்தவனாக வேறு கூரிய கணைகளை ஏவினான்.(100) அந்த ராமானுஜன் {ராமனின் தம்பியான லக்ஷ்மணன்}, கார்முகத்தை {வில்லை} முழுமையாக வளைத்து, தீவிர பாண வர்ஷத்தை {கடும் கணை மழையைப்} பொழிந்து, க்ஷுரம், அர்த்தசந்திரம், உத்தம கர்ணி, பல்லம் உள்ளிட்ட சரங்களை[7] வெட்டி வீழ்த்திக் கலங்காதிருந்தான்.(101) 

[7] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “க்ஷுரங்கள் என்பன கூர்முனைக் கணைகளும், அர்த்தசந்திரங்கள் என்பன அரை பிறை வடிவ முனைகளைக் கொண்ட கணைகளும், கர்ணிகள் என்பன முள் போன்ற முனைகளைக் கொண்ட கணைகளும், பல்லங்கள் என்பன அகன்ற முனைகளைக் கொன்ற கணைகளும் ஆகும்” என்றிருக்கிறது.

பல்வேறு பாண ஜாலங்கள் வீணானதைக் கண்ட அந்த திரிதசாரிராஜன் {தேவர்களின் பகைவனான மன்னன் ராவணன்}, லக்ஷ்மணனின் லாகவத்தால் வியப்படைந்து, மீண்டும் கூரிய பாணங்களை ஏவினான்.(102) மஹேந்திரனுக்குத் துல்லியனான அந்த லக்ஷ்மணனும், ரக்ஷோதிபதியை வதைப்பதற்காக, அசனியின் {இடியின்} பயங்கர வேகத்தைக் கொண்டவையும், நெருப்பாகப் பிரகாசிப்பவையுமான கூரிய சரங்களை வில்லில் பொருத்தி ஏவினான்.(103) அந்தக் கூரிய சரங்களைக் கலங்கடித்த அந்த ராக்ஷசேந்திரன், ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} கொடுக்கப்பட்டதும், காலாக்னிக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு சரத்தால் லக்ஷ்மணனின் நெற்றியைத் தாக்கினான்.(104) இராவணனின் சாயகத்தால் {கணையால்} தாக்கப்பட்ட அந்த லக்ஷ்மணன், தன் சாபத்தை {வில்லைப்} பிடிக்கவும் இயலாத நிலையை அடைந்தாலும், பெரும் சிரமத்திற்கிடையில் நனவு மீண்டு, திரிதசேந்திரசத்ருவின் சாபத்தை {தேவலோக இந்திரனின் பகைவனான ராவணனின் வில்லை} முறித்தான்.(105)

தாசரதி {தசரதனின் மகனான லக்ஷ்மணன்}, சாபத்தை {வில்லை} முறித்த பிறகு, கூர்நுனிகளைக் கொண்ட மூன்று பாணங்களால் தாக்கினான். சாயகங்களால் துளைக்கப்பட்ட அந்த ராஜா {ராவணன்} மயக்கமடைந்து, பெரும் சிரமத்திற்கிடையில் நனவு மீண்டான்.(106) கணைகளால் தாக்கப்பட்டு, சாபம் {வில்} முறிந்த அந்த தேவசத்ரு {தேவர்களின் பகைவனான ராவணன்}, அங்கங்களில் இருந்து சதை சிதற, தானே உதிரம் பெருக இருந்து கொண்டும், ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} தத்தம் செய்யப்பட்டதும், உக்கிர சக்தியுடன் கூடியதுமான சக்தியை {வேலாயுதத்தை} யுத்தத்தில் எடுத்தான்.(107) இராக்ஷசராஷ்டிரநாதனான அவன், அனலனுக்கு {அக்னிக்கு} ஒப்பாக தூமத்தை {புகையை} வெளியிடுவதும், ஜுவலித்துக் கொண்டிருப்பதும், போரில் வானரர்களை அச்சுறுத்துவதுமான அந்த சக்தியை {வேலாயுதத்தை} பலத்துடன் வீசினான்.(108) பரதானுஜன் {பரதனின் தம்பியான லக்ஷ்மணன்}, ஹுதாக்னிக்கு {வேள்வி நெருப்புக்கு} ஒப்பான அஸ்திரங்களாலும், பாணங்களாலும் தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அதைத் தாக்கினான். இருப்பினும் அந்த சக்தி தாசரதியின் {தசரதனின் மகனான லக்ஷ்மணனின்} அகன்ற மார்பைத் துளைத்தது.(109)

சக்திமானான அந்த ரகுபிரவீரன் {ரகு குலத்தின் சிறந்த வீரனான லக்ஷ்மணன்}, அந்த சக்தியால் தாக்கப்பட்டு, நெருப்பை சுவாசித்தபடி பூமியில் கிடந்தான். நனவற்றுக் கிடந்த அவனிடம் உடனே விரைந்து சென்ற ராஜா {ராவணன்}, தன்னிரு கைகளாலும் அவனை வலுவாகப் பற்றினான்.(110) ஹிமவான் {இமய மலை}, மந்தரம், மேரு ஆகியவற்றையும், மூவுலகங்களையும், அமரர்களையும் தூக்கும் சக்திபடைத்த அவனால் பரதானுஜனை {ராவணனால் பரதனின் தம்பியான லக்ஷ்மணனைத்} தூக்க முடியவில்லை.(111) சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, பிராம்ய சக்தியால் {பிரம்மாயுதத்தால் ஈர்க்கப்பட்ட வேலாயுதத்தால்} மார்பில் தாக்கப்பட்டிருந்தாலும், தான் விஷ்ணுவின் அமீமாம்ஸ்ய பாகம் {தான் விஷ்ணுவிடம் இருந்து பகுத்தறிவதற்கரிய பகுதியாக இருப்பவன்} என்பதை நினைவுகூர்ந்தான்[8].(112) தேவகண்டகனால் {தேவர்களுக்கு முள்ளாகத் திகழும் ராவணனால்}, தானவர்களின் செருக்கை அழிப்பவனான அந்த சௌமித்ரியை {லக்ஷ்மணனைத்} தன்னிரு கைகளாலும் பிடிக்க முடிந்தாலும், {அவனைத்} தூக்கிச் செல்ல இயலவில்லை.(113)

[8] தர்மாலயப் பதிப்பில், “இத்தன்மையதென எண்ணுதற்கரியதும் அவர்க்கு மட்டுமே உரியதுமான விஷ்ணுபகவானின் அம்சமாகிற பிறவிக்குணத்தை ஸ்மரித்துக் கொண்டிருந்தார்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “சிந்திக்க முடியாததான விஷ்ணு தேவனுடைய அம்சமாய் விளங்குந் தன் ஸ்வரூபத்தை நினைத்துக் கொண்டனன்” என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், “சிந்தித்துப் பார்க்க முடியாத பெருமை வாய்ந்ததுமான மகாவிஷ்ணுவின் அம்சமாகிய தன்னுடைய இயல்பை நினைவுக்குக் கொண்டு வந்தான்” என்றிருக்கிறது.

அப்போது குரோதமடைந்த வாயுசுதன் {ஹனுமான்}, ராவணனை நோக்கி விரைந்து, வஜ்ரத்திற்கு ஒப்பான தன் முஷ்டியால் குரோதத்துடன் அவனது மார்பைத் தாக்கினான்.(114) அந்த முஷ்டியின் தாக்குதலால் கலக்கமடைந்த ராக்ஷசேஷ்வரன் ராவணன், முழங்கால் மடிந்து பூமியில் விழுந்தான்.(115) அவனது வாயிலிருந்தும், நேத்திரங்களில் {கண்களில்} இருந்தும், காதுகளில் இருந்தும் ஏராளமான உதிரம் பெருகியது. கலக்கமடைந்த அவன், தன் ரதத்தின் மத்தியில் அசைவற்றவனாக அமர்ந்தான்[9].(116) நனவிழந்த அவன், மூர்ச்சித்து விழுந்து தன்னிலை அடையாதிருந்தான். பீம விக்கிரமனான ராவணன், சமரில் {போரில்} நனவிழந்திருப்பதைக் கண்டு,{117} ரிஷிகளும், வானரர்களும், தேவர்களும், அசுரர்களும் கூச்சலிட்டனர்.(117,118அ) தேஜஸ்வியான ஹனுமான், ராவணனால் காயமடைந்த அந்த லக்ஷ்மணனைத் தன் தோள்களில் தூக்கி, ராகவனின் {ராமனின்} அருகே அவனைக் கொண்டு சென்றான்.(118ஆ,119அ) சத்ருக்களால் அசைக்கப்பட முடியாத அவன் {லக்ஷ்மணன்}, நட்பினாலும், பரம பக்தியினாலும் வாயுசுதனான அந்த கபிக்கு லகுவானவனாக {குரங்கான ஹனுமானுக்கு எடுக்க லேசாக} இருந்தான்.(119ஆ,120அ) 

[9] இந்த சர்க்கத்தின் தொடக்கத்தில் ராவணனுடன் வந்தவர்களாக விபீஷணனால் வர்ணிக்கப்பட்டவர்கள் இப்போது ஏன் ராவணனைக் காக்க வரவில்லை. முக்கிய வானரர்களும், லக்ஷ்மணனும் அடிபட்டுக் கிடக்கிறார்கள். இந்நிலையில் ராவணனைக் காக்க இந்திரஜித் ஒருவனே போதும். இந்த சர்க்கம் இடைச்செருகலாக இருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதை இது போன்ற வர்ணனைகள் பறைசாற்றுகின்றன.

யுத்தத்தில் சௌமித்ரியை வீழ்த்திய அந்த சக்தி {வேலாயுதம்}, ராவணனுடைய தேரில் இருந்த தன் ஸ்தானத்திற்கே திரும்பச் சென்றது.(120ஆ,121அ) மஹாதேஜஸ்வியான ராவணனும், நனவு மீண்டவனாக, போர்க்களத்தில் கூரிய பாணங்களை எடுத்துக் கொண்டு, மஹத்தான தனுவையும் ஏந்தினான்.(121ஆ,122அ) சத்ரூசூதனனான லக்ஷ்மணன் அந்த சல்லியத்திலிருந்து {வேலாயுதத்தில் இருந்து} விடுபட்டு ஆசுவாசமடைந்து, தான் விஷ்ணுவின் அமீமாம்ஸ்ய பாகம் {தான் விஷ்ணுவிடம் இருந்து பகுத்தறிவதற்கரிய பகுதியாக இருப்பவன்} என்பதை நினைவுகூர்ந்தான்[10][11].(122ஆ,123அ))  மஹாவீரர்கள் வீழ்ந்துவிட்ட நிலையில் வானரர்களின் மஹாசம்முவை {பெரும்படைவைக்} கண்ட ராகவனும் {ராமனும்}, ராவணனை நோக்கி விரைந்தான்.(123ஆ,124அ)

[10] 8ம் அடிக்குறிப்பையும், அது சுட்டிக்காட்டும் சுலோகத்தையும் காண்க, வால்மீகி ராமாயணத்தின் இயல்பான வர்ணனைக்கு முரணாக வலிந்து மீண்டும் மீண்டும் அமானுஷ்யமாகச் சொல்லப்படும் இதைப் போன்ற சுலோகங்களும், இந்த சர்க்கத்தில் பெரும்பகுதி இடைச்செருகலாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தையே உண்டாக்குகின்றன.

[11] தர்மாலயப் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிக செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு, “மஹா ஆற்றலுடைய ராவணனும் பெரும்போரில் பிரக்ஞையை அடைந்து சிறந்த வில்லை எடுத்துக் கொண்டான். கூரிய பாணங்களையும் தொடுத்தான். அவன் மிகச் சினங்கொண்டவனாகி வானரர்களுடைய சின்னபின்னமாக்கப்பட்ட மகாவீரர்களுடைய பெரும் சேனையையும், வானரர்களுடைய பெரும் சேனை எல்லாவற்றையும் துரத்தி அடித்தான். அவர்கள் கொடியவனும், கைலாகவம் பெற்றவனுமான அரக்கனால் ஹிம்சிக்கப்படுகின்றவர்களாய் பிரஜைகள் பிரம்மதேவரை எப்படியோ அப்படியே ஸ்ரீராமரிடம் சரமாய்ப் போய்ச்சேர்ந்தார்கள். ஸ்ரீராமரும் போரில் கொடிய அரக்கனின் செயலை பார்த்து பொன்னாலழகுற்று விளங்கும் கோதண்டத்தை நாணேற்றி வைத்துக் கொண்டு போரில் சூரனாகிய ராவணனை ரதத்திலிருக்கின்றவனாகத் தூரத்திலிருந்த வண்ணமே பார்த்தார்” என்றிருக்கிறது. ராமனுடைய வில்லின் பெயர் இன்னும் நேரடியாக வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது அவனை {ராமனை} அணுகிய ஹனூமான், இந்த வாக்கியத்தைச் சொன்னான்:{124ஆ} “அமரவைரிகளுடன் போரிட கருத்மந்தனின் மேல் ஏறிச்சென்ற {தேவர்களின் பகைவருடன் போரிட கருடனின் மீது ஏறிச் சென்ற} விஷ்ணுவைப் போல, நீர் என் பிருஷ்டத்தில் {பின்பகுதியில் / முதுகில்} ஏறிக் கொண்டு, ராக்ஷசனைத் தண்டிப்பதே தகும்” {என்றான்}.(124ஆ,125)

Rama in the shoulder of Hanuman in the war against Ravana

அப்போது ராகவன் {ராமன்}, வாயுபுத்திரனால் {ஹனுமானால்} மொழியப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டதும், மஹாகபியான ஹனூமந்தன் மேல் ஏறிக் கொண்டான்.{126} அந்த மனுஜாதிபன் {ராமன்}, ரதத்தில் இருக்கும் ராவணனைப் போர்க்களத்தில் கண்டான்.(126,127அ) அவனைக் கண்டதும் குரோதமடைந்த அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, வைரோசனனிடம் {பலியிடம் விரைந்து சென்ற} விஷ்ணுவைப் போல, உயர்த்தப்பட்ட ஆயுதத்துடன் {வில்லுடன்} ராவணனிடம் விரைந்து சென்றான்.(127ஆ,128அ) இடி இடிப்பது போன்ற ஜியாசப்தம் {நாணொலி} எழுப்பிய ராமன், கம்பீரமான குரலில் ராக்ஷசேந்திரனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(128ஆ,129அ) “நில். நிற்பாயாக. இராக்ஷச சார்தூலா {ராக்ஷசர்களில் புலியே}, எனக்குப் பிரியமற்ற இத்தகையவற்றைச் செய்தவிட்டு, நீ எங்கே சென்று மோக்ஷத்தை {விடுதலையை} அடையப்போகிறாய்?(129ஆ,130அ) இந்திரன், வைவஸ்வதன், பாஸ்கரன், ஸ்வயம்பு, வைஷ்வாநரன், சங்கரன் {இந்திரன், யமன், சூரியன், பிரம்மன், அக்னி, சிவன்} ஆகியோரிடமோ, பத்துத் திசைகளிலோ ஓடினாலும், என் முன் செல்லும் உனக்கு மோக்ஷமில்லை {விடுதலையில்லை. என்னிடம் இருந்து நீ தப்பிக்க மாட்டாய்}.(130ஆ,இ) இரக்ஷோகணராஜாவே {ராக்ஷசக் கூட்டத்தின் மன்னா}, சக்தியால் {வேலாயுதத்தால்} தாக்கப்பட்டு துக்கத்தை அடைந்தவன் எவனோ, அதே லக்ஷ்மணன் நனவு மீண்டதும், இதோ புத்திரர்கள், பௌத்திரர்களுடன் {மகன், பேரர்களுடன்} கூடிய உனக்கு மிருத்யுவாக {யமனாகப்} போகிறான்.(131) அற்புத தரிசனந்தந்தவர்களும், ஜனஸ்தானத்தைத் தாங்கள் செயல்படும் ஆலயமாகக் கொண்டவர்களும், சிறந்த ஆயுதங்களுடன் கூடியவர்களுமான பதினான்காயிரம் ராக்ஷசர்களை எவனுடைய சரங்கள் இல்லாமல் செய்தனவோ {கொன்றனவோ}, அவனும் இதோ இருக்கிறான் {அத்தகைய நானும் இதோ இருக்கிறேன்”, என்றான் ராமன்}.(132)

இராகவனின் சொற்களைக் கேட்டவனும், மஹாபலவானுமான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, ரணத்தில் ராகவனை {போர்க்களத்தில் ராமனைச்} சுமப்பவனும், மஹாவேகமுடையவனுமான வாயுபுத்திரனிடம் {ஹனுமானிடம்} கொண்ட,{133} பூர்வ வைரத்தை {பழைய பகையை} நினைத்து, கோபத்தால் நிறைந்து, கால, அனலனின் சிகைக்கு {பிரளய கால அக்னி ஜுவாலைக்கு} ஒப்பாக எரியும் சரங்களால் அவனைத் தாக்கினான்.(133,134) போரில் அந்த ராக்ஷசனின் சாயகங்களால் {கணைகளால்} தாக்கப்பட்ட போதும், அவனது ஸ்வபாவ தேஜஸ் {ஹனுமானின் இயல்பான ஒளி} எதுவோ, அந்த தேஜஸ் இன்னும் அபிவிருத்தி அடைந்தது.(135) பிறகு, மஹாதேஜஸ்வியான ராமன், ராவணனால் காயமடைந்த பிலவக சார்தூலனை {தாவிச் செல்பவர்களில் புலியான ஹனுமானைக்} கண்டு, குரோதவசமைடைந்தான்.(136)

{இராவணனின்} அருகில் சென்ற ராமன், சக்கரங்களுடனும், அஷ்வங்கள் {குதிரைகள்}, துவஜம் {கொடிமரம்}, குடை, மஹாபதாகை ஆகியவற்றுடனும், சாரதியுடனும், அசனிகள், சூலங்கள், கட்கங்கள் {வாள்கள்} ஆகியவற்றுடனும் கூடிய அவனது ரதத்தைக் கூரிய சரங்களால் சிதறடித்தான்.(137) அகன்ற அழகிய மேருவை {தாக்கும்} இந்திர பகவானைப் போல, வஜ்ர, அசனிக்கு ஒப்பான ஒரு பாணத்தால் அந்த இந்திரசத்ருவின் {இந்திரனின் பகைவனான ராவணனின்} மார்பை வலிமையுடன் தாக்கினான்.(138) எந்த ராஜா வஜ்ரம், அல்லது அசனியின் {இடியின்} தாக்குதலிலும் கலங்காமலும், அசையாமலும் இருப்பானோ, அந்த வீரன் {ராவணன்}, ஆழமான காயத்தை உண்டாக்கிய ராமபாணத்தால் நடுங்கி, தன் சாபத்தை {வில்லை} நழுவவிட்டான்.(139) மஹாத்மாவான ராமன், அவன் கலங்கி நிற்பதைக் கண்டபோது, ஒளிரும் அர்த்தசந்திரம் ஒன்றை எடுத்து, உடனேயே அதைக் கொண்டு ரக்ஷோதிபதியின் அர்க்க வர்ண {ராவணனின் சூரிய நிறத்திலான} கிரீடத்தை நொறுக்கினான்.(140)

இராமன், விஷமிழந்த விஷப்பாம்புக்கோ, கதிர்களின்றி பிரகாசமற்றிருக்கும் சூரியனுக்கோ ஒப்பானவனும், யுத்தத்தில் கிரீடம் முறிந்து அவமதிக்கப்பட்டவனும், புகழை இழந்தவனுமான அந்த ராக்ஷசேந்திரனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(141) “மஹத்தான, மிகப் பயங்கர கர்மம் உன்னால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. என்னுடைய சிறந்த வீரர்கள் உன்னால் தாக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, முற்றிலும் களைத்திருக்கும் உன்னை மிருத்யு வசமடையச்செய்வதில்லை {கொன்று யமனிடம் அனுப்புவதில்லை} என்ற முடிவை எடுத்திருக்கிறேன்.(142) செல்வாயாக. நீ ரணத்தில் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை அறிவேன். இராத்ரிஞ்சரராஜா {இரவுலாவிகளின் மன்னா, ராவணா, வேறொரு} ரதத்தில் லங்கைக்குள் பிரவேசித்து, ஆசுவாசமடைந்த பிறகு, தன்வியாகவும், ரதஸ்தனாகவும் {வில்லுடன் தேரில் ஏறி வருபவனாக} வெளிப்படும்போது, உள்ளபடியே என் பலத்தை நீ காண்பாய்[12]” {என்றான் ராமன்}.(143)

[12] அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்ற ஆற்ற
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு
நில் ஐயா என தேர் நின்று பொன்றுதி எனினும்
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் (7270)
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் (7271)

- கம்பராமாயணம்  7270, 7271ம் பாடல்கள், யுத்த காண்டம், முதற் போர் புரி படலம்

பொருள்: “{நான் முன்பு சொன்னது போல் செய்ய} விரும்பவில்லையெனில் அரிய போரை மேற்கொண்டு போர்புரிய வல்லமையிருந்தால், உனக்குள்ள வலிமை அனைத்தையும் கொண்டு, “{எதிர்த்து} நில் ஐயா” எனக் கூறி, என் எதிரே நின்று போரிட்டு ஒழிவாயெனினும் நல்லவன் ஆவாய். இனி பிழைத்துக் கொள்ளலாம் என்று விரும்பி நிற்காதே.(7270) {இராக்ஷசர்களை} ஆள்கின்ற ஐயா, உனக்குத் துணையாக அமைந்தவை {படைகள் அனைத்தும்} பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போலானதைக் கண்டாய். இன்று போய் நாளை போருக்கு வருவாயாக” என்று, மிக இளைய கமுகு மரத்தின் மீது, வாளை மீன்கள் தாவிப் பாய்ந்து செல்லும் கோசல நாட்டுக்குரிய வள்ளல் {ராமன்} சொன்னான்.(7271)

இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த ராஜாவின் {ராவணனின்} செருக்கும், மகிழ்ச்சியும் அழிந்தன. வில் முறிபட்டு, அஷ்வங்களும், சூதனும் கொல்லப்பட்டு, சரங்களால் துளைக்கப்பட்டவனாகவும், மஹாகிரீடம் பங்கமடைந்தவனாகவும் அவன் விரைவாக லங்கைக்குள் நுழைந்தான்.(144) மஹாபலவானும், தானவ, தேவ சத்ருவுமான அந்த ரஜனிசரேந்திரன் {ராவணன்} திரும்பிச் சென்றதும், பெரும் போர்க்களத்தின் முன்னணியில் ஹரீக்களிடமிருந்தும் {குரங்குகளிடமிருந்தும்}, லக்ஷ்மணனிடமிருந்தும் சல்லியங்களை {கணைகளைப்} பிடுங்க ஏற்பாடு செய்தான்.(145) அந்தத் திரிதசேந்திர சத்ருக்கள் பங்கமடைந்ததும் {தேவலோக இந்திரனின் பகைவர்கள் வீழ்ந்ததும்}, ஸுராஸுரர்களும், திசைகள் அனைத்திலும் உள்ள பூத கணங்களும், சாகரத்தில் உள்ள சர்வ மஹா உரகங்களும் {பெரும்பாம்புகளும்}, அதே போல பூமியிலும் நீரிலும் வாழும் உயிரினிங்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தன.(146) 

யுத்த காண்டம் சர்க்கம் – 059ல் உள்ள சுலோகங்கள்: 146

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை