Sunday, 12 October 2025

இராமனின் இங்கிதங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 114 (36)

The gestures of Rama | Yuddha-Kanda-Sarga-114 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் பணிக்கப்பட்ட விபீஷணன் சீதையை ராமன் முன்பு அழைத்து வந்தது; லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் ஆகியோர் ராமனின் இங்கிதங்களைக் கண்டு வருந்துவது...

Sita Rama Vibheeshana and Lakshmana

மஹாபிராஜ்ஞனான பிலவங்கம் {பெரும் புத்திசாலியும், தாவிச் செல்பவனுமான ஹனுமான்}, சர்வதனுஷ்மதர்களில் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனும், வசனமர்த்தஜ்ஞனுமான {வசனங்களின் பொருளை அறிந்தவனுமான} அந்த ராமனை அணுகி {பின்வருமாறு} சொன்னான்:(1) "எவளின் நிமித்தம் இந்தக் கர்மங்களை ஆரம்பித்தீரோ, எவளுக்கான பலன் கிடைத்திருக்கிறதோ, அந்த மைதிலி தேவியின் சோகசந்தாபத்தை நீர் காண்பதே தகும்.(2) கண்ணீர் நிறைந்த கண்களுடன் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த மைதிலி, உமது விஜயத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.(3) பூர்வத்தில் என் மீது கொண்ட பற்றுறுதியில் விளைந்த விசுவாசத்தால் அவள் என்னிடம், "கிருதார்த்தரும் {காரியம் நிறைவேறியவரும்}, லக்ஷ்மணருடன் கூடியவருமான என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்று கூறினாள்" {என்றான் ஹனுமான்}.(4)

ஹனுமதன் இவ்வாறு கூறியதும், தர்மத்தை நிலைநாட்டுபவர்களில் முதன்மையான ராமன், சற்று கண்ணீர் ததும்பிய உடனேயே தியானத்தில் {ஆலோசனையில்} ஆழ்ந்தான்.(5) தீர்க்கமான உஷ்ண சுவாசத்தை வெளியிட்டு, ஜகத்தில் பார்வையை நிலைக்கச் செய்து, மேகத்திற்கு ஒப்பாக அருகில் நின்று கொண்டிருந்த விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(6) "சிர ஸ்நானம் செய்த {தலைநீராடிய}[1] சீதையை இங்கே அழைத்து வருவாயாக. தாமதம் வேண்டாம். வைதேஹி, திவ்ய அங்கராகங்களாலும் {தெய்வீகமான வாசனை திரவியங்களாலும்}, திவ்ய ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாக இருக்கட்டும்" {என்றான் ராமன்}.(7)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன் சீதையுடன் மேல் பருஷம்பேச உத்தேசித்திருக்கையால், அப்பொழுது அவள் முன்போல் அலங்காரமில்லாத தீனதசையிலிருப்பின் அங்ஙனம் பருஷமாகப் பேசத் தகாதாகையால் அதற்குத் தகுந்தபடி ஸ்னானஞ் செய்வித்து அலங்காரங்களை அணியச் செய்து அழைத்துக் கொண்டு வரச்சொன்னதாகத் தெரிகிறது. அங்ஙனம் பருஷமாகப் பேசினது அவளைத் துறப்பதற்கன்று. ப்ரஹ்மாதியான தேவதைகளின் முன் அவளுடைய பாதிவ்ரத்யத்தை வெளியிடுவதற்காகவென்று தெரிகிறது. கோவிந்தராஜர்" என்றிருக்கிறது.

இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தப்புரத்திற்குள் துரிதமாகப் பிரவேசித்த விபீஷணன், தன் ஸ்திரீகள் மூலம் சீதையிடம் சொல்லியனுப்பினான்.(8) இராக்ஷசேஷ்வரனான ஸ்ரீமான் விபீஷணன், மஹாபாகையான சீதையைக் கண்டபிறகு, தன் தலைக்கு மேல் கைகளைக் குவித்துப் பணிவுடன் {பின்வருமாறு} சொன்னான்:(9) "வைதேஹி, திவ்ய அங்கராகங்களாலும், திவ்ய ஆபரணங்களாலும் அலங்கரித்துக் கொண்டு பத்ரமாக நீ யானத்தில் {பல்லக்கில்} ஏறுவாயாக. உன் பர்த்தா {கணவர்} உன்னைக் காண விரும்புகிறார்" {என்றான் விபீஷணன்}.(10)

இவ்வாறு சொல்லப்பட்டதும் வைதேகி, விபீஷணனிடம், "இராக்ஷசேஷ்வரா, ஸ்நானம் செய்யாமலேயே {நீராடாமலேயே} என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்ற மறுமொழியைச் சொன்னாள்.(11)

அவளுடைய {சீதையின்} அந்த வசனத்தைக் கேட்ட விபீஷணன், "உன் பர்த்தாவான {கணவரான} ராமர் எதைச் சொன்னாரோ அதை அப்படிச் செய்வதே உனக்குத் தகும்" என்ற மறுமொழியைச் சொன்னான்.(12)

அவனது அந்த வசனத்தைக் கேட்டவளும், சாத்வியும், பதியையே தேவனாகக் கருதுபவளும், பர்த்தாவிடம் பக்தி கொண்டவளுமான மைதிலி, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினாள்.(13) அந்த சீதை சிர ஸ்நானம் செய்து {தலைநீராடி}, யுவதிகளால் {இளம்பெண்களால்} அலங்கரிக்கப்பட்டு, ஆடம்பர ஆபரணங்களையும், விலையுயர்ந்த அம்பரங்களையும் தரித்த {ஆடைகளையும் அணிந்த} பிறகு,{14} விலையுயர்ந்த துணியால் மூடப்பட்டதும், ஏராளமான ராக்ஷசர்களால் பாதுகாக்கப்பட்டு ஒளிரும் சிவிகையில் {பல்லக்கில்} ஏறியதைத் தொடர்ந்து, {ராமனின் முன்னிலைக்கு} விபீஷணன் அவளை {சீதையை} அழைத்துச் சென்றான்.(14,15)

அவன் {விபீஷணன், சீதை வந்ததை} அறிந்தும், தியானத்தில் ஆழ்ந்திருந்த மஹாத்மாவை {ராமனை} அணுகி, வணங்கி, பெரும் மகிழ்ச்சியுடன் சீதையின் வரவை {ராமனுக்கு} அறிவித்தான்.(16) இராக்ஷச கிருஹத்தில் நெடுங்காலம் வசித்த அவளது வரவைக் கேட்ட ராகவனுக்குள், மகிழ்ச்சி, ரோஷம் {கோபம்}, தைனியம் {கீழ்மை உணர்வு} ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நுழைந்தன.(17) இராமன், {சீதை பல்லக்கில் வந்ததைக் குறித்த) ஆழ்ந்த சிந்தனையின் நினைவில் வருத்தமடைந்தபோது, தன் பக்கத்தில் இருந்த விபீஷணனைப் பார்த்து இந்தச் சொற்களைக் கூறினான்[2]:(18) "இராக்ஷசாதிபதே, சௌம்யா, என் விஜயத்தை நித்தியம் விரும்புகிறவனே, வைதேஹி, என் அருகில் சீக்கிரம் வந்து சேரட்டும்" {என்றான்}.(19)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்ஙனம் ராக்ஷஸ க்ருஹத்தில் வெகுகாலம் இருந்த ஸீதை வந்தாளென்று கேட்டவுடனேயே ராமனுக்கு, ராவணனைக் கொன்று ஸீதையை வரவழைத்தமையால் ஸந்தோஷமும், நெடுநாள் ராவணன் வீட்டில் இருந்தனளேயென்று தைன்யமும், அதைப்பற்றிய ரோஷமும் ஆகிய இம்மூன்றும் உண்டாயின. அப்பால் ராமன் சிறிது நேரம் ஸாதக பாதகங்களை ஆலோசித்து மனக்களிப்பற்றுத் தன் பார்ஷ்வத்திலிருக்கும் விபீஷணனைப் பார்த்து" என்றிருக்கிறது.

தர்மவித்தான விபீஷணன், அந்த ராகவனின் அந்த வசனத்தைக் கேட்டு, அங்கே இருந்த அனைவரையும் விரைவாக வெளியேற்ற ஏற்பாடு செய்தான்.(20) கஞ்சுகங்களையும் {மேலாடைகளையும்}, தலைப்பாகைகளையும் தரித்து, பிரம்பைப் பிடித்துத் தழும்பேறிய கைகளைக் கொண்ட போர்வீரர்கள், எங்கும் இருப்பவர்களை விலக்கியபடியே திரிந்தனர்.(21) அப்போது எங்கும் விலக்கப்படும் ரிக்ஷர்களும், வானரர்களும், ராக்ஷசர்களும் அடங்கிய கூட்டங்கள் தூரத்தில் விலகிச் சென்றன.(22) வாயுவால் அலைக்கழிக்கப்படும் சாகரத்தின் ஸ்வனத்தைப் போல, அப்புறப்படுத்தப்பட்ட அவர்களால் அங்கே மஹாஸ்வனம் எழுந்தது.(23) அனைத்துப் பக்கங்களிலும் விலக்கப்படும் அவர்கள் பரபரப்படைவதை ராமன் கண்டபோது, சினத்துடனும், தாக்ஷிண்யத்துடனும் அதைத் தடுத்தான்.(24) 

கோபமடைந்த ராமன், தன் பார்வையால் எரித்துவிடுபவனைப் போல மஹாபிராஜ்ஞனான விபீஷணனிடம் சினம் கொண்டவனாக இந்தச் சொற்களைக் கூறினான்:(25) "என்னைப் புறக்கணித்து, இந்த ஜனங்களை அலைக்கழிப்பதன் அர்த்தமென்ன? இந்த உத்யோகத்தை {தொழிலை} நிறுத்துவாயாக. இந்த ஜனங்கள் என் சொந்த ஜனங்களாவர்[3].(26) கிருஹங்களல்ல, வஸ்திரங்களல்ல, பிராகாரங்களல்ல {மதில்களல்ல}, திரையல்ல, இத்தகைய ராஜ சத்காரங்களுமல்ல {ராஜமரியாதைகளுமல்ல}, ஸ்திரீகளின் ஆவரணம் விருத்தமே ஆகும் {பெண்களின் மறைப்பாக / காவலாக இருப்பது அவர்களின் நடத்தையே ஆகும்}.(27) விசனங்களில் அல்ல, சிரமங்களில் அல்ல, போர்களில் அல்ல, ஸ்வயம்வரங்களில் அல்ல, வேள்விகளில் அல்ல, விவாஹங்களிலும் ஸ்திரீகளின் தரிசனம் தூஷிக்கப்படுவதில்லை {கண்டிக்கப்படுவதில்லை}.(28) அத்தகைய இவள் துயரத்திலும், மிகுந்த சிரமத்திலும் இருக்கிறாள். விசேஷமாக என் சமீபத்தில் அவளது தரிசனம் தோஷமல்ல.(29) எனவே, அவள் சிவிகையை விட்டிறங்கி பாதநடையாக வரட்டும். வனௌகசர்கள் என் சமீபத்தில் வைதேஹியைப் பார்க்கட்டும்" {என்றான் ராமன்}.(30)

[3] ஆதலான் அரக்கர் கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே
சாதுகை மாந்தர்தம்மைத் தடுப்பது என்று அருளி செங்கண்
வேதநாயகன்தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி
கோது இலா மனனும் மெய்யும் குலந்தனன் குணங்கள் தூயோன்

கம்பராமாயணம் 10005ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்

பொருள்: "எனவே, அரக்கர்களின் அரசனே, இவ்வாறு ஒரு தவறும் செய்யாத சாமானிய மாந்தரைத் தடுப்பது உனக்குப் பொருந்துவது அல்ல" என்று சொல்லியருளி, சிவந்த கண்களைக் கொண்ட வேதத்தலைவன் {ராமன்} நிற்க, குணங்களால் தூயோன் {விபீஷணன், அது கேட்டு} துன்பம் அடைந்து, பெருமூச்சு விட்டு, குற்றமற்ற மனமும், உடம்பும் நிலைதடுமாறினான்.

இராமனால் இவ்வாறு கூறப்பட்டதும், விபீஷ்ணன் யோசித்தான். பிறகு பணிவுடன் ராமனிடம் சீதையை அழைத்து வந்தான்.(31) இராமனின் வாக்கியத்தைக் கேட்டபோது, லக்ஷ்மணசுக்ரீவர் இருவரும், பிலவங்கமனான ஹனூமானும் பெரிதும் துன்புற்றனர்.(32) இராகவன் சீதையிடம் பிரீதியற்றிருப்பதைப் போல, களத்திரத்தை {மனைவியைப்} பொருட்படுத்தாத அவனது பயங்கர இங்கிதங்களால் அவர்கள் ஊகித்தனர்.(33) அந்த மைதிலி லஜ்ஜையால் {வெட்கத்தால்} தன் காத்திரங்களில் சுருங்கியவளாக {உடல் கூனிக்குறுகியவளாக} விபீஷணனைப் பின்தொடர்ந்து தன் பர்த்தாவை {கணவன் ராமனை} அணுகினாள்[4].(34) 

[4] இதற்கு அடுத்து, தர்மாலயப் பதிப்பில், "அவள் (ஸீதாதேவி) ஜனக்கூட்டத்தில் வெட்கத்தால் வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட திருமுகமுடையவளாய் கணவரிடம் அருகிற்சென்று "ஆரியபுத்ரரே" என்று மொழிபவளாய் அழுதாள்" என்றிருக்கிறது. தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும் இருக்கும் இந்த சுலோகம், நாம் ஒப்பிடும் ஆங்கிலப்பதிப்புகளில் விவேக்தேவ்ராய் பதிப்பைத் தவிர வேறு எதனிலும் இல்லை.

பதியையே தேவதையாக {கணவனையே தெய்வமாகக்} கருதியவளும், சௌம்யமான முகத்தைக் கொண்டவளுமான அவள், தன் பர்த்தாவின் சௌம்யமான முகத்தை வியப்புடனும், மகிழ்ச்சியுடனும், சினேகத்துடனும் பார்த்தாள்.(35) நெடுங்காலம் {தன்னால்} காணப்படாததும், உதிக்கும் பூர்ணச் சந்திரனின் காந்தத்தைக் கொண்டதுமான பிரியனின் வதனத்தைக் கண்டபோது {தன் பிரியத்திற்குரிய ராமனின் முகத்தைக் கண்டபோது}, விமல சசாங்கனுக்கு {களங்கமற்ற சந்திரனுக்கு} ஒப்பான முகத்துடன் கூடிய அவள் {சீதை}, தன் மனக்கவலையைத் துறந்தாள்.(36)

யுத்த காண்டம் சர்க்கம் – 114ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை