The request of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-084 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாயா சீதையைக் கொன்ற இந்திரஜித்தின் தந்திரத்தை ராமனிடம் சொன்ன விபீஷணன்; நிகும்பிலைக்குச் செல்லும்படி லக்ஷ்மணனை வற்புறுத்தியது...
பிராதாவிடம் {தன்னுடன் பிறந்த ராமனிடம்} அன்பு கொண்ட லக்ஷ்மணன் ராமனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது, விபீஷணன் குல்மங்களை {படைப்பிரிவுகளை} அவற்றுக்குரிய இடங்களில் விட்டு அங்கே வந்தான்.(1) நானாவித ஆயுதங்களைத் தரித்தவர்களும், கரிய அஞ்சன மைக் குவியல்களைப் போலத் தெரிந்தவர்களும், யூதபனுடன் கூடிய மாதங்கங்களை {தலைமை யானையைச் சூழ்ந்த யானைகளைப்} போன்றவர்களுமான நான்கு வீரர்களால் சூழப்பட்ட அவன் {விபீஷணன்},{2} சோகத்தில் மூழ்கியிருக்கும் மஹாத்மாவான ராகவனை {லக்ஷ்மணனை} அணுகி, வானரர்களும் கண்கள் நிறைந்த கண்ணீருடன் இருப்பதைக் கண்டான்.(2,3) லக்ஷ்மணனின் அங்கத்தில் சாய்ந்து, மயக்க நிலையில் கிடக்கும் இக்ஷ்வாகுகுலநந்தனனான மஹாத்மாவையும் {ராமனையும் விபீஷணன்} கண்டான்.(4) சோக சந்தாபத்தில் வெட்கமடைந்து ராமனைக் கண்ட அந்த விபீஷணன், தீனமடைந்தவனாக உள்ளார்ந்த துக்கத்துடன், "இஃது என்ன?" என்று கேட்டான்.(5)
விபீஷணனின் முகத்தையும், சுக்ரீவனையும், அந்த வானரர்களையும் கண்ட லக்ஷ்மணன், கண்ணீர் வழிய இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(6) "சௌம்யா, "இந்திரஜித்தால் சீதை கொல்லப்பட்டாள்" என்ற ஹனூமத்வசனத்தை {ஹனுமானின் சொற்களைக்} கேட்டதும் ராகவர் மோகம் அடைந்தார் {ராமர் மயக்கமடைந்தார்}" {என்றான் லக்ஷ்மணன்}.(7)
சொல்லிக் கொண்டிருந்த சௌமித்ரியை {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனை} இடைமறித்த விபீஷணன், நனவிழந்த ராமனிடம், புஷ்கலார்த்தம் {நற்பொருள்} பொருந்திய இந்த வாக்கியத்தைக் கூறினான்[1]:(8) "மனுஜேந்திரரே {மனிதர்களின் தலைவரே}, சோக வடிவத்துடன் கூடிய ஹனூமதனால் எது உம்மிடம் சொல்லப்பட்டதோ, அது சாகரத்தை வற்றச் செய்வது போல பொருத்தமற்றது என நான் நினைக்கிறேன்.(9) மஹாபாஹுவே, சீதையைக் குறித்து துராத்மாவான ராவணரின் அபிப்ராயத்தை நான் அறிவேன். அவர் {சீதையைக்} கொல்ல மாட்டார்.(10) அவருக்கு ஹிதம் செய்யும் வகையில், "வைதேஹியை விட்டுவிடுவீராக" என்று நான் பலமுறை யாசித்தும், அந்தச் சொற்களை அவர் ஏற்றாரில்லை.(11) சாமத்தாலோ, தானத்தாலோ, பேதத்தாலோ கூட {நல்வார்த்தை பேசியோ, பொருள் கொடுத்தோ, பிரித்தாளும் சூழ்ச்சி செய்தோ கூட} அவளைக் காண்பது சாத்தியமில்லை எனும்போது, யுத்தத்தால் எப்படி ஆகும்? வேறு எதனாலும் {எந்த உபாயத்தாலும்} முடியாது[2].(12) அந்த ராக்ஷசன் {இந்திரஜித்} வானரர்களை மோஹமடையச் செய்து, திரும்பிச் சென்றுவிட்டான். மஹாபாஹுவே, அந்த ஜனகாத்மஜை மாயாமயீ {வெட்டப்பட்டு மாண்டது மாயா சீதை} என்பதை அறிவீராக.(13)
[1] கம்பராமாயணத்தில் இந்த இடத்தில் {யுத்த காண்டம், மாயாசீதைப் படலம் 8912 முதல் 8930ம் பாடல் வரை}, சீதையைக் கொன்றுவிட்டு, இந்திரஜித் அயோத்திக்குச் சென்றிருப்பான். அவனைத் தடுக்கவும், பரதசத்ருக்னர்களைக் காக்கவும் உடனே அயோத்திக்குச் செல்ல வேண்டுமென ராமன் தீர்மானிக்க, ஹனுமான் ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் தன் தோள்களில் ஏற்றுகிறான். அப்போது, விபீஷணன், "இப்போது நான் சொல்ல வேண்டிய செய்தி உள்ளது. துன்பம் என்னை முழுமையாக ஆட்கொண்டதால் உள்ளம் நடுங்கி, தேறுவது அரிதாகி மயங்கினேன், திகைத்தும் நின்றேன். இப்போது அத்துன்பம் ஆறியது. ஐயா, இது மாயம் என்று ஐயுறுகிறேன். பத்தினியான சீதையைப் பாதகனாகிய இந்திரஜித் தீண்டிக் கொன்றிருந்தால், அச்செயல் நடந்தபோதே, மூன்று உலகங்களும் வெந்து சாம்பலாகியிருக்காதா? இமைப்பொழுதுக்குள் நான் சென்று சீதையின் இருப்பிடத்தை அடைந்து பொருத்தமுறப் பார்த்து, நிகழ்ந்ததை அறிந்து வந்து சொல்கிறேன். அதன் பின்பு பொருத்தமானது செய்யத்தக்கது" என்கிறான். இராமன், "இது செய்யத்தக்கது" என்கிறான். விபீஷணனும் வண்டின் உருவத்தை ஏற்று, ராமனின் மனத்தைப் போல வான்வழியே விரைந்து சென்று, சீதையின் இருப்பிடத்தை அடைந்து, "உயிர் உண்டு, இல்லை" என சந்தேகங்கொள்ளும் வகையில், ஓவியம் போல் இருந்த சீதையைத் தன் கண்களாலேயே கருத்தாகக் காண்கிறான். இந்திரஜித்தின் சூழ்ச்சியை அறிந்து கொண்டு, திரும்பிவந்து ராமனிடமும் இச்செய்தியைத் தெரிவிக்கிறான்.
[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "பொதுவெளியில் சீதையைக் கொண்டுவர இந்திரஜித்துக்கு சாத்தியமில்லை என்பது பொருளாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.
நிகும்பிலை என்ற நாமத்திலான சைத்தியத்தை {நிகும்பிலை என்ற பெயரைக் கொண்ட கோவிலை} அடைந்து, வேள்வி நெருப்பில் ஹோமம் செய்து, வாசவன் {இந்திரன்} உள்ளிட்ட தேவர்களாலுங்கூட,{14} போரில் வெல்வதற்கரிய நிலையை அந்த ராவணாத்மஜன் {ராவணனின் மகனான இந்திரஜித்} அடைவான்.(14,15அ) அங்கே {நிகும்பிலையில்} வானரர்களின் பராக்கிரமத்தால் விக்னத்தை {தான் செய்யும் ஹோமத்தின் தடையை} எதிர்பார்த்து, அவர்களை மோஹமடையச் செய்வதற்காகவே[3] இந்த மாயை அவனால் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பது திண்ணம்.(15ஆ,16அ) அது நிறைவேறாமல் இருப்பதற்குள் {அந்த ஹோமம் முடியும் முன்பே} சைனியத்துடன் அங்கே செல்ல வேண்டும்.{16ஆ} நரசார்தூலரே, உம்மை அடைந்த இந்த மித்யா சந்தாபத்தை {மாயையால் ஏற்பட்ட இந்த வீண் வருத்தத்தைக்} கைவிடுவீராக. சோகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் உம்மைக் கண்டு சர்வ பலமும் {படை முழுவதும்} வருத்தத்தில் இருக்கிறது.(16ஆ,17)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த்ரஜித்து வானரர்களை ஏன் மோசஞ் செய்ய விரும்பினானென்னில் - அப்பொழுது ராவணனுக்காக யுத்தஞ் செய்யத் தகுந்த வீரன் எவனும் லங்கையில் இல்லை. ஆகையால் தான் ஹோமகார்யத்தில் கால் தாழ்ந்திருக்கும் பொழுது வானரர்களை அடக்கும்படியான வீரர்களில்லாமையால் வானரர்கள் மேல்விழுகையில் ஹோமம் தடைபட்டு இடையில் விச்சின்னமாய்விடும். அது விச்சின்னமாயின் ப்ரஹ்மவரத்தின்படி தனக்கு நாசம் உண்டாகும். ஆகையால் தன் ஹோமகார்யம் நிறைவேறும் வரையில் ராமாதிகளனைவரும் துக்கத்தினால் ஸ்வாதீனமற்று யுத்தத்தில் உத்ஸாஹமில்லாதிருக்கும் பொருட்டு மாயாசீதையை வதித்து அவர்களை மோசஞ் செய்தாக விபீஷணன் சொல்லுகிறானென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.
ஸ்வஸ்தமான ஹிருதயத்துடனும் {ஆரோக்கியமான இதயத்துடனும்}, உச்சமான சத்துவத்துடனும் {வலிமையுடனும்} இங்கேயே இருப்பீராக. சைனியத்தை நடத்திச் செல்லும் எங்களுடன் லக்ஷ்மணரை அனுப்புவீராக.(18) இந்த நரசார்தூலர் {மனிதர்களில் புலியான இந்த லக்ஷ்மணர்}, தம் கூரிய சரங்களால் அந்தக் கர்மத்தை ராவணி துறக்கும்படி செய்வார் {ராவணனின் மகனான இந்திரஜித் அந்த ஹோம் செய்வதைக் கைவிடச் செய்வார்}. பிறகு அவன் வதைக்குத் தகுந்தவனாவான்.(19) கூர்மையும், கடுமையும், பறவைகளின் இறகுகளுக்கு இணையான வேகமும் கொண்ட இவரது சரங்கள், சௌமியமற்ற பறவைகளைப் போல அவனது சோணிதத்தை {கொடிய பறவைகளைப் போல இந்திரஜித்தின் ரத்தத்தைப்} பருகப் போகின்றன.(20) எனவே, மஹாபாஹுவே, வஜ்ரத்தை வஜ்ரதரன் {இந்திரன் அனுப்புவது} எப்படியோ, அப்படியே ராக்ஷசனின் விநாசத்திற்காக சுபலக்ஷணங்களைக் கொண்ட லக்ஷ்மணரை அனுப்புவீராக.(21) மனுஜவரரே {மனிதர்களில் சிறந்தவரே}, பகைவனைக் கொல்வதில் காலதாமதம் செய்வது இப்போது தகாது. தேவர்களின் பகைவரை அழிப்பதற்கு மஹேந்திரன் எப்படியோ, அப்படியே பகைவனை வதைப்பதற்கு நீர் ஆணையிடுவீராக.(22) அந்த ராக்ஷசரிஷபன் கர்மத்தை நிறைவேற்றிவிட்டால் {ராக்ஷசர்களில் காளையான இந்திரஜித் ஹோமம் செய்து முடித்துவிட்டால்} போரில் ஸுராஸுரர்களுக்கும் {தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கூடப்} புலப்படாதவன் ஆகிவிடுவான். கர்மத்தை நிறைவேற்றிவிட்டு, யுத்தத்தில் விருப்பத்துடன் அவன் வந்தால் ஸுரர்களிடையே கூட பெருஞ்சந்தேகம் உண்டாகும் {தேவர்களிடையே கூட தங்களுக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற பெரும் சந்தேகம் உண்டாகும்}" {என்றான் விபீஷணன்}.(23)
யுத்த காண்டம் சர்க்கம் – 084ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |