Thursday, 31 July 2025

ஹனுமானின் அறைகூவல் | யுத்த காண்டம் சர்க்கம் - 086 (35)

Hanuman's Challenge | Yuddha-Kanda-Sarga-086 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேள்வியைத் தொடராமல் கைவிட்ட இந்திரஜித்; இந்திரஜித்தைப் போருக்கு அழைத்த ஹனுமான்; இந்திரஜித் தேரில் வருவதைக் கண்ட லக்ஷ்மணன்...

Hanuman and Indrajith

அந்த அவஸ்தையில் {அந்நிலையில்} அப்போது ராவணானுஜன் {ராவணனின் தம்பியான விபீஷணன்}, அர்த்த சாதகத்திற்கானதும், பிறருக்கு ஹிதமற்றதுமான {காரிய நிறைவேற்றத்திற்கானதும், பகைவருக்குக் கெடுதியை விளைவிப்பதுமான பின்வரும்} வாக்கியத்தை லக்ஷ்மணனிடம் கூறினான்:(1)"எந்த ராக்ஷச அனீகம் {படை}, இங்கே கரிய மேகத்தைப் போலக் காணப்படுகிறதோ, அது பாறைகளை ஆயுதமாகக் கொண்ட கபிக்களால் {குரங்குகளால்} சீக்கிரமே தாக்கப்படட்டும்.(2) இலக்ஷ்மணரே, இந்த மஹத்தான அனீகத்தை {படையைப்} பிளக்க யத்னம் செய்வீராக {முயற்சிப்பீராக}. இஃது உடைந்தால் ராக்ஷச சுதனும் {ராக்ஷசர் ராவணரின் மகனான இந்திரஜித்தும்} புலப்படுவான்.(3) அத்தகைய வகையில், எதுவரை கர்மம் {இந்திரஜித்தின் ஹோமம்} நிறைவேறாமல் இருக்குமோ, அதற்குள் பிறர் {பகைவர்} மீது இந்திர அசனிக்கு {இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு} நிகரான சரங்களை ஏவியபடியே நீர் உடனே விரைந்து செல்வீராக.(4) வீரரே, மாயையில் விருப்பமுள்ளவனும், அதர்மிகனும், குரூர கர்மங்களைச் செய்பவனும், சர்வலோகத்திற்கும் பயத்தை விளைவிக்கும் துராத்மாவுமான ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்வீராக" {என்றான் விபீஷணன்}.(5)

சுபலக்ஷணங்களைக் கொண்ட லக்ஷ்மணன், விபீஷணனின் சொற்களைக் கேட்டு, ராக்ஷசேந்திர சுதன் மீது சர வர்ஷங்களை வர்ஷித்தான் {கணை மழைகளைப் பொழிந்தான்}.(6) பெரும் மரங்களைக் கொண்டு போரிடும் ரிக்ஷர்களும் {கரடிகளும்}, சாகை மிருகங்களும் {மரக்கிளைகளில் வாழும் குரங்குகளும்} அணிதிரண்டு அந்த அனீகத்தை {படையை} நோக்கி விரைந்து சென்றனர்.(7) போரில் கபி சைனியத்தைக் கொல்லும் நோக்குடைய ராக்ஷசர்களும், கூரிய பாணங்கள், கத்திகள், சக்திகள், தோமரங்கள் ஆகியவற்றால் தாக்குதல் தொடுத்தனர்.(8) கபிக்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த பயங்கரப் போரின் மஹத்தான சப்தம் லங்கை முழுவதும் எதிரொலித்தது.(9) விதவிதமான வடிவங்களிலான சஸ்திரங்களாலும், கூரிய பாணங்களாலும், மரங்களாலும், கோரமாக வீசப்பட்ட கிரி சிருங்கங்களாலும் {மலைச் சிகரங்களாலும்} ஆகாசம் மறைக்கப்பட்டது.(10) விகார முகங்களையும், கைகளையும் கொண்ட அந்த ராக்ஷசர்கள், மஹத்தான பயத்தை விளைவிக்கும் வகையில் வானரர்களின் மீது சஸ்திரங்களை ஏவினர்.(11) வானரர்களும், சகல வித விருக்ஷங்கள், கிரிசிருங்கங்களைக்கொண்டு போரில் சர்வ ராக்ஷசர்களையும் தாக்கிக் கொன்றனர்.(12) மஹாபலவான்களும், மஹாகாயர்களுமான {பேருடல் கொண்டவர்களுமான} ரிக்ஷ, வானர முக்கியர்களுடன் போரிட்ட ராக்ஷசர்கள் மத்தியில் மஹத்தான பயம் உண்டானது.(13) 

அந்த வெல்வதற்கரியவன் {இந்திரஜித்}, தன்னுடைய அனீகம் சத்ருக்களால் பீடிக்கப்படுவதைக் கேட்டு, விசனம் அடைந்து, கர்மங்களை {ஹோமத்திற்குரிய செயல்களை} அனுஷ்டிக்காமல் எழுந்தான்.(14) குரோதமிக்கவனான அந்த ராவணி, விருக்ஷங்களின் அந்தகாரத்தில் {மரங்களின் இருளடர்ந்த நிழலில்} இருந்து வெளிப்பட்டு, முன்பே குதிரைகள் பூட்டப்பட்டு ஆயத்தமாக இருந்த ரதத்தில் ஏறினான்.(15) பயங்கரக் கார்முகத்துடனும், சரங்களுடனும் கூடியவனும், கரிய அஞ்சன மைக்குவியலுக்கு ஒப்பானவனுமான அந்தப் பயங்கரன், நயனங்கள் {கண்கள்} சிவந்து, அழிவைத் தரும் அந்தகனைப் போலிருந்தான்.(16) இராக்ஷசர்களின் அந்த பலம் {படை}, ரதத்தில் இருக்கும் அவனைக் கண்டதும், லக்ஷ்மணனைக் கொல்லும் விருப்பத்துடன் பயங்கர வேகத்துடன் திரும்பி வந்தது.(17)

தரணீதரத்தை {மலையைப்} போல் தெரிந்தவனும், அரிந்தமனுமான {பகைவரைக் கொல்பவனுமான} ஹனுமான், அந்தக் காலத்தில் அடைதற்கரிய மஹாவிருக்ஷத்தை உயர்த்தினான்.{18} இராக்ஷசர்களின் அந்த சைனியத்தை எரிக்கும் காலாக்னியைப் போலிருந்த அந்த வானரன், விருக்ஷங்களைக் கொண்டு யுத்தத்தில் ஏராளமானோரை நனவிழக்கச் செய்தான்.(18,19) தங்கள் படையை பவனாத்மஜன் {வாயு மைந்தனான ஹனுமான்} அழிப்பதைக் கண்டு ஆயிரக்கணக்கான ராக்ஷசர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(20) கூரிய சூலாயுதம் தரித்தவர்கள் சூலங்களாலும், கத்தியைக் கையில் கொண்டவர்கள் கத்திகளாலும், சக்தியை {வேலைக்} கையில் கொண்டவர்கள் சக்திகளாலும், பட்டிசங்களைக் கொண்டவர்கள் பட்டிசங்களாலும் தாக்கினர்.{21} பரிகங்கள் {உழற்தடிகள்}, கதைகள், சுப தரிசனந்தரும் குந்தங்கள் {அழகிய சக்கராயுதங்கள்}, நூற்றுக்கணக்கான சதக்னிகள், இரும்பாலான முத்கரங்கள் ஆகியவற்றுடனும்,{22} கோரமான பரசுகள் {கோடரிகள்}, பிண்டிபாலங்கள் ஆகியவற்றுடனும் கூடிய ராக்ஷசர்கள், வஜ்ரத்திற்கு ஒப்பான முட்டிகளாலும், அசனிக்கு {இடிக்கு} ஒப்பான உள்ளங்கைகளாலும்,{23} பர்வதத்திற்கு ஒப்பானவனை {மலைக்கு ஒப்பான ஹனுமானை}அணுகி சுற்றிலும் இருந்து தாக்கினர். பெருங்குரோதத்துடன் கூடிய அவர்கள் மஹத்தான பேரழிவை உண்டாக்கினர்.(21-24)

அந்த இந்திரஜித், அசலத்திற்கு ஒப்பான கபிசிரேஷ்டன் பவனாத்மஜன் {மலைக்கு ஒப்பானவனும், குரங்குகளில் சிறந்தவனும், வாயுவின் மைந்தனுமான ஹனுமான்}, அச்சமன்றி அமித்ரர்களைக் கொன்று வருவதைக் கண்டான்.(25) அவன், தன் சாரதியிடம் இதைச் சொன்னான், "இந்த வானரன் எங்கிருக்கிறானோ, அங்கே செல்வாயாக. இவனைப் புறக்கணித்தால் நம் ராக்ஷசர்களை அழித்துவிடுவான்" {என்றான் இந்திரஜித்}.(26)

அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சாரதி, பெரிதும் வெல்வதற்கரியதும், இந்திரஜித்துடன் கூடியதுமான அந்த ரதத்தை மாருதியிடம் {வாயு மைந்தன் ஹனுமானிடம்} கொண்டு சென்றான்.(27) வெல்வதற்கரியவனான அந்த ராக்ஷசன், அருகில் சென்று, கபியின் {குரங்கான ஹனுமானின்} தலையில் சரங்களையும், கட்கங்களையும் {வாள்களையும்}, பட்டிசங்களையும், கத்திகளையும், பரசுகளையும் பொழிந்தான்.(28)

அந்த மாருதி, அந்த கோரமான சஸ்திரங்களைத் தாங்கிக் கொண்டு, மஹத்தான ரோஷத்தால் நிறைந்தவனாக {பின்வரும்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(29) "துர்மதியைக் கொண்ட ராவணாத்மஜா {ராவணனின் மகனான இந்திரஜித்தே}, நீ சூரனாக இருந்தால் போரிடுவாயாக. வாயுபுத்திரனை நெருங்கினால் ஜீவனுடன் திரும்பமாட்டாய்.(30) என்னுடன் துவந்தம் செய்தால், கைகளைக் கொண்டு யுத்தம் செய்வாயாக. துர்ப்புத்தியைக் கொண்டவனே, போர்க்களத்தில் என் வேகத்தை சகிப்பாயாக. அப்போது நீ ராக்ஷசர்களின் சிறந்தவனாவாய்" {என்றான் ஹனுமான்}[1].(31)

[1] நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசிக்
கல் எடாநின்றது என்னைப் போர்க்களத்து அமரர் காண
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான்

- கம்பராமாயணம், 9023ம் பாடல், யுத்தகாண்டம், நிகும்பலை யாகப் படலம்

பொருள்: "நில்லடா, நில்லு, நில்லு, நீ அடாத வேறு மொழிகளைப் பேசிக் கொண்டு கல்லை பெயர்த்து நிற்பது, என்னை அமரர்கள் {தேவர்கள்} காணும்படியாகப் போர்க்களத்தில் கொல்லலாம் என்ற எண்ணத்தாலா? நன்று. குரங்கு என்பதால் உனக்கு இச்செயல் பொருத்தமானதே. நல்ல ஆண்மை உடையார், என்னுடன் போரிட வா, வா" என்று சொல்லி எமனுக்கு எமனாக நின்றான் {இந்திரஜித்}.

ஹனூமந்தனைக் கொல்லத் தயாராக ராவணாத்மஜன் சராசனத்தை {ராவணனின் மகன் இந்திரஜித் வில்லை} உயர்த்தியபோது, விபீஷணன் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(32) "எவன் வாசவனை வென்றவனோ, ராவணனுக்குப் பிறந்தவனோ அவன் {அந்த இந்திரஜித்} ரதத்தில் அமர்ந்து கொண்டு ஹனூமந்தனைக் கொல்லப் போகிறான்.(33) சௌமித்ரரே, ஒப்பற்ற உறுதி கொண்டவையும், சத்ருக்களைப் பிளந்து ஜீவிதத்தை முடித்து வைக்க வல்லவையும், கோரமானவையுமான சரங்களால் அந்த ராவணியைக் கொல்வீராக" {என்றான் விபீஷணன்}.(34)

அரிவிபீஷணனான {பகைவரிடம் பயமற்றவனான} விபீஷணன், இவ்வாறு சொன்னபோது, பர்வதத்திற்கு ஒப்பானவனும், பயங்கர பலமுடையவனும், அடைதற்கரியவனுமான அவன் {இந்திரஜித்} ரதத்தில் அமர்ந்திருப்பதை மஹாத்மா {லக்ஷ்மணன்} கண்டான்.(35) 

யுத்த காண்டம் சர்க்கம் – 086ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை