The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கூரிய வேல் ஆயுதத்தால் லக்ஷ்மணனைத் தாக்கிய ராவணன்; ராமனும், ராவணனும் போரைத் தொடர்ந்தது; ராவணன் பயந்தோடியது...
இராக்ஷசாதிபனான ராவணன், அந்த அஸ்திரம் முறியடிக்கப்பட்டதால் குரோதமடைந்து, குரோதத்தை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.(1) பேரொளியுடன் கூடிய ராவணன், ரௌத்திரமானதும், பயங்கரமானதும், மயனால் வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த மற்றொரு அஸ்திரத்தை ராகவன் மீது ஏவத் தொடங்கினான்.(2) பிறகு, கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து} ஒளிமயமானவையும், வஜ்ரத்திற்கு நிகரானவையுமான சூலங்களும், கதைகளும், முசலங்களும் எங்கும் வெளிப்பட்டன.(3) விதவிதமான கூரிய முத்கரங்களும், கூடபாசங்களும், ஒளிரும் அசனிகளும் {இடிகளும்} யுகக்ஷயத்தில் வாதத்தைப் போல வெளிப்பட்டன {யுக முடிவில் தோன்றும் வாயுவைப் போல அந்த வில்லில் இருந்து வெளிப்பட்டன}.(4) பேரொளி கொண்டவனும், மிகச் சிறந்த உத்தம அஸ்திரங்களை அறிந்தவனுமான ஸ்ரீமான் ராகவன், கந்தர்வர்களின் பரமாஸ்திரத்தைக் கொண்டு அந்த அஸ்திரத்தை வீழ்த்தினான்.(5)
மஹாத்மாவான ராகவனால் அந்த அஸ்திரம் வீழ்த்தப்பட்டபோது, குரோதத்தில் கண்கள் சிவந்த ராவணன், சௌர அஸ்திரத்தை {சூரிய அஸ்திரத்தை} அழைத்தான்.(6) அப்போது, மதிமிக்கவனும், பயங்கர வேகம் கொண்டவனுமான தசக்ரீவனின் கார்முகத்திலிருந்து {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனின் வில்லிருந்து} ஒளிமிக்க மஹா சக்கரங்கள் வெளிப்பட்டன.(7) எங்கும் அவை பாய்ந்து சென்றபோது, சந்திர சூரிய கிரஹங்களைப் போல ககனத்தையும் {வானத்தையும்}, திசைகளையும் ஒளிரச் செய்தன.(8) இராவணனுடைய சம்முவின் {படையின்} முன்னிலையிலேயே அந்த ராமன், தன் பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} அந்த சக்கரங்களையும், விசித்திரமான ஆயுதங்களையும் பிளந்தான்.(9)
இராக்ஷசாதிபன் ராவணன், அந்த அஸ்திரம் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, பத்து பாணங்களால் ராமனின் சர்வ மர்மங்களையும் {முக்கிய உடலுறுப்புகள் எங்கும்} துளைத்தான்.(10) மஹாதேஜஸ்வியான அந்த ராகவன், ராவணனின் மஹாகார்முகத்திலிருந்து ஏவப்பட்ட பத்து பாணங்களால் தாக்கப்பட்டாலும் அசைந்தானில்லை.(11) பிறகு, சமிதிஞ்ஜயனான ராகவனும் {போரில் எப்போதும் வெற்றியடைபவனான ராமனும்} பெருங்குரோதமடைந்து, ஏராளமான சரங்களால் ராவணனின் சர்வ காத்திரங்களிலும் தாக்கினான்.(12)
இதற்கிடையில் குரோதமடைந்த ராகவனின் அனுஜனும் {தம்பியும்}, பலவானும், பகை வீரர்களை அழிப்பவனுமான லக்ஷ்மணன் ஏழு சாயகங்களை {கணைகளை} எடுத்தான்.(13) பேரொளிமிக்க அவன், மஹாவேகம் கொண்ட அந்த சாயகங்களைக் கொண்டு, மனுஷ்ய தலையைக் கொண்ட அந்த ராவணனின் துவஜத்தை {கொடிமரத்தைப்} பல துண்டுகளாகப் பிளந்தான்.(14) மஹாபலவானான ஸ்ரீமான் லக்ஷ்மணன், ஜுவலிக்கும் குண்டலங்களுடன் கூடிய நைர்ருத சாரதியின் சிரத்தை {ராக்ஷசத் தேரோட்டியின் தலையைக்} கொய்தான்.(15) பிறகு லக்ஷ்மணன், கஜகரத்திற்கு {யானையின் தும்பிக்கைக்கு} ஒப்பான ராக்ஷசேந்திரனின் தனுவை {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வில்லை} ஐந்து கூரிய பாணங்களால் துண்டித்தான்.(16)
பாய்ந்து வந்த விபீஷணன், பர்வதங்களுக்கு ஒப்பானவையும், நீலமேகத்தை {கரிய மேகத்தைப்} போலத் தெரிபவையுமான அந்த ராவணனின் சிறந்த அஷ்வங்களை {குதிரைகளைத்} தன் கதையால் கொன்றான்.(17) இராவணன், அஷ்வங்கள் கொல்லப்பட்ட மஹாரதத்தில் இருந்து வேகமாகக் கீழே குதித்தபோது, பிராதாவின் {தன்னுடன் பிறந்த விபீஷணன்} மீது தீவிரக் கோபத்தை வெளிப்படுத்தினான்.(18) அப்போது, மஹாசக்திவாய்ந்தவனும், பிரதாபவானுமான ராக்ஷசேந்திரன், அசனியை {இடியைப்} போல ஒளிரும் சக்தியை {வேலாயுதத்தை} விபீஷணன் மீது ஏவினான்.(19) இலக்ஷ்மணன், அஃது {இலக்கை / விபீஷணனை} அடைவதற்கு முன்பே, மூன்று பாணங்களால் துண்டித்தான். அப்போது மஹாரணத்தில் வானரர்கள் மத்தியில் பெரும் முழக்கம் எழுந்தது.(20) காஞ்சன மாலினியான சக்தி {பொன் மாலையால் அலங்கரிக்கப்பட்ட அந்த வேலாயுதம்}, மூன்று துண்டுகளாகத் துண்டிக்கப்பட்டு, நெருப்புப் பொறிகளுடன் திவத்திலிருந்து விழும் மஹா உல்கத்தைப் போல {வானத்தில் இருந்து விழும் பெரும் எரிகொள்ளியைப்} போல விழுந்தது.(21)
பிறகு, தன்னொளியுடன் கூடியதும், ஒளிமயமானதும், காலனும் வெல்வதற்கரியதும், மதிப்புமிக்கதுமான பெரும் சக்தியொன்றை எடுத்தான்.(22) பலவானும், துராத்மாவுமான ராவணன், அசனிக்கு {இடிக்கு} சமமான பிரபையுடன் ஒளிர்வதும், எரிவதும், மஹாதேஜஸ்ஸைக் கொண்டதுமான அதை வேகமாக ஏவினான்.(23) இதற்கிடையில், வீரனான லக்ஷ்மணன், பிராண சந்தேகத்தை அடைந்த அந்த விபீஷணனை நோக்கித் துரிதமாக விரைந்தான்[1].(24) வீரனான லக்ஷ்மணன் அவனை விடுவிப்பதற்காக, தன் வில்லை வளைத்து, கையில் சக்தியுடன் {வேலாயுதத்துடன்} இருந்த ராவணன் மீது சரவர்ஷத்தை {கணைமழையைப்} பொழிந்தான்.(25) மஹாத்மாவால் ஏவப்பட்ட சர ஓகத்தால் {கணைவெள்ளத்தால்} பொழியப்பட்டவன், தாக்குதல் கலங்கடிக்கப்பட்டதால் மேலும் தாக்க மனத்தை அமைத்தானில்லை.(26)
[1] மன்மதநாததத்தர் பதிப்பில், "தானே வேலுக்கு முன்பு வந்து விபீஷணனைக் காத்தான் லக்ஷ்மணன் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" என்றிருக்கிறது. இருப்பினும், இந்த சர்க்கத்தின் 28ம் சுலோகத்தில், லக்ஷ்மணன் மீது வேலெறியப்போவதாக அறிவித்துவிட்டே ராவணன் அந்த வேலை ஏவுகிறான். ஆனால் இங்கே லக்ஷ்மணன் விபீஷணனைக் காக்க முன்வரவில்லை என்றால் அவன் அழிந்திருப்பான். இதன் காரணமாகவே உரையாசிரியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். இருப்பினும், விபீஷணன் மீது ஏவப்பட்ட வேலுக்குக் குறுக்காக வந்து வேலாயுதத்தை லக்ஷ்மணன் ஏற்றுக் கொண்டான் என்ற பொருளில் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால், கம்பராமாயணத்தில் இந்தப் பொருளில் தான் இந்தக் காட்சி சொல்லப்பட்டிருக்கிறது. 3ம் அடிக்குறிப்பைக் காண்க. ஆனால், வால்மீகியில், அந்த வேலையும், அதற்கு முந்தைய வேலையும் தடுத்து, ராவணனையும் தாக்கி, அதன் பிறகு ராவணனின் மற்றொரு வேலால்தான் அவன் துளைக்கப்படுகிறான்.
அந்த ராவணன், தன் பிராதா {தன்னுடன் பிறந்த விபீஷணன்} லக்ஷ்மணனால் விடுவிக்கப்பட்டதைக் கண்டு, லக்ஷ்மணனை எதிர்த்து நின்று, இந்த வசனத்தைக் கூறினான்:(27) "பலசிலாகியே {பலத்தைப் போற்றுபவனே}, இப்படி உன்னால் விபீஷணன் விடுவிக்கப்பட்டதால், இந்த சக்தி {வேலாயுதம்} ராக்ஷசனை {விபீஷணனை} விட்டுவிட்டு உன் மீது பாயப்போகிறது.(28) இரத்தக் கறை படிந்த இந்த சக்தி {வேலாயுதம்}, பரிகத்தைப் போன்ற என் கையால் ஏவப்பட்டு, உன் ஹிருதயத்தைப் பிளந்து, உன் பிராணனை பறித்துக் கொண்டு செல்லப்போகிறது" {என்றான் ராவணன்}.(29)
இவ்வாறு சொல்லிவிட்டு, அஷ்ட கண்டங்களுடன் {எட்டு மணிகளுடன்} கூடியதும், மஹா ஸ்வனத்தை எழுப்புவதும், மயனின் மாயையால் உண்டாக்கப்பட்டதும், அமோகமானதும் {வீண்போகாததும்}, சத்ருவை அழிப்பதும்,{30} தேஜஸ்ஸுடன் ஜுவலிப்பதுமான அந்த சக்தியை லக்ஷ்மணனை நோக்கி ஏவிவிட்டுப் பரம குரோதத்துடன் நாதம் செய்தான் ராவணன்.(30,31) பயங்கர வேகத்துடன் ஏவப்பட்டதும், வஜ்ர, அசனிக்கு சமமான ஸ்வனம் கொண்டதுமான அந்த சக்தி, ரணமூர்த்தத்தில் {போரின் முன்னணியில்} இருந்த லக்ஷ்மணனை நோக்கி வேகமாகப் பாய்ந்தது.(32) அந்த ராகவன் {ராமன்}, பாய்ந்து செல்லும் சக்தியைப் பார்த்து[2], "சக்தி இழந்து, மோகமடைவாயாக {வீணாவாயாக}. இலக்ஷ்மணனுக்கு நலம் உண்டாகட்டும்" என்று வேண்டினான்.(33) இரணத்தில் ராவணனால் குரோதத்துடன் ஏவப்பட்டதும், விஷமிக்க பாம்புக்கு ஒப்பானதுமான அந்த சக்தி, பீதியற்றிருந்த லக்ஷ்மணனின் மார்பைத் துளைத்தது.(34) உரகராஜனின் {பாம்பு மன்னனான வாசுகியின்} நாவைப் போன்று பேரொளியுடன் ஒளிர்ந்த அது {அந்த வேலாயுதம்}, மஹாவேகத்துடன் லக்ஷ்மணனின் அகன்ற மார்பில் பாய்ந்தது.(35) இலக்ஷ்மணன், அப்போது ராவணனின் வேகத்தால் ஆழமாக ஊடுருவிய அந்த சக்தியால், ஹிருதயம் பிளக்கப்பட்டவனாகப் புவியில் விழுந்தான்[3].(36)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அந்த ஆயுதத்தின் தேவனிடம் ராமன் பேசுகிறான்" என்ற பொருளில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
[3] தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும்ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழியப்பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வதன் முன்னம்ஏற்பென் என் தனி மார்பின் என்று இலங்ககுவன் எதிர்ந்தான்.(9560)இலக்குவற்கு முன் வீடணன் புகும் இருவரையும்விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கிகலக்கும் வானரக் காவலன் அனுமன் முன் கடுகும்அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ?(9561)முன்நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகிநின்மின் யான் இது விலக்குவென் என்று உரை நேராமின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்கபொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடைப் போக.(9562)- கம்பராமாயணம், 9560, 9561, 9562ம் பாடல்கள், யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்பொருள்: "{விபீஷணனைக் காக்க வேலாயுதத்தை ஏற்பதால்) தோற்பேன் எனினும், {சரணடைந்தவரைக் காத்த} புகழ் நிலைத்து நிற்கும். தர்மமும் தொடரும், நல்லவர் ஆரவாரம் செய்வர். அடைக்கலம் புகுந்தவன் அழியப் பாத்துக் கொண்டிருப்பது எதற்கு? (சரணடைந்தவனைக் காக்காமல் விட்டான் என்ற} நெடும்பழி வந்து தொடர்வதற்கு முன்பே, என் ஒப்பற்ற மார்பில் {அந்த வேலை} ஏற்பேன்" என்று நினைத்து இலக்ஷ்மணன் எதிர்த்தான்.(9560) இலக்ஷ்மணனுக்கு முன் விபீஷணன் புகுந்தான். அவ்விருவரையும் விலக்கி அங்கதன் முன்னால் சென்றான். அவனை {அங்கதனை} விலக்கி வானரக் காவலன் {சுக்ரீவன்} முந்தினான். ஹனுமான் முன் சென்றான். அப்படிப்பட்ட துன்பத்தை இத்தகையது என்று கூற முடியுமோ?(9561) முன் நின்றவர்கள் அனைவரும் பின்னே நிற்க, காற்றினும் விரைந்து சென்று, "நிற்பீராக. நான் இதை விலக்குவேன்" என்று சொல்லிக் கொண்டே மின்னும் வேலினை, தேவர்கள் விழிபிதுங்கி வருந்த, பொன்னிறமுள்ள மார்பில் பட்டு, முதுகின் பின் ஊடுருவிப் போக ஏற்றான் {இலக்ஷ்மணன்}.(9562)
மஹாதேஜஸ்வியான ராகவன், சமீபத்தில் இருந்த லக்ஷ்மணனின் அந்த அவஸ்தையைக் கண்டு, பிராதாக்குரிய சினேகத்தால் ஹிருதய விசனத்தை அடைந்தான் {உடன்பிறந்தானுக்குரிய பாசத்தால் ராமனின் இதயம் துன்பத்தால் பீடிக்கப்பட்டது}.(37) கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஒரு முஹூர்த்தம் சிந்தித்தவன் யுகாந்தப் பாவகனை {யுக முடிவில் தோன்றும் நெருப்பைப்} போல பெருஞ்சீற்றமடைந்தான்.(38) இராகவன், "இது கவலையடைவதற்கான காலமல்ல" என்று சிந்தித்து, ராவணனின் வதத்தில் திடமடைந்து,{39} லக்ஷ்மணனைப் பார்த்து, மஹத்தான சர்வ யத்னத்துடன் {பெரும் முழு முயற்சியுடன்} பயங்கர யுத்தத்தைச் செய்தான்.(39,40அ)
பிறகு, அந்த ராமன், பெரும்போரில் சக்தியால் பிளக்கப்பட்டு உதிரத்தில் நனைந்த லக்ஷ்மணன், பன்னகத்துடன் கூடிய அசலத்தைப் போலிருப்பதைக் கண்டான்.(40ஆ,41அ) எவ்வளவு யத்தனித்தாலும், பலவானான ராவணனால் ஏவப்பட்ட அந்த சக்தியை அந்த ஹரிசிரேஷ்டர்களால் பிடுங்க முடியவில்லை. ராக்ஷசனின் கைகளால் ஏவப்பட்ட பாண ஓகங்கள் அவர்களைத் துன்புறுத்தின.(41ஆ,42அ,ஆ) சௌமித்ரியைத் துளைத்த அது தரணிதலத்திலும் பிரவேசித்திருந்தது. பலவானான ராமன், பயங்கரமான அந்த சக்தியை {வேலாயுதத்தைத்} தன் கைகளால் பற்றிப் பிடுங்கி எடுத்து, குரோதமடைந்து சமர் செய்தபடியே அதை {அந்த வேலாயுதத்தை} முறித்தான்.(43,44அ) பலவானான ராவணன், சக்தியைப் பிடுங்கிக் கொண்டிருந்த அவனது சர்வ காத்திரங்களையும் சரங்களால் துளைத்து, மர்மங்களைப் பிளந்தான்.(44ஆ,45அ)
அந்த பாணங்களைக் குறித்துச் சிந்திக்காமல், லக்ஷ்மணனைத் தழுவிக் கொண்டு, ஹனூமந்தனிடமும், மஹாகபியான சுக்ரீவனிடமும் {பின்வருமாறு} கூறினான் {ராமன்}:(45ஆ,46அ) "வானரோத்தமர்களே {உத்தம வானரர்களே}, லக்ஷ்மணனைச் சூழந்து இங்கே நிற்பீராக.{46ஆ} பாபநிச்சயம் கொண்ட பாபாத்மாவான இந்த தசக்ரீவன் வதம் செய்யப்பட வேண்டியவன். இது பராக்கிரமத்திற்கான காலமாகும். நான் எதிர்பார்த்திருந்தது {எதிர்பார்த்த காலம்} இதோ வாய்த்திருக்கிறது.{47} கோடை கால முடிவை விரும்பி, மேகத்தைக் காணும் சாதகத்தை {சாதகப் பறவையைப் போல} உணர்கிறேன்.(46ஆ-48அ) இந்த முஹூர்த்தத்தில் சத்தியமாக ஒன்றை நான் உறுதியளிக்கிறேன். வானரர்களே, விரைவில் ஜகத்தை {உலகத்தை} ராவணனற்றதாகவோ, ராமனற்றதாகவோ நீங்கள் பார்ப்பீர்கள்.(48ஆ,49அ)
இராஜ்ஜிய நாசத்தையும், வனவாசத்தையும் அடைந்து தண்டகத்தில் {தண்டகாரண்யத்தில்} திரிந்து கொண்டிருந்தேன். இராக்ஷசர்களைச் சந்தித்தேன் {அவர்களுடன் மோதினேன்}. வைதேஹி அபகரிக்கப்பட்டாள்.(49ஆ,50அ) பிறகு, நிரயத்திற்கு {நரகத்திற்கு} ஒப்பான, மஹத்தான, கோரமான துக்கத்தை அனுபவித்தேன். இன்று நான் ரணத்தில் ராவணனைக் கொன்று, சர்வத்திலிருந்தும் விடுபடப் போகிறேன்[4].(50ஆ,51அ) எதற்காக என்னால் இந்த வானர சைனியம் அழைத்து வரப்பட்டதோ,{51ஆ} ரணத்தில் வாலி கொல்லப்பட்டானோ, சுக்ரீவனுக்கு ராஜ்யம் கொடுக்கப்பட்டதோ, எதற்காக சாகரத்தில் சேது கட்டப்பட்டதோ, சாகரம் கடக்கப்பட்டதோ, அத்தகைய இந்த பாபி, இன்று ரணத்தில் என் கண்ணின் பார்வை வரம்பிற்குள் வந்தான்.(51ஆ,52அ,ஆ,இ) என் கண்களின் பார்வை வரம்பிற்குள் வந்து ஜீவிக்கத் தகுதியற்றவனானான்.{53ஆ}
[4] தர்மாலயப் பதிப்பில், "நான் போரில் ராவணனைக் கொன்று, ராஜ்யமிழந்ததையும், காட்டில் வசித்ததையும், தண்டகாரண்யத்தில் அலைந்ததையும், ஜானகிக்குற்ற தீண்டுதலையும், அரக்கர்களுடன் எதிர்த்தலையும் இப்பொழுது பயங்கரமாய், பெரிதாய் கிட்டியிருக்கும் துக்கத்தையும், நரகத்திற்குச் சமமான மனவேதனையையும் ஆகிய எல்லாவற்றையும் போக்கிக் கொள்வேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராஜ்யங்கைசோறுதல், வனத்தில் வாஸஞ்செய்தல், தண்டகாரண்யத்தில் திரிதல், சீதை பிறரால் ஸ்பர்சிக்கப்படுதல், அவள் ராக்ஷஸர் கையில் அகப்படுதல், நான் பம்பையின் கரையிலுள்ள உபவனம் முதலிய இடங்களில் பெருந்துக்கம் உண்டாகப்பெறுதல், இந்த லக்ஷ்மணன் விஷயத்தில் நரகம்போல் கோரமான வருத்தம் உண்டாயிருத்தல் ஆகிய இவற்றையெல்லாம் இப்பொழுது யுத்தத்தில் ராவணனைக் கொன்று போக்கடித்துக் கொள்கிறேன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "ஆட்சிப்பொறுப்பு கைநழுவிப்போனது, காட்டில் வாழ்க்கை, தண்டகாரண்யத்தில் இங்குமங்கும் அலைதல், வைதேகியைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போதல், அரக்கர்களோடு சண்டை - இவ்வாறாகப் பொறுக்க முடியாத துக்கத்தையும், நரகவாசம் போன்ற கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. போர்க்களத்தில் இராவணனைக் கொன்று, இந்த எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவேன்" என்றிருக்கிறது.
பார்வையிலேயே விஷத்தைக் கொண்ட சர்ப்பத்தைப் போன்றவன் இந்த ராவணன். இருப்பினும், வைனதேயனின் {கருடனின்} பார்வையைப் போன்ற என் பார்வை வரம்பிற்குள் புஜங்கத்தை {பாம்பைப்} போல வந்திருக்கிறான்[5].(53ஆ,54அ,ஆ) வெல்லப்பட முடியாத வானர புங்கவர்களே, பர்வத உச்சிகளில் ஸ்வஸ்தமாக {மலையுச்சிகளில் சுகமாக} அமர்ந்து கொண்டு, எனக்கும், ராவணனுக்கும் இடையிலான இந்த யுத்தத்தை பார்ப்பீராக.(55) இன்று நான் போரிடுகையில், கந்தர்வர்கள், தேவர்கள், ரிஷிகள், சாரணர்கள் உள்ளிட்ட மூன்று உலகங்களும், {இந்த} ராமனின் ராமத்வத்தை {ராமத்தனத்தை / ராமத் தன்மையை} பார்க்கட்டும்.(56) சராசரங்களும் {அசைவன, அசையாதன உள்ளிட்ட உயிரினங்களும்}, தேவர்களும், உலகங்கள் யாவிலும் உள்ள யாவரும், இன்று நான் எதை நிறைவேற்றுவேனோ, அந்தக் கர்மத்தைக் கண்டு, பூமி எது வரை இருக்குமோ, அதுவரை சொல்வார்கள்.{57} உலகத்தார் சதா ஒன்று கூடி யுத்தம் நடந்த விதத்தை விவரிப்பார்கள்" {என்றான் ராமன்}.(57,58அ)
[5] தர்மாலயப் பதிப்பில், "கண்களில் விஷத்தைக் கொண்டிருக்கும் ஒரு பாம்பினுடைய பார்வையைக் கிட்டி எவ்வண்ணமோ, அவ்வண்ணமே இந்த ராவணன் எனது கட்புலனை அடைந்து உயிரோடிருக்க மாட்டான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸர்ப்பத்தின் கண்பட்டவன் ஜீவிக்கமுடியாததுபோல், என் கண்களில் பட்ட பின்பு இவன் பிழைத்துப் போகவல்லனல்லன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கண்களில் விஷத்தைக் கொண்டிருக்கும் ஒரு பாம்பின் பார்வையில் பட்டுவிட்டாற்போல என் பார்வையில் பட்டுவிட்ட இராவணன் இனி உயிரோடு இருக்கத்தக்கவன் அல்லன்" என்றிருக்கிறது. இந்த மூன்று தமிழ்ப்பதிப்புகளிலும் வைனதேயன், அதாவது கருடன் குறிப்பிடப்படவில்லை. ஆங்கிலத்தில் தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி, வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, மன்மதநாதத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் கருடனின் பார்வை குறிப்பிடப்படுகிறது. மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்புகளில், "விஷமிக்க பாம்பின் பார்வைக்குள் அகப்பட்டவனையோ, வினதை மகனின் வரம்பிற்குள் வந்த பாம்பையோ போல என் பார்வையின் வரம்பிற்குள் வந்த ராவணன் உயிரோடு இருக்கமாட்டான்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் நாம் ஒப்பிடும் பதிப்புகளில் விவேக் தேவ்ராயின் செம்பதிப்பில் மட்டும் கருடனின் பார்வை குறிப்பிடப்படவில்லை. ஆனால் அங்கே ராமனின் பார்வை விஷமிக்க பாம்பின் பார்வைக்கு ஒப்பிடப்படவில்லை. மாறாக, "இராவணனின் பார்வை எனக்கு விஷமிக்க பாம்பின் பார்வை போன்றது" என்றிருக்கிறது.
இராமன், இவ்வாறு கூறிவிட்டு, ரணத்தில் சமாஹிதத்துடன் {போரில் ஊக்கத்துடன்}, தப்த காஞ்சன பூஷணங்களுடன் கூடிய {புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்ட}, கூரிய பாணங்களால் தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்டவனான ராவணனைத்} தாக்கினான்.(58ஆ,59அ) அப்போது ராவணன் மழைத்தாரைகளை {பொழியும்} மேகம் போல, ஒளிரும் நாராசங்களையும், பிறகு, முசலங்களையும் ராமன் மீது பொழிந்தான்.(59ஆ,60அ) இராமராவணர்கள் விடுத்த {ஏவிய} சரங்கள், அன்யோன்யம் மோதிக்கொண்ட போது, அந்த சரங்களில் கொந்தளிக்கும் ஸ்வனம் எழுந்தது.(60ஆ,61அ) இராமராவணர்கள் இருவரின் சரங்களும் பிளந்து சிதறி, அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} இருந்து ஒளிரும் நுனிகளுடன் தரணீதலத்தில் விழுந்தன.(61ஆ,62அ) அந்த ராமராவணர்கள் இருவரின் உள்ளங்கைகளும், நாண்கயிறுகளும் உண்டாக்கிய பேரொலி, சர்வபூதங்களையும் அச்சுறுத்தியது அற்புதக் காட்சியாக எழுந்தது.(62ஆ,63அ) ஒளிரும் தனுசுடன் கூடிய மஹாத்மாவின் சரஜால விருஷ்டியால் {கணைக்கூட்ட மழையால்} சிதறடிக்கப்பட்ட ராவணன், அநிலனால் {காற்று தேவனால்} விரட்டப்படும் வலாஹகத்தை {மேகத்தைப்} போல பயந்து ஓடினான்.(63ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 100ல் உள்ள சுலோகங்கள்: 63
Previous | | Sanskrit | | English | | Next |