Fight between Rama and Ravana | Yuddha-Kanda-Sarga-099 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மிகச்சிறந்த விற்கள், பெரும் வலிமைமிக்க ஆயுதங்களுடன் கூடிய ராம ராவணர்கள் தங்களுக்குள் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்...
இராக்ஷசர்களான மஹோதர, மஹாபார்ஷ்வர்கள் கொல்லப்பட்டதையும், மஹாபலவானான அந்த வீரன் விரூபாக்ஷன் கொல்லப்பட்டதையும் கண்டு,{1} பெருங்குரோதமடைந்த ராவணன், சூதனை {தேரோட்டியைத்} தூண்டிவிட்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1,2) "அமாத்யர்கள் {அமைச்சர்கள்} கொல்லப்பட்டதாலும், நகரம் முற்றுகையிடப்பட்டதாலும் உண்டான துக்கத்தை ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வதன் மூலம் போக்குவேன்" {என்று தேரோட்டியிடம் சொல்லி, தேரை எடுக்கும்படி அவனைத் தூண்டிவிட்டு, ராக்ஷசப் போர்வீரர்கள் பிறரிடம்},(3) "எந்த ராம விருக்ஷத்தில் சீதா புஷ்ப பலனை {ராமன் என்ற மரத்தின் கனியான சீதை என்ற மலரை நான்} அடைவேனோ, அதில் உள்ள சாகைகளான {ராமனெனும் அந்த மரத்தின் கிளைகளான} சுக்ரீவன், ஜாம்பவான், குமுதன் ஆகியோரை ரணத்தில் வெட்டுவீராக,{4} துவிவிதன், மைந்தன் ஆகியோரையும், அங்கதன், கந்தமாதனன், ஹனுமான் ஆகியோரையும், சர்வ ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரையும்} அவ்வாறே செய்வீராக" {என்றான் ராவணன்}.(4,5)
அதிரதனான அந்த மஹான் {ராவணன்}, தன் ரதத்தின் கோஷத்தால் பத்துத் திசைகளிலும் நாதம் எழுப்பியபடி துரிதமாக ராகவனே நோக்கி விரைந்தான்.(6) நதிகளும், கிரிகளும், அந்த சப்தத்தால் நிறைந்தன. பன்றிகள், சிம்மங்கள், மிருக, துவிஜங்கள் {பிற விலங்குகள், பறவைகள்} ஆகியவற்றைக் கொண்ட கானகங்களுடன் கூடிய சர்வ மஹீயும் {பூமியும்} நடுங்கியது.(7) அவன் {ராவணன்}, மஹாகோரமானதும், மிகப் பயங்கரமானதுமான தாமஸ அஸ்திரத்தை[1] ஏவி சர்வ கபீக்களையும் {குரங்குகளையும்} எரித்தான். சுற்றிலும் அவர்கள் விழுந்தனர்.(8) பங்கமடைந்து ஓடிய அவர்களால் பூமியில் புழுதி எழுந்தது. பிரம்மனால் சுயமாக நிர்மிதம் செய்யப்பட்ட அதை {அந்த தாமஸ அஸ்திரத்தை} சகித்துக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை.(9) இராகவன், ராவணனின் உத்தம சரங்களால் அநேக சதங்களாக {பல நூறுகளாக} பங்கமடைந்த அந்த அனீகங்களைக் கண்டு, எதிர்த்து நின்றான்.(10)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தாமஸம் என்றால் இருள் என்று பொருள்" என்றிருக்கிறது.
அப்போது அந்த ராக்ஷச சார்தூலன் {ராக்ஷசப்புலி}, ஹரிவாஹினியை {குரங்குப் படையை} விரட்டினான். பிறகு, அங்கே அபராஜிதனாக {வெல்லப்படமுடியாதவனாக} நிற்கும் ராமனைக் கண்டான்[2].{11} அவன் {ராமன்}, விஷ்ணுவுடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போல, தன்னுடன் பிறந்த லக்ஷ்மணன் சகிதனாக, மஹத்தான தனுவுடன் கூடியவனாக, ஆகாசத்தை உராய்வதைப் போன்றவனாக இருந்தான்.{12} அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} அந்த தீர்க்கபாஹு {நீண்ட கைகளைக் கொண்டவன்}, பத்மபத்ரவிசாலாக்ஷனாக இருந்தான் {தாமரை இதழ்களைப் போன்ற நீள்விழிகளைக் கொண்டவனாக இருந்தான்}.(11-13அ) பலவானும், மஹாதேஜஸ்வியுமான ராமன், சௌமித்ரி சகிதனாக இருந்தபோது,{13ஆ} ரணத்தில் பங்கமடைந்த வானரர்களையும், தன்னை நோக்கி வரும் ராவணனையும் கண்ட ராகவன், மகிழ்ச்சியுடன் தன் கார்முகத்தை {வில்லை} மத்தியில் பற்றினான் {வில்லை, அதன் நடுப்பகுதியைப் பிடித்து எடுத்தான்}.(13ஆ,14) பிறகு அவன், மஹாவேகம் கொண்ட தன் உத்தம தனுவை வளைத்து {சிறந்த வில்லை நாணேற்றி} மேதினியைப் பிளப்பதைப் போல மஹாநாதம் எழுப்பினான்.(15)
[2] யுத்தகாண்டம் 59ம் சர்க்கத்தில் ராமனிடம் பங்கமடைந்து லங்கை திரும்பிய ராவணன், மீண்டும் இந்த 99ம் சர்க்கத்தில் அவனைச் சந்திக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் கும்பகர்ணன், நராந்தகன், அதிகாயன், கும்பன், நிகும்பன், மகராக்ஷன், இந்திரஜித், விரூபாக்ஷன், மஹோதரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் மாண்டனர். இவ்வளவு இழப்பிற்குப் பின் ராவணன், இங்கே ராமனை மீண்டும் சந்திக்கிறான். இராமராவணர்களுக்கிடையிலான முதல் மோதல் 99ம் சர்க்கத்தில் வரும் இந்த மோதல்தான் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறெனில் 59ம் சர்க்கம் இடைச்செருகலாக இருக்க வாய்ப்புள்ளது.
அப்போது ராவணனின் பாண ஓகங்களாலும் {கணை வெள்ளத்தாலும்}, ராமனின் நாணேற்றும் ஒலியாலும் உண்டான அந்த சப்தத்தால், அந்த ராக்ஷசர்களில் நூற்றுக்கணக்கானோர் விழுந்தனர்.(16) சசிசூரியர்களின் {சந்திர சூரியர்களின்} சமீபத்தில் ராகு எப்படியோ, அப்படியே ராஜபுத்திரர்களுடைய {ராமலக்ஷ்மணர்களுடைய} சரங்களின் பாதையில் இலக்கான அந்த ராவணன் ஒளிர்ந்தான்.(17) இலக்ஷ்மணன், பிரதமமாக {முதலில்} கூர்முனைச் சரங்களைக் கொண்டு அவனுடன் போரிட விரும்பி, தன் தனுவை வளைத்து, அக்னி சிகைகளுக்கு ஒப்பான சரங்களை விடுவித்தான்.(18) மஹாதேஜஸ்வியான ராவணன், லக்ஷ்மணன் விடுவித்த மாத்திரத்தில் ஆகாசத்திலேயே அந்த பாணங்களைத் தன் பாணங்களால் தடுத்தான்.(19) அவன் {ராவணன்}, தன் கைகளின் லாகவத்தைக் காட்டி, லக்ஷ்மணனின் பாணங்களில் ஒன்றை ஒன்றாலும், மூன்றை மூன்றாலும், பத்தை பத்தாலும் பிளந்தான்.(20)
சமிதிஞ்ஜயனான {போரில் எப்போதும் வெற்றியடைபவனான} ராவணன், சௌமித்ரியை {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனைக்} கடந்து சென்று, மற்றொரு சைலத்தை {மலையைப்} போல ரணத்தில் நின்று கொண்டிருந்த ராமனை அணுகினான்.(21) இராக்ஷசேஷ்வரனான அந்த ராவணன், குரோதத்தில் கண்கள் சிவந்து, ராகவனை அணுகி, சர வர்ஷங்களை விடுவித்தான் {ராமனின் மீது கணைமாரி பொழிந்தான்}.(22) அப்போது ராமன், ராவணனின் தனுவில் இருந்து விடுவிக்கப்பட்டு, சீக்கிரமாகப் பாய்ந்து வரும் சரத் தாரையைக் கண்டதும், பல்லங்களைத் துரிதமாக எடுத்தான்.(23) பிறகு ராகவன், குரோதத்துடன் கூடிய விஷமிக்க பாம்புகளைப் போன்றவையும், மஹாகோரமானவையும், ஒளிமிக்கவையுமான அந்த சர ஓகங்களைத் தன் கூரிய பல்லங்களால் பிளந்தான்.(24) இராகவன் ராவணன் மீதும், அதேபோல, ராவணன் ராகவன் மீதும், அன்யோன்யம் துரிதமாக, விதவிதமான, கூரிய சரவர்ஷங்களைப் பொழிந்து கொண்டனர்.(25)
அன்யோன்யம் பாணவேகத்தால் தள்ளப்பட்ட அபராஜிதர்கள், இடமிருந்து வலமாக நீண்ட நேரம் சித்திர மண்டலங்களைச் செய்தனர் {பல விதமாக சுற்றித் திரிந்தனர்}.(26) ரௌத்திரர்களும், சாயகங்களை விடுவிப்பவர்களும் {கணைகளை ஏவுகிறவர்களும்}, யம, அந்தகர்களுக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும் ஒரே நேரத்தில் போரிட்டதால் பூதங்கள் {உயிரினங்கள்} திகிலடைந்தன.(27) மின்னல் மாலைகள் {மின்னற்கொடிகள்} நிறைந்த மேகங்கள் எப்படியோ, அப்படியே விதவிதமான பாணங்களால் ககனம் {வானம்} அப்போது அடர்ந்திருந்தது.(28) வலிமைமிக்கவையும், மிகக் கூரிய முனைகளைக் கொண்டவையும், கிருத்ரபத்ரங்களால் {கழுகின் இறகுகளால்} அலங்கரிக்கப்பட்டவையும், மஹாவேகம் கொண்டவையுமான சரவிருஷ்டியால் {கணை மழையால்}, ஆகாசமானது, கவாக்ஷங்களால் {சாளரங்களால் / ஜன்னல்களால்} மூடப்பட்டது போலானது.(29) தபனன் {சூரியன்} அஸ்தம கதி அடையும்போது உதிக்கும் மஹாமேகங்கள் இரண்டைப் போலப் பிரதமமாக சராந்தகாரத்தால் {சரங்களெனும் இருளில்} ஆகாசத்தை மறைத்தனர்.(30)
விருத்திரன், வாசவன் ஆகிய இருவரைப் போல, அன்யோன்யம் வதம் செய்ய விரும்பிய அவ்விருவருக்கும் இடையில் சிந்தனைக்கப்பாற்பட்ட, அணுகுதற்கரிய வகையில், மஹத்தான யுத்தம் நடந்தது.(31) இருவரும் பரமேஷ்வாசர்கள் {சிறந்த வில்லாளிகள்}; இருவரும் யுத்த விசாரதர்கள் {போரில் நிபுணர்கள்}; இருவரும் அஸ்திர விதங்களை அறிந்தவர்களில் முக்கியர்கள்; இருவரும் யுத்தில் சலிக்காதவர்கள்.(32) அவ்விருவரும் எவ்வழியில் சென்றனரோ, ஆங்காங்கே வாயுவால் {காற்றால்} தூண்டப்பட்ட சாகரங்களின் அலைகளைப் போல, சர அலைகள் எழுந்தன {கணையாலான அலைகள் எழுந்தன}.(33) பிறகு, சம்ஸக்தஹஸ்தனும், லோகராவணனுமான {திறன்மிக்க கைகளைக் கொண்டவனும், உலகைக் கதற வைப்பவனுமான} ராவணன், ராமனின் நெற்றியில் நாராச மாலைகளை {வரிசையாக நாராசங்களை} ஏவினான்.(34) இராமன், ரௌத்திரமான சாபத்தில் {வில்லில்} இருந்து ஏவப்பட்டவையும், நீலோத்பல தளங்களின் {இதழ்களின்} பிரபையுடன் கூடியவையுமான அவற்றைத் தன் சிரசில் தாங்கியும், துன்புறாதிருந்தான்.(35)
பிறகு, ராமன், குரோதத்தால் நிறைந்து, ரௌத்திராஸ்திர மந்திரத்தை உச்சரித்து ஜபித்து, மீண்டும் சரங்களை எடுத்தான்.{36} மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான அவன், தன் சாபத்தை {வில்லை} வளைத்து அவற்றை விடுவித்தான்.(36,37அ) மஹாமேகத்தைப் போல் தெரிந்ததும், அழிக்கப்பட முடியாததுமான ராக்ஷசேந்திரனின் கவசத்தில் விழுந்த அந்தச் சரங்களால், அப்போது அவனுக்குத் துன்பமெதனையும் உண்டாக்க முடியவில்லை[3].(37ஆ,38அ) அப்போது, சர்வாஸ்திர குசலனான ராமன் {அனைத்து வகை அஸ்திரங்களையும் பயன்படுத்த வல்லவனான ராமன்}, ரதத்தில் அமர்ந்திருந்த அந்த ராக்ஷசாதிபனின் நெற்றியில் மீண்டும் பரமாஸ்திரங்களை ஏவினான்.(38ஆ,39அ) {ராவணனின்} பாணரூபங்களைப் பிளந்த அவை, ராவணனால் தடுக்கப்பட்டதும், பஞ்ச சிரங்களைக் கொண்டவையும், பெருமூச்சு விடுபவையுமான உரகங்களை {பாம்புகளைப்} போல பூமிக்குள் புகுந்தன.(39ஆ,40அ)
[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஏனெனில் அந்தக் கவசம் தகர்க்கப்பட முடியாததாகும்" என்றிருக்கிறது.
இராகவனின் அஸ்திரத்தை வீழ்த்திய அந்த ராவணன், குரோதத்தில் மூர்ச்சித்து, மஹாகோரமான மற்றொரு ஆசுர அஸ்திரத்தை ஏவினான்.(40ஆ,41அ) சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவையும், கங்கங்கள், காகங்கள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவையும்,{41ஆ} கிருத்ரங்கள் {கழுகுகள்}, சியேனங்கள் {பருந்துகள்} ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவையும், அதே போல நரிகள், ஓநாய்கள் ஆகியவற்றின் வதனங்களைக் கொண்டவையும், அகலத் திறந்த வாய்களுடன் கூடிய வேறு விலங்குகளின் முகங்களைக் கொண்டவையும், பயத்தை உண்டாக்கும் வகையில் தாக்கக்கூடியவையும்,{42} ஐந்து முகங்களைக் கொண்ட பாம்புகளைப் போன்றவையுமான கூரிய சரங்களை ஏவினான்.(41ஆ-43அ) கழுதை முகங்களையும், பன்றி முகங்களையும் கொண்ட சரங்களையும்,{43ஆ} நாய்கள், கோழிகளின் முகங்களையும், முதலைகள், விஷமிக்க பாம்புகளின் முகங்களையும் கொண்ட இன்னும் பிற சரங்களையும் அந்த மாயாவி ஏவினான்.{44} அந்த மஹாதேஜஸ்வி, ராமனை நோக்கி குரோதத்தில் சர்ப்பம் போல் பெருமூச்சுவிட்டான்.(43ஆ-45அ)
பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பான அந்த ரகுபுங்கவன் {ரகுக்களில் உயர்ந்தவனான ராமன்}, ஆசுர அஸ்திரத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், மஹா உற்சாகத்துடன் பாவக அஸ்திரத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} விடுவித்தான்.(45ஆ,46அ) ஒளிரும் அக்னி முகம் கொண்ட பாணங்களையும், சூரிய முகங்களையும்,{46ஆ} சந்திர, அர்த்தசந்திர முகங்களையும், தூமகேது முகங்களையும், கிரஹநக்ஷத்ர வர்ணங்களையும், மஹா உல்கங்களின் {பெரும் எரிகொள்ளிகளின்} முகங்களையும் கொண்டவையும்,{47} மின்னற்கீற்றுகளுக்கு ஒப்பானவையுமான விதவிதமான சரங்களை அங்கே விடுவித்தான்.(46ஆ-48அ) அந்த ராகவாஸ்திரங்கள் தாக்கியதில், கோரமான ராவண சரங்கள் ஆகாசத்திலேயே அழிவடைந்து ஆயிரந்துண்டுகளாக விழுந்தன.(48ஆ,49அ) களைப்பின்றி கர்மங்களைச் செய்யும் ராமனால் அந்த {ஆசுர} அஸ்திரம் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, காமரூபிகளான சர்வ கபய வீரர்களும் {நினைத்த வடிவை ஏற்கவல்ல வீரக் குரங்கினர் அனைவரும்}, சுக்ரீவனை முன்னிட்டுக் கொண்டு ராமனைச் சூழ்ந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(49ஆ,50அ,ஆ) மஹாத்மாவான தாசரதி {ராமன்}, ராவணனின் கையில் இருந்து வெளிப்பட்ட அந்த அஸ்திரத்தை வலுவாகத் தாக்கி அழித்ததில் மகிழ்ச்சியடைந்தான். கபீஷ்வரர்கள் {குரங்குத் தலைவர்கள்} பெரும் மகிழ்ச்சியுடன் உரக்கக் கூச்சலிட்டனர்.(51)
யுத்த காண்டம் சர்க்கம் – 099ல் உள்ள சுலோகங்கள்: 51
Previous | | Sanskrit | | English | | Next |