Friday, 8 November 2024

கண்ணீரைத் துடைத்தல் | யுத்த காண்டம் சர்க்கம் - 046 (50)

Tears wiped | Yuddha-Kanda-Sarga-046 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் மறைந்திருப்பதைக் கண்ட விபீஷணன்; சுக்ரீவனைத் தேற்றியது; இராமலக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டதாக ராவனிடம் அறிவித்த இந்திரஜித்...

Vibheeshana wiping the tears from Sugreevas face
பிறகு வானத்தையும், பிருத்வியையும் பார்த்துக் கொண்டிருந்த வனௌகசர்கள் {வனத்தை வசிப்பிடமாகக் கொண்ட வானரர்கள்}, உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் பாணங்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(1) அப்போது, மழை பொழியும் தேவனை {இந்திரனைப்} போலத் தன் கர்மத்தைச் செய்துவிட்டு ராக்ஷசன் {இந்திரஜித்} ஓய்ந்ததும், அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} சுக்ரீவனுடன் சேர்ந்து விபீஷணனும் வந்தான்.(2) நீலன், துவிவிதன், மைந்தன், சுஷேணன், குமுதன், அங்கதன் ஆகியோரும் ஹனுமதனுடன் சேர்ந்து விரைவில் கூடி ராகவர்களுக்காக {ராமலக்ஷ்மணர்களுக்காக} வருந்திக் கொண்டிருந்தனர்.(3)

அசைய இயலாமலும், மந்த சுவாசத்துடனும், சோணிதத்தால் {ரத்தத்தால்} நனைந்தும், சரஜாலங்களால் {கணை வலையால்} முழுமையாக மறைக்கப்பட்டும், அசைவின்றி, சரதல்ப சயனத்தில் {அம்புப் படுக்கையில்} அவர்கள் திகைத்துக் கிடந்தனர்.{4} மந்த விக்கிரமத்துடன் பெருமூச்சுவிடும் சர்ப்பங்களைப் போல, உதிரத்தால் நனைந்து சோர்ந்த அங்கங்களுடனும், பொன் துவஜங்கள் {பொன்னாலான கொடிமரங்கள்} இரண்டைப் போல செயலின்றி கிடந்தனர்.{5} வீர சயனத்தில் அசைவின்றி சயனிக்கும் அந்த வீரர்கள் இருவரும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் பெருமூச்சுவிட்ட யூதபத்தால் {படையணியினரால்} சூழப்பட்டனர்.{6} விபீஷணனுடன் இருந்த சர்வ வானரர்களும், சர ஜாலங்களால் {அம்பு வலையால்} மறைக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் அந்த ராகவர்கள் இருவரையும் கண்டு வேதனையடைந்தனர்.(4-7)

அந்தரிக்ஷத்தின் {வானத்தின்} திசைகள் அனைத்தையும் உற்று நோக்கித் தேடியும், போர்க்களத்தில் மாயையால் மறைந்திருந்த ராவணியை {இந்திரஜித்தை} வானரர்களால்  எங்கும் காண முடியவில்லை.(8) ஆனால் விபீஷணன், மாயா சக்திகளைப் பயன்படுத்தி உற்று நோக்கியபோது, தன்னுடன் பிறந்தானின் புத்திரன் {இந்திரஜித்}, மாயையைப் பயன்படுத்தி அங்கே மறைந்து நிற்பதைக் கண்டான்.(9) போர்க்களத்தில் ஒப்பற்ற கர்மங்களைச் செய்பவனும், தனிச்சிறப்புடையவனுமான அந்த வீரன் {இந்திரஜித்}, தான் பெற்ற வர தானத்தால் அந்தர்ஹிதமாக இருந்தாலும் {கண்ணுக்குப் புலப்படாதவனாக மறைந்து நின்றாலும்}, தேஜஸ்வியும் {ஆற்றல்மிக்கவனும்}, புகழ்மிக்கவனும், விக்ரமனும் {வீரமும் நிறைந்தவனுமான} விபீஷணனால் அடையாளங் காணப்பட்டான்.(10,11அ)

இந்திரஜித், தன் கர்மத்தால் {செயலால்} சயனத்தில் கிடக்கும் இருவரையும் கண்டு, பரம பிரீதியடைந்து {பெரும் மகிழ்ச்சியடைந்து}, சர்வ நைர்ருதர்களும் {ராக்ஷசர்களும்} மகிழ்ச்சியடையும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(11ஆ,12அ) “தூஷணரையும், கரரையும் கொன்ற மஹாபலவான்களும், உடன்பிறந்தோருமான ராமலக்ஷ்மணர்கள் என் பாணங்களால் தாக்கப்பட்டனர்.(12ஆ,13அ) சர்வ ரிஷி சங்கமும், ஸுராஸுரர்களும் சேர்ந்து வந்தாலும், இவ்விருவரையும் அவர்களால் இஷுபந்தனத்திலிருந்து {கணைக் கட்டில் இருந்து} விடுவிக்க இயலாது.(13ஆ,இ) எதைக் குறித்த சிந்தனையில் என் பிதா சோக அர்த்தத்தில் மூழ்கியிருந்தாரோ,{14} காத்திரங்களால் சயனத்தையும் ஸ்பரிசிக்க {உடலால் படுக்கையையும் தீண்ட} முடியாமல் மூன்று யாமங்களைக்[1] கொண்ட இரவை கழிக்கிறாரோ, எதனால் இந்த லங்கை முழுமையும் மழைக்கால நதியைப் போல கலக்கமடைகிறதோ,{15} நம் மூலத்தை {வேரை} அறுக்கக்கூடிய அந்த அனர்த்தம் இதோ என்னால் அழிக்கப்பட்டது.(14-16அ) இராமன், லக்ஷ்மணன், அதேபோல சர்வ வனௌகசர்களின் சர்வ விக்ரமமும், சரத்கால மேகத்தைப் போல் பலனற்றுப் போனது[2]” {என்றான் இந்திரஜித்}.(16ஆ,17அ)

[1] இரண்டு முஹூர்த்தங்களைக் கொண்டது ஒரு யாமம். ஒரு முஹூர்த்தம் ஒன்றரை மணி நேரமாகும். எனவே, யாமம் 3 மணி நேரத்தைக் கொண்டது. எட்டு யாமங்களைக் கொண்டது ஒரு நாள். யாமம் என்பது, சாமம் என்றும் அழைக்கப்படுகிறது. பகலுக்கு 4 சாமங்கள்; இரவுக்கு 4 சாமங்கள். இங்கே இந்திரஜித், தன் தந்தை, சோக சிந்தனையில் ஒன்பது மணிநேர {திரியாம} இரவைப் படுக்கையில் கிடக்காமல் கழிப்பதைக் குறிப்பிடுகிறான்.


[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “கூதிர் கால மேகங்கள் மழையைப் பொழிவதில்லை” என்றிருக்கிறது. பிபேக் தேப்ராய் வங்கத்தைச் சேர்ந்தவர். இந்தக் கூதிர் காலம் என்பது, ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் குறிப்பதாகும். இந்த மாதங்களில் தமிழகத்திலும், இலங்கையிலும் நல்ல மழை பெய்யும். வடக்கில் உத்திரப்பிரதேசம், மேற்கில் குஜராத், மஹாராஷ்டிரா, கிழக்கில் வங்கம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மழை கிடையாது. ஆகவே வடமொழி இலக்கியங்களில், “சரத்கால மேகங்கள் மழையைத் தராது” என்பது ஒரு சொலவடையாகவே பயன்படுத்தப்படுகிறது. “இன்றைய இலங்கையே ராமாயண லங்கை என்றால், லங்கையை ஆளும் இந்திரஜித் இந்தச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவான்? எனவே இன்றைய லங்கை, ராமாயண லங்கையல்ல” என்பர் சிலர். “இராமாயணத்தைப் படைத்த வால்மீகியோ, அதைச் சொன்ன லவகுசர்களோ, பின்னர் எழுதிய ஆசிரியர்களோ இன்றைய இலங்கையைச் சேர்ந்தவர்களல்லர். எனவே, இந்திரஜித்தின் வாயிலாக வெளிப்படுவது அவர்களின் வசனமேயாதலால் இந்த வாதத்தை ஏற்பதற்கில்லை” என்பர் சிலர்.


அந்த ராவணி {இந்திரஜித்}, தன்னுடன் இருந்த ராக்ஷசர்கள் அனைவரையும் பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டு, சர்வ யூதபர்களையும் {படையணித் தலைவர்களையும்} தாக்கத் தொடங்கினான்.(17ஆ,18அ) அந்த அமித்ரக்னன் {பகைவரைக் கொல்பவனான இந்திரஜித்} நீலனை, கூரிய ஒன்பது கணைகளாலும், மைந்தனையும், அதேபோல துவிவிதனையும், கூரிய மும்மூன்று கணைகளாலும் தாக்கினான்.(18ஆ,19அ) அந்தப் பெரும் வில்லாளி {இந்திரஜித்}, ஒரு பாணத்தால் ஜாம்பவந்தனின் மார்பைத் துளைத்துவிட்டு, வேகவானான ஹனூமதன் மீது பத்துச் சரங்களை ஏவினான்.(19ஆ,20அ) மஹாவேகவானான ராவணி, யுத்தத்தில் அமிதவிக்ரமர்களான {வற்றாத வீரம் கொண்டவர்களான} கவாக்ஷன், சரபன் ஆகிய இருவரையும் ஈரிரண்டால் {இரண்டு இரண்டு கணைகளால்} தாக்கினான்.(20ஆ,21அ) அதன்பிறகு ராவணி, துரிதமாக கோலாங்கூலேஷ்வரனையும் {கோலாங்கூலர்களின் தலைவனையும்}, வாலிபுத்ரன் அங்கதனையும் ஏராளமான பாணங்களால் துளைத்தான்.(21ஆ,22அ) பலவானும், வலிமைமிக்கவனுமான அந்த ராவணியே, அங்கே அக்னி சிகைக்கு ஒப்பான சரங்களால் சிறந்த வானரர்களைத் தாக்கிவிட்டு நாதம் செய்தான் {கர்ஜித்தான்}.(22ஆ,23அ)

அந்த மஹாபாஹு, பாண ஓகைகளால் {கணை ஓடைகளால்} தாக்குதல் தொடுத்து, வானரர்களை அச்சுறுத்தியபடியே சிரித்து இந்த வசனத்தைச் சொன்னான்:(23ஆ,24அ) “இராக்ஷசர்களே, படையின் முன்னணியில் கோரமான சரபந்தனத்தால் என்னால் கட்டப்பட்ட உடன்பிறந்தோர் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் ஒன்றாகக் கிடப்பதைப் பாருங்கள்” {என்றான் இந்திரஜித்}.(24ஆ,25அ)

இவ்வாறு சொல்லப்பட்டதும், கபடயுத்தம் புரியும் ராக்ஷசர்களான அவர்கள் அனைவரும், அந்தக் கர்மத்தில் {இந்திரஜித்தின் அந்தச் செயலில்} பரம ஆச்சரியமடைந்து மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.(25ஆ,26அ) மேகங்களுக்கு ஒப்பான அவர்கள் அனைவரும், “இராமன் இறந்துவிட்டான்” என்பதை அறிந்து மஹாநாதத்துடன் கர்ஜித்தபடியே ராவணியை {இந்திரஜித்தைப்} பூஜித்தனர்.(26ஆ,27அ) உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும் அசையவும், மூச்சுவிடவும் இயலாமல் வசுதையில் {தரையில்} கிடப்பதைக் கண்டவன் {கண்ட இந்திரஜித்}, “அவர்கள் மாண்டனர்” என்று நினைத்தான்.(27ஆ,28அ) சமிதிஞ்ஜயனான {போர்களில் வெல்பவனான} இந்திரஜித், மகிழ்ச்சியால் நிறைந்து, சர்வ நைர்ருதர்களையும் {ராக்ஷசர்களையும்} மகிழ்ச்சியடையச் செய்தபடியே லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(28ஆ,29அ)

இராமலக்ஷ்மணர்கள் இருவரும் அங்க, உப அங்கங்கள் உள்ளிட்ட சரீரமெங்கும் சாயகங்களால் {கணைகளால்} துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சுக்ரீவன் பயத்தால் பீடிக்கப்பட்டான்.(29ஆ,30அ) விபீஷணன், அச்சத்துடனும், கண்ணீர் வழியும் வதனத்துடனும், சோகத்தால் கலக்கமடைந்த கண்களுடனும் தீனனாகத் தெரிந்த வானரேந்திரனிடம் {வானரர்களின் தலைவனான சுக்ரீவனிடம்},(30ஆ,31அ) “சுக்ரீவா, அச்சம் போதும். கண்ணீரின் வேகத்தை அடக்குவாயாக. யுத்தங்கள் இப்படித்தான் இருக்கும். விஜயம் நைஷ்டிகமில்லை {வெற்றியானது முடிவான ஒன்றில்லை}.(31ஆ,32அ) வீரா, நம்மிடம் பாக்கியம் எஞ்சியிருந்தால், மஹாத்மாக்களும், மஹாபலவான்களுமான இவ்விருவரும் மோஹத்தில் {மயக்கத்தில்} இருந்து விடுபடுவார்கள்.(32ஆ,33அ) வானரா, உன்னையும் {தேற்றிக் கொண்டு}, அநாதையான என்னையும் தேற்றுவாயாக. சத்தியம், தர்மம் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு மிருத்யுவின் {யமனின்} செயல்பாட்டால் பயம் உண்டாகாது {மரண பயம் இல்லை”, என்றான் விபீஷணன்}.(33ஆ,34அ)

இவ்வாறு சொன்ன விபீஷணன், அந்த சுக்ரீவனின் சுப நேத்திரங்களை {அழகிய விழிகளை} ஜலம் கொண்ட உள்ளங்கைகளால் துடைத்துவிட்டான்.(34ஆ,35அ) பிறகு, தர்மாத்மாவான விபீஷணன், நீரை எடுத்து, வித்தையுடன் {மந்திரங்களை} ஜபித்து சுக்ரீவனின் நேத்திரங்களைத் துடைத்துவிட்டான்.(35ஆ,36அ) மதிமிக்கவனான அந்தக் கபிராஜனின் வதனத்தை {குரங்கரசன் சுக்ரீவனின் முகத்தைத்} துடைத்ததும், காலத்திற்குத் தகுந்த முறையான இந்தச் சொற்களைக் கூறினான்:(36ஆ,37அ) “கபிராஜேந்திரா {குரங்கரசர்களின் தலைவா}, இது சோர்வடைவதற்கான காலமல்ல. இந்தக் காலத்தில் அதிசினேஹம் மரணத்திற்கே இட்டுச் செல்லும்.(37ஆ,38அ) எனவே, சர்வ காரியங்களையும் நாசம் செய்யும் மனத்தளர்வைக் கைவிட்டு, ராமரை முன்னணியில் கொண்ட சைனியத்திற்கான ஹிதம் {நன்மை} குறித்து சிந்திப்பாயாக.(38ஆ,39அ) அல்லது நனவு மீளும் வரை ராமரை ரக்ஷிப்பாயாக. நனவு மீண்டால் காகுத்ஸ்தர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் நம்மிருவரின் பயத்தையும் போக்கிவிடுவார்கள்.(39ஆ,40அ)

இதனால் ராமருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இராமர் மாண்டுபோக மாட்டார். ஆயுசு தீர்ந்த எவரிடமும் துர்லபமாகும் லக்ஷ்மி இவரை விட்டுப் போகவில்லை {இருக்க மாட்டாத காந்தி / முகக்களை ராமரைவிட்டுப் போகவில்லை}.(40ஆ,41அ) எனவே, நான் சர்வ சைனியத்தின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வரை, உன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உன் பலத்தையும் ஆசுவாசப்படுத்துவாயாக.(41ஆ,42அ) ஹரிசத்தமா {குரங்குகளில் முதன்மையானவனே}, திகிலடைந்து நயனங்கள் விரியும் இந்த ஹரயர்கள் {கண்கள் விரிக்கும் இந்தக் குரங்குகள்}, அச்சத்தால் பீடிக்கப்பட்டு காதோடு காதாக ஏதோ கதைக்கின்றனர்.(42ஆ,43அ) அனீகத்தை {படையை} உற்சாகப்படுத்தச் செல்லும் என்னைக் கண்டு, ஏற்கனவே பயன்படுத்திய மாலையை {வீசி எறிவதைப்} போல, தங்கள் அச்சத்தை ஹரயர்கள் {குரங்குகள்} கைவிடட்டும்” {என்றான் விபீஷணன்}.(43ஆ,44அ) இராக்ஷசேந்திரனான விபீஷணன், சுக்ரீவனை ஆசுவாசப்படுத்திவிட்டு, {பயந்து} ஓடும் அந்த வானர அனீகத்தை {படையை} மீண்டும் ஆசுவாசப்படுத்தினான்.(44ஆ,45அ)

Ravana greeting Indrajit

மஹாமாயனான இந்திரஜித், சர்வ சைனியம் சூழ லங்காம் நகரீக்குள் நுழைந்து, தன் பிதாவைச் சந்தித்தான்.(45ஆ,46அ) அங்கே அமர்ந்திருந்த ராவணனைக் கைகளைக் கூப்பி வணங்கி, ராமலக்ஷ்மணர்கள் இருவரும் கொல்லப்பட்டதைத் தன் பிதாவிடம் பிரியத்துடன் கூறினான்.(46ஆ,47அ) சத்ருக்கள் இருவரும் கொல்லப்பட்டனர் என்பதை ராக்ஷசர்கள் மத்தியில் கேள்விப்பட்ட ராவணன், மகிழ்ச்சியுடன் குதித்தெழுந்து தன் புத்திரனைத் தழுவிக் கொண்டான்.(47ஆ,48அ) அவனை {இராவணன், இந்திரஜித்தை} உச்சி முகர்ந்து, மனத்தில் பிரீதியுடன் விசாரித்தும்,{48ஆ} தன்னை விசாரிக்கும் பிதாவிடம், எப்படி அவ்விருவரும் சர பந்தனத்தால் பிரபையிழந்து, அசைவற்றவர்களாகச் செய்யப்பட்டனர் என்ற அனைத்தையும் நடந்தபடியே கூறினான்.(48ஆ,49) அந்த மஹாரதனின் {இந்திரஜித்தின்} சொற்களைக் கேட்டவன் {கேட்ட ராவணன்}, மகிழ்ச்சி பொங்கும் அந்தராத்மாவுடன், தாசரதியால் {தசரதனின் மகனான ராமனால்} விளைந்த ஜுவரத்தில் {பிணியில்} இருந்து விடுபட்டு, இனிய சொற்களால் தன் புத்திரனைப் புகழ்ந்தான்.(50)

யுத்த காண்டம் சர்க்கம் – 046ல் உள்ள சுலோகங்கள்: 50

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை