Rama objects to the use of Brahmastra | Yuddha-Kanda-Sarga-080 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மீண்டும் போரிடத் தொடங்கிய இந்திரஜித்; ; போரிடும் முன் நெருப்பு வேள்வியைச் செய்த இந்திரஜித்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த விரும்பிய லக்ஷ்மணன்; அதைத் தடுத்த ராமன்...
ஸமிதிஞ்ஜயனான {எப்போதும் போரில் வெற்றி கொள்பவனான} ராவணன், மகராக்ஷன் கொல்லப்பட்டதைக் கேட்டு, மஹத்தான ரோஷத்தை அடைந்து, கடகடவெனப் பற்களைக் கடித்தான்.{1} பிறகு, கோபத்துடன், "காரியம் என்ன? {என்ன செய்வது?}" என்பதைச் சிந்தித்து, குரோதத்துடன் தன் மகன் இந்திரஜித்தை ரணத்திற்கு {போர்க்களத்திற்குச்} செல்ல {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1,2) "வீரா, புலப்படாமல் மறைந்தோ, புலப்படும் நிலையிலோ மஹாவீரியர்களும், பிராதாக்களுமான {உடன்பிறந்தாருமான} ராக்ஷமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்வாயாக. எல்லாவகையிலும் நீயே பலாதிகன் {அதிக பலம் வாய்ந்தவன்}.(3) போரில் ஒப்பற்ற கர்மங்களைச் செய்த இந்திரனையே நீ வென்றிருக்கிறாய். மானுஷர்களான இவர்களைக் கண்டதும் உன்னால் வதைக்க முடியாதா என்ன?" {என்று கேட்டான் ராவணன்}.(4)
இராக்ஷசேந்திரன் இவ்வாறு சொன்னதும், அந்த இந்திரஜித், தன் பிதாவின் சொற்களை ஏற்றுக் கொண்டு, யஜ்ஞ பூமியில் {வேள்விக்களத்தில்} விதிப்படி பாவகனுக்கு ஹோமம் செய்தான் {அக்னிக்குக் காணிக்கை செலுத்தினான்}.(5) அங்கே ஹோமம் செய்து {காணிக்கை செலுத்திக்} கொண்டிருக்கும்போது, எங்கே ராவணி {இந்திரஜித்} இருந்தானோ, அங்கே {ருத்விக்குகள் தரிக்க வேண்டிய} சிவப்பு தலைப்பாகைகளை எடுத்துக் கொண்டு ராக்ஷச ஸ்திரீகள் வந்தனர்.(6) சஸ்திரங்கள் சரபத்ரங்களாகவும் {ஆயுதங்கள் நாணல் இலைகளாகவும்}, விபீதகங்கள் சமித்துகளாகவும் {தானிக்கட்டைகள் விறகாகவும்}, மேலும் செவ்வாடைகளும், இரும்புக் கரண்டிகளும் வேள்விக்கரண்டிகளாகவும் இருந்தன.(7) அக்னியைச் சுற்றிலும் சரபத்ரங்களையும் {நாணல் இலைகளையும்}, தோமரங்களையும் பரப்பி வைத்து, உயிருடன் கூடிய, முற்றிலும் கரிய சாஹஸ்யத்தின் {ஆட்டின்} கழுத்தைப் பிடித்தான்[1] {அறுத்தான்}.(8) ஹோமத்தில் சமித்தைக் கொடுத்து {வேள்வித்தீயில் விறகாக ஆட்டைக் கொடுத்து} நற்செயல் செய்ததும், தூமமில்லாமல் {புகையின்றி} பெருந்தழல் எழுந்து, விஜயத்திற்கான ஏராளமான லிங்கங்கள் {வெற்றிக்கான பல அறிகுறிகள்} தோன்றின.(9) பிரதக்ஷிணமாக {வலமாகச்} சுழன்ற சிகையுடன் {நுனியுடன்}, தப்தஹாடகத்தை {புடம்போட்ட பொன்னைப்} போல ஒளிர்ந்தபடியே ஸ்வயமாக உதித்த பாவகன் அந்த ஹவியை {நேரடியாக எழுந்த அக்னி தேவன் அந்தக் காணிக்கையை} ஏற்றுக் கொண்டான்.(10)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திரஜித் உயிருள்ள ஆட்டை நெருப்பில் காணிக்கையாக கொடுத்தான் என்று தெரிகிறது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "உயிரோடிருக்கும் கருநிறங்கொண்ட ஓர் ஆட்டினது கழுத்தை அறுத்து எடுத்துக் கொண்டான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உயிருடன் கூடின கறுத்த மேஷத்தின் (ஆட்டின்) கழுத்தைச் சேதித்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கருநிறங்கொண்ட உயிரோடு கூடிய ஓர் ஆட்டின் கழுத்தைப் பற்றினான். (கழுத்தை வெட்டி ஆகுதி செய்தார்கள்)" என்றிருக்கிறது.
அக்னியில் ஆகுதியை {காணிக்கையை} இட்ட பிறகு தேவ, தானவ, ராக்ஷசர்களை நிறைவுகொள்ளச் செய்தவன், அந்தர்தான கதமடையும் சுபமான, சிரேஷ்டமான ரதத்தில் ஏறினான் {புலப்படாமல் மறையும் தன்மை கொண்டதும், அழகானதும், சிறப்பானதுமான தேரில் ஏறினான்}.(11) நான்கு வாஜிகள் {குதிரைகள்} பூட்டப்பட்டும், கூரிய பாணங்களுடனும், மஹா சாபத்துடனும் {பெரும் வில்லுடனும்} அந்த உத்தம சியந்தனம் {உயர்ந்த தேர்} ஒளிர்ந்தது.(12) புடம்போட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ரதம், சந்திர, அர்த்தச்சந்திர பிம்பங்களும், மான்களின் பிம்பங்களும் பதிக்கப்பெற்று ஜுவலித்துக் கொண்டிருந்தது.(13) இந்திரஜித்தின் கேது {கொடி}, ஜாம்பூநதத்திலான பெரும் வளையங்களுடன் கூடியதாகவும், வைடூரியத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் சுடர்மிக்க பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(14) மஹாபலவானான அந்த ராவணி {இந்திரஜித்}, ஆதித்யனுக்கு ஒப்பான அதனாலும் {அந்த ரதத்தினாலும்}, பிரம்மாஸ்திரத்தினாலும் பாலிதம் செய்யப்பட்டு {பாதுகாக்கப்பட்டு} வெல்வதற்கரியவனானான்.(15)
ஸமிதிஜ்ஞயனான {எப்போதும் வெற்றி பெறுபவனான} அந்த இந்திரஜித், {லங்கா} நகரத்தில் இருந்து புறப்பட்டு, ராக்ஷசர்களுக்கான மந்திரங்களுடன் அக்னியில் ஹோமஞ்செய்து, அந்தர்தானகதம் அடைந்து {புலப்படாமல் மறைந்து பின்வருமாறு} கூறினான்:(16) "எவர்கள் மித்யாப்ரவ்ரஜிதர்களாக {பொய்யாக நாடுகடத்தப்பட்டு [போலிமுனிகளாக]} வனத்தில் இருக்கிறார்களோ[2], அவ்விருவரையும் ரணத்தில் கொன்று, பிதா ராவணருக்கு போர்முனையில் இதோ ஜயத்தை {வெற்றியைக்} கொடுக்கப் போகிறேன்.(17) உர்வீயை {பூமியை} வானரர்களற்றதாகச் செய்தும், இராமனையும், லக்ஷ்மணனையும் கொன்றும் இதோ பரம பிரீதியை அடையப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு புலப்படாமல் மறைந்தவனாகவே இருந்தான்.(18) தசக்ரீவனால் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனால்} தூண்டப்பட்டு, சீற்றமடைந்த இந்திரரிபு {இந்திரனின் பகைவனான இந்திரஜித்}, கூரிய நாராசங்களுடனும், கார்முகத்துடனும் {வில்லுடனும்} பெருங்குரோதத்துடன் வேகமாக போர்க்களத்தை அடைந்தான்.(19)
[2] விவேக் தேவ்ராய் பதிப்பில், "உண்மையான துறவிக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தும் தேவையில்லை என்ற பொருளில் இது சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
வானரர்களின் மத்தியில் இருந்து கணைஜாலங்களை ஏவிக் கொண்டிருக்கும் மூன்று தலைகளைக் கொண்ட நாகங்களைப் போன்ற அந்த மஹாவீரியர்கள் இருவரையும் அவன் கண்டான்.(20) "இவர்களே அவ்விருவர்" என்று சிந்தித்தவன் {சிந்தித்த இந்திரஜித்}[3], கார்முகத்தில் நாணேற்றி, விருஷ்டிமானான பர்ஜன்யனை {மழை பொழியும் மேகத்தைப்} போல கணைத்தாரைகளால் இடையறாமல் அவர்களை மறைத்தான்.(21)
[3] ஏதோ முதல்முறையாக இந்திரஜித் ராமலக்ஷ்மணர்களைப் பார்ப்பதைப் போன்ற தொனியை இந்த வாக்கியம் தருகிறது.
அவன், ரதத்துடன் வைஹாயஸத்தை {வானத்தை} அடைந்து, கண்களுக்குப் புலப்படாதவனாக நின்று, கூரிய சரங்களால் ராமலக்ஷ்மணர்களைத் தாக்கினான்.(22) அவனது சர வேகத்தால் சூழப்பட்ட ராமலக்ஷ்மணர்கள் இருவரும், தங்கள் தனுசுகளில் சரங்களைப் பொருத்தி, திவ்ய அஸ்திரங்களை ஏவினர்.(23) அந்த மஹாபலவான்கள் இருவரும் சரஜாலங்களால் ககனத்தை {வானத்தை} மறைத்தாலும், சூரியனுக்கு ஒப்பான தங்கள் சரங்களாலும், அஸ்திரங்களாலும் அவனைத் தீண்ட முடியவில்லை.(24) தூமாந்தகாரத்தை உண்டாக்கி நபத்தை {புகை போன்ற இருளை உண்டாக்கி வானத்தை} மறைத்த அந்த ஸ்ரீமான் {இந்திரஜித்}, மூடுபனியைப் போன்ற இருளைச் சூழச் செய்து திசைகளையும் மறைத்தான்.(25) அவ்வாறு அவன் திரிந்து கொண்டிருந்தபோது, நாணில் உள்ளங்கை உரசும் ஒலியோ, {ரதத்தின்} சக்கரங்கள், {குதிரைகளின்} குளம்படிகள் ஆகியவற்றின் ஒலியோ கேட்கப்படவில்லை. அவனது ரூபமும் புலப்படவில்லை.(26) அந்த கனமான அந்தகாரத்தில் {அடர்த்தியான இருளில்} அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட இந்திரஜித்}, அற்புத சிலாவர்ஷத்தைப் போல நாராச சர விருஷ்டிகளை வர்ஷித்தான் {பாறைகளின் மழையைப் போல இரும்புக் கணைகளின் மழையை அற்புதமாகப் பொழிந்தான்}.(27)
குரோதத்துடன் கூடிய அந்த ராவணி {இந்திரஜித்}, சூரியனுக்கு ஒப்பானவையும், வரமாக தத்தம் செய்யப்பட்டவையுமான சரங்களால் ராமனின் சர்வ காத்திரங்களையும் {உடல் உறுப்புகளையும்} கடுமையாகத் துளைத்தான்.(28) தாரைகளால் தாக்கப்படும் பர்வதங்கள் இரண்டைப் போல நாராசங்களால் தாக்கப்பட்ட நரவியாகரர்களான {மனிதர்களில் புலிகளான} அவ்விருவரும், ஹேமபுங்கங்களுடன் {பொற்பிடிகளுடன்} கூடிய கூரிய சரங்களை ஏவினர்.(29) கங்க பத்ரங்களுடன் கூடிய அந்த பதகங்கள் {கழுகின் இறகுகளுடன் கூடிய அந்தக் கணைகள்} ராவணியை அடைந்து அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} அவனைத் துளைத்து, சோணிதத்தில் {குருதியில்} நனைந்தவையாக பூமியில் விழுந்தன.(30) அளவில்லாமல் ஒளிரும் சர ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} தாக்கப்பட்ட அந்த நரோத்தமர்கள் {உயர்ந்த மனிதர்கள்} இருவரும், தங்கள் மீது பாயும் கணைகளை அனேக பல்லங்களால் வெட்டினர்.(31) அவர்கள், எங்கிருந்து கூரிய சரங்கள் பாய்வதைக் கண்டனரோ அங்கே அந்த தாசரதிகள் {தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் தங்கள் உத்தம அஸ்திரங்களை ஏவினர்.(32) அதிரதனும், அஸ்திரங்களை லகுவாக ஏவுகிறவனுமான ராவணியும், சர்வ திசைகளிலும் விரைந்து சென்று, கூரிய சரங்களால் தாசரதிகள் இருவரையும் துளைத்தான்.(33) வீரர்களான அந்த தாசரதிகள் இருவரும், ருக்ம புங்கங்களுடன் {பொற்பிடிகளுடன்} நன்றாகச் செய்யப்பட்ட சரங்களால் ஆழமாகத் துளைக்கபட்டு, புஷ்பித்த கிம்சுகங்களை {பூத்த பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(34) வானில் தவழும் சூரியனின் நிலையைப் போலவே அவனது வேககதியை யாராலும் பார்க்க முடியவில்லை. அவனது ரூபமோ, தனுசோ, சரங்களோ, வேறு எதுவும் புலப்படவில்லை.(35) அவனால் தாக்கப்பட்ட ஹரயர்கள் {குரங்குகள்} நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு, அங்கே தரணீதலத்தில் இறந்து விழுந்தனர்.(36)
சுபலக்ஷணங்களுடன் கூடிய லக்ஷ்மணன், அப்போது பெருங்குரோதமடைந்து, தன் பிராதாவிடம் {தன்னுடன் பிறந்தவனான ராமனிடம், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "சர்வ ராக்ஷசர்களையும் கொல்வதற்காக பிரம்மாஸ்திரத்தை நான் பிரயோகிக்கப் போகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(37)
அப்போது ராமன், சுபலக்ஷணங்களுடன் கூடிய அந்த லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான், "ஏகனுக்காக {தனி ஒருவனான இந்திரஜித்துக்கு பதில்} பிருத்வியிலுள்ள ராக்ஷசர்களைக் கொல்வது உனக்குத் தகாது.(38) யுத்தம் செய்யாதவர்களையும், ஒளிந்து கொண்டிருப்பவர்களையும், கூப்பிய கைகளுடன் கூடியவர்களையும், ஓடிப் போகிறவர்களையும், கவனமில்லாதவர்களையும் இங்கே கொல்வது உனக்குத் தகாது.(39) மஹாபுஜங்களைக் கொண்டவனே {பெருந்தோள்கள் உடையவனே}, விஷம் மிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையும், மஹாவேகத்துடன் கூடியவையுமான அஸ்திரங்களை ஏவி அவனை மட்டுமே வதைக்க யத்னம் செய்வோம் {இந்திரஜித்தை மட்டுமே கொல்ல முயற்சிப்போம்}.(40) பலவான்களான வானரயூதபர்கள், அந்தர்ஹித ரதத்தில் {புலப்படாத ரதத்தில் மறைந்திருந்து} மாயைகள் புரியும் இழிந்தவனான இந்த ராக்ஷசனை இந்திரஜித்தைக்} கண்டதும் கொல்வார்கள்.(41) பூமிக்குள்ளோ, வானத்திற்குள்ளோ புகுந்தாலும், ரஸாதலத்திலோ {கடலின் அடிப்பகுதியிலோ}, நபஸ்தலத்திலோ {வானத்தின் மேல்பகுதியிலோ} இவ்வாறே இவன் மறைந்திருந்தாலும், என் அஸ்திரங்களால் எரிக்கப்பட்டு இறந்தவனாக பூமிதலத்தில் விழுவான்" {என்றான் ராமன்}[4].(42)
[4] கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்அண்ணல் மற்றவன் ஆக்கை கடறிகிலன் ஆகிபண்ணவற்கு இவன் பிழைக்கு மேல் படுக்கும் நம் படையைஎண்ணம்மற்ற இலை அயன் படை தொடுப்பேன் என்று ஆழிபண்ணவற்கு இசைத்தான்.(8520)ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இவ்வுலகம்மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகிலது என்றான்சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடைத் தம்பி.(8521)- கம்பராமாயணம் 8520, 8521 பாடல்கள், யுத்த காண்டம்,பொருள்: கண் இமைக்கும் நேரத்திற்குள் போய் ஆகாயத்தில் மறைந்து கொண்டான் {இந்திரஜித்}. அண்ணல் {லக்ஷ்மணன்}, மற்றவன் {இந்திரஜித்தின்} உடம்பைக் கண்டறிய இயலாமல், "இவன் இவ்விடத்தை விட்டு தப்பிப் பிழைத்தால், நம் படையை அழிப்பான். {இனி} சிந்தித்து செய்யத்தக்க வேறு செயல் இல்லை. பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்கப் போகிறேன்" என்று திருமாலின் அம்சமானவனிடம் {ராமனிடம் லக்ஷ்மணன்} சொன்னான்.(8520) அவ்வாறு அவன் கூறியதும், "தர்மத்திலிருந்து வழுவாதவனே, உலகைப் படைத்த பிரம்மனின் அஸ்திரத்தை நீ தொடுத்தால், அஃது ஒருவனை மட்டுமல்லாமல், இவ்வுலகங்கள் மூன்றையும் சுட்டெரிக்கும்" {என்றான். எனவே, நல்ல} சான்றாக நிற்பவனின் உணர்வுடைய தம்பி அதைத் தவிர்த்தான் {சாட்சியாக நிற்கும் இறைவன் ராமனின் தம்பியான லக்ஷ்மணன், பிரம்மாஸ்திரத்தை ஏவாமல் தவிர்த்தான்}.(8521)
மஹாத்மாவான ரகுபிரவீரன், இவ்வாறான மஹா அர்த்தம் பொருந்திய வசனத்தைக் கூறிவிட்டு, பிலவகரிஷபர்களால் சூழப்பட்டவனாக இருந்தபோது, கொடூர கர்மங்களைச் செய்யும் ரௌத்திரனை துரிதமாக வதைப்பது குறித்து ஆலோசித்தான்.(43)
யுத்த காண்டம் சர்க்கம் – 080ல் உள்ள சுலோகங்கள்: 43
Previous | | Sanskrit | | English | | Next |