Vibheeshana's coronation yet again | Yuddha-Kanda-Sarga-112 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தேவலோகம் திரும்பிய மாதலி; இலங்கையின் மன்னனாக நிறுவப்பட்ட விபீஷணன்; ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி அனுப்பிய ராமன்...
அதே வேளையில் ராவண வதத்தைக் கண்ட அந்த தேவ, கந்தர்வ, தானவர்கள், சுப கதைகளைக் கதைத்துக் கொண்டே {மங்கல பேச்சுக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டே} தங்கள் தங்கள் விமானங்களில் சென்றனர்.(1) இராவணனின் வதத்தையும், ராகவனின் பராக்கிரமத்தையும், வானரர்களின் நல்ல யுத்தத்தையும், சுக்ரீவனின் மந்திரத்தையும் {ஆலோசனைகளையும்},{2} சௌமித்ரியான லக்ஷ்மணனின் பற்றையும், வீரியத்தையும், சீதையின் பதிவிரதாத்வத்தையும் {பதிவிரதா தன்மையையும்}, ஹனூமதனின் பராக்கிரமத்தையும்{3} மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும் பேசிக் கொண்டே வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்றனர்.(2-4அ)
மஹாபாஹுவான ராகவனும், அக்னிசிகையின் பிரபையைக் கொண்டதும், இந்திரனால் தத்தம் செய்யப்பட்டதுமான திவ்ய ரதத்தை {திரும்பிக் கொண்டு செல்ல} அனுமதித்து, மாதலியை மீண்டும் பூஜித்தான்.(4ஆ,5அ) சக்ரசாரதியான மாதலி, ராமனால் அனுமதிக்கப்பட்டு திவ்யமான அந்த ரதத்தில் ஏறி திவத்திற்கு {சொர்க்கத்திற்கு} எழுந்தான்.(5ஆ,6அ)
அவன் ரதத்துடன் திவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றதும், ரதிகர்களில் {தேர்வீரர்களில்} சிறந்தவனான ராகவன், பரமபிரீதியுடன் சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான்.(6ஆ,7அ)
சுக்ரீவனைத் தழுவிக் கொண்டு, லக்ஷ்மணனால் வரவேற்கப்பட்டு, ஹரிகணங்களால் {குரங்குக் கூட்டங்களால்} பூஜிக்கப்பட்டு பலாலயத்திற்கு {படைவீட்டிற்கு ராமன்} சென்றான்.(7ஆ,8அ) பிறகு அந்த காகுத்ஸ்தன் {ராமன்}, சமீபத்தில் இருந்தவனும், சுபலக்ஷணங்களைக் கொண்டவனும், சத்வசம்பன்னனும் {வலிமை நிறைந்தவனும்} சௌமித்ரியுமான லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(8ஆ,9அ) "சௌமியா, அன்பனும், பக்தனும், அதே போல பூர்வ உபகாரியுமான {முன்பு உதவி செய்தவனுமான} இந்த விபீஷணனை லங்கையில் அபிஷேகிப்பாயாக.(9ஆ,10அ) சௌமியா, இது என் பரம காமமாகும் {என் பெரும் விருப்பமாகும்}. அதாவது, ராவணானுஜனான இந்த விபீஷணன் லங்கையில் அபிஷேகிக்கப்படுவதைக் காண வேண்டும்" {என்றான் ராமன்}.(10ஆ,11அ)
மஹாத்மாவான ராகவன் இவ்வாறு கூறியதும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன சௌமித்ரி, பெரும் மகிழ்ச்சியுடன் சௌவர்ண கடத்தை {பொன்குடத்தை} எடுத்தான்.(11ஆ,12அ) அந்த மஹாசத்வன் {பெரும் வலிமைமிக்க லக்ஷ்மணன்}, அந்த கடத்தை வானரேந்திரர்களின் கைகளில் கொடுத்து, சமுத்திர நீரை மனோவேகத்தில் கொண்டுவருமாறு உத்தரவிட்டான்.(12ஆ,13அ) பிறகு மனோவேகம் கொண்டவர்களான அந்த வானரோத்தமர்கள், அதிசீக்கிரமாகச் சென்று சமுத்திர ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்தனர்.(13ஆ,14அ)
அதில் ஒரு கடத்தை {குடத்தை} எடுத்துக் கொண்டு, பரமாசனத்தில் {உயர்ந்த இருக்கையில்} அவனை அமரச்செய்த{14ஆ} சௌமித்ரி, அந்த கடத்திலிருந்து விபீஷணன் மீது நீரைத் தெளித்துப் புனிதப்படுத்தினான். இராம சாசனத்தின் பேரில் ராஜனாக, லங்கையின் ராக்ஷசர்கள் மத்தியில்,{15} ஏராளமான நண்பர்கள் சூழ, விதிப்படியான மந்திர திருஷ்டத்துடன் {புனித மந்திரங்கள் சொல்லப்பட்டு விபீஷணன் அபிஷேகிக்கப்பட்டான்}[1].(14ஆ-16அ) அப்போது சர்வராக்ஷசர்களும், அதேபோல வானரர்களும் நீர் தெளித்துப் புனிதப்படுத்தி, ஒப்பற்ற மகிழ்ச்சியுடன் சென்று ராமனையே துதித்துக் கொண்டிருந்தனர்.(16ஆ,17அ) இராக்ஷசேந்திரன் விபீஷணன், லங்கையில் அபிஷேகிக்கப்பட்டதைக் கண்டு அவனது அமைச்சர்களும், அவனிடம் பக்தி கொண்ட அந்த ராக்ஷசர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்[2].(17ஆ,18அ)
[1] யுத்த காண்டம் 19ம் சர்க்கத்தில் ராமனிடம் அடைக்கலமடைந்த அன்றே விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இது ரெண்டாம் முறையாக நடத்தப்படுகிறது. வெற்றிக்கு முன்னும், பின்னும் ஒவ்வொன்றும் நடக்கிறது.
[2] மெய்கொள் வேத விதி முறை விண்ணுளோர்தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திடஐயன் ஆணையினால் இளங்கோரிகையினால் மகுடன் கவித்தான் அரோ- கம்பராமாயணம் 9957ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: சத்தியத்தைத் தன்னகத்தே கொண்ட வேதத்தில் கூறிய விதிமுறைகளின்படி விண்ணில் உள்ளோர் {தேவர்கள்} புனித நீரைக் கொண்டு நீராடலைச் செவ்வையாகச் செய்ய, ஐயன் {ராமன்} ஆணையினால் இளைய சிங்கம் {லக்ஷ்மணன்}, தன் கையினால் {விபீஷணனுக்கு} மகுடத்தைச் சூட்டினான்.
இலக்ஷ்மணன் சகிதனான ராமனும், ராமனால் தத்தம் செய்யப்பட்ட அந்த மஹத்தான ராஜ்ஜியத்தை அடைந்த அந்த விபீஷணனும் பரம பிரீதியை அடைந்தனர்.(18ஆ,19அ) பிரகிருதிகளை {சாதாரணக் குடிமக்களை} சாந்தப்படுத்திவிட்டு அவன் {விபீஷணனை} ராமனை அடைந்த பிறகு,{19ஆ} புரத்தில் இருந்த நிசாசரர்கள் மகிழ்ச்சியடைந்து தயிர், அக்ஷதை {மஞ்சள் கலந்த அரிசி}, மோதகங்கள், பொரி ஆகியவற்றையும், மலர்களையும் அவனிடம் கொண்டு வந்தனர்.(19ஆ,20அ,ஆ) வீரியவானும், வெல்வதற்கரியவனுமான அவன் {விபீஷணன்}, அவற்றை ஏற்றுக் கொண்டு, சர்வ மாங்கல்யங்களையும் {தான் பெற்ற மங்கலப் பொருட்கள் அனைத்தையும்} ராகவனிடமும், லக்ஷ்மணனிடமும் மங்கலமாகக் கொடுத்தான்.(21,22அ) காரியம் நிறைவேறிய ராமன், வளங்களைப் பெருக்கிக் கொண்ட விபீஷணனைக் கண்டு, அவனது பிரியத்திற்காகவும், விருப்பத்திற்காகவும் அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.(22ஆ,23அ)
அப்போது, கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் நின்றவனும், சைலத்திற்கு ஒப்பானவனும், வீர பிலவங்கமனுமான ஹனூமந்தனிடம் ராமன் இந்தச் சொற்களைச் சொன்னான்:(23ஆ,24அ) "சௌமியா, மஹாராஜனான இந்த விபீஷணனிடம் அனுமதிபெற்றுக் கொண்டு, லங்காம் நகரீக்குள் பிரவேசித்து, மைதிலியிடம் கௌசலத்தை {நம் நலத்தை} அறிவிப்பாயாக.(24ஆ,25அ) சொல்திறமிக்கவர்களில் சிறந்தவனே, நானும், லக்ஷ்மணனும், சுக்ரீவனும் குசலமாக {நலமாக} இருப்பதையும், ராவணன் ரணத்தில் கொல்லப்பட்டதையும் வைதேகியிடம் சொல்வாயாக.(25ஆ,26அ) ஹரீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, நீ வைதேகியிடம் பிரியத்திற்குரிய இவற்றை அறிவித்துவிட்டு, அவளிடம் செய்தியைப் பெற்றுக் கொண்டு திரும்பி வருவாயாக" {என்றான் ராமன்}.(26ஆ,27)
யுத்த காண்டம் சர்க்கம் – 112ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |