Fierce Battle | Yuddha-Kanda-Sarga-088 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்துக்கும் லக்ஷ்மணனுக்கும் இடையில் நடந்த கடும் விற்போர்; கவசங்கள் நொறுங்கின; இலக்ஷ்மணனின் களைப்பு...
விபீஷணனின் சொற்களைக் கேட்ட ராவணி {இந்திரஜித்}, குரோதத்தில் மூர்ச்சித்துக் கடும் வாக்கியங்களைக் கூறிவிட்டு, வேகமாகத் துள்ளி எழுந்தான்.(1), நன்கு அலங்கரிக்கப்பட்டதும், கரிய அஷ்வங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த வாளையும், ஆயுதங்களையும் கொண்டதுமான மஹத்தான ரதத்தில் காலாந்தகனுக்கு {பிரளய கால யமனுக்கு} ஒப்பானவனாக அமர்ந்திருந்தவன் {இந்திரஜித்},{2} பயங்கரமானதும், மஹாபிரமாணத்தைக் கொண்டதும் {பேரளவிலானதும்}, நீண்டதும், வேகமானதுமான தனுவை உயர்த்தி, அமித்ரர்களைக் கொல்லும் சரங்களை எடுத்தான்.(2,3) பலவானும், மஹேஷ்வாஸனும் {பெரும் வில்லைத் தரித்தவனும்}, நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அமர்ந்திருந்தவனுமான அந்த அமித்ரக்னன் {பகைவரை அழிப்பவனான இந்திரஜித்}, நன்கு அலங்கரிக்கப்பட்ட ராகவனின் அனுஜனை {ராமனின் தம்பியான லக்ஷ்மணனைக்} கண்டான்.(4)
உதய ரவியின் பிரபையுடன் {உதய மலையில் உதிக்கும் சூரியனின் ஒளியுடன்} ஹனுமதனின் பிருஷ்டத்தில் {பின்} ஏறியிருந்த அந்த சௌமித்ரியிடமும்[1], விபீஷணனிடமும், அந்த வானரசார்தூலனிடமும் {ஹனுமானிடமும்} கோபத்துடன் {பின்வருமாறு} பேசினான், "என் பராக்கிரமத்தைப் பார்ப்பீராக.(5,6அ) ஆகாசத்தில் இருந்து பொழியும் மழையைப் போல, என் கார்முகத்திலிருந்து விடுவிக்கப்படுவதும், வெல்வதற்கரியதுமான சரவர்ஷத்தை {கணைமழையை} இதோ போர்க்களத்தில் தாங்குவீராக.(6ஆ,7அ) இதோ மஹாகார்முகத்திலிருந்து விடுவிக்கப்படும் என் பாணங்கள், பஞ்சுக் குவியலை எரிக்கும் அனலனை {அக்னியைப்} போல உங்கள் காத்திரங்களை {உடல் உறுப்புகளைப்} பிளக்கப் போகின்றன.(7ஆ,8அ) என் கூரிய சாயகங்களாலும் {கணைகளாலும்}, சூலங்கள், சக்திகள், ரிஷ்டிகள், தோமரங்கள் ஆகியவற்றாலும் பிளக்கப்படப்போகும் உங்கள் அனைவரையும், இதோ யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} அனுப்பப் போகிறேன்.(8ஆ,9அ) போரில் கைவேகத்துடன் சரவர்ஷங்களை ஏவும்போதும் {கணை மழையைப் பொழியும் போதும்}, மேகம் போல நாதம் செய்யும்போதும் என் முன் எவனால் நிற்க முடியும்?(9ஆ,10அ) இதற்கு முந்தைய ராத்திரி யுத்தத்தில் நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் வஜ்ரத்திற்கும், அசனிக்கும் {இடிக்கும்} சமமான என் சரங்களால் நனவிழந்தவர்களாகப் பூமியில் சாய்க்கப்பட்டீர்கள்.(10ஆ,11அ) ஸ்மிருதி {நினைவு} உங்களுக்கு அழிந்துவிட்டதா? {உங்களுக்கு ஞாபகம் இல்லையா?} விஷமிக்க பாம்புக்குச் சமமான கோபத்துடன் கூடிய என்னுடன் யுத்தம்புரிய வந்திருக்கிறீர்கள் என்பதால் யமக்ஷயத்திற்குப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது" {என்றான் இந்திரஜித்}.(11ஆ,12அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ரதத்தின் மேலேறி நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கும் மஹாபலனும் மேலான வில்லாளியுமாகிய அவ்விந்த்ரஜித்து, தனது தேஜஸ்ஸினாலேயே அலங்கரிக்கப்பட்டவனாகிப் பகைவரை உருமாய்க்க முயன்று பொன்வர்ணம் அமைந்த[*] ஹனுமானுடைய தோள் மேல் உட்கார்ந்து உதய பர்வதத்தின் மேலிருக்கும் ஸூர்யன்போல் ஜ்வலிக்கின்ற ராமானுஜனை (ராமன் தம்பியான லக்ஷ்மணனை) க்கண்டனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இதனால் ஹனுமான் முன்பு ராக்ஷஸர்களோடு யுத்தஞ்செய்து இந்த்ரஜித்து வந்தவுடனே லக்ஷ்மணனைத் தோளில் ஏற்றுக் கொண்டானென்று தெரிகிறது" என்றிருக்கிறது.
அப்போது, ராக்ஷசேந்திரனின் {இந்திரஜித்தின்} கர்ஜனையைக் கேட்டுக் குரோதமடைந்த ராகவன் {ரகு குல லக்ஷ்மணன்}, அபீவதனத்துடன் {கலங்காத முகத்துடன் இந்த} வாக்கியத்தைக் கூறினான்:(12ஆ,13அ) "இராக்ஷசா, {யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவதும், இன்னும் பிறவும்} அடைதற்கரியனவாக இருப்பினும், காரியங்களின் பாரத்தை {முடிவை} நீ சொன்னாய். காரியங்களுக்குரிய கர்மங்களின் பாரத்தை {செயல்களின் முடிவை} எவன் எட்டுவானோ, அவனே புத்திமான் {அறிவாளி}.(13ஆ,14அ) துர்மதியைக் கொண்டவனே, ஹீனார்த்தனான {காரியத்தைக் கெடுத்துக் கொண்டவனான} இத்தகைய நீ, எவராலும் அடைதற்கரிய அர்த்தத்தை {காரியத்தை} சொற்களில் அறிவிப்பதால் மட்டுமே, உன்னை கிருதார்த்தன் {அர்த்தம் / காரியம் நிறைவேறியவன்} என்று நினைத்துக் கொள்கிறாய்.(14ஆ,15அ) அன்றைய யுத்தத்தில் அந்தர்தானகதியில் {கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து} எதைப் பின்பற்றினாயோ, அந்த மார்க்கத்தை வீரர்கள் சேவிக்கமாட்டார்கள்; திருடர்களே அதைப் பின்பற்றுவார்கள்.(15ஆ,16அ) இராக்ஷசா, உன் பாண பாதையை அடைந்து எப்படி நான் நிற்கிறேனோ, அப்படியே இப்போது உன் தேஜஸ்ஸைக் காட்டுவாயாக. சொற்களால் ஏன் நீ பெருமை பேசுகிறாய்?" {என்றான் லக்ஷ்மணன்}.(16ஆ,17அ)
இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாபலவானும், ஸமிதிஞ்ஜயனுமான {போரில் வெல்பவனுமான} இந்திரஜித், தன் பயங்கர தனுவை எடுத்து, கூர்மையான சரங்களை எய்தான்.(17ஆ,18அ) அவனால் ஏவப்பட்டவையும், மஹாவேகம் கொண்டவையும், விஷமிக்க சர்ப்பங்களுக்கு ஒப்பானவையுமான சரங்கள், பெருமூச்சு விடும் பன்னகங்களைப் போல் லக்ஷ்மணனை அடைந்து விழுந்தன.(18ஆ,19அ) வேகவானும், ராவணாத்மஜனுமான இந்திரஜித், யுத்தத்தில் அதி மஹா வேகம் கொண்ட சரங்களை ஏவி, சுபலக்ஷணங்கொண்ட சௌமித்ரியைத் தாக்கினான்.(19ஆ,20அ) ஸ்ரீமானான அந்த லக்ஷ்மணன், சரங்களால் அங்கங்களில் கடுமையாகக் காயமடைந்து உதிரத்தில் நனைந்து, தூமமற்ற பாவகனை {புகையற்ற நெருப்பைப்} போல ஒளிர்ந்தான்.(20ஆ,21அ).
தன் கர்மங்களை நினைத்துப் பார்த்த இந்திரஜித், அவனை {லக்ஷ்மணனை} அணுகி, மஹாநாதம் செய்து, உரத்த குரலில் இந்த வசனத்தைச் சொன்னான்:(21ஆ,22அ) கூர்முனை கொண்டவையும், ஜீவிதத்தை முடிக்கவல்லவையும், சிறகுகளுடன் கூடியவையும், என் கார்முகத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான சரங்கள், சௌமித்ரே {சுமித்ரையின் மகனே}, உன் ஜீவிதத்தை எடுக்கப் போகின்றன.(22ஆ,23அ) இலக்ஷ்மணா, என்னால் தாக்கப்பட்டு இறக்கப்போகும் உன் மீது நரிக்கூட்டமும், பருந்துக்கூட்டமும், கழுகுகளும் இறங்கப் போகின்றன.(23ஆ,24அ) பரம துர்மதியைக் கொண்ட ராமன், பெயரளவுக்கே க்ஷத்ரியனும், சதா அநாரியனும், பக்தி கொண்ட பிராதாவுமான நீ, இதோ என்னால் கொல்லப்படுவதைக் காண்பான்.(24ஆ,25அ) சௌமித்ரே, இதோ என்னால் தாக்கப்பட்டு, கவசம் நொறுங்கி விழுந்து, சராசனம் {வில்லானது} பூமியில் வீசப்பட்டு, உன் தலையை இழக்கப் போகிறாய்" {என்றான் இந்திரஜித்}.(25ஆ,26அ)
அர்த்தத்தை அறிந்தவனான லக்ஷ்மணன், குரோதத்துடன் இவ்வாறு கடுமையாகப் பேசிய ராவணாத்மஜனிடம், {பின்வரும்} ஹேதுவான வாக்கியத்தால் பதிலளித்தான்.(26ஆ,27அ) "துர்ப்புத்தியைக் கொண்டவனே, வாக்கு பலத்தைக் கைவிடுவாயாக. இராக்ஷசா, நீ குரூர கர்மங்களைச் செய்பவனாக இருந்து கொண்டு ஏன் இவ்வாறு வாதம் செய்கிறாய். நற்கர்மத்தை நிறைவேற்றுவாயாக.(27ஆ,28அ) இராக்ஷசா, கர்மத்தை நிறைவேற்றாமல் இங்கே ஏன் தற்புகழ்ச்சி செய்கிறாய்? உன் தற்பெருமையை நான் எதைக் கொண்டு நம்புவேனோ, அந்தக் கர்மத்தைச் செய்வாயாக.(28ஆ,29அ) புருஷாதமா {புருஷர்களில் இழிந்தவனே}, கொஞ்சமும் கடும் வாக்கியம் பேசாமல், உன்னைப் பழிக்காமல், தற்பெருமை பேசாமல் உன்னை நான் கொல்லப்போவதைப் பார்" {என்றான் லக்ஷ்மணன்}.(29ஆ,30அ)
இவ்வாறு கூறிய லக்ஷ்மணன், ஐந்து நாராசங்களைக் காது வரை இழுத்து ஏவி, அந்த ராக்ஷசனின் மார்பில் மஹாவேகத்துடன் அடித்தான்.(30ஆ,31அ) நல்ல இறகுகளுடன் கூடியவையும், பன்னகங்களைப் போல ஜுவலிப்பவையுமான பாணங்கள், நைர்ருதனின் மார்பில் சவிதனின் கதிர்களை {ராக்ஷசன் இந்திரஜித்தின் மார்பில் சூரியக் கதிர்களைப்} போலப் பிரகாசித்தன.(31ஆ,32அ) அவனது சரங்களால் தாக்கப்பட்டு ரோஷமடைந்த அந்த ராவணாத்மஜன் {ராவணனின் மகன் இந்திரஜித்}, நன்கு செலுத்தப்பட்ட மூன்று பாணங்களால் பதிலுக்கு லக்ஷ்மணனை தாக்கினான்.(32ஆ,33அ) யுத்தத்தில் பரஸ்பரம் ஜயங்கொள்ள விரும்பிய அந்த நர, ராக்ஷச சிம்மங்களுக்கிடையிலான மஹாபயங்கரமான போர் மிகக் குழப்பமான நிலையை அடைந்தது.(33ஆ,34அ) இருவரும் பலம் நிறைந்தவர்களாகவும், இருவரும் விக்ரமசாலிகளாகவும், இருவரும் பரம துர்ஜயர்களாகவும், ஒப்பற்ற பலமும், தேஜஸ்ஸும் கொண்டவர்களாக இருந்தனர்.(34ஆ,35அ) அந்த வீரர்கள் இருவரும், வானத்தில் இருக்கும் இரண்டு கிரஹங்களைப் போலவும் போரிட்டனர். யுத்தத்தில் வெல்வதற்கரியவர்களான பலனையும், விருத்திரனையும் போலவும் அவர்கள் போரிட்டனர்.(35ஆ,36அ) பிறகு, மஹாத்மாக்கள் இருவரும் கேசரிகளை {சிங்கங்களைப்} போல யுத்தம் செய்தனர்.{36ஆ} அந்த நர ராக்ஷசர் முக்கியர்கள் இருவரும், பல பாணங்களை ஏவியபடியே மகிழ்ச்சியுடன் போரிட்டனர்[2].(36ஆ,37)
[2] தேசிராஜுஹனுமந்தராவ் - கேஎம்கே மூர்த்தி பதிப்பில், இதற்குப் பிறகு 79ம் சுலோகம் வரை இந்த சர்க்கம் நீள்கிறது. இதில் யுத்தகாண்டம் மொத்தம் 128 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இந்த 37ம் சுலோகத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. அதேபோல, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகிய பதிப்புகளிலும், தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும், இத்துடன் இந்த 88ம் சர்க்கம் நிறைவடைகிறது. இந்தப் பதிப்புகளில் யுத்தகாண்டம் மொத்தம் 131 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. மற்றபடி உள்ளடக்கத்தில் இவற்றுக்குள் வேறுபாடுகள் பெரிதும் இல்லை. சர்க்கங்களின் எண்ணிக்கை மட்டுமே கூடுகிறது. எனவே, இந்த சர்க்கத்தின் 38 முதல் 79ம் சுலோகம் வரையுள்ள 42 சலோகங்களும் பிற பதிப்புகளில் 89ம் சர்க்கமாக வரும். யுத்தகாண்டத்தில் மொத்தம் 116 சர்க்கங்களையே கொண்ட செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பிலும் இந்த சர்க்கம் 75, 76 என இரண்டு சர்க்கங்களாகவே இருக்கிறது. இருப்பினும், இந்த 79 சுலோகங்களும் இலக்ஷ்மணன், இந்திரஜித் போரையே மையமாகக் கொண்டிருப்பதால் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பே இங்கே பின்பற்றப்பட்டிருக்கிறது.
அப்போது, அமித்ரகர்ஷணனான தாசரதி {பகைவரை அழிப்பவனும், தசரதனின் மகனுமான லக்ஷ்மணன்}, குரோதமடைந்த சர்ப்பத்தைப் போல பெருமூச்சுவிட்டபடியே சரங்களைப் பொருத்தி ராக்ஷசேந்திரன் மீது ஏவினான்.(38) அவனது நாணொலியைக் கேட்ட அந்த ராக்ஷசாதிபன், வர்ணமிழந்த வதனம் கொண்டவனாகி {முகம் வெளிறிப் போனவனாக}, லக்ஷ்மணன் மீது பார்வையை நிலைக்கச் செய்தான்.(39)
இராவணாத்மஜனான ராக்ஷசன், விசன வதனத்துடன் இருப்பதைக் கண்ட விபீஷணன், யுத்தத்தில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(40) "மஹாபாஹோ, எந்த நிமித்தங்களை நான் பார்க்கிறேனோ, அவற்றின்படி இந்த ராவணாத்மஜன் பங்கம் அடைந்திருக்கிறான் {தோல்வியுறப்போவதில் மனமுடைந்து இருக்கிறான்}. இதில் சந்தேகமில்லை. துரிதப்படுவீராக" {என்றான் விபீஷணன்}.(41)
பின்பு, சௌமித்ரி, விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பான கூரிய பாணங்களைப் பொருத்தி, விஷமிக்க சர்ப்பங்களைப் போன்ற அவற்றை விடுவித்தான்.(42) சக்ரனுடைய அசனியின் தீண்டலைப் போல சர்வ இந்திரியங்களிலும் ஊடுருவிய லக்ஷ்மணனின் சரங்களால் தாக்கப்பட்டவன் ஒரு முஹூர்த்தம் கலக்கமடைந்திருந்தான்.(43) ஒரு முஹூர்த்தத்தில் நனவு மீண்டு, இந்திரியங்களும் தெளிவடைந்து போரில் ஈடுபடும் வீரனான தசரதாத்மஜனை {தசரதனின் மகன் லக்ஷ்மணனை இந்திரஜித்} கண்டான்.(44)
ரோஷத்தால் கண்கள் சிவந்தவன், சௌமித்ரியை நோக்கிச் சென்றான். அவனை அடைந்ததும், மீண்டும் அவன் {பின்வரும்} கடும் சொற்களைக் கூறினான்:(45) "நீயும், உன் பிராதாவும் {உன்னுடன் பிறந்த ராமனும்} என்னால் கட்டப்பட்டுப் புவியில் விழுந்து துடித்த பிரதமயுத்தத்தில் {முதல் போரில்}, என் பராக்கிரமத்தை நீ நினைவில் கொள்ளவில்லையா?(46) முதலில், மஹாயுத்தத்தில், நீங்கள் இருவரும், உங்கள் முதன்மையான போர்வீரர்களும், சக்ர அசனிகளுக்கு {இந்திரனின் இடிக்குச்} சமமான என் சரங்களால் பூமியில் நனவிழந்து கிடந்தீர்கள்.(47) அத்தகைய நீ என்னைத் தாக்க விரும்புகிறாய் என்றால், உன்னில் ஸ்மிருதி {நினைவு} அழிந்துவிட்டது, அல்லது யமசாதனத்துக்குச் {யமனின் வசிப்பிடத்திற்குச்} செல்ல நீ விரும்புகிறாய் என்று நினைக்கிறேன். இது தெளிவாகத் தெரிகிறது.(48) பிரதம யுத்தத்தில் நீ என் பராக்கிரமத்தைப் பார்க்கவில்லை என்றால், இங்கே ஆயத்தமாக நிற்பாயாக. இதோ உன்னைக் காணச் செய்கிறேன்" {என்றான் இந்திரஜித்}.(49)
இவ்வாறு சொல்லிவிட்டு, ஏழு பாணங்களால் லக்ஷ்மணனையும், கூர்முனை கொண்ட பத்து உத்தம சரங்களால் ஹனூமந்தனையும் தாக்கினான்.(50) பிறகு குரோதமடைந்த வீரியவான் {இந்திரஜித்}, இரு மடங்கு கோபத்துடன், நன்கு குறிவைக்கப்பட்ட நூறு சரங்களால் விபீஷணனைத் துளைத்தான்.(51) இராமானுஜனான {ராமனின் தம்பியான} லக்ஷ்மணன், இந்திரஜித் செய்த அந்தக் கர்மத்தைக் கண்டபோது, "இஃது ஒன்றுமில்லை" என்று சிரித்துவிட்டு, அதைக் குறித்துச் சிந்திக்காமல் இருந்தான்.{52}
பீதியற்ற வதனத்துடனும், குரோதத்துடனும், கோரமான சரங்களை எடுத்து யுத்தத்தில் ராவணி மீது ஏவிய நரபுங்கவன் {மனிதர்களில் முதன்மையான லக்ஷ்மணன்},(52,53) "நிசாசரா, போர்க்களம் செல்லும் சூரர்கள் இதைப் போல் தாக்குவதில்லை. இலகுவாகவும், அல்ப வீரியத்துடனும் கூடிய உன்னுடைய இந்தச் சரங்கள் உண்மையில் சுகமாக இருக்கின்றன.(54) சமரில் ஜயங்கொள்ள விரும்பும் சூரர்கள், இப்படி யுத்தம் செய்வதில்லை" என்று சொல்லிவிட்டு, அந்த தன்வியின் மீது {வில்லுடன் கூடிய இந்திரஜித்தின் மீது} சரங்களைப் பொழிந்தான்.(55)
அவனது பாணங்களால் நொறுங்கிய மஹத்தான காஞ்சன கவசம், அம்பரத்திலிருந்து தாராஜாலங்களை {வானத்தில் இருந்து விழும் நக்ஷத்திரக் கூட்டங்களைப் போல} ரதத்தில் இருந்து துண்டுகளாக விழுந்தது.(56) நாராசங்களால் கவசம் இழந்தவனும், வீரனுமான இந்திரஜித், சமரில் காயமடைந்து, பிரதியுஷையில் பானுமானைப் போலத் தெரிந்தான் {அதிகாலையில் சூரியனைப் போலத் தெரிந்தான்}.(57) பிறகு வீரனும், பீமவிக்ரமனுமான ராவணாத்மஜன், பெருங்குரோதமடைந்து, சமரில் ஆயிரம் சரங்களால் லக்ஷ்மணனைத் துளைத்தான்.(58) இலக்ஷ்மணனின் மஹத்தான தெய்வீகக் கவசம் துண்டுகளாக நொறுங்கியது. {ஒருவர் செய்ததற்கு} பிரதி செய்தபடியே அவர்கள் அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(59) யுத்தத்தில் சர்வ அங்கங்களிலும் சரங்களால் வெட்டுப்பட்ட அவ்விருவரும், எங்கும் உதிரத்தால் நனைந்தவர்களாக, கடுமையாகப் பெருமூச்சு விட்டபடியே கொந்தளிப்புடன் யுத்தம் செய்தனர்.(60)
வீரர்களும், ரணகர்மத்தில் விசாரதர்களுமான அவ்விரு மஹாத்மாக்களும், தீர்க்க காலம் {நீண்ட நேரம்} கூரிய சரங்களால் அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(61) பீம பராக்கிரமர்களான அவ்விருவரும் தங்கள் ஜயத்திற்காக யத்னம் செய்வதிலேய நிலைத்து, கவசங்கள் நொறுங்கியதால் சர ஓகங்களால் மறைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஜலத்துடன் கூடிய பிரஸ்ரவணங்களை {நீருடன் கூடிய அருவிகளைப்} போல உஷ்ணமான உதிரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.(62,63அ) அவ்விருவரும் கோரமான சர மழையை ஏவி யுத்தம் செய்து கொண்டிருந்ததில் நீண்ட நேரம் கழிந்தது. அப்போது பயங்கர ஸ்வனத்துடன் ஆகாசத்திலிருந்து பொழியும் கரிய நிறக் கால மேகங்கள்[3] இரண்டைப் போல அவர்கள் யுத்தத்தில் இருந்து புறமுதுகிடவும் இல்லை, சிரமமும் அடையவில்லை.(63ஆ-65அ) அஸ்திரவித்துகளில் சிரேஷ்டர்களான {அஸ்திர நிபுணர்களில் சிறந்தவர்களான} அவர்கள், மீண்டும் மீண்டும் அஸ்திரங்களைக் காட்டி, சிறிய பெரிய வடிவங்களிலான சரங்களை ஆகாசத்தில் ஏவினர். (65ஆ,66அ) அந்த நர ராக்ஷசர்கள், தோஷமின்றியும், லகுவாகவும், சித்திரமாகவும் கணைகளை ஏவி, கோரமான, கொந்தளிப்பான போரைச் செய்தனர்.(66ஆ,67அ) அவர்களின் பயங்கரக் கொந்தளிப்பான ஸ்வனம் ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாகக் கேட்டது. அது கடும் இடியுடன் கூடிய புயலைப் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்தியது.(67ஆ,68அ)
[3] மன்மதநாததத்தர் பதிப்பில், "பிரளய காலத்தில் தோன்றும் கரிய மேகங்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "{காலமேகம் என்ற} இந்த சொல்லுக்கு, "கரிய மேகங்கள்" என்ற பொருள் என உரையாசிரியர் சொல்கிறார். ஆனால் மேற்கண்ட பொருள் கொடுப்பதையே நான் விரும்புகிறேன்" என்றிருக்கிறது.
அந்த சமரில் யுத்தம் செய்து கொண்டிருந்த அவ்விருவரின் சப்தம், ககனத்தில் கோரமான மேகங்களின் ஸ்வனத்திற்கு ஒப்பாக இருந்தது.(68ஆ,69அ) கீர்த்திமான்களும், பலவான்களும், ஜயத்தில் திடமாக இருந்தவர்களுமான அவ்விருவரும் சுவர்ண புங்கங்களுடன் கூடிய நாராசங்களால் காயமடைந்து ஏராளமான உதிரத்தைப் பெருக்கினர்.(69ஆ,70அ) உருக்மபுங்கங்களுடன் கூடிய அந்த சரங்கள் யுத்தத்தில் அவர்களின் காத்திரங்களின் மீது பாய்ந்து, குருதியில் நனைந்து வெளியேறி தரணீதலத்தைத் துளைத்தன.(70ஆ,71அ) அவர்கள் ஏவிய இன்னும் சில பாணங்கள், ஆகாசத்தில் ஆயிரக்கணக்கான கூரிய சஸ்திரங்களுடன் மோதி, அவற்றைச் சிதைத்துக் கலங்கடித்தன.(71ஆ,72அ) இரணத்தில் அவர்கள் ஏவிய கோரமான பாணங்களின் குவியல், சத்ரத்தில் {வேள்வியில்} ஒளிமிக்க அக்னிகள் இரண்டின் அருகில் உள்ள குசப்புற்களின் {தர்ப்பைப் புற்களின்} குவியலைப் போலத் தெரிந்தது.(72ஆ,73அ) தேகங்களில் காயமடைந்த அந்த மஹாத்மாக்கள் இருவரும், வனத்தில் இலைகள் உதிர்ந்து புஷ்பித்த கிம்சுகத்தையும், சால்மலியைப் போல {பலாச மரத்தையும், இலவ மரத்தையும் போல} ஒளிர்ந்தனர்.(73ஆ,74அ)
பரஸ்பரம் ஜயங்கொள்ள மீண்டும் மீண்டும் விரும்பிய இந்திரஜித்தும், லக்ஷ்மணனும் கொந்தளிப்புடன் கூடிய கோரமான போரைச் செய்து கொண்டிருந்தனர்.(74ஆ,75அ) யுத்தத்தில் லக்ஷ்மணன் ராவணியையும், ராவணி லக்ஷ்மணனையும் என இருவரும் அன்யோன்யம் தாக்கிக் கொண்டும் களைப்பை உணராதவர்களாக இருந்தனர்.(75ஆ,76அ) தங்கள் சரீரங்களில் பாண ஜாலங்கள் ஆழமாகத் துளைத்தும் மஹாவீரியர்களும், வேகவான்களுமான அவ்விருவரும் மரங்கள் முளைத்த இரண்டு பர்வதங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(76ஆ,77அ) அப்போது உதிரத்தால் நனைந்த சர்வ காத்திரங்களும் சரங்களால் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் ஜுவலிக்கும் பாவகனை {வேள்வி நெருப்பைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(77ஆ,78அ) வெகு காலம் கழிந்தாலும், அவ்விருவரும் யுத்தத்தில் புறமுதுகிடவுமில்லை, களைப்பும் அடையவில்லை.(78ஆ,79அ) அப்போது, சமர் முனை முகங்களில் ஒருபோதும் வெற்றிகொள்ளப்படாதவனும் {போர்க்களத்தில் ஒருபோதும் வெல்லப்படாதவனும்}, மஹாத்மாவுமான விபீஷணன், லக்ஷ்மணனின் போர்க் களைப்பை அகற்றுவதற்காகவும், பிரியத்தையும், ஹிதத்தையும் விளைவிப்பதற்காகவும் போர்க்களத்தில் முன்னே வந்தான்.(79ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 088ல் உள்ள சுலோகங்கள்: 79
Previous | | Sanskrit | | English | | Next |