Lakshmana healed | Yuddha-Kanda-Sarga-091 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொன்றதற்காக லக்ஷ்மணனைப் பாராட்டிய ராமன்; இலக்ஷ்மணனின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து, அவனை குணப்படுத்திய சுஷேணன்...
சுப லக்ஷணங்களைக் கொண்டவனும், உதிரத்தால் நனைந்த காத்திரங்களுடன் {உடல் உறுப்புகளுடன்} கூடியவனுமான லக்ஷ்மணன், போரில் அந்த இந்திரஜித்தைக் கொன்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(1) பிறகு ஜாம்பவந்தன், ஹனூமந்தன், சர்வ வனௌகசர்களையும் அழைத்த அந்த வீரியவான்{2} லக்ஷ்மணன், விபீஷணனையும், ஹனூமந்தனையும் ஊன்றிக் கொண்டு {அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு}, ஸுக்ரீவனும், ராகவனும் {ராமனும்} எங்கிருந்தனரோ அங்கே சென்றான்.(2,3) இராமனை அணுகி வணங்கியவன் {லக்ஷ்மணன்}, சக்ரனிடம் இந்திரானுஜன் எப்படியோ {இந்திரனின் அருகில் இந்திரனின் தம்பியான உபேந்திரன் எப்படி நிற்பானோ}[1], அப்படியே தன் பிராதாவின் சமீபத்தில் நின்றான்.(4) மஹாத்மாவான ராகவனை அடைந்தபிறகு, அந்த வீரன், இந்திரஜித்தின் கோர வதத்தைக் குறித்து சோர்வுடன் சொன்னான்.(5) அப்போது, மகிழ்ச்சியுடன் கூடிய விபீஷணன், மஹாத்மாவான லக்ஷ்மணனால் ராவணியின் சிரம் {இந்திரஜித்தின் தலை} துண்டிக்கப்பட்டதைத் தெரிவித்தான்[2].(6)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "சக்ரனுடன் (இந்திரனின் தம்பியான) வாமனனைப் போல" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "சக்ரனுடன் இந்திரனின் தம்பியான உபேந்திரன் போல" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "சக்ரனின் முன்னிலையில் இந்திரனின் சகோதரனைப் போல" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இந்திரனின் அருகில் உபேந்திரனைப் போல" என்றிருக்கிறது. செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில், "சக்ரனை அணுகும் இந்திரனின் தம்பியைப் போலத் தன் சகோதரனின் அருகில் சென்றான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "{இந்திரனின் தம்பி} விஷ்ணு" என்றிருக்கிறது. தமிழில் தர்மாலயப் பதிப்பில், "வியாழன் இந்திரனுக்கு எவ்வண்ணமோ அவ்வண்ணமே தமையனாரின் பக்கலிலிருப்பவராய் காத்து நின்றார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இந்த்ரனிடம் ப்ருஹஸ்பதி இருப்பதுபோல் ஸ்வாதீனமற்றிருக்குந் தன்மையை நிறைவேற்றிக் கொண்டு அண்ணனது ஸமீபத்தில் நின்றிருந்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இந்திரனுக்கருகில் அவனுடைய தம்பி இருப்பதைப் போல, சகோதரரின் பக்கத்தில் பணிவுடன் நின்றான்" என்றிருக்கிறது.
[2] கம்பராமாயணத்தில், இந்திரஜித் மாண்ட பிறகு, அங்கதன் அவனது தலையை எடுத்துக் கொண்டு முன் செல்கிறான். இலக்ஷ்மணன் அவனது பின்னால் செல்கிறான். இராமனின் பாதங்களில் இந்திரஜித்தின் தலை வைக்கப்படுகிறது. இராமன் மகிழ்ச்சியடைந்து அனைவரையும் புகழ்கிறான். இந்தச் செய்தி கம்பராமாயணம், யுத்தகாண்டம், இந்திசித்து வதைப்படலத்தில், 9174ம் பாடல் முதல் 9185ம் பாடல் வரை சொல்லப்படுகிறது.
அந்த மஹாவீரியன் {ராமன்}, லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்ததைக் கேள்விப்பட்டு, அளவில்லா மகிழ்ச்சியை அடைந்து, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(7) "சாது {நல்லது}. இலக்ஷ்மணா, நான் நிறைவடைந்தேன். செய்வதற்கரிய கர்மம் செய்யப்பட்டிருக்கிறது. இராவணியின் நாசத்தை நமது வெற்றியாகக் கருதுவாயாக" {என்றான் ராமன்}.(8)
அந்த வீரியவான் {ராமன்}, கீர்த்திவர்தனனான {புகழை வளர்த்துக் கொள்பவனான} அந்த லக்ஷ்மணனின் சிரசை முகர்ந்து {உச்சிமுகர்ந்து}, {புகழ்ச்சியில்} வெட்கமடைந்தவனை பலவந்தமாகவும், சினேகத்துடனும் இழுத்துத் தன் அங்கத்தின் {மடியின்} ஏற்றி வைத்தான்.{9} பிராதாவான அந்த லக்ஷ்மணனை அங்கத்தில் {மடியில்} அமரச் செய்து, காயமடைந்தவனைத் தழுவிக் கொண்டு, மீண்டும் மீண்டும் பாசத்துடன் அவனைப் பார்த்தான்.(9,10) சல்லியங்களால் {முள் போன்ற கணைகளால்} பீடிக்கப்பட்டு, வலியுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அந்த லக்ஷ்மணனைக் கண்ட ராமன், துக்க சந்தாபத்தால் தானும் பெருமூச்சுவிட்டான்.{11}
அந்தப் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, மீண்டும் லக்ஷ்மணனின் உச்சியை முகர்ந்து, தடவிக் கொடுத்து, ஆசுவாசப்படுத்தி {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(11,12) "செய்வதற்கரிய கர்மங்களைச் செய்பவனான உன்னால் பரம கல்யாண கர்மம் {மிக உயர்ந்த நற்செயல்} செய்யப்பட்டது. இப்போது புத்திரன் கொல்லப்பட்ட ராவணனும் யுத்தத்தில் கொல்லப்பட்டவனே என்று நினைக்கிறேன்.(13) துராத்மாவான அந்த சத்ரு கொல்லப்பட்டதால் நான் விஜயீ {வெற்றியடைந்தவன்} ஆகிறேன். வீரா, கொடூரனான ராவணனின் வலதுகரம் உன்னால் வெட்டப்பட்டது. நற்பேறு விளைந்தது. அவனுக்கு அவனே மஹாரணத்தில் {ராவணனுக்கு இந்திரஜித்தே போரில்} நற்றுணையாக இருந்தான். விபீஷணனாலும், ஹனூமதனாலும் மஹத்தான கர்மம் செய்யப்பட்டிருக்கிறது.(14,15)
அந்த வீரன் {இந்திரஜித்} மூன்று அஹோராத்திரிகளில் {பகல், இரவுகளில்} எப்படியோ {சிரமப்பட்டு} வீழ்த்தப்பட்டிருக்கிறான். இப்போது நான் அமித்ரர்கள் {எதிரிகள்} அற்றவனானேன். இராவணன், தன் புத்திரன் வீழ்ந்ததைக் கேள்விப்பட்டு, மஹத்தான பலவியூஹத்துடன் {படை அணிவகுப்புடன்} வருவான்.(16,17அ) புத்திரனின் வதத்தால் விளைந்த சந்தாபத்தில் புறப்பட்டு வருபவனும், வெல்வதற்கரியவனுமான அந்த ராக்ஷசாதிபனை மஹத்தான பலத்தால் {பெரும்படையால்} சுற்றிவளைத்துக் கொல்வேன்.(17ஆ,18அ) இலக்ஷ்மணா, நாதனான உன்னால் போரில் அந்த சக்ரஜேதரி {இந்திரனின் பகைவனான இந்திரஜித்} கொல்லப்பட்டதால், எனக்கு சீதையோ, பிருத்வியோ {பூமியோ} அடைதற்கரியவர்களல்லர்" {என்றான் ராமன்}.(18ஆ,19அ)
இராகவனான அந்த ராமன், பிராதாவான அவனை {தன்னுடன் பிறந்தானான லக்ஷ்மணனைத்} தழுவி, ஆசுவாசப்படுத்தி, மகிழ்ச்சியுடன் சுஷேணனை நோக்கி இதைக் கூறினான்:(19ஆ,20அ) "மஹாப்ராஜ்ஞனே {பேரறிவாளனே}, மித்ரவத்சலனும், சல்லியமுடையவனுமான சௌமித்ரி {நண்பர்களிடம் அன்பு கொண்டவனும், முள் போன்ற கணைகள் தைத்த வேதனையுள்ளவனும், சுமித்ரையின் மகனுமான லக்ஷ்மணன்} எப்படி நலமடைவானோ, அப்படி நீ செயல்படுவாயாக.(20ஆ,21அ) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, விபீஷணனும் சீக்கிரமே விசல்யர்களாக {முள் / வலி நீங்கியவர்களாகச்} செய்யப்பட வேண்டும்.{21ஆ} மரங்களைக் கொண்டு யுத்தம் செய்த இந்த ரிக்ஷ, வானர சைனியங்களைச் சேர்ந்த மற்ற சூரர்களும், போர்க்களத்தில் யுத்தம் செய்து புண்பட்டு வேதனையடைந்திருக்கும்{22} அனைவரும், அதே போல, சுகமடைய பிரயத்னம் செய்யப்பட வேண்டும்" {என்றான் ராமன்}.(21ஆ-23அ)
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஹரியூதபனும், மஹாத்மாவுமான அந்த சுஷேணன், லக்ஷ்மணனின் நாசிவழியே பரம ஔஷதியை {சிறந்த மூலிகையைக்} கொடுத்தான்.(23ஆ,24அ) அந்த கந்தத்தை முகர்ந்த அவன் {லக்ஷ்மணன்}, தன் காயங்கள் ஆறி, வேதனையில் இருந்து விடுபட்டு, விசல்யன் ஆனான் {கணைமுனைக் காயங்களற்றவனானான்}.(24ஆ,25அ) பிறகு, ராகவனின் ஆணைப்படி, விபீஷணன் முதலிய நண்பர்களுக்கும், சர்வ வானர முக்கியர்களுக்கும் சிகிச்சை அளித்தான்.(25ஆ,26அ) அப்போது சல்லியத்திலிருந்து விடுபட்டு, சிரமம் போக்கிக் கொண்டு, ஜுவரம் விலகிய லக்ஷ்மணன், க்ஷணத்தில் பிராகிருத {சாதாரண / இயல்பு} நிலைக்கு மீண்டு, அங்கே மகிழ்ச்சியடைந்தான்.(26ஆ,27அ) அப்போது, ராமன், அதேபோல பிலவகாதிபன் {தாவிச் செல்பவர்களின் தலைவனான சுக்ரீவன்}, விபீஷணன், ரிக்ஷபதியான ஜாம்பவான் ஆகியோரும், சைனியமும், சௌமித்ரி ஆரோக்யத்துடன் எழுந்ததைக் கண்டு, நீண்ட நேரம் மகிழ்ந்திருந்தனர்.(27ஆ,இ) மஹாத்மாவான அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, அடைதற்கரிய கர்மத்தைச் செய்த லக்ஷ்மணனைப் பூஜித்தான். அந்த சக்ரஜித் யுத்தத்தில் வீழ்த்தப்பட்டதைக் கேட்டு வானரேந்திரன் {சுக்ரீவன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(28)
யுத்த காண்டம் சர்க்கம் – 091ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |