Arriving at Nihumbhila | Yuddha-Kanda-Sarga-085 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணனை நிகும்பிலைக்கு அனுப்பிய ராமன்; அங்கதன், ஹனுமான், ஜாம்பவான் ஆகியோரும் லக்ஷ்மணனுடன் சென்றது...
சோகத்தில் மூழ்கியிருந்த ராகவன் {ராமன்}, அவனது அந்த வசனத்தைக் கேட்டும், அந்த ராக்ஷசன் {விபீஷணன்} சொன்னதென்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.(1) பிறகு, பரபுரஞ்ஜயனான {பகைவரின் நகரங்களை வெற்றி கொள்பவனான} ராமன், தைரியத்தை அடைந்து, கபிக்களின் {குரங்குகளின்} முன்னிலையில், அருகில் அமர்ந்திருந்த விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "நைர்ருதாதிபதே {தென்மேற்குத் திசையின் தலைவனுடைய வழித்தோன்றல்களான ராக்ஷசர்களின் தலைவா}, விபீஷணா, நீ எந்த வாக்கியத்தைச் சொன்னாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன். நீ எதைச் சொல்ல வருகிறாயோ, அதை மீண்டும் கேட்க விரும்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(3)
வாக்கிய விசாரதனான அந்த விபீஷணன், தீனமாகச் சொல்லப்பட்ட ராகவனின் சொற்களைக் கேட்டு, யத்னத்துடன் {முயற்சியுடன்} மீண்டும் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(4) "மஹாபாஹுவே, வீரரே, படையின் அணிவகுப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நீர் ஆணையிட்டீரோ, அப்படியே, அந்த வாக்கியத்தின்படியே அது செய்யப்பட்டது.(5) பிரிக்கப்பட்ட அந்த அனீகங்கள் {படைப்பிரிவுகள்} அனைத்தும் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. யூதபர்களும் நியாயப்படி பிரித்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.(6) மஹாபிரபோ, நான் உமக்கு சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவற்றைக் கேட்பீராக. காரணமில்லாத உமது சந்தாபத்தால் எங்கள் ஹிருதயங்கள் சந்தாபமடைகின்றன.(7) இராஜரே, இந்த சோகத்தையும், உம்மை அடைந்திருக்கும் மித்யா சந்தாபத்தையும் {மாயையால் உண்டான வீண் வருத்தத்தையும்} கைவிடுவீராக. அதேபோல, சத்ருக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் இந்தச் சிந்தையை {கவலையைக்} கைவிடுவீராக.(8)
வீரரே, நீர் சீதையை அடைய வேண்டும் என்றால், நிசாசரர்கள் {இரவுலாவிகள்} கொல்லப்பட வேண்டும் என்றால், மகிழ்ச்சியுடன் நீர் {அவற்றை அடைய} முயற்சி செய்ய வேண்டும்.(9) இரகுநந்தனரே, நான் சொல்லும் ஹிதமான சொற்களைக் கேட்பீராக. இந்த சௌமித்ரி, மஹத்தான பலம் {படை} சூழு உடனே சென்று,{10} போரில், தனுர்மண்டலத்தில் இருந்து {வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து} விடுவிக்கப்பட்டவையும், விஷம் மிக்க பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால், நிகும்பிலையை அடைந்திருக்கும் ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்ல வேண்டும்.(10,11) வீரனான அவனது தபத்தைக் கொண்டு, ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} வரதானத்தால், பிரம்மசிரஸ் என்ற அஸ்திரமும், நினைத்த இடம் செல்லவல்ல துரங்கங்களும் {குதிரைகளும் இந்திரஜித்தால்} அடையப்பட்டன.(12)
இத்தகைய அவன், சைனியத்துடன் சேர்ந்து நிகும்பிலையை அடைந்திருக்கிறான் என்று தெரிகிறது. கர்மம் {ஹோமம்} நிறைவேறி அவன் வந்தால், நாம் அனைவரும் அழிந்தோம் என்பதை அறிவீராக.(13) "நிகும்பிலையை அடையாமலோ, அக்னியில் ஹோமம் செய்யாமலோ வில்லை வளைத்து செல்லும்போது, உன்னை எந்த ரிபு {பகைவன்} தாக்குவானோ, அவனே இந்திர சத்ருவான {இந்திரனின் பகைவனான} உன்னை வதம் செய்வான்".{14} மஹாபாஹுவே, இவ்வாறே சர்வலோகேஷ்வரனால் {உலகங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனால்} வரம் தத்தம் செய்யப்பட்டது. இராஜரே, இப்படியே அந்த மதிமிக்கவனுக்கு {இந்திரஜித்துக்கு} வதம் விதிக்கப்பட்டிருக்கிறது.(14,15) மஹாபலவானே, ராமரே, இந்திரஜித்தின் வதத்திற்கு ஆணையிடுவீராக. அவன் கொல்லப்பட்டால், சுற்றத்தாருடன் கூடிய ராவணரே கொல்லப்பட்டார் என்பதை அறிவீராக" {என்றான் விபீஷணன்}.(16)
விபீஷணனின் சொற்களைக் கேட்ட ராமன், அப்போது {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "சத்தியபராக்கிரமா, அந்த ரௌத்திரனின் மாயையை நான் அறிவேன்.(17) அந்த பிரம்மாஸ்திரவித் {பிரம்மாஸ்திரத்தை ஏவ வல்லவனான இந்திரஜித்}, பிராஜ்ஞன் {அறிவாளி}; மஹாமாயன்; மஹாபலவான்; போரில் வருணனுடன் கூடிய தேவர்களையும் கூட நனவிழக்கச் செய்ய வல்லவன்.(18) பெரும்புகழ்பெற்ற வீரா, அடர்ந்த மேகங்களுக்கிடையே சூரியனைப் போல ரதத்துடன் அந்தரிக்ஷத்தில் அவன் செல்லும் கதி அறியப்படுவதில்லை" {என்றான் ராமன்}.(19)
துராத்மாவான ரிபுவின் {பகைவனின்} மாயவீரியத்தை அறிந்த ராகவன், கீர்த்தி சம்பன்னனான லக்ஷ்மணனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(20) "இலக்ஷ்மணா, வானரேந்திரனின் பலம் {படை} எதுவோ அது முழுவதும் சூழ, ஹனூமதனை முன்னிட்ட யூதபர்களுடனும்,{21} சைனியத்தால் சூழப்பட்ட ரிக்ஷபதி {கரடிகளின் தலைவனான} ஜாம்பவனுடனும் சென்று மாயா பலம் நிறைந்த அந்த ராக்ஷச சுதனை {ராவணனின் மகனான இந்திரஜித்தைக்} கொல்வாயாக.(21,22) அவனது மாயைகளை நன்கறிந்த மஹாத்மாவான இந்த ரஜனீசரன் {இரவுலாவி விபீஷணன்} தன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} உன் பின்னால் தொடர்ந்து வருவான்" {என்றான் ராமன்}.(23)
அதியத்புத பராக்கிரமம் கொண்டவனான லக்ஷ்மணன், ராமனின் சொற்களைக் கேட்டு, விபீஷணனுடன் சேர்ந்து, சிறந்த கார்முகத்தை {வில்லை} எடுத்துக் கொண்டான்.(24) மகிழ்ச்சியுடன் ஆயத்தமான சௌமித்ரி, கவசம் பூண்டு, சரங்களுடன் கட்கம் {வாள்} தரித்து, சாபத்தை {வில்லை} ஏந்தி, ராமனின் பாதத்தைத் தீண்டி, {பின்வருமாறு} கூறினான்:(25) "இன்று என் கார்முகத்திலிருந்து விடுபடும் சரங்கள், ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தைத்} துளைத்து, புஷ்கரையில் ஹம்சங்களை {தாமரைப் பொய்கையில் அன்னப்பறவைகளைப்} போல லங்கையில் பாய்ந்து விழப்போகின்றன.(26) இப்போது மஹாசாபத்தில் {பெரும் வில்லில்} இருந்து ஏவப்படும் என் சரங்கள், அந்த ரௌத்திரனின் சரீரத்தைப் பிளந்து அவனை வதைக்கப் போகின்றன" {என்றான் லக்ஷ்மணன்}.(27)
ஒளிமிக்கவனான அந்த லக்ஷ்மணன், பிராதாவின் {தன்னுடன் பிறந்தவனின்} முன்பு இவ்வாறு சொல்லிவிட்டு, ராவணியை {ராவணனின் மகனான இந்திரஜித்தை} வதைக்கும் நோக்குடன் துரிதமாகச் சென்றான்.(28) குருவின் {பெரியோனான ராமனின்} பாதத்தை வணங்கி, அவனை பிரதக்ஷிணமும் செய்து {வலமும் வந்து}, ராவணியால் பாலிதம் செய்யப்படும் நிகும்பிலை என்ற சைத்தியத்திற்கு {கோவிலுக்குச்} சென்றான்.(29) பிரதாபவானான ராஜபுத்ரன் லக்ஷ்மணன், பிராதாவின் {தன்னுடன் பிறந்தானான ராமனின்} நல்லாசிகளைப் பெற்று, விபீஷணன் சகிதனாகத் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றான்[1].(30)
[1] மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலைஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆகசீரிய சென்னி சேர்த்து சென்றனன் தருமச் செல்வன்- கம்பராமாயணம் 8945ம் பாடல், யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலம்பொருள்: "ஹனுமானை முதலாகக் கொண்ட வானரப் படைத் தலைவர்களோடு, வீரனே, நீ போருக்குச் செல்வாயாக" என்று {ராமன்} விடை கொடுத்தருளிய போது, தாமரை மலர் போன்ற பெரியோனின் {ராமனின்}பாதமானது உள்ளேயும், வெளியேயும் அமைய, சிறப்புடைய தன் தலையில் பொருந்த வைத்துச் சென்றான் தர்மச் செல்வன் {லக்ஷ்மணன்}.
அப்போது, பல்லாயிரம் வானரர்களால் சூழப்பட்ட ஹனுமானும், அமைச்சர்களுடன் கூடிய விபீஷணனும் லக்ஷ்மணனின் பின்னால் சென்றனர்.(31) ஹரிசைனியத்தால் வேகமாகச் சூழப்பட்ட அவன், தன் பாதையில் நிற்கும் ரிக்ஷராஜனின் {கரடிகளின் மன்னனான ஜாம்பவானின்} பலத்தையும் கண்டான்.(32) மித்ரானந்தனான அந்த சௌமித்ரி {நண்பர்களுக்கு ஆனந்தம் அளிப்பவனும், சுமித்ரையின் மகனுமான அந்த லக்ஷ்மணன்}, வெகுதூரம் சென்ற பிறகு, ராக்ஷசேந்திரனுடைய பலத்தின் {படையின்} அணிவகுப்பு {இன்னும்} தூரத்தில் இருப்பதைக் கண்டான்.(33)
அரிந்தமனான அந்த ரகுநந்தனன் {பகைவரைக் கொல்பவனும், ரகு குலத்திற்கு ஆனந்தம் அளிப்பவனுமான லக்ஷ்மணன்}, நிகும்பிலையை அடைந்ததும், பிரம்மன் விதித்தபடியே அந்த மாயாயோகனை {இந்திரஜித்தை} வெல்வதற்காகக் கையில் தனுசுடன் நின்றான்.(34) விபீஷணன், வீரனான அங்கதன், அதே போல அநிலசுதன் {வாயு மைந்தன் ஹனுமான்} ஆகியோர் சகிதனும், பிரதாபவானுமான அந்த ராஜபுத்திரன் {லக்ஷ்மணன்},(35) அமல சஸ்திரங்களால் {மாசற்ற ஆயுதங்களால்} ஒளிர்வதும், துவஜங்கள் அடர்ந்ததும், மஹாரதங்கள் நிறைந்ததும், உறுதிமிக்கதும், அளவற்ற வேகம் கொண்டதும், மிகப் பயங்கரமானதும், விதவிதமானதும், இருள் போன்றதுமான பகைவரின் பலத்திற்குள் {படைக்குள்} நுழைந்தான்.(36)
யுத்த காண்டம் சர்க்கம் – 085ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |