Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

வீரியவானும், பேருடல்படைத்தவனுமான கும்பகர்ணன், பெருங்குரோதமடைந்து, கதையை உயர்த்தி, தன் எதிரிகளை அச்சுறுத்தி அனைத்துப் பக்கங்களிலும் அவர்களைத் தூக்கி எறிந்தான்.(5) எழுநூற்றுக்கணக்கிலும், எண்ணூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கும்பகர்ணனால் தூக்கி வீசப்பட்ட வானரர்கள் பூமியில் சிதறிக் கிடந்தனர்.(6) பெரும் சீற்றமிக்க அவன், எட்டு, பத்து, பதினாறு, இருபது, முப்பது என இரு கைகளாலும் அவர்களைச் சேர்த்திழுத்து விழுங்கிய அவன் {கும்பகர்ணன்},{7} பன்னகங்களை விழுங்கும் கருடனைப் போலத் திரிந்து கொண்டிருந்தான்.(7,8அ)

Kumbhakarna as seen by the vanaras

பெருஞ்சிரமத்துடன் ஆசுவாசமடைந்த ஹரயர்கள் {குரங்குகள்} அங்கும் இங்கும் இருந்து ஒன்றுகூடி, கைகளில் விருக்ஷங்களுடன் போர்க்களத்தில் முன்னணியில் நின்று கொண்டிருந்தனர்.(8ஆ,9அ) பிலவகரிஷபனான {தாவிச் செல்பர்களில் காளையான} துவிவிதன், தொங்கிக் கொண்டிருக்கும் மேகத்தைப் போன்ற ஒரு பர்வதத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு, கிரிசிருங்கத்திற்கு ஒப்பானவனை {மலைச்சிகரத்திற்கு ஒப்பான கும்பகர்ணனை} நோக்கி ஓடிச் சென்றான்.(9ஆ,10அ) துள்ளிக் குதித்த வானரன், அதை கும்பகர்ணனை நோக்கி வீசியெறிந்தும், அஃது அவனை அடையாமல், அவனது சைனியத்தின் மீது விழுந்தது.(10ஆ,11அ) அந்த உத்தம நகம் {மலை}, அஷ்வங்கள், கஜங்கள், ரதங்கள் ஆகியவற்றை நொறுக்கியது. மற்றொரு கிரிசிரம் பிற ராக்ஷசர்கள் மீது விழுந்தது.(11ஆ,12அ) அந்த அசலத்தின் வேகத்தால் தாக்கப்பட்டதும், அஷ்வங்களும், சாரதிகளும் கொல்லப்பட்டதும், ராக்ஷசர்களுக்குரியதுமான மஹத்தான போர்க்களம் உதிரத்தால் நனைந்தது.(12ஆ,13அ) பயங்கர ஸ்வனத்துடன் கூடிய ரதிகர்கள் {தேர்வீரர்கள்}, நாதம் செய்து கொண்டிருந்த வானரேந்திரர்களின் சிரங்களை {தலைகளை} காலாந்தகனுக்கு ஒப்பான சரங்களால் திடீரென கொய்தனர்.(13ஆ,14அ) மஹாத்மாக்களான வானரர்களும், பெரும் மரங்களை வேருடன் பிடுங்கி ரதங்களையும், அஷ்வங்களையும் {தேர்களையும், குதிரைகளையும்}, ஒட்டகங்களையும், ராக்ஷசர்களையும் அழிக்கத் தொடங்கினர்.(14ஆ,15அ)

Kumbhakharna attacked Hanuman

ஹனுமான், அம்பரத்தில் {வானத்தில்} நின்றபடி சைலசிருங்கங்களையும், பாறைகளையும், விதவிதமான மரங்களையும் கும்பகர்ணனின் சிரசில் மழையாகப் பொழிந்தான்.(15ஆ,16அ) மஹாபலவானான கும்பகர்ணன், தன் சூலத்தைக் கொண்டு அந்த பர்வத சிருங்கங்களைப் பிளந்து, விருக்ஷவர்ஷத்தை பங்கம் செய்தான் {மரங்களின் மழையை சிதறடித்தான்}. (16ஆ,17அ) பிறகு, தனது உக்கிர சூலத்தை எடுத்துக் கொண்டு அந்த உக்கிர அனீகத்தை {படையை} நோக்கி ஓடிச் சென்றான் {கும்பகர்ணன்}. அப்போது ஹனுமான் ஒரு மஹீதராக்ரத்தை {மலைச் சிகரத்தை} எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி வரும் அவனை எதிர்த்து நின்றான்.(17ஆ,இ) கோபத்துடன் கூடிய அவன் {ஹனுமான்}, உயர்ந்த சைலத்தைப் போன்ற பேருடல் படைத்த கும்பகர்ணனைத் தாக்கினான். அவனால் வேகமாகத் தாக்கப்பட்டவன், மேதஸ்ஸும் {கொழுப்பும்}, உதிரமும் பெருகி உடல் நனையப்பெற்று பெரிதும் கலக்கமடைந்தான்.(18) மின்னலைப் போல் பிரகாசிப்பதும், எரியும் கிரிசிருங்கத்தைப் போல் தெரிவதுமான சூலத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டவன், குஹன் உக்கிர சக்தியால் கிரௌஞ்ச அசலத்தை {வேலாயுதத்தால் கிரௌஞ்ச மலையை} எப்படியோ அப்படியே மாருதியின் மார்பைத் தாக்கினான்.(19) அந்த ஹனுமான், பெரும்போரில் சூலத்தால் மார்பில் தாக்கப்பட்டதில் கலக்கமடைந்து, வாயிலிருந்து சோணிதம் கக்கியபடியே, யுகாந்த மேகங்களின் ஒலிக்கு ஒப்பான பயங்கர நாதம் செய்தான்.(20) அப்போது அவன் கலங்குவதைக் கண்ட ரக்ஷோகணங்கள் {ராக்ஷசக் கூட்டத்தினர்}, திடீரென மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். சோர்வடைந்தவர்களும், பயத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான பிலவங்கமர்கள் போரில் கும்பகர்ணனிடம் இருந்து ஓடிச் சென்றனர்.(21)

அப்போது, அந்தப் படையைத் தடுத்து உற்சாகமூட்டிய பலவான் நீலன், மதிமிக்கவனான கும்பகர்ணனின் மீது ஒரு மலைச்சிகரத்தை வீசியெறிந்தான்.(22) அது தன் மீது விழப் போவதைக் கண்டவன், தன் முஷ்டியால் அதைத் தாக்கினான். முஷ்டியால் தாக்கப்பட்ட அந்த மலைச்சிகரம், துண்டுகளாகச் சிதறி,{22} நெருப்புப் பொறிகளுடன் ஜுவலித்துக் கொண்டே மஹீதலத்தில் விழுந்தது.(23,24அ) ரிஷபன், சரபன், நீலன், கவாக்ஷன், கந்தமாதனன் ஆகிய ஐந்து வானர சார்தூலர்களும் {வானரப் புலிகளும்} கும்பகர்ணனைத் தாக்கினர்.(24ஆ,25அ) அந்த மஹாபலவான்கள், சைலங்கள், விருக்ஷங்கள் {மலைகள், மரங்கள்}, உள்ளங்கைகள், பாதங்கள், முஷ்டிகள் ஆகியவற்றைக் கொண்டு மஹாகாயனான கும்பகர்ணனை எங்கும் இருந்து தாக்கினர்.(25ஆ,26அ) அந்தத் தாக்குதல்களின் ஸ்பரிசத்தால் வேதனையடையாதவன் {வேதனையடையாத கும்பகர்ணன்}, மஹாவேகம் கொண்டவனான ரிஷபனைத் தன் கைகளால் இறுகப் பற்றினான்.(26ஆ,27அ) வானரரிஷபனான ரிஷபன், கும்பகர்ணனின் புஜங்களால் பயங்கரமாகப் பீடிக்கப்பட்டு, சோணிதம் {ரத்தம்} கக்கியபடியே கீழே விழுந்தான்.(27ஆ,28அ) தன் முஷ்டியால் சரபனையும், முழந்தாழ்களால் நீலனையும் தாக்கிவிட்டு,{28ஆ} போரில் குரோதமடைந்த இந்திரரிபு {இந்திரனின் பகைவனான கும்பகர்ணன்}, கவாக்ஷனை உள்ளங்கைகளால் தாக்கிவிட்டு, கோபத்துடன் கந்தமாதனனைத் தன் பாதங்களால் தாக்கினான்.(28ஆ,29) அந்தத் தாக்குதலால் கலக்கமடைந்து மயங்கிய அவர்கள், சோணிதத்தால் நனைந்து, வெட்டப்பட்ட கிம்சுகத்தைப் போல மேதினியில் {பலாச மரங்களைப் போலத் தரையில்} விழுந்தனர்.(30)

வானரப் படையால் தாக்கப்பட்ட கும்பகர்ணன்

மஹாத்மாக்களான அந்த வானரமுக்கியர்கள் விழுந்ததும், ஆயிரக்கணக்கான வானரர்கள் கும்பகர்ணனை நோக்கி விரைந்தனர்.(31) மஹாபலவான்களும், சைலங்களைப் போலத் தெரிந்தவர்களுமான அந்தப் பிலவகரிஷபர்கள் அனைவரும், சைலத்தைப் போன்றவன் {மலை போன்ற கும்பகர்ணன்} மீது தாவி, ஏறி, தங்கள் பற்களால் கடித்தனர்.(32) மஹாபாஹுக்களான பிலவகரிஷபர்கள், தங்கள் நகங்கள், பற்கள், முஷ்டிகள், அதேபோல கைகள் ஆகியவற்றைக் கொண்டு அந்தக் கும்பகர்ணனைத் தாக்கினர்.(33) ஆயிரக்கணக்கான வானரர்களால் மறைக்கப்பட்டவனும், பர்வதத்திற்கு ஒப்பானவனுமான அந்த ராக்ஷசவியாகரன் {ராக்ஷசர்களில் புலியான கும்பகர்ணன்}, மரங்கள் நிறைந்த கிரியை {மலையைப்} போல அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் தெரிந்தான்.(34) அந்த மஹாபலவான், தன் கைகளால் சர்வ வானரர்களையும் பிடித்து, பன்னகங்களை {பாம்புகளை} கருடன் எப்படியோ அப்படியே அவர்களை விழுங்கினான்.(35) பாதாளத்திற்கு ஒப்பான கும்பகர்ணனின் வாய்க்குள் வீசப்பட்ட வானரர்கள், அவனது நாசித்துளைகள் வழியாகவும், காதுகள் வழியாகவும் வெளியே வந்தனர்.(36) இதனால் குரோதமடைந்தவனும், பர்வதத்திற்கு ஒப்பானவனுமான அந்த ராக்ஷசோத்தமன் {ராக்ஷசர்களில் உத்தமனான கும்பகர்ணன்}, பெருங் குரோதத்துடன், அந்த ஹரிக்களை பங்கம் செய்த {அடித்து நொறுக்கிய} பிறகு விழுங்கினான்.(37) மாமிச, சோணிதத்தால் பூமியை நனையச் செய்த அந்த ராக்ஷசன், மூட்டப்பட்ட காலாக்னியைப் போல ஹரிசைனியத்திற்குள் திரிந்து கொண்டிருந்தான்.(38) மஹாபலவானான கும்பகர்ணன், வஜ்ரத்தைக் கையில் கொண்ட சக்ரனைப் போலக் கையில் சூலத்துடன் யுத்தத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(39) கோடையில் வறண்ட அரண்யங்களை பாவகன் எப்படி எரிப்பானோ, அப்படியே அந்தக் கும்பகர்ணன் வானர சைனியத்தை எரித்தான்.(40) அப்போது, யூதபர்கள் கொல்லப்பட்ட அந்த வானரர்கள், நாயகர்கள் இல்லாதவர்களாக வதைக்கப்பட்டு, பயத்தில் உரக்கக் கதறினர்.(41) அனேக வகைகளில் கும்பகர்ணனால் வதைக்கப்பட்டு, கலக்கமடைந்த வானரர்கள், மனங்கலங்கியவர்களாக ராகவனிடம் {ராமனிடம்} சரண்புகுந்தனர்.(42) 

பெரும்போரில் வானரர்கள் பங்கம் செய்யப்படுவதைக் கண்ட வஜ்ரஹஸ்தாத்மஜன் {கைகளில் வஜ்ரத்தைக் கொண்ட இந்திரனின் பேரனான அங்கதன்}, கும்பகர்ணனை நோக்கி வேகமாக ஓடினான்.(43) மஹத்தான சைலசிருங்கத்தை {மலைச் சிகரம் ஒன்றை} எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாதம் செய்த அவன் {அங்கதன்}, கும்பகர்ணனைப் பின்தொடர்ந்த சர்வ ராக்ஷசர்களையும் அச்சுறுத்தியபடியே{44} கும்பகர்ணனின் தலை மீது அந்த சைலசிகரத்தை வீசினான்.(44,45அ) அப்போது அந்த சைலத்தால் தலையில் தாக்கப்பட்டவனும், இந்திரரிபுவுமான {இந்திரனின் பகைவனுமான}{45ஆ} அந்தக் கும்பகர்ணன்,  மஹத்தான குரோதத்தால் தூண்டப்பட்டு, கோபம்நிறைந்த வாலிபுத்திரனை {வாலியின் மகனான அங்கதனை} நோக்கி வேகமாக ஓடினான்.(45ஆ,46) மஹாநாதத்தால் சர்வ வானரர்களையும் அச்சுறுத்திய கும்பகர்ணன், பெருங்கோபத்துடன் அங்கதன் மீது சூலத்தை ஏவினான்.(47) பலவானும், யுத்தமார்க்கவிசாரதனுமான அந்த வானரரிஷபன் {போரிடும் வழிமுறைகளை நன்கறிந்தவனும், வானரர்களில் காளையுமான அங்கதன்}, தன்னை நோக்கி வருவதை அறிந்து அதிலிருந்து லாகவமாகத் தப்பித்தான்.(48) உயரக் குதித்து தன் உள்ளங்கையால் வலிமையுடன் அவனது மார்பில் அடித்தான். கோபத்துடன் கூடிய அவனால் தாக்கப்பட்டவன் மயக்கமடைந்த அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பாகத் தோற்றமளித்தான்.(49) அதிபலவானான அந்த ராக்ஷசன் {கும்பகர்ணன்} நனவு மீண்டதும், முஷ்டியால் பிடித்து வீசியெறிந்ததும் அவன் {அங்கதன்} நனவிழந்தவனாகக் கீழே விழுந்தான்.(50)

அந்தப் பிலவகசார்தூலன் {தாவிச் செல்பவர்களில் புலியான அந்த அங்கதன்} நனவிழந்து புவியில் விழுந்ததும், அவன் {கும்பகர்ணன்} அந்த சூலத்தை எடுத்துக் கொண்டு சுக்ரீவனை நோக்கி ஓடினான்.(51) வீரனும், வானராதிபனுமான சுக்ரீவன், மஹாபலவானான கும்பகர்ணன் வருவதைக் கண்ட உடனேயே எழுந்தான்.(52) மஹாபலவானான அவன், பர்வத உச்சியைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு, மஹாபலம் கொண்டவனான கும்பகர்ணனை நோக்கி வேகமாக ஓடினான்.(53) எதிர்த்து ஓடி வரும் அந்தப் பிலவங்கமனைக் கண்ட கும்பகர்ணன், தன் சர்வ அங்கங்களையும் வக்கிரமாக்கிக் கொண்டு, வானரேந்திரனை {சுக்ரீவனை} எதிர்த்து நின்றான்.(54) பிலவங்கமர்களை பக்ஷித்து, கபிசோணிதத்தால் {குரங்குகளில் ரத்தத்தால்} நனைந்த அங்கங்களுடன் நின்று கொண்டிருக்கும் கும்பகர்ணனைக் கண்ட சுக்ரீவன், {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(55) “வீரர்களை வீழ்த்தி செயற்கரிய கர்மத்தைச் செய்திருக்கிறாய். சைனியங்களை பக்ஷித்து {விழுங்கி} பரம புகழை அடைந்திருக்கிறாய்.(56) அந்த வானர அனீகத்தை {படையை} விடுவாயாக. பிராகிருதர்களால் {சாதாரணர்களால் உனக்கு} என்ன ஆகப்போகிறது? இந்தப் பர்வதத்தை வீசப் போகும் என்னுடைய தாக்குதலை ஒரு முறை சஹித்துப் பார்” {என்றான் சுக்ரீவன்}.(57)

இராக்ஷசசார்தூலனான கும்பகர்ணன், வலிமையும் தைரியமும் நிறைந்த ஹரிராஜனின் அந்த வாக்கியத்தைக் கேட்டு {இந்தச்} சொற்களைக் கூறினான்:(58) “வானரா, நீ பிரஜாபதியின் பௌத்திரன் {பிரம்மனின் பேரன்}[1]; மேலும், திடமும், வலிமையும், பௌருஷமும் கொண்ட ரிக்ஷ ராஜசுதன் {மன்னன் ரிக்ஷனின் மகன்.  இப்படிப்பட்ட நீ செயலில் காண்பிக்காமல் வீணாக} ஏன் கர்ஜிக்கிறாய்?” {என்றான் கும்பகர்ணன்}.(59)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கு ‘ப்ரஜாபதேஸ்து பௌத்ரஸ்த்வம்’ என்பது மூலம். முன்பு ப்ரஹ்மதேவன் கொட்டாவி விடுகையில் அவனது முகத்தினின்று ருக்ஷரஜஸ் ஸென்னும் வானரன் பிறந்தனன். அவன் ஒரு காலத்தில் திரிந்து கொண்டிருந்து ப்ரஹ்மலோகத்தில் அப்ஸர ஸ்த்ரீயின் உருவத்தை விளைவிக்கும்படியான ஒரு ஸரஸ்ஸில் மூழ்கி அப்ஸரஸ்திரீயின் உருவத்தைப் பெற்றனன். அவளைப் பார்த்து இந்த்ரனும் ஸூர்யனும் காமத்தினால் மதிமயங்கி இருவரும் ஒரே காலத்தில் அவளைக் கையில் பிடித்துக் கொண்டனர். அதற்குள் அவ்விருவருக்கும் த்ருப்தி உண்டாகி அவருடைய ரேதஸ்ஸு நழுவி விழுந்தது. அங்ஙனம் அஃது அந்த ஸ்த்ரீயின் வாலில் விழுகையில் வாலியென்றும், க்ரீவையில் (கழுத்தில்) விழுகையில் ஸுக்ரீவனென்றும் இரண்டு குமாரர்கள் உண்டாயினர். ப்ரஹ்ம தேவன் இந்த ஸங்கதியைக் கண்டு சிரித்து அப்ஸர உருவமடைந்த ருக்ஷ ரஜஸ்ஸின் எப்பொழுதுமுள்ள ரூபம் உண்டாவதற்காக அவனையும், அந்தக் குமாரர்களையும் அழைத்துக் கொண்டு போய் வானரரூபம் பெறச் செய்வதான ஓர் ஸரஸ்ஸைக் காண்பித்து அதில் முழுகுவாயென்றனன். அவனும் அங்ஙனஞ் செய்து குழந்தைகளோடு வானர உருவம் பெற்றனன். அவனுடைய பிள்ளைகள் வாலி ஸுக்ரீவர்களாகையால் ஸுக்ரீவன் ப்ரஹ்மாவின் பேரனென்று இங்குச் சொல்லப்பட்டனன். கசியப ப்ரஜாபதிக்கு ஸூர்யனும், ஸூர்யனுக்கு ஸுக்ரீவனும் பிறக்கையால் ப்ரஹ்மாவுக்குப் பேரனென்று சொல்லப்பட்டானென்று வேறு சிலர் கருத்து. கோவிந்தராஜர்” என்றிருக்கிறது.

கும்பகர்ணனின் சொற்களைக் கேட்டவன், சைலத்தை எடுத்து உடனே வீசினான். வஜ்ரத்திற்கு ஒப்பான அதைக் கொண்டு கும்பகர்ணனின் மார்பைத் தாக்கினான்.(60) அந்த சைலசிருங்கம் அவனது விசாலமான புஜாந்தரத்தில் {மார்பில்} பட்ட உடனேயே துண்டுகளாகச் சிதறியது. அதன் பிறகு திடீரெனப் பிலவங்கமர்கள் மனச் சோர்வடைந்தனர். இரக்ஷோகணத்தினர் {ராக்ஷசக்கூட்டத்தினர்} மகிழ்ச்சிநாதம் செய்தனர்.(61) சைலசிருங்கத்தால் தாக்கப்பட்டவன் {கும்பகர்ணன்}, தன் வாயை அகல விரித்துக் கோபத்துடன் நாதம் செய்தான். மின்னலைப் போல் பிரகாசித்த சூலத்தை எடுத்து ஹரிரிக்ஷபதியை {குரங்குகள், கரடிகளின் தலைவனான சுக்ரீவனை} வதைப்பதற்காக ஏவினான்.(62) அனிலசுதன் {வாயு மைந்தன் ஹனுமான்}, சீக்கிரமாகத் தாவி, காஞ்சன மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அந்தக் கும்பகர்ணனின் புஜத்தால் ஏவப்பட்டதுமான அந்தக் கூரிய சூலத்தைப் பிடித்து வேகமாக முறித்துப் போட்டான்.(63) பிலவங்கமன் {தாவிச் செல்பவனான ஹனுமான்}, இரும்பாலானாலும், ஆயிரம் பாரம் எடையுள்ளதுமான மஹத்தான சூலத்தைத் தன் முழங்காலில் வைத்து முறித்தபோது மகிழ்ச்சியடைந்தான்.(64) ஹனுமதனால் சூலம் பங்கமடைந்ததைக் கண்ட வானரவாஹினி {வானரப்படை}, எங்குமிருந்து திரும்பிவந்து, பலமுறை மகிழ்ச்சிநாதம் செய்தது.(65) அப்போது அச்சமடைந்த ராக்ஷசசர்கள் சென்றனர். அந்த வனகோசரர்களோ மகிழ்ச்சியுடன் சிம்ஹநாதம் செய்தனர்.{66} அந்நிலையை அடைந்த சூலத்தைக் கண்டவர்கள், மாருதியை {வாயு மைந்தன் ஹனுமானைப்} பூஜித்தனர்.(66,67அ)

மஹாத்மாவான அந்த ரக்ஷோதிபதி {ராக்ஷசத் தலைவன் கும்பகர்ணன்}, இவ்வாறு அந்த சூலம் பங்கமடைந்ததைக் கண்டு, கோபமடைந்து, லங்காமலயத்தின் சிருங்கத்தை {லங்கையில் உள்ள மலய மலையின் சிகரத்தைப்} பிடுங்கி[2], சுக்ரீவனை நெருங்கி அதைக் கொண்டு தாக்கினான்.(67ஆ,இ) யுத்தத்தில் சைல சிருங்கத்தால் தாக்கப்பட்ட அந்த வானரேந்திரன், நனவிழந்து பூமியில் விழுந்தான். யுத்தத்தில் நனவிழந்து விழும் அவனைக் கண்ட யாதுதானர்கள் {ராக்ஷசர்கள்} பெரும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.(68) யுத்தத்தில் அற்புத, கோர வீரியத்தைக் கொண்ட வானரேந்திரனான அந்த சுக்ரீவனைப் பிடித்த அந்தக் கும்பகர்ணன், அதிபிரசண்டனான அநிலன் {வாயு} மேகத்தை எப்படியோ அப்படியே அவனைக் கொண்டு சென்றான்.(69) யுத்தத்தில், மஹாமேகத்தின் ரூபத்தில் தெரிந்த அவனைத் தூக்கிக் கொண்டு சென்ற கும்பகர்ணன், கோர சிருங்கங்களுடன் கூடிய மிக உயர்ந்த மேருவைப் போல ஒளிர்ந்தான்.(70) அவனைப் பிடித்ததற்காக யுத்தத்தில் புகழப்பட்ட அந்த வீர ராக்ஷசேந்திரன், பிலவகராஜனைப் பிடித்ததில் ஆச்சரியமடைந்த திரிதிவாலயத்தாரின் {தேவலோகவாசிகளின்} நாதங்களைக் கேட்டபடியே சென்று கொண்டிருந்தான்.(71) இந்திரசத்ருவும், இந்திரவீரியனுமான அவன் {கும்பகர்ணன்}, இந்திரனுக்கு ஒப்பான அந்த ஹரீந்திரனை எடுத்துக் கொண்டு, ‘இவன் ஹதம் செய்யப்பட்டால் {இந்த சுக்ரீவன் கொல்லப்பட்டால்}, ராகவனுடன் {ராமனுடன்} கூடிய இந்த சர்வ சைனியமும் ஹதம் செய்யப்பட்டதாகும் {கொல்லப்பட்டதாகும்}’ என்று நினைத்தான்.(72)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “த்ரிகூட சிகரத்தின் மேலுள்ள லங்கையின் த்வாரத்திலிருக்கிற கும்பகர்ணன் மற்றோரிடத்திலிருக்கிற லங்காமலய பர்வதத்தின் சிகரத்தை எங்ஙனம் பெயர்த்தானென்னில் - அதற்குத் தகுந்த அளவுடைய பெருந் தேஹமுடையவனாகையால் இங்ஙனஞ் செய்தானென்றாவது, லங்காமலயமென்றால் இங்கு த்ரிகூட பர்வதமென்றாவது கண்டுகொள்க” என்றிருக்கிறது.

கும்பகர்ணன் வானரன் சுக்ரீவனை சிறைபிடித்துச் செல்வதையும், வானர வாஹினி அங்குமிங்கும் ஓடுவதையும் கண்டு,{73} மதிமானும், மாருதாத்மஜனுமான ஹனுமான் {பின்வருமாறு} சிந்தித்தான்:(73,74அ) ‘இவ்வாறு சுக்ரீவர் எடுத்துச் செல்லப்படும்போது நான் என்ன செய்ய வேண்டும்?{74ஆ} நியாயமாக நான் செய்ய வேண்டியது எதுவோ, அதையே சந்தேகமறச் செய்ய வேண்டும். {அளவில்} பர்வதத்தைப் போன்ற ராக்ஷசனை நாசம் செய்வேன்.(74ஆ,75) மஹாபலவானான கும்பகர்ணன், போரில்  முஷ்டிகளின் தாக்குதலால் சரீரம் சிதற என்னால் கொல்லப்பட்டு, வானரபார்த்திபர் {சுக்ரீவர்} விடுவிக்கப்படுகையில்  பிலவகர்கள் அனைவரும் {தாவிச் செல்லும் குரங்குகள் அனைத்தும்} மகிழ்ச்சியடையட்டும்.(76) அல்லது, திரிதசர்களாலோ, அசுர உரகர்களாலோ கொண்டு செல்லப்பட்டாலும், இந்த வானரரே ஸ்வயமாக மோக்ஷத்தை {விடுதலையை} அடைவார்.(77) போரில் கும்பகர்ணனால் சைலத்தைக் கொண்டு தாக்கப்பட்டதால் வானராதிபர் இதைக் குறித்து உணரவில்லை என்று நினைக்கிறேன்.(78) இந்தப் பெரும்போரில் ஒரு முஹூர்த்தத்திற்குள் நனவு மீண்டு இந்த சுக்ரீவர், தமக்கும், இந்த வானரர்களுக்கும் தகுந்தது எதுவோ, அதைச் செய்வார்.(79) மஹாத்மாவான இந்த சுக்ரீவரை நான் விடுவித்தால், கஷ்டமான அப்ரீதியும், சாஸ்வதமான கீர்த்தி நாசமும் உண்டாகும்.(80) எனவே, பார்த்திபரின் விக்ரமத்திற்காக ஒரு முஹூர்த்தம் பொறுத்திருக்கும் அதேவேளையில், சிதறிச் செல்லும் வானர அனீகத்தை {படையை} நான் ஆசுவாசப்படுத்துவேன்’ {என்று நினைத்தான் ஹனுமான்}.(81)

மாருதாத்மஜனான ஹனுமான், இவ்வாறு சிந்தித்து, வானரர்களின் மஹாசம்முவை {பெரும்படையை} மீண்டும் உறுதியாக நிலைபெறச் செய்தான்.(82) விமானங்கள், சர்யாகிருஹங்கள், கோபுரஸ்தலங்கள் ஆகியவற்றில் இருந்தவர்களால் புஷ்பமழை பொழிந்து பூஜிக்கப்பட்டவனாக அந்தக் கும்பகர்ணன், துடித்துக் கொண்டிருந்த அந்த மஹா ஹரியை {பெருங்குரங்கான சுக்ரீவனை} எடுத்துக் கொண்டு லங்கைக்குள் நுழைந்தான்.(83) பொரி, கந்தம் நிறைந்த {சந்தன} நீர் பொழியப்பட்டதாலும், ராஜவீதியின் குளுமையினாலும் மஹாபலவான் {சுக்ரீவன்} மெதுமெதுவாக நனவடைந்தான்.(84)  அந்த பலவானின் புஜாந்தரத்திற்கு {கும்பகர்ணனின் தோள்களுக்கு} மத்தியில் அகப்பட்டிருந்த அந்த மஹாத்மா {சுக்ரீவன்}, சிரமத்திற்கிடையில் நனவு மீண்டதும், புரத்தின் ராஜமார்க்கத்தை {நகரின் அரசவீதியை} நோக்கியபடியே மீண்டும் மீண்டும் {பின்வருமாறு} சிந்தித்தான்:(85) “இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட நான், இப்போது என்ன செய்வது சாத்தியம்? எந்தக் காரியம், ஹரிக்களின் ஹிதத்திற்கு இஷ்டமானதோ {குரங்குகளின் நன்மைக்குத் தகுந்ததோ} அதையே இப்போது செய்ய வேண்டும்” {என்று நினைத்தான்}.(86) 

இவ்வாறு நினைத்த ஹரிக்களின் ராஜா {சுக்ரீவன்}, தன் நகங்களைக் கொண்டு அமரேந்திரசத்ருவின் காதுகளையும், பற்களைக் கொண்டு நாசியையும், பாதங்களைக் கொண்டு விலாப்புறத்தையும் கிழித்தான்.(87) அவனது {சுக்ரீவனின்} பற்களாலும், நகங்களாலும் கிழிக்கப்பட்டு, காதுகளையும், நாசியையும் இழந்து, காத்திரங்கள் {உடலுறுப்புகள்} ரத்தத்தால் நனைந்தவன் {கும்பகர்ணன்}, கோபத்தால் நிறைந்து, சுக்ரீவனை பூமியில் வீசி நசுக்கினான்.(88) அந்தப் பெரும்பலவானால் பூதலத்தில் பலமாக நசுக்கப்பட்டவனும், அந்த ஸுராரிக்களால் {தேவர்களின் பகைவரான ராக்ஷசர்களால்} தாக்கப்பட்டவனுமான அவன் {சுக்ரீவன்}, ககத்தை {வானத்தை} நோக்கி வேகமாகச் செல்லும் கந்துகத்தை {பந்தைப்} போல, மீண்டும் ராமனைச் சென்றடைந்தான்.(89) மஹாபலவானான கும்பகர்ணன், காதுகளையும், நாசியையும் இழந்து சோணிதம் பெருகப் பிரஸ்ரவணங்களுடன் கூடிய கிரியை {அருவிகளுடன் கூடிய மலையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(90) மஹாகாயனான ராக்ஷசன் ராவணானுஜன் {பேருடல் படைத்த ராக்ஷசனும், ராவணனின் தம்பியுமான கும்பகர்ணன்}, சோணிதத்தால் நனைந்து பயங்கரத் தோற்றமளித்தான்.{91} சோணிதம் கக்கியபடியே கோபத்துடன் நீல அஞ்சனக் குவியலைப் போலத் தெரிந்தவனும், சந்தியா வேளை மேகத்தைப் போல ஒளிர்பவனும், பயங்கரனுமான அந்த நிசாசரன் {இரவுலாவியான கும்பகர்ணன்}, யுத்தத்தில் தன் மனத்தை நிலைக்கச் செய்தபடியே முகத்தைத் திருப்பினான்.(91,92)

அவன் {சுக்ரீவன்} சென்றதும், குரோதமடைந்த ஸுரராஜசத்ருவானவன், {தேவர்களின் மன்னனான இந்திரனின் பகைவன் கும்பகர்ணன்} மீண்டும் போரிட விரைந்தோடினான். அப்போது, ‘ஆயுதமின்றி இருக்கிறேன்’ என்று சிந்தித்த அந்த ரௌத்திரன், முத்கரம் {இரும்புத் தடி} ஒன்றை எடுத்துக் கொண்டான்.(93) மஹாத்மாவான கும்பகர்ணன், புரத்தில் இருந்து உடனே புறப்பட்டுச் சென்று, மூட்டப்பட்ட யுகாந்த அக்னி பிரஜைகளை {விழுங்குவது} எப்படியோ, அப்படியே யுத்தத்தில் அந்த உக்கிர வானர சைனியத்தை பக்ஷித்தான்.(94) அந்த உக்கிர வானர சைனியத்திற்குள் பிரவேசித்தவனும், சோணித, மாமிசங்களில் பேராசை கொண்டவனுமான கும்பகர்ணன், பசியின் மோகத்தால் யுத்தத்தில் ராக்ஷசர்களையும், ஹரீக்களையும் {குரங்குகளையும்}, பிசாசர்களையும், ரிக்ஷர்களையும் {கரடிகளையும்} உண்டான். யுகாந்தத்தில் அழிவை ஏற்படுத்தும் மிருத்யுவைப் போல முக்கிய ஹரீக்களை அவன் பக்ஷித்தான்.(95) குரோதமடைந்தவன், ராக்ஷசர்களுடன் சேர்த்து வானரர்களை ஒரே கையால் வாரியிழுத்து, ஒருவர், இருவர், மூவர், பலர் என அவர்களைத் தன் வாய்க்குள் துரிதமாக வீசினான்.(96) மலைச்சிகரங்களால் தாக்கப்பட்ட அந்த மஹாபலவான் {கும்பகர்ணன்}, மேதம், சோணிதம் {கொழுப்பு, ரத்தம்} பெருக வானரர்களை பக்ஷித்துக் கொண்டிருந்தான்.(97) பக்ஷிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஹரயர்கள் {குரங்குகள்} ராமனையே கதியாக நாடியபோது, பெருங்குரோதமடைந்த கும்பகர்ணன், கபிக்களை {குரங்குகளை} உண்டபடியே ஓடினான்.(98) ஏழாகவும், எட்டாகவும், இருபதாகவும், முப்பதாகவும், நூறாகவும் இரு கைகளால் எடுத்து விழுங்கியவாறே {போர்க்களத்தில் கும்பகர்ணன்} ஓடிக் கொண்டிருந்தான்.(99) மேதமும், சோணிதமும் பூசப்பட்ட காத்திரங்களுடன் கூடியவனும், காதுகளுக்கு மேல் நரம்பு மாலைகளைக் கொண்டவனும், கூரிய பற்களைக் கொண்டவனுமான அவன் {கும்பகர்ணன்}, யுகாந்தத்தில் எழும் காலனைப் போல சூலங்களைப் பொழிந்தான்.(100)

அதே காலத்தில், சுமித்திரையின் புத்திரனும், பரபலார்த்தனனும், பரபுரஞ்சயனுமான {பகைவரின் படையை அழிப்பவனும், பகைவரின் நகரங்களை வெல்பவனுமான} லக்ஷ்மணன், குரோதத்துடன் யுத்தம் செய்தான்.(101) வீரியவானான லக்ஷ்மணன், சப்தசரங்களால் {ஏழு கணைகளால்} கும்பகர்ணனின் சரீரத்தைத் துளைத்து, மேலும் அதிகமானவற்றை எடுத்து ஏவினான்.(102) அந்த அஸ்திரங்களால் பீடிக்கப்பட்ட அந்த ராக்ஷசன், அவற்றை முழுமையாக அழித்தபோது, பலவானான சுமித்ரானந்தவர்த்தனன் {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான லக்ஷ்மணன்} கோபமடைந்தான்.(103) மாருதன் சந்தியா கால மேகங்களை எப்படியோ அப்படியே சுபமானதும், ஜாம்பூநதமயமாக ஒளிர்வதுமான அவனது {கும்பகர்ணனின்} கவசத்தைத் தன் சரங்களால் அவன் {லக்ஷ்மணன்} மறைத்தான்.(104) காஞ்ச பூஷண சரங்களால் பீடிக்கப்பட்டு, நீல அஞ்சனக் குவியலைப் போலத் தோற்றமளித்தவன் {கும்பகர்ணன்}, மேகங்களால் சூழப்பட்ட அம்சுமான் {கதிர்களுடன் கூடிய} சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(105)

அப்போது, அந்த பயங்கர ராக்ஷசன், மேகக்கூட்டங்களுடன் கூடிய அசனியின் {இடியின்} ஸ்வனத்தில், சுமித்ரானந்தவர்த்தனனை அவமதிக்கும் வகையில் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(106) யுத்தத்தில் கஷ்டமின்றி அந்தகனையே ஜயித்த என்னைத் தாக்கி, யுத்தத்தில் பீதியில்லாமல் உன் வீரத்தை அறிவித்துக் கொண்டாய்.(107) மிருத்யுவைப் போன்ற என் முன், இந்தப் பெரும்போரில் ஆயுதம் ஏந்தி நிற்பவன் எவனும் பூஜிக்கத்தகுந்தவனே.(108) யுத்தத்தைக் கொடுப்பவன் குறித்து என்ன சொல்வது? ஐராவதத்தில் ஏறிவருபவனும், சர்வ அமரர்களுடன் கூடிய பிரபுவுமான சக்ரனே கூட சமரில் என் முன் நிற்க மாட்டான்.(109) சௌமித்ரே {சுமித்திரையின் மகனே}, இன்று பலத்துடனும், பராக்கிரமத்துடனும் கூடிய உன்னால் நான் நிறைவடைந்தேன். உன் அனுமதி பெற்றுக் கொண்டு ராகவனிடம் {ராமனிடம்} செல்ல நான் விரும்புகிறேன்.(110) இரணத்தில் {போர்க்களத்தில்} உன் வீரியம், பலம், உற்சாகம் ஆகியவற்றில் நான் நிறைவடைந்ததால், எவனை ஹதம் செய்தால் {அனைவரும்} ஹதம் செய்யப்பட்டதாகுமோ, அந்த ராமனை மட்டுமே கொல்ல நான் விரும்புகிறேன்.(111) இங்கே போரில் நான் ராமனைக் கொன்றுவிட்டால், எஞ்சியிருக்கும் பிறருடன் என் படையினர் யுத்தம் செய்து அவர்களையும் அழிப்பார்கள்” {என்றான் கும்பகர்ணன்}.(112)

போர்க்களத்தில் ஸ்துதியுடன் கூடிய இந்த வாக்கியத்தை அந்த ராக்ஷசன் {கும்பகர்ணன்} சொன்னதும், வெடித்துச் சிரிப்பவனைப் போல {பின்வரும்} கோரமான வாக்கியத்தை சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்} சொன்னான்:(113) “வீரா, வீரர்களான சக்ரன் உள்ளிட்ட பிறர் சஹித்துக் கொள்ள முடியாத பௌருஷத்தை அடைந்திருப்பதாகச் சொல்கிறாய். அவை அனைத்தும் சத்தியம் அன்றி வேறில்லை. உன் பராக்கிரமத்தைக் கண்டேன்.{114} தாசரதியான இந்த ராமர் அசலாத்ரியை {அசையாத மலையைப்} போல் இதோ நிற்கிறார்” {என்றான் லக்ஷ்மணன்}.(114,115அ)

நிசாசரன் {இரவுலாவியான கும்பகர்ணன்}, இதைக் கேட்டதும் லக்ஷ்மணனைப் புறக்கணித்தான்.{115ஆ} மஹாபலவனான அந்தக் கும்பகர்ணன், சௌமித்ரியைக் கடந்து சென்று, மேதினியைப் பிளந்துவிடுபவனைப் போல ராமனை நோக்கி ஓடினான்.(115ஆ,116) அப்போது தாசரதியான ராமன், ரௌத்திர அஸ்திரம் பிரயோகிக்கப்பட்ட கூரிய சரங்களைக் கும்பகர்ணனின் ஹிருதயத்தில் ஏவினான்.(117) இராமனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவன் {கும்பகர்ணன், இவ்வாறு} தாக்கப்பட்டதில் குரோதமடைந்தான். அவனது முகத்தில் இருந்து தணலை நிகர்த்த எரிதழல்கள் வெளிப்பட்டன.(118) இராமாஸ்திரத்தால் தாக்கப்பட்ட ராக்ஷசபுங்கவன், குரோதத்துடன் கோரமாக நாதம் செய்து கொண்டும், ரணத்தில் ஹரீக்களை விரட்டிக் கொண்டும் அவனை {ராமனை} நோக்கி ஓடினான்.(119) மயிலின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தச் சரங்கள் அவனது மார்பைத் துளைத்தன. அவனது கதை {கதாயுதம்} அவனது கையில் இருந்து தரையில் விழுந்தது.(120) அவனது சர்வ ஆயுதங்களும் பூதலத்தில் சிதறி விழுந்தன. ஆயுதமற்றவனாகத் தன்னை நினைத்த அந்த மஹாபலவான்,{121} தன் கரங்களையும், முஷ்டிகளையும் கொண்டு கடுமையாகப் போரிட்டான்.(121,122அ) பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட அங்கங்களுடன் குருதியால் நனைந்தவன் {கும்பகர்ணன்}, பிரஸ்ரவணத்துடன் கூடிய கிரியைப் போல உதிரம் பெருக்கினான்.(122ஆ,123அ) தீவிரக் கோபத்துடன், உதிரத்தில் மூர்சித்தவன், வானரர்களையும், ராக்ஷசர்களையும், ரிக்ஷர்களையும் விழுங்கியபடியே ஓடினான்.(123ஆ,இ)

அந்தகனுக்கு ஒப்பானவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனுமான அந்த பலவான், பெரும் சிருங்கமொன்றை எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி அதை வீசினான்.(124) அந்த கிரிசிருங்கம் வருவதற்கு முன்பே தன் கார்முகத்தில் சரத்தை மீண்டும் பொருத்திய ராமன், நேராகச் செல்லும் ஏழு கணைகளால் அதன் அந்தரத்தை {அந்தச் சிகரத்தின் மறைவுப் பகுதியைப்} பிளந்தான்.(125) பிறகு, தர்மாத்மாவும், பரதாக்ரஜனுமான {பரதனின் அண்ணனுமான} ராமன், காஞ்சனச் சித்திராங்கங்களுடன் கூடிய சரங்களால் அந்த மஹத்தான சிருங்கத்தைப் பிளந்தான்.(126,127அ) மேருவின் சிகரத்தைப் போலத் தெரிந்த அது, தன்னொளியால் ஒளிர்ந்து கொண்டே விழுந்தபோது, இருநூறு வானரர்களை வீழ்த்தியது[3].(127ஆ,128அ)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், “மேரு சிக்கரம் போல் புலப்படுவதும், காந்தியால் ஜ்வலிப்பது போல் விளங்குவதுமாகிய அந்தப் பர்வதசிகரம் ராமபாணங்களால் தடுக்கப்பட்டுக் கீழே விழுந்தது; விழும்பொழுது இருநூறு வானரர்களைக் கீழே விழத்தள்ளி மடித்தது” {என்றிருக்கிறது}. அதன் அடிக்குறிப்பில், “இங்கு, “தன்மேருஷி²க²ராகாரம் த்³யோதமானமிவ ஷ்²ரியா || த்³வே ஷ²தே வானராணாம் ச பதமானமபாதயத் |” என்பது மூலம். இதற்கு இங்குச் சொன்ன பொருளே பொருந்தியிருக்கின்றது. இப்படியிருக்க, கோவிந்தராஜர், “தம்மேருசிகராகாரம்” என்பதாகப் பாடங்கொண்டு இதைக் கும்பகர்ண விஷயமாக வ்யாக்யானஞ் செய்தனர். அதாவது – மேருசிகரம் போன்ற உருவமுடைய அந்தக் கும்பகர்ணன் காந்தியால் ஜ்வலிப்பவன் போல் விளக்கமுற்று, இருநூறு வானரர்கள் மேல் எதிர்ப்பதைக் கண்டு, ராமன் பாணங்களை எய்து அவனைக் கீழே விழும்படி செய்தனன் – என்பதுவே. இதைப் பண்டிதர்கள் கண்டுணர்க. இந்த ப்ரகரணத்திற்கு இவ்வுரை அவ்வளவு பொருந்தினதாகத் தோற்றவில்லை” என்றிருக்கிறது.

அதே காலத்தில், தர்மாத்மாவான லக்ஷ்மணன், கும்பகர்ண வதத்திற்குத் தகுந்த பல்வேறு யோகங்களை {உத்திகளை} ஆராய்ந்து,  ராமனிடம் {பின்வருமாறு} கூறினான்:(128ஆ,129அ) “இராஜரே, இவனுக்கு வானரர்களையும் தெரியவில்லை, ராக்ஷசர்களையும் தெரியவில்லை. சோணித கந்தத்தில் மதங்கொண்ட இவன் பிறருடன் சேர்த்துத் தன்னவர்களையும் {தன் தரப்பைச் சார்ந்த ராக்ஷசர்களையும்} விழுங்குகிறான்.(129ஆ,130அ) வானரரிஷபர்கள் எங்குமிருந்து இவன் மீது நன்றாக ஏறட்டும். யூதபர்களும் {குழுத்தலைவர்களும்}, அதே போன்ற முக்கியர்களும் இவனைச் சூழ்ந்து நிற்கட்டும்.(130ஆ,131அ) அதே காலத்தில் பெரும்பாரத்தால் பீடிக்கப்படும் இந்த துர்மதி படைத்த ராக்ஷசனால், வேறு பிலவங்கமர்கள் கொல்லப்படாத வகையில் இவனை பூமியில் வீழ்த்த வேண்டும்” {என்றான் லக்ஷ்மணன்}.(131ஆ,132அ)

மதிமிக்கவனான அந்த ராஜபுத்திரனின் அந்த வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பிலவங்கமர்கள், கும்பகர்ணனின் மீது ஏறினார்கள்.(132ஆ,133அ) கும்பகர்ணன், தன் மேல் ஏறிய பிலவங்கமர்களால் கோபமடைந்து, ஹஸ்திபாகனை துஷ்ட ஹஸ்தி {யானைப் பாகனைத் தீய யானை} எப்படியோ, அப்படியே வேகமாக அவர்களை உதறித் தள்ளினான்.(133ஆ,134அ) அவர்கள் உதறித் தள்ளப்படுவதைக் கண்ட ராமன், அவனது கோபத்தைப் புரிந்து கொண்டு, ராக்ஷசனை நோக்கி வேகமாகத் துள்ளியெழுந்து, தன் உத்தம தனுவை எடுத்தான்.(134ஆ,135அ) குரோதத்தில் கண்கள் சிவந்தவனும், பார்வையால் எரித்து விடுபவனைப் போலத் தெரிந்தவனும், வீரனுமான{135ஆ} ராகவன் {ராமன்}, கும்பகர்ணன் மீது கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்ட சர்வயூதபர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், கோபத்துடன் அந்த ராக்ஷசனை நோக்கிச் சென்றான்.(135ஆ,136) புஜங்கத்திற்கு {பாம்புக்கு} ஒப்பான நாணால் {நாண்கயிற்றால்} கட்டப்பட்டதும், பொன்னால் அழகூட்டப்பட்டதுமான உக்கிர சாபத்தையும் {வில்லையும்}, உத்தம பாணங்களைக் கொண்ட தூணியையும் எடுத்துக் கொண்டு, ஹரீக்களை {குரங்குகளை} ஆசுவாசப்படுத்திக் கொண்டும் ராமன் வேகமாகச் சென்றான்.(137) பரமதுர்ஜயனும் {வெல்வதற்கு மிக அரியவனும்}, மஹாபலவானுமான அந்த வீரன் {ராமன்}, லக்ஷ்மணன் பின்தொடர, அந்த வானரகணங்களால் சூழப்பட்டவனாகச் சென்றான்.(138)

மஹாபலவானான அவன், கிரீடம் அணிந்தவனும், அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, கோபத்தில் சோணிதமாக {ரத்தமாகச்} சிவந்த கண்களுடன் கூடியவனும், மஹாத்மாவுமான கும்பகர்ணனைக் கண்டான்.(139) அவன், திசாகஜம் {திசையைக் காக்கும் யானையைப்} போலக் கோபத்துடன் அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தான்; ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக குரோதத்துடன் ஹரீக்களை {குரங்குகளைத்} தேடிக் கொண்டிருந்தான்.(140) அவன் விந்தியத்தையும், மந்தரத்தையும் போலத் தெரிந்தான்; காஞ்சன அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்; உதித்துப் பொழியும் மேகம் போல உதிரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.(141) அவன் சோணிதத்தால் நனைந்த தன் கடைவாயை நக்கிக் கொண்டிருந்தான்; காலாந்தக யமனுக்கு ஒப்பாக வானர அனீகத்தை {படையை} மிதித்து நசுக்கிக் கொண்டிருந்தான்.(142) தேஜஸ்ஸுடன் ஜுவலிக்கும் அனலனை {அக்னியைப்} போல் பிரகாசிக்கும் அந்த ராக்ஷசசிரேஷ்டனை {கும்பகர்ணனைக்} கண்ட புருஷ ரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்} தன் கார்முகத்தை {வில்லை} வளைத்தான்.(143) அவனது சாபத்தின் {வில்லின்} நாணொலியைக் கேட்டுக் கோபமடைந்த அந்த ராக்ஷசரிஷபன் {ராக்ஷர்களில் காளையான கும்பகர்ணன்}, அந்த கோஷத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ராகவனை நோக்கி ஓடினான்.(144)

அப்போது, வாதத்தால் {காற்றால்} விரட்டப்படும் மேகத்தைப் போல, புஜங்கராஜோத்தமனின் {பாம்புகளின் தலைவனான வாசுகியின்} உடலைப் போன்ற கைகளுடன், தரணீதரத்திற்கு {மலைக்கு} ஒப்பானவனாகப் போர்க்களத்தில் தன்னைத் தாக்க ஓடிவரும் கும்பகர்ணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(145) “இரக்ஷோதிபா {ராக்ஷசர்களின் தலைவா, கும்பகர்ணா}, வருந்தாமல் வருவாயாக. நான் சாபம் {வில்} தரித்தவனாக நிற்கிறேன். இராக்ஷசவம்ச நாசனனாக {ராக்ஷச வம்சத்தை ஒழிப்பவனாக} என்னை அறிவாயாக. ஒரு முஹூர்த்தத்தில் நீ உணர்வை இழந்தவனாவாய் {இறந்துவிடுவாய்”, என்றான் ராமன்}.(146) 

‘இவனே ராமன்’ என்பதை அறிந்து விகார ஸ்வனத்துடன் சிரித்தவன் {கும்பகர்ணன்}, குரோதத்துடன் ரணத்தில் ஹரீக்களை {குரங்குகளை} விரட்டியபடியே ஓடிவந்தான்.(147) மஹாதேஜஸ்வியான அந்தக் கும்பகர்ணன், சர்வ வனௌகசர்களின் {வனத்தில் வசிக்கும் குரங்குகளின்} ஹிருதயங்களைப் பிளந்துவிடுபவனைப் போல விகாரமாகச் சிரித்தபடியே, மேகத்தின் இடியைப் போன்று பயங்கரமாக ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(148,149அ) "என்னை விராதனாகவோ, கபந்தனாகவோ, கரனாகவோ, வாலியாகவோ, மாரீசனாகவோ கருத வேண்டாம். இங்கே வந்திருப்பவன் கும்பகர்ணன்[4].(149ஆ,இ) முழுவதும் இரும்பாலானதும், பயங்கரமானதுமான என் மஹத்தான முத்கரத்தை {இரும்பத்தடியைப்} பார். பூர்வத்தில் இதைக் கொண்டு தேவர்களையும், தானவர்களையும் வென்றிருக்கிறேன்.(150) காதுகளையும், நாசியையும் இழந்திருப்பதால் என்னை அவமதிப்பது உனக்குத் தகாது. காதுகளையும், நாசியையும் இழந்தும் ஸ்வல்ப பீடையும் {சொற்ப வருத்தமும்} எனக்கில்லை.(151) அனகா {பாவமற்றவனே}, இக்ஷ்வாகு சார்தூலா {இக்ஷ்வாகுக்களில் புலியே}, உன் வீரியத்தை என் காத்திரங்களில் {என் மீது} காட்டுவாயாக. உன் பௌருஷத்தையும், விக்ரமத்தையும் கண்டபிறகு உன்னை பக்ஷிக்கப் போகிறேன்" {என்றான் கும்பகர்ணன்}.(152)

[4] மாக் கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனைத்
தாக்க வந்தனை இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை இது காணத் தக்கதால்

- கம்பராமாயணம் 7552ம் பாடல், யுத்த காண்டம், கும்பகருண வதைப் படலம்

பொருள்: பெரும் கபந்தனையும், பூப்பறித்து உண்ணும் குரங்கான வலிமை தொலைந்த வாலியையும் போலக் கருதி என்னைத் தாக்க வந்திருக்கிறாய். இவனது {இந்த சுக்ரீவனின்} இன்னுயிரைக் காக்க வந்திருக்கிறாய். இது காணத்தக்கத்துதான். கம்பராமாயணத்தில் சுக்ரீவனைக் காக்க ராமன் வரும்போது, கும்பகர்ணன் இவ்வாறு பேசுகிறான். வால்மீகியிலோ, கும்பகர்ணன் ராமனுடன் பேசும்போதே சுக்ரீவனால் காதுகளும், மூக்கும் அறுபவட்டவனாக இருக்கிறான். இங்கே ராமன் சுக்ரீவனைக் காக்கவும் வரவில்லை. கும்பகர்ணனிடம் அகப்பட்டதற்காக சுக்ரீவனைக் கண்டிக்கவும் இல்லை.

Kumbhakharna's right arm severed by Rama's shaft

கும்பகர்ணனின் சொற்களைக் கேட்ட ராமன், நல்ல புங்கங்களைக் கொண்ட பாணங்களை ஏவித் தாக்கினான். வஜ்ரத்திற்கு சமமான வேகம் கொண்ட அவற்றால் அந்த ஸுராரி {தேவர்களின் பகைவனான கும்பகர்ணன்} அசைந்தானில்லை; கலங்கினானுமில்லை.(153) எந்த சாயகங்களால் {கணைகளால்} சிறந்த சாலங்கள் {ஆச்சாமரங்கள்} துளைக்கப்பட்டனவோ, வானரபுங்கவனான வாலி கொல்லப்பட்டானோ அவை வஜ்ரத்திற்கு ஒப்பான கும்பகர்ணனின் சரீரத்தைக் காயப்படுத்தவில்லை.(154) வாரிதாரங்களை {நீரை உறிஞ்சும் மலைகளைப்} போல சரீரத்தால் அந்த சாயகங்களைப் பருகிய அந்த மஹேந்திரசத்ரு {பெரும் இந்திரனின் பகைவனான கும்பகர்ணன்}, முத்கரத்தை உக்கிர வேகத்தில் வீசி ராமனின் சர வேகத்தைத் தடுத்தான்.(155) பிறகு, குருதியால் நனைந்ததும், தேவர்களின் மஹாசம்முவை {பெரும்படையை} அச்சுறுத்தவல்லதுமான அந்த முத்கரத்தைக் கடுமையான வேகத்தில் வீசி ஹரீக்களின் {குரங்குகளின்} சம்முவை அந்த ராக்ஷசன் விரட்டினான்.(156) அப்போது வாயவ்யம் என்ற மஹாஸ்திரத்தை {வாயு மந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட ஒரு சிறந்த அஸ்திரத்தை} எடுத்த ராமன், அந்த நிசாசரனின் {இரவுலாவியான கும்பகர்ணன்} மீது அதை ஏவி, முத்கரத்துடன் கூடிய கும்பகர்ணனின் கையை வெட்டினான். கை வெட்டப்பட்ட அவன் ஆரவாரத்துடன் நாதம் செய்தான்.(157) கிரிசிருங்கத்திற்கு ஒப்பானதும், முத்கரத்துடன் {இரும்புத்தடியுடன்} கூடியுதுமான அவனது அந்தக் கை, ராகவ பாணத்தால் வெட்டப்பட்டு, அந்த ஹரிராஜ சைனியத்தின் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனின் படை} மீது விழுந்து, அந்த ஹரிவாஹினியை {குரங்குப்படையை} அழித்தது.(158)

அப்போது, பங்கமடைந்து, ஹதம் செய்யப்பட்டு {முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு} எஞ்சியிருந்த அந்த வானரர்கள், பீடிக்கப்பட்ட அங்கங்களுடன், மூலைககளில் ஒதுங்கிச் சென்று வருத்தமுற்று, நரேந்திரனுக்கும் ரக்ஷோதிபனுக்கும் {மனிதர்களின் தலைவனுக்கும், ராக்ஷசத்தலைவனுக்கும்} இடையில் நடக்கும் கோரமான போரைக் கண்டனர்.(159) பெரும் வாளைக் கொண்டு உச்சி வெட்டப்பட்ட அசலேந்திரத்தை {சிகரம் பெயர்த்தெடுக்கப்பட்ட பெரும் மலையைப்} போல, அஸ்திரத்தால் கை வெட்டப்பட்டவனான அந்தக் கும்பகர்ணன், மற்றொரு கரத்தால் ஒரு விருக்ஷத்தை வேருடன் பிடுங்கி ரணத்தில் நரேந்திரனை {மனிதர்களின் தலைவனான ராமனை} நோக்கி ஓடினான்.(160) அந்த ராமன், ஜாம்பூநதத்தால் {பொன்னால்}சித்திரமாக அலங்கரிக்கப்பட்டதும், ஐந்திராஸ்திரத்துடன் கூடியதுமான தன் பாணத்தால், பன்னகத்தின் {பாம்பின்} உடல் போலத் தெரிவதும், வேருடன் பிடுங்கப்பட்ட பனை மரத்துடன்[5] கூடியதுமான அவனது கையைத் தாக்கினான்.(161) கிரிக்கு ஒப்பான கும்பகர்ணனின் அந்த புஜம் வெட்டப்பட்டு பூமியில் விழுந்து, அங்கேயும் இங்கேயும் துடித்தபடியே விருக்ஷங்களையும், பாறைகளையும், வானர, ராக்ஷசர்களையும் மோதித் தாக்கியது.(162) யுத்தத்தில் கைகள் வெட்டப்பட்டவன் {கும்பகர்ணன்} உரக்க முழங்கியபடியே ஓடி வருவதைக் கண்ட ராமன், கூரிய அர்த்தச்சந்திரங்கள் இரண்டை எடுத்து ராக்ஷசனின் பாதங்களை வெட்டினான்.(163) அவனுடைய அந்தப் பாதங்கள் இரண்டும் திசைகளையும், துணைத் திசைகளையும், கிரிகளையும் {மலைகளையும்}, குகைகளையும், மஹார்ணவத்தையும், லங்கையையும், கபி, ராக்ஷச சேனைகளையும் எதிரொலிக்கச் செய்தபடியே கீழே விழுந்தன.(164)

[5] ஆங்கிலத்தில் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி, வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்புகளில், “பனை மரம்” என்றே குறிப்பிடப்படுகிறது. அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத மூலங்களும் “ஸதாலவ்ருக்ஷம்” என்று பனை மரத்தையே குறிக்கிறது. மற்ற ஆங்கிலப்பதிப்புகளான மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்புகளில், “பனை மரம்” என்றும், செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில், “சால மரம்” என்றும் இருக்கிறது. தமிழில் நரசிம்மாசாரியர் பதிப்பிலும், தர்மாலயம், கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்புகளிலும், “சால மரம்” என்று இருக்கிறது. 

கைகள் வெட்டப்பட்டும், பாதங்கள் வெட்டப்பட்டும் வடவாமுகத்தின் {வடவாமுகாக்னியின்} வாயைப் போலத் தன் வாயை அகல விரித்து கர்ஜனை செய்தவன், {கைகளும் கால்களும் இல்லாத} ராஹு அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} சந்திரனை {நோக்கி விரைவது} எப்படியோ, அப்படியே {யுத்தத்தில் முழங்கால்களைப் பயன்படுத்தி} ராமனை நோக்கி விரைந்து ஓடினான்.(165) இராமன், ஹேமத்தால் {பொன்னால்} மறைக்கப்பட்ட புங்கங்களைக் கொண்ட கூரிய சரங்களால் அவனது வாயை நிறைத்தான். வாய் நிறைந்தவன் {கும்பகர்ணன்} பேச இயலாமல் சிரமத்துடன் முனகியபடியே மூர்ச்சித்தான் {மயக்கமடைந்தான்}.(166) பிறகு, அந்த ராமன், சூரியனின் கதிர்களைப் போல ஒளிர்வதும், பிரம்மதண்டத்திற்கும், காலனுக்கும் ஒப்பானதும், மரணத்தைக் குறிப்பதும், கூர்மையானதும், நல்ல புகங்களைக் கொண்டதும், மாருதனுக்குத் துல்லியமான வேகம் கொண்டதும், ஐந்திரத்துடன் {ஐந்திர அஸ்திரத்துடன்} கூடியதுமான சரம் ஒன்றை எடுத்தான்.(167) இராமன், வஜ்ரம், ஜாம்பூனதம் {பொன்} ஆகியவற்றாலான அழகிய புங்கத்தைக் கொண்டதும், ஜுவலிக்கும் சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பாக ஒளிர்வதும், மஹேந்திரனின் வஜ்ர, அசனிக்கு {இடிக்குத்} துல்லியமான வேகம் கொண்டதுமான அதை நிசாசரன் {இரவுலாவியான கும்பகர்ணன்} மீது ஏவினான்.(168) இராகவனின் கையில் இருந்து ஏவப்பட்ட அந்த சாயகம் {கணை}, புகையற்ற வைஷ்வானரனின் பயங்கரத் தோற்றத்துடனும், சக்ரனின் அசனியைப் போன்ற பயங்கர விக்ரமத்துடனும், தன்னொளியால் பத்து திசைகளையும் பிரகாசிக்கச் செய்தபடியே சென்றது.(169) அது {அந்த ராமபாணம்}, பூர்வத்தில் புரந்தரன் விருத்திரனுடையதை {விருத்திரனுடைய தலையை} எப்படியோ, அப்படியே மஹாபர்வதக் கூடத்திற்கு {பெரும் மலையின் சிகரத்திற்கு} ஒப்பானதும், நன்கு வளைந்த பற்களைக் கொண்டதும், அசையும் அழகிய குண்டலங்களுடன் கூடியதுமான ரக்ஷோதிபதியின் சிரத்தை வெட்டித் தள்ளியது.(170) 

குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹத்தான கும்பகர்ணசிரம் {கும்பகர்ணனின் பெருந்தலை}, ராத்திரியில் உதிக்கும் ஆதித்யைக்கு {அதிதியைத் தலைமையாகக் கொண்ட புனர்வசுவின் {புனர்பூசத்தின்} நக்ஷத்திரங்கள் இரண்டுக்கு} மத்தியில் சந்திரனைப் போல ஒளிர்ந்தது.(171) அளவில் பர்வதத்திற்கு ஒப்பான அந்த ரக்ஷசிரம் {ராக்ஷசன் கும்பகர்ணனின் தலை}, ராம பாணத்தால் தாக்கப்பட்டு கீழே விழுந்து, சர்யாகிருஹங்களையும், {காவல் கோட்டங்களையும்} கோபுரங்களையும் பங்கம் செய்தது; உச்சமாக இருந்த அவர்களின் பிராஹாரத்தையும் இடித்துத் தள்ளியது.(172) அப்போது, மஹத்தான பிரகாசம் கொண்ட அந்த ராக்ஷசனின் பேருடல், பெரும் முதலைகளையும், மீனங்களையும், புஜகங்களையும் {மீன்களையும், பாம்புகளையும்} நசுக்கியபடியே நீர்க்கொள்ளிடத்திற்குள் {கடலுக்குள் / அகழிக்குள்}[6] விழுந்த பின்னர் பூமிக்குள் புகுந்தது.(173)

[6] அடுத்த சர்க்கம் 3ம் சுலோகத்தில், "சமுத்திரத்தில் விழுந்தது" என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மஹாபலவானும், பிராமண, தேவ சத்ருவுமான அந்தக் கும்பகர்ணன் போரில் கொல்லப்பட்டதும், பூமியும், சர்வ பூமிதரங்களும் {மலைகள் அனைத்தும்} நடுங்கின. தேவர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.(174) அப்போது, தேவரிஷிகள், மஹரிஷிகள், பன்னகர்கள் {பாம்புகள்}, ஸுரர்கள் {தேவர்கள்}, சூதானர்கள் {பூதங்கள்}, சுபர்ணர்கள், குஹ்யர்கள் ஆகியோரும், யக்ஷ, கந்தர்வ கணங்களும் நபத்தை {வானத்தை} அடைந்து, ராமனின் பராக்கிரமத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.(175) பிறகு, நைர்ருதராஜ பந்துக்கள் {ராக்ஷச ராஜாவின் உறவினர்கள்}, பெரும் நுண்ணறிவு கொண்டவனை {கும்பகர்ணனை} வதம் செய்த ரகோத்தமனை {ரகுக்களில் உத்தமனான ராமனைக்} கண்டு, ஹரியால் மதங்கொண்ட கஜங்கள் {சிங்கத்தைக் கண்ட யானைகள்} எப்படியோ அப்படியே உரக்க கூச்சலிட்டனர்.(176) யுத்தத்தில் கும்பகர்ணனைக் கொன்றவனான அந்த ராமன், ராஹுவின் முகத்தில் இருந்து விடுபட்டு, இருளை அழித்து தேவலோகத்தில் சூரியன் எப்படியோ {எப்படி ஒளிர்கிறானோ}, அப்படியே ஹரிசைனிய {குரங்குப் படையின்} மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(177) பயங்கர பலம்படைத்த பகைவன் கொல்லப்பட்டதால், முற்றும் மலர்ந்த பத்மங்களைப் பிரதிபலிப்பதைப் போன்ற மகிழ்ச்சி நிறைந்த முகங்களுடன் கூடிய வானரர்கள் பலர், தாக்கப்பட முடியாதவனும், இஷ்டபாகியும் {விருப்பம் நிறைவேறியவனுமான} ராகவனைப் பூஜித்தனர்.(178) ஸுரசைனியமர்த்தனனும் {தேவர்களின் படையை அழித்தவனும்}, எப்போதும் மஹத்தான யுத்தங்களின் அஜிதனும் {வெல்லப்பட முடியாதவனுமான} கும்பகர்ணனைக் கொன்ற பரதாக்ரஜன் {பரதனின் அண்ணன் ராமன்}, மஹாஸுரனான விருத்திரனை {கொன்ற} அமராதிபனை {தேவர்களின் தலைவனான இந்திரனைப்} போல ஆனந்தமடைந்தான்.(179)

யுத்த காண்டம் சர்க்கம் – 067ல் உள்ள சுலோகங்கள்: 179

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை