Bound by Brahmastra | Yuddha-Kanda-Sarga-073 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனை ஆறுதல்படுத்தி, வேள்வி செய்து, புலப்படா நிலை அடைந்த இந்திரஜித்; இராமலக்ஷ்மணர்களும், வானரப் படையும் இந்திரஜித்தின் தாக்குதலில் மயக்கமடைந்தது...
பிறகு, கொல்லப்படாமல் எஞ்சிய ராக்ஷச கணங்கள் {ராக்ஷசக்கூட்டத்தார்}, அங்கே துரிதமாகச் சென்று, தேவாந்தகன், திரிசிரன், அதிகாயன் உள்ளிட்ட ராக்ஷசபுங்கவர்கள் கொல்லப்பட்டதைச் சொன்னார்கள்.(1) அவர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட உடனேயே ராஜா {ராவணன்}, கண்ணீர் நிறைந்த கண்களுடன் மூர்ச்சித்தான். பிறகு, கோரமான புத்திர இழப்பையும், பிராதாக்களின் வதத்தையும் {தன்னுடன் பிறந்தோர் கொல்லப்பட்டதையும்} குறித்து நீண்ட நேரம் சிந்தித்தான்[1].(2)
[1] ஏற்கனவே அதிகாயனின் மரணத்தைக் கேட்டு, அழுது புலம்பிய ராவணன், இப்போது புதிதாக அச்செய்திகளைக் கேட்பது போல் இங்கே வருகிறது. 72ம் சர்க்கத்தில் உள்ள செய்தி, செம்பதிப்பில் இல்லாததற்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும்.
அப்போது, ரதரிஷபனும், ராக்ஷஸராஜஸூனனுமான {தேரோட்டிகளில் காளையும், ராக்ஷசமன்னன் ராவணனின் மகனுமான} இந்திரஜித், சோகார்ணவத்தில் {சோகக் கடலில்} மூழ்கிய தீனனாக ராஜாவை {ராவணனைக்} கண்டு, அவனிடம் இந்த வாக்கியத்தை மொழிந்தான்:(3) "தாதா {ஐயா / தந்தையே}, ராக்ஷசேந்திரரே, இந்திரஜித் ஜீவித்திருக்குமிடத்தில் மோஹமடைதல் {கலக்கமடைதல்} உமக்குத் தகாது. இந்திராரியின் {இந்திரனின் பகைவனான என்னுடைய} பாணங்களால் பீடிக்கப்பட்டும் தன் பிராணன்களைக் காத்துக் கொள்ளும் சமர்த்தன் எவனுமில்லை.(4) இலக்ஷ்மணன் சகிதனான ராமன், என் பாணங்களால் பிளவுண்டு, சிதைந்த தேகத்துடன் ஆயுசு முடிந்தவனாக, உடல் முழுவதும் துளைத்த கூர்மையான சரங்களால் மறைக்கப்பட்டவனாக, பூமிதலத்தில் சயனிப்பதை இதோ பார்க்கப் போகிறீர்.(5) முழு நிச்சயத்துடனும், பௌருஷத்துடனும், தைவத்துடனும் கூடிய {உறுதியுடனும், ஆண்மையுடனும், தெய்வீகத்துடனும் பொருந்தக்கூடியதுமான} இந்த சக்ரசத்ருவின் பிரதிஜ்ஞையை {இந்திரனின் பகைவனான என்னுடைய உறுதிமொழியைக்} கேட்பீராக. இப்போதே இலக்ஷ்மணன் சகிதனான ராமனை அமோகமான சர ஓகங்களால் {வீண்போகாத கணைவெள்ளத்தால்} நிறைக்கப் போகிறேன்.(6) இதோ, இந்திரன், வைவஸ்வதன் {யமன்}, விஷ்ணு, மித்ரன், சாத்யர்களும், அஷ்வினிகள், வைஷ்வாநரன் {அக்னி}, சூர்யன், சந்திரர்களும், பலியின் யஜ்ஞவாடத்தில் {பலிசக்கரவர்த்தி செய்த யாக சாலையில் கண்ட} விஷ்ணுவின் உக்கிரத்தைப் போன்று அளவிடமுடியாத என்னுடைய விக்ரமத்தைக் காணப் போகிறார்கள்" {என்றான் இந்திரஜித்}.(7)
அதீனசத்வனான அந்த திரிதசேந்திர சத்ரு {வலிமையில் குறைவில்லாதவனும், சொர்க்கத்தின் தலைவனுடைய [இந்திரனின்] பகைவனுமான இந்திரஜித்}, இதைச் சொல்லிவிட்டு, ராஜாவிடம் விடை பெற்றுக் கொண்டு, சிறந்த கழுதைகள் பூட்டப்பட்டதும், அனிலனுக்கு {காற்றுக்குத்} துல்லியமான வேகத்துடன் கூடியதுமான ரதத்தில் ஏறினான்.(8) மஹாதேஜஸ்வியான அரிந்தமன் {பகைவரை வெல்பவனான இந்திரஜித்}, ஹரி ரதத்திற்கு {சூரியனின் தேருக்கு} ஒப்பான ரதத்தில் அமர்ந்த உடனேயே, எங்கே யுத்தமோ {எங்கே யுத்தம் நடந்து கொண்டிருந்ததோ}, அங்கே விரைந்து சென்றான்.(9) மஹாத்மாவான அந்த மஹாபலவான் {இந்திரஜித்} புறப்பட்டபோது, பெரும் மகிழ்ச்சியுடனும், கைகளில் மிகச் சிறந்த தனுக்களுடனும் {விற்களுடனும்} கூடிய பலர் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.{10} {அவர்களில்} சிலர் கஜஸ்கந்தங்களில் {யானைகளின் கழுத்தில் ஏறிச்} சென்றனர்;[2] சிலர் பரமவாஜிகளிலும் {சிறந்த குதிரைகளிலும்}, வியாகரங்கள் {புலிகள்}, விருச்சிகங்கள் {தேள்கள்}, பூனைகள், கழுதைகள், ஒட்டகங்கள், புஜங்கங்கள் {பாம்புகள்},{11} பர்வதங்களுக்கு ஒப்பான வராஹங்கள் {பன்றிகள்}, சிங்கங்கள், இரைதேடும் காட்டு விலங்குகள், ஜம்புகங்கள் {நரிகள்}, காகங்கள், ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, மயூரங்கள் {மயில்கள்} ஆகியவற்றில் ஏறிக்கொண்ட பீமவிக்ரமர்களான ராக்ஷசர்கள்,{12} பராசங்கள், முத்கரங்கள், கத்திகள், பரசுகள், கதைகள், புசுண்டிகள், முத்கரங்கள்[3], உழல்தடிகள், சதக்னிகள், பரிகாயுதங்கள் ஆகியவற்றைத் தரித்துச் சென்றனர்.(10-13) நிசாசரர்கள் {இரவுலாவிகள்} அந்த திரிதசேந்திராரியை {சொர்க்கத்தின் தலைவனுடைய பகைவனான இந்திரஜித்தைப்} புகழ்ந்தபடியே, பூர்ணமான சங்கு, பேரி நாதத்துடன் போருக்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றனர்.(14) சங்கு, சசி {சந்திரன்} வர்ணங்கொண்ட சத்ரத்துடன் {வெண்குடையுடன்} கூடிய அந்த ரிபுசூதனன் {பகைவரை அழிக்கும் இந்திரஜித்}, பரிபூர்ண சந்திரனுடன் கூடிய நபத்தை {வானத்தைப்} போல, ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(15) அப்போது, சர்வ தனுஷ்மான்களில் முக்கியனும், ஹேம விபூஷணனும் {வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான இந்திரஜித்} அழகிய பொன்பிடிகளுடன் கூடிய சாமரங்களால் விசிறப்பட்டான்.(16)
[2] வலங்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்டபொலங்கொடி நெடுந்தேர் ஏறி போர்ப் பணை முழங்கப் போனான்அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானைக்குலங்களும் தேரும் மாவும் குழாம் கொளக் குழீஇய அன்றே- கம்பராமாயணம் 8444ம் பாடல், யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலம்பொருள்: {தன் தந்தையான ராவணனை} வலங்கொண்டு வணங்கி, வான்வழி செல்லக்கூடியதும், ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும், பொன்மயமான கொடியைக் கொண்டதுமான நெடுந்தேரில் ஏறி அமர்ந்து போர் முரசு முழங்க புறப்பட்டுச் சென்றான் {இந்திரஜித்}. {அவனுடன்} வெற்றிமாலை அணிந்து, வாள் ஏந்திய அரக்கர்களின் படை அறுபது வெள்ளமும், யானைக்கூட்டங்களும், தேர்களும், குதிரைகளும் கூட்டமாகத் திரண்டு சென்றன.
[3] 13ம் சுலோகத்தில் முத்கரம் என்ற ஆயுதம் இருமுறை சொல்லப்பட்டுள்ளது. தர்மாலயப் பதிப்பில், இந்த ஆயுத வரிசை, "ஈட்டி, முத்கரம், கத்தி, கோடரி, கதை, இவைகளைத் தரித்தவனாய், புசுண்டி, முத்கரம், தடி, சதக்னி, உழலைத்தடி முதலிய ஆயுதங்களைக் கொண்டவனாய் பெரும் சேனையுடன் நிறைந்த சங்க முழக்கங்களோடும் முரசங்களின் ஓசைகளோடும் சென்றான்" என்றிருக்கிறது. இதிலும் "முத்கரம்" என்ற ஆயுதம் இரு முறை சொல்லப்பட்டிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஈட்டி, இரும்புத்தடி, கத்தி, கண்டக்கோடாலி, கதை ஆகிய இவைகளைத் தரித்து அவனைப் பின்தொடர்ந்து போயினர்" என்று ஐந்து ஆயுதங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "ஈட்டி, இரும்பாலான கதை, பட்டாக்கத்தி, கோடரி, கதை ஆகிய படைக்கலன்களைத் தாங்கிக் கொண்டு, சங்குகளின் ஒலி, பேரிகைகளின் முழக்கம் ஆகியவைகளோடு, உடன் வந்த அரக்கர்களால் வாழ்த்து கூறப்பட்ட இந்திரசத்ருவான இந்திரஜித் (போர்க்களம் நோக்கிச்) சென்றான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில் இருப்பதைப் போலவே இதிலும் ஐந்து ஆயுதங்களே குறிப்பிடப்படுகின்றன.
இராக்ஷசாதிபதியான அந்த ஸ்ரீமான் ராவணன், மஹத்தான பலத்துடன் {பெரும்படையுடன்} புறப்படும் அந்தப் புத்திரனைக் கண்டு {பின்வருமாறு} கூறினான்:(17) "புத்திரா, அப்ரதிரதனே {நிகரற்ற தேர்வீரனே}, வாசவனே {இந்திரனே} உன்னால் வெல்லப்பட்டான் எனும்போது, தாக்கப்படக்கூடிய மானுஷனான ராகவனை {ராமனைக்} குறித்து சொல்வதற்கு என்ன இருக்கிறது?" {என்றான் ராவணன்}.{18} இவ்வாறு சொன்ன ராக்ஷசேந்திரனின் மஹா ஆசிகளை அவன் {இந்திரஜித்} ஏற்றுக் கொண்டான்.(18,19அ) சூரியனுக்கு நிகரான தேஜஸ்ஸுடன் கூடியவனும், ஒப்பற்ற வீரியனுமான இந்திரஜித்துடன் கூடிய லங்கையானது, அர்க்கனுடன் {சூரியனுடன்} ஒளிரும் தியுவை {வானத்தைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(19ஆ,20அ)
அரிந்தமனான அந்த மஹாதேஜஸ்வி {பகைவரை வெல்பவனும், பேராற்றல் வாய்ந்தவனுமான இந்திரஜித்}, யுத்தபூமியை அடைந்து, தன் ரதத்தைச் சுற்றிலும் ராக்ஷசர்களை ஸ்தாபித்தான் {நிறுத்தினான்}.(20ஆ,21அ) ஹுதபுக்குக்கு {காணிக்கைகளை உண்ணும் நெருப்புக்கு} நிகரான பிரபையைக் கொண்ட அந்த ராக்ஷசசிரேஷ்டன் {ராக்ஷசர்களில் சிறந்த இந்திரஜித்}, வலிமைமிக்க மந்திரங்களுடன் விதிப்படி ஹுதபோக்தாரம் செய்தான் {நெருப்பில் காணிக்கை அளித்தான் / ஹோமம் செய்தான்}.(21ஆ,22அ) பிரதாபவானான அந்த ராக்ஷசேந்திரன் {இந்திரஜித்}, மலர்மாலைகள், கந்தங்கள் {நறுமணப்பொருள்கள்}, பொரி ஆகியவற்றை ஹவிஸாகக் கொண்டு அங்கே பாவகனை {அக்னியை} வழிபட்டான்.(22ஆ,23அ) சரபத்ரங்களாக {நாணல்களாக} சஸ்திரங்களும், சமித்துகளாக {விறகாக} விபீதிகங்களும் {தான்றி மரப்பட்டைகளும்}, அதேபோல சிவந்த வஸ்திரங்களும், இரும்பாலான வேள்விக்கரண்டியும் பயன்படுத்தப்பட்டன.(23ஆ,24அ) அவன், அங்கே அக்னியைச் சுற்றி தோமரங்களையே சரபத்ரங்களாக {நாணல்களாகப்} பரப்பிவிட்டு, கிருஷ்ண வர்ணம் {கரிய நிறம் கொண்டதும்}, ஜீவித்திருப்பதுமான சாகஸ்யத்தின் {ஓர் ஆட்டின்} தொண்டையைப் பிடித்தான்.(24ஆ,25அ) சமித்துகளில் பற்றிய பெருந்தழல்கள் தூமமில்லாமல் {புகையில்லாமல்} எழுந்தபோது, எந்த லிங்கங்கள் {அறிகுறிகள்} ஏற்பட்டனவோ, அவை விஜயத்தை {அறிகுறிகள் வெற்றியை} முன்னறிவித்தன[3].(25ஆ,26அ) தப்த காஞ்சனத்திற்கு நிகரான பாவகன், ஸ்வயமாக எழுந்து, பிரதக்ஷிணாவர்த சிகையுடன் {புடம்போட்ட பொன்னுக்கு நிகரான அக்னி, தானே எழுந்து, இடமிருந்து வலமாகச் சுழலும் தழல்களுடன்} அந்த ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டான்.(26ஆ,27அ)
[3] புகையில்லா நெருப்பு வெற்றியின் அறிகுறியாகும்.
அஸ்திரவிசாரதனான அவன் {இந்திரஜித்}, பிரம்மாஸ்திரத்தை அங்கே இருப்புக்கு அழைத்து, தன் தனுசு, ரதம் உள்ளிட்ட அனைத்தையும் அதைக்கொண்டு அபிமந்திரித்தான் {அவை அனைத்திலும் பிரம்மாஸ்திரத்தை ஏற்றி ஈர்த்தான்}.(27ஆ,28அ) அந்த அஸ்திரம் இருப்புக்கு அழைக்கப்பட்டு, பாவகன் தணிக்கப்பட்டதும் {அக்னி திருப்தியடையச் செய்யப்பட்டதும்} சார்தம் {சூரியன்}, கிரஹங்கள், இந்து {சந்திரன்}, நக்ஷத்திரங்களுடன் சேர்ந்து நபஸ்தலம் {வானம்} நடுங்கியது.(28ஆ,29அ) ஒளிரும் பாவகனை {அக்னியைப்} போன்ற தேஜஸ்ஸுடனும், மஹேந்திரனுக்கு நிகரான பிரபாவத்துடனும், சிந்தனைக்கு அப்பாற்பட்ட ரூபத்துடனும் கூடிய அவன் {இந்திரஜித்}, சாபம் {வில்}, பாணங்கள், ரதம், அஷ்வங்கள் {குதிரைகள்}, சூதனுடன் {சாரதியுடன்} வானத்தில் புலப்படாமல் மறைந்தான்[4].(29ஆ,இ) பிறகு அவன் {இந்திரஜித்}, ஹயங்களாலும், ரதங்களாலும் நிறைந்ததும், பதாகைகளாலும், துவஜங்களாலும் சோபித்ததும், யுத்த உற்சாகத்துடன் முழங்குவதுமான ராக்ஷசபலத்துடன் {ராக்ஷசப்படையுடன்} புறப்பட்டான்.(30) அவர்கள் {அந்த ராக்ஷசப் படையினர்}, சித்திரமாக அலங்கரிக்கப்பட்ட ஏராளமான சரங்களாலும், வேகத்துடன் கூடிய கூரிய தோமரங்களாலும், அங்குசங்களாலும் வானரர்களைக் கொன்றனர்.(31)
[4] வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கிநலம் சுரந்தன பெருங்குறி முறைமையின் நல்ககுலம் சுரந்து எழு கொடுமையான், முறையினில் கொண்டேநிலம் சுரந்து எழு வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான்.(8604)விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலைப்பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படராஅசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியாத்தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார.(8605)- கம்பராமாயணம் 8604, 8604ம் பாடல்கள், யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலம்பொருள்: {வேள்வி} நெருப்பு, நறுமணத்துடன் வலப்புறமாகச் சுழன்று வந்து, மேலெழுந்து, நன்மையை விளைவிக்கும் பெரும் அறிகுறிகளை முறைப்படி புலப்படுத்த, {ராக்ஷசக்} குலத்தில் சுரந்து எழும் கொடுமைக்கெல்லாம் களமாக விளங்கியவன் {இந்திரஜித், தீ வலப்புறமாகச் சுழலும்} அந்த முறையைக் கொண்டே "போர்க்களத்தில் வெற்றி விளையும்" என்று ஆகாயத்தில் எழுந்து நின்றான்.(8604) ஆகாயத்திற்குச் சென்றவனும், மாயை செய்வதில் பெருமை கொண்டவனுமான அவன், மேலுள்ள பசும்பொன் மயமான உலக்கத்தவரின் {சொர்க்கவாசிகளின்} கண்களும், உள்ளமும் உணர முடியாத, நீர்த்திவலைகளைக் கொண்ட வானத்திற்கிடையில் மறைந்தான். அசையும் நுண்ணிய பெரும் கோள்களுடன், காலமும் சார அவன் மறைந்ததை {புலப்படா நிலையை அடைந்ததை} முனிவரும் அறியார்.
அப்போது குரோதத்துடன் கூடிய ராவணி {ராவணின் மகன் இந்திரஜித்}, அந்த நிசாசரர்களைப் பார்த்து, "யுத்தத்தில் மகிழ்ச்சியுடன் நீங்கள் வானரர்களைக் கொல்வீராக" {என்றான்}.(32)
அப்போது, அந்த ராக்ஷசர்கள் அனைவரும், ஜயத்தில் விருப்பத்துடன் கர்ஜித்தனர். பிறகு அவர்கள் வானரர்கள் மீது கோரமான சரவிருஷ்டியை வர்ஷித்தனர் {பயங்கரமான கணை மழையைப் பொழிந்தனர்}.(33) இராக்ஷசர்கள் சூழ இருந்த அவனும் {இந்திரஜித்தும்}, நாளீகங்கள், நாராசங்கள், கதைகள், முசலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றைக் கொண்டு வானரர்களைப் போரில் கொன்றான்.(34) மரங்களையே ஆயுதங்களாகக் கொண்ட அந்த வானரர்கள், சமரில் தாக்கப்பட்ட உடனேயே, ராவணி மீது {ராவணனின் மகனான இந்திரஜித் மீது} சைலங்களையும், மரங்களையும் பொழிந்தனர்.(35) மஹாபலவானும், மஹாதேஜஸ்வியுமான ராவணாத்மஜன் இந்திரஜித்தும், குரோதமடைந்து, வானரர்களின் சரீரங்களைச் சிதறடித்தான்.(36) குரோதமடைந்த ராக்ஷசர்களுக்கு மகிழ்ச்சியளித்தவன், ஏக சரத்தினால் {ஒரே கணையால்}, நவ, பஞ்ச, சப்தமாக ஹரீக்களைப் பிளந்தான் {ஒன்பது, ஐந்து, ஏழாகக் குரங்குகளைப் பிளந்தான்}.(37) வெல்வதற்கரியவனான அந்த வீரன் சாதகும்பத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டைவையும், சூரியனுக்கு ஒப்பான பிரகாசத்துடன் கூடியவையுமான சரங்களால் சமரில் வானரர்களை அழித்தான்.(38) சமரில் சரங்களால் பீடிக்கப்பட்டு காத்திரங்கள் {உடல் அங்கங்கள்} பிளக்கப்பட்ட அந்த வானரர்கள், ஸுரர்களால் {வீழ்த்தப்பட்ட} மஹாஸுரர்களைப் போல சங்கல்பம் சிதைந்தவர்களாக விழுந்தனர்.(39)
குரோதமடைந்த அந்த வானரரிஷபர்கள், கோரமான கதிர்களைப் போன்ற பாணங்களால் ஆதித்யனைப் போலத் தங்களை எரித்துக் கொண்டிருந்தவனை எதிர்த்துச் சென்றனர்.(40) பிறகு, தேஹம் பிளக்கப்பட்ட சர்வ வானரர்களும், நனவிழந்து, கலக்கமடைந்து, உதிரத்தால் நனைந்தபடியே ஓடினர்.(41) பாறைகளை ஆயுதங்களாகக் கொண்டு, புறமுதுகிடாமல் சமரில் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த வானரர்கள், ராமனின் அர்த்தத்திற்காகப் பராக்கிரமத்தை வெளிப்படுத்தித் தங்கள் ஜீவிதத்தைக் கைவிட்டனர்.(42) சமரில் தொடர்ந்து இருந்த அந்தப் பிலவங்கமர்கள், மரங்களையும், பர்வத உச்சிகளையும், பாறைகளையும் ராவணி {ராவணனின் மகனான இந்திரஜித்} மீது பொழிந்தனர்.(43) மஹாதேஹஸ்வியும், ஸமிதிஞ்ஜயனுமான {போர்களை எப்போதும் வெல்பவனுமான} ராவணி, மரங்களாலும், பாறைகளாலுமான அந்த மஹத்தான வர்ஷத்தை {மழைப்பொழிவைத்} தடுத்து, அவர்களின் பிராணன்களை அபகரித்தான்.(44) அந்தப் பிரபு, பாவகனுக்கு ஒப்பானவையும், பாம்புகளைப் போன்றவையுமான சரங்களால் சமரில் வானரர்களின் அனீகங்களை {படைப்பிரிவுகளைப்} பிளந்தான்.(45)
அவன் கந்தமாதனனை பதினெட்டுக் கூரிய சரங்களால் தாக்கிவிட்டு, தூரத்தில் நின்று கொண்டிருந்த நளனை ஒன்பதால் {ஒன்பது சரங்களால்} தாக்கினான்.(46) போரில் அந்த மஹாவீரியன், ஏழால் மைந்தனின் மர்மங்களைப் பிளந்துவிட்டு, ஐந்து கணைகளால் கஜனையும் தாக்கினான்.(47) பிறகு, பத்தால் ஜாம்பவானையும், முப்பதால் நீலனையும் தாக்கிவிட்டு, சுக்ரீவன், ரிஷபன், அங்கதன், அதேபோல துவிவிதன் ஆகியோரையும்,{48} வரமாகப் பெற்ற, கோரமான, கூரிய கணைகளால் தாக்கி செயலிழக்கச் செய்தான்.(48,49அ) பிறகு, மூளும் காலாக்னியைப் போலக் குரோதமடைந்தவன், ஏராளமான சரங்களால் முக்கிய வானரர்கள் பிறரையும் துன்புறுத்தினான்.(49ஆ,50அ) அந்தப் பெரும்போரில் அவன், நன்கு ஏவப்பட்டவையும், சீக்கிரமாகச் செல்லக்கூடியவையும், சூரியனுக்கு ஒப்பாகப் பிரகாசிப்பவையுமான சரங்களால் வானரர்களின் அனீகங்களை {படைப்பிரிவுகளை} அலைக்கழித்தான்.(50ஆ,51அ) அதில் பெரும் மகிழ்ச்சியடைந்தவன், சரஜாலங்களால் பீடிக்கப்பட்டு ரத்தத்தில் நனைந்திருந்த அந்தப் பெரும் வானர சேனையை பரம பிரீதியுடன் கண்டான்.(51ஆ,52அ)
மஹாதேஜஸ்வியும், பலவானுமான ராக்ஷசேந்திராத்மஜன் {ராக்ஷசத் தலைவன் ராவணனின் மகனான இந்திரஜித்}, மேலும்,{52ஆ} பயங்கரமான பாணவர்ஷத்தையும், சஸ்திரவர்ஷத்தையும் {கணைமழையையும், ஆயுத மழையையும்} உண்டாக்கினான். பலவானான இந்திரஜித், தன்னைச் சுற்றியுள்ள வானர அனீகத்தை {அவற்றைக் கொண்டு} அலைக்கழித்தான்.(52ஆ,53) பெரும்போரில், தன் சொந்த சைனியத்தை விட்டுவிட்டு, புலப்படாத நிலையை அடைந்து, வானர வாஹினியை நோக்கி முன்னேறிச் சென்று, கரிய மேகங்களின் மழை எப்படியோ அப்படியே விரைவாக, உக்கிரமான சர ஜாலங்களை வர்ஷித்தான் {கணை மழையைப் பொழிந்தான்}.(54) அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பான அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, ரணத்தில் சக்ரஜித்தின் பாணங்களால் தேஹங்கள் பிளக்கப்பட்டு, மாயையால் கொல்லப்பட்டு, இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட நகேந்திரங்கள் {பெரும் மலைகள்} எப்படியோ, அப்படியே விகாரமாகக் கதறியவாறு கீழே விழுந்தனர்.(55)
அவர்கள், வானர வாஹினியின் மீது விழும் கூர்முனை பாணங்களை மட்டும் கண்டார்களேயன்றி, மாயையைப் பயன்படுத்தி மறைந்திருந்த ஸுரேந்திரசத்ருவான அந்த ராக்ஷசனை {இந்திரஜித்தைக்} காணவில்லை.(56) அப்போது, மஹாத்மாவான அந்த ரக்ஷோதிபதி {ராக்ஷச அதிபதி இந்திரஜித்}, கூரிய நுனிகளையும், ரவியின் {சூரியனின்} பிரகாசத்ததையும் கொண்ட பாண கணங்களை சர்வ திசைகளிலும் ஏவி வானரேந்திரர்களைத் துன்புறுத்தினான்.(57) அவன், தீப்பொறிகளுடன் ஒளிரும் தீப்பிழம்புகளை வெளியேற்றி, சுடர்விட்டுப் பெருகும் நெருப்பைப் போலப் பிரகாசிக்கும் சூலங்களையும், கத்திகளையும், கோடரிகளையும் பிலவகேந்திர சைனியத்தின் மீது தீவிரமாக வர்ஷித்தான் {தாவிச் செல்பவர்களின் தலைவனான சுக்ரீவனின் படை மீது கடுமையாகப் பொழிந்தான்}.(58)
நெருப்பைப் போலப் பிரகாசிக்கும் சக்ரஜித்தின் பாணங்களால் தாக்கப்பட்டபோது, வானரயூதபர்கள் புஷ்பித்த கிம்சுகங்களை {முற்றாக மலர்ந்த பலாச / புரசு மரங்களைப்} போலிருந்தனர்.(59) இராக்ஷசேந்திரனால் பிளக்கப்பட்ட அந்த வானர ரிஷபர்கள் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} அணுகி, விகாரமாகக் கதறியபடியே கீழே விழுந்தனர்.(60) ககனத்தை {ஆகாயத்தைப்} பார்த்துக் கொண்டிருந்த சிலர், சரங்களால் நேத்ரங்களில் {கண்களில்} தாக்கப்பட்டவர்களாக, அன்யோன்யம் {ஒருவர் மீது மற்றொருவர்} சாய்ந்தபடியே ஜகதீதலத்தில் விழுந்தனர்.(61)
ஹனூமந்தனையும், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவந்தன், சுஷேணன், வேகதர்சி ஆகியோரையும்,{62} மைந்தன், துவிவிதன், நீலன், கவாக்ஷன், கஜன், கோமுகன், கேசரி, ஹரிலோமன், வானரன் வித்யுத்தம்ஷ்ட்ரன்,{63} சூர்யானனன், ஜோதிமுகன், அதேபோல ஹரியான {குரங்கான} ததிமுகன், பாவகாக்ஷன், நளன் ஆகியோரையும், வானரன் குமுதனையும்,{64} என சர்வ ஹரிசார்தூலர்களையும் {குரங்குகளில் புலிகளான இவர்கள் அனைவரையும்}, ராக்ஷசோத்தமன் இந்திரஜித், மந்திரங்கள் ஏற்றப்பட்ட பராசங்கள், சூலங்கள், கூரிய பாணங்கள் ஆகியவற்றால் தாக்கினான்.(62-65) அவன் {இந்திரஜித்}, கதைகளாலும், பொற்புங்கங்களுடன் கூடிய பாணங்களாலும் முக்கிய ஹரியூதர்களை {குரங்குக்குழுத் தலைவர்களைத்} தாக்கிவிட்டு, பாஸ்கரனின் {சூரியக்} கதிர்களுக்கு நிகரான சரவிருஷ்டி ஜாலங்களை {கணை மழைக்கூட்டங்களை} லக்ஷ்மணனுடன் கூடிய ராமன் மீது பொழிந்தான்.(66)
பரமாத்புதஸ்ரீயான {பேரற்புதச் செல்வனான} அந்த ராமன், மழைத்தாரைகளைப் போல் பொழியப்படும் பாணவர்ஷங்களை {கணை மழைகளைக்} குறித்துச் சிந்திக்காமல் {அலட்சியம் செய்து}, சுற்றிலும் நோக்கியபடியே லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(67) "இலக்ஷ்மணா, ஸுரேந்திரசத்ருவான இந்த ராக்ஷசேந்திரன் {தேவர்களின் தலைவனுக்குப் பகைவனான இந்த ராக்ஷசத் தலைவன் இந்திரஜித்}, பிரம்மாஸ்திரத்தை ஆசரித்து, ஹரிசைனியத்தை {குரங்குப்படையை} வீழ்த்தி, கூரிய சரங்களால் இடையறாமல் நம்மையும் துன்புறுத்துகிறான்.(68) ஸ்வயம்பூவால் {பிரம்மனால்} வரமளிக்கப்பட்ட மஹாத்மா {இந்திரஜித்}, சமாஹிதத்துடன் {உறுதியான தீர்மானத்துடன்} தன் பயங்கர உடலை மறைத்துக் கொண்டிருக்கிறான். தேகம் இல்லாமல், அஸ்திரம் ஏந்தி வரும் இந்திரஜித்தைக் கொல்வது இப்போதைய யுத்தத்தில் எப்படி சாத்தியம்?(69) எவருடைய பிரபவம் {சிறப்பு} சிந்தனைக்கு அப்பாற்பட்டதோ, அந்த பகவான் ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} அஸ்திரமே இதுவென நினைக்கிறேன். மதிமிக்கவனே, இப்போது நீயும் என்னுடன் சேர்ந்து, பாணங்களின் பாய்ச்சலை இங்கே மனக்கலக்கமின்றி சஹித்துக் கொள்வாயாக.(70) இந்த ராக்ஷசேந்திரன், சர்வத்தையும் சாயக விருஷ்டி ஜாலங்களால் {கணைமழைக் கூட்டங்களால்} மறைக்கிறான். சூரர்கள் வீழ்ந்துவிட்ட இந்த வானரராஜ சைனியம் மொத்தமும் ஒளியிழந்திருக்கிறது.(71) மகிழ்ச்சியும், ரோஷமுமற்றவர்களும் {கோபமுமற்றவர்களும்}, யுத்தத்தைத் தொடராதவர்களும், நனவிழந்து விழுந்தவர்களுமான நம்மைக் கண்டு, "நாம் ரணாக்ர லக்ஷ்மியை அடைந்தோம் {போரின் தொடக்கத்திலேயே நாம் வெற்றியை அடைந்துவிட்டோம்}" என்று இவன் அமராரிவாசத்தில் பிரவேசிப்பான் {இந்த இந்திரஜித், தேவர்களுடைய பகைவரின் வசிப்பிடமான லங்கைக்கே திரும்பிச் செல்வான்}. இது நிச்சயம்" {என்றான் ராமன்}.(72)
பிறகு, அவ்விருவரும் இந்திரஜித்தின் அஸ்திர ஜாலங்களால் தாக்கப்பட்டு அங்கேயே அப்படியே விழுந்தனர். அப்போது, அந்த ராக்ஷசேந்திரனும் {இந்திரஜித்தும்} அங்கே வீழ்ந்திருக்கும் இருவரையும் கண்டு, யுத்தத்தில் மகிழ்ச்சி நாதம் செய்தான்.(73), அப்போது, வானர சைனியத்தையும், லக்ஷ்மணன் சகிதனான ராமனையும் அங்கே போரில் இவ்வாறு மயக்கமடையச் செய்துவிட்டு, தசக்ரீவனின் புஜங்களால் பாதுகாக்கப்படும் புரீக்குள் {லங்கைக்குள்} நுழைந்தான்.{74} யாதுதானர்களால் துதிக்கப்பட்டவனாகச் சென்று, தன் பிதாவிடம் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் சொன்னான்.(74,75)
யுத்த காண்டம் சர்க்கம் – 073ல் உள்ள சுலோகங்கள்: 75
Previous | | Sanskrit | | English | | Next |