Tara laments again | Kishkindha-Kanda-Sarga-23 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாலியின் விதியை நினைத்து வருந்திப் புலம்பிய தாரை; வாலியின் அவலநிலையைக் காணும்படி அங்கதனை அழைத்தது...
அப்போது, உலகத்தால் நன்கு அறியப்பட்டவளான தாரை, கபிராஜனின் {குரங்குகளின் மன்னனான வாலியுடைய} அந்த முகத்தின் சமீபம் சென்று முகர்ந்து, மரித்த பதியிடம் {இறந்து போன தன் கணவன் வாலியிடம், பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(1) "வீரரே, என் சொற்களின்படி செயல்படாத நீர், சமமற்றதும், கற்கள் பரப்பப்பட்டதும், மிகக் கடினமானதுமான வசுதாதலத்தில் {தரையில்} கிடக்கிறீர்.(2) வானரேந்திரரே {வானரர்களின் தலைவரே}, மஹீயே {நிலமகளே} உமக்கு என்னைவிட பிரியமானவள் என்பது நிச்சயம். அதனாலேயே, எனக்கு மறுமொழி ஏதும் கூறாமல் அவளைத் தழுவிக் கிடக்கிறீர்.(3) வீரரே, சாஹஸப்பிரியரே, நீர் சுக்ரீவரின் வசம் அடைந்தீர்; சுக்ரீவரே விக்ராந்தரானார் {வெற்றியடைந்தார்}. அஹோ, இதுவே விதியானது.(4)
இரிக்ஷவானர முக்கியர்கள் {கரடிகள், குரங்குகள் ஆகியோரில் முக்கியமானவர்கள்} பலியை {வழிபடத்தகுந்தவரைப்} போல உம்மை முழுமையாக உபாசிக்கின்றனர் {வழிபடுகின்றனர்}. அவர்களின் பரிதாபகரமான புலம்பல்களையும், அங்கதனின் அழுகையையும், என்னுடைய இந்தக் கதறலையும் கேட்டும் ஏன் நீர் விழித்தெழாமல் இருக்கிறீர்?(5,6அ) உம்மாலே பூர்வத்தில் அழிக்கப்பட்ட ரிபுக்கள் {பகைவர்} எங்கே சாய்க்கப்பட்டனரோ அந்த வீரசயனத்திலேயே இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கிறீர்.(6ஆ,7அ) சுத்தமான சத்வ குலத்தில் ஜனித்தவரே, யுத்தப்பிரியரே, மானத்தைக் காப்பவரே, என் அன்புக்குரியவரே, நீர் என்னைத் தனிமையில் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டீர்.(7ஆ,8அ)
விவேகிகள், கன்னியை சூரனுக்குக் கொடுக்கக்கூடாது. கொல்லப்பட்ட சூரரின் பாரியையான நான், விதவையாகிவிட்டதை இப்போது பார்க்கலாம்.(8ஆ,9அ) என் மானம் பங்கமடைந்தது. என் சாஷ்வதகதி பங்கமடைந்தது {நன்னிலையும், இன்பமும் பாழானது}. ஆழமானதும், பெரியதுமான சோக சாகரத்தில் நான் மூழ்குகிறேன்[1].(9ஆ,10அ) கொல்லப்பட்ட பர்தாவை {கணவர் வாலியைக்} கண்டும், எது நூறாகப் போகாமல் {சிதறாமல்} திடமாக இருக்கிறதோ, அத்தகைய என் ஹிருதயம் நிச்சயம் கல்லின் சாரத்தாலானதாக இருக்க வேண்டும்.(10ஆ,11அ) இயல்பிலேயே எனக்குப் பிரியமானவரும், நண்பரும், பர்த்தாவும், போர்களில் பராக்கிரமருமான சூரர் பஞ்சத்வத்தை[2] {ஐந்தாம் நிலையான மரணத்தை} அடைந்துவிட்டார்.(11ஆ,12அ) புத்திரிணியாக {பிள்ளைகளைப் பெற்றவளாக} இருந்தாலும், தனம், தானியம், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், பதியை இழந்த எந்த நாரீயையும் ஜனங்கள் {எந்தப் பெண்ணையும் மக்கள்} விதவை என்றே அழைப்பார்கள்.(12ஆ,13அ)
[1] வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்கரை சேரா இடர் வேலை காண்கிலேன்உரை சேர் ஆருயிரே என் உள்ளமேஅரைசே யான் இது காண அஞ்சினேன்- கம்பராமாயணம் 4098ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: மலையினை ஒத்த உமது தோள்களில் சேர்ந்து எந்நாளும் இன்புற்றிருந்த நான் கரை காணாத துன்பக்கடலின் எல்லையைக் காணாதிருக்கிறேன். புகழ்பொருந்திய என் ஆருயிரே, என் உள்ளமே, அரசே, நான் இதைக் காண அஞ்சினேன் {நீர் இறந்து கிடக்கும் இந்தத் துன்பக் காட்சியைக் காண அஞ்சினேன்}.
[2] "விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை, துரியம் {தன்மயமாகி நிற்கும் உயர்நிலை} என்ற நிலைகளே இதன் {பஞ்சத்வத்திற்கு} முந்தைய நான்கு நிலைகள். ஐந்தாம் நிலை மரணமாகும்" என்று கிஷ்கிந்தா காண்டம் 20ம் சர்க்கம் 9ம் சுலோகத்திற்கான அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார்.
வீரரே, உமது காத்திரங்களில் {உறுப்புகளில்} இருந்து வெளிப்பட்ட உதிர மண்டலத்தில், இந்திரகோபப் பூச்சியின் {சிவப்பு} வண்ணத்திலான உமது சயனத்தில் கிடப்பது போல் கிடக்கிறீர்.(13ஆ,14அ) பிலவகரிஷபரே {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையே}, புழுதியும், குருதியும் படிந்த உமது காத்திரங்களை {அங்கங்களை} என் இரு கைகளாலும் முழுமையாகத் தழுவிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை[3].(14ஆ,15அ) அதிபயங்கரமான இந்த வைரத்தில் {உமக்கும், சுக்ரீவருக்கும் இடையிலான இந்தப் பகையில்} இதோ சுக்ரீவர் காரியத்தை நிறைவேற்றிவிட்டார். இராமன் ஏவிய ஒரே கணையில் அவரது {சுக்ரீவரின்} பயம் தீர்ந்தது.(15ஆ,16அ) நீர் பஞ்சத்வத்தை அடைந்தீர். உமது ஹிருதயத்தில் தைத்திருக்கும் சரத்தால் தடுக்கப்பட்டு, உமது காத்திரங்களை {அங்கங்களை} ஸ்பரிசிக்க முடியாமல் உம்மைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" {என்றாள் தாரை}.(16ஆ,17அ)
[3] வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்றுஉரையாய் என் வயின் ஊனம் யாவதோ?- கம்பராமாயணம் 4102ம் பாடல், வாலி வதைப் படலம்பொருள்: மலைகள் போன்ற உமது தோள்கள் புழுதி படிய தரை மேல் கிடப்பவரே, "நீர் அடைந்த கதியும் இதுவோ?" என்று கரைந்துருகாமல் கதறும் என் அழுகையைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீரே; என்னிடம் உள்ள குற்றம் என்ன?
அப்போது நீலன் {என்ற வானரன்}, அவனது காத்திரத்தில் {வாலியின் மார்பில்} பாய்ந்த சரத்தை, மலைப்பிளவில் உறுதியாகப் பற்றிக் கொண்டு பளபளக்கும் விஷப்பாம்பைப் போலப் பிடுங்கினான்.(17ஆ,18அ) பிடுங்கியபோது அந்த பாணம், தினகரனில் இருந்து வந்து அஸ்தமலையைத் தாக்கி முழுமையாகத் தடுக்கப்பட்டும் {அஸ்தமனக்} கதிர்களைப்போல மின்னியது.(18ஆ,19அ) தராதரத்தில் {பூமியால் தாங்கப்படும் மலையில்} இருந்து {பெருகும்} தாமிரகைரிகம் {செந்தாது} கலந்த தாரைகளைப் {நீர்த்தாரைகளைப்} போலவே அவனது புண்களில் இருந்து ரத்தத் தாரைகள் எங்கும் பெருகின.(19ஆ,20அ) போர்ப்புழுதியால் எங்கும் பூசப்பட்டிருந்த பர்த்தாவை {கணவன் வாலியைத்} துடைத்து, அஸ்திரத்தால் தாக்கப்பட்ட சூரனைத் தன் நயனத்தில் ஜனித்த கண்ணீரால் நனைத்தாள்.(20ஆ,21அ)
அங்கனையான {அழகிய பெண்ணான} தாரை, கொல்லப்பட்டு, உதிரத்தால் சர்வ அங்கங்களும் நனைந்த பதியைக் கண்டு, சிவந்த கண்களுடன் கூடிய புத்திரன் அங்கதனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(21ஆ,22அ) "புத்திரா, பிதாவின் கொடூரமான பஷ்சிம {மேற்கு / மறையும் / மரண} அவஸ்தையைப் பார். பாப கர்மங்களால் பற்றப்பட்ட வைரம் அந்தகதியடைந்தது {பகை முடிவை அடைந்தது}.(22ஆ,23அ) புத்திரா, பாலசூரியனின் பிரகாச உடலைக் கொண்டவரும், யமனின் வசிப்பிடத்திற்குப் பிரயாணம் செய்பவரும், கௌரவமளிக்கும் ராஜாவுமான பிதாவை வணங்குவாயாக" {என்றாள் தாரை}.(23ஆ,24அ)
இவ்வாறு சொல்லப்பட்டவன், வேகமாக எழுந்து, "நான் அங்கதன்" என்று சொல்லி, பருத்தவையும், உருண்டவையுமான தன்னிரு கைகளாலும் பிதாவின் சரணங்களைப் பற்றிக் கொண்டான்.(24ஆ,25அ) {அப்போது தாரை}, "உம்மை வணங்கும் அங்கதனிடம், முன்பு போல, 'புத்திரா, ஆயு பவ {பல்லாண்டு வாழ்க}' என்று நீர் சொல்லாமல் இருப்பது என்ன அர்த்தம்?(25ஆ,26அ) சிம்மத்தால் கோவிருஷம் {காளை} வீழ்த்தப்பட்டதும், வத்சத்துடன் கூடிய கோவைப் போல {கன்றுடன் கூடிய பசுவைப் போல}, இதோ புத்திரனின் சகாயத்துடன் கூடிய நான், சேதனமிழந்த {நனவு போன} உம்மை உபாசிக்கிறேன் {உமக்குத் தொண்டாற்றுகிறேன்}.(26ஆ,இ) சங்கிராம யஜ்ஞம் {போர் வேள்வி} செய்துவிட்டு, பத்தினியான என்னை விட்டுவிட்டு, ராமனின் ஆயுதமெனும் நீரில் எவ்வாறு அவப்ருத[4] ஸ்நானம் {நீராடும் சடங்கைச்} செய்தீர்?(27)
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவப்ருதம் என்பது யாகத்தின் மிக முக்கியமான இறுதி அங்கமாகும். இது வேள்வியின் இறுதியில் நீராடும் சடங்காகும். வாலியின் வாழ்வின் கடைசி நீராடலாக இங்கே குறிப்பிடப்படும் அவப்ருதம் மரணத்தைக் குறிக்கிறது. போரானது இவ்வாறு ஒரு வேள்வியுடன் ஒப்பிடப்படும்போது, அவப்ருதம் என்ற சொல் அந்த உரையில் பயன்படுத்தப்படுகிறது. எந்த யாகத்தையும், அதைத் தொடர்ந்த நீராடலையும் மனைவியுடனேயே செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
போரில் திருப்தியடைந்த தேவராஜன் {இந்திரன்}, எதை உமக்கு தத்தம் செய்தானோ, எது உமக்குப் பிரியமானதோ, அந்தப் பொன்மயமான மாலை இப்போது ஏன் காணப்படவில்லை?(28) கௌரவங்களை அளிப்பவரே, சைலராஜனை {மலைகளின் மன்னனான மேரு மலையை} வலம் வரும் சூரியனின் பிரபையைப் போலவே ராஜ்ஜியஸ்ரீயும் {ராஜலக்ஷ்மியும்} உயிர் போனாலும் உம்மைவிட்டு போகமாட்டாள்.(29) நான் சொன்ன பத்தியமான சொற்களின்படி நீர் செயல்படவில்லை. உமக்கு நிவாரணம் செய்யும் {உம்மைத் தடுக்கும்} சக்தியும் எனக்கில்லை. போரில் நீர் கொல்லப்பட்டதும், புத்திரனுடன் நானும் கொல்லப்பட்டவளானேன். உம்முடன் சேர்ந்து ஸ்ரீயும் {செழிப்பின் தேவியான லக்ஷ்மியும்} என்னைக் கைவிட்டுவிட்டாள் {என்றாள் தாரை}.(30)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 23ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |