The arrow shot by Rama | Kishkindha-Kanda-Sarga-16 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தாரையின் சொற்களை மறுத்து அதட்டிய வாலி; வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையிலான மோதல்; ராமன் ஏவிய கணை வாலியின் மார்பில் தைத்தது...
தாராதிபனின் {நட்சத்திரங்களின் அதிபனான சந்திரனின்} முகம் படைத்த அந்த தாரை இவ்வாறு பேசியதும், வாலி {அவளை} அதட்டும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "அழகிய முகம்படைத்தவளே, உடன்பிறந்தவனும், விசேஷமாக சத்ருவுமானவன் {சுக்ரீவன்} நல்ல கோபத்துடன் கர்ஜிக்கும்போது, நான் பொறுத்துக் கொள்ள வேண்டிய காரணமென்ன?(2) பீரு {பயந்தவளே}, சமரில் பின்வாங்காதவர்களும், தோல்வியடையாதவர்களுமான சூரர்களுக்கு, தாக்குதலை {அவமானத்தைப்} பொறுப்பதைவிட மரணமே மேலானது.(3) போர்க்களத்தில் யுத்தத்தை விரும்பி கர்ஜிக்கும் ஹீனக்ரீவனான {மந்தக் கழுத்தைக் கொண்ட} சுக்ரீவனின் கொந்தளிப்பைப் பொறுத்துக் கொள்ள நான் சமர்த்தனல்லேன்.(4) என்னைப் பொறுத்தவரையில் ராகவனை {ராமனைக்} குறித்து நீ வருந்த எந்தக் காரியமும் இல்லை. தர்மஜ்ஞனும், கிருதஜ்ஞனுமானவன் {தர்மத்தை அறிந்தவனும், செய்நன்றி அறிந்தவனுமான ராமன்}, எவ்வாறு பாபம் செய்வான்?[1](5)
[1] ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள்மாற்றவள் ஏவ மற்று அவள்தன் மைந்தனுக்குஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்போற்றலை இன்னன புகறல்பாலையோ (3967)நின்று பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்வென்றி வெஞ்சிலை அலால் பிறிது வேண்டுமோதன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ (3968)- கம்பராமாயணம் 3967, 3968 பாடல்கள், வாலி வதைப் படலம்பொருள்: "ஏற்ற {ஆண்டு வந்த} பெரிய உலகின் ஆட்சி முழுவதையும், பெற்றவளுக்கு மாற்றவள் {கைகேயி} ஆணையிட, அவளது மைந்தனுக்கு {பரதனுக்கு}, தாங்குதற்கரிய பெரும் மகிழ்ச்சியுடன் அளித்த ஐயனை {ராமனைப்} போற்றாமல் இத்தகையவற்றைக் கூறலாமா? நிலைபெற்ற பெரிய உலகங்கள் முழுமையும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும், வெற்றியைத் தருவதும், கொடியதுமான அவனது வில்லை அல்லாமல் பிறிதொன்றை அவன் வேண்டுவானோ? தனக்கு நிகர் தானே அல்லாமல், வேறு ஒருவரும் இல்லாதவன் {ராமன்} அற்பச் செயல்புரியும் குரங்கோடு சேரும் நட்பை கொள்வானோ?" {என்றான் வாலி}
{இன்னும்} ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்? சஹஸ்திரீகளுடன் திரும்பிச் செல்வாயாக. என் மீது கொண்ட பக்தியின் காரணமான உன் நட்பை வெளிப்படுத்தியிருக்கிறாய்.(6) நான் சென்று சுக்ரீவனின் அழைப்பை ஏற்று போரிட்டு அவனது கலக்கத்தையும், அகந்தையையும் அழிப்பேனேயன்றி, அவனது பிராணனைப் பறிக்க மாட்டேன்.(7) நான் உண்மையில் போரில் திடமாக நின்று, அவன் விரும்பியதையே செய்வேன். விருக்ஷங்கள், முஷ்டி ஆகியவற்றின் தாக்குதலில் பீடிக்கப்பட்டால் அவன் திரும்பிச் சென்றுவிடுவான்.(8) அந்த துராத்மாவால் {சுக்ரீவனால்} என் கர்வத்தையும், கடுமையான தாக்குதலையும் சஹித்துக் கொள்ள முடியாது. தாரையே, என்னிடம் கொண்ட நட்பை வெளிப்படுத்தி சஹாயத்வத்தைச் செய்துவிட்டாய்.(9) என் பிராணன் மீது சபதம் செய்கிறேன். ஜனங்களுடன் திரும்பிச் செல்வாயாக. நான் என்னுடன் பிறந்தவனை ரணத்தில் எளிதாக ஜயித்துத் திரும்பி வருவேன்" {என்றான் வாலி}.(10)
பிரியவாதினியும் {இனிமையாகப் பேசுபவளும்}, தக்ஷிணையுமான {சாமர்த்தியசாலியுமான} அந்த தாரை, அந்த வாலியைத் தழுவிக் கொண்டு மந்தமாக அழுதுகொண்டே பிரதக்ஷிணை செய்தாள் {வாலியை வலம் வந்தாள்}.(11) பிறகு வெற்றியை விரும்புகிறவளான அந்த மந்திரவித் {மந்திர ஞானமுள்ள தாரை}, ஸ்வஸ்தி அயனத்தைச் செய்து {பயணத்திற்கான அருளை ஈர்த்து}[2], சோக மோஹிதத்துடன் ஸ்திரீகளுடன் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தாள்.(12) தாரை, ஸ்திரீகளுடன் தன் ஆலயத்திற்குள் பிரவேசித்ததும், மஹாசர்ப்பத்தைப் போல பெருமூச்சு விட்டபடியே குரோதமடைந்தவன் {வாலி}, நகரத்தில் இருந்து வெளிப்பட்டான்.(13) மஹா ரோஷத்துடன் கூடியனும், பரம வேகவானுமான அந்த வாலி, சத்ருவைக் காணும் நோக்கில், பெருமூச்சுவிட்டபடியே, தன் பார்வையை எங்கும் பரப்பினான்.(14)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "போரிடப் போகும் போராளியின் தாயோ, தாரமோ அவனது நெற்றியில் திலகமிட்டு, கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி, தலையில் அக்ஷதைகளை இட்டு, வேத மந்திரங்களுடன் வில்லையோ, வாளையோ கொடுப்பது "ஸ்வஸ்த்யயனம்" எனும் வேதமுறையிலான வழக்கமாகும். இந்த ஆயுதங்கள் அந்த வீரர்களுடைய மனைவியரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தங்கள் கணவர்களின் வெற்றிக்காக அந்த ஆயுதங்களை வழிபடவேண்டும். ஆரண்ய காண்டம், 8ம் சர்க்கம், 18ம் சுலோகத்தில், ராமன் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில் இருந்து காட்டுக்குப் புறப்படும்போது, சீதை அவனிடம் வில்லையும், வாளையும் கொடுக்கிறாள்" என்றிருக்கிறது.
அப்போது, ஸ்ரீமானும், தன்னம்பிக்கையுடன் கூடிய அனலனை {நெருப்பைப்} போல ஒளிர்ந்த ஹேமபிங்களனுமான {தங்கம் போன்ற செம்மஞ்சள் நிறம் கொண்டவனுமான} சுக்ரீவன், {தன் இடைக்கச்சையை} இறுகக் கட்டியிருப்பதைக் கண்டான்.(15) பரம கோபத்துடன் கூடியவனும், மஹாபாஹுவும், அருகில் சென்றவனுமான அந்த வாலி, வஸ்திரங்களை இறுகக் கட்டியிருக்கும் அந்த சுக்ரீவனைக் கண்டான்.(16) வீரியவானான அந்த வாலி, {தன் இடைக் கச்சையை} இறுகக் கட்டிக் கொண்டு, முஷ்டியை உயர்த்தி அந்த க்ஷணத்திலேயே யுத்தம் செய்ய சுக்ரீவனை நோக்கிச் சென்றான்.(17) சுக்ரீவனும், ஹேம மாலையுடன் {பொன்னாரத்துடன்} கூடிய வாலியை நோக்கிப் பெரும் வேகத்துடன் வெளிப்பட்டுத் தன் முஷ்டியை முறுக்கி ஆயத்தமானான்.(18)
குரோதத்தில் தாமிரம் போலான கண்களைக் கொண்ட வாலி, ரணகோவிதனும் {போரில் நிபுணனும்}, மஹாவேகத்துடன் பாய்ந்தவனுமான சுக்ரீவனிடம் இந்த சொற்களைச் சொன்னான்:(19) "மடக்கப்பட்ட விரல்களுடன் கூடிய என்னுடைய இந்த இறுகிய முஷ்டியைக் கொண்டு வேகமாகக் குத்தினால், உன் பிராணன் பறிபோகும்" {என்றான் வாலி}.(20)
{வாலி} இவ்வாறு சொன்னதும், குரோதமடைந்தவன் {சுக்ரீவன்}, வாலியிடம் {பின்வருமாறு} சொன்னான், "தலையில் விழப்போகும் இந்த முஷ்டி உமது பிராணனைப் பறிக்கும்" {என்றான் சுக்ரீவன்}.(21)
வாலி வேகமாக அவனருகே வந்து தாக்கியதால் குரோதமடைந்தவன் {சுக்ரீவன்}, ரத்தம் பாயும் அருவிகளுடன் கூடிய பர்வதம் போலானான்.(22) தேஜஸ்வியான சுக்ரீவன், தயக்கமில்லாமல் ஒரு சாலத்தை {ஆச்சா மரத்தை} வேரோடு பிடுங்கி, வஜ்ரத்தால் மஹாகிரியை {தாக்குவதைப்} போல வாலியின் அங்கங்களைத் தாக்கினான்.(23) சாலத்தின் வீச்சால் தாக்கப்பட்டவன் {வாலி}, சாகரத்தில் பெரும்பாரத்துடன் செல்லும் வணிகக் கப்பலைப் போலத் தத்தளித்தான்.(24) பயங்கர பலத்தையும், வலிமையையும், சுபர்ணனுக்கு சமமான வேகத்தையும், கோரமான உடற்கட்டைக் கொண்டவர்களும், பரஸ்பரம் ஒருவரையொருவர் பகைவராகக் கண்டு தாக்கிக் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், அம்பரத்தில் {வானத்தில்} சந்திரனையும் சூரியனையும் போல பயங்கர யுத்தம் செய்தனர்.(25,26அ)
பலமும், வீரியமும் கொண்ட வாலி, முன்னேறிச் சென்ற போது, மஹாவீரியனான சூரிய புத்திரன் சுக்ரீவன் முற்றிலும் களைப்படைந்தான்.(26ஆ,27அ) வாலியால் செருக்கு பங்கமடைந்து, வலிமை குன்றிய சுக்ரீவன், மகிழ்ச்சியின்றி வாலியை எதிர்கொண்டபடியே ராகவனைப் பார்க்கத் தொடங்கினான்.(27ஆ,28அ) விருத்திரனையும், வாசவனையும் {இந்திரனையும்} போன்ற அவ்விருவரும் விருக்ஷங்களையும் {மரங்களையும்}, சாகைகளையும் {கிளைகளையும்}, சிகரங்களையும், வஜ்ர முனைகளுக்கு ஒப்பான நகங்களையும், முஷ்டிகளையும், முழங்கால்களையும், பாதங்களையும், கைகளையும் கொண்டு மீண்டும் மீண்டும் கோரமான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(28ஆ,29) வனசாரிகளும், ரத்தத்தால் நனைந்தவர்களுமான அந்த வானரர்கள் இருவரும், பரஸ்பரம் அச்சுறுத்தியபடியே மேகங்களைப் போன்ற மஹா சப்தத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டனர்.(30)
அப்போது அந்த ராகவன் {ராமன்}, வானரேஷ்வரனான சுக்ரீவன், களைப்படைந்து மீண்டும் மீண்டும் திசைகளைப் பார்க்கத் தொடங்குவதைக் கண்டான்.(31) பிறகு, மஹாதேஜஸ்வியும், வீரனுமான அந்த ராமன், ஹரேஷ்வரனின் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவனின்} துன்பத்தைக் கண்டு, வாலியை வதம் செய்யும் உத்தேசத்துடன் சரத்தை நோக்கினான்.(32) அப்போது விஷம் கொண்ட பாம்புக்கு ஒப்பான சரத்தை தனுசில் பொருத்தி, காலாந்தகனின் சக்கரத்தைப் போல அந்த வில்லை வளைக்கத் தொடங்கினான்.(33) அதன் {அந்த வில்லின்} நாணொலியால் அச்சமடைந்த பத்ரரதேஷ்வரர்களும் {இலைகளை ரதங்களாகக் கொண்ட தலைவர்களான பறவைகளும்}, மிருகங்களும் யுகாந்தம் {யுகத்தின் முடிவு} போல் திகைத்து ஓடிச் சென்றன.(34) ராகவனால் ஏவப்பட்ட அந்த மஹாபாணம், வஜ்ரத்தின் ஒலியுடன், அசனிக்கு {இடிக்கு} ஒப்பாக மின்னிக்கொண்டே சென்று வாலியின் மார்பில் பாய்ந்தது.(35)
அப்போது மஹாதேஜஸ்வியும், வீரியங் கொண்டவனுமான அந்த கபீஷ்வரன் {குரங்குகளின் தலைவனான வாலி}, அதன் {அந்த பாணத்தின்} வேகத்தால் தாக்கப்பட்டு மஹீதலத்தில் {தரையில்} விழுந்தான்.(36) அஷ்வயுக் சமயம் கொண்ட {இந்திரோத்சவம் நடைபெறும் ஐப்பசி}[3] மாசத்தின் பௌர்ணமியில் மஹீதலத்தில் இறக்கப்படும் இந்திர துவஜத்தை {கொடிமரத்தைப்} போல, கண்ணீரால் தடைப்பட்ட கண்டத்துடனும் {தொண்டையுடனும்}, பதற்றத்துடனும் கூடிய வாலி வலிமையிழந்தவனாக, நினைவிழந்தவனாக மெல்ல விழுந்தான்.(37)
[3] தர்மாலயப் பதிப்பில், "ஐப்பசி மாதம் (கௌட தேசத்தில்) உத்ஸவம் நடைபெறுகிறதாகிய மாசத்தில் பௌர்ணமி தினத்தில் பூமியில் இறக்கப்பட்ட இந்திர பிம்பத்தை வரையப்பட்ட கொடி போலவே அறிவிழந்து ஒளிகுன்றியவனானான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மஹாதேஜஸ்வியும், வீரியத்தில் கர்வமற்றவனுமாகிய அந்த வானரேஷ்வரன் வாலி அந்தப் பாண வேகத்தினால் அடிக்கப்பட்டு ஒளி மங்கி ப்ரஜ்ஞையும் தப்பிக் கார்த்திகை மாஸத்துப் பூர்ணிமையினன்று உத்ஸவத்தின் முடிவில் நிலத்தில் தள்ளப்பட்ட இந்த்ர த்வஜம் விழுவது போல் கீழே விழுந்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "மதங்கொண்ட வாலியும், அதனால் அடிபட்டு ஆசுவயுஜமாசத்தில் பூர்ணிமைதிதியில் உயர்த்திக் கட்டப்பட்ட இந்திரதுவஜம் போலச் சாய்ந்து தரையில் விழுந்து மோகமடைந்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "ஐப்பசி மாத பூர்ணிமையில் (பௌர்ணமியில்) தரை இறக்கப்பட்ட இந்திரத்வஜம் போல், ஒளியிழந்து, உணர்விழந்து விழுந்தான் வாலி" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில் இந்த சுலோகத்தின் பின் வரும் அடைப்புக்குறிக்குள், "கௌட தேசத்தில், ஆச்வயுஜ மாதம் பௌர்ணமி திதியில், இந்திரனைக் குறித்து நடக்கும் ஒரு திருவிழாவில், தொடக்க நாளில் கொடி ஏற்றப்பட்டு, உற்சவம் நிறைவடைந்ததும், மேலே இருக்கும் கொடியை வேகமாக இறக்கிவிடுவது வழக்கம். அந்தக் கொடியிறக்கத்தை ஒப்புவமையாகக் காட்டுகிறார் ஆதிகவி" என்றிருக்கிறது. பழங்காலத்தில் அங்கம், வங்கம், கலிங்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது கௌட தேசமாகும். ஸ்ரீதத்துவநிதி என்ற நூலின் இரண்டாம் பாகத்தில், "சாந்திர மாதத்தின் படிக்கு சைத்திரம் முதலான மாதங்களின் ஸ்வரூபங்கள்" என்ற தலைப்பின் கீழ், வரிசைப்படி வரும் ஐப்பசி மாதத்திற்கு "ஆசுவயுஜமாஸ ஸ்வரூபம்" என்ற உப தலைப்பில், "ஆறு முகங்களை உடையவரும், பனிரெண்டு கைகளை உடையவரும், சிறந்த கரடியின் மீது வீற்றிருப்பவரும், பக்தர்களின் விருப்பத்தை அளிப்பவரும், சிவப்பு நிறமுடையவரும் இஷன் என்ற பெயரை உடையவருமான ஆசுவயுஜமாஸத்தின் அதிதேவதையை தினந்தோறும் வழிபடுகின்றேன்" என்றிருக்கிறது.
அந்த நரோத்தமன் {மனிதர்களில் சிறந்த ராமன்}, யுகாந்தக காலனுக்கு {பிரளய கால யமனுக்கு} ஒப்பானதும் காஞ்சனத்தாலும், வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்வதும், பகைவரை அழிப்பதுமான அந்த உத்தம சரத்தை, ஹரனின் முகத்தில் {சிவனின் வாயில்} இருந்து வெளிப்படும் தூமத்துடன் கூடிய அக்னியை {புகையுடன் கூடிய நெருப்பைப்} போல ஏவினான்.(38) அப்போது வாசவனின் மகன் {இந்திரனின் மகனான வாலி}, போரில் ரத்தநீர் பெருக்கால் நனைந்து, நனவிழந்து, அசலத்தில் {மலையில்} உயர்ந்து நிற்பதும், நன்கு புஷ்பித்ததுமான அசோக மரத்தைப் போலவும், இறக்கப்பட்ட இந்திர துவஜத்தைப் போலவும் பூமியில் விழுந்தான்.(39)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 16ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |