Sugreeva laments | Kishkindha-Kanda-Sarga-24 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன்னைப் பழித்து, வாலியைப் புகழ்ந்த சுக்ரீவன்; நெருப்பில் நுழைய ராமனின் அனுமதியை வேண்டியது; ராமன் சொன்ன ஆறுதல்; தன்னைக் கொல்லுமாறு ராமனிடம் கெஞ்சிய தாரை...
கடக்க முடியாத சோக மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} வேகமாகவும், விரைவாகவும் மூழ்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபோது, வலிமைமிக்கவனான வாலியின் அனுஜன் {வாலியின் தம்பி சுக்ரீவன்}, தன்னுடன் பிறந்த ஒப்பற்றவனின் {தன் அண்ணன் வாலியின்} வதத்திற்காக வேதனை அடைந்தான்.(1) மனஸ்வியான அவன் {சுயமதிப்பு கொண்டவனான சுக்ரீவன்}, மனம் நொந்து, ஒரு க்ஷணம் {தாரையைப்} பார்த்தபோது, கண்ணீர் நிறைந்த முகத்துடனும், துக்கமடையும் மனத்துடனும், தொண்டர்களால் சூழப்பட்டவனாக, மெதுவாக ராமனின் சமீபத்தை அடைந்தான்.(2) கையில் வில்லையும், விஷமிக்க பாம்புக்கு நிகரான பாணத்தையும் பிடித்திருப்பவனும், உத்தமனும், புகழ்மிக்கவனும், லக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டவனும், அருகில் இருப்பவனுமான அந்த ராகவனை நெருங்கியவன் {ராமனை நெருங்கிய சுக்ரீவன்} இதைச் சொன்னான்:(3) "நரேந்திரரே, நீர் பிரதிஜ்ஞை செய்தபடியே, இதோ காணும் பலனுக்கான கர்மத்தைச் செய்தீர். நரேந்திரரின் மகனே, கொல்லப்பட்ட ஜீவிதத்துடன் கூடிய என் மனம் இதோ போகங்களில் இருந்து விலகி இருக்கிறது.(4)
இராமரே, நிருபர் {மன்னர் வாலி} கொல்லப்பட்டதும், இந்த மஹிஷி {ராணி தாரை} துக்கத்தில் எரிந்து பெரிதும் கதறி அழுகிறாள்; புரமும் {கிஷ்கிந்தையும்} பெரிதும் பரிதபிக்கிறது; அங்கதனின் நிலையும் சந்தேகத்திற்கிடமாக உள்ள நிலையில் என் மனம் ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சிகொள்ளவில்லை.(5) இக்ஷ்வாகுக்களில் சிறந்தவரே, முதலில் கோபத்தினாலும், பொறுமையின்மையினாலும், அதிகமாக அடைந்த அவமானத்தினாலும், உடன் பிறந்தோனின் வதத்தை நான் அனுமதித்துவிட்டாலும், இப்போது ஹரியூதபர் {குரங்குக் குழு தலைவரான வாலி} கொல்லப்பட்டதும், அதிகமாகப் பரிதபிக்கிறேன்.(6) இப்போது என் விருத்தம் எப்படியோ அப்படியே {காலங்}கழித்து, முக்கிய சைலமான அந்த ரிச்யமூகத்திலேயே எப்போதும் வசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இவரைக் கொன்றதில் திரிதிவமே {சொர்க்கமே} கிட்டினும் லாபமில்லை.(7) இராமரே, மஹாத்மாவும், மதிமிக்கவருமான இவர் {வாலி}, "உன்னைக் கொல்ல இஷ்டமில்லை; போ" என்று என்னிடம் சொன்ன அந்தச் சொல் {நல்லவரான} அவருக்கே உரியது. இந்தச் சொல்லும், கர்மமும் {தீயவனான} எனக்கே உரியன.(8)
இராமரே, வீரரே, காமத்தை {ஆசையை} முன்னிட்டு, உடன்பிறந்தவருக்குரிய ராஜ்ஜியத்தையோ, மஹாகுணம் பொருந்திய உடன்பிறந்தவரின் வதம் எனும் துக்கத்தின் சாரத்தையோ சிந்திக்கையில் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்?(9) அவர் {வாலி}, தம் மஹாத்மியத்தை {பெருந்தன்மையை} மீறாததால், என் வதத்தை {நான் கொல்லப்படுவதை வாலி} ஏற்கவில்லை. என் புத்தியின் துராத்மியத்தால் {இழிந்த தன்மையால்} பிராணனைப் பறிக்கும் மீறல் விளைந்தது.(10) மரத்தின் சாகையால் {கிளையால்} புடைக்கப்பட்டதும், ஒரு முஹூர்த்தம் சிணுங்கி {துடித்து தத்தளித்துக்} கொண்டிருந்த நான், "மீண்டும் செய்யாதே. {இனி} செய்ய மாட்டாய்" என்றவரால் {வாலியால்} தேறுதல் அடைந்தேன்.(11)
சகோதரத்துவத்தையும், ஆரியபாவத்தையும் {மேன்மையும்}, தர்மத்தையும் அவர் ரக்ஷித்தார் {பாதுகாத்தார்}. குரோதத்தையும், காமத்தையும், கபித்துவத்தையும் {குரங்குத்தன்மையையும்} நான் வெளிக்காட்டினேன்.(12) வயஸ்யரே {நண்பரே}, உடன்பிறந்தவரின் வதத்தால், துவாஷ்டிரனை {துவஷ்டாவின் [விஷ்வகர்மாவின்] மகனான விஷ்வரூபனை} வதைத்த இந்திரனைப் போல[1], சித்திக்க முடியாததும், முற்றிலும் தவிர்க்க முடியாததும், விரும்பத்தகாததும், காணத்தகாததுமான பாபத்தை அடைந்துவிட்டேன்.(13) இந்திரனின் பாபத்தை, மஹீயும் {மண்ணும்}, ஜலமும் {நீரும்}, விருக்ஷங்களும் {மரங்களும்}, ஸ்திரீகளும் {பெண்களும்} வாங்கிக் கொண்டனர்[2]. சாகை மிருகமான என்னுடைய இந்த பாபத்தைப் பெயரளவுக்கும் எவன்தான் சகித்துக் கொள்வான்? {அதை எப்படிப்} பெற்றுக் கொள்ள விரும்புவான்?(14)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "புராண உவமை: ஒருமுறை வியாழனும் {குருவெனும் கிரகமாக இருப்பவரும்}, இந்திரனின் தெய்வீக ஆலோசகருமான பிருஹஸ்பதி, இந்திரன் மீது எரிச்சலடைந்து, சில நாட்கள் தலைமறைவானார். அப்போது தேவர்கள் துவஷ்டாவின் {விஷ்வகர்மாவின்} மகனும், பிரம்மனின் மானஸபுத்திரனுமான விஷ்வரூபனை {திரிசிரனை} அழைத்து வந்து, பிருஹஸ்பதியின் உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தனர். அசுரர்களிடம் பட்சபாதம் கொண்ட இந்த விஷ்வரூபன், {தேவர்களுக்குரிய} ஆகுதிகளில் அசுரர்களுக்குப் பங்கு கொடுத்து வந்தான். இதை அறிந்த இந்திரன் விஷ்வரூபனைக் கொன்றதால், பிராமணனைக் கொன்ற பிரம்ம பாதக பாபம் என்ற பாபத்தை அடைந்தான்" என்றிருக்கிறது. மஹாபாரதம் உத்யோக பர்வம் பகுதி 9ம் அத்தியாயத்தில் இந்தக்கதை சொல்லப்படுகிறது
[2] மஹாபாரதம் சாந்தி பர்வம் 282ம் அத்தியாயத்தில் இது விரிவாகச் சொல்லப்படுகிறது.
இராகவரே, அதர்மத்துக்குத் தகுந்ததும், குலநாசத்திற்குத் தகுந்ததுமான இவ்வித கர்மத்தைச் செய்த நான், பிரஜைகளின் {குடிமக்களின்} இந்த சன்மானத்திற்குத் தகாதவன். யௌவராஜ்ஜியத்திற்குத் தகாத நான், ராஜ்ஜியத்திற்கு எவ்வாறு தகுந்தவனாவேன்?(15) உலகத்தால் நிந்திக்கப்படுவதும், இழிந்ததும், உலகத்திற்குப் பெருந்தீங்கிழைப்பதுமான பாபத்தைச் செய்த என்னை நோக்கி, மஹத்தான இந்த சோகம் மழைநீரின் வேகத்துடன் பாய்ந்து வருவதைப்போலத் தெரிகிறது.(16) சோதரன் கொலை எனும் வாலுடன் கூடிய பின்புறத்தைக் கொண்டதும், சந்தாபம் {பரிதாபம்} எனும் ஹஸ்தத்தையும் {துதிக்கையையும்}, கண்களையும், சிரத்தையும் {தலையையும்}, தந்தங்களையும் கொண்டதும், கோபவெறி கொண்டதும், பெரிதும் வளர்ந்ததுமான ஹஸ்தியானது {பெருகிய பாபத்தையே வடிவமாகக் கொண்ட யானையானது}, கரை {தாக்கும்} நதியைப் போல என்னை இடைவிடாது தாக்குகிறது.(17)
நிருவரரே {மன்னர்களில் சிறந்தவரே}, ராகவரே, அக்னியில் முழுமையாக உருக்கப்பட்டு, வர்ணமிழந்த ஜாதரூபம் {தங்கம்} மாசை பொறுத்துக் கொள்ளாமல் உதிர்ப்பதைப் போல நன்னடையுடன் கூடிய என் ஹிருதயம், இந்த பாதகத்தை சகிப்பதில் இருந்து விலகுகிறது.(18) இராகவரே, என் நிமித்தமும், இந்த சோகத்தில் தபிக்கும் அங்கதனாலும், மஹாபலவான்களும், இந்த குலத்தைச் சேர்ந்தவர்களுமான ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்}, பாதி பிராணனுடனே நிலைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.(19) அங்கதனுக்கு ஒப்பாக பேதமில்லாமல் அனைவருடனும் பழகுபவனும், சொன்னபடி தவறாமல் கேட்கும் புத்திரனைப் பெறுவது சுலபமில்லை. வீரரே, சோதரனின் அருகாமை நிலைக்கும் அத்தகைய தேசத்தையும் {இடத்தையும்} காண முடிவதில்லை.(20)
இப்போது சிறந்த வீரனான அங்கதன் ஜீவிக்காமல் போனால், {அவனைப்} பரிபாலிக்க ஜீவித்திருக்கும் மாதாவும் {தாரையும்} புத்திரன் இல்லாமல், பரிதாபமாக, தீனமாக ஜீவிக்க மாட்டாள் என்பதே என் நிச்சயம் {தீர்மானம்}.(21) இத்தகையவனான நான் {சுக்ரீவனாகிய நான்}, உடன்பிறந்தவருடனும் {வாலியுடனும்}, புத்திரனுடனும் {அங்கதனுடனும்} நல்லுறவை நாடி அதிகம் ஒளிரும் அக்னிக்குள் பிரவேசிக்க இச்சிக்கிறேன். இந்தச் சிறந்த ஹரிவீரர்கள் {குரங்கு வீரர்கள்}, உமது ஆணையை ஏற்று சீதையைத் தேடிச் செல்வார்கள்.(22) மனுஜேந்திரபுத்திரரே, ராமரே, நான் இறந்தாலும் உமது காரியம் அனைத்தும் குறையேதுமின்றி நிறைவேறும். குலத்தை அழித்தவனும், ஜீவிக்கத்தகாதவனும், தவறு இழைத்தவனுமான எனக்கு அனுமதி அளிப்பீராக" {என்றான் சுக்ரீவன்}.(23)
ரகுக்களில் சிறந்த வீரனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான ராமன், வாலிக்கு அடுத்துப் பிறந்தவன் {சுக்ரீவன்}, வருத்தத்துடன் இவ்வாறு சொன்னவற்றைக் கேட்டதில் பிறந்த கண்ணீருடன் ஒரு முஹூர்த்தம் மனமுடைந்த நிலையில் இருந்தான்.(24) பூமியைப் போன்ற பொறுமை கொண்டவனும், புவனத்தைப் பாதுகாப்பவனுமான அந்த ராமன், அந்த க்ஷணத்தில் கவலையுடன் மீண்டும் மீண்டும் சுற்றிலும் பார்வையைச் செலுத்துபவளும், விசனத்தில் {துக்கத்தில்} மூழ்கி அழுது கொண்டிருப்பவளுமான தாரையைப் பார்த்தான்.(25) சாருநேத்ரம் {அழகிய விழிகளைக்} கொண்டவளும், கபிசிம்மத்தை நாதனாக {குரங்குகளில் சிங்கமான வாலியைத் தன் கணவனாகக்} கொண்டவளும், தன் பதியை இறுக அணைத்துக் கிடந்தவளும், இயல்பு பிறழாதவளும், கபிராஜனின் பத்தினியுமான அவளை மந்திரி பிரதானிகள் எழுப்பத் தொடங்கினர்.(26)
அணைத்துக் கொண்டிருந்த நிலையில், பர்த்தாவின் சமீபத்தில் {கணவனின் நெருக்கத்தில்} இருந்து பிரிக்கப்பட்டவள் {தாரை}, பெரிதும் நடுக்கத்துடன் கூடியவளாக, சரத்தையும், வில்லையும் கையில் கொண்டு, தன் தேஜஸ்ஸால் சூரியனைப் போல ஜ்வலித்துக் கொண்டிருந்த ராமனைக் கண்டாள்.(27) மான்கன்றின் விழிகளைக் கொண்டவள் {தாரை}, முழுமையான பார்த்திப லக்ஷணங்களையும், அழகிய கண்களையும் கொண்டவனும், இதுவரை காணப்படாத புருஷபிரதானனுமான அவனே அந்த காகுத்ஸ்தன் {ராமன்} என்பதை அறிந்து கொண்டாள்.(28) ஆரியையும், வருத்தத்துடன் கூடியவளும், விசனத்தில் அகப்பட்டவளுமான தாரை, மிகவும் நடுங்கியபடியே, இந்திரனுக்கு ஒப்பானவனும், அடைதற்கரியவனும், மஹானுபாவனுமான அவனது சமீபத்தை மிகத் துரிதமாக அடைந்தாள்.(29)
சோகத்துடனும், நடுங்கும் சரீர பாவத்துடன் கூடியவளும், மனஸ்வினியுமான {சுயமதிப்பு மிக்கவளுமான} அந்த தாரை, மிக சுத்தமான இயல்பைக் கொண்டவனும், போரில் இலக்கைத் துல்லியமாக அடைபவனுமான அந்த ராமனை நெருங்கி, {இந்த} வாக்கியங்களைச் சொன்னாள்:(30) "நீ அளவிடற்கரியவன்; அடைதற்கரியவன்; ஜிதேந்திரியன் {புலன்களை வென்றவன்}; தர்மவான்களில் உத்தமன்; அழிவற்ற கீர்த்தி படைத்தவன்; பகுத்தறிவுள்ளவன்; பூமியைப் போன்ற பொறுமையுள்ளவன்; ரத்தத்திற்கு ஒப்பான {சிவந்த} கண்களைக் கொண்டவன்.(31) கைகளில் பாணாசனத்தையும் {பாணம் பொருத்தும் வில்லையும்}, பாணங்களையும் எடுத்தவன்; மஹாபலவான்; சமமான அங்கங்களைக் கொண்டவன்; நீ மனுஷ்ய தேஹத்தின் மகிமையை விட திவ்ய தேஹத்தின் மகிமைக்குத் தகுந்தவன்[3].(32) வீரா, எந்த பாணத்தால் என் பிரியரை {காதலர் வாலியைக்} கொன்றாயோ, அதே பாணத்தின் மூலமே நானும் சென்று, கொல்லப்பட்டவரின் சமீபத்தை அடைய விரும்புகிறேன். நான் இல்லாமல் வாலி மகிழ்ச்சியடையமாட்டார்.(33)
[3] தாரை சொல்லும் இவ்விரு வசனங்களுக்குப் பண்டிதர்கள் பலர் பல விளக்கவுரைகளைச் சொல்வதாகக் கூறும் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், ராமனை தெய்வமாகக் காட்டுவதற்கான நெடும் விளக்கங்கள் அடிக்குறிப்புகளாக இருக்கின்றன. படைப்பைவிட விளக்கத்தின் விரிவுக்கு அஞ்சியும், வலிந்து விளக்குவதற்கான அவசியமின்மையினாலும் இங்கே அவை தவிர்க்கப்படுகின்றன.
களங்கமற்ற பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர் {வாலி}, ஸ்வர்க்கத்தை அடைந்தாலும், சுற்றிலும் பார்த்து என்னைக் காணாவிட்டால், அதிகமாகவும், குறைவாகவும் சிவந்த கேசங்களுடனும், விசித்திர வேஷங்களுடனும் {தோற்றங்களுடனும்} கூடிய அப்சரஸ்களுடனும் சேரமாட்டார்.(34) வீரா, விதேஹ கன்னிகை {வைதேஹி / சீதை} இல்லாமல் நீ நகேந்திரத்தின் {சிறந்த மலையான ரிச்யமூகத்தின்} ரம்மியமான தாழ்வரைகளில் எப்படி இருப்பாயோ, அப்படியே வாலியும் ஸ்வர்க்கத்தை அடைந்தாலும், நான் இல்லாமல் சோகமடைந்து, வர்ணம் இழந்து போவார்.(35) குமார புருஷன் {இளைஞன் ஒருவன்}, வனிதை இல்லாமல் எப்படி துக்கத்தை அடைவான் என்பதை நீ அறிவாய். எனவே, உண்மையை அறியும் நீ என்னையும் கொல்வாயாக. வாலி, என்னைக் காணாததால் உண்டாகும் துக்கத்தை அடைய வேண்டாம்.(36) மனுஜேந்திரப் புத்திரா, மஹாத்மாவான உனக்கு, என்னால் ஸ்திரீகாததோஷம் {பெண்ணைக் கொல்லும் பாபம்} உண்டாகாது. அவ்வாறு நீ நினைத்தாலும், "இவள் அவனது {தாரையானவள் வாலியின்} ஆத்மா" என்று {நினைத்து} என்னை நீ கொன்றால் ஸ்திரீவதம் உண்டாகாது.(37)
சாஸ்திரங்களில் பிரயோகிக்கப்படும் விதவிதமான வேத வாக்கியங்கள், "தாரம், புருஷனின் அன்னிய ரூபமில்லை {மனைவியே கணவனின் ஆத்மா}" என்கின்றன. உலகத்தில் தாரமே பிரதானம். வேறு தானங்களை ஞானவான்களும் கண்டவரல்லர்.(38) வீரா, நீயும் தர்மத்தை ஆராய்ந்து, என்னை என் பிரியரிடம் {காதலரான வாலியிடம்} அளிப்பாயாக. வீரா, இந்த தானத்திற்காக என்னைக் கொல்வதன் மூலம், அதர்மத்தின் தீண்டலை நீ அடையமாட்டாய்.(39) நரேந்திரா {மனிதர்களின் தலைவா, ராமா}, வருந்திக் கொண்டிருப்பவளும், அநாதையும், {கணவனிடம் இருந்து} பிரிந்தவளுமான என்னைக் கொல்லாதிருப்பது உனக்குத் தகாது. மாதங்கத்தின் {யானையின்} உற்சாக நடையைக் கொண்டவரும், மதிமிக்கவரும், சிறந்ததும், பகட்டானதுமான உத்தம ஹேமமாலை அணிந்தவருமான அந்த பிலவங்கம ரிஷபர் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையான வாலி} இல்லாமல் நீண்டகாலம் ஜீவிக்கும் சக்தி எனக்கில்லை" {என்றாள் தாரை}.(40)
இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாத்மாவான அந்த விபு {தலைவன் ராமன்}, தாரையை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} ஹிதமாகப் பேசினான், "வீரனின் பாரியையே {வீரன் வாலியின் மனைவியான தாரையே}, மதியற்றவளாகாதே {அசட்டு எண்ணத்திற்கு இடங்கொடாதே}. சர்வலோகமும் விதாதாவால் {படைத்தவனால் / பிரம்மனால்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) அந்த சுகதுக்கங்களின் யோகத்தையும் {சேர்க்கையையும் / சுகதுக்கங்களை அனுபவிப்பதையும்}, சர்வத்தையும் அவனே {பிரம்மனே} விதிக்கிறான் என்று உலகத்தார் சொல்கின்றனர். அவனது வசப்பட்ட மூவுலகங்களும் விதிக்கப்பட்ட விதியை மீறுவதில்லை.(42) பரம பிரீதியின் பிராப்தத்தை {தாரையான} நீயும், யௌவராஜ்ஜியத்தின் பிராப்தத்தை {அங்கதனான} உன் புத்திரனும் அடைவீர்கள். அவ்வகையிலேயே தாதா {விஷ்வகர்மன்} விதித்திருக்கிறான். சூரனின் பத்தினிகள் வருத்தமடையமாட்டார்கள்" {என்றான் ராமன்}.(43)
பிரபாவத்திற்குத் தகுந்தவனும், பகைவரை எரிப்பவனும், மஹாத்மாவுமானவனால் {ராமனால்} ஆசுவாசப்படுத்தப்பட்டவளும், வீரபத்தினியும், உரத்த முகத்துடன் கூடியவளும், ரூபத்திற்குத் தகுந்த நல்ல வேஷம் {தோற்றம்} கொண்டவளுமான அந்த தாரை {தன் புலம்பலை} நிறுத்திக் கொண்டாள்.(44)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 24ல் உள்ள சுலோகங்கள்: 44
Previous | | Sanskrit | | English | | Next |